மனிதாபிமானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 1, 2026
பார்வையிட்டோர்: 251 
 
 

நள்ளிரவு. பன்னிரெண்டைத் தாண்டி இருக்கலாம். ஜெகதீஷ் காரைத் தெருவளைவில் திருப்பி அவனது கட்டிடத்தின் நுழைவாயில் எதிரே நிறுத்தினான். ஹார்னை அடித்தான். செக்யூரிட்டி வரவில்லை. பொறுமை இழந்தவன் இரண்டு மூன்று முறை ஹார்னை அடித்தான். நாற்காலியில் சாய்ந்தவாறே செக்யூரிட்டி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான்.

ஜெகதீஷ் காரை விட்டு இறங்கினான். அவனே கேட் கதவைத் திறந்து வைத்தான். பின்னர் மறுபடியும் காரின் உள்ளே உட்கார்ந்து வண்டியை உள்ளே நுழைத்து பார்க்கிங் ஸ்பேசில் நிறுத்தியவனின் மண்டை சூடு ஆகிப்போயிருந்தது.

காரின் சாவியை பாண்ட் பாக்கெட்டில் வைத்தவன் செக்யூரிட்டி இருந்த பக்கம் திரும்பினான். செக்யூரிட்டி அமர்ந்து இருந்த இடத்தில் பக்கத்தில் தண்ணீர் பாட்டில் தெரிந்தது. அதில் இருந்த தண்ணீரை செக்யூரிட்டி ஆளின் முகத்தில் விசிறினான். திடுக்கிட்டு எழுந்தான் அந்த ஆள். அவன் ஒரு பெங்காலி. பார்க்க குண்டாக அடர்த்தியான மீசையுடன் வாட்டசாட்டமாக இருந்தான்.

திடு திடுப்பென்று இப்படி நடந்ததில் செக்யூரிட்டி ஆள் பேந்தப்பேந்த விழித்தான். ஜெகதீஷின் சினம் இத்தோடு நிற்கவில்லை. அவனது டிபன் பாக்ஸை தரையில் வீசினான். அந்த டிபன் பாக்ஸ் தரையில் உருண்டோடி அதில் எஞ்சி இருந்த ரொட்டிகள் தரையில் விழுந்தன.

அந்த பெங்காலி செக்யூரிட்டி தடுமாறிப்போனான்.

“உனக்கு சம்பளம் கொடுப்பது கார் நுழையும் போது கேட்டைத் திறக்கவா அல்லது தூங்குவதற்காகவா?” சீறினான் ஜெகதீஷ்.

“மன்னிச்சுக்கோங்க சாப். இனிமேல் இப்படி நடக்காது” என்ற செக்யூரிட்டி ஆளின் கண்களில் கண்ணீர்.

விருட்டென்று உள்ளே அபார்ட்மெண்டுக்குள் நுழைந்த ஜெகதீஷ் மின்தூக்கியின் பொத்தானை அமுக்கினான்.

வீட்டுக்குள் தனது சாவியைப் போட்டு நுழைந்தவன் குளியல் அறையில் போய் முகத்தில் தண்ணீரை வாரி இறைத்தான். அவன் மனைவி வீணாவிடம் நடந்ததைச் சொன்னான். வீணா தூங்கவில்லை. கணவனுக்காகக் காத்திருந்தாள்.

“இது தப்புங்க. வாய் வார்த்தையால் என்ன வேணும்னாலும் சொல்லுங்க, திட்டுங்க, அதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், கை நீட்டற பழக்கம் தப்புங்க” என்றாள் வீணா அமைதியாக.

அமைதியானான் ஜெகதீஷ்.

நாற்பத்தி ஐந்து வயதான ஜெகதீஷ் பார்க்க சினிமா ஹீரோ மாதிரி இருந்தான்.நிமிர்ந்த ( முடிகள் நிறைந்த) மார்பு. வசீகரமான முகம். முத்துப்பற்கள். அடர்த்தியான மீசை. வீணாவிற்கு கணவனின் தோற்றத்தை நினைத்து பெருமையாக இருந்தாலும், அவனுடன் வெளியே செல்லும் போதெல்லாம் அவன் மற்றவர்களின் கவனத்தை கவர்வதை அவளால் உணர முடிந்தது. ஜெகதீஷின் கோவம் தான் அவனது சத்ரு.

சற்று நேரம் மௌனம் காத்த பின் “நான் போன காரியம் கைகூடவில்லை. நான் ரொம்ப எதிர்பார்ப்பு வைத்திருந்தேன். அந்த கடன் கிடைக்கிற வழியாகத் தெரியலை.” என்றான் ஜெகதீஷ்.

அவர்கள் தனியாக வீடு ஒன்று கட்டிக்கொண்டிருந்தார்கள் – நகரத்திற்கு வெளியே. ஒரு ஐம்பது லக்ஷம் பற்றாக்குறையாக இருந்தது. தெரிந்த நபரிடம் – அவர் அவனுக்குத் தூரத்து சொந்தம் தான் – கடன் கேட்கப்போக அவர் கை விரித்து விட்டார். வங்கியில் அவனால் கடன் வாங்க முடியாது. ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பார்கள். அவனுக்கு சொந்த பிசினஸ் வேறு. மாதாமாதம் சம்பளம் என்று கிடையாது. சில மாதங்கள் பிசினஸ் செழிக்கும். சில மாதங்களில் மந்தமாக இருக்கும். பிசினஸில் இது சகஜம் தானே?

அவனது இரு மகன்களும் வெளியூரில் ஹாஸ்ட்டலில் படித்துக்கொண்டிருந்தார்கள்.

வண்டியை போக்குவரத்து நெரிசலில் ஓட்டி வந்த களைப்பில் ஜெகதீஷ் உடைகளை மாற்றிக்கொண்டு படுக்கையில் விழுந்தவன் எப்பொழுது கண் அயர்ந்தான் என்றே தெரியாது.

துண்டு விழுந்த ஐம்பது லக்ஷத்தை எங்கிருந்து சரி கட்டுவது என்ற கேள்வி அவனைக் குடைந்து கொண்டு இருந்தது.

வீட்டைக்கட்டிக்கொண்டிருக்கும் நபர் வேறு பாக்கி பணத்திற்காக நச்சரித்துக்கொண்டிருந்தார்.

காலை மணி எட்டு. வீணா மல்லிப்பூவைப்போல இட்லியும் தேங்காய் சட்னியும் செய்து சாப்பாட்டு மேஜையில் வைத்தாள். பல் தேய்த்து, குளித்து முடித்து குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு காலைச் சிற்றுண்டியை அருந்த உட்கார்ந்தான் ஜெகதீஷ்.

அழைப்பு மணி ஒலித்தது. வீணா கதவைத் திறக்க, அங்கே அந்த பெங்காலி செக்யூரிட்டி ஆள் நின்று கொண்டிருந்தான்.

“என்னப்பா என்ன வேண்டும் ” என்றாள் வீணா.

“ஸாப், இருக்கிறாரா? அவரிடம் இதைக்கொடுக்க வேண்டும்” என்றான் அவன்.

அதற்குள் பேச்சு சத்தம் கேட்டு ஜெகதீஷ் வெளியே வந்தான். அந்த செக்யூரிட்டி ஆளைப்பார்த்ததும் அவன் முகம் சுருங்கியது.

வீணா அந்த கவரைக்கையில் வாங்கினாள். ஜெகதீஷ் அதைப்பிரிக்க, இருபது லக்ஷத்திற்கான காசோலை தென்பட்டது. அவன் எப்போதோ அவன் நண்பனுக்கு கடன் கொடுத்தது. அவனே மறந்து விட்டான். நண்பன் அதை திருப்பி இருக்கிறான். முகம் மலர்ந்தான் ஜெகதீஷ்.

செக்யூரிட்டி ஆள் கண்கள் கலங்க, “சாப், என்னை மன்னிச்சிடுங்க. நீங்க வரும் போது நான் தூங்கி இருக்கக்கூடாது தான். நீங்க என் மேல தண்ணியை வீசினதை நான் பெரிசா எடுத்துக்கலை சாப். நீங்க எனக்கு அண்ணா மாதிரி. நான் உங்களுக்கு சேவை பண்ண வந்திருக்கேன். நேற்று மதியம் என் பையனுக்கு உடல் நிலை சரி இல்லை. டாக்டரிடம் காண்பித்து விட்டு, மறுபடியும் டூட்டிக்கு வந்தேன். அதனால் ஒரே களைப்பு. தெரியாத்தனமாக கண் அயர்ந்து விட்டேன் ” என்றான்.

சட்டென்று மனம் இளகியது ஜெகதீஷிற்கு.

“நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும். என்னை மன்னிச்சிருப்பா. ஏதோ ஒரு கோவத்தில் அப்படி செஞ்சு விட்டேன். நான் தள்ளிவிட்டதில் உன்னோட சப்பாத்தியும் தரையில் விழுந்து விட்டது” என்று நிறுத்தினான்.

அதற்குள் வீணா உள்ளிருந்து ஒரு டப்பாவில் நான்கு இட்லியும் சட்னியும் கொண்டு அந்த செக்யூரிட்டி ஆளின் கையில் தர, ஜெகதீஷ் அந்த செக்யூரிட்டி ஆளின் கையில் ஐநூறு ரூபாயை அமுக்கினான்.

“வேண்டாம் சாப் , வேண்டாம்” திக்குமுக்காடிப்போனான் அந்த ஆள்.

“பரவாயில்லை..வைத்துக்கொள்…அண்ணன் தம்பிக்குக்குக் கொடுத்ததாக இருக்கட்டும்” என்ற ஜெகதீஷின் குரல் கம்மிப்போய் இருந்தது.

செக்யூரிட்டி சென்ற பின்னர் உள்ளே வந்தவனிடம் வீணா சொன்னாள்

“என்னங்க, இருபது லக்ஷம் வந்து விட்டது. கவலை விட்டது. ஆனாலும் இன்னமும் முப்பது லக்ஷத்திற்கு துண்டு விழுதே”

“கவலைப்படாதே வீணா. அதற்கும் ஒரு நல்ல வழி பிறக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்ற ஜெகதீஷ் இட்லியை சட்னியில் தோய்த்து ருசித்து உண்ண ஆரம்பித்தான். அவன் மனசு லேசாகி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *