அது ஒரு மழைக்காலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 2, 2026
பார்வையிட்டோர்: 2,303 
 
 

அது ஓர் மழைக்காலம்.. நான் அந்த மழையை ரசித்து கொண்டு இருந்தேன்.. விழும் ஒவ்வொரு துளியும் ஒரு வித புது ராகமாக என் செவிகளை வந்தடைகிறது.. அப்படியே எனது வீட்டின் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன்.

சில குரங்குகள் எனக்கு கொஞ்சம் தொலைவில் அதே திண்ணையில் அமர்ந்து மழையை என்னை போல வேடிக்கை பார்த்தது.. அதற்கு அப்போதும் தனக்கு ஓர் தங்குவதற்கு வீடு இல்லை என்று யோசிக்கவே இல்லை.. எப்போதும் குரங்குகள் விளையாட்டு வேடிக்கை தான்.. தன்னை மறந்து அதன் பக்கம் தனது எண்ணத்தை செலுத்தி விடுவதில் அதற்கு நிகர் அதுதான்..

ஒருகாலத்தில் குரங்கை பார்த்தாலே எனக்கு அவ்வளவு கோபம் வரும்.. ஏனெனில் அந்தளவுக்கு அதனால் நான் வசிக்கும் இடத்தில் துன்பத்தை அனுபவித்து இருக்கிறேன்.. ஆனால் தற்போது அதன் மேல் ஏனோ எனக்கு ஓர் இரக்கம் ஏற்பட்டு விட்டது..

அது அதன் பசியை தீர்த்து கொள்ள எங்கே போகும் பாவம் என்று தற்போது உணர்ந்து இருக்கிறேன்..நமது போக்குவரத்து வசதிக்காக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக சக ஜீவராசிகளின் இருப்பிடத்தை பிடுங்கி விட்டு அதனையே குறை கூறும் விந்தை மனிதர்களாகிய நம்மிடையே தான் உள்ளது.. இல்லையா..

அந்த மழை மிகவும் சீராக பெய்து கொண்டு இருந்தது..குரங்கோ மழையையே ஏக்கமாக பார்த்து கொண்டு இருந்தது.. அதற்கு பசி வந்து இருக்க வேண்டும்.. கொஞ்ச நேரம் மழையை பார்த்து விட்டு சலிப்போடு என்னை பார்த்தது.. அதன் கண்களில் ஏதேனும் நீ பசிக்காக வைத்து இருக்கிறாயா என்று கேட்பது போல இருந்தது.. அதனோடு இருந்த குட்டி குரங்குகள் மழையில் ஆட்டம் போட இது வயதான படியால் ஓரிடத்தில் அமர்ந்து அந்த குட்டி குரங்குகளின் விளையாட்டை கொஞ்சம் வேடிக்கை பார்த்தது..

நான் அதை புரிந்து கொண்டு வீட்டில் உள்ள பிஸ்கட் மற்றும் சில பழங்கள் கொண்டு வந்து அதற்கு கொடுத்தேன்..அது மிகவும் அழகாக வாங்கிக் கொண்டு சாப்பிட அங்கே விளையாண்டு கொண்டு இருந்த குட்டி குரங்குகள் வேகமாக அந்த வயதான குரங்கின் பக்கத்தில் வர பார்த்தது.. ஆனால் இது ஓர் சீறு சீறியவுடன் பயந்து ஓடி விட்டது..

இங்கே நம்மில் பெரும்பாலானோர் கோடிக் கணக்கில் சொத்து சேர்த்து சமுதாயத்தில் நமக்கான அகங்காரத்தை காட்ட முயன்று கொண்டு இருக்க.. இங்கே சக ஜீவராசிகள் அந்த இறைவன் கொடுத்த உயிரை பிழைக்க வைக்க போராடிக் கொண்டு உள்ளது.. எவ்வளவு பெரிய முரண்..

இதற்கும் மேல் போய் அந்த சொத்தை பாதுகாக்க எவரை வேண்டும் என்றாலும் கொலை கூட செய்து விடுகிறோம்..ஒரு சிறு மனசாட்சி இல்லாமல்.. நம்மில் பலர்.. இறைவன் கொடுத்த உயிரை பறிக்க நமக்கு யார் உரிமை தந்தது என்று அறியாமல்..

இங்கே எல்லாமே அகங்காரம் தான்.. மனிதர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை.ஆனால் பயணிக்கிறார்கள் பயணித்து கொண்டே இருக்கிறார்கள்.. ஓர் வறண்ட பாலைவனத்தை நோக்கி பயணிக்கிறோம் என்று தெரியாமலேயே..

எந்த சொத்தும் சேர்த்து சேர்த்து வைத்து அகங்காரத்தை காட்டி கொள்வதை என்று நாம் நிறுத்த போகிறோம்??வயிற்று பிழைப்புக்காக இங்கே கோடானுகோடி மக்கள் அலைகிறார்கள்.. மறுபக்கம் இந்த பூமியை ஏன் சமுத்திரத்தை கூட விலை பேச துடிக்கும் அகங்கார கூட்டம்..

இப்படியே யோசித்து கொண்டே இருந்தபோது அந்த குரங்கு நான் கொடுத்த உணவை சாப்பிட்டு முடித்து இருந்தது.. மழையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சிறு சிறு தூறலாக பெய்கிறது..

குரங்கு ஒரே தாவலாக ஓடி விட்டது.. பார்வையால் எனக்கு ஓர் நன்றியை செலுத்தி விட்டு..

நானும் எனது வேலையை பார்க்க வீட்டின் உள்ளே கிளம்பி விட்டேன்..

இங்கே எதுவும் மாற போவது இல்லை.. என்று தெரிந்தும் துக்கப் பட்டு மாற்ற துடிக்கும் மனதை கொஞ்சம் சும்மா இரு என்று அதட்டி விட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *