உத்தியோகத்துக்குத் தக்க சுகம் என்றது
கதையாசிரியர்: இராயர்-அப்பாஜி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 60
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருநாள் இராத்திரி எல்லாம் விடாமழையாகப் பெய்து கொண்டு இருந்தது. விடியற்காலத்திலே மழை விட்டபின்பு இராயரும் அப்பாச்சியும் புறப்பட்டு ஊருக்குப் புறத்திலே காட்டு வெளியிலே வெள்ளத்தின் சிறப்பைப் பார்க்கப் போனார்கள்.
அங்கே ஒரு இடையன் தன் மந்தை அண்டையிலே தலைப் பக்கத்திலே ஒரு கல்லும் இடுப்பின் கீழே ஒருகல்லும் கால் பக்கத்திலே ஒரு கல்லும் வைத்துக்கொண்டு சம்பங்குடையை மேலே மூடிக்கொண்டு தன் கீழே ஓடுகிற வெள்ளத்திலே தலைமயிர் அலைய நித்திரை செய்துகொண்டிருந்தான்.
இராயர் பார்த்து ஆச்சரியப்பட்டு “இவன் உயிரோட இருக்கிறானோ” என்று கேட்டார். அதற்கு அப்பாச்சி, “இறந்துபோகவில்லை. அதிக நித்திரையில் இருக்கிறான்” என்றான்.
அதைக்கேட்டு, “ஒருவனுக்கு இப்படிப்பட்ட மழை வெள்ளத்திலே தலைமயிர் நீரில் அலம்பக் கீழே வெள்ளம் ஓடக் கல்லுக்கள் உடம்பிலே உறுத்த நித்திரை பிடிக்குமா?” என்று கேட்டார். அதற்கு அப்பாச்சி “உத்தியோகத்துக்குத் தக்க சுகம்” என்றான்.
இராயர் சோதிக்கும்படியாக அந்த முரட்டிடையனைத் தன் அரண்மனைக்கு அழைப்பித்து, பெரிய உத்தியோகம் கொடுத்துப் போசனம், வஸ்த்திரம், ஆபரணம், வாகனம் இவை முதலாகிய இராசோபசாரங்கள் தனக்கு நடந்துவருகிறதிலும் அவ்விடையனுக்குத் தான் அதிகமாக நடந்துவரும்படியாகத் திட்டம் செய்து, வெய்யில், காற்று, மழை, பனி இதுகளால் யாதொரு வருத்தமும் இல்லாமல் அவனைச் சிலகாலம் வைத்திருந்து அதன் பின்பு அவன் வீட்டு வாசற்படியிலே பச்சை வாழைப்பட்டைகளைப் போட்டு வைத்தார். அவன் அதன்மேலே நடந்து உள்ளே போனமாத்திரத்திலே அவனுக்குத் தோசமுங் காய்ச்சலுங்கண்டு மிகவும் வருத்தப் பட்டான். இராயர், அப்பாச்சி சொன்னது சரிதான் என்று சந்தோஷப்பட்டு ஒரு வைத்தியனைக் கொண்டு குணப்படுத்திவிட்டார்.
– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
![]() |
பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை : மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை. இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க... |
