கிணறு
கதையாசிரியர்: து.வைத்திலிங்கம்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 451
(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மினிபஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. வழக்கமான உற்சாகமோ கலகலப்போ காணப்படவில்லை. வழமையாக கேட்கும் சினிமாச் சத்தங்களும் ஒலிக்கவில்லை.
“சந்தி வருகிறது சிலோவா எடப்பா !”
நடத்துநரின் பயம் கலந்த குரல் மினிபஸ்ஸின் வேகம் குறைகிறது.
சம்பு குன்றம் சந்தியில் சீருடை அணிந்து நிற்பவர்கள் கண்ணுக்குத் தென்படுகிறார்கள்.
பிரயாணிகள் சகலரது கண்களிலும் பீதி கோலம் போட்டது.
வண்டி நின்றதும் பிரயாணிகள் ஒவ்வொருவராக இறங்கி நடக்கின்றனர். பூஞ்சோலையில் இருந்து வந்த மினிவானும் நிற்கிறது. அதிலிருந்தும் பிரயாணிகள் இறங்கினர். மேலே மண்டையைப் பிளக்கும் வெயில். கடல் ஏரியின் மேற்பரப்பு வெயிலின் ஒளிபட்டு பார்க்க முடியாமல் தகித்தது.
“கியூவிலை வா …….!”
அடித்தொண்டையில் குரல் ஒன்று கொரூரமாக ஒலித்தது.
தலைவிதியை நொந்து கொண்டே எல்லோரும் தகிக்கும் வெயிலில் கியூவரிசையில் நின்று நகர்ந்தனர். பரிசோதனை மிகக் கடுமையாக இருந்தது.
ரமணன் கிளிவெட்டியில் இருந்து வருகிறான். வண்டியில் ஏறும்போதே கூட்டம் விழி பிதுங்கியது. இந்த நேரம் மட்டும் நின்றே வந்தபடியால் கால்கள் வலித்தன. நெற்றியால் அருவியெனப் பாயும் வியர்வையைத் துடைத்தபடியே நகர்ந்தான்.
“சேர் நீங்களும் இதிலை அகப்பட்டு விட்டியல் போலை கிடக்கு !”
குரல் கேட்ட ரமணன் நிமிர்ந்து பார்த்தான்.
அவனுக்குப் பின்னால் பூஞ்சோலையைச் சேர்ந்த பூபதி நின்றான்.
ரமணன் பார்த்ததும் பூபதி நிமிர்ந்தான்.
“மோர்னிங் சேர் ! கிளிவெட்டியிலை இருந்து வருகிறீர் போலை….”
ரமணன் பதில் கூறாமல் தலையை மட்டும் ஆட்டினான்.
“நான் கச்சேரிக்கு ஒரு அலுவலாகப் போகவேணும். இப்போதைக்கு இது முடியாது போலை கிடக்கு நேரமும் சென்று போச்சு”
பூபதி சொல்லிக்கொண்டே கைக்கடிகாரத்தை நோக்கினான். ரமணன் ஒன்றும் கூறவில்லை.
“எப்படி சேர் கிளிவெட்டி? எது இடம்….?” மறுபடியும் பூபதி.
“பரவாயில்லை ” ரமணன் ஒரு வார்த்தையில் பதிலிறுத்தான்.
“நீங்கள் அவசரப்பட்டு மாற்றம் எடுத்துப்போட்டீங்கள். கொஞ்சநாளைக்கு பூஞ்சோலையில் இருந்திருக்கலாம்!” பூபதி சிரித்தபடியே கூறினான். ரமணன் ஒன்றும் பேசாமல் மெதுவாக நகர்ந்தான்.
ரமணன் பூஞ்சோலைக்கு உதவி அரசாங்க அதிபராய் இடம் மாறி வந்தபொழுது முதலில் இடத்தைப்பற்றி அவன் நண்பர்கள் பலவிதமாய் கூறினார்கள். ஆனால் இவன் அவைகளைப்பற்றிப் பொருட்படுத்தவே இல்லை.
எங்கே என்றாலும் வேலைபார்க்கத்தானே வேண்டும் என்ற மனப்பான்மை அவனுடையது. அது பல குட்டிக்கிராமங்களை அடக்கிய பகுதி. தினமும் ஏதாவது ஒரு பிரச்சினையோடு மக்கள் வருவார்கள். கிராம சேவையாளர்களின் உதவியோடு முடியுமானவரை அவற்றை அவன் தீர்த்துவைப்பான். தன்னால் முடியாதவற்றைச் சட்ட நடவடிக்கை எடுக்கும்படி அனுப்பிவிடுவான்.
பூஞ்சோலையில் பூபதி தான் ஒரு முக்கியமான ஆள் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும் என்ற மாதிரி நடந்து கொள்வதை ரமணன் கேள்விப்பட்டிருந்தான்.
பூபதி இடைக்கிடை அலுவலகத்திற்கு வருவான்.
“சேர் இவருக்கு உணவு முத்திரை கொடுக்க வேணும்….
சேர் இவருக்கு தர்மக் காசு கொடுக்க ஏற்பாடு செய்ய வேணும்………” இப்படிக் கோரிக்கைகளோடு வருவான்.
“அவற்றை நான் கவனிக்கிறேன். நீங்கள் போகலாம்” ரமணன் ஒரு நாள் இப்படிப் பதில் கூறினான்.
“எங்கடை எம். பி. இதிலை அக்கறையாய் இருக்கிறார். நீங்கள் இதைக்கட்டாயம் செய்யவேணும் !” பூபதியின் குரல் கொஞ்சம் ஓங்கியது.
அந்தப் பகுதி எம். பி யினது செல்லப்பிள்ளை இந்தப் பூபதி என்றும் ரமணன் கேள்விப் பட்டிருக்கிறான்.
“எம்.பி க்கு விருப்பமென்றால் அவர் என்னிடம் சொல்லட்டும், நீங்கள் போலாம் !” நிர்தாட்சணியமாய் ரமணனின் குரல் அமைந்திருந்தது.
இப்படிப் பல சந்தர்ப்பங்களில், பல சம்பவங்கள் !
ஏதோ ஒரு கிராமத்து விழாவில் கலந்துகொண்ட எம். பி. ரமணனிடம், பூபதி தனது நம்பிக்கைக்குரிய ஆள் என்றும், அவன் ஏதாவது கோரிக்கை கொண்டுவந்தால் அது அநேகமாகத் தனதாகவே இருக்குமென்றும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றும் சூசமாய் வற்புறுத்தினார்.
“உங்களுக்கு அக்கறையுள்ள விஷயமானால் ஒரு கடிதமூலம் தெரிவித்திருக்கலாமே…..” ரமணன் கூறினான்.
எம்.பி க்கு ரமணனின் பதில் அவ்வளவாகப் பிடிக்க வில்லை என அவர் முகம் காட்டியது.
ஒரு நாள் அரசகேசரி என்பவன் முறைப்பாட்டுடன் வந்தான். அவன் பூஞ்சோலையில் ஒரு சலவைத் தொழிற்சாலை நடாத்தி வருகிறான். அத்துடன் ஒரு சிறு வான் வைத்திருந்து குறிஞ்சிக்குடா, முள்ளிக் குடா ஆகிய இடங்களிலிருந்து மீன், இறால் மொத்தமாக வாங்கிவந்து சில்லறை வியாபாரிக்கு விற்பான்.
கொஞ்சம் வசதியான வாழ்க்கை! எல்லோருடனும் மிக கெளரவமாகப் பழகுவான். துறையடியில் வள்ளத்தில் இறங்கும் பிரயாணிகள் குறிஞ்சிக் குடாவுக்குச் செல்லப் பஸ் இல்லாமல் தவிக்கையில் தனது வானில் கொள்ளுமளவிற்கு ஏற்றிக் கொண்டு போய் இறக்கிவிடுவான். பணம் பெற மாட்டான். எப்படியோ இஞ்சை வாறவன் தானே! காசு வேண்டாம் போங்கோ…!” என்று சிரித்தபடி கூறுவான்.
ஒரு முறை கிராம வீதியொன்று அமைக்கச் சிரமதானம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து உழவுயந்திர உரிமையாளர்களிடம் உதவி கோரியபோது அரசகேசரிதான் தனது வண்டியை முதலில் அனுப்பிவைத்தான். சேர்ந்த பணத்தில் டீசல் வாங்குவதற்கு என்று ரமணன் சிறிது பணம் கொடுத்தான்.
ஐயா ! நீங்கள் செய்வது பொது வேலை இந்தக் கிராம வளர்ச்சிக்கு எமது பங்காகா இருக்கட்டும். எனக்குப் பணம் வேண்டாம் !” அவன் மறுத்து விட்டான்.
ரமணன் இவையெல்லாவற்றையும் கவனித்திருக்கிறான். விஷயம் இதுதான் !
அரசகேசரியின் வீடு அமைந்திருக்கும் ஆத்திமோட்டைப் பகுதியில் நல்ல தண்ணீர் கிணறு ஒன்றே ஒன்றுதான். சுற்று வட்டாரம் மூன்று மைல்களுக்குள் அமைந்திருக்கும் குறிச்சிகளில் வதியும் மக்கள் இக்கிணற்றுக்குத்தான் தண்ணீர் அள்ள வருவார்கள்.
“எங்களைக் கிணத்திலை தண்ணி அள்ள விடமாட்டினமாம் தாங்கள் நிற்கும் போது வந்தால் அள்ளி ஊத்தினமாம் ! நீங்க வந்து பாத்து இதுக்கு ஒரு முடிவு காண வேணும் ஐயா…….!” அழாக்குறையாக அரசகேசரி முறையிட்டான். அவனை வெளியே அமரும்படி கூறிவிட்டு ஆத்துமோட்டை பகுதியில் கிராமசேவையாளரை ரமணன் அழைத்தான். அன்று புதன்கிழமை ஆனபடியால் சகலரும் வந்திருந்தனர். கிராமசேவையாளர் பழைய ஆள்.
“என்ன ஜீ. எஸ். இதை உம்மாலை தீர்க்கமுடியாததா?”
ரமணன் கேட்டான்.
“ஐயா, இது மிகவும் சிக்கலான விஷயம் ! தண்ணி அள்ளி ஊத்துறதுதான் வழமை…..”
“நீர் போய்ப் பார்க்கவில்லையா?”
“நான் ஒவ்வொரு நாளும் பார்க்கிற விஷயம்தானே ! ஐயா, நான் இன்னும் நாலு மாதத்திலை பென்சனிலை போகப் போறன்…… ஊருக்குள் ஏன் பொல்லாப்பு?” அவரின் நிலை பரிதாபமாய் இருந்தது. பிரச்சினைக்கு முகம் கொடுக்க அவர் விரும்பவில்லை.
ரமணனின் புருவங்கள் உயர்ந்தன.
“இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமில்லையா? கிராம சேவகர் வேலை என்றால் கூப்பன் கொடுக்க மட்டும்தான் என்று மற்றவர்கள் நினைத்தகாலம் இல்லை இப்ப ! ஊர்மக்களின் பிரச்சினைகளை நாடி பிடித்து பார்க்கத் தெரியாதவர்கள் இந்த வேலைக்கு வரக் கூடாது….!” ரமணன் கோபமாய்க் கூறுவதை அந்த வயதான கிராம சேவையாளர் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தார்.
பின்னர் ரமணன் அரசகேசரியை அழைத்துக்கொண்டு ஆத்தி மோட்டைக்குச் சென்றான். கிராம சேவையாளரும் உடன் சென்றார். ஏ.ஜீ.ஏ. கிணற்றுப் பிரச்சினை விசாரிக்க வருகிறார் என்று கேள்விப்பட்டு இருபது முப்பது சனங்கள் கூடி விட்டனர். பரந்த வயல் வெளிக்கு அருகாமையில் வீதிக்கு ஒதுக்குப்புறமாக அந்தக் கிணறு அமைந்திருந்தது. சுற்றிவர எல்லாமே குடிசைதான்.
ஒரு வயதமானவர் ஓடி வந்தார். நெற்றி நிறைய விபூதி பூச்சும், காதில் சொருகிய செவ்வரத்தம் பூவுமாய்க் காட்சி அளித்த அவர் “ஐயா கிணறுபாக்க வந்தது போலை !” என்று வாயெல்லாம் பல்லாகக் கேட்டார்.
நான் கிணறு பார்க்க வரவில்லை ! இஞ்சை என்ன பிரச்சினை…? யார் தண்ணீர் அள்ளக் கூடாது என்று சொன்னது….?” ரமணன் கிழவரை நோக்கிக் கேட்டான்.
“ஐயா விஷயம் உங்களுக்குத் தெரிஞ்சுதானே வந்திருக்கிறியள் ! இஞ்சை கண்ட கிண்ட ஆட்கள் தண்ணி அள்ள முடியாது. நான் தான் இவையை அள்ளக் கூடாது. எண்டு சொன்னனான். இவ்வளவு காலமும் இவையளுக்கு நாங்கள் தான் அள்ளி ஊத்திறது வழக்கம். நேற்றைக்கு வழக்கத்துக்கு மாறாக இவை இதிலை துணிஞ்சு கை வைச்சு அள்ளிப் போட்டினம்….”
கிழவரின் பார்வை அரசகேசரியின் பக்கம் திரும்பியது.
“ஏன் அவை அள்ளினால் என்ன அவையும் மனுஷர் தானே”
“ஐயா, நீங்கள் இப்ப வந்தனீங்கள், உங்களுக்கு இது விளங்காது. இது கோயில் கிணறு இவையை அள்ள விடமாட்டம் !”
கிழவரின் குரல் சற்று ஓங்கியது.
“கோயில் கிணறோ? எங்கே இருக்கு கோயில்?””
ரமணன் ஆச்சிரியத்துடன் சுற்றும் முற்றும் நோக்கினான்.
“அது தான் கோயில்”
கிழவர் கைகாட்டிய பக்கம் பார்த்தான் ரமணன் . நுாறு யார் துாரத்தில் ஒரு சிறிய ஓலைக்கொட்டில் பூஞ்சோலைப் பகுதியில் நுாற்றுக்கு நுாறு கோயில் என்றால் இப்படித்தான் அமைந்திருந்தன.
“பரவாயில்லைகோயில் கிணறு என்றாலும் இது ஒன்றுதான் இருக்கு. நல்ல தண்ணீர் கிணறு? இத ஒரு பொது இடம் இந்தக் காலத்தில் பழைய கொள்கைகளைத் தலையில் போட்டுக் கொண்டு நின்று வாதாட முடியாது. சட்டத்தில் இப்படித் தண்ணீர் அள்ளாமல் தடுக்க இடம் கிடையாது. நீங்கள் இவர்களை இனித் தடுக்க வேண்டாம். அவர்களும் உங்கள் மாதிரி இனி அள்ளிப் பாவிக்கட்டும்.”
“ஐயா நீங்கள் வீணாப் பழியைத் டே வேண்டாம். அவை வரட்டும். நாங்கள் அள்ளி ஊத்துவம். ஆனால் அவையை அள்ள விடமாட்டம்.” கிழவரின் குரலில் அகங்காரம் கொடி கட்டியது. இதற்குள் அரசகேசரியின் ஆட்கள் குடம் கயிறு சகிதமாய் வந்து நின்றனர்.
ரமணன் கிழவனிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால் அவரோ மசிவதாக இல்லை.
“அரசகேசரி, இஞ்சைவா” ரமணன் அழைத்தான்.
நான் நிற்கிறன் நீ தண்ணி அள்ளு ! நடக்கிறதைப் பார்ப்பம் !” ரமணன் உத்தரவிட்டான்.
அரசகேசரி தனது ஆட்கள் ஒருவரிடமிருந்து கயிற்றை வாங்கிக் குடத்தைக் கட்டித் தண்ணீர் அள்ளினான்.
“நான் குடிச்சுப் பார்ப்பம், ஊத்து…..” ரமணன் கேட்க, வெகு உற்சாகத்துடன் அரச கேசரி குடத்தைச் சரித்து நீர் வார்க்க, ரமணன் கைகளை ஏந்திக் குடித்தான். உண்மையில் தண்ணீர் அந்த வெய்யில் நேரத்தில் தேவாமிர்தமாய் இருந்தது.
“இன்னும் இரண்டு தரம் அள்ளு !”
ரமணன் கூற அரசகேசரி அள்ளினான். அதைத் தொடர்ந்து தண்ணீர் அள்ள வந்தவர்கள் அள்ளினார்கள்.
கிழவரும் அவரை சேர்ந்தவர்களும் பேசாமல் பார்த்துக் கொண்டு நின்றனர்.
“சட்டப்படி தண்ணீர் அள்ள ஒருவரையும் யாரும் மறுக்க முடியாது. உனக்குத் தெரிய வேண்டும். இப்ப இங்கு பொலிஸ் நிலையம் இல்லை என்று இன்றோடு இந்தப்பிரச்சினை முடிந்துவிட்டது. இனி யாராவது தண்ணீர் அள்ளக் கூடாது என்று தடுத்தால் நானே வந்து பொலிசுக்குக் கொண்டு போவேன்”
ரமணன் அவர்களை எச்சரித்துவிட்டு வந்த ஜீப்பில் ஏறிக் கொண்டான். தொடர்ந்து இரு வாரங்களுக்கத் தினமும் அந்த நல்ல தண்ணீர் இருக்கும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டு அறிக்கை அனுப்பும் படி கிராம சேவையாளரைப் பணித்தான். தான் எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி விரிவான அறிக்கை ஒன்றை எழுதி வைத்தான்.
அதன் பின் ஆத்திமோட்டை நல்ல தண்ணீர்க் கிணறு ஒரு விதமாக பிரச்சினை எழவில்லை.
ஒரு வாரம் சென்றதும் பூபதி ஒரு நாள் அலுவலகத்துக்கு வந்தான்.
“சேர் நீங்கள் ஆத்திமோட்டைக் கிணற்றுப் பிரச்சினையில் யோசிக்காமல் ஒரு முடிவு எடுத்துப் போட்டியள். ஊருக்குள் கொழுவலை உண்டாக்கிப் போட்டியள்…..”
“பூபதி உமக்குச் சம்பந்தம் இல்லாத வேலையில் தலையைப் போட வேண்டாம் !
எனது கடமை எனக்குத் தெரியும்…… நீர் போகலாம்!” ரமணன் கூறி விட்டு தன் அலுவலில் ஈடுபட்டான். இச்சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரும் ரமணன் பூபதியுடன் மோத வேண்டிய கட்டம் ஒன்று ஏற்பட்டது. உள்ளுராட்சித் திணைக்களத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பூஞ்சோலைப் பகுதியில், கிணறு அமைப்பதற்கான உப ஒப்பந்தம் ஒன்று கிராம அபிவிருத்திச் சங்கத்தினுடாக, பூபதி எடுத்திருந்தான். கிணறு கட்டுவதற்கு தோதான இடம் இல்லாமல் இருந்தது. தனது காணியின் ஒரு பகுதியைக் கிணறு அமைப்பதற்குக் கிராம சபை நிர்வாகத்தினருக்கு இலவசமாக தந்து உதவுவதாக சொல்லியிருந்தான் பூபதி. கிணறு வேலை முடிந்து ஒப்பந்தப்படி பணமும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் அவனுக்குக் கிடைத்து விட்டது. ஆனால் காணியை இவை இலவசமாக எழுதித் தருவதாகக் கூறியும் சம்மதமோ எழுத்து மூலம் கையளிக்கப்படவில்லை. உள்ளுக்குள் யார்யரையோ கைக்குள் போட்டு தில்லு முல்லு வேலைகளுடன் விஷயத்தை சாதுரியமாய் முடித்து விட்டான்.
விஷயம் அவ்வளவோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
ஆனால்….
ஊர்ப்பொதுக் கிணறுதானே என்று அரசாங்க ஆஸ்பத்திரியில் கூலி வேலை செய்யும் மாயாண்டி அக்கிணற்றில் தண்ணீர் அள்ளச் சென்ற போதுதான் பிரச்சினை உருவாகியது. தண்ணீர் அள்ளவிட முடியாது என பூபதி தடுத்து விட்டான்.
“வீதி கிணறு தானே ஐயா… நான் அள்ளினால் என்ன?” மாயாண்டி வாதாடினான்.
“என்னுடைய காணிக்குள் வரக் கூடாது!”
இப்படிக் கூறி பூபதி அவனை கலைத்து விட்டான்.
வேறு வழி எங்கே என்பது மாயாண்டிக்கு மட்டுமல்ல வேறு ஒருவருக்குமே புரியவில்லை. மாயாண்டி நேரே சென்று ரமணனிடம் பெட்டிசம் ஒன்றை எழுதி கொடுத்து முறையிட்டான். ரமணன் விசாரித்தான்.
விசாரணையில் பூபதியின் குட்டுக்கள் வெளிவந்தன.
பூரண விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ரமணன் மேலிடத்துக்கு அறிவித்து விட்டான். பூபதிக்கு இதில் ரமணன் மீது தாங்க முடியாத கோபம். பகைமை எல்லாமே ஏற்பட்டன !” தம்பிக்கு பாடம் படிப்பிக்கிறன். எம்.பி. இந்தியாவாலை வரட்டும் !”
பூபதி பூஞ்சோலையில் பலரிடம் சொல்லிக் கொண்ட விஷயம் ரமணனுக்கு எட்டியது. இரண்டு வாரங்கள் அமைதியாய் கழிந்தன.
ஒரு நாள் ரமணனை பூஞ்சோலையில் இருந்து கிளிவெட்டிக்கு மாற்றியிருப்பதாக அவசரக்கடிதமொன்று அமைச்சு அலுவலகத்திலிருந்து அவனது மேலதிகாரி மூலம் வந்தது.
இந்த அவசர உத்தரவில் பின்னணியில் எம்.பி மறைமுகமாகச் செயற்பட்டர் என்று அறிவதில் ரமணனுக்குச் சிரமம் ஏதும் இருக்கவில்லை. எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்காமல் அவன் கிளிவெட்டிக்குச் சென்று பொறுப்பை ஏற்றுக்கொண்டான். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இப்போது பூபதியை காண்கிறான்.
பரிசோதனை ஒரு மாதிரி முடிவடைந்தது.
“நீங்கள் அவசரப்பட்டு மாற்றம் எடுத்துப் போட்டியள். இன்னும் கொஞ்சக் காலம் எங்கடை ஊரிலை இருந்திருக்கலாம் சேர்…..”
மீண்டும் பூபதி பக்கத்தில் நடந்தபடியே கூறினார்.
ரமணன் ஒன்றுமே கூறாமல் பூபதியைப் பார்த்துச் சிரித்தபடியே நகர்ந்தான்.
மினிபஸ் வண்டிகள் மீண்டும் தனது பிரயாணத்தை ஆரம்பிக்கின்றன.
து.வைத்திலிங்கம்
ஈழநாடிதழில் நல்ல பல சிறுகதைகளைப் படைத்தவர்களில் து. வைத்திலிங்கம் ஒருவராவார். ‘அஸ்தமனம், காலந்தான் மாறாதோ?, முற்பகலும் பிற்பகலும், கிணறு முதலான பத்துச்சிறுகதைகளை ஈழநாடு இதழ்களில் படைத்துள்ளார். கிணறு ஓர் உன்னதமான சிறுகதை. அன்னாரது சிறுகதைகள் மண்ணின் கனவுகள் என்ற ஒரு தொகுதியாக வெளிவந்துள்ளன. பூம்பனிமலர்கள். ஒரு திட்டம் மூடப்படுகின்றது என்பன நாவல்கள்.
– 20.10.1985, ஈழநாடு.
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.