யானைக்கும் பானைக்கும் சரி

0
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 13, 2025
பார்வையிட்டோர்: 10 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெரியசாமி என்பவர் ஒரு பெரிய செல்வந்தர். அவருக்கு ஒரே மகன். அவனுக்குத் திருமண வயது வந்துவிட்டது. திருமணத்தை விமரிசையாக நடத்த வேண்டுமென்று நினைத்தார் பெரியசாமி. 

கல்யாண ஊர்வலத்தில் யானைமீது தன் மகன் ஊர்வலமாகச் செல்ல வேண்டுமென்று நினைத்தார். 

பக்கத்து ஊரில் நைனா முகமது என்றொருவர் இருந்தார். அவர் காட்டில் இருக்கும் மரங்களை வெட்டி எடுத்து வந்து வியாபாரம் செய்வார். வெட்டிய மரங்களைக் காட்டிலிருந்து எடுத்துவர ஒரு யானையை வைத்துக் கொண்டிருந்தார். அவர் யானையைக் கல்யாண ஊர்வலத்திற்குக் கேட்கலாம் என்ற எண்ணத்துடன் பெரியசாமி நைனா முகமதுவின் வீட்டிற்குச் சென்றார். 

“என்ன பெரியசாமி, ஏது இவ்வளவ தூரம்?” என்றார் நைனா முகமது. 

“என் மகன் கல்யாணம் நிச்சயம் செய்திருக்கிறேன். கல்யாண ஊர்வலத்திற்கு ஒரு யானை வேண்டும். அதற்காகத் தான் உன்னிடம் வந்தேன்” என்றார் பெரியசாமி. 

“ஓ, அதற்கென்ன? கல்யாண ஊர்வலம் இரவில் தானே நடக்கும். அப்பொழுது யானைக்கு இங்கு வேலை கிடையாது. நீ தாராளமாக யானையைக் கொண்டு செல்லலாம். ஊர்வலம் முடிந்ததும் யானையைத் திருப்பி அனுப்பிவிடு” என்றார் நைனா முகமது. 

நைனா முகமது தாம் சொன்னவாறே கல்யாண ஊர்வலத்திற்குத் தம்முடைய யானையை அனுப்பி வைத்தார். 

ஊர்வலம் பாதி தூரம் வந்து கொண்டிருக்கும் போது யானை மயக்கம்போட்டுக் கீழே விழுந்தது. விழுந்த பின்னர் பரிசோதித்ததில் அது இறந்து விட்டது தெரிந்தது. 

கல்யாண ஊர்வலத்தில் யானை இறந்து போனதற்காகப் பெரியசாமி மிகவும் வருந்தினார். நைனா முகமதுவிடம் வேறு யானை வாங்கிக் கொடுத்து விடுவதாகக் கூறினார். இல்லாவிட்டால் அவர் எவ்வளவு தொகை கேட்டாலும் கொடுத்து விடுவதாகக் கூறினார். 

நைனா முகமதுவோ, “அதெல்லாம் முடியாது. என்னுடைய யானைதான் எனக்கு வேண்டும்” என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார். 

பெரியசாமிக்கு என்ன செய்வதென்று தோன்ற வில்லை. மரியாதைராமனிடம் சென்று தம் வழக்கைக் கூறினார். 

பெரியசாமியின் வழக்கைக் கேட்ட மரியாதைராமன் நைனா முகமதுவைக் கூட்டி வரச் சொன்னார். நைனா முகமது வழக்கு மன்றத்திற்கு வந்ததும், “ஏதோ எதிர்பாராத விதமாக உங்கள் யானை இறந்து போய்விட்டது. அந்த யானைக்காக நீங்கள் எவ்வளவு நஷ்ட ஈடு கேட்டாலும் பெரியசாமி கொடுக்கத் தயாராக இருக்கிறார். அல்லது வேறு ஒரு யானை வாங்கித் தரச் சொன்னாலும் வாங்கித் தரச் சம்மதிக்கிறார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று நைனா முகம்மதுவிடம் கேட்டான் மரியாதைராமன். 

என்னுடைய யானைதான் எனக்கு வேண்டும் என்று மீண்டும் பிடிவாதமாகக் கூறினார் நைனா முகமது. 

“சரி, நீங்கள் இருவரும் நாளைய தினம் இந்த சபைக்கு வாருங்கள், என்னுடைய தீர்ப்பை நான் வழங்குகிறேன்” என்றான் மரியாதைராமன். 

நைனா முகமது சென்றவுடன் பெரியசாமியை மட்டும் தம்மிடம் அழைத்து வரச் சொன்னான் மரியாதைராமன். அவர் வந்ததும் அவரிடம் “நாளைய தினம் குறித்த நேரத்திற்கு நீங்கள் சபைக்கு வராதீர்கள். நான் நைனா முகமதுவையே உங்கள் வீட்டுக்கு அனுப்பி உங்களைக் கூட்டி வரச் சொல்கிறேன். அவர் வரும் போது நீங்கள் உங்கள் வீட்டிலுள்ள பழம் பானைகளைக் கதவின் பின்னால் அடுக்கி வைத்துவிட்டுக் கதவை மூடி வைத்திருங்கள். நைனா முகம்மது கதவைத் திறந்து கொண்டு வந்ததும் பானைகள் எல்லாம் உடைந்து நொறுங்கி விடும். நீங்கள் சபைக்கு வந்து என்னுடைய பழம் பானைகள் தான் எனக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்’ என்று உபாயம் சொல்லி அனுப்பி வைத்தான் மரியாதைராமன். 

மறுநாள் பெரியசாமி குறித்த நேரத்திற்கு வழக்கு மன்றத்திற்கு வரவில்லை. மரியாதைராமன் நைனா முகமதுவைப் பார்த்து, “நீங்களே பெரியசாமி வீட்டுக்குப் போய் அவரைக் கையுடன் கூட்டி வாருங்கள்” என்று அனுப்பினான். 

நைனா முகமதுவிற்கு ஆத்திரம் ஒரு பக்கம். தன் யானை போனதுமல்லாமல் வழக்கு மன்றத்திற்கும் பெரியசாமி வீட்டிற்கும் அலைய வேண்டி வந்து விட்டதே என்று கோபம் ஒரு பக்கம். அதே வேகத்தில் பெரியசாமி வீட்டுக்கு நைனா முகமது சென்றபோது பெரியசாமியின் வீட்டுக் கதவு மூடியிருந்தது. உள்ளே பெரியசாமியின் குரல் கேட்டது. 

‘வழக்கு மன்றத்திற்கு உரிய நேரத்திற்கு வராமல் தம்மை அலைக்கழிக்கிறானே’ என்று ஆத்திரத்துடன் கதவைப் பலமாகத் திறந்தபடியே உள்ளே நுழைய முயன்றான். 

அச்சமயத்தில் மரியாதைராமன் சொன்னவாறு கதவின் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழம் பானைகள் உடைந்து நொறுங்கிப் போயின. 

இதைப் பார்த்த பெரியசாமி உள்ளேயிருந்து ஓடிவந்து, “அடப்பாவி, என் முன்னோர்கள் அரும்பாடு பட்டுச் சேர்த்து வைத்த பானைகளை உடைத்து விட்டாயே!” என்று கத்தினார். 

“ஏதோ தெரியாத்தனமாக நடந்து விட்டது. நான் இந்தப் பானைகளுக்குப் பதில் புதிய பானைகளே வாங்கித் தந்து விடுகிறேன்” என்றார் நைனா முகமது. 

“அதெல்லாம் முடியாது. எனக்கு இதே பானைகள் தான் வேண்டும். வா, மரியாதைராமனிடம் செல்வோம்” என்று கூறியவாறே நைனா முகமதுவை அழைத்துக் கொண்டு மரியாதைராமனின் சபைக்குச் சென்றார் பெரியசாமி. 

“அய்யா, என் வீட்டிலுள்ள பழம் பானைகளை எல்லாம் இவர் உடைத்து விட்டார்” என்றார் பெரியசாமி. 

“அதற்கு எவ்வளவு தொகை கேட்டாலும் நான் கொடுத்து விடுகிறேன். அல்லது புதிய பானைகள் வாங்கித் தரச் சொன்னாலும் தந்து விடுகிறேன்” என்றார் நைனா முகமது. 

“எனக்கு அதெல்லாம் தேவையில்லை. என்னுடைய பழம் பானைகளே எனக்கு வேண்டும்” என்றார் பெரியசாமி. 

“அப்படியானால் யானைக்கும் பானைக்கும் சரியாகிவிட்டது. நீங்கள் இரண்டு பேரும் வீட்டிற்குப் போகலாம்” என்றான் மரியாதைராமன்.

– மரியாதைராமன் கதைகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1981, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.

பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்)  மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும்.  புகழ்மிகு கதையிலக்கியங்கள் :  விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *