உள் மன இருப்பில் ஓர் ஒளி உலகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 127 
 
 

ஆதவன் வெகுநேரமாய், அங்கேயே தரித்து நின்று கொண்டிருந்தான். அதுவும் தனியொரு ஆளாய். தனித்து விடப்பட்ட அந்த நிலை, வேறு ஒரு திசையில் போய்க் கொண்டிருப்பதாய் அவனுக்கு உறைந்தது.

அப்போது நேரம் பத்து மணியைத் தாண்டி விட்டது. பகலின் உக்கிரம் சூடேறிக் கொண்டிருந்த நேரம். தலைக்கு மேலே, உச்சி வெய்யில்.

கிராமத்தில் வாழும் அவனின் பெரிய வீட்டிற்க்கு முன்னால், களை கட்டித் தோன்றுகிற குச்சொழுங்கையில் இப்போது அவன் இருப்பு ஒரு தெய்வீக நிலையாக மாறி விட இது ஓர் அற்புத தருணம். அதற்கு சிறிது தூரம் தள்ளி, மடத்து மாமாவின் வீடே ஒரு கோவில் மாதிரி ஆகி விட்டிருந்தது. அவர் அம்மாவுக்குத் தான் மாமா அதுவும் நெரங்கிய சொந்தத்தில் வந்த தாய் மாமன். அவனுக்கும் அப்படியே கூப்பிட்டுப் பழக்கமாகி விட்டது. ஊரிலே சாதுக்கள் வந்து தங்கி விட்டுப் போக ஒரு மடம் ஸ்தாபித்த காரணத்தினாலேயே அவர் மடத்து மாமாவானார்.

அவன் வீட்டு கிடுகு வேலி தாண்டினால், அவர் வீட்டை அடையலாம். அம்மாவிடம் மிகுந்த பாசம் அவருக்கு. இந்த பாச சங்கதியெல்லாம் சமாதியாகிப் போன ஒரு தெய்வமாக அவரை தரிசிக்க நேர்ந்த புண்ணியம் நொடிப் பொழுதில் தான் நேர்ந்தது. அவனுக்கு அவர் வீட்டினுள்ளே, வராந்த முழுக்க நிரம்பி வழி,யும் ஜனக் கூட்டத்தின் நடுவே புல்லரிக்க வைத்த ஓரு அருமையான காட்சி. வழக்கமாக செத்த வீடென்றால், வீட்டிற்குப் பின்னால், பிணத்தை தூக்கி வந்து, படுக்க வைத்து, பால் இளனீர் எல்லாம் ஊற்றி குளிப்பாட்டுவார்களே. அப்படிச் சொல்லித்தான் இன்றைய வாழ்க்கை தொடர்கிறது. ஆனால், அது போலில்லாமல், மடத்து மாமாவைக் கடவுளாகவே, கண்டு அவரை இருக்க வைத்து அபிஷேகம் வேறு செய்தார்களே. அதை முன் நின்று நடத்தியவர் வேறு யாருமில்லை. அவனது சித்தப்பாவே. தான் நன்றாகப் படித்திருந்தும் அவரும் குருகுலம் கண்டு தேறிய ஆன்மீகவாதி தான்.

ஆனால் அவன் யார்! குடும்ப உறவுகளிலேயே மனம் ஒன்றி வாழ்பவன். அது தான் வாழ்க்கை மனிதனின் உண்மை முகம் என்று நம்பிக் கொண்டிருப்பவன். அதிலும் கொழும்பிலே கலைப் பிரிவில் படித்துக் கொண்டிருக்கிற அவனுக்கு இங்கு என்ன வேலை?

பூர்வ புண்ணிய பலனில்லாமல் இது நடந்தேறாது. அதிலும் மடத்து மாமாவை தேரில் ஏற்றி உலா வருவதற்காக பூமாலைகளால், அலங்கரிக்கப்பட்ட, தேர் வேறு வாசலில் நிற்கிறது, சாமானியனென்றால், வெள்ளை சவப்பெட்டி தான் வரும் அதில் வைத்துப் பாடை கட்டித் தான் சுடலைக்குப் போவார்கள். இப்போது அதுவும் மாறி பணம் புரள்வதால், மரத்தினாலான சவப் பெட்டி வாங்க காசு ஒரு லட்சத்திற்கு மேல் போகிறது. இன்று அதைக் கணக்கில் எடுக்காமல் அப்படியான புத்தி விகாரமே ஒழிந்த கணக்கில் மடத்து மாமாவின் இந்தப் புது அவதாரம்.

இது புதிதல்ல பழைய கதை தான். அன்று ஏகாந்தமான ஒரு நன்னாளில் அவரின் தேர் ஊர்வலத்துக்குப் பின்னால், அவனும் போக நேர்ந்தது.

கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக, அந்தப் பாழடைந்த மயானம் இருந்ததது. முன்பு ஒரு போதும் அங்கு அவன் வந்ததில்லை. வழக்கமாக பிணத்தை தீ மூட்டி எரிப்பதாகவே அவன் கேள்விப்பட்டிருந்தான். மாறாக அவரின் உடல் சமாதி வைக்கப்பட்டு அந்த அழகான காட்சியையே அவன் காண நேர்ந்தது. ஆன்மாவின் உண்மை இருப்பை அறிந்தாலொழிய இது நடக்காது என்று, அவனுக்குப் பட்டது.

அதை அறிய என்ன செய்ய வேண்டும்? அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அவன் வீடு திரும்பி வரும் போது, அப்பா சாய்மணையில் படுத்தவாறே, பெரிய புராணம் படித்துக் கொண்டிருந்தார். ஆனி மாதம் தொடங்கி விட்டால், மடத்துக் கோவிலில் மூன்று மாதம் தொடர்ச்சியாக புராணம் படித்து பயன் சொல்வார்கள். அதையும் கேட்க இளைஞர்கள் வருவதில்லை. வயதானவர்கள் மட்டுமே அதைக் கேட்டு நற்கதி அடைய அங்கு வருவதுண்டு. அப்பாவும் அதற்கான தயார் நிலையிலேயே, அவ்வாறு அவரைத் தரிசிக்க நேர்ந்தது, ஓரளவு அவருக்கும் ஆன்மாவின் இருப்பு பிடிபட்ட மாதிரித் தான் அதிலும் அவர் ஓர் ஆசிரிய திலகம்.

ஆன்மா இருப்பது உண்மையென்றால், அப்படியானால் நான் யார்? என்ற கேள்வி வலுக்க மன்டையை பிய்த்துக் கொண்டு அதற்கான பதிலை பெறுவதற்காக அவரின் முன்னிலைக்கே அவன் வந்து சேர்ந்தான். அம்மா ஹாலில் இருந்தாள் யாரோ புது மனிதனோடு பேசிக் கொண்டு. என்ன பேசுகிறாளென்பதை அப்பாவைத் தான் கேட்க வேண்டும். அதற்கு நான் யார் என்ற கேள்வியே அவன் மனதை உலுக்கிற்று. இருளும் வெளிச்சமுமாக அவனுள் இரு முகம் தோன்றியது. எது உண்மை என்று பிடிபடாமல் நேராக அவன் அப்பாவிடமே வந்தான்.

அவர் புராணம் படித்த களைப்பு மாற சூனியத்தையே வெறித்துப் பார்த்தபடி கிடந்தார். மடத்து மாமாவின் சமாதி விழா பார்த்த பின், அவர் வீட்டிற்கு வந்து வெகு நேரமாகிறது. தலையில் முழுகிய ஈரம் கூட இன்னும் காயவில்லை, அதைப்பார்த்த பின் இன்னும் அவன் குழம்பினான்.

வழக்கமாக செத்தவீட்டிற்கும் போனால் தான் எல்லோரும் தலை முழுகி புனிதம் காப்பார்கள். ஆனால் இது அப்படியில்லையே. இது ஒரு புண்ணிய விழா மாதிரியல்லோ அவரை சமாதி வைத்துப் புனிதம் காத்தார்கள். எனினும் அப்பா தலை முழுகினாரென்ரால், இதுவும் தீட்டு என்று தானே அர்த்தம்.

அவன் குழப்பம் மிகுந்தவனாய் கீழே குனிந்து அவரின் கால்களை அசைத்து எழுப்பினவுடன் பிரக்ஞை வந்து அவர் விழித்துப் பார்தார்.

என்ன ஆதவா?

நான் ஆதவனில்லை சுத்த சூனியம்.

எல்லோரும் அப்படித் தான் என்றார் அப்பா புதிர் போடும் விதமாக.

அதற்கு அவன் கேட்டான் என்ன சொல்லுறியளப்பா, நான் தான் இருள் வெறிச்சுப் போய் இருக்கிறேனென்ரால், நீங்களுமா?

ஓம் அப்படித்தான் வைத்துக் கொள்ளேன். இங்கு எதுவும் உருப்படியாக நடக்கிறேலை. நீ நம்பிகிற மாதிரி வாழ்கையுமில்லை.

வேறு எப்படி? அவன் இதைக் கேட்டதும் சிறிது நிசப்தம் நிலவிற்று. அதையும் கலைக்க பூதகி போல் அம்மா வந்து சேர்ந்தாள்.

தம்பிக்கு எல்லாம் சரி வரும் போலை இருக்கு?

நீ என்ன சொல்கிறாய்?

புரோக்கரோடு எல்லாம் பேசித் தீர்த்திட்டன் நாளைக்கு பொம்பிளை பாக்க போக வேணும்.

பொறு அவசரப்படாதை, தம்பி குழ்ம்பிப் போய் வந்திருக்கிறான். முதலிலை அதை சரிப்படுத்துவம். அவனுக்குள்ளை இப்ப இருமுகம் வந்திருக்கு இதிலே எது மெய் என்பது தான் அவன் கேள்வி.

என்ன சொல்லுறியள்?

முதலில் இவனைக் கேள்வி கேட்க விடு பிறகு சொல்லுறன் நீ கேள் தம்பி!

அப்பா! மடத்துமாமாவின் சடங்கு பார்த்த பின் நான் வெகுவாய் குழம்பிப் போட்டன் அவருக்கு ஏன் இவ்வளவு கெளரவம். தேர் ஏற்றி போகுமளவுக்கு அவர் ஆர்? அதோடை இன்னொரு கேள்வி, சுவாமி கணக்கில் அவரை வைத்து விழா எடுக்கேக்கை நீங்கள் இப்படி வந்து தலை முழுகினது எந்த வகையிலை பொருந்தும்?

தீட்டு போகத்தான் செய்தன். நான் தலை முழுகினது அவரை உடம்பாய் பாத்து .
அதற்கு தெளிவு வந்த மாதிரி, கம்பீரமாக குரலை உயர்த்தி அவன் சொன்னான்.

எனக்கு இது சரியாய் படேலை, தீட்டும் புனிதமும் உங்கடை மனசிலே தான் இருக்கு. இது மாறும் வரை உலகமும் இப்படித்தான் இருக்கும். இப்ப நான் ஒரு புதிய சங்கற்பம் எடுக்கப் போறன், ஒரு நொடியிலை எல்லாம் சமைஞ்சு போச்சு, நான் ஒழிஞ்சு வெகு நேரமாச்சு, மடத்து மாமா எனக்குள் விளக்கேத்தி வைச்ச ஒரு கணாத்திலை இது நடந்து போச்சு. நான் உடம்பை மறந்து வெகு நேரமாச்சு. என் உள் இருப்பிலை இனி நான் காணப் போவது ஒரு பொம்பிளையை அல்ல அதிலும் மேலாக அது தான் ஆன்மாவை கடவுளை.

அப்படியானல் உன்ரை படிப்பு..?

அதை நான் தொடர்வன். ஆனால் வாழ்க்கையைத் நாடியல்ல. வானம் பார்த்துத் தான் அது இருக்கும்.

மண்ணிலிருந்தாலும் மாசற்ற சோதியாய், அவன் இப்படி பிழைத்து நிற்பது எதற்காக என்று புரியாமல், அப்பாவுக்கு நெஞ்சை அடைத்தது. அம்மா என்னவானாள் என்று சூனியம் வெறித்தது. இந்த சூனிய இருப்பு மாறும் வரை தொலைதூர வானம் கூட அவர்களுக்கு வெறும் கனவு தான்.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *