கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 2, 2026
பார்வையிட்டோர்: 523 
 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்

2-வது மதனாபிஷேகவல்லிப் பதுமை சொல்லிய வேதாளக் கதைகள்

வேதாளம் சொல்லிய புதிர் கதைகள்

6. கிளி மைனாக் கதை | 7. வீரவரன் கதை | 8. சத்வசீலக் காற்படிகன் கதை

விக்கிரமாதித்தன் அந்த நள்ளிரவிலே மறுபடியும் மயானத்தில் உள்ள வேதாளத்தைக் கட்டிப் பிடித்துத் தூக்கித் தோள்மீது சுமந்து கொண்டு வரும்போது, வேதாளம் பின்வரும் கதையைச் சொல்லியது:

சோபாவதி என்றொரு பட்டணம் இருந்தது. அங்கே ஒரு சமயம் சூத்ரகன் என்ற அரசன் ஆண்டுவந்தான். அவன் மகா பராக்கிரமசாலி. அவன் வீரத்தைக் கண்டு எதிரிகள் பயந்து அவனுக்கு அடங்கிவிட்டார்கள். நேர்மையுடன் அவன் அரசு புரிவதைக் கண்ட பூமிதேவியும் மற்ற அரசர்களையெல்லாம் மறந்துவிட்டாள்; அவனையே தன் நாயகனாகக் கொண்டாள்.

ஒருநாள் வீரவரன் என்பவன் வீரர்களையே வரிக்கும் அந்த அரசனிடம் சேவகம் செய்வதற்காக மாளவதேசம் வந்து சேர்ந்தான். அவன் மனைவி பெயர் தர்மவதி என்பதாகும். அவர்களுக்கு சத்வவரன் என்ற ஒரு மகனும், வீரவதி என்ற ஒரு மகளும் இருந்தார்கள்.

அவன் ஒரு கையில் கத்தியையும், மற்றொரு கையில் கேடயத்தையும் இடுப்பிலே உடைவாளையுமே கொண்டிருந்தான். அவன் ஒரு நாளைக்கு ஐநூறு தினாரங்கள் சம்பளம் வேண்டு மென்று அரசனைக் கேட்டான். அவன் மிகுந்த பராக்கிரமம் வாய்ந்தவன் என்பதைத் தோற்றத்தால் அறிந்த அரசனும் அதற்குச் சம்மதித்தான். ஆயினும் குடும்ப பாரம் அதிகம் இல்லாத அவனுக்கு அவ்வளவு பணம் எதற்கு என்பதை அறிய அரசனுக்கு ஆசை ஏற்பட்டது. அந்தப் பணத்தை அவன் நல்ல வழியில் செலவழிக்கிறான. கெட்ட வழியிலே செலவழிக்கிறானா என்பதைத் தெரிந்து கொள்ளவும் விரும்பினான். ஆகவே. அவன் எப்படி வாழ்க்கை நடத்துகிறான் என்பதை இரகசியமாகக் கவனித்து வர ஒற்றர்களை ஏவினான்.

வீரவரன் தினந்தோறும் காலையிலே அரசனை பேட்டி கண்ட பிறகு. உருவிய கத்தியுடன் உச்சிப்பொழுது வரையில், அரண்மனை வாசலில் காவல் புரிந்து வருவான்; அதற்குப் பின் அவன் வீடு அடைந்து, தன் மனைவியின் கையில் சாப்பாட்டுச் செலவுக்கு காசு நூறு பொன்னைக் கொடுப்பான். மற்றொரு நூறு பொன்னுக்கு அவன் துணிமணிகளையும், வெற்றிலை, வாசனைத் திரவியங்களையும் வாங்குவான். தெய்வ பூஜைக்காக நூறு பொன்னைச் செலவழிப்பான். மீதி இருநூறு பொன்னையும் ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்துவிடுவான். இவ்விதம் நாள்தோறும் அவன் தான் பெற்று வந்த ஐநூறு பொன்களையும் செலவு செய்துவிடுவான். அதற்குப் பிறகே அவன் ஹோமம் வளர்த்து நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு சாப்பிடுவான். மறுபடியும், அவன் வெளிக் கிளம்பி, அரண்மனை அடைந்து இரவு நேரத்தில் உருவிய கத்தியுடன் தனியாகக் காவல் புரிவான்.

வீரவரன் இவ்விதம் வாழ்க்கை நடத்தி வந்தான் என்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்த மன்னன் சந்தோஷப்பட்டு அவனுடைய நடமாட்டத்தை அதற்கு மேல் வேவு பார்க்க வேண்டாம் என்று தடுத்துவிட்டான். அவ்விதம் செய்வது வீரனுடைய கௌரவத்திற்கே இழுக்காகும் என்று மன்னன் நினைத்தான்.

காலம் சுழன்றது. கோடை போய் மழைக் காலம் வந்தது. வானமே பொத்துக்கொண்டது போல் அடை மழை பிடித்துக் கொண்டது; கூரிய கத்தி முனை போல உடலில் பட்ட இடத்தில் “சுரீர்” என்று தாக்கியது. எனினும் வீரவர்மன் அதை லக்ஷ்யம் செய்யவில்லை. வழக்கம் போலவே அரண்மனை மேன்மாடத்தி லிருந்து பகலில் கவனித்த அரசன், இரவு நேரத்திலும் அரண்மனை மேன் மாடத்திலிருந்து, ‘ஆசாரவாசலில் யார் காவல்?” என்று கூப்பிட்டுக் கேட்டான். வீ ரவரனும் “அடியேன் இருக்கிறேன் மகாராஜா!” என்று தெரிவித்தான்.

இதைக் கேட்ட மன்னன் “என் சேவகத்திலே கொஞ்சமும் வழுவாமல் வீரவரன் உறுதியோடு இருக்கிறான். இவ்வளவு எஜமான விசுவாசம் உள்ள அவனுக்கு மேற்பதவியளிக்க வேண்டுவது அவசியம்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சென்றான்.

மறுநாளும் சூரியன் தெரியவே இல்லை. மழை கொட்டிக் கொண்டே இருந்தது. அன்று இரவும் அரசன் அரண்மனை மேன்மாடத்திற்குச் சென்று ஆசாரவாசலில் “யார் காவல்?” என்று கேட்டான். வழக்கம் போலவே, வீரவரனும் தான் இருப்பதாகத் தெரிவித்தான். இதைக் கேட்ட மன்னன் அவனுடைய தைரியத்தை மெச்சி சந்தோஷமடைந்தான். அப்போது அவன் கவனத்தை வேறொன்று இழுத்தது.

பரிதாபமான குரலில் யாரோ பெண் அழும் சப்தம் கேட்டது. அந்தக் குரல் அரசனின் மனத்திலே இரக்கத்தை உண்டாக்கியது. “இந்நாட்டிலே கஷ்டப்படுகிறவர்கள், ஏழை முதலியோர் யாருமே இல்லாதிருக்க, இப்படி நள்ளிரவில் அழும் இந்தப் பெண் யார்?” என்று மன்னன் ஆச்சரியப்பட்டான். உடனே காவல் புரிந்து வந்த வீரவரனை அவன் கூப்பிட்டு, “தூரத்தில் யாரோ ஒரு பெண் அழும் குரல் கேட்கிறது. நீ போய் அவள் யார், எதற்காக அழுகிறாள்?” என்பதை அறிந்து வா” என்று கட்டளையிட்டான்.

“அப்படியே!” என்று கூறி வீரவரன் புறப்பட்டான். ஊழிக்காலந்தான் வந்துவிட்டதோவென இருள் கவ்வ, மேகங்கள் மறைந்து இருந்ததையும், இடியையும், மின்னலையும் கல்லை வீசுவதைப் போல மழைத் துளிகள் உடலைத் தாக்கியதையும் லட்சியம் செய்யாமல் வீரவரன் நடந்து சென்றான்.

இவ்விதம் அந்த நடுநிசியிலே வீரவரன் தனியாகப் புறப்பட்டதை அறிந்த அரசனுக்கு ஆச்சரியம், இரக்கம் இரண்டும் ஒருங்கே ஏற்பட்டன. ஆகவே, அவன் நடமாட்டத்தைக் கவனிப்பதற்காக அவனுக்குத் தெரியாமல் அரசனும் பின் தொடர்ந்து சென்றான். வீரவரனோ எதையும் பொருட்படுத்தாமல் சப்தம் வந்த திக்கிலே சென்று நகரத்துக்கு வெளியே போய் குளக்கரையை அடைந்தான். அங்கே நடுக்குளத்திலே ஒருத்தி. “ஐயா மகாவீ ரனே! தயாபரனே, தர்மவானே. உன்னைப் பிரிந்து நான் எப்படி வாழ்வேன்?” என்று அரற்றிக்கொண்டிருந்தாள். வீரவரன் அவளைப் பார்த்து, “யாரம்மா, நீங்கள்? எதற்காக இப்படி அழுகிறீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு அவள், “வீ ரவரா! நான் பூமிதேவி! சூத்ரக மன்னன் தான் என் புருஷன். ஆனால் இன்றையிலிருந்து மூன்றாவது நாள் அவன் இறந்து விடுவான். அதற்குப் பிறகு அவனைப் போன்ற நாயகன் மறுபடியும் எனக்கு எவ்விதம் கிடைக்கப் போகிறான்? அதை நினைத்துத்தான் துக்கம் தாளாமல் நான் வருத்தப்படுகிறேன்” என்று பதில் அளித்தாள்.

இதைக் கேட்ட வீரவரன் திடுக்கிட்டான். அவன் உடலில் நடுக்கம் ஏற்பட்டது.

“தாயே! இவ்வுலகத்தையே ரக்ஷித்து வரும் இம்மன்னனுடைய மரணத்தைத் தவிர்ப்பதற்கு வழி ஏதும் இல்லையா?” என்று வீரவரன் கேட்டான்.

உடனே பூமிதேவி, “இருக்கிறது. இந்தக் கேட்டைத் தவிர்க்கும் மார்க்கம் ஒன்று உண்டு. அதை உன்னாலே தான் செய்து முடிக்க முடியும்.”

“தாயே, அப்படியானால் அதைத் தெரிவியுங்கள். இந்த க்ஷணத்திலேயே அதை முடித்து வைக்கிறேன். அதற்கில்லாமல் இந்த உயிர் வேறு எதற்குத்தான் இருக்கிறது?” என்று வீரவரன் வேண்டினான்.

“உன்னைப் போன்ற தைரியசாலியும், எஜமான விசுவாசமும் உள்ளவனும் வேறு யார் கிடைப்பார்கள்? அரண்மனைக்குப் பக்கத்திலே வரப்பிரசாதையான சண்டிக்கு அரசன் ஒரு கோயில் எழுப்பியிருக்கிறான். அந்தச் சண்டிக்கு உன் மகனைப் பலி கொடுத்தாயானால் அரசன் இன்னும் நூறு ஆண்டு வாழ்வான். அதை நீ உடனே செய்தாயானால், அரசனுக்கு நேரிடவிருக்கும் கேடு நீங்கிவிடும். இல்லாவிட்டால் நிச்சயமாக இன்றையிலிருந்து மூன்றாம் நாள் அவன் இறந்து போவான்!”

பூமிதேவி இவ்வி தம் கூறியதைக் கேட்ட வீரவரன், “தாயே, இதை இப்பொழுதே செய்து முடிக்கிறேன்” என்றான். பூமிதேவியும் “உனக்கு வெற்றி கிட்டட்டும்” என்று கூறி மறைந்து போனாள்.

உடனே வீரவரனும் தன் வீட்டை நோக்கி கிளம்பினான். அவனுக்குத் தெரியாமல் அவனைத் தொடர்ந்து வந்த மன்னன் இவ்வளவையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். ஆகவே வீரவரன் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய ஆவல் கொண்டவனாய் முன்போலவே அவனைப் பின் தொடர்ந்தான்.

வீரவரன் வீட்டுக்குப் போய், தன் மனைவி தர்மவதியை எழுப்பிப் பூமிதேவி சொல்லியதைக் கூறினான். அவளும் அதைக்கேட்டு “அரசருடைய நலனை நாம் கவனிக்க வேண்டும். ஆகவே குமாரனை எழுப்பி அவனிடம் விஷயத்தை நீங்களே சொல்லிவிடுங்கள்” என்றாள். அவனும் தன் மகனை எழுப்பி விஷயத்தைக் கூறி, “குழந்தாய்! சண்டிதேவிக்கு உன்னை பலி யிட்டால் அரசன் நீண்டகாலம் உயிரோடிருப்பான் இல்லாவிட்டால் அவன் மூன்றாம் நாள் இறந்து விடுவான்!” என்று சொன்னான்.

இதைக் கேட்ட சத்வவரன் சிறு குழந்தையானாலும். தைரியமாகப் பின்வருமாறு சொன்னான்: “என் உயிரைக் கொடுத்து அரசனைக் காப்பாற்றக் கூடுமானால், எனக்குச் சகல பாக்கியங்களும் கிட்டிய மாதிரியே. ஆகவே காலதாமதம் செய்ய வேண்டாம். உடனே என்னை அழைத்துச் செல்லுங்கள்!” என்றான்.

சத்வவரன் இவ்விதம் கூறியதைக் கேட்ட அரசன் ஒருவருக்கொருவர் சளைப்பில்லை என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டான்.

பிறகு வீரவரன் தன் மகனைத் தன் தோள்மீது தூக்கிக் கொண்டு புறப்பட்டான். அவன் மனைவியான தர்மவதியும் தன் பெண்ணான வீரவதியை எடுத்துக் கொண்டாள். இருவருமாக அந்த நள்ளிரவிலே சண்டி தேவியின் கோவிலை அடைந்தார்கள். மன்னனும் அவர்களுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தான்.

தேவியின் சந்நிதியில் தகப்பன் தன் தோளிலிருந்து மகனைக் கீழே இறக்கிவிட்டான். குமாரனும் மிக்க தைரியத்துடன் விக்கிரகத்தை வணங்கி, “தாயே! என் தலைப் பலியைக்கொண்டு மன்னன் உயிரைக் காப்பாற்று! இடையூறு ஏதுமில்லாமல் அவன் நூறாண்டு அரசு செலுத்தட்டும்!” என்று பிரார்த்தித்தான்.

இதைக் கேட்ட வீரவரன் தன் மகனுடைய உறுதிக்கு மெச்சி, வாளை உருவி அவன் தலையைக் கொய்து அம்பிகையின் பாதங்களில் சமர்ப்பித்து, “என் மகனைப் பலி கொடுத்துவிட்டேன். அரசன் உயிரைக் காக்கவேண்டும்” என்று வேண்டினான். உடனே அசரீரி ஒன்று, ”வீ ரவரா, உன் தீரத்தை மெச்சினோம். உன்னைப் போல எஜமான விசுவாசம் உள்ளவன் யார்? உன்னுடைய ஒரே மகனைப் பலியிட்டதால் அரசனுக்குத் தீர்க்காயுளையும், ஸ்திரமான அரசையும் அளித்துவிட்டாய்!” என்று சொல்லியது.

அதற்குப் பிறகு வீரவரன் குமாரியான வீரவதி வந்து, துண்டிக்கப்பட்ட தன் தமையன் தலையைக் கட்டித் தழுவிக் கொண்டு அழுதாள். அவளுடைய அதிகமான துக்கத்தைப் பொறுக்காமல் அவள் இளம் உள்ளம் வெடித்து அவள் இறந்தாள்.

தர்மவதி அப்போது. தன் கணவனைப் பார்த்துப் பின்வருமாறு தெரிவித்தாள்; “அரசருடைய க்ஷேமத்தைக் கோரி நாம் செய்ய வேண்டியதைச் செய்தாகிவிட்டது. இப்போது நான் உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். என் மடமையால் அதைச் செய்யாமல் இருந்து விட்டேன். ஆகவே இப்போது குழந்தை உடல்களுடன் நானும் தீக்குளிக்க அனுமதிக்க வேண்டும்!”

அவள் தன் கோரிக்கையை வற்புறுத்திக் கூறவே. வீரவரனும் ஒருவாறு இணங்கினான். ”அப்படியே செய். உனக்கு நற்கதி உண்டாகட்டும்! இனியும் உயிர் வாழ்வதால் குழந்தைகளை இழந்த துக்கத்தால் வாடுவதைத் தவிர வேறு என்ன சந்தோஷம் உண்டாகப்போகிறது? ஆயினும் உன்னையே பலியிட்டுக் கொள்ள வில்லையே என்று வருத்தப்படாதே. நம் குமாரனைத் தவிர, வேறு யாரையாவது பலியிட்டாலும் காரியம் கைக்கூடுமென்றிருந்தால் நான் என்னையே அர்ப்பணம் செய்திருக்கமாட்டேனோ?”

இதைக் கூறிவிட்டு வீரவரன் கட்டைகளைச் சேர்த்து அடுக்கி இருகுழந்தைகளின் உடல்களையும் அதன்மீது வைத்து ஒரு விளக்கிலிருந்து அந்த சிதைக்குத் தீ மூட்டினான். பிறகு தர்மவதி தன் கணவனை வணங்கிவிட்டு, ”என் உயிரை தியாகம் செய்வதால், அரசனுக்கு எல்லா நன்மைகளும் ஏற்படட்டும். இப்போது என் கணவராக இருப்பவரே மறுப்பிறப்பிலும் என் கணவராக அனுக்கிரகிக்க வேண்டும்” என்று சண்டி தேவியை வேண்டினாள். பிறகு கொழுந்து விட்டு எரியும் சிதையில் விழுந்து அவள் தன்னை மாய்த்துக்கொண்டாள்!

அதன் பின்னர் வீரவரன், ‘அசரீரி சொன்னப்படி அரசனுடைய க்ஷேமத்தைக் கோரிச் செய்ய வேண்டியதை செய்தாகிவிட்டது. நான் பாதுகாக்கவேண்டிய குடும்பத்தை பலி யிட்டு பிறகு தனியாக வாழ வேண்டிய அவசியமே இல்லை. நானும் என்னைத் துர்க்கைக்கு அர்ப்பணித்து அவளைத் திருப்தி செய்கிறேன்!” என்று தன் கத்தியின் ஒரே வீச்சால் தன் தலையை துண்டித்துக் கொண்டான்.

இவ்வளவையும் மறைந்து பார்த்திருந்த மன்னன் பிரமித்து விட்டான். பிரமை, ஆச்சரியம், துக்கம் எல்லாம் சேர்ந்து அவனைத் திணறச் செய்தன. “இதுவரையிலும் யாரும் கேட்டோ பார்த்தோ அறியாத ஓர் அதிசயத்தை, செயற்கரிய தியாகத்தை எனக்காக இவனும், இவன் குடும்பத்தாரும் செய்திருக்கிறார்கள். பரந்த இவ்வுலகத்தில் எத்தனையோ அதிசயங்களைக் காணலாம். ஆனால் தன்னுடைய தியாகத்தை உலகம் அறியாமல் மறைத்து ரகசியமாக வைத்து அரசனுக்காக தன் உயிரையே கொடுக்கும் மனிதனைக் காண முடியுமா? இதற்குத் தக்க கைம்மாறு செய்யாவிட்டால், நான் அரசனாக இருப்பதில் என்ன பயன்? மிருகம்போல உயிர்வாழ்வதற்கே ஒப்பாகும்!”

இவ்விதம் நினைத்த மன்னன் உறையிலிருந்து கத்தியை உருவிக் கொண்டு தேவியை அணுகி, ”தாயே, பெயருக்கு ஏற்ப அஞ்சா நெஞ்சுடன் எனக்காகத் தன் உயிரை தியாகம் செய்த வீரவரனை, அவன் குடும்பத்தாருடன் மறுபடியும் உயிர் பெற்றெழச் செய்தல் வேண்டும். உன்னையே நம்பி இருக்கும் எனக்கு இந்த வரம் அளிக்காவிட்டால், நான் என் தலையை உனக்கே அர்ப்பணித்து விடுவேன்” என்று வேண்டினான். இவ்விதம் சொல்லிவிட்டு அரசன் தன் தலையை துண்டிக்கத் தயாரானான்.

அதற்குள் மறுபடியும் அசரீரி வாக்குக் கேட்டது. அவசரப்பட்டு எதையும் செய்து விடாதே. உன்னுடைய தைரியத்தை மெச்சினேன். வீரவரனும் அவன் பத்தினியும் குழந்தைகளும் மறுபடியும் உயிர் பெற்றெழுவார்கள்!

இவ்விதம் தெரிவித்தவுடனே வீரவரனும் அவன் குடும்பத் தினரும் உயிர்பெற்றெழுந்தார்கள். அவர்களை உயிருடன் கண்ட அரசன் கண்களில் ஆனந்த பாஷ்பம் நிறைந்தது. அவர்களையே பார்த்துக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டான்.

தூக்கத்திலிருந்து கண் விழித்தவன் போல எழுந்திருந்த ரவரன் தன் மனைவி மக்களைக் கண்டதும் பிரமை கொண்டான். “சாம்பலாகப் போன நீங்கள் மறுபடியும் எவ்வாறு உயிர் பெற்றீர்கள்? நானும் தலையை வெட்டிக் கொண்டேனே! இது முழுதும் மாயையா? அல்லது தேவியின் அருளா?” என்று கேட்டான் வீரன்.

தேவியின் அருளாலேதான் நம்மை அறியாமல் நாம் ஜீவன் பெற்றெழுந்தோம்” என்று பதில் அளித்தாள் பத்தினி.

அம்பிகையைத் தொழுது வணங்கி விட்டுத் தன் மனைவி மக்களுடன் வீடு திரும்பினான். வீட்டிலே அவர்களை விட்டு விட்டு. அவன் மறுபடியும் அரண்மனை வாசலையடைந்து வழக்கம் போல நின்று காவல் புரிய ஆரம்பித்தான். பிறர் அறியாமல் வ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த மன்னனும் அரண்மனையில் மாடத்திலிருந்து, “அரண்மனை வாசலில் காவல் யார்?” என்று கேட்டான். வீரவரனும், “அடியேன் தான் இருக்கிறேன். மகாராஜா, தாங்கள் ஆணைப்படி நான் அந்த ஸ்திரீயைத் தேடிச் சென்றேன். ஆனால் தோன்றியது போலவே அவள் திடீரென்று எங்கேயோ மறைந்து விட்டாள்!” என்றான்.

இதைக் கேட்ட அரசன் ஆச்சரியத்தால் திகைத்து விட்டான். நடந்தது முழுவதையும் அவன் தன் கண்ணால் நேரில் கண் டிருக்கிறான். ”பிறருக்கு உதவி செய்தவர்கள் அது உயர்ந்த செயலாக இருந்தாலும் அதை வாய்விட்டுச் சொல்ல மாட்டார்கள்!” என்று மன்னர்பிரான் தன் மனதிலே நினைத்துக் கொண்டான்.

மறுநாள் காலை வழக்கம் போல வீரவரன், அரசன் ஆஸ்தானுக்கு வந்து மன்னனை வணங்கினான். அப்போது
மன்னனே தன் மந்திரிகளிடம் முதல் நாள் இரவு நடந்தது. முழுவதையும் ஒன்றுவிடாமல் எடுத்துக் கூறினான். எல்லோரும் இடியுண்டவர் போல வாயைப் பிளந்து நின்றனர். இதனால் சந்தோஷம் அடைந்த மன்னன், அவர்கள் வீரத்துக்குப் பரிசாக வீரவரனுக்கும், அவன் மகனுக்கும் லாடதேசம் (கூர்ஜரம்) கர்நாடகம், ஆகிய இரண்டையும் அளித்து அந்தப் பிரதேசங் களுக்கு அவர்களை அரசர்களாக முடி சூட்டி வைத்தான்.

-இவ்விதம் ஆச்சரியம் மிக்க கதையைக் கூறிய வேதாளம் விக்கிரமாதித்தனைப் பார்த்து. “சொல்லுமையா, மகாராஜனே! இவர்களில் பராக்கிரமம் நிறைந்தவர் யார் என்பதைச் சொல்லும்! தெரிந்து கொண்டே சொல்லாமலிருந்தால் நான் தெரிவித்த படியே சாபம் உம் தலையில் விழும்” என்றது.

“சூத்ரக மன்னனே இவர்கள் எல்லோரிலும் சிறந்தவன்” என்று தெரிவித்தான் மன்னன்.

‘வீரவரன் உயர்ந்தவன் இல்லையா? அவனுக்கு இணையானவர் உலகில் கிடைப்பாரா? அவனைக் காட்டிலும் அவன் மனைவி உயர்ந்தவள் இல்லையா? தன் கண் எதிரே தன் மகனைப் பலியிடக் காண எந்தத் தாய்தான் சகித்துக் கொண்டிருப்பாள்? சிறுவனாயினும் அஞ்சா நெஞ்சுடன் தன்னை பலியிட்டுக் கொண்ட சத்வவரன் சிறந்த வீரன் இல்லையா? இவர்களை எல்லாம் விட்டு, அரசன்தான் எவ்விதம் உயர்ந்தவன் என்று கூறுகிறாய்?” என்று திரும்பவும் கேட்டது வேதாளம்.

”அப்படிச் சொல்லாதே! தன் உயிர் மனைவி மக்கள் எல்லாவற்றையும் மன்னனை ரக்ஷிப்பதற்காகத் தியாகம் செய்ய வேண்டியது தான் என்பதையே நியதியாகக் கொண்ட நற்குடியில் பிறந்தவன் வீரவரன்; அவன் மனைவியும் நற்குல மங்கை; கற்புடையப் பெண். தன் புருஷன் அடிச்சுவட்டையே பின்பற்றுகிறவள்: அவர்களின் மகனான சத்வவரனும் அவர்களைப் போன்றவனே. அதனால் அவர்களின் வாழ்க்கையை அவ்வி தம் பின்னிக்கிடப்பது. அரசர்களோ தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தங்களுக்குக் கீழ்பட்டவர்களைச் சகஜமாக உயிர்ப்பலி யிட்டு விடுவார்கள். அவ்விதம் இல்லாமல் சூத்ரக மன்னன் தன் வேலைக்காரர்களுக்காகத் தன் உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தவன்! அதனால் அவன் செயலே சிறந்தது” என்று விளக்கிப் பதில் அளித்தான் விக்கிரமாதித்தன்.

உடனே வேதாளம் மறுபடியும் கட்டவிழ்த்துக் கொண்டு முருங்க மரம் ஏறிக்கொண்டது.

(இந்தக் கதையில் வரும் சூத்ரக மன்னன் என்பதற்கு சுக்ரீபன் என்றும், வீரவரன் என்பதற்கு வீரவர்த்தனன் எனவும் தமிழ்ப்பாடத்தில் பெயர்கள் வித்தியாசப்படுகின்றன.)

– தொடரும்…

– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *