பூ கிடைக்குமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2025
பார்வையிட்டோர்: 291 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உஷா மாணிக்கம் தம்பதியினருக்கு மன உளைச்சல் அதிகமானது. ‘பூ கிடைக்குமோ கிடைக்காதோ?’ ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.

மூன்று நாட்களாகப் பிடித்த மழை இன்னும் விடவேயில்லை. பூ கிடைக்காவிட்டால் என்ன செய்வது? -உஷா கலங்கினாள்.

நெல்லையிலிருந்து புறப்படும் இரவு ஒன்பது மணி பேருந்தில் ஏறிப் பயணிக்கிறார்கள். மறுநாள் காலை ஐந்து மணிக்குத்தான் பஸ் பொள்ளாச்சி போய்ச்சேரும். எனவே அங்கு இறங்கியவுடன் புதிய பூவாக வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணினார்கள்.

ஆனால் இடைவிடாத மழைத்தூரல், சிறுதுளி பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்தது. டிரைவருக்கு அடுத்த பக்கத்து சீட்டில் இருவரும் உட்கார்ந்திருந்தனர்.

வெள்ளத்தின் காரணமாகப் பழனியிலிருந்து பஸ் போக முடியாமல் கொஞ்ச நேரம் நின்றது. டிரைவரிடம் சொல்லிவிட்டு உஷா தம்பதியினர் பூமாலைக்கு அலைந்தனர்.

‘இந்த மழை நேரத்தில் பூ எப்படிக் கிடைக்கும்? – இதே பதில்தான் எங்கும் கிடைத்தது.

திருவள்ளுவர் பஸ் டிரைவருக்கு அவர்கள் மீது ஒரு கரிசனை பிறந்தது. ஆயினும் என்ன செய்ய முடியும்?…

தனியார் கம்பெனியில் பணி புரியும் தங்கள் மகன் சேகருக்கு முப்பத்து மூன்று வயதாகிறது. இன்னும் பெண் கிடைக்கவில்லை.

அரசு வேலை… என்ற மோகத்தில் மாப்பிள்ளை தேடுவதில் வெறி பிடித்துத் திரிகிறார்கள். மாப்பிள்ளைக்கா பெண் கிடைக்கவில்லை? என்று சிலர் வியந்து கேட்கிறார்கள். ஆனால் அது உண்மை.

பணிபாதுகாப்பு இல்லாத சிறு நிறுவன வேலையும், தலையில் உள்ள சிறுவழுக்கையும் சேர்ந்து சேகருக்குப் பெண் கிடைக்காமல் செய்தன.

ரோடு முழுவதும் வெள்ளம் ஓடியது. பேருந்து மெதுவாக ஓடி உடுமலைப்பேட்டை வந்து சேர்ந்தது. மாணிக்கம் தம்பதியினர் அங்கும் பூவுக்கு அலைந்தார்கள். பூ கிடைக்கவில்லை.

ஒன்பது மணிக்குள் சென்று பெண்ணுக்குப் பூ வைத்து, திருமண நாளை உறுதி செய்து வரவேண்டும் என்பது தீர்மானம். பெண் வீட்டார் காலம், குலம், சாஸ்திரம், சம்பிரதாயங்களில் அழுத்தமான நம்பிக்கை யுடையவர்கள். அபூர்வமாகக் கிடைத்த ‘இந்தப் பெண்ணையாவது நழுவ விடக் கூடாதே’ என்ற கவலை அதிகமாக எழுந்தது.

இப்போதே மணி பத்தாயிற்று. பொள்ளாச்சி வழியில் மழையினால் பாதிப்பு ஏற்பட்டதால் பஸ் பல்லாடம் வழியாகத் திருப்பி விடப்பட்டது. எங்கும் பூ கிடைக்கவில்லை.

மாணிக்கம் தம்பதியினர் அலைமோதினர். பூவும் கிடைக்கவில்லை; நேரமும் பிந்திவிட்டது; இடமும் புதிது.

கோவை சிறுவாணி அணைக்கு ஆபத்து; பொள்ளாச்சி ஆளியாறு நீர்மட்டம் உயர்ந்து விட்டது; வால்பாறை ரோட்டில் நிலச்சரிவு, நிறைய உயிர்ச்சேதம் பேருந்து முழுவதும் இதே பேச்சுகள்தான்.

பகல் பன்னிரெண்டு மணிக்குப் பேருந்து பொள்ளச்சி வந்து சேர்ந்தது. மாணிக்கம் தம்பதியினர் மூச்சுத் திணறினர்.

டிரைவர் கணபதி, மாணிக்கத்தைக் கூப்பிட்டு ஒரு பார்சலை கையில் கொடுத்துப் பேசினார்:

‘ஐயா, இது திருநெல்வேலியில் வாங்கிய குண்டு மல்லிகைப்பூ, குளிர் நேரமாகையால் பூ வாடாமல் புதிதாக இருக்கிறது. பஸ்ஸில் தொங்கவிட் பழைய பூ என்று சாஸ்திரம், கீஸ்திரம் பார்த்துக் காரியத்தைக் கெடுத்து விடாதீங்க, நல்லபடியா முடித்து வாங்க…

மாணிக்கத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. ‘சாமி படத்திற்கு நிறைய பூ வாங்கிப் போட்டு பஸ் ஓட்டுவதில் நம்ம டிரைவருக்கு ரொம்பப்பிரியம்’ என்றார் கண்டக்டர்.

மாணிக்கம் தம்பதியினர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

டிரைவர் செய்தது சிறிய காரியம் தான். ஆனால் அது எத்தனை பெரிய மகிழ்ச்சிக்கு ஆரம்பமாயிருந்தது.

– சுலேசியச் செய்திமலர், ஏப்ரல் 2002.

– ஆர்‌.எஸ்‌.ஜேக்கப்‌ சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *