பத்மாவதி கதை
கதையாசிரியர்: அரு.ராமநாதன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2025
பார்வையிட்டோர்: 304
(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்
2-வது மதனாபிஷேகவல்லிப் பதுமை சொல்லிய வேதாளக் கதைகள்
வேதாளம் பிடிக்கப் போன கதை | வேதாளம் சொல்லிய புதிர் கதைகள்
1.1 பத்மாவதி கதை | 1.2 நீதிவேந்தன் கதை
வாரணாசி என்று ஒரு நகரம் இருக்கிறது. என்றைக்கும் வற்றாமல் நீர் நிறைந்திருக்கும் ஜீவநதியான கங்கை அங்கே ஓடுகிறது. முன்னொரு காலத்தில் அந்நகரத்தில் பிரதாபமகுடன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மகா பராக்கிரமசாலி அவனுக்கு வஜ்ரமகுடன் என்னும் மகன் இருந்தான். தந்தையைப் போலவே மகனும் வீரம் நிறைந்தவன். அழகிலே மன்மதனுக்கும் மேம்பட்டவன். அவனுக்குப் புத்திசரீரன் என்ற பெயருடைய ஒரு நண்பன் இருந்தான். அவன் மந்திரி குமாரனாவன். அவனை வஜ்ரமகுடன் தன் உயிரினும் மேலாக நேசித்து வந்தான்.
ஒருசமயம் இருவரும் பொழுது போக்குவதற்காக வேட்டையாடச் சென்றார்கள். துஷ்ட மிருகங்களை வேட்டையாடிக் கொண்டே அவர்கள் காட்டில் நெடுந்தூரம் சென்றார்கள். அங்கே மொக்கு அவிழ்ந்த மலர் நிறைந்த மரங்களும், செடி கொடிகளும் அவர்களை அழைப்பதே போலக் காற்றிலே அசைந்து ஆடின ; குயில்கள் பாடி வரவேற்றன. அந்தக் காட்டின் நடுவே அழகிய ஏரி ஒன்று இருந்தது. வர்ணத்தாமரைகள் பூத்து விளங்கிய அது தெய்வலோகத் தடாகமோ என ஐயுறும்படி அமைந்திருந்தது. அதிலே மங்கையொருத்தி, தோழிகளுடன் நீராடி விளையாடிக் கொண்டிருந்தாள்.
ஜலக்ரீடை செய்யும் அந்தப் பெண் பேரழகு வாய்ந்தவள். அவளுடைய அழகு அந்த ஏரிக்கே ஒரு தனி வனப்பை அளித்தது. அவளுடைய கடைக்கண் பார்வையிலே மயங்கிய ராஜகுமாரன் தன் உள்ளத்தைப் பறி கொடுத்துவிட்டான். அவ்வி தமே பத்மாவதியும் ராஜகுமாரனின் அழகிலே மயங்கி, அவன்மீது மோகமுற்று தன் வசம் இழந்தாள். குளித்துக் கொண்டிருந்த அவள் தன் நிலையை மறந்து நாணத்தைத் துறந்து. அவனையே பார்த்து நின்றாள். ராஜகுமாரனும் அவளையே பார்த்து நின்றான்.
அப்போது அவள் விளையாட்டாக ஒரு தாமரைப் பூவைப் பறித்துத் தன் காதில் சூட்டிக்கொண்டாள். காதில் அணியும் தந்த பத்திரம் என்னும் ஆபரணம்போல அப்பூவை நீண்ட நேரம் சுருட்டிக் கொண்டிருந்தாள். பிறகு, மற்றொரு பூவைப் பறித்துத் தன் தலையில் சூட்டிக் கொண்டாள். அதே சமயம் மற்றொரு கையை தன் நெஞ்சகத்தில் வைத்துக் கடைக்கண்ணால் அவனை நோக்கினாள். அவள் இதைச் சகஜமாகச் செய்ததால், அவளுடைய தோழிகள் இதை விளையாட்டாகவே கொண்டார்கள். அவளுடைய செயலைப் பார்த்து நின்ற ராஜகுமாரனுக்கு அதன் உட்கருத்து ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் கூரிய புத்திமானான புத்திசரீரன் அதை உடனே உணர்ந்து கொண்டான்.
சிறிது நேரம் கழித்து அந்த மங்கை கரையேறி தன் தோழிகளுடன் தன்னூருக்குப் போய்விட்டாள். அங்கு சென்ற பிறகும் அவளுடைய உள்ளம் தடாகக் கரையில் கண்ட ராஜகுமாரனையே நினைத்துக் கொண்டிருந்தது.
ராஜகுமாரனே. அவள் புறப்பட்டுச் சென்ற பிறகு, மந்திர சக்தியை இழந்த வித்தியாதரனைப் போல, ஏதும் செய்ய இயலாதவனாக ஆகித் தன் நகரம் திரும்பினான். அவளைக் காணவேண்டும் என்ற ஏக்கத்தால் அவன் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வந்தது. ஒருநாள் அவன் தன் நண்பனான புத்திசரீரனுடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்தான். அப்போது, “நண்பா!ஏன் வருந்துகிறாய்? அப்பெண்ணை நீ சுலபத்தில் அடைந்துவிட முடியும்” என்றான் மந்திரிகுமாரன். அதைக் கேட்ட வஜ்ரமகுடன் ஆச்சரியம் அடைந்து, “அது எப்படி முடியும்? அவள் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவள், என்ன பெயர் என்பன போன்ற விபரம் ஒன்றும் தெரியாதே. அப்படியிருக்க வீ ணாக என் உள்ளத்தில் ஆசை வார்த்தைகளைச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறாயா?” என்று கேட்டான்.
இதைக் கேட்ட புத்திசரீரன் வியப்புற்று, “என்ன? அவள் தன்னைப் பற்றிய விவரங்களை ஜாடையால் தெரிவித்தாளே! நீ பார்க்கவில்லையா?” என்று வினவினான்.
“நண்பா! நான் ஒன்றும் அறியேன். அவள் முகக் காந்தியைக் கண்டு மயங்கி நின்று விட்டேன்.”
‘அவள் தாமரைப் பூவைத் தன் காதில் வைத்துக் கொண்டதால் ”நான் கர்ணோத்பலன் என்னும் அரசனுடைய நாட்டைச் சேர்ந்தவள்” என்பதை அறிவித்தாள். அந்தப் பூவை காதணியான தந்தபத்திரம் போலச் சுருட்டியதால், ”அங்கேயுள்ள தந்தச் சிற்பி ஒருவன் மகள்” என்பதையும் குறிப்பிட்டாள். தாமரைப் பூவை எடுத்துத் தலையில் சூடியதால் தன் பெயர் பத்மாவதி என்றும் கையை நெஞ்சகத்தின் மீது வைத்துக்கொண்டு கடைக்கண்ணால் உன்னைப் பார்த்ததால், அவள் இதயம் உனக்கே சொந்தமாய்விட்டது என்றும் அறிவித்தாள். உண்மையாகவே. இப்போது கலிங்கதேசத்தில் கர்ணோத்பலன் என்னும் அரசன் இருக்கிறான். அவனுடைய ஆஸ்தானத்தில் தந்த சிற்பிகளுள் சிறந்தவனான சங்கிராமவர்த்தனன் என்பவன் இருக்கிறான். அவனுக்குப் பத்மாவதி என்ற பெண் ஒருத்தியும் உண்டு. மூவுலகத்திலும் அவள் அழகுக்கு ஈடானவள் இல்லை. அவளை அவன் ரொம்பப் பிரியமாக வளர்த்து வருகிறானாம். இந்த விவரங்களைப் பிறர் கூற நான் கேட்டிருக்கிறேன். அதனால் அவள் ஜாடைகளால் தன் விவரங்களை உனக்கு அறிவித்தவுடனே அவற்றின் உட்பொருளை நான் தெரிந்து கொண்டேன்.”
மந்திரிகுமாரன் இவ்வளவு விளக்கமாகக் கூறியதைக் கேட்ட வஜ்ரமகுடன் தன் நண்பனின் புத்திக் கூர்மையைக் கண்டு நிரம்பவும் சந்தோஷமடைந்தான். தன் இஷ்டம் பூர்த்தியாகும் என்ற நம்பிக்கையும் அவனுக்கு ஏற்பட்டது. ஆகவே, நண்பனிடம் இதைப்பற்றி இன்னும் விவரமாகக் கலந்து பேசி ஆலோசித்தான். பிறகு மறுபடியும் வேட்டைக்குப் போவது போல அவர்கள் அரண்மனையை விட்டுக் கிளம்பினார்கள். ஆனால், அவர்கள் காட்டுக்குப் போகவில்லை. பத்மாவதி இருக்கும் நகரத்தை நோக்கிச் செல்லவே திட்டமிட்டிருந்தார்கள். அதனால் ராஜகுமாரன் நடுவழியில் தன் குதிரையைத் தட்டி விட்டுப் பரிவாரத்தினிடமிருந்து தந்திரமாகப் பிரிந்து, தன் நண்பன் மட்டும் பின்தொடரக் கலிங்க தேசத்துக்குச் சென்றான். அங்கே கர்ணோத்பலன் ஆண்டு வந்த நகரத்தை அடைந்து, தந்தச் சிற்பியின் ஜாகையை அவர்கள் தேடியலைந்து கண்டு பிடித்தனர். பிறகு இருவரும் பக்கத்தில் குடியிருந்த ஒரு கிழவியின் வீட்டுக்குச் சென்று தங்கினார்கள்.
மந்திரி குமாரன் குதிரைகளை மறைவான இடத்தில் கட்டிப்புல்லைப் போட்டு தண்ணீர் காட்டிவிட்டு வந்தான். பிறகு அந்தக் கிழவியிடம். “அம்மா, இவ்வூரில் சங்கிராமவர்த்தனர் என்னும் தந்தச் சிற்பி ஒருவர் இருக்கிறாரே. அவரை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான். இதைக் கேட்ட கிழவி, அவனிடம் பணிவாக “அவரை எனக்கு நன்றாகத் தெரியும். நான்தான் அவருக்குப் பால் கொடுத்து வளர்த்தேன். அவர் என்னைத் தம் மகளின் செவிலித் தாயாக அமர்த்தியிருக்கிறார். ஆயினும் நான் இப்போது அங்கே போவது இல்லை. அதற்கு வேண்டிய புடவை துணிமணிகள் எனக்கு இல்லை. என் மகன் ஒரு சூதாடி. என் துணிமணி எதையாவது பார்த்துவிட்டால் அவன் உடனே அதை எடுத்துப் போய்விடுகிறான்” என்று தெரிவித்தாள்.
மந்திரி குமாரனுக்கு இந்தச் செய்தி ஆனந்தத்தை அளித்தது. உடனே அவன் கிழவிக்குத் தன் மேலாடையைக் கொடுத்ததுடன் வேறு பரிசுகளையும் அளித்தான். பிறகு அவளிடம், “அம்மா! எங்களுக்கு நீங்கள்தான் தாய். ஆகவே, ரகசியமாக எங்களுக்கு ஓர் உதவி செய்யவேண்டும். தந்தச் சிற்பியின் மகளான பத்மாவதியிடம் போய், “நீ குளக்கரையில் கண்ட ராஜகுமாரன் வந்திருக்கிறான். அவன் உன்மீது மோகம் கொண்டிருக்கும் செய்தியை உனக்கு அறிவிக்கவே என்னை அனுப்பி வைத்தான்.” என்று ரகசியமாகத் தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.
முன்னதாகவே பரிசுகள் அளித்துக் கிழவியைத் தங்கள் வசம் ஆக்கிக் கொண்டுவிட்டதால், கிழவி அவர்கள் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டு பத்மாவதியைப் பார்க்கச் சென்றாள். போனவள் சீக்கிரமாகவே திரும்பிவிட்டாள். உடனே அவளை ராஜகுமாரனும், மந்திரி குமாரனும் சூழ்ந்துகொண்டு போய் வந்த சமாசாரம் என்னவாயிற்று என்று விசாரித்தார்கள். கிழவியோ அழமாட்டாக் குறையாகப் பின்வருமாறு சொன்னாள்.
“நான் அவளிடம் போய் நீங்கள் வந்திருக்கும் செய்தியை இரகசியமாகக் கூறினேன். அதைக் கேட்ட அவள் என்னை மிகவும் கோபித்துக் கர்ப்பூரத்தில் தோய்த்த தன் இரண்டு கைகளால் என்னை இரு கன்னங்களிலும் அடித்துவிட்டாள். அவமானத்தால், நான் மனம் உடைந்து திரும்பிவிட்டேன். இதோ பாருங்கள், என் கன்னத்தில் அவள் விரல் அடையாளங்கள்!” என்றாள் கிழவி.
கிழவி இவ்விதம் சொன்னவுடனே ராஜகுமாரனுக்கு தன் எண்ணம் நிறைவேறாது என்ற நினைப்பால் உள்ளம் உடைந்துவிட்டது. ஆயினும் மந்திரிகுமாரன் அவன் உள்ளத்தை வாடவிடாமல் தேற்றினான்: “அதைரியப்படாதே, நண்பா, அவள் தன் உள்ளக்கிடக்கையைக் காட்டிக் கொள்ளாமல், கிழவியைக் கோபித்துக்கொண்டு அவள் முகத்தில் கர்ப்பூரம் தோய்ந்த பத்து விரல்களால் அடித்து அனுப்பி வைத்ததால், “இப்போது நிலா காலமானதால், ஏற்ற சமயம் அல்ல. நிலா நாள் பத்தும் போகட்டும். அதுவரையில் பொறுத்துக் கொள்ளுங்கள்!” என்பதைத் தெரிவித்திருக்கிறாள்.” என்று சொல்லி அவன் சோர்வைப் போக்கினான்.
மந்திரிகுமாரன் இவ்விதம் தேறுதல் கூறியதால், மனச் சமாதானம் கொண்ட ராஜகுமாரன் கடைத்தெருவுக்குச் சென்று, தான் கொணர்ந்திருந்த பொன்னில் கொஞ்சம் விற்று வந்தான். அந்தப் பணத்தைக் கொடுத்துக் கிழவியைத் தங்களுக்கு நல்ல விருந்து தயார் செய்யச் சொன்னான்.
இவ்விதம் பத்து நாட்கள் எப்படியிருக்கிறது என்பதை அறிந்து வர கிழவியை மறுபடியும் கழிந்ததும். நிலைமை பத்மாவதியிடம் இருவரும் அனுப்பி வைத்தனர். அவ்விருவரும் அளித்த உபசரிப்பில் அவள் மயங்கிப் போய்விட்டாள். ஆகவே, மறுத்துக் கூறாமல் அவள் பத்மாவதியின் மாளிகைக்குப் போய்த் திரும்பினாள்.
“நான் இன்றைக்கு அங்கே போய் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தேன். அவள் என்னை வம்புக்கு இழுத்து, உங்களிடமிருந்து ஏதோ செய்தி கொணர்ந்திருப்பதாக வாதம் செய்தாள். மூன்று விரல்களைச் செம்பஞ்சுக் குழம்பில் நனைத்து, அதனால் என் மார்பில் அடித்து அனுப்பிவிட்டாள்.” என்றாள்.
கிழவியின் வார்த்தைகளைக் கேட்ட புத்திசரீரன் “நண்பா. சோகப்படவேண்டிய அவசியமே இல்லை. இன்னும் மூன்று இரவுகளுக்கு அங்கே வரமுடியாதென்பதை உணர்த்தியிருக்கிறாள்” என்று தைரியம் கூறினான்.
அதே போல மூன்று நாட்கள் இருவரும் பொறுத்திருந்து விட்டுக் கிழவியை மீண்டும் பத்மாவதியிடம் அனுப்பினர். தன் மாளிகைக்கு வந்த கிழவியைப் பத்மாவதி வரவேற்று உட்கார வைத்து அன்புடன் உபசரித்தாள். பகல் முழுவதும் வயிறார உண்டு, பத்மாவதியுடன் காலம் கழித்தாள். காலையில் வீட்டுக்குக் கிளம்பியதும், தெருவாசலில் பெருத்த கூக்குரல் கேட்டது: “மதம் பிடித்த யானை ஒன்று அதன் கட்டுத் தறியிலிருந்து சங்கிலியை அறுத்துக் கொண்டு கிளம்பிவிட்டது. தெருவிலே அங்குமிங்கும் ஓடி மக்களைக் காலால் மிதித்துக் கொண்டு வருகிறது” என்று மக்கள் கூக்குரல் எழுப்பினர்.
உடனே பத்மாவதி கிழவியிடம், “நீ ராஜ வீதி வழியாகப் போகக் கூடாது. மதயானையினால் உனக்கு ஆபத்து நேரிடக்கூடும். என்னுடன் வா. வேறு வழியாக அனுப்பி வைக்கிறேன். உன்னை ஓர் ஆசனத்தில் கட்டிக் கயிறு கொண்டு இந்த ஜன்னல் வழியாகத் தோட்டத்தில் இறக்கிவிடுகிறோம். நீ அவ்விடத்தில் உள்ள மரத்திலேறி மதில் சுவரைத் தாண்டி கீழே இறங்கு. அந்த வழியாகச் சென்றால் எந்தவிதமான ஆபத்தும் வராது” என்று தெரிவித்தாள். அவ்வாறே கிழவியைக் கயிறு கொண்டு தோட்டத்தில் இறக்கிவிட்டாள். கிழவி அவள் சொன்ன வழியே சென்று வீட்டை அடைந்தாள். அவள் என்ன செய்தி கொண்டுவரப் போகிறாளோவென்று காத்திருந்த இருவரிடமும் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் தெரிவித்தாள்.
“நண்பா. உன் ஆசை நிறைவேறியது. நீ எந்த வழியாகச் சென்று அவளை அடையவேண்டும் என்பதையும் அவள் தந்திரமாக நமக்கு உணர்த்திவிட்டாள். ஆகவே, சூரியாஸ்தமனம் ஆனதும் அவள் குறிப்பிட்ட வழியாகவே சென்று அவளை அடை” என்றான் மந்திரிகுமாரன்.
ராஜகுமார னும் அதேபோல இரவு வந்ததும் புறப்பட்டுச் சுவரைத் தாண்டி தோட்டத்தை அடைந்தான். அங்கே மாளிகை யின் மேல்மாடத்தி லிருந்து கயிறுடன் ஆசனம் ஒன்று தொங்கிக் கொண் டிருந்தது. அவன் வரவை எதிர் பார்த்துத் தயா யாக இருந்தனர் பணிப்பெண்கள்.
ராஜகுமாரன் ஆசனத்தில் அமர்ந்ததும் அவர்கள் ஆசனத் தை மேலே தூக்கி னார்கள்.
மாடியிலே பூர்ணசந்திரன் போன்ற முகத்துடன் பத்மாவதி காத்திருந்தாள். ராஜகுமாரனைக் கண்டவுடனே எழுந்திருந்து வந்து அவனை வரவேற்றாள். அவர்கள் இருவரும் கந்தர்வ விவாகம் புரிந்து கொண்டார்கள். தன் ஆசைக்கினியாளை அடைந்த ஆனந்தத்திலே ராஜகுமாரன் சில நாட்கள் உலகையே மறந்து அவளுடன் தங்கிவிட்டான்.
பிறகு ஒருநாள் அவன் பத்மாவதியிடம் “அன்பே! மந்திரி குமாரனான என் நண்பனும் என்னுடன் வந்திருக்கிறான். உன் செவிலித்தாய் வீட்டிலே அவனை விட்டு விட்டு வந்துள்ளேன். அவனைப்போய் பார்த்துவிட்டு உடனே திரும்பி விடுகிறேன்.” என்றான்.
அப்போது பத்மாவதி தன் காதலனை நோக்கி, “உங்களை ஒரு விஷயம் கேட்கவேண்டும். நான் காட்டிய ஜாடைகளின் உட்பொருளை நீங்களாகவே உணர்ந்து கொண்டீர்களா? அல்லது உங்கள் நண்பர்தான் அவற்றின் புதிரை விடுவித்து விடை கூறினாரா?” என்று கேட்டாள்.
“ஜாடைகளில் ஒன்றுமே எனக்கு விளங்கவில்லை. மகா சாமர்த்தியசாலியான என் நண்பன் அவற்றைத் தன் நுண்ணறிவால் கண்டு எடுத்துச் சொன்னான்.’ என்று உண்மையை அவளிடம் தெரிவித்து விட்டான் ராஜகுமாரன்.
“அப்படியானால் நீங்கள் இதை என்னிடம் முதலில் சொல்லவில்லையே? அவ்வாறு சொல்லாமல் பெருந்தவறு இழைத்துவிட்டீர்கள். அவர் உங்கள் நண்பர் ஆதலால் எனக்குச் சகோதரர் ஆவார். மற்றவர்களைவிட அவருக்கு நான் முதலில் மரியாதை செலுத்தி உபசரிக்க வேண்டியதவசியம்” என்று தன் காதலனை நோக்கிச் சொன்னாள் பத்மாவதி.
அங்கிருந்து புறப்பட்ட ராஜகுமாரன் தன் நண்பனை அடைந்தான். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஜாடைகளின் உட்பொருளை அறிந்து சொல்லியது புத்திசரீரனே என்று பத்மாவதியிடம் தான் சொன்னதைத் தெரிவித்தான் ராஜகுமாரன்.
“நண்பா! இது முறையில்லை. நல்லதும் இல்லை” என்று ராஜகுமாரனைக் கடிந்து கொண்டான் மந்திரி குமாரன்.
மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் பத்மாவதியின் வேலைக்காரி கையில் பட்சணம், பலகாரம், வெற்றிலை பாக்கு ஆகியவற்றுடன் வந்து. மந்திரிகுமாரனின் சௌக்கியத்தை விசாரித்துவிட்டுக்
கொடுத்தாள். ராஜகுமாரன் அவற்றைச் சாப்பிடக்கூடாது என்பதற்காக, “தங்கள் வரவை எதிர் நோக்கி எஜமானி ஆகாரம் ஒன்றும் சாப்பிடாமல் காத்திருக்கிறாள். இன்றையப் பொழுதைத் தங்களுடன் விருந்துண்டு இன்பமாகக் கழிக்கச் சொன்னாள்.” என்று அந்தரங்கத்தாதி சொல்லிவிட்டு யாரும் காணாமல் புறப்பட்டுப் போய்விட்டாள்.
உடனே மந்திரிகுமாரன் தன் நண்பனை நோக்கி, “ராஜகுமாரா! இதோ ஒரு வேடிக்கை. நீயே பார்” என்று சொல்லி க்கொண்டே பலகாரத்தில் ஒரு சிறிது எடுத்து பக்கத்தில் இருந்த ஒரு நாய்க்குப் போட்டான். அதைத்தின்றதும். நாய் அவ்விடத்திலேயே விழுந்து தன் உயிரைவிட்டது. இதைக்கண்ட ராஜகுமாரன் திகைத்துவிட்டான். ‘இது எதனால்? என்ன விஷயம்?” என்று அவன் பிரமிப்புடன் கேட்டான்.
“உண்மை என்ன என்றால், என் மதிநுட்பத்தை அவள் உணர்ந்துவிட்டாள். ஆகவே இரகசியம் வெளிப்படாமலிருக்க அவள் என்னைக் கொன்றுவிட வேண்டுமென்று இந்த விஷம் கலந்த பலகாரத்தை அனுப்பியிருக்கிறாள். என்னை எதற்காக அவள் கொல்ல விரும்பினாள் என்பதையும் கேள். அவளுக்கு உன்மீது பூரண ஆசை. நான் உயிருடன் இருக்கும்வரை. என்னுடைய தோழமை கொண்ட நீ அவளிடம் பூரண ஆசை கொண்டு அன்புடன் இருக்கமாட்டாய் என்று அவள் கருதுகிறாள். மேலும் என் வார்த்தையைக் கேட்டு அவளைத் துறந்து ஊர் திரும்பி விடுவாயோ என்றும் பயம். இதுதான் காரணம். அவள்மீது கோபித்து கொள்ள வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக அவளை இங்கிருந்து நாம் அழைத்துக்கொண்டு போய்விடவேண்டும். தன் உற்றார் உறவினர்களைத் துறந்து அவள் வெளியேற நான் உனக்கு ஓர் உபாயத்தைச் சொல்கிறேன்” என்றான் புத்திசரீரன்.
“நண்பா! உனக்கு புத்திசரீரன் என்று பெயரிட்டது மிகவும் பொருந்தும். அறிவின் ஆதாரமே நீ!” என்று புகழ்ந்தான் வஜ்ரமகுடன். இந்தச் சமயம் வெளியில் “ஐயோ! ராஜாவின் ஆண் குழந்தை இறந்து போயிற்றே” என்ற குரல் கேட்டது. அதைக் கேட்ட மந்திரிகுமாரன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். உடனே அவன் தன் நண்பனைப் பார்த்து பின்வருமாறு சொன்னான்:
“நண்பா, இன்றிரவு நீ திரும்ப பத்மாவதியின் மாளிகைக்குச் செல். அவளுடன் குதூகலமாய் இருக்கும்போது அவளுக்கு நல்ல போதையூட்டி அவளை மதிமயங்கச் செய்துவிடு. தன் நிலைமை மறந்து பிணம் போலப் படுக்கையில் படுத்துத் தூங்கும்போது அவள் நகைகளைக் களைந்து இடையிலே நகங்களினால் சூலாயுதத்தின் முக்குறிகளைப் போல கீறல் அடையாளம் செய்து விட்டு வந்துவிடு. அதற்கு மேல் நடக்க வேண்டியவற்றை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.” என்றான் மந்திரிகுமாரன்.
அந்தவி தமாக வஜ்ரமகுடனும் தன் காதலியான பத்மாவதிக்குப் போதையூட்டி அவள் மயங்கிக் கிடக்கையில், கூரிய முனைகளை உடைய நகங்களினால் சூலாயுதத்தின் முக்குறிகளைப் போல் அடையாளம் செய்துவிட்டு நகைகளுடன் வந்து சேர்ந்தான். மந்திரிகுமாரனும் அதைக் கண்டு உவகை பூத்தான்.
மறுநாள் காலையில் மந்திரிகுமாரன் அவ்வூர் மயானத்தை யடைந்து ஒரு தபசிபோல வேஷம் போட்டுக் கொண்டான். ராஜகுமாரனைச் சீடனாக வேடம் தரிக்கச் சொல்லி. பத்மாவதியின் நகைகளில் முத்து மாலையை எடுத்துக் கொடுத்தான். “நண்பா, இதைக் கடைத் தெருவுக்குச் சென்று விலை கூறு. பலரும் காணும்படியாக, அதைக் கையில் பிடித்துச் செல். ஆயினும் யாரும் வாங்கமுடியாதபடி அதிகமாக விலைகூறு. காவலாளிகள் யாராவது உன்னைப் பிடித்து விசாரித்தால், பணிவாகவே. “இதை விற்கச் சொல்லி என் குருநாதர் என்னிடம் கொடுத்தார்.” என்று சொல். வேறு ஒன்றையும் கூறாதே” என்று சொல்லி அனுப்பினான்.
வஜ்ரமகுடன் அவ்வி தமே மாலையைக் கையில் ஏந்தி கடைத்தெருவுக்குச் சென்று, அதை விலை கூறினான். அதைக் கண்ட காவலாளிகள் அவனை ஒரு திருடன் என்றே நினைத்துப் பிடித்துக் கொண்டார்கள். முதல் நாள் இரவு தந்தச் சிற்பி வீட்டிலே நகைகள் திருட்டு போய்விட்ட விஷயம் அவர்களுக்கும் தெரியும்.
ராஜகுமாரனை அவர்கள் நகரக் கொத்தவாலிடம் அழைத்துச் சென்றனர். தபசி வேடத்தில் இருந்த அவனைப் பார்த்த கொத்தவால், “பெரியோய். இந்நகரத்துத் தந்தச் சிற்பியின் மகளுக்குச் சொந்தமான இம்மாலை உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டான். ராஜகுமாரன் தன் நண்பன் தெரிவித்தபடி, “என் குருநாதர் இதைக் கொடுத்து விற்று வரும்படி கூறினார். மற்ற விவரங்கள் அவரைக் கேட்டால்தான் தெரியும்” என்றான்.
கொத்தவால் மயானத்துக்கு வந்து அங்கே தபசி வேடத்தி லிருந்த மந்திரிகுமாரனை அணுகி, முத்துமாலை கிடைத்த விவரத்தைக் கேட்டான்.
மந்திரிகுமாரன் மிக்க சாமர்த்தியமாகக் கொத்தவாலைத் தனியே அழைத்துச் சென்று பின் வருமாறு தெரிவித்தான்:
“நான் ஒரு தபசி. எந்த இடத்திலும் நிரந்தரமாக வசிப்பவன் அல்ல. தற்செயலாக நேற்று இவ்விடம் வந்தேன். இரவு நேரம் இம்மயானத்தில் தங்கியிருக்கையில். நடுநிசியில் மோகினிகளின் கூட்டம் ஒன்று இங்கே வந்தது. அவர்களுள் ஒருத்தி ராஜகுமாரனின் உடலைத் தாங்கி வந்தாள். அவள் அந்த உடலைக் கிழித்து, இதய கமலத்தை வெளிப்படுத்தி, பைரவனுக்கு நிவேதித்தாள். அவள் மோகன வித்தையில் வல்லவள். நன்றாக மதுபானம் செய்து, போதையேறித் தன் வசம் இழந்து இருந்தாள். ஒரு புறம் தனியே அமர்ந்திருந்த என்னிடம் நெருங்கி, முகத்தைக் கோணி என் ஜபமாலையைப் பிடுங்க முயன்றாள். அவள் என்னிடம் வந்து அத்துமீறி வம்பு பண்ணியதால் எனக்குக் கோபம் ஏற்பட்டது. என் மந்திர சக்தியால் சூலாயுதத்தைப் பழுக்கக் காய்ச்சி அவள் இடைப்புறம் சூடு போட்டுத் துரத்தினேன். அப்போது அவள் கழுத்திலிருந்த இம்முத்துமாலையைப் பிடுங்கிக் கொண்டேன். தபசிக்கு முத்துமாலை எதற்கு? ஆகவே தான் “அதை விற்று வா” என்று அனுப்பினேன்.
இதைக் கேட்ட கொத்தவால் அரசரிடம் சென்று தான் அறிந்த விஷயத்தைத் தெரிவித்தான். செய்தியைக் கேட்ட மன்னனும் துறவி சொல்லியபடி பத்மாவதியின் இடையில் சூலாயுதத்தின் அடையாளம் இருக்கிறதா என்று பார்க்க நம்பிக்கையான கிழவி ஒருத்தியை அனுப்பினான். அவள் திரும்பி வந்து அடையாளம் தெளிவாகத் தெரிகிறது என்பதைத் தெரிவித்தாள். உடனே அந்த அரசன், பத்மாவதி ஒரு மோகினிப் பிசாசு என்றும் அவளே தன் குழந்தையைக் கொன்றவள் என்றும் தீர்மானித்து முடிவு கட்டிவிட்டான்.
அதனால் அவனே நேரில் சென்று தபசி வேடம் பூண்டிருக்கும் மந்திரிகுமாரனைப் பார்த்து, பத்மாவதிக்கு என்ன தண்டனை விதிக்கலாம் என்று கேட்டான். அவன் ஆலோசனைப்படியே அரசன் பத்மாவதியை ஊரைவிட்டுத் துரத்தி விடவேண்டும். என்று தீர்ப்புக் கூறினான். அவளுடைய பெற்றோர்கள் எவ்வளவோ தடுத்தும் அழுதும் அரசன் கேட்கவில்லை. ராஜ சேவகர்கள் பத்மாவதியை காட்டுக்கு இழுத்துச் சென்று ஆடையாபரணங்களை உருவிக்கொண்டு நடுக்காட்டில் விட்டு விட்டுத் திரும்பினர்.
இவ்விதம் ஆடையாபரணங்கள் இல்லாமல் நடுக்காட்டில் துரத்தி அடிக்கப்பட்ட பத்மாவதி தன் உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை. இவ்வளவும் மந்திரிகுமாரன் செய்த சூதே என்று அவள் நம்பினாள். அதே போல அன்றுமாலை ராஜகுமாரனும், மந்திரிகுமாரனும் தங்கள் வேடத்தை களைந்து குதிரையேறி அவள் இருந்த இடத்திற்கு வந்தனர். அங்கே தன் தலைவிதியை நினைத்து நொந்து அழுது கொண்டு உட்கார்ந்திருந்த பத்மாவதியை அவர்கள் தேற்றி அவளையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு ஊர் திரும்பினர். அங்கே அவள் ராஜகுமாரனுடன் சந்தோஷமாக காலம் கழித்தாள். ஆயினும், தந்தச்சிற்பியோ தன் மகளைக் காட்டு மிருகங்கள் கொன்று தின்று விட்டன என்று நினைத்து மனம் உடைந்து சிறிது காலத்தில் இறந்து போனான். கணவன் இறந்த துக்கத்தால் அவன் மனைவியும் கணவனைப் பின் தொடர்ந்தாள்.
இவ்விதம் கதையைக் கூறி முடித்த வேதாளம் மன்னனைப் பார்த்து “இந்தக் கதையில் எனக்கு ஒரு சந்தேகம். அதைத் தீர்த்து வைக்க வேண்டும். தந்தச்சிற்பியும், அவன் மனைவியும் இறந்த தோஷம், ராஜகுமாரன், மந்திரிகுமாரன், பத்மாவதி இம்மூவரில் யாரைச் சாரும்? அறிவாளிகளுக்குள் சிறந்தவனான நீ எனக்கு இதை எடுத்துக் கூறவேண்டும். அரசே! தெரிந்து கொண்டும் உண்மையை நீ எனக்கு எடுத்துரைக்காவிட்டால் உன் தலை நூறு சுக்கலாக உடைந்து போய்விடும்” என்றது.
வேதாளம் இவ்விதம் கேட்டதும், அரசனுக்கு உண்மை விளங்கிவிட்டது. ஆகவே, அவன் சிறிதும் பயப்படாமல், “மந்திர வித்தையில் வல்ல வேதாளமே! இதில் என்ன சிக்கல் இருக்கிறது? நீ குறிப்பிட்ட மூவரையும் அந்தப் பாபம் சாராது. அந்தப் பழி முழுவதும் கர்ணோத்பல அரசனையே சாரும்” என்றான்.
“எப்படி? அரசன் என்ன செய்தான்? அந்த மூவரால் தானே தந்த சிற்பியின் உயிர் மாய்ந்தது? அன்னங்கள் அரிசியைச் சாப்பிட்டால் அந்தக் குற்றம் காகத்தைச் சாருமா?” என்று கேட்டது வேதாளம்.
“உண்மையில் மூவர் மீதும் பழியில்லை. மந்திரிகுமாரன் தன் எஜமானன் நன்மையை உத்தேசித்தே நடந்து கொண்டான். ராஜகுமாரனும், பத்மாவதியும் காமன் கணையால் தாக்குண்டு. அதனால் பாதிக்கப்பட்டவர்களாய் தாங்கள் செய்வதென்ன வென்பதை அறியாமல் நடந்து கொண்டார்கள். தங்கள் எண்ணம் ஈடேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவர்கள் நடந்து கொண்டனர். ஆனால் கர்ணோத்பல அரசனோ ராஜ தர்மத்தைச் சரியாக உணராமல், வழக்கைத் தீர விசாரித்து உண்மையறியாமல், அரசனுக்குரிய அறிவு இல்லாமல், தவறாக முடிவு கட்டித் தீர்ப்புக் கூறியதாலேயே அவ்விருவரும் உயிர் இழக்க நேர்ந்தது. அந்தப்பழி அவனையே சாரும்” என்று விளக்கிக் கூறினான் விக்கிரமாதித்த மன்னன்.
இவ்விதம் அரசன் தன் மௌனத்தைக் கலைத்து, புதிருக்குச் சரியான விடை கொடுத்ததைக் கேட்டு அவன் தோளில் இருந்த வேதாளம், மன்னன் பொறுமையைச் சோதிக்க எண்ணி, உடனே கட்டவிழ்த்துக்கொண்டு கிளம்பிப் பழையபடி முருங்கை மரத்தில் சென்று ஏறிக்கொண்டது. மன்னனும் விடா முயற்சியுடன் வேதாளத்தை மறுபடியும் பிடித்துக்கொண்டுவர முருங்கை மரத்தை அடைந்தான்.
(இந்தக் கதை தமிழ் பாடத்தில் சில சிறு மாறுதல்களுடன் காணப்படுகிறது. பத்மாவதி தாமரைப் பூவொன்றைக் கொய்து கண்ணில் ஒற்றி ஜாடை காட்டியதின் மூலம் அவளுடைய ஊர் கண்ணாபுரம் எனவும், தாமரைப் பூவைப் பல்லினால் கடித்துக் காட்டியதின் மூலம் அவள் பெயர் பத்மாவதி எனவும், பூவைக் காலில் போட்டுக் காண்பித்ததின் மூலம் அவள் தந்தை பெயர் காளியங்கராயன் எனவும், பூவை நெஞ்சோடு வைத்து அணைத்துக் காட்டியதின் மூலம் தன்னருகில் வந்தால் அணைப்பைக் காணலாம் எனவும், பூவை சிரசின் மீது வைத்துக் காட்டியதின் மூலம், “தலை போகிறகாரியம், ஜாக்கிரதை”யென்ற எச்சரிப்பு எனவும், மந்திரிகுமாரன் யூகித்துச் சொன்னதின் பிரகாரம் அவனும் ராஜகுமாரனும் கண்ணாபுரத்திற்குச் செல்கிறார்கள்; பிறகு கதையின் முடிவில், “பத்மாவதியின் பெற்றோர்கள் மரித்த பாவம் யாரைச் சேரும்?” என்று வேதாளம் கேட்ட கேள்விக்கு. “வரும் பொருளைத் தீர ஆலோசியாமல் கூறிய மந்திரிக்கே அந்தப் பாவம்!” என்று விக்கிரமாதித்தன் பதில் சொன்னதாகவும் தமிழ் பாடத்தில் காணப்படுகிறது. பதுமைகள் சொல்லும் விக்கிரமாதித்தனின் ஆதி சரித்திரத்தில் வேதாளம் முதலில் கூறியதாகச் சொல்லப்படும் கதை, தமிழ் பாடத்திலும் வடமொழி மூலத்திலும் காணப்படவில்லை. அதற்கு மாறாகவுள்ள கதை பின்வருமாறு:)
– தொடரும்…
– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.