தேவதையின் புத்தகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2026
பார்வையிட்டோர்: 84 
 
 

அழகான மலைகள் நிறைந்தது, அழகானது மட்டும் அல்ல, அதி உயரமானதும் கூட. எவ்வளவு உயரம் என்றால், காலை முதல் மாலை வரை கற்பிப்பவரை போன்று கால் கடுக்க நின்றே வேலை செய்யும் கதிரவனும் சற்று அயர்வைப் போக்க அமர்ந்து கொள்ளும் அளவு. மலைகளின் ஊடே விழுந்து எழும் அருவி தன் அன்பால் அனல் மிகுந்த சூரியனையும் சற்று ஆற்றுப்படுத்துவாள்.

மூலிகைச் செடிகளும், முழு நீண்ட மரங்களும், மூச்சுக் காற்றுக்கு இதமளிக்க, திரும்பும் பக்கமெல்லாம் மனம் விரும்பும் பசுமையும், சுமையே தூக்கினும் கூட, எங்கெங்கு காணினும் சுகமடா!!! என சொல்லத் தோன்றும் அழகிய கிராமம்.

அங்கே பெரிய பெரிய திண்ணைகள், அழகிய தூண்கள், வட்ட நிலா வீட்டிற்குள் வந்து விட மாட்டோமா? என் ஏக்கத்துடன் எட்டி எட்டிப் பார்க்கும் முற்றம், வீட்டைச் சுற்றி ஒரு அழகிய தோட்டம்,அத்தோட்டத்தை தொட்டுப் பார்த்து விட மாட்டோமா? என ஓடி வரும் அருவி என பேரழகை மொத்தமாய் கொண்ட ஒரு பெரிய வீடு இருந்தது.

அவ்ளோ பெரிய கிராமத்துல ஒரே ஒரு வீடு தானானுலாம் கேட்காதிங்க.அங்கங்க நிறைய வீடும் இருந்தது.

அப்பறம் இந்த வீட்ட மட்டும் ஏன் இப்படி சிறப்பா சொல்றோம்னா, நம்ம கதையோட கதாநாயகி இந்த வீட்ல தான பொறந்துருக்கா அதான்.

கள்ளிப்பால் கொடுக்காவிட்டாலும் பொம்பள புள்ளையா? பொம்பள புள்ளதானா? என சொல்லி சொல்லியே கொல்பவர்கள் இன்றளவும் இருக்கும் இந்த உலகத்துலயும், ” வாராது போல் வந்த ஓர் மாமணி போல்” அள்ளிக் கொஞ்சும் பெருங்கருணை கொண்ட பெற்றவர்களை பெற்றவள் பிறந்திருந்தாள்.

உருண்ட முகம், சுருண்ட கேசம், கருத்த பளிங்கு கண்கள், திருத்தமான அழகு அவள். ” அழகி” என்றே பெயரிட்டனர். அம்மா,அப்பா, தாத்தா, பாட்டி என அழகியோடு சேர்த்து ஐவர் அவ்வீட்டில்.

நம் கதாநாயகிக்கு கதை கேட்பதென்றால் கொள்ளைப் பிரியம்.

அம்மா சொல்லும் ” கஜேந்திர மோட்சம் கதையில் தொடங்கி பாட்டி சொல்லும் பாவு குருணையடா மகனே பாவத்தாங்கீரையடா” வரையில் அத்தனை கதையும் அவளுக்கு அத்துப்படி. சில நேரங்களில், ஒரே கதையைக் கூட பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லி கூட கேட்பதுண்டு. ஆதிமூலமே என அழைத்தால், ஆண்டவன் ஓடோடி வருவான் என்பதிலும் அவளுக்கு நம்பிக்கை உண்டு, ஆண்டவனுக்கும் முதல் அம்மாவும், அப்பாவும், அழைக்கக் கூட அவர்கள் காத்திருக்காமல் அவனினும் முன்னதாய் வரும் ஆண்டவர்கள் என்ற அதீத நம்பிக்கையும் உண்டு.

நாளும் வளர‌‌ வளர ஆளும் வளரத் தொடங்கியிருந்தாள் நம் அழகி. ஆனாலும் பயம் மட்டும் கொஞ்சம் அதிகம் அவளுக்கு. அதிலும் இருட்டென்றால் இன்னமும் பயம். இருளைக் கண்டதும் அம்மா எப்போம்மா விடியும் எப்போம்மா விடியும் என கேட்க ஆரம்பித்து விடுவாள். சீக்கிரமா விடிஞ்சுடும்மா என்பாள் அவள் அம்மாவும். பயந்தாங்கொள்ளி னு கிண்டல்லாம் பண்ணக் கூடாது. பயமும் நல்லது தானே.

“அச்சம் என்பதும் அவசியம் தானே

அல்லவை தவிர்க்க அதுவும் வேண்டும்”

வீட்டில் புலியென்ற‌ போதும், வெளியில் எலி தான். குறிப்பாக பள்ளியிலோ சொல்லவே வேண்டியதில்லை. எலி என்றதுமே சிரிப்பா ? என்ன? எலிக்கு கேட்கும் திறன் அதிகமாம் தெரியுமா? அதனாலதான் எலி காது னு சில பேர சொல்வாங்க.

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.

என்ற வள்ளுவன் வாய் மொழி கேட்டதில்லையோ???

நம் அழகிக்கும் நல்லவை கேட்பதில் அலாதி பிரியம்.

ஒரு நாள், காலையில் எழுந்து வெளியே சென்று பல் துலக்க ஆரம்பித்தவள், பக்கத்து வீட்டு சத்தம் கேட்டு திரும்ப,

ஏழு மணி ஆயிடுச்சு. பொம்பள புள்ள இவ்ளோ நேரமாவா தூங்குவ என கீதா அத்தை சாருமதிக்கு அரை மணி நேர கீதம் பாட, ஏழரை மணிக்கு எழுந்து வந்த சந்தோஷ்க்கு மட்டும் சந்தோஷமாய் காபி வந்தது.

சீக்கிரம் எழுந்துக்கணும்னு சொன்னது சரிதான். பொம்பள புள்ள சீக்கிரமா எழுந்துக்கல சொல்றாங்க. அவளினும் அரை மணி நேரம் தாமதித்து வந்த சந்தோஷ்க்கு அர்ச்சனை இல்ல. அப்போ! பொம்பள புள்ள மட்டும் தான் சீக்கிரம் எழுந்துக்கணுமோ?? என யோசித்தவாறே குளித்து பள்ளிக்கு கிளம்பியிருந்தாள். பள்ளிக்கு செல்லும் வழியில், அம்மாவோடு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு சுற்றி வர, வடக்கு பார்த்து அமர்ந்திருந்த ஒருவரைக் காட்டிய அம்மா, இவர் தான் பிரம்மா நல்லா கும்பிட்டுக்கோ. இவர் தான் நம்மள படைச்சவர் னு சொல்ல, கும்பிட்டு கிளம்பிய அவளுக்கு, அம்மாக்குத்தான பிள்ளைங்க பொறப்பாங்க. பெண் ஆடு தான் குட்டி போடுது, பெண் நாய் தான் குட்டி போடுது, ஏன் சிங்கம், கோழி, அப்டின்னு பறவை, விலங்கு எல்லாமே அப்டித்தானே, அப்போ இந்த அண்டசராசரம் மட்டும் எப்டி ஆம்பள சாமி படைச்சிருக்கும்?? பொண்ணா இருக்கக் கூடாதா என்ன? என்று நினைத்துக் கொண்டே அம்மாக்கு ‘பை’ சொல்லி பள்ளிக்கு சென்றிருந்தாள்.

பள்ளியில் அன்றைய பாடம் பெண் விடுதலை எப்படியெல்லாம் பெண் விடுதலை கிடைத்தது, பெண் விடுதலைக்காக பாடுபட்டவர்கள்,

பெண் உரிமைக்கு குரல் கொடுத்தவர்கள், என பக்கம் பக்கமாய் இருந்தது அந்த புத்தகத்தில்.

பெண் விடுதலையா? அப்போ கட்டிப் போட்டது யாரு? கட்டிப் போட அவங்களாம் யாரு? யாருக்கிட்ட உரிமை கேக்கணும்? உனக்கான உரிமை இது தான் இவ்ளோ தான் னு கொடுக்க அவங்களாம் யாரு? என கேள்விகளால் நிரப்பப்பட்டது அவள் மூளை. பள்ளி முடிந்து வீடு சென்ற அவளை எதிர் வீட்டு எழிலரசியின் நிச்சயத்திற்கு அம்மா அழைத்துச் செல்ல, எல்லாம் பிடித்து 5 இலட்சம் பணம் கொடுக்க கேட்க, குறைத்துக்கொள்ள கேட்டுக் கொண்டிருந்தனர் எழிலரசியின் பெற்றோர். 5 இலட்சம் கொடுத்தா அந்த மாமாவோட அம்மா, அந்த மாமாவ எழிலக்காவுக்கு வித்துருவாங்களா என்ன? என்று நம்ம எலிக்குட்டி மைண்ட் வாய்ஸ் னு நினைச்சு வெளில பேச வாய் பொத்தி அழைத்து சென்றாள் அம்மா. அழகியின் அம்மாவுக்கும் பெரிதாய் அதிலெல்லாம் விருப்பமில்லை எனினும் அடுத்த வீட்டு விவகாரமல்லவா அதான்.

வீட்டுக்குச் சென்றவள் வீட்டுப்பாடம் எழுதலானாள். பக்கத்து வீட்டு சாருமதி அக்கா பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என கத்தி கத்தி உயில் எழுதிக் கொண்டிருந்தாள். அவளிடம் ஓடிய அழகி, அப்போ மிச்சம் 67% யாருட்டு க்கா? அதை யாரு வச்சுப்பா?? நமக்கு இவ்ளோ தான் னு சொல்றாங்களே அவங்களாம் யாரு? இந்த உலகம் அவங்களூட்டா க்கா?? என அடுக்கடுக்காய் கேள்வி கேட்க,

அதெல்லாம் எனக்கு தெரியாது டா, இது முக்கியமான கேள்வியாம். 35 மார்க் வாங்கி நான் பாஸ் ஆகணும் ல அதான் மனப்பாடம் பண்றேன்னு சொல்லி மீண்டும் உயிலை அறிவிக்க தொடங்கி இருந்தாள்.

வீட்டுப்பாடம் முடித்த அழகி, அனைவருடனும் அமர்ந்து டிவி பார்க்க, அரை குறை ஆடையுடன் விளம்பர காட்சி, தரமான உள்ளாடைகள் என ஆண்களும், பெண்களும் தரமற்று நடித்துக் கொண்டிருக்க அச்சோ!! அச்சோ!! எப்படித்தான் இந்த பொம்பள புள்ளைங்க இப்படி அரையும் குறையுமா ஆடுதுங்களோ?? அசிங்கமா இல்ல., அப்பறம் நாடு எப்படி உருப்படும் பாலியல் வன் கொடுமை அது இதுன்னு தான் போகும் என சரமாரியாக பாட்டி வசைபாடி, சேனல் மாற்றப் பட்டு இருந்தது.

அரை குறையா உடுத்திக்கிறது தப்பு தான். இரண்டு பேருமே தான் அசிங்கமா உடுத்திருக்காங்க. ஏன்? பாட்டி அந்த அக்காங்கள மட்டும் திட்டுறாங்க. அந்த அண்ணாவல்லாம் திட்டல. அப்போ அந்த அண்ணால்லாம் பண்ணுனா தப்பில்லையா என்ன?? என்ற சிந்தனையில்,

அப்போ தமிழ் சார் காலை வகுப்பு ல உயர் திணை , அஃறிணை னு பாடம் சொன்னாங்களே! அப்போ ஆண்களெல்லாம் உயர் திணை பெண்களெல்லாம் அஃறிணையா என்ன???

அப்போ ஏன் கவிமணி “மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா னு பெண்மணிகளப் பத்தி உயர்வா பாடணும்? அப்போ பெண்கள் தான் உயர்வா என்ன???

என்றெல்லாம் அழகி குழம்பிக் கொண்டிருக்க, டிவி யில் மெகா தொடர்கள் ஆரம்பமானது. எல்லாத் தொடர்களிலும் , பெண்கள் , ஆண்களென பாகுபாடின்றி வில்லத்தனம் செய்தனர். சில சமயம் பெண்கள் ஆண்களுக்கும், ஆண்களே ஆண்களுக்கும், பல சமயங்களில் ஆண்கள் பெண்களுக்கும், இன்னும் பல சமயங்களில் பெண்களே பெண்களுக்கும்.

இன்னும் சற்று அதிகமாய் குழம்பிய, அழகி எது தான் உயர்வு?? யார் தான் உயர்ந்தவர்?? யாராய் பிறக்க தான் மாதவம் செய்திட வேண்டும்?? எது சிறந்தது?? என எண்ணிக்கொண்டே தூங்கியும் போனாள்.

எப்பொழுதும் போல் சிறிது நேர சின்ன விழிப்பில், இருள் கண்ட அழகி, எப்போம்மா விடியும்?? எனக் கேட்க, இருள் விலகிய ஒளி சிறிதாய் தெரிய, சற்று இமை விலக்கினாள் அழகி. அங்கு ஒரு குட்டி தேவதை தனது மந்திர துகள்களால் அறையை பிரகாசமாக்க, அளவில்லா மகிழ்ச்சியின் சிரிப்பில் அழகி பேரழகியானாள்.

குட்டி தேவதை ” உன் கேள்விகளுக்கு விடை” என புத்தகம் ஒன்றை பரிசளிக்க, புத்தகத்தின் முதல் பக்கத்தில்…..

கன்னியராய்…

காளையராய்…

பிறத்தலில் சிறந்தது.

கண்ணியமுள்ள…

கனிவுள்ள.

மனிதராய் இருத்தல்…

பேரழகி சிரித்தாள்.

விடிஞ்சுடுச்சும்மா எழுந்துக்கோ என அம்மா எழுப்ப, ஆமாம் மா விடிஞ்சுடுச்சு என்று சொல்லிக்கொண்டே கையிலிருந்த புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்தாள்.

கரண்டியை பறிக்கச் சொன்ன…

கருணைக்கு கோடி நன்றிகள்…

கரண்டியை…

எடுப்பதும்.. எறிவதும்,

எம் உரிமை என்பதையும்

கவனத்தில் கொள்ளுங்கள்…

இட ஒதுக்கீடு தரும்

இறை தூதர்களே!!!

இடம் ஒதுக்கும் முன்

இடமெல்லாம் உம்முடையதென…

இறைவன் அளித்த பத்திரத்தை…

சற்று காட்டுங்கள்..

கற்பென்றும்…

கண்ணியமென்றும்..

கருத்துக்களை முன் வைக்கும் முன்..

இறைவனே ஆனாலும்…

இருபாலருக்கும் பொதுவென்று மொழியுங்கள்..

ஆடை குறைவு அசிங்கம் தான்…

ஆடை இன்றியே..

ஆடவரை காணினும்..

அருவருத்து சீ எனும் எம் பெண்களைப் போல்…

ஆடை குறைந்த பெண்களை காண நேர்கையிலே…

அருவருங்கள் அவர்களை…

உருவறுக்காதீர்கள்..

விலை பேசி உம்மை

விற்றுக் கொண்டிருக்கையில்,

வீரச்சிரிப்புடன்…

வீற்றிருக்கும் வீரர்களே!!!

நீங்கள் வீரர்களா??

விலை மகன்களா??

சிந்தித்து செயலாற்றுங்கள்..

ஆணுக்கு பெண் சமம் அன்று…

ஆணும் பெண்ணும் சமம் என்று..

அறிய முயற்சியுங்கள்..

ஆணும் பிறக்க வேண்டாம்..

பெண்ணும் பிறக்க வேண்டாம்…

அவதரிக்கட்டும் மனிதம்…

அகிலமே ஆகட்டும் புனிதம்…

மனித மரம் வளர..

மனிதம் என்னும் உரமிடுவோம்..

மனிதன் என்னும் வரங்கள் பூக்கட்டும்..

கொடுத்து வாங்க..

கொடுத்து வைத்திருப்பதெல்லாம்..

ஒருவருக்கானதும் இல்லை..

ஒரு இனத்திற்கானதும் இல்லை..

யாரும் யாருக்கும் இங்கே அடிமையில்லையே…

அன்பினால் ஆளலாமே..

இந்த பிரம்மாண்ட வீட்டை…

இருக்கும் வரை..

இயன்ற வரை…

இனிய செயல்களாலும்…

இனிய சொற்களாலும்…

நிரப்பிடுவோமே…

இறக்கும் தருவாயில்.

இறைவனும் நமக்காக..

சற்று அழட்டுமே…

இப்படிக்கு,

அழகி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *