அவனும் சில வருடங்களும்
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 41
(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பாலுமகேந்திராவின் முன்னுரையில்…

சினிமா என்ற மீடியத்தின் தாக்கமும், வசீகரமும் படம் பார்ப்பவர்களை மட்டுமல்ல, படம் எடுப்பவர்களையும் கூட ஆட்கொள்ளுகின்றன என்பது ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மை.
இந்த நாவல் திரைப்படக் கல்லூரி ஒன்றினைப் பின்புலமாகக் கொண்டது. லண்டன் திரைப்படக் கல்லூரியும், அங்கு பயிலும் பல நாட்டு மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருமே இதன் கதை மாந்தர்கள்.
வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், வெவ்வேறு கலாசாரப் பின்னணியும், இதன் காரணமாக அவர்களிடையே ஏற்படும் முண்பாடுகளும் இவற்றையும் மீறி ஊடாடும் சில உடன்பாடுகளும் இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன.
ஆசிரியர் ராஜேஸ்வரி கூட இதே லண்டன் திரைப்படக் கல்லூரி மாணவியாய் இருந்தவர் என்பதால், திரைப்படக் கல்லூரிகளின் அறியப்படாத பல அபூர்வ தனித்துவங்கள் பல இந்த நாவலில் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
காதல் கதை என்பதால், இதன் சுருக்கத்தை இங்கு சொல்லி வாசகரின் வாசிப்பு சுவாரஸ்யத்தை நான் குறைக்க விரும்பவில்லை. நானும் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவனாய் இருந்தவன் என்ற வகையில், இந்த நாவலின் இயங்கு தளத்துடன் என்னால் இலகுவாக ஐக்கியப்பட முடிந்தது.
குறிப்பிட்ட வருடத்திய சினிமா மாணவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களையும், பிரச்சனைகளையும், திரைப்படக் கல்லூரியோடு சம்பந்தப்பட்ட இன்னோரன்ன நடைமுறைகளையும், இன்னுமொரு காதல் கதை மூலமே ஆசிரியர் சொல்ல முற்பட்டுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
‘பைசிக்கிள் தீவ்ஸ்’, ‘சிற்றிசன் கேன்’ போன்ற சாகாவரம் பெற்ற சினிமாக்களைப் பற்றியும், உலகளவில் மரியாதை பண்ணப்படும் இயக்குநர்கள் பற்றியும் பயின்றபடியே, இந்த இன்ஸ்டிட்டியூட் மாணவர்கள் காதல் வயப்படுகின்றனர்.
ஆசிரியர் ராஜேஸ்வரி கூட இதே லண்டன் திரைப்படக் கல்லூரி மாணவியாய் இருந்தவர் என்பதால், திரைப்படக் கல்லூரிகளின் அறியப்படாத பல அபூர்வ தனித்துவங்கள் பல இந்த நாவலில் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
புலம் பெயர்ந்து, வெளிநாடுகளில் நீண்ட காலம் வாழ நேரும் தமிழர்கள், ஆங்கிலத்திலேயே சிந்திக்கவும் பழகிக் கொள்வதால் இவர்கள் தமிழில் எழுத உட்காரும் பொழுது, ஆங்கிலம் மூலமாகவே தமிழை அணுக முடிகிறது. இந்த விதேசி வாடை வீசும் தமிழ்தான் ராஜேஸ்வரிக்கும் நிகழ்ந்திருக்கிறது.
காதல் கதை என்பதால், இதன் சுருக்கத்தை இங்கு சொல்லி வாசகரின் வாசிப்பு சுவாரஸ்யத்தை நான் குறைக்க விரும்பவில்லை. கதையைப் படித்து முடிந்ததும், ஒருவேளை ராஜேஸ்வரி இதைப் பிறிதொரு சமயத்தில் ஒரு சினிமாவாக தமிழ் சினிமாவாக எடுக்கும் உத்தேசத்துடன்தான் எழுதினாரோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. நிறையப் பரபரப்பு. நிறையத் திருப்பங்கள். நிறைய அதீத உணர்வு வெளிப்பாடுகள்…
நானும் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவனாய் இருந்தவன் என்ற வகையில், இந்த நாவலின் இயங்கு தளத்துடன் என்னால் இலகுவாக ஐக்கியப்பட முடிந்தது.
வாழ்த்துக்களுடன்,
பாலுமகேந்திரா.
என்னுரை
ஆங்கிலேய திரைப்பட உலகம் மிகவும் பழமை வாய்ந்தது, சரித்திர பூர்வமானது. நீண்ட காலமாக ஆங்கிலேயர் மட்டும்தான் திரைப்படக் கல்லூரி மாணவர்களாக இருந்தனர். 1980ம் ஆண்டுகளில் கறுப்பு மாணவர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கறுப்புத் திரைப்படத் தயாரிப்பாளர்களாலும் ஆங்கிலேய முற்போக்கு வாதிகளாலும் முன்வைக்கப்பட்டது.
இந்தக் கதையின் கதாநாயகன் ராகவன் ஒரு தமிழ் அகதி. சாதாரண-சுமாராகப் படித்த குடும்பத்திலிருந்து திரைப்படப் பட்டதாரியாகும் ஆசையில் கல்லூரிக்குப் போகிறான். அங்கு அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள் ஒரு நாவலாக உருவாகியிருக்கிறது.
இலட்சியத்துடன் வருபவர்கள், இலட்சியமற்று வருபவர்கள், என்னவென்று தெரியாமல் வருபவர்கள் என்று எத்தனை யோவிதமான மாணவர்கள் திரைப்படக் கல்லூரிக்கு வருவார் கள். அவர்களின் வாழ்க்கையின் பின்னணியும், அரசியல் முதிர்ச்சிகள், சுற்றாடல் சூழ்நிலையில் உள்ள அக்கறை என் பன அவர்களின் படிப்பில் பிரதிபலிக்கும்.
நாவலில் வரும் ராகவன் இலங்கைத் தமிழ் அகதி; அரசியற் கொடுமைகளால் மிக மிக நொந்து போனவன். கல்லூரியில் டெவீனா ஸேர்விங் என்ற ஆங்கில மாணவியின் தொடர்பு கிடைக்கிறது. கிழக்குத் தேசத்துத் தத்துவங்களும் எதிர்பார்ப்புகளும் மேற்கு நாட்டாரின் சபலங்களும் குழப்பமும் ஒன்றோடு ஒன்று மோதுவது இவர்களின் உறவில் வெளிப்படுகிறது. காடுகள் அழிவதற்கும் பறவைகள் இறப்பதற்கும் பரிதாபப்படும் ஆங்கிலேய இளம் தலைமுறைக்குக் கறுப்பரின் பிரச்சினைகளை நேரே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. இந்த நாவலில் ‘எய்ட்ஸ்’ நோய் பற்றிய ஒரு கண்ணோட்டமும் இருக்கிறது. டெவீனா இயற்கையை ரசிக்கும் ஒரு சுதந்திரப் பேர்வழி. அவளின் மத்திய தர வாழ்க்கை முறை அப்படி; ஆனால் அவளில் அன்பு கொள்ளும் ராகவனின் உணர்வுகள் மிகவும் ஆழமானவை. எப்படித்தான் ஆழமான அன்பு இருந்தாலும் டெவீனா தன்னை ஒரு நீண்ட கால உறவுக்குள் சிறைப்படுத்திக் கொள்ளப் போவதில்லை என்று விலகியதும் ராகவன் துடித்துப் போகிறான்.
இது ராகவனின் ஆண்மைக்குச் சவாலாகவுமிருக்கிறது. ராகவனின் உணர்வுகள் அவனின் குடும்பப் பின்னணியில் அமைந்தவை. அம்மாவைத் திருப்திப்படுத்த அவன் வாழ வேண்டியுள்ளது. தங்கை மைதிலி ஒரு முஸ்லிமை விரும்புவது அம்மாவால் தாங்க முடியாதிருக்கிறது.
இலங்கை அரசியல் மாற்றங்கள், அதன் அழிவுகள் ராகவ னின் குடும்பத்தை மிகவும் பாதிக்கிறது. அந்தப் பாதிப்பின் வேதனைகளை மறக்க, டெவீனா தேவைப்படும்போது அவளால் இவனின் ‘தேவைகளுக்கு’த் தன்னைச் சிறை கொடுக்கத் தயக்கம் வருகிறது.
இவனுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திரா, ராகவ னைப் புரிந்து கொள்கிறாள். யாரையோ ‘கட்டாயம்’ கல்யா ணம் செய்யத்தான் வேண்டும் என்ற நிர்ப்பந்தங்களால் இந்திரா கல்யாணம் செய்கிறாள். இது ஒரு வெறும் காதல் கதையல்ல. இலங்கையரசியலைப் பற்றி, எயிட்ஸ் நோயைப் பற்றி, பெண்ணியவாதம் பற்றி, கறுப்பர் அரசியல் நிலை பற்றி எல்லாம் விவாதம் இருக்கிறது. இதில் வரும் பெரும்பாலானவர்கள் எனக்குத் தெரிந்தவர்கள். வாசகர்களும் தெரிந்து கொள்ளட்டும். விமர்சனம் எதிர்பார்க்கிறேன்.
லண்டன், 9.6.2000.
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அவனும் சில வருடங்களும்
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம் – 1
செப்டம்பர் 1985
லிப்ட் கதவுகள் மூடப்பட்டுக் கொண்டிருந்த போது அவள் ஓடி வந்து லிப்ட்டில் புகுந்து கொண்ட வேகத்தில் ராகவனில் மோதிக் கொண்டாள். மார்பில் விழுந்த மாலை போல் அவனில் சரிந்து விழுந்தாள்.
அவனின் ஓவர் கோர்ட் பாக்கட்டில் செருகியிருந்த பேனாவில் அவள் தலைமுடிகள் சிக்கிக் கொண்டதை அவள் அவனுக்குச் ‘சாரி’ சொல்லிக் கொண்டு நகர்ந்தபோது தெரிந்தது.
லிப்ட் நிறைந்திருந்தது. அவள் அவனுடன் ஒட்டிக் கொண்டு நிற்க வேண்டிய நிர்ப்பந்தம். ராகவனின் கிட்டத்தட்ட ஆறு அடி உயரத்தில் அவனின் கழுத்தளவு அவள் உயரம். அவள் அவசரப்பட்டு ஓடிவந்ததால் எழுந்த உஷ்ணமான மூச்சுகள் அவன் கழுத்தைத் தழுவின.
அவள் இவனைப் பார்த்து இன்னொருதரம் ‘ஸாரி’ சொன்னாள். அப்படி ஒரு கோடி நில விழிகளை அவன் தனது இருபத்தி ஐந்து வயது அனுபவத்தில் இதுவரை சந்தித்ததில்லை.
அவன் பதிலுக்கு ஒரு புன்சிரிப்பைத் தந்தான். அவன் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறான். லண்டனில் ஒரு திரைப்படக் கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதைப் போன வருடம் வரை அவன் கற்பனை செய்யவில்லை.
‘தாங்க் யு டேவிட்’ என்று ராகவனின் மனம் சொல்லிக் கொண்டது. ராகவனின் சினேகிதன் டேவிட் உதவி செய்திருக்காவிட்டால் அவன் இன்று இங்கு வந்திருக்க முடியாது. அவன் நேரத்தைப் பார்த்தான். காலை ஒன்பது மணி. முதல்நாளே அவன் லேட்டாகப் போக விரும்பாமல் அதிகாலையில் புறப்பட்டான்.ஆனாலும் பஸ்ஸில் வந்ததால் காலை நேர ட்ராவிக் பிரச்சினையாகிவிட்டது. லண்டன் ட்ராவிக் என்று பயந்து கார் எடுத்து வராதது பற்றி யோசித்தான். கார் கொண்டு வந்தாலும் பார்க் பண்ண இடம் இருக்குமா? லிப்ட் ஏதோ தளத்தில் நின்றது.
கிட்டத்தட்ட லிப்ட் காலியான மாதிரியானது. அவள் இப்போது கொஞ்சம் நகர்ந்து நின்றாள். ஆனாலும் அவள் அணிந்திருந்த வாசனைத் திரவியம் ராகவனில் படிந்து விட் டாற்போல உணர்வு இனித்தது. பதினான்காம் மாடி வந்த போது அந்த லிப்ட்டில் எஞ்சியிருந்தவர்கள் அவனும் அவளும் தான்.
லிப்ட் கதவு திறந்ததும் அவன் விரைந்தான். அவளும் பின் தொடர்ந்தாள்.
திறந்திருந்த விரிவுரை மண்டபத்தில் ஏற்கனவே வந்திருந்த மாணவர்களின் பார்வையும் அவர்களுடன் அமர்ந்திருந்த அதிபர் மிஸ்டர் ஜான் பேர்ன்ஸ்ரைனின் பார்வையும் இவர்களை மொய்த்தன. புதிய உலகம், புதிய எதிர்காலம் அவ்வி டம் உட்கார்ந்திருக்கும் மாணவர்கள் வரப் போகும் மூன்று வருட காலத்தில் அவனின் சக மாணவர்கள் “வெல்கம் ராகவன், வெல்கம் டெவீனா”. மிஸ்டர் ஜான் பேர்ன்ஸ்ரைனின் குரலில் கனிவு கலந்திருந்தது.
இந்தக் கல்லூரிக்குக் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு முன் ஒரு நாள் டேவிட் ராகவனைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தான்.
அன்றைக்கே ஜான் பேர்ன்ஸ்ரைனை ராகவனுக்குப் பிடித்து விட்டது. நன்றியுடன் உட்கார்ந்தான்.
திரைப்படக் கல்லூரியின் இன்ரவியுக்கு வந்திருந்த போது சில இரண்டாம், மூன்றாம், எல்லா வருட மாணவர்களையும் இனி வரப்போகும் சிலரையும் சந்தித்தான். டெவீனாவைக் கண்டில்லை.
முதல் நாளே அவள் தன்னில் மோதிக் கொண்ட விதம் மனதில் பதிந்தது. ஆரம்ப அநுபவங்கள் அடிமனத்தில் பதிந்தது. அதிபர் தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் மாணவர்க ளைப் பார்த்தார்.
டெவீனாவும் ராகவனும் காலியாகக் கிடந்த இரு நாற்காலிகளில் அருகருகே உட்கார்ந்திருந்தார்கள்.
“திட்டமிடாத சந்திப்புக்கள், திட்டமிடாத எதிர்பார்ப்புக்கள், இப்படி எத்தனையோ இன்றிலிருந்து தொடங்கும், இல்லையா”
ராகவன் எதை நினைத்தானோ அதையே அதிபர் சொன் னது நம்ப முடியாமலிருந்தது. அதிபரின் கண்களின் அபாரமான கூர்மை ஒவ்வொருத்தரையும் ஊடறுத்தது.
“எனக்கு வயது ஐம்பது. இந்தக் கல்லூரியின் அதிபராகப் பத்து வருடங்களாகக் கடமை செய்கிறேன். இந்த வருடம் தான்…”
அதிபர் சொல்வதை ஒரு கணம் நிறுத்திவிட்டு எல்லோரிலும் தன் பார்வையைத் தவழவிட்டார்.
“…இந்த வருடம்தான் ஒரு இன்ரர் நாஷனல் மாணவர் கூட்டத்தைச் சந்திக்கிறேன். பிரான்சைச் சேர்ந்த அலான் பார்டோ, இத்தாலியைச் சேர்ந்த அன்ரனியோ, இலங்கையைச் சேர்ந்த ராகவன், மேற்கு இந்தியத் தீவைச் சேர்ந்த மைக்கல், அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் ஸ்ரீவன், அயலண்டிலிருந்து வந்திருக்கும் ப்ராயன் எல்லோரையும் பார்த்துச் சந்தோசப் படுகிறேன்” அவர் சொல்லும்போது குரலில் மிகவும் சந்தோசம். அவரின் சோழப்பூ நிறத்தாடியைத் தடவிக் கொண்டார். அவர் பெருமிதத்திலும், சினேகிதத்திலும் கண்கள் மின்னியது.
“மிஸ்டர் ஜான் பேர்ன்ஸ்ரைன் ஒரு யூதன். ஹிட்லர் செய்த கொடுமைகளிலிருந்து தப்பியோடிய அகதித் தம்பதிகளின் மகனாக ரோம் நகர அகதி முகாம் ஒன்றில் பிறந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களில் மிகவும் ஆர்வமுள்ளவர்.பெண்கள் விடுதலையில் அக்கறை காட்டுபவர்” டேவிட் சொன்ன வார்த்தைகளை ஒரு தரம் ஞாபகப் படுத்திக் கொண்டான்.
“இன்ரவியுவிக்கு வந்தபோது ஏன் நீங்கள் திரைப்படப் பட்டப்படிப்பு படிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று சொன்னீர் கள். உங்கள் லட்சியங்களை அல்லது உணர்வுகளை உங்களின் சக மாணவர்களின் உணர்வுகளுடன் கலந்து கொண்டால் ஒருத்தரை உணர்ந்து கொள்ள உதவியாக இருக்குமில்லையா?”
அவர் இன்னொருதரம் தன்னுடைய பொன்னிறத் தாடியைத் தடவிக் கொண்டார்.
“இன்டர்வியுவிக்கு வந்தபோது ஒரு சிலரைச் சந்தித்திருப்பீர்கள். இன்றுதான் இருபத்தி எட்டுப் பேரும் ஒரு இடத்தில் சந்திக்கிறீர்கள். இன்னும் மூன்று வருடம் ஒன்றாக வேலை செய்யப் போகிறீர்கள். ஒருத்தரின் புரடக்ஸனில் இன்னொருத் தர் பங்கெடுக்கப் போகிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் எனது பெஸ்ட் விஷெஸ்” தனது தலைமையின் கீழ் இந்த இளைஞர்கள் மூன்று வருடத்தைச் செலவழிக்கப் போவதை அவர் தொனி எதிரொலித்தது. சுற்றியிருந்த மாணவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர். ஒரு சிலரை ராகவன் சந்திருக்கிறான். இத்தாலியைச் சேர்ந்த அன்ரோனியோவையும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலானையும் இன்டர்வியு நடந்த அன்று சந்தித்திருக்கிறான். எத்தனையருமையான சந்தர்ப்பம் இது. உலகின் பல பாகங்களிலுமிருந்து வந்திருக்கும் மாணவர்களுடன் கலந்து படிப்பது ஒரு வரப்பிரசாதம் என்று நினைத்துக் கொண்டான். “என்ன, யாராவது உங்களைப் பற்றிச் சொல்லத் தொடங்குங்கள்…கமான் ஜேன்'”
அதிபரால் ஜேன் என்று கூப்பிட்ட பெண் தொண்டையைக் கனைத்துக் கொண்டாள்.
அவள் தலையை ‘பொப்ட்’ செய்திருந்தாள். ஒரு துளி மேக் அப்பும் இல்லாத முகம். ஜீன்சும் ஜம்பரும் தாள். முகத்தில் அலாதியான நம்பிக்கை. யாரையும் மிடுக்காகப் பார்க்கும் பார்வை. அவள் தன்னைச் சுற்றியிருந்த தனது சக மாணவர்களைப் பார்த்தாள்.
”எனது பெயர் ஜேன் டார்வின். எனக்கு வயது இருபத்தி நான்கு. இதுவரைக்கும் ஆபிஸ் உத்தியோகத் திலிருந்தேன். எப்போதும் சினிமாத் துறையில் ஆர்வமிருந்தது. இப்போது தான் எனது ஆசை நிறைவேற இடம் கிடைத்திருக்கிறது. எனக்குக் கிடைத்திருக்கும் இந்த மூன்று வருடத்தையும் உருப்படியாகப் பயன்படுத்தி நன்மை பெறுவேன் என்று நினைக்கிறேன்.” எல்லோரும் கொல் என்று சிரித்தனர். ஜேனின் வார்த்தைகள் உண்மையாயிருந்தன.
இப்படியே ஒவ்வொருத்தரும் சொல்லிக் கொண்டேயிருந்தனர்.
“அந்ரோனியோவிடமிருந்து இத்தாலிய திரைப்பட வளர்ச்சி பற்றியும், அவனிடமிருந்து பிரன்ஞ் திரைப்பட உலகத்தில் நடக்கும் மாற்றங்களையும் ராகவனிடமிருந்து இந்தியப்பட உலகத்தையும் பற்றியறிய ஆவற்படுகிறேன்”
மிஸ்டர் ஜான் பேர்ன்ஸ்ரன் சொல்லிக் கொண்டு நேரத்தைப் பார்த்தார்.
“இப்போது நேரம் பதினொரு மணி. காப்பி சாப்பிடும் நேரம். ஸ்ருடன்ட்ஸ் கன்டீன் எங்கேயிருக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதேயிடத்தில் பதினொன்று முப்பதுக்குச் சந்திக்கிறேன்”
அவர் போய் விட்டார்.
சட்டென்று கலகலப்புத் தொடங்கியது.
ஜேன் தானாக வந்து ராகவனிடம் பேசினார்.
அவளை அவனுக்குப் பிடித்து விட்டது.
கன்டீனுக்குப் போகும் வழியில் “எனக்கு ஏதோ பயமாக இருக்கிறது” டெவீனா சொன்னார்.
ராகவன் திருப்பிப் பார்த்தான். டெவீனா யாரோடோ பேசிக் கொண்டு வந்தாள். அவளுடன் பேசிக் கொண்டு வந்தவன் பிலிப் ஹமில்டன் என்பவன். இப்போதே ஒரு பட டிஸ்ரிபியுட்டிங் கம்பனியில் வேலை செய்வதாக மாணவர் இன்ரடக்ஷன் போது சொன்னான்.
பிலிப் மெஷினில் கோக் எடுக்கும்போது டெவீனா ராகவன் பக்கம் திரும்பினாள்.
ஒன்றிரண்டு மணித்தியாலங்களுக்கு முன் அவசரத்தில் ஓடிவந்து இவன் மார்பில் மாலையாய் விழுந்த ஞாபகம் வந்தது. அவளின் உயர்ந்த தோற்றம் பொன்னிறத்தலை சட்டென்று நிலைத்து நிற்கும் ஞாபகப் பிரதிகளாயிருந்தன
டெவீனா ஸேர்லிங் (Deveena Shirling) பெரிய இடத்துப் பெண் போல் தோன்றினாள்.
திரைப்பட ஆர்வத்திலிருக்கும் ஜேன் என்ற பெண்ணுக்கும், தான் கடந்த ஐந்து வருடமாக ஒரு புகைப்பட டிவலப் கொம்பனியில் வேலை செய்கிறேன் என்று அறிமுகம் செய்து கொண்ட சில்லியா என்ற பெண்ணுக்கும் டெவீனாவுக்கும் எத்தனையோ வித்தியாசமிருந்தது.
“உங்களுக்கு ‘நேர்வசாக’ இல்லையா” டெவீனா ராகவனைப் பார்த்துக் கேட்டாள். தனக்கு இருபத்தி இரண்டு வயது என்று அறிமுகம் செய்து கொண்டாள். ஆனாலும் முகத்தில் இன்னும் குழந்தைத் தனமான இனிமை பார்க்க அழகாக இருந்தது.
ராகவன் ஒரு கணம் மறுமொழி சொல்லாமல் கையில் வைத்திருந்த ஆரேன்ஞ் கிளாசைப் பார்த்தான்.
“இல்லை….. எதிர்காலத்தை ஒரு ஷாலன்ஞ் என்று எடுத்துக் கொள்ளப் போகிறேன்”
ராகவன் இப்படிச் சொல்லும்போது அவனின் பார்வை அவளிற் பதிந்திருந்தாலும் ஞாபகம் எங்கேயோ பறந்தோடி யதை அவள் உணர்ந்தான்.
“உங்கள் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி ஒரு காலத்தில் படம் எடுப்பீர்களா” டெவீனா சட்டென்று கேட்டாள்.
மாணவர் அறிமுகம் நடந்த போது ராகவன் சொன்னதை அவள் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். அவன்தான் இலங்கைத் தமிழன் என்றும் தனது இனத்தின் விடுதலை பற்றியும் சொன்னான்.
“எனது இனம் ஒடுக்கப்பட்ட இனமாக வதைபடுகிறது, அந்த இனத்தின் விடுதலைக்கு எனது படிப்பு உதவுமாயிருந்தால் நான் பெருமைப்படுவேன்” என்று அவன் சொன்னதை அவள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
அவனது கேள்வி, அந்த முக பாவம், அவனில் அவள் வைத்திருந்த விழிகளின் கபடமற்ற தன்மை அந்த நிமிடத்தின் பின் இனி ஒருதரம் அவனால் ரசிக்க முடியாதது என்பதை அவன் அறியான். செப்டம்பர் மாதக் காலையிலும் வெயில் கன்டீன் ஜன்னலால் எட்டிப்பார்த்தது. அவள் கண்களில் பிரதிபலித்த அந்த அழகு அவனுள் புதைந்து விட்டது.
“அட, என்ன புதினமாயிருக்கிறது. எங்கட ஆண்களும் திரைப்படப் பட்டப்படிப்புக்கு வருவார்களா”
ராகவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். கையில் ஒரு தோடம்பழத்தை உரித்தபடி ஒரு பெண் – தமிழ்ப் பெண் நின்றிருந்தாள், தமிழில் பேசினாள்.
“என்ன அப்படிப் பார்வை? புது மாணவர் பட்டியலில் ராகவன் சிற்றம்பலம் என்ற பெயர் இருந்தது. யார் என்று தேடிக் கொண்டிருந்தேன்… எனது பெயர் புவனா நாராயணன்… இரண்டாவது வருட மாணவி. உனது பெயரைப் பார்த்ததும் தமிழாயிருக்கிறதே என்று ஜானைக் கேட்டேன். நீயும் ஒரு இலங்கையன் என்று அவர் சொன்னார்”.
ராகவன் விழுந்து விழுந்து சிரித்தான். அவள் சொன்ன விதம் மிகவும் வேடிக்கையாயிருந்தது.
“என்ன அப்படிச் சொல்லி விட்டேன்? எங்கள் இலங்கையர் டாக்டர், எஞ்சினியராகத்தானே படிப்பார்கள்” புவனாவின் கேள்வி சரியானதுதான்.
“இந்தா, உனக்குத் தோடம்பழம் பிடிக்குமா?” அவன் ஆமாம்… இல்லை. சொல்ல முதல் அவன் கைகளில் தோடம்பழச் சுளைகளில் சிலவற்றைத் திணித்தது. அவனது அம்மாலை ஞாபகப்படுத்தியது.
“லன்ஞ் டைம் பார்க்கலாம்” புவனா மறைந்து விட்டாள்.
அத்தியாயம் – 2
இன்றைக்கு நடந்ததெல்லாம் கனவாக இருக்கிறது.
அப்பா இருந்திருந்தால் பெருமைப்பட்டிருப்பாரா? ஜன் னலுக்குள்ளால் வெளியாற்பார்த்தான். செப்ரம்பர் மாதக் குளி ரில் உலகம் கம்பளி கோட்டுக்களுக்குள் மூடிக் கிடந்தது.
பின்னேர சந்தடியில் பஸ் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.
வாட்டர்லூ பாலத்தில் பஸ் ஓடிக் கொண்டிருந்தது. பாலத் திற்கு அப்பால் பிரித்தானிய பாராளுமன்றம் பிரமாண்டமாக உயர்ந்து தெரிந்தது.
‘எட்டு வருடங்களுக்கு முன் லண்டனுக்கு வந்தபோது இன்று இப்படிப் பிரயாணம் செய்வேன் என்று நினைத்திருப்பேனா?’ படத்துறைப் படிப்புக்குத் தன்னை உற்சாகப்படுத்திய டேவிட்டில் நன்றி பிறந்தது. ராகவன் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது. அப்பா இருந்தால் என்ன சொல்லியிருப்பார்? மற்றவர்கள் போல் வேறு படிப்புக்கள் பற்றிச் சொல்லியிருப்பாரா? புவனா சொன்னது போல் எப்படியோ படித்து டொக்டரோ அல்லது எஞ்சினியராகவோ வரப்பார் என்று புத்தி சொல்லியிருப்பாரா? அம்மாவும் தமக்கை கீதாவும் இவன் திரைப்படத்துறையைத் தேர்ந்தெடுத்ததை வியப்புடன் பார்த்தார்கள்.
புவனா வித்தியாசமான தமிழ்ப் பெண். தனது தாய் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் லண்டனுக்கு படிக்க வந்ததாகச் சொன்னாள். தந்தையை பற்றி அதிகம் சொல்ல வில்லை. லண்டனிற் பிறந்து வளர்ந்து தமிழ்ப் பெண் வித்தியாசமாக உலகத்தைப் பார்க்கிறாள் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
அப்பா இருந்திருந்தால் அம்மாவிடம் தர்க்கம் பண்ணியிருக்கலாம். அம்மாவுக்கு இவன் ‘இந்த விசர்த்தனமான படிப்பெல்லாம் படிப்பது விருப்பமில்லை.
‘திரைப்படப் பட்டப் படிப்பு படிக்கப் போகிறேன்’
இவன் சொன்ன போது இவனது மைத்துனன் மகாலிங்கம் கிண்டலாகப் பார்த்தான்.
“என்ன பாலு மகேந்திராவாக வரும் உத்தேசமா?”
மகாலிங்கத்துக்கு எவரும் எதையும் கிண்டலாகத்தான் பார்க்க முடியும். தனிப்பட்ட முறையில் மகாலிங்கம் மேற்படிப்பு படித்து முன்னுக்கு வராமல் கடை வைத்து வாழ்க்கை நடத்துவதும் ஒரு காரணமாய் இருக்குமா?
ராகவனில் மகாலிங்கம் பெரிதாக ஒரு மதிப்பும் வைக்காததற்குக் காரணம் ராகவன் குடும்பத்திற்காக ஏதோ குறைந்த சம்பளத்தில் வேலை செய்ததாக இருக்கலாம். ராகவனின் தம்பி கணேஸ் எஞ்சினியராகவும் தங்கை வழக்கறிஞராகவும் படித்து முடித்திருக்கிறார்கள்.
பஸ் வார்டர்லூ பாலத்தின் பக்கத்தைக் கடந்து பி.பி.சி. கட்டிடத்தைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது.
“ஒரு காலத்தில் எனது மக்களின் பிரச்சினை பற்றி ஏதும் டொக்குமென்டரி எடுப்பேனா?”
ராகவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். இவனது நண்பன் ஆனந்தனும் ராகவன் திரைப்படப் பட்டப்படிப்பும் படிக்கப் போகிறேன் என்று சொன்னபோது ஆச்சரியத்துடன் பார்த்தான்.
“இனவாதத் திமிர் பிடித்த இங்கிலாந்தில் திரைப்படப் பட்டம் படித்து என்ன பண்ணப் போகிறாய்? சாப்பாட்டுக்கே கஷ்டப் படப்போகிறாய்? சுதந்திரமான தயாரிப்பாளருக்குள்ள கஷ்டங்கள் உனக்குத் தெரியாதா”
ஆனந்தன் ஒரு உண்மையான நண்பன். மகாலிங்கத்தைப் போல் குதர்க்கமாகப் பேசி குத்திப் பேசத் தெரியாதவன்.
நேர்மையான உணர்வுகள் கொண்டவன். ராகவன் இலங்கையை விட்டு ஓடிவந்த காலத்தில் வந்த தமிழ் இளைஞன். அதே போல ஆனந்தனும் ஒரு தமிழ் அகதி. பிறந்த நாட்டு நிலமை பற்றி யோசிப்பவன்.
எப்போது இலங்கைக்குத் திரும்பிப் போவோம் என்று பெருமூச்சு விடுபவன். எப்போது எங்களுக்கு விடிவு வரும் என்று ஓயாது கேட்பவன். தமிழர்களின் விடுதலை எங்கே என்று பெருமூச்சு விடுபவன்.
”டேவிட் உன்னைக் குழப்பி விட்டானா” ஆனந்தன் ஒரு நாள் கேட்டான்.
“யாரையும் யாரும் குழப்பி விட முடியாது. எனக்கு எப்போதும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருக்கிறது என்று உனக்குத் தெரியும்தானே”
“புகைப்படத்தில் உள்ள இன்டரெஸ்ட் உருப்படியாக ஏதோ செய்ய உதவுமா”
“ஆனந்தா எது எப்படி நடக்கும், எப்படி எதிர்காலம் இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது, என்னால் செய்ய முடியும் என்று நினைப்பது தைரியம் என்றால் செய்ய முடியுமா என்று நினைப்பது அவநம்பிக்கை. மனிதர்களின் வாழ்க்கை தைரியத்திலும் நம்பிக்கையிலும்தான் உள்ளது.”
ராகவன் சிரித்தபடி சொன்னான்.
ஆனந்தன் நண்பனை உற்றுப் பார்த்தான்.
“எனக்கென்னவோ நீ உன் எதிர்காலத்துடன் விளையாடுகிறாய் என்றுதான் நினைக்கிறேன்.”
“ஆனந்தா, இப்படித்தான் வாழவேண்டும் என்று திட்டம் போட்ட எந்த வாழ்க்கையும் வெற்றியடைந்ததாக எனக்குத் தெரியாது. அதற்காக எப்படியும் வாழ்ந்து தொலைக்க வேண்டும் என்ற ஏனோ தானோ மனப்பான்மையும் எனக்கில்லை. வாழ்க்கையில் எனது மனத்திருப்திக்கு ஏற்பட நடந்து கொண்டால் நல்லது என நினைக்கிறேன். காசு எந்த விதத்திலும் உழைத்துத் தொலைக்கலாம். ஆனால் எனக்கு காசு பெரிதில்லை.
கலையாசை, மனித உறவுகளும் மேன்மை தரும் உணர்வு கூட இருக்கிறது. நான் பிறந்த சமுதாயத்தின் வரலாற்றில் ஒரு துளியையாவது எனது கலைப் படைப்புக்களில் பிரதிபலிக்க முடியுமானால் அதே எனக்குத் திருப்தி.”
மேற்கண்ட வார்த்தைகளையுதிர்த்த ராகவனை ஆனந்தன் ஆழமாகப் பார்த்தான். வசதியாக வாழ்ந்த தமிழ் மத்தியதரக் குடும்பத்திலிருந்து வந்த ராகவன் அரசியல் ரீதியான பிரச்சினையால் அகதியாக வந்து லண்டனிற் கண்ட அனுபவங்கள் இப்படிப் பேச வைக்கிறதா? ஆனந்தனின் அனுபவங்களும் ராகவனின் ஆநுபவங்களும் மிகவும் வித்தியாசமானவை. அன்று அவர்கள் அலெக்ஸாண்ரா பலஸ் என்ற இடத்திலுள்ள பெரிய பார்க்கில் நடந்து கொண்டிருந்தார்கள்.
“நீ எனது முடிவுக்கு ஆதரவு தருவாய் என்று எதிர்பார்த்தேன். நீயே இப்படிச் சொன்னால்….”
ஆனந்தனைத் துயரத்துடன் பார்த்தான் ராகவன்.
ஆனந்தன் லண்டனுக்கு வந்து இரண்டு வருடங்களாகின்றன. கொழும்பில் நடந்த பயங்கர இன வெறியில் சிங்களக் காடையர்களால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழர்களில் ஆனந்தனின் குடும்பமும் ஒன்று. ஆனந்தன் அந்தக் கால கட்டத்தில் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் போயிருந்ததால் உயிர் தப்பினான்.
உறவினர்களின் உதவியுடன் லண்டன் வந்திருக்கிறான். விரக்தியும் வேதனையும் நிறைந்தவன் ஆனந்தன். ராகவனின் மனத்தில் ஓடிய நினைவுகளை பஸ் நின்ற போது ஏறிய ஒரு இளம் ஆசியப் பெண் கலைத்தாள்.
‘எப்போது இந்திரா லண்டனுக்கு வந்தாள்.’
கேள்வி ராகவனின் நாக்கு நுனியில் இடறுபட்டது. பஸ்சில் ஏறிய பெண் இவனைக் கடந்து போய் பின் பக்க இருக்கையில் இருந்து கொண்டாள்.
தான் அனுமானித்தது பிழை என்பது தெரிந்ததும் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
‘மாமா கடைசிவரையும் இந்திராவைத் தனியாக லண்டனுக்கு அனுப்பமாட்டார்’ அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அம்மா இவன் வீட்டுக்குள் காலடி வைத்ததும் புருவத்தைச் சுழித்துக் கொண்டாள்.
‘ஏன் இவ்வளவு நேரம்’? என்று கேட்கப் போகிறாளா?’
அம்மாவின் நெற்றியில் உள்ள சுருக்கங்களைப் போல அவள் கண்களிலும் எப்போதும் கேள்விகள் தொங்கிக் கொண்டிருக்கும்.
வாய்மொழியை அதிகம் பிரயோசனப்படுத்தாமல் அங்கங்களின் மூலம் பேசத் தெரிந்த பெண்களுக்கு அம்மா பேராசிரியையாக இருக்கலாம். ராகவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
அவன் அவளின் மூத்த மகன். மூத்த மகளாகக் கீதா இருந்தாலும் ராகவனில் அவனுக்குப் பெரிய அக்கறை. அதற் குக் காரணம் முதல் மகள் கீதாவுக்குப் பின் ஐந்து வருட இடைவெளியில் இரண்டு குழந்தைகள் இறந்து பிறந்தது காரணமாக இருக்கலாம்.
ராகவனை அம்மா கருவிற் தரித்தபோது அவன் அப்பா திருக்கேதீஸ்வரத்தில் பப்ளிக் ஹெல்த் இன்ஸ்பெக்டராக இருந்தார்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பளிச்சென்று பரந்த பாலாற்றின் கரையில் அன்புக் கணவனோடும் அருமை மகள் கீதாவுடனும் குடித்தனம் நடத்தியபோது தூரத்திற் தெரிந்த திருக்கேதீஸ்வரக் கோபுரத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுவாள். அப்போது ராகவனை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாள். ‘இறைவா என் குழந்தையை உயிருடன் தந்து விடு’ அந்தத் தாயின் பிரார்த்தனைக்குக் கடவுள் ஆசி கிடைத்தது போல் அவன் பிறந்தான்.
முதல் இரண்டு வருடமும் எத்தனையோ வருத்தங்களுடன் போராடிய பின் அம்மாவின் வயிற்றில் இன்னொரு குழந்தை வந்ததும் ராகவன் அப்பாவின் செல்லப் பிள்ளையானான்.
ஆனாலும் அம்மாவின் கவனம் எப்போதும் தன் ‘நோஞ்சான்’ மகனில் தானிருந்தது.
“சாப்பிடப் போகிறாயா அல்லது டீ போட்டுத் தரட்டா” எப்போதும் சாப்பாட்டு ஞாபகம்தான் அம்மாவுக்கு!
அவன் மறுமொழி சொல்லவில்லை. கொண்டு வந்திருந்த புஸ்தகங்களை மேசையில் போட்டு விட்டு சோபாவில் தொப்பென்று விழுந்தான். “என்ன மறுமொழி வராதா” அம்மா சலிப்புடன் சமயலறைக்குள் போய்விட்டாள். காலையிலிருந்து இதுவரைக்கும் ஒரேயடியாகப் பெண்களாலேயே சூழப்பட்டது போன்ற உணர்வு.
மாலையாய் வந்து மார்பில் விழுந்த டெவீனா, முன்பின் தெரியாத பெண்ணாக இருந்தாலும் சக மாணவன் என்ற உரிமையில் சகஜமாகப் பழகும் ஜேன், ஏதோ ஒன்றாக வாழ்ந்து பழகியது போல் களங்கமற்றுத் தன்னுடன் பேசிய புவனா, இந்திராவை ஞாபகப்படுத்திய பஸ்சில் கண்ட பெண்கள் எல்லோரும் ஒரேயடியாக அவன் மனத்தில் ஊர்வலம் வந்தார்கள்.
“எப்படிக் கொலிஜ்?”
அவன் தங்கை மைதிலி இப்போதுதான் குளித்துவிட்டுத் தலையில் டவலைச் சுற்றிக் கொண்டு வந்தாள்.
“எப்படிக் கொலிஜ்?” அவன் திருப்பிக் கேட்டான். அவள் பதினெட்டு வயதில் யூனிவசிட்டிக்குப் போனவள். இவன் இருபத்தி ஐந்து வயதில் போயிருக்கிறான். மைதிலியின் முகத்தில் குறும்புச் சிரிப்பு. அவன் தலையில் ஒரு செல்லக் குட்டு ஒன்றைக் கொடுத்து விட்டு அம்மாவைத் தொடர்ந்தான்.
“அம்மா ஒண்டும் செய்யாதேங்கோ… பசிக்கல்ல.”
“ஸ்ருடன்ஸ் கிளப்பில் ஏதோவெல்லாம் சாப்பிட்டு வயிறு சரியில்ல” அவன் உண்மையைச் சொன்னான்.
அம்மா இன்னொருதரம் இவனைத் தன் பார்வையாற் துளைத்தெடுத்தாள்.
பேசிக் கொண்டிருக்கும்போது கதவு திறக்கப்பட்டது. தம்பி கணேஸ் வந்து கொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்து தமக்கை கீதாவும் கணவன் மகாலிங்கமும் அவர்களின் குழந்தை சத்தியாவும் வந்து கொண்டிருந்தார்கள்.
வீடே நிறைந்து விட்டது. அம்மா பரபரப்புடன் ஏதோ வெல்லாம் செய்து கொண்டிருந்தாள்.
“எப்படி மிஸ்டர் பாலு மகேந்திரா” மகாலிங்கத்தின் குரலில் வழமையான கிண்டல். ராகவன் மறுமொழி சொல்ல வில்லை.
“ஏதும் நடிகைகளைச் சந்திக்கவில்லையா” மைத்துனரின் கிண்டலைப் பொருட்டுத்தாமல் சத்தியாவைத் தூக்கிக் கொண்டு செல்லம் பண்ணினான் ராகவன்.
“எந்தக் கோடிஸ்வரன் பணம் தருவான், படம் எடுக்க” மகாலிங்கம் இடைவிடாமல் தொடர்ந்தான்.
“மாமா போன் பண்ணினார்”
அம்மா சட்டென்று ஞாபகம் வந்ததுபோல் சொன்னாள். “உனது படிப்பு விடயம் பற்றி ஆசீர்வாதம் சொன்னார்” பஸ்சில் கண்ட பெண் இந்திராவை ஞாபகப்படுத்தியது. நினைவில் வந்தது. இந்த நேரத்தில் அதைச் சொன்னால் இந்தக் குடும்பம் அவனைச் சீண்டத் தொடங்கும் என்று தெரியும். மௌனமானான்.
கதவு மணியடித்தது, ஆனந்தன் வந்தான். ராகவன் எதிர் பார்த்ததுதான் “எப்படிக் கொலிஜ்?” அவன் அப்படிக் கேட்ட தும் மைதிலி களீர் என்று சிரித்து விட்டாள். கொஞ்ச நேரத்திற்கு முன் அதே கேள்வியை அவள் கேட்டிருந்தாள்.
“கொலிஜ்…? பதினான்கு மாடிக் கட்டிடம். கடைசி மாடியில் எங்கள் டிப்பார்ட்மென்ட் இருக்கிறது. மொட்டை மாடிக்குப் போனால் லண்டனை ஒரு பனாராமிக் வியுவில் பார்த்து ரசிக்கலாம்… எனது வகுப்பில் நிறைய வெளிநாட்டு மாணவ மாணவிகள் இருக்கிறார்கள்… பைத வேய் எங்கள் நாட்டைச் சேர்ந்த புவனா என்ற பெண்ணும் படிக்கிறாள்… நாளைக்கு எங்களுக்கு வெல்கம் பார்ட்டி வைக்கிறார்கள்… எனது அதிபர் ஒரு யூதன்… அடக்கப்பட்ட மக்களில் மிகவும் அநுதாபம் உள்ளவர்; சரி எல்லாக் கேள்விகளுக்கும் மறு மொழி சொல்லி விட்டேனா?”
ராகவன் கேட்டபோது எல்லோரும் சிரித்தார்கள். “ஏதோ கவனமாகப் படித்தாற் சரி” அம்மாவின் குரலில் பிரார்த்தனை கலந்திருந்தது.
அத்தியாயம் – 3
அடுத்த நாள் கொஞ்சம் நேரம் முந்தியே புறப்பட்டான் ராகவன். வகுப்பில் கடைசியாய்ப் போய்ச் சேர விரும்பவில்லை.
எலிபன்ட் அன்ட் காஸில் அண்டர் கிரவுண்டில் வந்து இறங்கிறான். காலை நேரத்தில் ஹரிங்கேய் நகரிலிருந்து (Haringey) கொலிஜுக்கு வர பஸ்ஸை நம்பியிருப்பதில்லை என்று முடிவு செய்திருந்தான்.
லிப்ட்டுக்குள் போனதும் நேற்றைய ஞாபகம் வந்தது. டெவீனா ஸேர்லிங் ஒரு மத்திய தர வகுப்புப் பெண் என்று தெரிந்தது. நேற்று பின்னேரம் ஸ்ருடன்ஸ் கிளப்பில் சந்தித்த போது தான் இந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தது சரிதானோ என்று அவள் சொல்லியது ஞாபகம் வந்தது.
ஏதோ எல்லாம் யோசித்தபடி லெக்ஸர் ஹாலின் ஜன்னலால் தூரத்தே தெரியும் பார்லிமெண்ட் கட்டிடத்தில் பார்வையைப் பதித்திருந்தான்.
இன்றும் ஒன்பது மணியாகவில்லை. யாரோ வரும் காலடி கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அதிபராயிருந்தால் அவருடன் பேச வேண்டும் என்று நினைத்திருந்தான்.
”குட் மோர்னிங்…..” டெவீனாவின் குரலில் உற்சாகம்.
ராகவன் குட் மோர்னிங் சொன்னான்.
“நேற்று லேட்டாக வந்த இருவரும் இன்று முந்தி வந்து விட்டோம்” அவள் குரலில் ஒரு குழந்தையின் குதூகலம்.
செப்ரம்பர் மாதக் குளிர் ஊசி முனையாய் உடம்பைத் துளைக்கும்போது அவள் மெல்லிய சேர்ட்டும் ஜீன்சும் போட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.
“ஸாரி… உங்கள் பெயரை மறந்து விட்டேன்” தர்ம சங்கடத்துடன் சொன்னான்.
வகுப்பறையில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த மாணவர் லிஸ்டைக் காட்டினான்.
“அதில் உள்ள ஒரே ஒரு ஆசியப் பெயர் என்னுடையது” அவன் தன் பெயரைச் சொல்லாமல் தூரத்திலுள்ள மாணவர் லிஸ்டைக் காட்டியது அவனுக்குக் குழப்பமாயிருந்தது என்பதை முகம் சுட்டிக் காட்டியது.
“எனக்கு இந்தியர்களுடன் அதிகம் பழக்கமில்லை.” அவன் சொல்லிக் கொண்டு, தான் கொண்டு வந்த புத்தகங்களைத் தன் மேசையில் வைத்தான்.
”நான் இந்தியனில்லை…. இலங்கையிலிருந்து அகதினாய் வந்திருக்கும் ஒரு தமிழன்”
இலங்கை அரசியல் பற்றி அவள் விழிகளை அகலப்படுத்தியபடி கேட்டாள்.
கொஞ்சக் காலமாக இலங்கையில் நடக்கும் தமிழ் விடு தலை போராளிக் குழுக்களிடையே நடக்கும் கொலைகள் பற்றி லண்டன் பத்திரிகைகளைப் படித்திருப்பாள் போலும்.
அவன் மறுமொழி சொல்ல முதல் அவள் தொடர்ந்தாள். “ஐயாம் சாரி… இன்ரர்நாஷனல் பொலிட்டிக்ஸ் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஏதோ பத்திரிகைகளிற் படித்ததைப் பார்த்துக் கேட்கிறேன்.”
“தெரிகிறது” அவன் குரலின் கிண்டலைப் புரிந்து கொண்ட நாணம் அவள் கன்னங்களில் செம்மை பூசிச் சிரித்தது.
“எனக்கு இந்தியா என்றால் ஆசை” அவள் தொடர்ந்தாள். “ம்” அவன் உம் கொட்டினான்.
இந்தியாவின் காமசூத்திராவும் கஜுராஹோ கோயிலும் கறிச்சட்டியும் அல்லது காளித் தெய்வத்தையும் பார்க்கப் போகிறாளா?
“இந்தியாவில் நிறையப் படம் எடுக்கிறார்கள், அந்தப் படங்களைப் பார்த்துத்தான் திரைப்படத்துறையில் உங்களுக்கு நாட்டம் வந்ததா” சுந்தராம்பாளுக்குத் தங்கையா இவள். கேள்விகளே கேட்டுத் தொலைக்கிறாளே! அவன் மறுமொழி சொல்ல வாயெடுத்தபோது மாணவர்கள் வரத் தொடங்கி விட்டார்கள்.
மைக்கல் – மேற்கிந்திய நாட்டிலிருந்து ஒரு காலத்தில் லண்டனுக்கு வந்த கறுப்புத் தாய்தகப்பனுக்குப் பிறந்தவன். டெவீனாவையும் ராகவனையும் மாறிமாறிப் பார்த்தான். பின்னர் ராகவனைப் பார்த்துக் குறும்பாகக் கண் சிமிட்டினான்.
அதிபர் மாணவர்களை, நேற்றுக் காட்டியபோது எஞ்சியிருந்த டிப்பார்ட்மெண்ஸ்சை, காட்டக் கூட்டிக் கொண்டு போனார்.
“இந்த வருடம் அகில உலக மாணவர்கள் நிறைய வந்திருப்பது மிகவும் சந்தோசமான விடயம்” பெண் விரிவுரையாளரான வேர்ஜினியா பாமஸ்ரன் சந்தோசத்துடன் சொன்னார்.
மத்தியானம் கன்டீனுக்குப் போனபோது புவனா ஒரு மூலையில் புத்தகத்தில் கவனம் செலுத்தியிருந்தது இவன் பார்வையிற் பட்டது.
“ஏன் லைப்ரரிக்குப் போயிருந்து புத்தகம் படிக்க முடியாதோ” ராகவன் கேட்டபடி அவள் முன்னால் உட்கார்ந்தான்.
“கடவுளே உன்னைப் பார்ப்பதற்கு இந்த மூலையில் தனிமையில் தவமிருக்கிறேன்” அவள் கிண்டலாகச் சொன்னாள்.
அவன் சிரித்தான். எதையாவது கேட்டு கேள்விகள் படைக்கும் டெவீனா, எதற்குக் கிண்டலாக மறுமொழி சொல்லும் புவனா, எடுத்ததெற்கெல்லாம் சித்தாந்த விளக்கம் சொல்லும் ஜேன் என்பவர்கள் ஒவ்வொரு வினாடியும் அவன் மனத்தில் மின்னிட்டு மறைந்தார்கள்.
அதிகம் மேக் அப் போடாத புவனாவின் புன்னகை மிக மிக வசீகரமாக இருந்தது.
புன்னகை தாங்கிய புவனாவின் முகத்தில் நேர்மை பளிச் சிட்டது. அவள் கூர்ந்து பார்த்தது அவளுக்குத் தர்ம சங்கடத்தை யுண்டாக்கியிருக்க வேண்டும். முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
”உங்களுக்குத் தம்பி தமயன்கள் இல்லை என்று நினைக்கிறேன்” அவள் ஆர்வத்துடன் கேட்டாள். அவளின் பேர்ஸனாலிட்டி அவனைக் கவர்ந்திருந்தது.
“என்னென்று தெரியும்” அவள் தன் விழிகளையுயர்த்திக் கேட்டாள். புருவங்கள் வில்லாய் வளைந்தன.
“அடங்காத வாயிலிருந்து தெரிகிறது” அவன் குறும்புடன் சொன்னான். “ஏய் என்னை மட்டம் தட்டாதே” அவள் தன் புத்தகத்தால் அவன் தலையில் அடித்தாள்.
”எனக்கு ஒரே அக்கா இருக்கிறாள். எதையும் கேட்டுச் சண்டை பிடிக்காதவள் கிடைத்ததை யிட்டுச் சந்தோசப்படுபவள்…” அவனால் தொடர முடியவில்லை. மகாலிங்கத்தைக் கீதாவுடன் சேர்த்துப் பார்க்கும் போது அவன் சில வேளை தர்ம சங்கடப் படுவான்.
கீதாவுக்கு மறுபெயர் பூமாதேவி என்று வைக்கலாமா? அவன் சட்டென்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.
“அவள் ஒரு மண்டைக்கனம் பிடித்தவனைக் கைப்பிடிக்கப் போகிறாள்…அல்லது பிடித்து விட்டாளா”
எத்தனை கூர்மையான பேச்சு இவனுடையது? “என்ன யோசிக்கிறாய்”
புவனா இன்னொருதரம் இவன் தலையில் புத்தகத்தால் தட்டினாள்.
“எனது தங்கச்சி…” சொல்லும்போதே அவன் முகத்தில் மகிழ்ச்சி. மைதிலி ஒரு சந்தோசப் பிராணி. தானும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டு தன்னோடு சேர்ந்தவர்களையும் சந்தோசப்படும் இளம் பெண்.
”ரொம்பவும் சுட்டியான பெண், செல்லம் என்று நினைக்கிறேன்” புவனா சொன்னாள்.
ராகவன் புவனாவைக் கூர்மையைப் பார்த்தான்.
“எனது போய் ப்ரண்ட் ஒரு சைக்கோலஜிஸ்ட். அவன் புத்தகங்களில் பொறுக்கி எடுத்த சிலவற்றைச் சொல்கிறேன் அவ்வளவுதான்.”
“எப்போதும் மூத்த குழந்தைகள் தாய் தகப்பனின் எதிர் பார்ப்புக்களின் பிரதிபலிப்பாக மாறுகிறார்கள். தாங்கள் நல்ல தாய் தகப்பனாக, கெட்டிக்காரத் தாய் தகப்பனாகக் காட்டப் பெரும்பாலோர் தங்கள் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். பாவம், முதற் பிள்ளையாய்ப் பிறந்தோர் பலர் அதி சின்ன வயதிலேயே தங்கள் சுயமையை, குழந்தைத் தனத்தை பறி கொடுத்து விட்டுத் தாய் தகப்பன்களால் அவர்களுக்கு ஏற்றபடி மாற்றப்படுகிறார்கள்…”
அவன் இடைமறித்தான்.
“ஏதோ பிரசங்கம் செய்ய வேண்டாம்… நான் மூத்த மகன்… வீட்டார் எதிர்பார்த்ததற்கெல்லாம் எதிர்மாறாகச் செய்கிறேன்” அவன் உற்சாகத்துடன் கூறினான் “உனக்குத் தமக்கை யிருப்பதாகச் சொன்னாய்” அவள் திருத்தினாள்.
அவன் மௌனமானான்.
அக்கா அம்மாவின் கண்ணீருக்காகக் கல்யாணம் செய்து கொண்டவள்! இந்த நினைவு அவன் மனத்தில் முதற்தரம் சம்மட்டியாக அடிபட்டது.
“ஏய், நீ சினிமா படிக்க வந்த இடத்தில் இந்தத் தர்க்கத்தை எல்லாம் தூக்கி வைத்து விட்டு உருப்படியாகப் படி” அவள் எழுந்தாள். அவளை அவனுக்குப் பிடித்து விட்டது. அவள் பேச்சு, சிந்தனைகள் எளிமையான சுபாவம் எல்லாம் அவனுக்குப் பிடித்து விட்டது. “நீங்கள் இப்படி எல்லாம் பேச எங்கே கற்றுக் கொண்டீர்கள்?”
அவன் கேள்வி அவள் இதழ்களில் ஒரு புன்முறுவலைத் தவழ விட்டது. மலர் விழித்தாற்போன்ற அந்த அழகிய சிரிப்பு அவள் வசீகரத்தின் சிகரம் அவள் கண்கள் பாசத்துடன் அவனை வளையம் வந்தன.
“அநுபவம் தரும் படிப்பை எந்தக் கலாசாலையாலும் தர முடியாது…” எழுந்தவள் கொஞ்ச நேரம் இவனைப் பார்த்த படி நின்றாள்.
“எனக்கு அண்ணாவோ தம்பியோ இல்லை. இரண்டு சகோதரிகள்…” புவனா முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள். கண்களில் படியும் கலங்கத்தை அவள் கண்டு கொள்ளக் கூடாது என்ற தவிப்பு அவனுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.
“ஏய் என்ன ஆசிய மாணவர்கள் அமைப்புக் கூட்டம் போடத் திட்டமா? கறுப்பு மாணவர்கள் சங்கம் ஒன்று தொடங்குவோம். நானும் சேர்கிறேன்” மைக்கல் உரத்த குரலில் சொல்லிக் கொண்டு வந்தான்.
”ஓகே, சீ யூ ராகவன்” புவனா விரைந்து விட்டாள்.
அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த மைக்கல் கண்களில் பளிச்சிடும் கேள்விகளைக் கண்டுபிடிக்க எந்த சைக்கோலஜியும் தேவையில்லை என்று நினைத்தான் ராகவன்.
”உம், எக்ஸெலண்ட் இந்தியன் பியூட்டி” மைக்கல் முணு முணுத்தான்.
“இல்லையப்பா, இலங்கை பியுட்டி” ராகவன் மைக்கலின் தலையிற் குட்டினான். மைக்கல் புவனா போகும் வரைக்கும் வாய் பிழந்தான். கன்டீனுக்கு அதிபர் வருவது தெரிந்தது.
“இந்தக் கல்லூரியில் எங்கள் எதிர்காலத்திற்கு ஏற்ற ஒரு உருப்படியான படிப்புக் கிடைக்கும் என்று நினைக்கிறாயா” மைக்கல் கோர்ட் பொக்கற்றிலிருந்து ஒரு கஞ்சாக் கட்டியைக் கவனமாக எடுத்து சிகரெட் புகையிலைத் தாளில் சேர்த்தபடி கேட்டான்.
ராகவன் தர்ம சங்கடத்துடன் அங்கும் இங்கும் பார்த்தான். கல்லூரியில் பகிரங்கமாகக் கஞ்சா பிடிப்பதைப் பார்த்துப் பயந்தான். “மைக்கல் வாழ்க்கையில் முன்னேற நினைத்தால் அதை ஆத்மார்த்த ரீதியாக நம்ப வேண்டும். யாரோ எங்களுக்கு சேர்ட்டிபிக்கற்றை வெள்ளித் தட்டில் வைத்துத் தரப் போவதில்லை. மனம் ஏற்பது மிகவும் சிக்கலான சக்தி அதைச் சீர்படுத்தி வாழ்க்கையில் நாம் அடைய நினைப்பதைச் செயல் படுத்துவதுதான் எங்கள் இலட்சியமாக, நம்பிக்கையாக இருக்கணும்.”
“ஏய், ஏய் என்ன தத்துவ விளக்கம் சொல்கிறாய்? நான் கஞ்சா குடிப்பதைச் சுட்டிக் காட்டிக் கிண்டலடிக்கிறாயா?” மைக்கலின் குரலில் பாதி கோபம் பாதி ஆர்வம். ராகவன் மறுமொழி சொல்லவில்லை.
கன்டீன் வாசலில் டெவீனாவும் பிலிப்பும் வந்து கொண்டிருந்தது தெரிந்தது.
“கல்லூரிகள் என்றால் புத்தகப் படிப்பையோ அல்லது டெக்னிக்கல் திறமையையோ மட்டும் மேன்படுத்துவதில்லை. மனிதர்களுக்குள் மறைந்து கிடக்கும் தனிப்பட்ட உணர்வுக ளையும்தான் வெளிக் கொணர்கிறது. அந்த உணர்வுகளின் ஆழம், தார்மீகக் கோணங்கள் என்பதை ஒவ்வொருத்தரின் அனுபவமும் எடை போடும் என்று நினைக்கிறேன்.”
ராகவன் தனக்குச் சொல்கிறானா அல்லது வேறு யாருக்கும்தான் சொல்கிறானா என்று மைக்கல் ஒருதரம் தலையைச் சொறிந்து கொண்டான். பின்னர் ராகவனைப் பார்த்தான்.
“ஏய் ராகவன், கல்லூரி என்றதும் புத்தகங்களை கட்டிக் கொண்டு மாரடியாதே, உன் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடு…கஞ்சா அடிப்பதும், கிராக் பாவிப்பதும், கொக்கேயினை உறிஞ்சுவதும், ஹெரோயின் ஊசி போடுவதும், விஸ்கியில் மூழ்குவதும், பீர் அடித்து மூத்திரம் பெய்வதும் மட்டும்தான் கல்லூரிகளில் நடக்கும் என்று நினைக்காதே…” மைக்கல் கிண்டலாகச் சொன்னான்.
ராகவன் மைக்கலை ஏறிட்டுப் பார்த்தான்.
“ராகவன்….. காதலிக்கவும் பழகிக் கொள்” மைக்கல் சத்தம் போட்டுச் சிரித்தான். டெவீனாவும் பிலிப்பும் அப்போது மைக்கல் சொல்வதைக் கேட்டுக் கொண்டு நின்றார்கள்.
பிலிப் மைக்கலைக் கிண்டலாகப் பார்த்தான். ஆண்டாண்டு காலமாக உலகத்தின் அரைவாசிப் பகுதியை ஏகாதி பத்தியம் கொண்ட பார்வையது.
டெவீனா வழக்கம்போல் குழப்பத்துடன் ராகவனையும் பிலிப்பையும் மைக்கலையும் மாறி மாறிப் பார்த்தாள்.
பிலிப் டெவீனாவைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தான். பின்னர் “மேற்கிந்திய நாட்டைச் சேர்ந்த மைக்கல் கிழக்கிந்திய நாட்டைச் சேர்ந்த ராகவனுக்குக் காதலிப்பது பற்றி லெக்ஸர் பண்ணுகிறார்” என்றான்.
ராகவன் இடைமறித்தான்.
“எக்ஸ்கியுஸ்மி பிலிப், நான் இந்தியாவைச் சேர்ந்தவனல்ல. இலங்கையைச் சேர்ந்தவன். வெள்ளை நிறத் தோல் உள்ளோர் எல்லோரும் இங்கிலிஸ்காரரா! அதே போலத்தான் உன்னைவிடக் கொஞ்சம் நிறம் குறைந்த எல்லோரும் ஏதோ இந்திய நாட்டிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நீ நினைப்பது உனது பொதறிவின் மட்டத்தைக் காட்டுகிறது… அத்தோடு யாரும் இன்னொருத்தருக்கு எப்படிக் காதலிப்பது என்று சொல்லித் தரத் தேவையில்லை… காதல் என்பது ஹலோ ஹவ் டு யுடு என்று சொல்லிவிட்டுக் கட்டிலில் முடித்துக் கொள்ளும் வசனமில்லை. காதல் என்பது நிலவில் நடப்பது போல், தென்றலில் தாலாட்டுவது போல் நினைவில் கனியும் ஒரு இனிமையான உணர்வு…”
ராகவனின் நீண்ட பேச்சு பிலிப்பைத் திக்கு முக்காடாக்கியிருக்க வேண்டும். ராகவனின் நீண்ட பேச்சு அவனை யோசிக்கப் பண்ணியிருக்க வேண்டும்.
”மன்னிக்க வேண்டும் நண்பரே, நாங்கள் இருவரும் இரு துருவங்களிலிருந்து உலகத்தைப் பார்ப்பவர்கள்”.
டெவீனாவின் முகத்தில் தர்ம சங்கடம்.
”உம், கலாச்சாரங்கள் எல்லையிருந்தாலும் மனித உணர்வுகள் ஒரே மாதிரித்தானே இருக்கிறது. ப்ராய்ட் சொல்வது போல் அடிப்படை உணர்வுகளால் மனிதன் உந்தப்படுகிறான். சாப்பாடு, நீர், காற்று, காதல் இல்லாமல் மனிதனால் வாழமுடியுமா?”
டெவீனா மேற்கண்ட கேள்வியைக் கேட்டுவிட்டு தனக்கு முன்னால் நிற்கும் மூன்று இன இளைஞர்களையும் பார்த்தாள்; யாரும் மறுமொழி சொல்லவில்லை.
– தொடரும்…
– அவனும் சில வருடங்களும் (நாவல்), முதல் பதிப்பு: ஜூலை 2000, குமரன் பப்பிளிஷர்ஸ், சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |
