கதைகள் சாவதில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 19, 2026
பார்வையிட்டோர்: 95 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புதிய புதிய ஊடகங்கள் குதிபோட்டு வரும் இந்நாட்களில், நான் கதை எழுதுவதா, வேண்டாமா? என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. 

பழைய நினைவுகள் எழுந்தன. 

மண்போட்ட தரையில் விரலால் எழுதி எழுதிப்பழகிய – சுட்டுவிரல் இரத்தம் சொட்டி இருந்த ஒண்ணாங்கிளாஸ் வாழ்க்கையை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. 

அதனால்தான் அந்த விரல்களுக்கு இன்றும் வலிமை இருக்கிறது போலும்! 

நான் பிறந்து வளர்ந்தது கரிசல் காடு. வட நெல்லையில் உள்ள வறண்ட பிரதேசம். அந்த வறட்சியில் தான் எத்தனை வளங்களை ஆண்டவன் வைத்திருக்கிறான்? 

பதனீர் தேன் சொட்டு போன்று வாயில் ஒட்டும். கள்ளிப்பழம் தின்றால் உதட்டில் சாயம் இருக்கும். செடியில் பறித்துத் தின்னும் தக்காளிப்பழம் புளிப்பு கலந்து இனிக்கும். சோளத்தட்டையின் அடிப்பாகம் கரும்பைக் காட்டிலும் தித்திக்கும். உப்புமண் புழுதித்தரையில் எள்ளுச்செடி நன்கு காய்க்கும். கருப்புக்கட்டி போட்டு இடித்துத் தரும் எள்ளுருண்டை எத்தனையாய் ருசிக்கும். எந்த லாலாக்கடை மிட்டாயும் அந்த ருசிக்கு ஈடாகாது. 

பள்ளியில் கரிசல் மண்ணைத் தெள்ளி வாயில் போட்டு சுவைத்துக் கொண்டே கதைகள் கேட்பேன். மண்மணம் என்பார்களே அந்த மணம் கரிசல் கதைகளிலும் இருக்கும். பாஞ்சைக்குப் பக்கமுள்ள எங்கள் கரிசல் காட்டின் அருகில்தான். வ.வு.சியும், பாரதியும் பிறந்தார்கள். 

காகமும் நரியும், காகமும் பானையும், குரங்கும் குல்லாவும், எலியும் தவளையும், முயலும் ஆமயும் இந்தக் கதைகளை என் பாட்டிக்கு அவள் பாட்டி சொல்லி பாட்டியிடம் நான் கேட்டு, என் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் நான் சொல்லி வரும் பரம்பரை கதைகளாகும். என் பூட்டிப் பிள்ளைகளும் கேட்கப் போகிறார்கள். 

கரிசல் காட்டில் பிறந்த கதைகளே ஆயினும், இவைகள் காலங்காலமாகச் சொல்லி வரும் மழலைக் கதைகளாகும். ஒருநாளாவது பள்ளியில் ஒதுங்கிய எந்த இந்தியக் குடிமகனுக்கும் இந்தக் கதைகள் தெரியும். 

நூற்றுக்கணக்கான கதைகளை புதிது புதிதாக எழுதி வருகிறேன். நாளடைவில், சில கதைகள் பழசாகி விடுகின்றன. சிலகதைகள் கால வெள்ளத்தில் அடிபட்டு விடுகின்றன. ஆனால் எலி-தவளை போன்ற கதைகளில் இன்றும் உயிர் துள்ளுகின்றன. 

நான் முதல் வகுப்பில் கேட்ட இரு தவளைகளின் கதை நினைவிற்கு வந்தது. 

நண்பர்களான இரு தவளைகள் தத்தி தத்தி விளையாடின. இரண்டிற்கும் மாறுபட்ட குணங்கள் இருப்பினும் ஒன்றுபட்ட நண்பர்கள். 

இரண்டும் துள்ளிக் குதித்து விளையாடும்போது பால் நிறைந்த இருபாத்திரங்களில் இரண்டும் விழுந்து விட்டன. 

முதல் தவளை பால் பாத்திரத்தினுள் கிடந்து நீந்தி நீந்திப் பார்த்தது. அது எப்போதும் சபலபுத்தியும், சந்தேகக் குணமும் கொண்ட தவளை, பயந்த சுபாவம் கொண்டது. இனி பிழைக்க முடியாது என்று நம்பிக்கை இழந்தது. பின் கால்களைப் பரக்க விரித்து மரித்தது. 

இரண்டாம் தவளை பால் பாத்திரத்தினுள் நீந்திக் கொண்டே இருந்தது. கால்கள் ஓய்ந்தன. ஆனாலும் இறுதி மூச்சுவரை நீந்துவேன் என வட்டமடித்துக் கொண்டே இருந்தது. சாகும்வரை நீந்துவேன் என்று உறுதி பூண்டது. வாழ்வேன், வாழவே பிறந்தேன் என்ற பிடிவாதத்தில் நீந்தியது. 

திடீரென்று ஓர் அதிசயம் நடந்தது. தவளை பாலைக் கலக்கிய கலக்கில் பால் வெண்ணெய் கட்டியாகத் திரண்டு விட்டது. பால் திடப்பொருளாகி விட்டது. தவளை அதன்மீது ஏறி ஆனந்தமாக அமர்ந்தது. சுதத்திரக் காற்றை சுவாசித்தது. தத்திக் குதித்துப் பிழைத்துக் கொண்டது. 

இந்தக் கதையை நினைக்க நினைக்க எனக்குள் ஒரு தெம்பு பிறந்தது. புதிய சக்தி என்னுள் நுழைந்தது. தீமையை நன்மையாக்க முடியும், சோதனை களைச் சாதனைகளாக்கக் கூடும். கவலைகளை கலைகளாக மாற்ற முடியும் என்ற எண்ணம் என் உள்ளம் முழுவதும் நிறைந்து பூரித்தது. 

ஆனா, ஆவன்னா எழுதிய என் விரல்கள் தரையில் பேனாவைப் பிடித்து மானுட நேயக் கதைகளை எழுதித் தள்ளுகின்றன. 

என் நான்கு வயதுப்பேரன், “தாத்தா, எலியும் தவளையும் கதையை இன்னிக்கும் சொல்லணும் தாத்தா” என்று சொல்லி என் மடியில் ஏறி அமர்ந்தான். “தவளைக் கதை ரொம்ப நல்லாருக்கு தாத்தா” என்றான். என்பேரப் பிள்ளைகளிடமிருந்து தினமும் நான் கதை சொல்லாமல் தப்ப முடியாது. 

கதைகள் எவ்வளவு வலுவுள்ளவை! 

“கதைகள் சாவதில்லை! காலங்காலமாக நிலைத்து நிற்கும்” 

– ஆர்‌.எஸ்‌.ஜேக்கப்‌ சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *