விழுதுகள் தேடும் வேர்
அதிகாலை 6 மணிக்கு 22650 ஏற்காடு எக்ஸ்பிரஸ் ஈரோடு வந்தடைந்தது. பலவகையான மனிதர்களையும், அவர்களின் முகங்களில் பல்வேறு உணர்ச்சிகளையும் சுமந்து கொண்டு வந்த ரயிலிலிருந்து, பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி.ஏ., ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மேனேஜர் ஏ1 கோச்சிலிருந்து இறங்கினார்.
அவரை வெள்ளகோவில் அருகிலுள்ள ஊஞ்சப்பாளையம் தெற்கு தோட்டத்துக்கு அழைத்துச் செல்ல, அலுவலக உதவியாளர் அனுப்பிய கார் காத்துக் கொண்டிருந்தது. உறக்கம் கலையவும் சோர்வு நீங்கவும் அருகிலிருந்த ரயில்வே உணவகத்துக்குச் சென்று முகம் கழுவி, சுடச்சுட ஒரு டீ ஆர்டர் செய்தார். கையோடு பிளாட்பாரத்தில் வாங்கிய தமிழ் தினசரியை விரித்தார். செய்திகளில் ஆர்வமில்லை. வேறு எதையோ தேடிக் கொண்டிருந்தார்.
அவர் தேடிய அந்த விளம்பரம் கண்ணில் பட்டது.
***
கண்ணீர் அஞ்சலி
வெள்ளகோவில் அருகிலுள்ள ஊஞ்சப்பாளையம் தெற்கு தோட்டம் திரு. நடராஜ கவுண்டர் (முன்னாள் மணியம்) வயது 78 நேற்று மாலை இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி அஞ்சலி இன்று மதியம் 3 மணி முதல் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இப்படிக்கு அன்னாரை இழந்து வாடும் என். சுப்பிரமணியம், முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் குடும்பத்தினர்.
***
தினசரியை மடித்து பையில் வைத்தார். டீயை முடித்து வெளியே வந்தார். வெள்ளகோவில் நோக்கி புறப்பட்டார் அவரையும், தாத்தாவ பற்றிய அவரின் நினைவுகளையும் சுமந்து கொண்டு கார் நகர்ந்தது.
***
பிரவீன் சக்கரவர்த்திக்கும் தாத்தாவுக்கும் ஐம்பத்திஐந்து வயது வித்தியாசம். தாத்தா முன்னாள் மணியக்காரர், அரசு அதிகாரி. அவருக்கே உரிய கம்பீரமான தேகம். அதிகாரத்தைப் பறைசாற்றும் மீசை. கடுக்கன். குடுமி. தங்க பட்டன்கள் பதித்த வெள்ளை ஜிப்பா. தும்பைப்பூ வெள்ளை வேஷ்டி. காலில் செருப்பு அதுவே அவரின் அடையாளம்.
பேரனுக்கும் தாத்தாவுக்கும் இடையிலான வயது வித்தியாசத்தை மறைத்தது அவர்களுடைய உரையாடல்கள். பிரவீனின் தந்தை பள்ளி தலைமை ஆசிரியர் கட்டுப்பாடு அதிகம். அன்பு இருந்தாலும் கடின வெளிப்பாடு. அதனால் பேரனின் மனம் தாத்தாவிடம் நெருக்கமடைந்தது.
அந்தத் தாத்தா நேற்று இரவு இறந்துவிட்டார். மூத்த பேரன் கொள்ளி வைக்க வேண்டும் என்பதால், இருந்த வேலைகளை ஒத்திவைத்து, இரவோடு இரவாக புறப்பட்டார்.
***
அவர்களுக்கிடையேயான உரையாடல்கள் மண்ணின் பெருமை, பாரம்பரியம், குடும்ப வேர்கள் இவைகளைச் சுற்றியே இருக்கும். “விழுதுகளுக்கு வேர்களை தெரியணும்” என்று தாத்தா சொல்லுவார்.
“தாத்தா, கிழக்கால தோட்டத்து ஐயன் செத்தப்ப மக, மருமகள் சேர்ந்து பாட்டு பாடி அழுதாங்கலே அது ஏன்?”
“அது பாட்டு இல்ல சாமி… ஒப்பாரி.”
“ஒப்பாரி அப்படின்னா?”
“நம்ம ஊரு பாட்டுல ஒரு வகை. உறவினர் இறந்தா, அவரைப் பற்றிய நல்லதை சொல்லி, ஆற்றாமையை வெளிப்படுத்துற துக்கப் பாடு. எழுதப்படாதது. அப்போ அப்போ வாயில பிறந்து காற்றுல கலந்துரும்…”
இது ஒவ்வொருத்தருக்கும் பாடும்போது வித்தியாசமா இருக்கும். அம்மாளுக்கு மகள் பாடுவது வேறாக இருக்கும், அப்பனுக்கு மகள் பாடுவது வேறாக இருக்கும்.
அதே மாதிரி மாமனாருக்கு மருமகள் பாடுவதும் வேறுவிதம்.
பொதுவாகவே பெண்கள் மட்டுமே இந்த ஒப்பாரி பாடி தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துவார்கள்.
நான் ரெண்டு பாட்டு சொல்றேன் கேளு, அது உனக்கே புரியும்.
இப்போ அப்பன் செத்து போயிட்டான்னு வைத்துக்கோ மக எப்படி ஒப்பாரி வைப்பா? அவளுக்கு அந்த அப்பன் தான் முதல் பாதுகாவலன். அப்பங்கிட்ட ரொம்ப பாசமா இருப்பாங்க பொண்ணுங்க.
அவ பாடுனா எப்படி பாடுவா பாரு
காத வலி நடந்து என் காலு ரெண்டும் நோகுதுன்னா , காசி தீர்த்தம் வாங்கி வந்து என் காலு காலு ரெண்டும் தேப்பீங்களே … தூரம் வழி நடந்து என் தொடை ரெண்டும் நோகுதுன்னா, துளசி மாலை தீர்த்தம் வாங்கி என் துன்ப நோவு தீர்ப்பீங்களே…
இஞ்சிய தூள் பண்ணி எலுமிச்சை சாறு பிழிந்து, என்னைப் பெத்த அப்பாவே இப்ப கொடுத்தாலும் இந்தப் பக்கம் திரும்புவீங்களா? சொல்லிட்டு தான் போங்களேன்…
“தாத்தா சூப்பர்…”
“அம்மாவுக்கு எப்படி?”
தாய் இறந்த செய்தி கேட்டு, பொட்டழித்து, பூ கலைந்து, கண்ணீரும் கம்பளையுமாய் வந்த மகள்
எட்டு மணி வண்டி ஏறி நான் இளைப்போட வந்து நின்னா, அரிசி கஞ்சி காய்ச்சி தருவாளே எங்க அம்மா… பத்து மணி வண்டி ஏறி நான் பசியோட வந்து நின்னா, பச்சரிசி கஞ்சி காய்ச்சி பசியாறுமே எங்க அம்மா…
தாய் வீட்டு செய்தி என்னு தம்பி வந்து தகவல் சொல்ல, அங்க அழுத பிள்ளையைத் தூக்காம, அரை மனைய சாத்தாம, அவரிடத்தில் சொல்லாம, அலைஞ்ச கூந்தல் முடியாம
அறையில் பணம் எடுத்தா அஞ்சு மணி ஆகும்னு, அப்பவே பணம் எடுத்து ஆகாயக் கப்பல் ஏறி நான் பொறந்த அரண்மனையை அரண்மனை மகாராணி உன்ன பாக்க வந்தேன்னு பாடுவாங்க…
“ஆமா, இப்ப எல்லாம் ஏன் இப்படி யாரும் பாடி அழுகாரதில்ல?”
“அவங்களுக்கு பாட்டு தெரியாது கண்ணு… அதுபோக இப்ப எல்லாம் பேஷன் என்ன தெரியுமா? கருப்பு கலர் துணி போட்டுட்டு சும்மா வந்து, வர்றவங்க போறவங்க எல்லாருக்கும் ஒரு கப் காபி கையில கொடுத்து உட்கார்ந்து நியாயம் பேசினா பிணத்தை எடுக்கிற நேரம் வந்துடும். அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு…”
பிரவீன் சக்கரவர்த்தி மனதுக்குள் யோசிக்க ஆரம்பித்தான்
யோசித்தவரே, தன் தாத்தாவிற்கு தன்னுடைய ஒப்பாரி எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டே, தன் குரலில் எதையோ போனில் பதிவு செய்தான்.
“தோழர், கொஞ்சம் வண்டியை ஒரு டீக்கடையில் நிறுத்துங்களேன்… ஒரு சிறிய வேலை இருக்கிறது ஆபீஸ் சம்பந்தமாக,” என்று காரை ஓட்டிக் கொண்டிருந்த தோழர் காண்டீபனின் தோளில் கையை வைத்தார்.
டீ குடித்து முடித்ததும், பதிவு செய்ததை லேப்டாப்பிற்கு மாற்றி, அந்தக் கவிதையை திறந்து பார்த்தார்.
***
இது கையறு நிலையில் இயற்றிய இரங்கல் பா…
போய் வாருங்கள் என்று சொல்லிவிடலாம் தான் ஆனால் வரமாட்டீர்கள் என்பதே உண்மை…
ஐம்பது வருடங்கள் என் இதய வீட்டின் ஒளி விளக்கு இன்று அணைந்தது இருட்டில் நாங்கள்…
இனி கைப்பிடித்து அழைத்துச் செல்ல, கரம் கோர்த்து நடக்க, எட்டாத தூரத்தையும் எட்டிக் கடக்க
என்றென்றும் எம் புகழ் பரப்ப ஏழை நான் என்ன செய்வேன்?
மறவேன் என் தலைவனை என் இறுதி மணித்துளி வரை.
அவன் பாதம் படிந்து தொடர் நடனம் புரிவேன் அவன் நினைவை நெஞ்சில் ஏந்தி…
இது கையறு நிலையில் பிறந்த இரங்கல் பா.
***
ஊர் எல்லை வந்து சேர்ந்ததும், சுற்றுப்புற கிராமங்களிலிருந்தெல்லாம் வந்த பெருந்திரள் மக்கள் நடந்து சென்ற பாதையைப் பார்த்தாலே, தோட்டப் பங்களாவிற்கு செல்லும் வழி பிரவீனுக்கு புரிந்தது.
கிராமங்களில் சிறப்பாக வாழ்ந்தவர்களுக்கும், ஊரின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்களுக்கும், மரணத்தின் போது ஊர் திரண்டு வந்து தேர் கட்டி வழி அனுப்புவது வழக்கம். இதை தாத்தா பலமுறை சொல்லியிருந்தார். “துக்கத்தை கொண்டாடும் நிகழ்ச்சி மாதிரி இருக்கும்,” என்றும் கூறியிருந்தார்.
மரணம் என்பது இயற்கையோடு இணையும் நிகழ்வு; நன்றாக வாழ்ந்தவர்கள் மரணம் அடைந்தால் பெரிதாக யாரும் துக்கப்பட மாட்டார்கள் இதையும் தாத்தா வாயிலாகவே அறிந்திருந்தான் பிரவீன்.
***
தோட்டத்து வாசலில் குண்டுமத்தளம், பறை இரண்டும் காதை பிளக்கும் அளவு முழங்கின. இடையே பறை இசைக் கலைஞர்களுக்கு துக்கம் விசாரிக்க வந்தவர்கள் நன்கொடைகள் அளித்தனர். தொகை கொடுத்தவர்களின் குடும்பப் பெயரைச் சொல்லி நன்றி தெரிவித்தனர் கலைஞர்கள்.
பிரவீனின் தாத்தா ஆங்கிலேயரிடம் வேலை செய்தவர். எதையும் கேள்வி கேட்டு பதில் பெறுவதில் தீவிரம் காட்டியவர். சம்பிரதாயம், மூடச்சடங்கு இவற்றை பொதுவாக நிராகரித்தவர். அதன் காரணமாக பல சிக்கல்களையும் சந்தித்தவர்.
அதனால்தான் அந்தக் காலத்திலேயே தனது மகனை தமிழகத்தின் தலைசிறந்த கோடை வாசஸ்தலப் பள்ளிகளிலும், பின்னர் தலைநகரக் கல்லூரியிலும் படிக்க வைத்தார். சுருக்கமாகச் சொன்னால் அவர் ஒரு பகுத்தறிவுவாதி.
***
இந்த நினைவுகள் எல்லாம் மனதில் தோன்றிக்கொண்டிருக்க, பிரவீன் தோட்ட வீடு வந்து சேர்ந்தார். அனைவரிடமும் துக்கம் விசாரித்தார். பின்னர் இறுதி ஊர்வலம் எவ்வாறு நடத்துவது என்ற விவாதங்களிலும் கலந்து கொண்டார்.
பிரவீன் தன் தாத்தாவின் உடலை கடைசியாய் பார்த்தபோதுவாசலில் கேட்ட பறை ஓசையும், உறவினர்களின் சலசலப்பும் பிரவீனின் காதுகளில் விழவில்லை. அவன் கண்கள் திண்ணையில் வைக்கப்பட்டிருந்த அந்தச் சந்தனப் பெட்டியையே நோக்கியிருந்தன.
மெல்ல அடியெடுத்து வைத்து அருகில் சென்றான். அங்கே கிடந்தது அவன் பார்த்து வியந்த அந்த ‘அதிகாரத்தின் உருவம்’ அல்ல.
எப்போதும் மடிப்புலையாத, தங்கப் பொத்தான்கள் மின்னும் அந்த வெள்ளை ஜிப்பா இன்று இல்லை. அதற்குப் பதிலாக மார்பு வரை போர்த்தப்பட்டிருந்த வெண் பட்டு வேஷ்டி , அந்தத் தேகத்தின் கம்பீரத்தை மறைத்திருந்தது. காதுகளில் எப்போதும் மின்னும் அந்தக் கடுக்கன்கள் கழற்றப்பட்டு, வெறும் துவாரங்கள் மட்டுமே எஞ்சி நின்றன. அதிகாரத்தைப் பறைசாற்றிய அந்த முறுக்கு மீசை, இப்போது அடங்கிப் போய், ஒருவித அமைதியைப் பூண்திருந்தது.
பிரவீன் தாத்தாவின் முகத்தையே உற்றுப் பார்த்தான்.
நெற்றியில் கட்டப்பட்டிருந்த பன்னீர் துணி, அவர் வாழ்நாள் முழுவதும் சுமந்த அந்தப் பகுத்தறிவுச் சிந்தனைகளை மூடி மறைப்பது போல் அவனுக்குத் தோன்றியது. “விழுதுகளுக்கு வேர்களைத் தெரியணும்” என்று சொன்ன அந்த வாய், இன்று மௌனத்தில் உறைந்திருந்தது.
அவன் மெல்ல குனிந்து தாத்தாவின் சில்லென்றிருந்த கைகளைப் பற்றினான். எத்தனையோ முறை ஊஞ்சப்பாளையம் தெற்கு தோட்டத்தின் கதைகளைச் சொல்லும்போது, உற்சாகத்தில் காற்றில் அசைந்த கைகள் அவை. இன்று அசைவற்று…
பிரவீனுக்குள் ஒரு வினோதமான உணர்வு. அந்தக் கடுக்கன் இல்லாத காதுகளும், ஜிப்பா இல்லாத மார்பும் அவருக்கு ஒரு சாதாரண முதியவரின் தோற்றத்தைக் கொடுத்திருந்தன. ஆனால், அவனுக்குத் தெரியும் – அந்தச் சாதாரணத் தோற்றத்திற்குப் பின்னால் ஒரு சகாப்தமே உறங்கிக் கொண்டிருக்கிறது என்று.
அவன் எழுதிய இரங்கல் கவிதை அவனது போனில் உறங்கிக் கொண்டிருக்க, நிஜமான ‘ஒப்பாரி’ அவன் இதயத்திற்குள் சத்தமில்லாமல் பாடிக் கொண்டிருந்தது. “தாத்தா… இப்போ புரியுது… நீங்க சொன்ன அந்தப் பாட்டுக்கும், என்னோட இந்தக் கவிதைக்கும் நடுவுல இருக்கிற அந்தப் பெரிய இடைவெளி… அதுதான் ‘வலி’ போல!” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்
ஒருபுறம் மாமன்மார்கள் கோடி வேஷ்டி யார் போடுவது என்று. மற்றொரு புறம் தேர் கட்டுவது எப்படி, செலவு யார் ஏற்க வேண்டும் என்று. ஆங்காங்கே அத்தைமார்களும் கேட்காமலே ஆலோசனை கூறினர்.
இவை அனைத்தையும் பிரவீனின் தந்தை ஆழ்ந்த மௌனத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார். அவரின் கவலை குடும்பச் சொத்து பங்கீடு.
மதியம் நெருங்க நெருங்க வாக்குவாதம் சூடுபிடித்தது. பிரவீன் பார்த்துக் கொண்டிருந்தான் என்ன செய்வது என்று தெரியாமல்.
ஊர் பஞ்சாயத்திற்கு கொண்டு செல்ல முடியாது. காரணம் ஊரின் முன்னாள் மணியக்காரரே தாத்தா.
***
இதற்கிடையில் வெள்ளகோவிலில் இருக்கும் அட்வகேட் சாமிநாதனுக்கு தகவல் சென்றது. தாத்தாவின் நண்பரின் மகன் என்பதால், அவர் துக்க வீட்டிற்கு கிளம்பினார் கையில் நீளமான காக்கி நிறக் கவருடன்.
அவர் வந்ததும் “உயில்” என்ற ஊகம் எல்லோரிடமும்.
நிலைமையை உணர்ந்த அவர், அனைவரும் முன்னிலையில் கவரைத் திறந்து வாசித்தார்.
இரண்டு பத்திகள் மட்டுமே இருந்தன.
முதல் பத்தி என் சொத்துக்கள் அனைத்தும் மகன்களுக்கும் மகள்களுக்கும் சமமாகப் பிரிக்கப்பட வேண்டும்.
இரண்டாவது என் இறப்பிற்கு யாரும் செலவு செய்யக்கூடாது. தேவையான பணம் முன்பே அட்வகேட் சாமிநாதனிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்தே அனைத்து சடங்குகளும் செய்யப்பட வேண்டும்.
தாத்தா தன் வாழ்வை தானே முடித்துக் கொண்டார்..
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 7, 2026
பார்வையிட்டோர்: 78