கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 30, 2025
பார்வையிட்டோர்: 1,926 
 
 

குண்டு மழை பொழிந்துக்கொண்டிருந்தது, நாங்கள் அந்த இடத்தில் தான் ஒளிந்திருந்தோம்.

இவர்களுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, வாழ்க்கையில் ஏற்பட்ட புயலில் திசை மாறிய என்னை அவரின் கைதான் தூக்கியது.

அந்தக் கைதான் “உனக்கு உறுதுணையாக இருப்பேன்” என்ற நம்பிக்கையும் தந்தது. அதிலிருந்தே நான் எப்போதும் அவரை ‘அப்பா’ என்றுதான் அழைப்பேன்.

தங்க இடம் கொடுத்து, உண்ண உணவு கொடுத்து என்னை அவரது மகனை பார்ப்பது போன்று பார்த்துக் கொண்டார்.

அவர் மட்டுமல்ல அவரது குழந்தைகளும் என்னிடம் அன்போடுதான் பழகி வந்தனர். அவருக்கு பிரவீதா, பிரதீபா என்ற இரட்டைக்குழந்தைகள் அவர்களைப் பொறுத்த வரையில் நான்தான் அவர்களுக்கு அண்ணன்.

இப்படி வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க்கொண்டிருந்தது அந்த போர் வருகிறவரை.

எதற்காக போர் புரிகிறார்கள்? என்று மக்களுக்கும், எதற்கு போரிடுகிறோம்? என்று போர் புரிபவர்களுக்குமே தெரியாது தான்.

ஆனால் இதில் சிக்குண்டது என்னவோ அப்பாவி மக்களும்,சிறுவர் சிறுமியரும் தான்.

நாங்கள் பயத்துடன் அண்டியிருந்த அந்த இடத்திற்கு ஒரு கர்ப்பிணிப் பெண் தட்டுத்தடுமாறி வந்து சேர்ந்தாள், வந்தவள் நேராக அப்பாவிடம் சென்று

“சார்! ஹெல்ப் பண்ணுங்க சார், ப்ளீஸ் சார் ஹெல்ப் பண்ணுங்க சார் அங்க என் மகள் உயிருக்கு போராடிக்கிட்டிருக்கா சார், நீங்கதான் எப்படியாவது என் மகளைக் காப்பாத்தனும் சார் கொஞ்சம் வாங்க சார்”

என்று அப்பாவை அழைத்தாள், எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை யார் இந்தப் பெண்?என்ன சொல்கிறாள்? என்று, மகளுக்கு அடிப்பட்டுவிட்டதென்று சொன்னதால் ஏதோ பிரச்சினையில் மாட்டியிருப்பதாக உணர்ந்து எனது அப்பாவும் அவளுக்கு உதவி செய்வதற்காக அவள் கூடச் சென்றார். செல்வதற்கு முன் என்னிடம்,

“நான் போய்ட்டு சீக்கிரமா வந்திட்றேன், பாவம் புள்ளத்தாச்சிப் பொண்ணு நான் போய் பாத்துட்டு வந்திட்ரேன், அதுவரைக்கும் நீதான் இவங்களை பத்திரமா பாத்துக்கனும் சரியா?”

என்று சொல்லிவிட்டு அவளுடன் கிளம்பினார். அவர் கிளம்பிய நொடியிலிருந்து எனக்கு பயமாக இருந்தது, திடீர்னு யாராவது நுழைந்தால் என்ன செய்வது என்று?

பூச்சி நகருகின்ற சத்தம் கூட ஆள் வருவது போன்று கேட்டது, அரைமணி நேரமாகியும் அப்பா காணவில்லை. அரைமணி நேரம் ஒருமணி நேரமானது. அப்போதும் காணவில்லை, பேசாமல் நாம் வெளியே சென்று பார்க்கலாம் என்றால் இந்த பிஞ்சுக்குழந்தைகளை விட்டு எப்படிச் செல்வது?.

ஒருமணிநேரம் மூன்று மணி நேரமாகியது அப்பா வரவில்லை?

ஒருவேளை அவருக்கு…? சீச்சி அப்படி நடக்காது அப்படி நடக்கக்கூடாது என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

அந்த இரண்டு பிஞ்சுகளும் “அப்பா எப்போது வருவார்?அப்பா எப்போது வருவார்?” என்று கேட்டுக்கொண்டே என் மடியில் படுத்து உறங்கிவிட்டன.

இப்போது துப்பாக்கிச் சத்தம் குறைந்திருந்தது, போரில் கேட்ட ஓலங்கள், ஆர்ப்பாட்டங்கள் காணாமல் போயிருந்தன.

அப்போது நாங்கள் தஞ்சமடைந்திருந்த அந்த இடத்திற்கு ஏதோ ஒரு உருவம் உள்நுழைந்தது, நான் உடனே ஓடிச்சென்று ஓரமாக கிடந்த கம்பி போன்ற ஒரு பொருளை எடுத்துக்கொண்டு சுவரோடு சுவராக ஒன்றிக்கொண்டேன், அவ்விரு பிஞ்சுகளும் என்னோடு சேர்ந்து ஒட்டிக்கொண்டன.

அவ்வுருவம் மெதுவாக உள்நுழைந்தது கையில் ஏதோ ஒரு பொருளை வைத்திருந்தது, துப்பாக்கியாக இருக்க வேண்டும்.

அது மெதுவாக உள்நுழைந்தது நானும் தயாராக இருந்தேன் அதனை அடிப்பதற்காக…


இப்போது நாங்கள் அந்த இடத்திலிருந்து வெளியேறினோம் கூடவே அவனும்.

நல்லவேளையாக நான் அவனை ஒன்றும் செய்யவில்லை, அவன் ஒரு இராணுவ வீரனாம், அவன்தான் போர் முடிவுக்கு வந்துவிட்டதை எங்களிடம் தெரிவித்தான்.

அவ்விடத்தில் யாரோ இருப்பது போன்று தோன்றியதால் தான் நான் இங்கு வந்தேன் என்றும் கூறினான்.

நாங்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறியதும் “பார்த்து பத்திரமாக செல்லுங்கள்” என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

அவன் கூறியதுப்போல் போர் முடிவடைந்திருந்தது ஆனால் அதனுடைய தாக்கம்….

அப்பா வேறு காணவில்லை? எங்கே இருக்கிறார்? என்ன ஆனார்? ஏன் இன்னும் திரும்பவில்லை? என்ற கேள்வி என்னுடைய கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் அழித்துக்கொண்டிருந்தன.

இந்த பிஞ்சுகளும் தந்தையைக் காணவில்லை என்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன. அவர்களின் அழுகையை நான் எப்படி நிறுத்துவது?

இப்படி பல எண்ணங்கள் மனதில் வட்டமடித்துக்கொண்டிருந்தன, அப்போது அருகினில் மக்கள் பலர் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர்.

நானும் போனேன், போனேன் என்று சொல்வதை விட அவர்களுடன் நானும் ஓடினேன் என்று தான் சொல்ல வேண்டும்.

ஓடியவர்கள் ஒரு இடத்தில் நின்றார்கள், அடுத்த நொடி அந்த மரண ஓலம் கேட்டது, என்ன? என்று பார்த்தால் அங்கு மனிதர்களின் பிணம் மலை போல் குவிக்கப்பட்டிருந்தது.

பெண்கள்,முதியவர்கள், சிறுவர், சிறுமியர்என எந்தவொரு பாரபட்சமுமின்றி கொல்லப்பட்டிருந்தார்கள்.

அதில் என் நண்பன் ரஹ்மான் கண்கள் வெளியே வந்து…ஐயோ!

வேகமாக அந்த பிஞ்சுகளை இழுத்துக்கொண்டு கூட்டத்திலிருந்து வெளியே வந்தேன்.

இவ்வளவு பேர் இறந்திருப்பதை பார்த்ததும் எனக்கு தெரிந்துவிட்டது எனது அப்பா வரப்போவதில்லை என்று, ஆனாலும் அவர் வருவார் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன், அப்போது சற்று தூரத்தில் ஒரு கூட்டம் ஒன்று அழுதுக்கொண்டே ஓடிவந்துக்கொண்டிருந்தது, அவர்களின் இறந்துப்போன சொந்தங்களைப் பார்ப்பதற்காக…

அப்படி ஓடிவருகையில் அவர்களின் கால்கள் பட்டு ஏதோ ஒன்று உருண்டு ஓரமாக ஒரு இடத்தில் சென்று நின்றது..

நன்றாக உற்றுநோக்கி பார்த்த பிறகுதான் தெரிந்தது, அது ஒரு மனித தலை என்று..

முகம் சிதைக்கப்பட்டு, வாய் கிழிக்கப்பட்டிருந்தது,நானும் அருகில் சென்றுப் பார்த்தேன், நானும் போகும் போது ‘அது எனது அப்பாவாக இருக்கக்கூடாது,அப்பாவாக இருக்கக்கூடாது’ என்று வேண்டிக் கொண்டே தான் சென்றேன், ஆனால் சென்ற பிறகுதான் தெரிந்தது,

அது…அது… எனது…எனது அப்பாதான் என்று, எப்போதும் சிரிப்பும், புன்னகையுமாக இருந்த அவரின் உதடு கிழிந்து தொங்கிக்…தொங்கிக் கொண்டிருந்தது…

இது உண்மை என்று தெரிந்தும் என்னால் நம்ப முடியவில்லை…எப்படி நம்ப முடியும்?அவ்வளவு இக்கட்டான சூழலிலும் உதவி செய்யச் சென்றவரை இப்படித்தான் பார்க்க வேண்டுமா? அவர் அந்தச் சூழலில் உதவி செய்யச் சென்றதற்காகவே அவரை கடவுள் உயிரோடவாவது விட்டிருக்கலாமே? ஐயோ கடவுளே! ஏன் என்னை இப்படி சித்திரவதை செய்கிறாய், நான் உனக்கு என்ன பாவம் செய்தேன்? நான் பிறந்தது தான் உனக்கு செய்த பாவமா?

என்று கதறிக்கொண்டிருந்தேன், நான் எதற்கு அழுகிறேனென்று தெரியாமலேயே அந்த இரு குழந்தைகளும் சேர்ந்து அழுதன.

‘அப்பா’ என்று நான் கதறிய ஓலமும் அந்த மரண ஓலத்தோடு கலந்து, ஒன்றும் இல்லாமல் போனது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *