கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 28, 2025
பார்வையிட்டோர்: 187 
 
 

(1943ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7

7. மூன்று தந்திகள் 

கருணாவுக்கும் மனோகரனுக்கும் முன்னால் சகாராமனை அதிகமாக ஒன்றும் கேட்க முடியவில்லை. துரதிருஷ்டக்காரி யான அநுவின் கதி அப்புறம் என்ன ஆயிற்றோ என்று என் மனம் கலங்கிக்கொண்டே இருந்தது. 

இலையில் உட்கார்ந்ததும் வெகு நேரம் வரையில், முதலில் போட்ட சாதத்தையே என்னால் சாப்பிட முடியவில்லை. கருணா திடீரென்று என் பக்கமாகத் திரும்பி, “இப்போதே இதே நிமிஷத்தில் நான் தந்தியடிக்கப் போகிறேன்!” என்றாள். 

“யாருக்கு?” 

“அருணாவுக்கு!” 

பரிகாசமும் டென்னிஸைப் போன்ற விளையாட்டுத்தான். 

நான் கருணாவைப் பார்த்து, “தந்தியில் நீ கொடுக்கப் போகும் செய்தியை முதலில் சொல்லேன், கேட்கலாம்!” என்றேன். 

“உடனே புறப்படு; நோயாளி அபாய நிலையில்” என்றாள் கருணா. 

நான் மனத்துக்குள்ளேயே சிரித்துக்கொண்டேன். ‘நீ வந்தது முதல் நோயாளிக்கு நர்ஸ் கிடைத்தாற்போல இருக்கிறது’ என்ற பதில் என் உதட்டைத் தொட்டது. ஆனால், யாரை வெளியே விட வேண்டும், யாரை உள்ளே அடைத்து வைக்க வேண்டும் என்ற விஷயம் சிறைக் காவலாளிகளுக்குக் கூட உதடுகளைப் போல அவ்வளவு தெரியாது. 

சாப்பிட்டு எழுந்ததும், ஒரு வழக்கைச் சாக்கிட்டுக் கொண்டு சகாராமனுடன் வெளியே புறப்பட்டேன். எங்காவது தனிமையில் போய் அவனுடைய முழு வரலாற்றையும் கேட்க வேண்டியிருந்தது. சுமார் முக்கால் மைல் நடந்து நாங்கள் கடற்கரையோரம் வந்து, ஒரு சிறு மணற்குன்றின் மீது உட்கார்ந்தோம். உட்கார்ந்த போது, என் சட்டைப் பையில் இருந்த பாட்டரி விளக்கை எடுத்து நாலுபுறமும் பார்த்தேன். அந்த வெளிச்சத்தில் சின்னஞ்சிறு முந்திரிச் செடிகளும், அவற்றின் பின்னால் சிறு தென்னங்கன்றுகளின் வரிசையும், அதற்கும் பின்னால் கமுக மரங்களும் மின்னின. ‘இவ்விதமே ஏதாவது ஓர் ஒளியை வீசி மனிதன் தன் மனத்தை உள்ளிருந்து பார்க்க முடியுமானால், அப்போது பிரபாகரனும் அநுவும் கண்ணீர் வடிக்க வேண்டிய சந்தர்ப்பமே நேர்ந்திராது’ என்று நினைக்கலானேன். 

சகாராமன் என்னிடமிருந்து சிறிது விலகி உட்கார்ந்து தொண்டையைக் கனைத்துச் சரிப்படுத்திக் கொண்டான்; பிறகு கோல்ஹாபூர் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். வெறுமே பொழுதுபோக்குக்காக மணலில் அளைந்து கொண்டிருந்த என் கைகளுக்கு அந்த மணல் வாழைத் தண்டு போலச் சில்லென்று பட்டது. அவனுடைய பேச்சைக் கேட்டு என் மனமும் உறைந்து போய்க் கொண்டிருந்தது. 

நான் புறப்பட்டு வந்ததும், சகாராமன் நாள்தோறும் இரவில் வேசிகளின் வீடுகளாகப் பார்த்துத் தேடிக்கொண்டு வந்தான். கோல்ஹாபூருக்குப் போன்போது அவன் கையில் இருநூறு ரூபாய் எடுத்துக் கொண்டு போயிருந்தான். நாளுக்கு, நாள் அவன் பணம் கரைந்து வந்ததே தவிர, அவனுக்குத் தேவையாக இருந்த கோகுலா எங்கும் தென்படவில்லை; அவளைப் பற்றிய தகவலும் கிடைக்கவில்லை. ‘வெறும் வெற்றிலைபாக்கு வாங்கிக் கொள்வதோடு சந்தோஷப்படும் ஒரு முட்டாள் ஆசாமி’ என்பதைத் தவிர வேறு நோக்கத்தோடு அவனை யாருமே கவனிக்கவில்லை. ஒவ்வொரு வேசிப் பெண்ணைச் சந்திக்குந்தோறும், அவள் வாயைக் கிண்டி, “கொங்கணத்துப் பெண்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா?” என்ற ஒரே கேள்வியைத்தான் அவன் கேட்டான். 

ஏழெட்டு நாள் வரையில் பல கணிகைகளிடமும் இதே கேள்வியைக், கேட்டுக் கேட்டு அவனுக்குச் சலித்துப் போயிற்று. இருட்டில் அடிபட்டுக்கொண்டே போகிறவனுக்கு எவ்விதத்திலும் நேர்வழி கிடைக்காமற் போனால் எப்படியோ அப்படி ஆயிற்று அவன் நிலை. எட்டாவது நாள் கடைசி முயற்சியாக அவன் ஒரு வேசியின் வீட்டுக்குள் புகுந்தான். வெற்றிலை சுவைத்துக் கொண்டிருக்கையில், உள்ளிருந்து எவளையோ கொஞ்சம் சுண்ணாம்பு கொண்டு வரச் சொல்லி வீட்டுத் தலைவி கத்தினாள். சுண்ணாம்பு கொணர்ந்த பெண்மணியை அவன் தற்செயலாகப் பார்த்தான்: கோகுலாதான்! 

மறுநாள் மாலையில் கையிலிருந்த கனமான தங்கக் காப்பை அவன் பணமாக மாற்றினான்; பிறகு- 

பணத்தினால் உலகத்தில் எந்த வேலையைத்தான் சாதிக்க முடியாது? அதனுடன், “கோகுலா என் மனைவி. அவளை இந்த நிமிஷத்தில் என்னுடன் திருப்பி அனுப்பாவிட்டால் நான் போலீசில் பிராது கொடுப்பேன்” என்று அந்த வேசியை மிரட்டினான். 

நான் பரபரப்போடு, “கோகுலாவுடன் இருந்த அந்த மற்றொரு பெண் எங்கே போனாள்?” என்று கேட்டேன். 

சகாராமன் அதைப்பற்றிப் பேசலானான். கோகுலா தான் ஏமாந்து போனதை அறிந்து அதற்குத் தக்கபடி நடந்து கொண்டாள். ஆனால் அந்த மற்றொரு பெண் கோல்ஹாபூருக்குச் சென்றதும், வாலில் மிதிபட்ட சாரையைப் போல் சீறினாள். “இம்மாதிரியான பெண்ணை வைத்துக்கொண்டு தொழிலை எவ்வாறு நடத்துவது?” என்று அந்த வேசி ஏஜென்டினிடம் தகராறு செய்தாள். அவன் அவளை அழைத்துக் கொண்டு பம்பாய்க்குப் போய் விட்டான். 

இனி, பம்பாயில் வேசித் தெருக்களில் அநுவைத் தேடுவதா? முடிகிற காரியமா அது! கடலில் விழுந்த ஊசி மீண்டும் யாருக்காவது கிடைக்குமா? 

அநுவைத் தேடிக் கண்டுபிடிப்பது அடியோடு அசாத்தியம் என்று தீர்மானித்தேன். அவள் கிடைக்கிறவளாக இருந்தால் இந்தக் கோகுலாவுடனேயே இருந்திருக்க மாட்டாளா? பாவம், துரதிருஷ்டம் பிடித்த பெண்! 

துன்பத்தைத் தாண்டிய பின்பு அதை ரசமாக வர்ணிக்க மனிதனுக்கு ஆசையாக இருக்கும். சகாராமனும் அந்த நிலையில் தான் இருந்தான். அநுவைக் கண்டுபிடிக்க வழியே இல்லை என்று தெரிந்ததும், நான் பேச்சற்று நின்றேன். ஆனால் அவன் ஓயாமல் பேசிக் கொண்டே போனான். 

இளநங்கைகளைக் கடைத்தெருவில் விற்று அந்தப் பணத்தினால் சுகமாக வாழும் அந்தச் சண்டாளன் சென்ற ஏழெட்டு வருஷகாலமாக இந்தப் பிராந்தியத்தில் தன் தொழிலை ஒழுங்காக நடத்தி வந்திருக்கிறான். கிராமங்களில் போய் அழகிய பெண்கள் மீது வலை வீசுவதும், அவர்களுடைய சாதுத்தனத்தைப் பயன்படுத்திக் கொள்வதும், ஆசை காட்டி ஏமாற்றிக் கடைசியில் அவர்களை விற்பதுமே அவன் தொழில். 

வாழ்க்கையில் வெறுப்பெய்திய கோகுலா இப்படித்தான் அவன் கையில் சிக்கிக்கொண்டாள். ஆற்றங்கரையில் அவன் அவளைப் பார்த்தான்; கோல்ஹாபூருக்கு அழைத்துச் சென்று அவளுக்கு நல்ல வேலை வாங்கிக் கொடுப்பதாக ஆசை காட்டி னான். கிராமத்தில் இருந்துகொண்டு சகாராமனுடன் இல்லறம் நடத்துவது தன்னால் முடியாது என்று கருதி அவளும் அதற்கு இசைந்தாள். ஆனால் நெருப்பிலிருந்து தப்பி மீண்டும் பெரிய தீக்கிணற்றில் தான் விழுந்துவிட்டதை அவள் விரைவில் அறிந்து கொண்டாள். அவளுடன் கோல்ஹாபூருக்கு அழைத்துச் சென்ற அந்த மற்றொரு பெண்? அவளும் இவ் விதமே பம்பாயிலிருந்து ஏமாற்றி அழைத்து வரப்பட்டவள் தான். அந்தச் சண்டாளனுக்கு உதவி செய்ய ஒரு துஷ்டை இருந்தாள். அவள் பம்பாயில் இருந்து கொண்டே பல வேஷங்களில் திரிவாள்; அநாதைப் பெண்களிடம் தாயைப் போல அன்பு காட்டி அவர்களைப் பம்பாய்க்கு வெளியே இழுத்து வந்து, பிறகு- 

இதைக் கேட்கும்போது, ‘மனித வர்க்கம் இன்னமும் காட்டுமிராண்டி நிலையில்தான் இருக்கிறது. நரமாமிசம் தின்னும் வழக்கம் மாறிப்போயிற்று என்றாலும், அது இன்னும் வேரோடு ஒழிந்தபாடில்லை’ என்ற எண்ணம் என்னுள் சுழன்றது. 

‘கணவனை விட்டு மற்றொரு காதலனோடு ஓடிப்போய், பின்பு அவனிடமும் வெறுப்புக் கொண்டு மீண்டும் ஓடிய கோகுலாவிடம் சகாராமனுக்கு இவ்வளவு அற்புதமான காதல் அமைவதற்குக் காரணம் என்ன?’ என்ற விஷயந்தான் அடிக்கடி எனக்கு வியப்பைத் தந்தது. 

மனத்தில் தோன்றிய இந்தக் கேள்வியை அவனிடம் பட்டப்பகலில் கேட்க எனக்குத் தைரியம் இருந்திருக்குமோ என்னவோ, தெரியாது. ஆனால் இருட்டில் – 

இருட்டில் மனிதனுக்கு வானத்திலுள்ள இரகசியங்கள் மட்டுமே புலப்படுகின்றன என்பது இல்லை; மாந்தரின் மனத்திலுள்ள இரகசியங்கள்கூட அந்தச் சமயத்தில்தான் அவனுக்குப் புலப்படுகின்றன. 

நான் சகாராமனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டேன். அவன் வெட்கப்படவில்லை, தயங்கவில்லை, மயங்கவில்லை, திடுக்கிட்டுப் போகவுமில்லை. எவ்விதமான தயக்கமுமின்றி அவன் தன் காதற் கதையை எனக்குச் சொன்னான். 

சமீபத்தில்தான் அவனுக்கு முப்பத்தைந்தாவது வயது நிரம்பியது. அதற்குள், ஒருத்தியின் பின் ஒருத்தியாக அவனுடைய இரண்டு மனைவியர் இறந்து போய் விட்டதனால் அவனுக்கு வாழ்க்கையில் சோர்வு தட்டியது. ஊரில் மற்றவர்களைப் பார்க்க, அவனுக்கு நிலத்தில் நல்ல வருமானம் என்றே சொல்ல வேண்டும். குடும்பத்தில் வேறு யாரும் இல்லாததனால், நாலு காசு சேர்த்து வைத்திருந்தான். ஆயினும் அவன் அடிக்கடி தன் விதியை நொந்துகொள்வான். அவனுக்குப் பணச் சுகத்தைத் தந்த தெய்வம் இல்லற இன்பத்தை மட்டும் கொடுக்கவில்லை. 

முதல் மனைவி இறந்ததும், பல நாள்வரை அவன் கண்ணீர் வடியவேயில்லை. இரண்டாம் கல்யாணமே கூடாது என்று அவன் நினைத்தான். ஆனால் பெண்ணைப் பெற்றவர்கள் ஓர் அழகிய பெண்ணை அவனுக்குக் கொடுக்க முன்வந்தார்கள். அந்தப் பெண்ணை அவனுக்குப் பிடித்தது. விவாகமானதும், தன் இழந்த இன்பம் மீண்டும் கிடைத்துவிட்டதாக அவனுக் குத் தோற்றியது. முதல் மனைவியை அவன் மறக்கவில்லை; ஆயினும் அவளைப் போலவே இரண்டாம் மனைவியிடமும் ஆசை வைத்தான். 

ஆனால், அவன் துரதிருஷ்டத்தை என்னவென்று சொல் வது! இரண்டாவது மனைவியும் அவனை விட்டு நீங்கினாள். மழை இல்லாமல், வயலிலுள்ள செழிப்பான பயிர் சாம்பிக் கருகுவதுபோல ஆயிற்று அவன் வாழ்க்கை. 

அவனுடைய உடல் நடமாடிக் கொண்டிருந்ததே தவிர, மனம் செய்கையற்றுக் கிடந்தது. இந்த நிலையில் அவனுடைய பக்கத்து வீட்டுக்காரன் எங்கிருந்தோ கோகுலாவை அழைத்து வந்தான். கணவன், நாத்தி, மாமி இவர்களுடைய கொடுங் கோன்மை பொறுக்காமல் அவள் அவனுடன் ஓடி வந்து விட்டாள். 

கோகுலாவும் அவள் காதலனும் சில காலம் சுகமாக இருந்தார்கள். ஆனால் அவனுடைய மிதமிஞ்சிய குடிவெறியும், பெண்பித்தும், எடுத்ததற்கெல்லாம் அடித்துப் பேசுகிற சுபாவமும் சேர்ந்து, முதற் சந்திப்பில் அவன் காட்டிய காதலை ஒரு நொடியில் மறைத்துவிட்டன. காதல் வெள்ளம் வடிந்து போயிற்று; சாலையில் இருந்த கூரிய கற்கள் மட்டும் அவள் காலில் குத்தின. 

இந்த நிலையில், ஒரு நாள் சகாராமனை ஏதோ ஒரு விஷப் பூச்சி தீண்டியது. அயல்வீட்டாரின் கடமை என்ற முறையில் கோகுலா அவனுக்குப் பணிவிடை செய்தாள். அவள் படும் துன்பங்களைக் கண்டு அவனுக்கும் அவளிடம் இரக்கம் பிறந்தது. முன் இரண்டு மனைவியரைப்போலவே அவளிடமும் அவனுக்குக் கவர்ச்சி உண்டாயிற்று. கோகுலா ஒரு ரத்தினமென்றே அவன் கருதினான். ஆனால் அவள் ஒரு ராட்சசன் கையில் சிக்கியிருந்தாள். சகாராமன் முதல்முதலில் என்னிடம் வந்தது அவளை எப்படி அடைவது என்று யோசித்து, என் ஆலோசனையைக் கேட்கத்தான். 

சகாராமன் பொழுது விடியும்வரை தன் வரலாற்றைச் சொல்லிக்கொண்டு இருந்திருப்பான். நான்தான் அங்கிருந்து எழுந்து, உடையிலிருந்த மணலைத் தட்டிக்கொண்டே, “வீட்டில் விருந்தினர்கள் என் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்” என்றேன். 

வீட்டுக்கு வரும்வரையில், ‘முதற் காதலின்போது மனிதன் தன் மனத்தை ஒரு கண்ணாடிப் பாத்திரமாகக் கருது கிறான். ஆகையால், துரதிருஷ்டவசமாக மனம் உடைந்து விட்டால் தன் வாழ்வே முடிந்துபோய்விட்டது என்று அவன் நினைக்கிறான். ஆனால் மனம் கண்ணாடிப் பாத்திரமல்ல; வெள்ளிப் பாத்திரம். தவறிப்போய்க் கீழே விழுந்தால், அது அதுங்குமே தவிர, உடைந்து போய்ச் சுக்கல் சுக்கலாகி விடாது’ என்ற விசித்திரக் கற்பனை மீட்டும் மீட்டும் தோன்றிய வண்ணமாக இருந்தது. 


இரவில் படுக்கையில் வெகு நேரம் புரண்டு கொண்டிருந்தேன். பக்கத்து அறையில் கருணாவும் மனோகரனும் காதோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். கீழே சகாராமனும் கோகுலாவும் பழைய நினைவுகளை வைத்துக் கொண்டு இப்படித் தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன். பழைய துன்ப நினைவுகளைப் பற்றிச் சொல்வதென்றாலே மனிதர்களுக்கு ஆனந்தம். 

என் கண்முன் மூன்று ஜோடிகள் நின்றன:

கருணாவும் மனோகரனும். 

அருணாவும் நானும். 

கோகுலாவும் சகாராமனும். 

இந்த மூன்று தம்பதிகளில் யார் அதிக சுகத்துடன் வாழ்கிறார்கள்? 

கேள்வி மிகவும் விந்தையாகத்தான் இருந்தது. விசித்திரக் கற்பனைகளின் பின்னால் ஓடுவதில் மனிதனுக்கு ஓர் ஆனந்தம். தரைமீது இரும்பு வளையத்தை ஓட்டுவதைவிட வானத்தில் பட்டத்தைப் பறக்க விடுவதில்தானே சிறுவர்களுக்கு அதிக ஆனந்தம் உண்டாகிறது? மனமும் அப்படித்தான். 

கட்டிலோரத்தில் வைத்திருந்த அருணாவின் படத்தைப் பார்க்கும்பொழுது, ‘அருணா என்னைச் சுகமாகவே வைத்திருக்கிறாள். ஆனால், மண்பானையில் ஓட்டை இல்லாவிட்டாலும், ஊறி ஊறி அதிலுள்ள தண்ணீர் சிறிதாயினும் குறைகிறதல்லவா? அதுபோலத்தான் என் காதலும் ஆகியிருக்கிறது. கருணா எனக்குக் கிடைத்திருந்தால்? அப்போது நான் அதிக இன்பமுள்ளவனாக இருந்திருப்பேன்’ என்று எனக்குத் தோன்றியது. 

பக்கத்து அறையில் கருணா மிகவும் உரக்கப் பேசிக் கொண்டிருந்தாள். மனோகரனிடம் அவள் கோபமாக இருக்கிறாள் என்பது அவள் குரலிலிருந்து தெரிந்தது. ‘மணமாகிக் கொஞ்ச காலத்துக்குள்ளேயே இவர்களுக்குள் சண்டை ஆரம்பித்து விட்டதே! கருணா என்னுடையவளாகியிருந்தால் இப்படிக் கோபித்துக் கொண்டிருக்க மாட்டாள். அவளுக்கும் மனோகரனுக்கும் நிகழ்ந்த இந்தக் கல்யாணத்தில் வசதி இருக்கிறது; ஆனால் காவியம் ஏது?’ என்று நினைத்தேன். உடனே எனக்குச் சகாராமன், கோகுலா இவர்களின் ஞாபகம் வந்தது. இவர்களுடைய காதலில் காவியம் இருக்கிறதென்று சொல்வோமென்றால்- 

சேசே! சகாராமனுடைய இந்த மூன்றாவது காதல், கோகுலாவின் வாழ்க்கையில் இடம்பெற்ற இந்த மூன்றாம் கணவன்! இப்படிப்பட்ட உளுத்துப்போன காதலில் காவியம் என்ன, மண்ணா இருக்கும்! 

என் ஒரு மனம் சகாராமனுடைய இந்த மட்கிப்போன காதலைக் கண்டு சிரித்தது. மற்றொரு மனம், ‘முதல் சூட்டோடு சுவையே போய்விடும் என்று கூறுவதற்கு, காதல் என்பது சாம்பார் அல்ல! சகாராமன் கோகுலாவைத் துன்பத்திலிருந்து விடுவிக்க எவ்வளவு அன்போடு பாடு பட்டான்! இது அவர்களின் முதற் காதலல்ல என்பது உண்மையே. அதனால் அதில் தீவிரம் குறைந்திருக்கிறது என்று யார் சொல்ல முடியும்? “புயலில் எந்தப் படகுகள் அருகில் வருகின்றனவோ, சாவின் வாசலில் எந்தப் படகுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதாரமாகின்றனவோ, அவை தாம் வாழ்நாள் முழுவதும் ஒன்றாகப் பிரயாணம் செய்யும்” என்ற கருணாவின் வாக்கியம் இந்தத் தம்பதிகள் விஷயத்தில் மிகவும் உண்மையாக இருக்கிறது’ என்று கம்பீரமாகப் பேசியது. 

நான் அருணாவின் படத்தைப் பார்த்தேன். அவள் முறுவல் பூத்து, ‘உங்கள் கருணா மிகவும் கெட்டிக்காரிதான். என் மனத்தில் உள்ளதையே அவள் சொல்லிக் காண்பித்திருக்கிறாளே!’ என்றாள். 

நான் தொட்டிலின் அருகில் சென்றேன். அதில் விறைப்பாக உட்கார்ந்து என்னைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அஜயனுடைய ‘ஸெலுலாய்ட்’ பொம்மையும் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தது. 


காலையில் தேநீர் அருந்தியதும் சகாராமனும் கோகிலாவும் புறப்பட்டுப் போய்விட்டார்கள். 

தேநீர் குடிக்கும்போதே, கருணாவுக்கும் மனோகரனுக்கு மிடையே ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்தேன். வீணையின் ஒரு தந்தியிலிருந்தே அது கெட்டுப் போயிருப்பதை அறிந்து கொள்ளலாமே? காதல் என்பது மிகவும் மெல்லிய தந்தி. 

முதல் நாள் நான் படித்த அந்தச் செய்தியின் மேல் விவரங்கள் வெளியாகியிருக்கும் என்ற ஆவலில் பத்திரிகையைப் புரட்டினேன். ரெயிலடியில் உயிரை விடத் தயாராகியிருக் கிறாள் அந்தப் பெண். அவளுடைய தமையன் என்று சொல்லிக் கொண்டு ஒருவன் முன் வருகிறான்; ஆனால் அவனைக் கண்டதும் அவள் கீச்சிடுகிறாள். உடனே மற்றொருவன் முன் வந்து, “இவள் என் மனைவி!” என்கிறான். 

‘வெகு வேடிக்கையாகத்தான் இருக்கிறது இந்த நிகழ்ச்சி நாம் டாணா அல்லது கல்யாண் கோர்ட்டில் வக்கீலாக இருந்திருக்க வேண்டும்’ என்று எண்ணினேன். 

ஆனால், இந்தச் செய்தியைப்பற்றி எதுவுமே அன்றைப் பத்திரிகையில் வரவில்லை. கையிலிருந்த பத்திரிகைத் தாள்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தேன். ஒரு நடிகையை நிருபர் பேட்டி கண்டு உரையாடிய விவரம் அச்சாகியிருந்தது. இந்த நடிகை தன் உதடுகளுக்கு என்ன வர்ணம் பூசிக்கொள்கிறாள் என்பதை அறிந்து கொள்வது சமூகத்துக்கு மிக முக்கியமானது என்று பத்திராதிபர்கள் கருதுகிறார்கள். ‘தற்கொலை செய்து கொள்ள முயன்ற அந்தப் பெண்ணின் சரித்திரத்தை வெளியிடுவது வாசகர்களின் முன்னால் துன்பத்தை அப்பட்டமாக நிறுத்துவதாகும். அதைவிடச் சினிமா நடிகைகளின் அலங்காரங்கள், பூனைகள், பணப்பை முதலியவற்றைப்பற்றி எழுதினால் வாசகர்களுக்கு நேர்த்தியான பொழுதுபோக்காக இருக்குமே!’ என்பது அவர்கள் எண்ணம். 

பத்திரிகைகளை மேஜைமேல் விட்டெறிந்து, ஒரு வழக்கைப் பற்றிய தகவல்களைப் படிப்பதற்காக நான் என் அறையை நோக்கிப் போனேன். அதற்குள் கருணா என்னைக் கூப்பிட்டாள். நான் நின்றதும் அவள், “இங்கே அநுவைத் தேடிக் கண்டு பிடிக்க முடியுமென்று தோன்றவில்லை. ஆகவே இன்றைப் பஸ்ஸிலேயே திரும்பிப் போய்விடலாம் என்கிறேன் நான்’ என்றாள். 

நான் பதில் சொல்லு முன்பே மனோகரன் அவளைப் பார்த்து, “நீ வேண்டுமானால் போ. ‘அநு இங்கே இல்லை’ என்று தேவதத்தர் சொன்னாலன்றி நான் இங்கிருந்து அசைய மாட்டேன்” என்றான். 

கருணா எரிச்சலோடு அங்கிருந்து நடந்தாள். 

பகலில் கோர்ட்டுக்குச் சென்றதும், ‘அநுவை இங்கே கண்டுபிடிக்க முடியும் என்ற தவறான நம்பிக்கையில் அவ்விருவரையும் நான் ஊசலாட வைத்தது சரியல்ல. முதல் நாளே உண்மையைச் சொல்லியிருந்தேனானால்-‘ என்று நினைக்கலானேன். 

மாலையில் நான் வீடு திரும்பியதுமே, மிகவும் வருத்தத்தோடு அநுவின் முழு வரலாற்றையும் மனோகரனிடமும் கருணாவிடமும் கூறினேன். ‘இனி அநுவைக் கண்டுபிடித்தாலும் அவள் பம்பாயில் எங்காவது ஒரு வேசியின் வீட்டில்தான் இருப்பாள்’ என்ற விஷயத்தைக் குறிப்பாக உணர்த்திய போது, என் மனத்தில் யாரோ ஒரு பெரிய கல்லை வைப்பது போல இருந்தது. எனக்கே இப்படி இருந்ததென்றால், நான் பேசி முடிந்ததும் கருணாவும் மனோகரனும் கற்சிலைகளைப் போல அசையாமல் உட்கார்ந்திருந்ததில் வியப்பு ஏது? 

யாரோ ஒருவருடைய விக்கல்கள் இரவில் என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டன. கருணா அழுவானேன் என்பது எனக்கு விளங்கவில்லை. 

நான் விழித்துக்கொண்டு பார்த்தேன். பக்கத்து அறையில் கருணா அழுதுகொண் டிருப்பதைக் கவனித்தேன். ‘பிறர் பேச்சை மறைந்து கேட்பதைவிடப் பெரிய பாவம் வேறில்லை’ என்பது தெரிந்திருந்தும், என் கால்கள் இடையில் இருந்த கதவுப் பக்கமாகத் திரும்பின. கருணா விக்கி விக்கிப் பேசியதனால், அவள் பேச்சு அரைகுறையாகவே என் காதில் விழுந்தது: 

“ரத்தமென்பது ரத்தந்தான்!-நான் யார் இதெல்லாம் பேச?-அப்படிப்பட்டவள் வீட்டை விட்டு ஓடுவானேன், சாணியைத் தின்பதற்கா?” 

பிறகு மனோகரன் ஏதோ சொன்னான். அதில் ஒரு சொல் கூட என் காதுக்கு எட்டவில்லை. உடனே கருணா கடுமை யான குரலில், “முடியாது, முடியாது; என்னால் முடியவே முடியாது; நடுத் தெருவில் வேசியாகப் போயிருந்தவளை என் வீட்டில்-” என்பதற்குள் பளீரென்று ஒரு சத்தம் கேட்டது. 

கருணா பின்னும் அதிகமாகத் தேம்பியழலானாள். 

எனக்கு மனோகரன்மேல் வந்த கோபம்! ‘இப்படிப்பட்ட மிருகமா இவன்?’ என்று நினைத்தேன். 

காலையில் எழுந்ததும், தான் பம்பாய்க்குப் போய் அநுவைத் தேடப் போவதாக மனோகரன் என்னிடம் சொன்னான். நான் பேச்சுவாக்கில், “தனியாகப் போகிறீர்களா, அல்லது-?” என்று கேட்டேன். 

“இவள் வந்தால் இருவரும் போவோம். இல்லாவிட்டால்-” 

“அவருக்குத் தங்கைதான் வேண்டும். மனைவி ஏதுக்கு?” என்று கருணா அவனைப் பார்க்காமலே பதிலுரைத்துவிட்டு உள்ளே சென்றாள். 

இரவு முழுவதும் அவள் உள்ளம் வெதும்பிக் கொண்டிருந்தது என்பதை அவள் முகம் தெளிவாக எடுத்துக் காட்டியது. அதற்கேற்ற பலன்தான் கடைசியில் உண்டாயிற்று. மனோகரன் பம்பாய்க்குப் போய்விட்டான். புறப்பட்டபோது, “நீ எப்போது ஊருக்குத் திரும்பப் போகிறாய்?” என்று கருணாவைக் கேட்டான். 

“எனக்கு எப்போது விருப்பமோ அப்பொழுது!” என்றாள் அவள். 

‘மனோகரனுக்குக் கருணாவிடம் உண்மையான காதல் இருந்தால், அவ்வளவு கோபத்தில்கூட அவள் மேல் கை வைத்திருக்க மாட்டான்; தவறிப்போய் அடித்தாலும், உடனே கண்ணீரினால் தன் பிழையை அழித்திருப்பான். காதல் என்பது அகங்காரமல்ல; எஜமான உரிமையல்ல. காதல் என்றால் பக்தி. பக்தன் தவறே செய்தாலும், தெய்வத்தின் முன் பணிந்து அந்தப் பிழையை ஒப்புக் கொள்வது தனக்கு அகௌரவமென்று ஏன் நினைக்க வேண்டும்?’ என்று நான் எண்ணினேன். 

ஆனால் மனோகரன் அளவு கடந்த மண்டைக் கிறுக்கோடு பம்பாய்க்குப் போய்விட்டான். தான் இப்படி நடந்துகொள் வதனால் தன்னிடமிருந்து கருணா விலகுவாள், கணவனுக்கும் மனைவிக்குமிடையே ஒரு கோட்டைச் சுவர் எழும்பும் என்பதைப்பற்றி அவன் துளியும் சிந்திக்கவில்லை. நான் மட்டும் அன்றெல்லாம் கருணாவின் மனநிலையையே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அவளை எப்படித் தேற்றுவது என்பது எனக்குத் தெரியவில்லை. 

மாலையில் நான் கோர்ட்டிலிருந்து திரும்பி வந்தபோது, கருணா தானாகவே தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். எனக்குத் திடீரென்று அருணாவின் நினைவு வந்தது. ‘ஏதாவது ஒன்றில் மனத்தைச் செலுத்தினால் தான் மனிதன் துன்பத்தை மறக்க முடிகிறது. கருணாவும் அதைத்தான் செய்கிறாள்’ என்று அப்புறம் தோன்றிற்று. 

தேநீர் பருகியானதும், ‘உலாவப் போகலாம்’ என்ற யோசனையைக் கருணாதான் சொன்னாள். இரண்டு நாளைக்கு முன் நானும் சகாராமனும் போய் உட்கார்ந்த மணற் குன்றின் மீதே நாங்கள் இருவரும் போய் அமர்ந்தோம். ஆனால் இந்தச் சமயத்தில் ஸகாராமன், கோகுலா இவர்களுடைய காதற்கதையின் ஞாபகம் எனக்கு ஒரு முறை கூட உண்டாகவேயில்லை. வலக் கைவிரலால் மணலில் கோணல் மாணலான கோடுகளை வரைந்து கொண்டு உட்கார்ந்திருந்த கருணாவைப் பார்த்தபோது, கல்லூரியில் நான் அவளைக் காதலித்தது தான் அடிக்கடி என் நினைவுக்கு வந்தது. 

மறுநாளும் நாங்கள் இவ்விதமே உலாவப் போனோம். அன்று மணற்குன்றில் உட்காராமல் கடற்கரையில் உட்காரத் தனக்கு ஆசையாக இருப்பதாகக் கருணா சொன்னாள். 

சிறு பெண்போல, அவள் மணலில் வலக்கை விரலால் எழுத்துக்களை வரைந்து கொண்டிருந்தாள். ஒரு சொல்லை எழுதி உடனே அதை அழித்து விடுவாள். வெகு நேரம் அவள் இப்படியே செய்து வந்தாள். முதலில் அவளுடைய இந்த விளையாட்டை நான் கவனிக்கவில்லை. பிறகுதான் அவள் என்ன எழுதுகிறாள் என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உதித்தது. நான் அருகில் குனிந்ததுமே அவள் சட் டென்று பின்னால் இருந்த சில எழுத்துக்களை அழித்துவிட்ட போதிலும், இரண்டு எழுத்துக்களை நான் பார்த்துவிட்டேன்! 

“தேவ-” 

கருணா என் பெயரைத்தான் எழுதினாளா? 

அவளை ஏதாவது பரிகாசம் செய்ய வேண்டுமென்று கருதி, “எங்கிருந்து உனக்குத் திடீரென்று தேவனுடைய ஞாபகம் வந்துவிட்டது?” என்றேன். 

“சம்சாரத்தில் வெறுப்புத் தோன்றினால், மனிதர்களுக்குத் தேவனுடைய ஞாபகம் வருகிறது!” என்றாள். 

மனோகரன் எவ்வளவு ஆழம் அவள் மனத்தைப் புண் படுத்தியிருக்கிறான் என்பதை இந்த ஒரு வாக்கியத்திலிருந்து தெரிந்து கொண்டேன். 

நாலைந்து நாட்கள் இவ்விதமே கழிந்தன. சாயங்காலம் உலாவப் போகும் எங்கள் திட்டம் ஒரு நாளாயினும் தவறிய தில்லை. ஒரு நாளாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில், ஏதாவது ஒரு சாக்கில், கருணா தன் மனப்புண்ணை வெளிப்படுத்தாமல் இருந்ததில்லை. மணல் வீட்டைக் கட்டிவிட்டு, அதைப் பார்த் துக்கொண்டே அவள் என்னிடம், “காதலும் இதைப் போன்றது தானே?” என்பாள். 

உடனே விசித்திரமாக நகைத்து, அதைக் கலைத்துவிடுவாள். 

மனத்துக்குள்ளேயே எரிந்து சாம்புகிறவனுக்கு இரவு சத்துரு. பகலில் எப்படியோ அழுந்திக் கிடந்த மனத்தின் உத்வேகம் இரவில் தனிமையில் வெளிக்கிளம்பும்; பிறகு கேட்க வேண்டுமா? பக்கத்து அறையில் அவளுடைய பெரு மூச்சும், குறுக்கும் நெடுக்குமாக அவள் நடப்பதும், கட்டிலின் ‘கர் கர்’ என்ற ஓசையும் இடைவிடாமல் என் காதில் விழும். ஆனால் அவளை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. அவளுக்கும் எனக்கும் நடுவே சுவர் ஒன்று மட்டும் நிற்கவில்லை; இரண்டு மனிதர்கள் நின்றனர். மனோகரனுடைய உருவமும், அருணாவின் வடிவமும் நின்றன. 

அமைதியை இழந்த அவளுடைய தவிப்பு என் தூக்கத் தைப் பறக்க அடித்து, என் மனத்தில் சிந்தனைப் புயல்களைக் கிளப்பியது. 

எனக்கு அடிக்கடி கல்லூரியில் இருந்த கருணாவின் நினைவு வரும்; இன்பகரமான அவளுடைய ஸ்பரிசம் நினைவுக்கு வரும்; அப்புறம்-

இரவுவேளையில் பூமியில் பூதங்களும் பிசாசுகளும் திரியும் என்பது பழங்காலத்துக் கொள்கை. மனத்தில் திருப்தியுறாமல் கிடக்கும் வேட்கை சம்பந்தமாக எவனோ ஒரு கவி அமைத்த உருவகமாகத்தான் அது இருக்க வேண்டும். 

மனோகரன் போய் எட்டு நாட்கள் ஆயின. அன்று நள்ளிரவில் நான் திடுக்கிட்டு விழித்துக்கொண்டேன். “தேவதத்தரே, தேவதத்தரே!” என்று யாரோ கூப்பிட் டார்கள். கண்ணைத் திறந்ததும், அது கனவில் கேட்ட கூக்குரலாக இருக்குமோ என்று நினைத்தேன்; ஆனால் அது கணப்பொழுதுதான். மீண்டும், “தேவதத்தரே” என்ற கூக்குரல் காதில் விழுந்தது. 

கருணாதான் என்னைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். நடுவில் இருந்த கதவருகில் ஓடிப்போய், “கருணா!” என்று நான் குரல் கொடுத்தேன். 

அவள் பதில் தந்தாள்; சொற்களால் அல்ல, விக்கல்களால்! 

“உனக்கு என்ன செய்கிறது, கருணா?” என்று கேட்டேன்.

அவளுடைய விக்கல்களே காதில் விழுந்தன; ஆனால்-

தவிதவித்த வண்ணம் இரவு முழுவதையும் கழித்தேன். காலையில் தேநீர் பருகும் சமயத்தில் கருணாவைப் பார்த்தேன். எப்போதும்போல என்னை நேருக்கு நேராகப் பார்த்து அவள் பேசவில்லை. இதற்கு என்ன அர்த்தம்? 


மறுநாள் கோர்ட்டில்கூட, முந்திய நாள் இரவிலும் காலையிலும் அவள் நடந்துகொண்டதற்கு ஏற்ற அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதிலேயே என் மனம் முனைந்திருந்தது. கோர்ட்டில் எனக்குத் தலையொட்டாத கடிதமொன்று கிடைத்தது. மனோகரன் எழுதிய கடிதம். அதைப் பிரித்துப் பார்த்தபோது உள்ளே ஒரு கவர் இருந்தது. அதன்மேல் ‘கருணா’ என்று மட்டும் எழுதியிருந்தது. மனைவிக்குத் தலையொட்டாத கடிதம் எழுதும் இவனைக் கண்டு எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. 

சாயங்காலம் நான் வீட்டுக்குப் போனபோது கருணா எனக்குப் பிரியமான உருளைக்கிழங்கு பஜ்ஜி செய்து வை திருந்தாள். கல்லூரியில் இருக்கையில் எனக்குப் பிடித்த மானவை எவை என்று அவள் அறிந்திருந்ததை இன்னமும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருந்தது எனக்கு ஆச்சரிய மாகவே இருந்தது. 

சிற்றுண்டியும் தேநீரும் ஆனபின்பு நாங்கள் இருவரும் வெகு தூரம் உலாவப் போனோம். இரண்டொரு தடவை நான், “இனிமேல் திரும்புவோமே!” என்றேன். ஆனால் அது காதில் விழாததுபோல, கருணா மேல்மேலும் போய்க் கொண்டே இருந்தாள். 

வீடு திரும்பியபோது இருட்டில் அவளுக்குத் தடுக்கியது. அவள் விழுந்துவிடப் போகிறாளே என்று நான் சட்டென்று அவளைப் பிடித்துக்கொண்டேன். 

அவளை ஸ்பரிசித்த அந்த முதல் கணம்! அவள் விழ வில்லை; அவளுக்கு எங்கும் காயம் படவுமில்லை என்ற ஆனந்தத் தால் மனம் களித்தது. 

அதற்குப் பின்னால் வந்த அடுத்த கணம்! அப்போதும் ஆனந்தக் கூத்துத்தான். ஆனால் அந்த ஆனந்தம் தூயதாக மோகம் இருந்தது. இல்லை; அதில் தன்னலம் இருந்தது, கருணாவின் ஸ்பரிசத்தைப்பற்றிய திருப்தியுறாத வேட்கை-ஒரு கண நேரத்துக்காயினும்-தணிந்ததனால் உண்டான ஆனந்தம் அது! 

மேற்குத் திசையின் முதல் ஸ்பரிசத்தினால் கதிரவன் நிறம் பெறுவதையும், ஒரு கணத்தில் அவனைச் சுற்றி ரோஜாச் சோலைகள் மலருவதையும் கடந்த எட்டு நாட்களாக நான் நாள்தோறும் பார்த்து வந்தும், அன்றுதான் அதை உணர முடிந்தது. 

சாப்பிட்டபோதும், சாப்பாட்டுக்குப் பிறகு அக்கப்போர் அளந்தபோதும், கருணா தன் அறைக்குப் போனபின்பு பத்தி ரிகைகள் படிக்க முயன்றபோதும் -ஒவ்வொரு கணமும் நான் இந்த வெறியின் அலைகளிலேயே மிதந்துகொண் டிருந்தேன். மயக்க மருந்து கொடுக்கப்பட்டவனுக்குப் பிரஞ்ஞை தப்புவ தற்கு முன்பு ஒருவிதமான கிறுகிறுப்பு உண்டாகும்; அவளு டைய ஸ்பரிசத்தினால் என் மனமும் அப்படித்தான் கிறுக்கியது. 

படுக்கப் போனதும் அருணாவின் படத்தைப் பார்த்த போது நான் திடுக்கிட்டேன். உடனே எனக்கு மனோகர னுடைய ஞாபகம் வந்தது. அன்று பகலில் வந்த அவன் கடிதம் அப்படியே என் சட்டைப்பையில் இருந்தது. ‘கருணா வைக் கூப்பிட்டு அதைக் கொடுப்பதா வேண்டாமா?’ என்று யோசித்தேன். 

சட்டைப் பையிலிருந்து அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு மேஜையினருகில் சென்றேன். மேஜையின் வலப் பக்கத்தில் கிழிந்த காகிதத் துணுக்குகள் நிரம்பிய குப்பைக் கூடை தென்பட்டது. அதைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரிய மாக இருந்தது. காலையில் நான் அதில் ஒரு கடிதத் துணுக்கா வது கிழித்துப் போடவில்லை; அப்படி இருக்க இவ்வளவு குப்பை எப்படி வந்தது? 

அந்தக் கூடையிலிருந்து இருபது இருபத்தைந்து துணுக்கு களை எடுத்து மேஜைமேல் வைத்துப் பொருத்திப் பார்த்தேன். 

கருணாவின் எழுத்துத்தான் அது! 

“அன்புள்ள தேவ-” 

“முதற் காதல்தான் உண்…” 

“இரவு முழுவதும் தவிதவித்த…”

“மிகவும் கொடியன்…” 

“ஒரு விரற்கடையளவுகூட…” 

“தவறிவிட்டேன்; ஏமாந்தேன்.” 

கூடையிலிருந்த எல்லாச் சுக்கல்களையும் சரியாக வைத்துப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லையே? இந்த நாலைந்து துணுக்குகளிலிருந்தே அவள் மனம் தெளிவாக விளங்கி விட்டது. ‘முதற் காதல்தான் உண்மையான காதல்’ என்ற நம்பிக்கை அவளுக்கு உண்டாகிவிட்டது; ‘சற்று நேரம் முன்பு உலாவித் திரும்புகையில் அவள் இருட்டில் உண்மையாகவே தடுக்கி விழப்போனாளா, அல்லது—?’ என்று நினைக்கலானேன்.

அது அவளுடைய இனிய தந்திரமாகத்தான் இருக்க வேண்டும். பெண் தன் காதலை வெளிப்படையாகச் சொல்லமாட்டாள்; பயப்படுவதாகப் பாசாங்கு செய்தாலன்றி அவளுக்குக் காதல் கிடைப்பதில்லை. 

ஒரு கணத்தில் என் மண்டையும் கன்னங்களும் கொதித் தன் மனம் மங்கியது. ‘கருணா என்மீது தான் கொண்ட காதலை இவ்வளவு தெளிவாகத் தெரிவித்திருந்தும், நான் முட்டாளைப்போல் யோசனை செய்துகொண்டு உட்கார்ந்திருக் கிறேனே. மழைநடுவே ஆலங்கட்டிகள் விழும்போது அவற் றைக் குவிக்க ஓடுவார்களா, அல்லது அந்தச் சமயத்தில் குடையைத் தேட வீடு முழுவதும் சுற்றித் திரிவார்களா?’ என்று நினைத்தபோது எனக்குச் சிரிப்பு வந்தது. 

கல்லூரியில் இருந்த கருணா என் கண்முன் நின்றாள். ஓர் அழகிய மலரைக் கண்டதும், அதைப் பறித்து மனம் திருப்தி யுறும் வரையில் மோந்து அநுபவிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாவது போலவே, அந்தக் காலத்தில் எனக்கு அவள் மிகவும் தேவையானவளாகத் தோற்றினாள். 

இப்போதும் அந்த எண்ணந்தான் என் மனத்திலும் உடலிலும் ஒவ்வோர் அணுவிலும் பரவியிருந்தது. 

மனோகரனுடைய அந்தக் கடிதத்தை மேஜைமேல் எ எறிந்து விட்டு நான் நடுக்கதவினருகில் சென்று, பதைபதைக்கும் உள்ளத்தோடு, “கருணா!” என்று கூப்பிட்டேன். 

நீண்ட குகையிலிருந்து காட்டு மிருகமொன்று கூவுவதைப் போல் இருந்தது என் கூக்குரல். நான் கணப்பொழுது தயங்கி னேன்; உடனே மீண்டும், “கருணா!” என்று கூப்பிட்டேன். 

“ஓ!” என்று பதில் வந்தது. 

என் உயிர் காதுகளில் வந்து தங்கியது. அவளுடைய காலடிச் சத்தம் கேட்டது; உடனே அடுத்த கணத்தில் அவள் வளைக் கை ஒலித்தது. 

கருணா கதவின் சங்கிலியை நீக்கி, அதைத் திறந்தாள். ஆனால் அவள் என்னைப் பார்க்கவில்லை. எங்கோ வேறு புற மாகப் பார்த்துக்கொண் டிருந்தாள். நடுங்கிக்கொண் டிருந்த அவள் கரத்தை நான் என் கையில் தாங்கினேன். என் கையும் நடுங்கியது. கால்கள் திடீரென்று ஓய்ந்துபோயின. அவளைக் கையைப் பிடித்துக் கட்டிலருகில் அழைத்துச் சென்றேன். அவள் தடாலென்று கட்டிலில் சாய்ந்து என் மடியில் முகத் தைப் புதைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழலானாள். அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவளைத் தேற்றலானேன். 

கருணா விம்மியவாறே, “நான் உங்களை மணந்து கொண்டிருக்க வேண்டும்! நான் தவறிவிட்டேன். தேவதத்தரே, நான் ஏமாந்து போனேன்!” என்றாள். 

நான் கையால் அவள் முதுகைத் தடவிக்கொண்டே, “சுத்தப் பைத்தியக்காரியாக இருக்கிறாயே நீ! அழுவதனால் எங்காவது பிழைகள் சரியாகிவிடுமோ?” என்றேன். 

விளக்கை நோக்கிப் பறந்தோடும் விட்டிற்பூச்சியைப் போல, என் இதழ்கள் அவள் இதழ்களினருகே நெருங்கின. “தேவதத்தரே!” என்று கூவி, அவள் விசித்திரமாகப் பொருமியதைக் கேட்டு, நான் திடுக்கிட்டுப் பின் வாங்கினேன். அருகில் தலையணையோடு வைத்திருந்த அருணாவின் படத்தின் மேல் அப்போது என் கை பட்டதனால் அது கீழே விழுந்து ‘களுக்’ கென்று உடைந்தது. அந்த ஒலியைக் கேட்டவுடனே கருணா கட்டிலிலிருந்து எழுந்தாள். 

நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். தொட்டிலில் இருந்த அந்த ‘ஸெலுலாய்ட்’ குழந்தை என்னைப் பார்த்து நகைத்துக் கொண்டிருந்தது. 

நான் நடுங்கும் குரலில், “கருணா, என்னை மன்னித்துவிடு. நம்முடைய முதற் காதலின் நினைவால்-” என்றேன். 

யாரோ அந்த அறைக் கதவைத் தடதடவென்று தட்டினார்கள். என் வேலைக்காரன்தான்! கதவருகில் சென்று, “என்னடா செய்தி?” என்று கேட்டேன். யாரோ ஒரு கிழவர் என்னைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னான். 

நான் கதவைத் திறக்காமலே, ”வழக்கு விஷயமான வேலைகளைக் காலையில் செய்வேன் என்று அவரிடம் சொல்லு” என்றேன். 

“அவர் வழக்கு விஷயமாக வரவில்லையாம்!” 

“பின்னே?” 

“தம் மகனைப்பற்றிய தகவல் கிடைத்துவிட்டது என்பதைத் தெரிவிக்க வந்திருக்கிறாராம்.” 

“மகனா? அந்தக் கிழவருடைய பெயர் என்னவாம்?”

“ராமபட்டர்.” 

ராமபட்டர் அந்த அவவேளையில் தம் கிராமத்திலிருந்து என்னிடம் வரக் காரணம்? கதவைப் பாதி திறந்து உடனே சாத்திவிட்டு, நான் வெளியே ஓடிப்போய்ப் பார்த்தேன். என்னைக் கண்டதுமே பட்டருக்கு உண்டான ஆனந்தம் – மேகங்களின் நடுவே மின்னல் வீசுவதுபோல இருந்தது அவர் குறு நகை. 

“நான் சாயங்காலமே இங்கு வந்திருக்க வேண்டும்; வழியில் மூன்று தடவை பஸ் ‘பங்க்சரா’கிவிட்டது” என்று சொல்லிக் கொண்டே, அவர் என் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அவர் பேச்சை முழுவதும் கேட்பதற்கு முன்பே நான் உறையினின்றும் கடிதத்தை எடுத்துப் படிக்கலானேன். 


கோல்ஹாபூரிலிருந்து நான் எழுதிய கடிதத்தினால் தங்களுக்கும் அம்மாவுக்கும் மிகவும் துன்பமுண்டாகியிருக்கும். தாங்கள் என்னைத் தேடியிருப்பீர்கள். எங்கும் என்னைப் பற்றித் தகவல் கிடைக்காததனால் அம்மாவுக்குத் தெரியாமல் தாங்களும், தங்களுக்குத் தெரியாமல் அம்மாவுமாகக் கண்ணீர் வடித்துப் புலம்பியிருப்பீர்கள். 

அந்தக் கடிதத்தை அனுப்பியிருக்க வேண்டாம் என்று இன்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்தச் சமயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் தீர்மானத்தோடு தான் நான் கோல்ஹாபூரிலிருந்து புறப்பட்டேன். 

அந்தத் தற்கொலைக்குக் காரணம்? முதற் காதல் – ஒரு பணக்காரப் பெண்ணை நான் காதலித்தேன். அவளுக்கும் ஒரு சம்ஸ்தானத்து யுவராஜாவுக்கும் திருமணம் நிச்சயமாயிற்று. தன் அம்மாவுக்கும் அத்தைக்கும் எதிராக நடந்துகொள்ள அவளுக்குத் தைரியம் இல்லை. ஆகவே நான் உயிர்விடப் புறப் யட்டேன். நான் எவ்வளவு பைத்தியக்காரனாகியிருந்தேன்! 

முதற் காதலில் ஒருவித வெறி இருக்கிறது. அதனால், “முதற் காதல்தான் வாழ்க்கையிலுள்ள இன்பக் களஞ்சியம்’ என்று தோற்றுகிறது. அந்தச் சமயத்தில் மனிதனுக்கு வேறு எதுவும் தென்படுவதேயில்லை. 

எப்படித் தென்படும்? பள்ளிக்கூடப் புத்தகங்களையும் கல்லூரிப் புத்தகங்களையும் தவிர்த்து இளைஞர்களுக்கு வேறு உலகமே இருப்பதில்லை. கதைகளிலும் நாவல்களிலுமுள்ள காதற் கற்பனைகளே அவர்கள் மனத்தில் நிரம்பிப் பளுவேற்றியிருக்கும். 

ஆதலின், முதற் காதலில் உண்டான ஏமாற்றம், இளை ஞனுக்கு விஷத்தைக் காட்டிலும் பொறுக்க முடியாததாக ஆகிவிடுகிறது. பிற்காலத்துக் காதலில் முதற் காதலின் வெறி சற்றுக் குறைந்திருந்தாலும் உல்லாசமும் உற்சாகமும் மேன் மையும் முதற் காதலவ்வளவு-இன்னும் கேட்டால் அதைவிட அதிகத் தீவிரமாகவே-இருக்கும் என்று அப்போது அவனுக் குத் தோன்றுவதில்லை. 

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் நான் பம்பாயில் முதல் ஐந்தாறு நாட்களைக் கழித்தேன். இந்தச் சொற்ப காலத்தில் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன்! “மனிதனுடைய வாழ்க்கையில் காதலே எல்லாமாகி விடுவதில்லை. ஸுலபா கிடைக்கவில்லை என்று பிரபாகரன் உயிரை விட்டு விடுவதா?’ 

காலையிலிருந்து மாலை வரையில் நான் பம்பாயில் பைத்தியக்காரனைப் போலத் திரிந்தேன். பரேலில் இருந்த தொழிலாளர்களின் விடுதிகள் முதல் மலபார் குன்றின் மீதுள்ள பங்களாக்கள் வரையில் எங்கே பார்த்தாலும் மனி தர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்; முயற்சிகளில் முனைந் திருந்தனர்; சிரித்துக்கொண்டிருந்தனர்; ஓடிய வண்ணமாக இருந்தனர். வாழ்க்கையாகிய விளையாட்டில் அவர்கள் லயித் துப்போயினர். கடிகாரத்தைப் பார்த்தவண்ணம் ரெயில்வே ஸ்டேஷனை நோக்கி ஓடும். குமாஸ்தாக்களின் கும்பலென்ன; ஹோட்டலில் வந்தவர்களுக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்பதைப் பரபரப்போடு கவனிக்கும் பையன் களென்ன; ஒரே இடத்தில் நின்றுகொண்டு டிராம்களும் பஸ்களும் ஓட்டும் டிரைவர்கள் என்ன; வீடு வீடாக ஓரணா இரண்டணாப் பொருள்களை விற்றுத் திரியும் தள்ளு வண்டிக் காரர்களென்ன; திறந்த மோட்டார் லாரிகளில் எங்காவது வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் என்ன;-எந்தக் காட்சி யைப் பார்த்தபோதிலும், அவர்கள் என்னிடம், “மனிதன் வாழப் பிறந்திருக்கிறான்! சாவதற்கு அல்ல!” என்றே கூறினர். 

இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் என் மனத்தில் குமி ழிட்ட விசித்திரமான சிந்தனைகளை வர்ணிக்கவே முடியாது. நான் பார்த்த இந்த மனிதர்களின் வாழ்க்கையில் துன்பம் இல்லையா? இவர்கள் எல்லாருடைய முதற் காதலும் நிறை வேறியே இருக்கும் என்று சொல்ல முடியுமா? இவர்களில் எத்தனையோ பேருக்குக் காதல் செய்யச் சந்தர்ப்பமே கிடைத் திராது. எத்தனையோ பேருடைய காதலுக்குக் குறுக்கே ஏழைமை வந்து நின்றிருக்கும். தம்முடைய நேர்மையான உணர்ச்சிகள் காரணமாக எத்தனையோ பேர் ஏமாந்தும் இருப்பார்கள். ஆனால் இவர்கள் யாவரும் தமக்காகவும் தம் குடும்பத்துக்காகவும் வாழ்கிறார்கள்; ஏழைமையோடு போராடுகிறார்கள். வாழ்க்கையாகிய தோட்டத்தில் பாதி பழுத்த கனிகள் கிடைத்து விட்டால் கூட, புளிப்புக் கலந்த அவற்றின் இனிமையிலேயே இவர்கள் மகிழ்வெய்துகிறார்கள். ஆனால் நான் மட்டும் – நான் அவர்களைவிட அதிகம் படித்தவ னாக இருக்கலாம்; அவர்களைவிட அதிகமாகக் காவியம் நிரம் பிய கற்பனைகள் செய்யலாம்; ஆனால் என் கல்வி, என் காவியம், என் லட்சியம் ஆகிய யாவும் அவர்களைப் பார்க்க வலுவற்ற வையே. ‘ஸெலுலாய்ட்’ குழந்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கவர்ச்சிகரமாகவுமே இருக்கிறது; ஆனால் ஒரு தீப்பொறி பட்டால் எரிந்து சாம்பலாகிவிடுறது; காவியங்களிலுள்ள கற்பனைகளில் வாழ்ந்து கொண்டு, புத்தகச் சூழலில் வளர்ந்து, கனவுக் கண்களால் சுற்றுப்புறமுள்ள உலகைப் பார்க்கும் என்னைப் போன்ற இளைஞர்களின் வாழ்க்கைச் சக்தி மெழுகினாலான குழந்தையைப் போன்றதே; அது எவ்வளவு கவர்ச்சிகரமாக இருக்கிறதோ அவ்வளவு பலவீனமாக இருக்கிறது. 

அப்பா, நான் இப்படி எழுதுவதைப் படித்ததும், பிரபாகரனுக்கு ஒருவேளை பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று தாங்கள் சந்தேகிக்கலாம். உண்மையில், நான் பித்தனாகத்தான் இருக்கிறேன்; துன்பத்தினால் அல்ல, ஆனந்தத்தினால். நான் புனர்ஜன்மம் எய்தியிருக்கிறேன். என்னுடைய இந்தச் சள சளப்பு இப்போதைக்கு ஓயாது. எங்கே, எப்பொழுது, எவ் வளவு என்ன பேச வேண்டும் என்பது சிறு குழந்தைக்குத் தெரியுமா? 

“பிரபாகரன் ஆனந்தமாக இருக்கிறான். சுகமாக இருக்கிறான். ஆனால் உன்னைப் பார்க்க வருவதா வேண்டாமா என்ற சந்தேகம் அவனுக்கு இன்னும் நீங்கவில்லை” என்று அம்மாவிடம் சொல்லுங்கள். 

இதென்ன, பின்னால் எழுத வேண்டிய செய்தியை முன்னமே எழுதிவிட்டேனே! 

இவ்விதமே நான் பம்பாயில் அலைந்துகொண்டிருந்தேன். டிராமில் என் பள்ளித் தோழன் ஒருவன் சந்தித்தான். அவன் பெயர் கறுப்பன். அவன் ஒரு குடியானவன் மகன். நான்காவது வகுப்புவரை என்னோடு படித்தான். பிறகு அவனுடைய தந்தையால் ஆங்கிலப் படிப்பின் செலவைத் தாங்க முடியாமற் போகவே, பள்ளிக்கூடத்தை விட்டான். பம்பாயில் ஓர் ஆலையில் வேலைக்கு அமர்ந்தான். அவனுடைய திறமை இங்கே வேறுவிதமாகப் பயன்பட்டது. இன்று அவன் தன் ஆலையிலுள்ள தொழிலாளிகளுக்குத் தலைவனாக இருக்கிறான். ‘கறுப்பன்’ என்றால் அவர்களுக்கு வேதவாக்கியம். நான் பரேலில் அவனுடைய அறைக்குப் போயிருந்தேன். தேநீர் குடித்துக் கொண்டே, “நீ எப்போதடா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்?” என்று அவனைக் கேட்டேன். “கல்யாணத்துக்கு என்ன அவ்வளவு அவசரம்? உத்தியோகமும் மனைவியும் வைத்துக் கொள்ளத்தான் நான் பிறந்திருக்கிறேனா?” என்றான், நகைத்த வண்ணம். 

உடனே ஓர் ஆங்கிலப் புத்தகத்தை எடுத்து, எனக்குப் படிக்கக் கொடுத்தான். ஐரோப்பிய மங்கையொருத்தியின் சுயசரிதம் அது. அந்தப் பெண்மணி தன் பதினெட்டாவது வயதில் ஒரு சித்திரகாரனைக் காதலித்தாள். ‘முதற் காதல் தான் உண்மையான காதல்’ என்பது அவள் கொள்கையாதலால் யார் பேச்சையும் கேட்காமல் அந்த ஓவியனை மணந்து கொண்டாள். மணமானதும் இரண்டு வருஷங்கள் சுகமாகவே கழிந்தன; ஆனால் அப்புறம் சின்னஞ்சிறு விஷயங்களுக்காக அவர்களிடையே சச்சரவுகள் தொடங்கின. மிதப்பிலே வாழ வேண்டுமென்று, அவன் மட்டமான படங்களை வரைய ஆரம்பித்தான். அவளுக்கு அது பிடிக்கவில்லை. அவனுடைய எல்லை மீறிய நடவடிக்கையும் மெதுவாக வளர்ந்தது. சிறு குழந்தை, தெய்வமென்று கருதிக் கற்களின் மீது மலர்களைத் தூவுகிறதல்லவா? தன் முதற் காதலின் கதியும் அப்படித் தான் ஆயிற்று என்பதை அவள் அறிந்தாள். விவாகரத்துக் கோரினாள்; அது உடனே கிடைத்தது. 

தனியாகவே இருந்துகொண்டு, அவள் தன் வயிற்றுப் பாட்டுக்கு வழி தேடிக்கொண்டாள். இரண்டு மூன்று வருஷங்கள் வரை அவளுக்குத் தனிமையில் வெறுப்பு உண்டாக வில்லை. ஆனால் அதற்கப்புறம், அவளுக்குத் தன் வாழ்க்கை ஒளியே இல்லாத ஓர் அழகிய அறையைப் போலத் தோற்றியது. தெய்வாதீனமாக, ஒரு டாக்டரோடு அவனுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவருடைய முதல் மனைவி இறந்து போயிருந்தாள். அந்த அறிமுகம் முதலில் நட்பாகவும் பிறகு காதலாகவும் மாறியது. மிஷனரியாக வேலை செய்யத் தீர்மானித்து அந்த டாக்டர் இந்தியாவுக்கு வந்தார். அவரோடு அவளும் வந்தாள். இருவருமாகச் சேர்ந்து கிராமங்களில் சுற்றினர். ஒரு மாவட்டத்திலுள்ள கிராமங்களில் இரண்டு வருஷ காலம் தங்கி அங்குள்ள ஜனங்களுக்கு உபயோகமான வேலைகள் செய்வது, அங்குள்ள டாக்டர்களிடத்தில் தொண்டு செய்யும் பான்மையை உண்டாக்கிவிட்டு வேறு மாவட்டத்துக்குப் போவது – இப்படி அவர்கள் திட்டம் வகுத்துக் கொண்டார்கள். தனக்குக் குழந்தை பிறக்காமையால் அவள் ஓர் அநாதைக் குழந்தையை வளர்க்கலானாள். 

அந்தப்புத்தகத்தைப் படித்து முடித்ததுமே, பலவீனமான என் சிந்தனைகளைக் கண்டு வெட்கினேன். என் முதற் காதல் நிறைவேறவில்லை என்று நான் தற்கொலை செய்துகொள்ள எண்ணினேன்; அவளுக்கு முதற் காதலில் என்னை விட மிகவும் துன்பமான அநுபவங்கள் ஏற்பட்டிருந்தும், ‘வாழ்க்கையில் இத்தகைய விபத்துக்கள் நேரிட்டால்கூட, மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான பல பொருள்களை அந்த வாழ்க்கையே அவனுக்குக் கொடுக்கிறது’ என்ற தத்துவத்தை மட்டும் அவள் மறந்துவிடவில்லை. 

இப்பொழுது அவள் டாணாவில்தான் இருக்கிறாள் என்று கறுப்பன் சொன்னதும், அவளை ஒரு தடவை பார்க்க நினைத்தேன். தொழிலாளர்களின் வாயிலாகக் கறுப்பனுக்கும் அவளுக்கும் அறிமுகம் உண்டு. 

விடுமுறை நாளில் கறுப்பனை அழைத்துக்கொண்டு டாணா வுக்குப் போனேன். அதற்கு முதல் நாள்தான் அவள் மிரஜ்ஜுக்குப் போய்விட்டாளென்றும், மூன்று நாளைக்கெல் லாம் திரும்பி வருவாள் என்றும் தெரிந்தது. அந்த மூன்று நாட்கள் எனக்கு மூன்று ஆண்டுகளாகத் தோற்றின. 

மூன்று நாட்களானதும், தனியாகவே டாணாவுக்குப் போனேன். அவளுடைய பங்களாவுக்குச் சென்றதும், சற்று நேரம் முன்புதான் அவள் கல்யாணுக்குப் போனதாகத் தெரிந்தது. கல்யாணுக்குப் போனேன்; ஆனால் அவள் அங்குள்ள வேலையை முடித்துக்கொண்டு முன்பே திரும்பி விட்டாள். என்ன ஆனாலும் அன்று அவளைச் சந்தித்தே தீருவதென்று தீர்மானித்தேன். 

டாணாவுக்குத் திரும்பியபோது, எல்லாவற்றுக்கும் முன்னா லிருந்த பெட்டியில் நான் உட்கார்ந்தேன். ஒரு ஸ்டேஷனில் நின்ற பின்பு வண்டி புறப்பட்டது. சற்றுத் தூரம் போனதுமே அது திடீரென்று நின்றுவிட்டது. உடனே கூச்சல் – கலவரம் – ஜனங்களின் நடமாட்டம்! 

நானும் கீழே இறங்கிக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். எவளோ ஒரு பெண் குறுக்கே வந்ததனால் வண்டி திடீரென்று நின்றது. அமைதியும் இரக்கமுமே வடிவான அந்தப் பெண் ணின் வதனத்தைக் கண்டு என் உள்ளம் உருகியது. நீர் மல்கிய அவளுடைய அந்தக் கண்கள்! 

திடுமென்று அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவன் முன் வந்து, “இவள் என் தங்கை” என்றான், அவனைப் பார்த்தவுடனே அந்தப் பெண்ணின் முகம் வெளிறியது; உடலில் யாரோ கத்தியைச் செருகியது போல அவள் கீச்சென்று கத்தினாள். அவளுடைய அண்ணன் என்று தன்னைக் கூறிக் கொண்டவனுடைய பார்வை பசுவின் மீது பாயும் புலியின் கண்ணைப் போல, அத்தனை கடுமையாக இருந்தது. இவனுடைய தொந்தரவிலிருந்து விடுபடுவதற்காகவே, ஓடுகிற வண்டியின் முன்னால் அவள் வந்திருக்க வேண்டும் என்று சந்தேகித்து, உடனே முன்சென்று அவளருகில் நின்றேன். அண்ணனென்று தன்னைக் கூறிக்கொண்டவனை நெட்டிப் பிடித்துத் தள்ளி, “இவள் என் மனைவி!” என்றேன். 

நான் பைத்தியக்காரனைப் போல. ஏதோ சொல்லிவிட்ட தாக அந்தக் கணத்தில் நினைத்தேன். இப்போது, ‘என் வாழ்க்கையில் மிகவும் மேன்மையான கணம் அதுதான்’ என்பதை ஒவ்வொரு கணமும் உணருகிறேன். 

இந்தச் சம்பவம் முழுவதும் போலீசுக்கும் அங்கிருந்து கோர்ட்டுக்கும் போயிருந்தால், அந்தப் பெண்ணின் மானம் கப்பலேறியிருக்கும். ஆனால் ஸ்டேஷனில் இந்தக் கலவர மெல்லாம் நடந்து கொண்டிருந்த பொழுதே நான் சந்திக்கப் போன பெண்மணி அங்கே வந்து, அந்தப் பெண்ணைத் தன் ஆதீனத்தில் அழைத்துக்கொண்டு போனாள். ஆகவே, இந்தக் கலவரம் சிறிது நேரத்தில் அடங்கியது. 

அந்தப் பெண்ணைக் காப்பதற்காக, “இவள் என் மனைவி” என்று நான் கூறியிருந்தேன். அப்புறம் அவள் வரலாறு முழுவதையும் கேட்டு, அவளோடு நான்கு நாட்கள் வசித்த பின்பு, ‘அன்று நான் பேசிய சொற்களை உண்மையாக்கினால் நாங்கள் இருவருமே சுகமாக இருப்போம்’ என்று எனக்குத் தோற்றியது. 

அப்பா, தங்களுடைய இந்த நாட்டுப்பெண் சுறுசுறுப்பானவள்; நல்ல சுபாவமுடையவள். ஆனால் துரதிருஷ்ட வசமாக அவளுடைய பழைய வாழ்க்கை களங்கமுடையது. அதைப்பற்றி நான் சட்டையே செய்யவில்லை. நம் சமூகத்தில் இளம் பெண்ணின் வாழ்க்கை வீட்டுக்குள் கடுஞ்சிறையாக இருக்கிறது. வீட்டை விட்டு வெளியேறினாலோ அவள் வாழ்க்கை முற்றும் பாழாகிவிடுகிறது. ஆனால் தங்களுக்கும் அம்மாவுக்கும் இது விளங்குவதேது! வேசியின் வீட்டில் வாசம் செய்துவிட்டு வந்த மருமகளை வீட்டுக்குள் அழைத்துக் கொள்வது தங்களுக்கு-

அதனால்தான் நான் வீட்டுக்கு வரவில்லை. ஆனால் அம்மா விடம், “பிரபாகரன் இன்று வீட்டுக்கு வராவிட்டாலும், உனக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதுவான். உனக்குத் துன்பம் நேராதபடி கவனித்துக்கொள்வான். நாளைக்கு அவனைப் பார்க்க வேண்டுமென்று உனக்குத் தோன்றுமேயானால், அப்பொழுது அவன் தன் மனைவியுடன் வந்து முற்றத்தில் நிற்பான். அவர்களுடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு நீ வெறுமே புன்முறுவல் பூத்தாலே போதும்; அவ்விருவரும் ஆனந்தக் கூத்தாடிய வண்ணம் திரும்புவார்கள்” என்று சொல்லுங்கள். 

அவளுடைய மருமகளின் பெயர் அநஸூயா என்பதையும் சொல்லுங்கள். எவ்வளவு இனிமையான பெயர்! அவள் ஒரு டிராயிங் வாத்தியாரின் தங்கை. அவர் பெயர் மனோகரர். 

இதற்கு மேல் என்னால் படிக்கவே இயலவில்லை. “கருணா, கருணா!” என்று கூப்பிட்டவண்ணம் என் அறையை நோக்கி ஓடினேன். அறைக்கதவைத் திறந்ததுமே, அங்கேயே அசையாமல் நின்றுவிட்டேன். கண்ணாடி உடைந்த அருணாவின் படத்தின் முன்னால் விக்கிக்கொண்டே, “அருணா, 

“அருணா, என்னை மன்னித்துவிடு” என்று கூறிக்கொண்டிருந்தாள் கருணா. 

நான் திருடனைப் போல் நின்றேன். மேஜைமேல் ஒரு சிறு கடிதம் புலப்பட்டது. அருகில் உடைத்த உறை கிடந்தது. மனோகரனுடைய கடிதமாகத்தான் இருக்கு மென்று கருதி, மெதுவாக எடுத்துப் படிக்கலானேன். 

அன்புள்ள கருணா, 

அன்றிரவு நான் முட்டாள்தனமாக நடந்துகொண்ட தற்கு மன்னித்தே இருப்பாய். என் கோபத்தை நான் வளர விடாமல் இருந்திருக்கலாம். ஆனால் அநுவுக்காக என் உயிர் துடிதுடிப்பது உனக்குத் தெரியாதா? அவளைப் பற்றிய தகவல் அடியோடு கிடைக்காததனால் நான் மிகவும் சிடு மூஞ்சிக்காரனாகி யிருந்தேன். 

உண்மையான காதலுக்குத்தான் மன்னிக்கத் தெரியும். உனக்கும் இதைப்பற்றிய அநுபவம் இல்லாமலில்லை. “கல்யாணம் என்பது, புயலில் பயணம் செய்யும் இரண்டு படகுகளின் சந்திப்பு” என்று நீ ஒரு தடவை சொல்லி யிருந்தாயே, அது அவ்வளவும் உண்மை. 

நீ என்னை மன்னிக்கவில்லையானால், நீ விதிக்கும் எந்தத் தண்டனையையும் ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக் கிறேன்; அப்படியானால் சரிதானே? 

கருணா, சற்று நேரம் முன்புதான் அவள் இருக்கும் இடம் எனக்குத் தெரிந்தது. ஒரு நல்ல பிள்ளையை அவள் மணந்து கொள்ளப்போகிறாள். 

கன்னியாதானத்துக்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்துவிடு. மற்ற விவரங்கள் நேரில். 


கருணா எழுந்திருந்ததைப் பார்த்ததும், மெதுவாக அந்தக் கடிதத்தை மேஜைமேல் வைத்தேன். அவள் என் பக்கம் திரும்பி மிகவும் மகிழ்ச்சியோடு, “அநுவைக் கண்டு பிடித்தாயிற்று. அவளுக்கு விவாகமும் நிச்சயமாகிவிட்டது!” என்றாள். 

“தெரியுமே எனக்கு!” என்று கூறி, என் கையிலிருந்த கடிதத்தை அவளுக்குக் காண்பித்தேன். 

அவள் கடிதத்தைப் படித்துவிட்டு, “நீங்களும் வருகிறீர் களா என்னோடு? நான் தனியாக வேண்டுமானாலும் போவேன்!” என்றாள். 

“எங்கே?” என்ற என் கேள்வி அவள் காதில் விழுந்ததோ இல்லையோ, தெரியாது. அதற்கு முன்பே அவள் தன் அறைக்குப் போய்விட்டாள். 

கூடத்தில் பட்டர் தனியே இருந்ததை உணர்ந்து, நான் அவரோடு பேச வெளியே வந்தேன். ஆனால் பிரபாகரனைப் பற்றி அவரோடு மேலே என்ன பேசுவது என்ற எக்கச்சக்க மான கேள்வி என்முன் நின்றது. 

பட்டர் எதிரிலிருந்த ஒரு படத்தைப் பார்த்துக்கொண் டிருந்தார். சிபி சக்கரவர்த்தி ஓர் எளிய புறாவைக் காப்பதற் காகத் தன் மாமிசத்தை அறுத்துக் கொடுக்கும் நிகழ்ச்சி அதில் அழகாகச் சித்திரித்திருந்தது. 

கருணா வேகமாக எங்கோ போவதற்காக வெளியே ஓடி வந்தாள். “எங்கே புறப்பட்டுவிட்டாய்?” என்றேன். 

“தபாலாபீஸுக்கு, மனோகரருக்குத் தந்தி கொடுக்க!” என்றாள், சிரித்துக்கொண்டே. 

அவள் கையிலிருந்த காகிதத்தை வாங்கி உரக்கப் படித் தேன்: “தங்கையை அழைத்துக்கொண்டு உடனே உடனே உடனே வருக!” 

பட்டர் என்னைப் பார்த்து, “இந்தத் தந்தியோடு என் தந்தி ஒன்றும் கொடுங்கள்” என்றார். 

“யாருக்கு?” என்று கேட்டேன். 

“பிரபாகரனுக்கு. அவனுக்கு எழுதுங்கள்: ‘மனைவியை அழைத்துக்கொண்டு உடனே உடனே வா!’ என்று.” 

எங்களூர்ப் போஸ்ட்மாஸ்டருக்கு அன்று சுக்கிரதசை தான் அடித்திருக்க வேண்டுமென்று நினைத்தேன். அவருக்கு ‘லேட்பீஸ்’ வாங்கிக்கொடுத்த – அருணாவின் பெயருக்கு அடித்த – மூன்றாவது தந்தி, “அஜயனை அழைத்துக்கொண்டு உடனே உடனே வா!” என்ற சொற்களுடன் என் கண்முன் களிநடம் புரிந்துகொண்டிருந்தது. 

(முற்றும்)

– புயலும் படகும், கதை மூலம்: வி.ஸ.காண்டேகர், தமிழாக்கம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: டிசம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *