கடவுள் கொடுத்த வரமல்லவா!
கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 154

குறை யொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா, கணீரென்று ஒலித்த பாடலில் கண் மூடி மெய் மறந்திருந்தாள் பாவனா. இரண்டு தினங்களுக்குப் பிறகு மனதை அரித்த விஷயத்திலிருந்து மீண்டு வந்திருந்தாள்.
மனம் தெளிவாக இருந்தது. செல்போனில் பாடல் முடிய ஆஃப் செய்தாள். வாட்ஸ் அப் பகுதிக்கு வந்து கணவனுக்கு டைப் செய்ய துவங்கினாள்.
என்னவருக்கு,
எனக்கே எனக்கானவருக்கு என்று சொல்ல ஆசை தான். ஆனால் விதி என் வாழ்வில் செய்தி சதி, வேறன்ன சொல்ல.
இனி அதைப்பற்றி பேசி ஆகப்போவது எதுவும் இல்லை. இரு தினங்களுக்கு முன் டாக்டர் சொன்ன செய்தி காதில் ஒலித்துக் கொண்டே உள்ளது, கருப்பையில் கட்டி மிகப் பெரியதாக இருப்பதால் கருப்பையோடவே எடுப்பது தான் சரியாக இருக்கும், வேறு வழியில்லை, தாமதித்தால் உயிருக்கு ஆபத்து.
அதை கேட்ட வினாடி என் மனம் துடித்த பாட்டை கடவுள் மட்டுமே அறிவார். ஐந்து ஆண்டு குழந்தை இல்லாமையால் ,அது தீர மருத்துவ ஆலோசனை பெறச் சென்றால், அங்கே இப்படி சொன்னார்கள் என்றால், நான் செய்த பாவம் என்னை துரத்துகிறது என்பதுதானே உண்மை,
அதிர்ச்சி இருந்தாலும் அதை தாங்கிக்கொண்டு என் முடிவை அப்போதே உங்களிடம் சொன்னேன். நீங்கள் மறுத்துவிட்டீர்கள். மாற்று வழி கிடைக்கும், அமைதியாய் இரு என்றீர்கள். நிச்சயம் நான் சொல்வதை தாண்டி எந்த மாற்று வழியும் கிடையாது.
இந்த பிரச்சனையில் நம்மைத் தவிர்த்து அத்தையைப் பற்றி யோசிக்க வேண்டும். குழந்தை இல்லை என்று மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போது, எனக்கும் கல்யாணம் முடிஞ்சி ஏழு வருஷம் கழிச்சிதான் ராகுல் பிறந்தான் என்று சொல்லி அவர்கள் வாயை அடைத்தவர்.
கையில் குழந்தையோடு, கணவரையும் பலி கொடுத்துவிட்டு, வாழ்க்கையில் அத்தை பட்ட கஷ்டங்கள் என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியும். உங்களுடன் மட்டும் அவரது வம்சம் முடியக்கூடாது. உங்கள் வாரிசுகளைப் பார்த்து அத்தை மகிழவேண்டும். அதற்கான வழிதான் நான் எடுத்த முடிவு.
நீங்கள் மறுமணம் செய்து கொள்ளவேண்டும். அதற்கு மறுத்தீர்கள் என்றால் நான் ஆபரேஷனுக்கு சம்மதிக்க மாட்டேன். நான் இறந்த பிறகுதான் மறுமணம் செய்வீர்கள் என்றால் அதுபடியே ஆகட்டும். நீங்கள் கேட்ட இரு தின அவகாசம் முடிந்துவிட்டது. இன்று மாலை அத்தை யிடம் அனைத்தையும் சொல்லிவிடுங்கள். மாலை பார்க்கலாம்.
டைப் செய்து அனுப்பிவிட்டு செல்போனை அணைத்தாள் பாவனா. மனம் நிச்சலனமாக இருந்தது.
மாலை ஆபிஸ் முடிந்து வீடு திரும்பிய ராகுலின் முகம் இருண்டுபோய் கிடந்தது. அம்மாவை அழைத்து ஆதியோடந்தம் கூறினான். பாவனா எடுத்த முடிவையும் இணைத்துகூறினான்.
மகன் சொல்வதை திடுக்கிடல்களோடு கேட்ட ஞானம் அமைதியாக எழுந்து சென்று பூஜை அறைக்குள் தியானத்தில் ஆழ்ந்தாள்.
கண்களில் வழியும் கண்ணீரோடு அவளின் தியானத்தை பார்த்தவாறு இருந்தனர் ராகுலும். பாவனாவும்.
அரைமணி கழிந்து, ஞானம் தியானம் முடித்து எழுந்தாள். மகனையும், மருமகளையும் பொதுவாகப் பார்த்தபடி, ரெண்டு பேரும் இப்ப என்கூட கிளம்புங்க என்றாள்.
எங்கே என்று பார்வையால் கேட்டபடி இருவரும் திகைத்து நிற்க, புரிந்து கொண்ட ஞானம் முறுவலித்தபடி கூறினாள்.
முதல்ல ஆஸ்பிடல் போய் பாவனாவுக்கு ஆபரேஷன் தேதி ஃபிக்ஸ் பண்ணிட்டு , பிறகு குழந்தைகள் காப்பகத்துக்கு போய், நம்ம மூணு பேருக்கும் பிடிச்சமாதிரி ஒரு குழந்தையை தத்து எடுத்து கூட்டிட்டு வரப்போறோம்.
அம்மா சொன்னதைக்கேட்டு ராகுல் ஆனந்தப்பட, பாவனா தயக்கத்துடன் மாமியாரைப் பார்த்து,
அத்தை, நான் என்ன சொல்லவரேன்னா…. என்று இழுக்கவும்,
ஞானம் அவளை இடைமறித்தாள்.
இந்த வாய்ப்பு கடவுள் நமக்கு கொடுத்த வரம். ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க பல கஷ்டங்களை வாழ்க்கையில் அனுபவித்தேன். ஆனால் இன்னைக்கு பத்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிற வசதி நமக்கு இருக்கு. நாம ஏன் கவலைப்படணும். கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற இந்த சூழலை நான் மகிழ்ச்சியோடு ஏத்துக்கிறேன், உங்களுக்கும் மகிழ்ச்சின்னா உடனே கிளம்புங்க என்றதும்
இருவரும் ஓடிவந்து அவள் காலில் விழ முற்பட, அதைத்தடுத்து அவர்களை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் ஞானம்.