விருப்பமானதைக் கொடு!
கதையாசிரியர்: நெ.சி.தெய்வசிகாமணி, மரியாதைராமன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 13, 2025
பார்வையிட்டோர்: 9
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு வியாபாரி. அவர் கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தில் பணம் சேர்த்துப் பதினாயிரம் வராகன்கள் சேர்த்து விட்டார். இந்தச் சமயத்தில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. படுத்த படுக்கையாக விழுந்து விட்டார். அவருக்கு ஒரே மகன். அவன் சிறிய பையனாக இருந்தான்.
அந்த வியாபாரிக்கு வேறு உறவினர் எவரும் கிடையாது. ‘தாம் இனிப் பிழைக்கமாட்டோமா?” என அஞ்சினார். தாம் இறந்து விட்டால் தன் மகனை எவராவது ஏமாற்றித் தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்த பொருளை அபகரித்துச் சென்று விடுவார்களோ! என்று பயந்தார்.
தமக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவரைக் கூப்பிட்டனுப்பினார். அவரிடம் தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்து வைத்த பதினாயிரம் வராகன்களையும் ஒப்படைத்தார்.
“நண்பனே, என் மகன் வளர்ந்து பெரியவனானதும் உனக்கு விருப்பமானதை அவனுக்குக் கொடு” என்று கூறினார்.
சிறிது நாட்களில் அந்த வியாபாரியும் இறந்து விட்டார்.
பையன் வளர்ந்து பெரியவனானான். தம் தகப்பனாரின் நண்பரிடம் சென்றான். அவரிடம் தம் தகப்பனார் கொடுத்து வைத்திருந்த பதினாயிரம் வராகன்களைத் திரும்பக் கொடுக்குமாறு கேட்டான்.
வியாபாரியின் நண்பன் பெரிய மோசக்காரன்.
“உன் தகப்பனார் இறக்கும்போது எனக்கு விருப்பமானதை உனக்குக் கொடுக்கச் சொன்னார். வீணாகப் பூராப் பணத்துக்கும் ஆசைப்படாதே. இந்தா ஆயிரம் வராகன். இதை எடுத்துச் சென்று எங்காவது பிழைத்துக் கொள்!” என்று ஆயிரம் வராகன்கள் அடங்கிய பணமுடிப்பை அவனிடம் கொடுத்தான்.
வியாபாரியின் மகனுக்கு இதுபெரும் அதிர்ச்சியைத் தந்தது. மிகவும் நல்லவன் என்று தன் தந்தையார் நம்பிய அவருடைய நண்பனின் செய்கை அவனுக்கு அளவற்ற வேதனையைத் தந்தது. நேரே மரியாதைராமனிடம் சென்று முறையிட்டான்.
மரியாதைராமன் வியாபாரியின் நண்பனை அழைத்தான்.
“இந்தச் சிறுவன் கூறுவது உண்மையா?” என்று அவனிடம் கேட்டான் மரியாதைராமன்.
“ஆம், அய்யா! இவன் தந்தை என்னிடம் பதினாயிரம் வராகன்களைக் கொடுத்து, இவன் வளர்ந்து பெரியவனானதும் எனக்கு விருப்பமானதைச் சிறுவனுக்குக் கொடுக்கச் சொன்னார். அதன்படி நான் இவனுக்கு ஆயிரம் வராகன்கள் கொடுத்துள்ளேன். அதுவே பெரிய தொகை” என்றான் மோசக்காரன்.
“உம்முடைய நண்பர் சொன்னவாறு நீங்கள் நடந்து கொள்ளவில்லையே!” என்றான் மரியாதைராமன்.
மோசக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை.
மரியாதைராமனே தொடர்ந்து பேசலானான்.
“அய்யா, இவர் தந்தையார் ஒப்படைத்த பதினாயிரம் வராகன்களில் நீர் ஒன்பதினாயிரம் வராகன்கள் எடுத்துக் கொண்டீர். அதுதான் உமக்கு விருப்பமானது. எனவே உமக்கு விருப்பமான – நீர் விரும்பி எடுத்துக் கொண்ட அந்த ஒன்பதினாயிரம் வராகன்களைத்தான் நீ இந்தச் சிறுவனுக்குத் தரவேண்டும்” என்று தீர்ப்பு வழங்கினான்.
இந்தத் தீர்ப்பைக் கேட்டுச் சிறுவன் மிகவும் மகிழ்ந்தான். பேராசைக்காரன் தன்னுடைய பேராசைக்கு இது சரியான தண்டனைதான் என்று நினைத்தவாறே ஒன்பதினாயிரம் வராகன்களை அந்தச் சிறுவனுக்குக் கொடுத்து அனுப்பினான்.
– மரியாதைராமன் கதைகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1981, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.
| பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்) மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும். புகழ்மிகு கதையிலக்கியங்கள் : விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க... |