பேய்களும் பிசாசுகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2026
பார்வையிட்டோர்: 240 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிறுவர் ஆஸ்பத்திரிக்கு நாங்கள் மூன்றாவது முறையாகச் செல்கின்றோம். ஐந்தாம் வார்ட்டில் காயப்பட்ட சிறு வர்கள் இருபது பேர்.

ஆறாம் வார்ட் மேல்மாடியில் அங்கு காயப்பட்ட சிறுவர்கள் ஏழு பேர்.

அவர்களுக்குப் பாரிய காயங்கள் தீவிர சிகிச்சை. பிரத்தியேக பராமரிப்பு.

அந்த வார்டுக்கு கண்டபடி பார்வை யாளர்கள் செல்ல முடியாது.

காயமடைந்த சிறுவர்களுக்கு உடுப் புகள், பால்மா வகைகள், பழங்கள்,பிஸ் கட்டுகள், விளையாட்டுச் சாமான்கள் எல்லாம் எடுத்துச் செல்கின்றோம்.

எங்களைப் பார்த்ததும் சிறுவர்க ளுக்கு மகிழ்ச்சி முகங்களில் மலர்ச்சி. காயப்பட்ட சிறுவர்கள் மாத்திர

மல்ல, ஏனைய நோயாளிச் சிறுவர்களும் எங்களை ஆவலுடன் எதிர்பார்த்து இருக் கின்றனர்.

சிறுவர்கள் மீது எங்களுக்கு அனுதாபம் பரிவு.

சிறுவர்களுக்கும் எங்கள் மீது பற்று.

இது மூன்றாவது தடவை.

முதல் முறை சென்றபொழுது பழவ கைகள், பிஸ்கட்டுகளை மாத்திரம்தான் நாங்கள் எடுத்துச் சென்றோம் அப்பொழுது காயப்பட்ட சிறுவர் களுக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்று அங்குள்ளதா தியர்கள் கூறினார்கள். இதன்படியே நாங்கள் பொருட்களை எடுத்துச் செல்கின்றோம்.

மூன்றாம் வார்டில் தாதியர் இருவர்.

காயமடை டந்த சிறுவர்களை இளம் தாதி சிரத்தையுடன் பராமரிப்பு.

மற்றைய தாதி அலட்சியப் போக்கு.

நாங்கள் கொண்டு சென்ற பொருட்களை காயமடைந்த சிறுவர்களுக்கு பங்கிட்டுக்கொடுக்கும்படி தாதியர் எங்களுக்குக் கூறுகின்றனர்.

உடுப்புகளையும் பால்மாவகைகளையும் தாதிகளிடம் ஒப் படைக்கின்றோம். அவர்கள் அவற்றை அந்தந்த சிறுவர்களின் கபேர்ட்களில் வைக்கின்றனர்.

பழங்கள், பிஸ்கட்டுகள், ரொபிகள் எல்லாவற்றையும் அந்த வார்ட்டிலுள்ள எல்லாச் சிறுவர்களுக்கும் பங்கிடுகின் றோம்.

சிறுவர்களுக்கு ஆனந்தம்.

மேல்மாடியிலுள்ள ஆறாம் வார்ட்டுக்கு செல்கின்றோம். முதிர்ந்த தாதி தடுக்கின்றா.

அங்கை இரண்டு மூண்டு காயப்பட்ட சிறுவர்கள்தான் இருக்கினை. அவர்களுடைய பொருட்களை எங்களிட்டைத் தாங்கோ. நாங்கள் அவைக்குக் குடுக்கிறம்.

பெரியதாதி கூறுகின்றா.

அங்கை படுகாயமடைஞ்ச ஏழு சிறுவர்கள் இருக்குதுகள்.

இளம்தாதி கூறுகின்றார்.

நீங்களே அவர்களுக்குரிய பொருட்களை நேரடியாக கொ டுங்கோ. அதுதான் நல்லது. அப்பொழுதுதான் அவர்கள் சந்தோ சப்படுவினை.

இளம்தாதி வலியுறுத்திக் கூறுகின்றார்.

முதியதாதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கின்றது.

ஆறாம் வார்ட்டுக்கு நாங்கள் செல்கின்றோம்.

நான்கு வயதுப் பையன் ஒருவன். அவனுடைய தலையின் பின்பக்கத்தில் காயம்.

பாரிய காயம். அவனுக்கு அறிவில்லை.

வந்த நாளையிலையிருந்து அவன் மயக்க நிலையில். அச்சிறுவனுடைய கட்டிலுக்கு அருகில் பதின்நான்கு அல் லது பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையன். அவன் அச்சி றுவனின் அண்ணன்.

அவனுக்கு பிஸ்கட், ரொபிகளைக் கொடுக்கின்றோம்.

‘எனக்கு வேண்டாம். மற்றவைக்குக் குடுங்கோ.

பற்றற்றவனாய் கூறுகின்றான்.

‘இந்தப் பையனுக்கு எதைக் குடுத்தாலும், அவன் தனக்கு வேண்டாம்’ என்கிறான்.

தாதி.

‘இவன் எதையும் ஏற்பதில்லை’.

‘ஏன் எண்டு எங்களுக்கு தெரியேல்லை’.

மற்ற தாதி

‘இவன் எங்களோடையும் அதிகம் பேசுவதில்லை. எவரு டனும் பேசுவதில்லை. இவனுக்கு என்ன நடந்ததெண்டுஎங்களுக்கு தெரியாது.’

தாதி கவலையுடன் கூறுகின்றாள்.

‘எந்த நேரமும் இவன் மௌனம்தான். நாங்கள் இவனைப் பேசவைக்க எவ்வளவோ முயற்சித்தம் பலனில்லை. இவன் வாயே திறக்கிறானில்லை.

மற்றையதாதி.

‘இவனைப் பார்க்க எங்களுக்கு சரியான கவலையாகக் கிடக்கு’

இரண்டு தாதிகளும் கூறுகின்றனர்.

‘எதையோ பறிகொடுத்தவன் போலையிருக்கிறான். சாப் பாட்டிலோ, உடுப்பிலோ அவன் கவனம் செலுத்துவதில்லை. எங்களுக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை’.

தாதியர் இருவருக்கும் அவன்மேல் பச்சாத்தாபம்.

ஏழு பிள்ளைகளுக்கும் மேற்கொண்டு இன்னும் என் னென்ன பொருட்கள் தேவைப்படுகின்றனவென்று நாங்கள் அவர்களிடம் கேட்டோம்.

என்னுடன் வந்தவர்கள் மற்றைய சிறுவர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கின்றனர்.

முன்பு நாங்கள் வந்த இரு தடவைகளும் நான் அந்த சிறு வனை அவதானிக்கத்தான் செய்தேன். ஆனால் அவனுடன் பேச வில்லை.

இம்முறை நான் அவனுக்குப் பக்கத்தில் அமர்கின்றேன். அவனுடைய கையைப் பிடித்து தடவுகின்றேன்.

அவனுடைய நாலுவயதுத் தம்பிக்கு எப்பிடிக் காயம் ஏற் பட்டது என்று வாஞ்சையுடன் அவனைக் கேட்கின்றேன்.

அவன் வாயே திறக்கவில்லை. மௌனமாகவே இருக்கின்றான்.

கதைப்பதற்கு முதலில் அவன் தயங்குகின்றான். ‘சொல்லு தம்பி என்ன நடந்ததெண்டு சொல்லு‘ நான் அவனை ஊக்குவிக்கின்றேன்.

அவன் விம்முகின்றான்.

அவனுடைய முதுகைத் தடவிக் கொடுக்கின்றேன். அவனுடைய அழுகை அதிகரிக்கின்றது.

மடை திறந்தாற்போல் அவன் கதறி அழுகின்றான். தான் எங்கு இருக்கின்றேன் என்பதையே மறந்து அழுது புலம்புகின்றான்.

அவன்பாட்டில் வேண்டுமட்டும் அவனை அழ விடுகின்றேன்.

அவனது மனச்சுமை இறங்கு மட்டும்நான் அவனை அழ விடுகின்றேன்.

இவ்வளவு நாட்களும்இந்த இதயச்சுமையை இவன் சுமந் துகொண்டு எவ்வளவு அவஸ்தைப்பட்டிருப்பான்?

இந்தப் பிஞ்சுக்கு இந்தக் கதி ஏன் ஏற்பட்டது? இவனைப்போல் எத்தனை பேர் தங்கள் இதயச்சுமையை இறக்குவதற்கு வழிதெரியாமல் அவஸ்தைப்பட்டும் கொண்டி ருக்கிறார்களோ யாருக்குத் தெரியும்?

என் மனதில் எண்ணற்ற கேள்விகள்.

‘என் இதயத்தில் சோகச்சுமை.

படிப்படியாக அவனது அழுகை குறைகின்றது. ஆசுவாசமடைந்ததும் அவன் பேச ஆரம்பிக்கின்றான்.

‘எங்களுடைய ஊர் ஒரு சின்னக் கிராமம் ‘

‘அது எங்கை இருக்கு?’

எனக்கு அறிய ஆவல்.

‘அது ஒரு எல்லைக் கிராமம்’

‘அந்தக் கிராமம் எங்கை இருக்கு? ‘

ஆவலுடன் கேட்கின்றேன்.

‘அந்த எல்லைக் கிராமம் வவுனியாவுக்கும்மதவாச்சிக்கும் டையிலை இருக்கு.‘

‘அது காட்டுப் பிரதேசமா?’

‘இல்லை ஒரு பக்கம்தான் காடு, மற்றப் பக்கம் பெரிய குளம். அடுத்த பக்கம் வயல்.

‘உங்கடை ஊரிலை எத்தினை குடும்பங்கள்?

இருநூறு இருநூற்றைம்பது குடும்பங்கள் இருக்கும். ‘அது தமிழ் கிராமமா?

‘இல்லை. ஒரு எழுபது எண்பது குடும்பங்கள் சிங்களக் குடும்பங்கள். மிச்சம் தமிழ் குடும்பங்கள். அநேக சிங்களாக்கள் தமிழ் பேசுவினை. தமிழாக்களும் சிங்களம் பேசுவம். நாங்கள் எல்லாரும் ஒற்றுமையாய் சந்தோசமாயிருந்தம்.

‘அப்ப, தொழில்?’

‘வயலில் நெல்பயிரும் ஒரு போகத்திலை எள்ளுப் பயிரும் செய்தம் மீன்பிடி. சின்னச்சின்ன காய்கறித் தோட்டம். இடைக் கிடை சிலர் வேட்டை

‘பண்டி, மரை, முயல், மான்களை வேட்டையாடினம் போககாலத்திலை சிலர் காட்டுப்பகுதிகளில் தேன் எடுத்து விற்றனர்.

‘படிப்பு?’

‘என்ன பெரிய படிப்பு? ஒரு சின்னப் பள்ளிக்கூடம் எழு பத்தைஞ்சு அல்லது எண்பது தமிழ் பிள்ளைகள், நாப்பது நாப் பத்தைஞ்சு சிங்களப் பிள்ளையள்.

‘ஐஞ்சாம் வகுப்பு வரை தான் நடந்தது.’

‘ஐஞ்சாம் வகுப்பிலை ஏழு தமிழ் பிள்ளையள்தான். ‘காலையில் தமிழ் பள்ளிக்கூடம் பின்நேரம் ஒரு மணிக்கு சிங்களப் பள்ளிக்கூடம்.

ஒருதமிழ் வாத்தியாரும் ஒரு சிங்கள வாத்தியாரும் அவை இரண்டு பேரும் பேசிப் பறைஞ்சு, ஒரு மாதத்திலை ஒவ்வொரு தர் ஆறேழு நாள்கள்தான் பள்ளிக்கூடம் வருவினை.

‘ஒரு சின்ன கவுண்மேந்து ஆஸ்பத்திரி. ஒரு டொக்டரும் ஒரு ஓடலியுந்தான். டொக்டர் ஐஞ்சாறுநாள்தான் ஆஸ்பத்திரிக் குவருவார். மற்ற நாளையிலை மருந்து தாறது ஓடலிதான். அது வும்ந ாங்கள் அவனுக்கு காசு குடுத்தால்தான் மருந்து தருவான்.

‘பெரிய வருத்தம் வந்தால் வவுனியா ஆஸ்பத்திரிக்கு போ வேணும்’.

சண்டையும் நடந்துகொண்டுதானிருந்தது. ‘பேயளுக்கும் பிசாசுகளுக்குமிடையிலைதான் சண்டை சனங்களுக்கையல்ல.

தூரத்திலை குண்டு வெடிக்கும் சத்தங்களும் இடிமுழக்க மாய் செல் சத்தங்களும்.

எங்கடை ஊருக்கு மேலாலை அடிக்கடி பிளேன்கள் இரைஞ்சுகொண்டு பறந்துகொண்டிருந்தன.

எங்களுக்கு ஒரே பயம்.

எங்கடை ஊரிலை ஒருநாள் சுந்தரமும்பாலாவும் கா ணாமல் போட்டாங்கள்’

அவைகள் இரண்டு பேரும் திரும்ப வரேல்லை. கொஞ்ச நாளையாலை விசயன், மலர், சுகுணா மூண்டு பேரும் ஓடிட்டினை.

பேய்களுக்கும் பிசாசுகளுக்கும் சண்டை நடந்துகொண்டு தானிருந்தது.

சண்டையிலை கனபேர் செத்திட்டினை எண்டு சொன் னாங்கள். அதிலை சுந்தரமும் சுகுணாவும் செத்திட்டினை.

‘அவை இரண்டு பேற்றை பிரேதங்களும் எங்கடை ஊருக் குக் கொண்டு வந்துதினை.

அவையின்ரை தாய் தகப்பன்களும் குடும்பங்களும் குழறிக் கத றி அழுததைப் பார்க்கேலாமலிருந்தது.

எங்கடை ஊரே சோகத்தில்.

பேயளையும் பிசாசுகளையும் எங்கடை ஊராக்கள் திட்டி சபிச்சினை.

கொஞ்ச நாளையாலை காட்டுக்கு விறகு வெட்டப்போன பியசீலி அக்கா, நந்தா அக்கா இரண்டு பேரையும் காணேல்லை.

பொழுதுபடுகிற நேரம்தான் அவை இரண்டு பேரும் திரும்பி வந்தினை. அவை இரண்டு பேரும் தலைவிரிகோல மாய் பித்துப்பிடிச்சவர்களாய் குழறி அழுது கொண்டிருந்தினை.

அவையின்ரை சீலை சட்டையள் தாறுமாறாய் கிழிச்சுக்கிடந்தது.

இது நிச்சயமாய் பிசாசுகளின்ரை வேலைதான். ஊராக்கள் உறுதியாய் சொல்லிச்சினை.

எங்களுக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.

நாலஞ்சு நாளைக்குப் பிறகு சுமணாவதி அக்காவும் பிரே மாவதி அக்காவும் குளத்துக்கு குளிக்கப் போச்சினை. இரண்டு பேரும் அக்கா தங்கைமார். அவை திரும்பி வரேல்லை. அவையை நாங்கள் தேடாத இடமில்லை.ை

‘அவை இரண்டு பேற்றை உடல்களும் சீலை துணியில் லாமல் குளக்கட்டுக்குப் பக்கத்திலை கிடந்தது.

‘ஊரே சோகத்தில் தவிச்சது. ‘

‘பேய் பிசாசுகளின்ரை அட்டகாசம் தாங்கேலாமல் கிடத்துது.’

அண்ணை நீங்கள் பேய் பிசாசுகளைப் பாத்திருக்கிறியளா?

திடீரென அவன் கேட்கின்றான்

‘இல்லை, ஏன் கேக்கிறாய்.’

‘நாங்கள் பாத்திருக்கிறாம் ‘

‘எப்ப? எப்பிடி? ‘

‘ஒரு நாள். நடுச்சாமம் நாய்கள் குலைச்சுதுகள். வர வர கடுமையாய் குலைக்கதுகள்.

‘சிலர் வெளியாலை எட்டிப்பாத்தினை.

‘பேய்கள் நடமாடுதுகள்’

‘பாத்தவை சொல்லிச்சினை’

‘இரண்டு மூண்டு நாளைக்குப் பிறகு நாய்கள் கடுமை யாய் குலைச்சுதுகள்.

‘நாங்களும் எட்டிப்பாத்தம்’

‘உண்மைதான். நாங்கள்எங்கடை கண்ணாலை பாத்தம் பேய்கள்தான்’.

‘இது நல்லதுக்கல்ல’.

சிலர் சொல்லிச்சினை, பகல். மத்தியான வேளை.

‘நாய்கள் கடுமையாகக் குலைக்குதுகள். ‘

‘வெளியாலை பாத்தம்’

பிசாசுகள் நடமாட்டம்.

இதுவும் நல்லதுக்கல்ல.

எங்களுக்கு தெரிஞ்சுது.

‘பேய்கள் எங்கடை ஊரிலை இரவு வேளைகளில் வந்து போகுதுகள் எண்டதை அறிஞ்சுதான் பிசாசுகள் எங்கடை ஊருக்கை நடமாடத்துவங்கிச்சுதுகள்’.

‘சண்டை தூரத்திலை நடந்து கொண்டுதானிருந்தது.

‘எங்களுக்கு நிம்மதியில்லை’

‘ஊரில் பதட்டம்’

‘சண்டை மோசமடைஞ்சது.’

‘எங்கடை ஊரிலை எங்களாலை இருக்கேலாமல் போச்சு.’ எங்கடை ஊரைவிட்டு நாங்கள் வெளியேறினம். கனநாளாய் நாங்கள் அலஞ்சுதிரிஞ்சு அல்லல்பட்டம். கடசியாய் ஒரு ஊருக்குப் போனம். அங்கை ஒரு பெரிய முகாம் இருந்தது. அங்கை கொஞ்சநாள் இருந்தம்.

இந்த இடத்தையும் பேய்களும் பிசாசுகளும் விட்டுவைக்கேல்லை.

பிசாசுகள் வந்து திரிஞ்சுதுகள்.

காடேறிப் பிசாசுகள், ரத்தக்காடேறிகள், பில்லிப் பிசாசு கள், எரிமாடன்கள் இன்னும் எத்தினையோ வகைப் பிசாசுகள் வந்துச்சுதுகள்.

கடல் கடந்தும் பிசாசுகள் வந்துதுகள் எண்டு கேள்வி. ‘மேலையிருந்து சுப்பசொனிக் ஜெற், புக்காறா விமானங் கள் குண்டுமாரி பொழிஞ்சுதுகள்.

மல்ற்றிபறல் பீரங்கிகள் குண்டுகளைக் கக்கிக் கொண்டிருந்தன.

‘கீழையிருந்து துப்பாக்கிச் சூடுகள். ‘

‘பேய்களாலை நிண்டு பிடிக்க முடியேல்லை. அப்பிடியி ருந்தும் சண்டை புடிச்சுக்கொண்டுதானிருந்ததுகள்.’

இடையிலை நாங்கள் அகப்பட்டு அவஸ்தைப்பட்டம்.

‘ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கற்பினித்தாய்மார், வயோதிபர்கள் எல்லாம் ஆயிரக்கணக்கிலை படுகாயம். கன பேர் செத்துக் கொண்டிருந்தினனை.

‘எல்லா இடமும் மரண ஓலங்கள்’

நாங்கள் விழுந்து படுத்துக் கிடந்தம்.

‘என்ரை கண்ணுக்குமுன்னாலையே என்ரை சிநேகிதன் மார், என்ரை அப்பா, அம்மா, அக்காமார் மூண்டுபேர், இரண்டு அண்ணன்மார் எல்லாரும் சுட்டுக் கொல்லப்பட்டினை.

‘என்ரை சின்னத் தம்பிக்கு படுகாயம்’

‘நானும் தம்பியும் தப்பிட்டம்’

‘சண்டை ஓய்ஞ்சுது’

‘காயமடைஞ்சவர்களை வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண் டுவந்தினை. சிலபேர்வழியிலையே செத்துப் போச்சினை.

‘கடுமையாய் காயப்பட்ட சிறுவர்களை கொழும்புக் கொண்டுவந்தினை.

றெட்குறொஸ்தான் படுகாயமடைந்த சிறுவர்களை ஞ்சை கொண்டு வந்துது.

படுகாயமடைஞ்ச என்ரை தம்பியையும் இஞ்சை கொண்டு வந்தினை. அவனுக்குத் துணையாய் நானும் வந்தன். ‘ இஞ்சை நேர்ஸ் அக்காமார் காயப்பட்ட எல்லாரையும் நல் லாய் பாக்கினை. அவை எல்லாரும் நல்லவை. அன்பாயிருக் கினை. இரண்டொரு சிடுமுஞ்சியளும் இருக்கினைதான்.

‘டாக்குத்தர்மாரும் அன்பாய் ஆதரவாய் எல்லாரையும் பாக்கினை’.

‘சரி, இப்ப உனக்கு என்னவேணும் மோனை?’

‘எனக்கொண்டும்வேண்டாம். அண்ணை’

‘இப்ப ஏன் நீ ஒருத்தரோடையும் சரியாய் பேசிறேல்லை? நீ ஏன் எந்த நேரமும் கவலையோடை இடிஞ்சுபோய் இருக்கிறாய்?’

‘அண்ணை இந்தப் பேய்களையும் பிசாசுகளையும் அடி யோடை ஒழிச்சுக் கட்ட வேணும். அப்பதான் எங்களுக்கு நிம்மதி’.

அவனுடைய வார்த்தைகளில் கோபாவேச வெறி. கண்களில் தீக் கனல்!

– காலவெள்ளம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: செப்டம்பர் 2010, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *