மரியாதைராமன் நீதிபதியாகிறான்
கதையாசிரியர்: நெ.சி.தெய்வசிகாமணி, மரியாதைராமன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 13, 2025
பார்வையிட்டோர்: 9
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான்கு திருடர்கள் கூட்டாகத் திருடிக்கொண்டு வந்தார்கள். அவ்வப்போது சேரும் பொருளை ஒரு தோண்டியில் போட்டு நிரப்பி வந்தார்கள். தோண்டி நிறையப் பொன்னும் பொருளும் சேர்ந்தது. அதைப் பத்திரமாக ஓர் இடத்தில் வைக்க ஆசைப்பட்டார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்தைச் சொன்னார்கள். ஒருவர் கூட மற்றொருவர் யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் ஒருவருக்குக் கூட மற்றவன் பேரில் நம்பிக்கை கிடையாது. கடைசியாக நால்வரில் ஒருவன், “நாம் வழக்கமாகச் சாப்பிட்டுக் கொண்டி ருக்கிறோமே, அவளிடம் இதைக் கொடுத்து வைப்போம். நல்ல கிழவி. பத்திரமாகக் காப்பாற்றி வைப்பாள். நாம் நால்வரும் போய்ச் சேர்ந்து கேட்டால் மட்டுமே தோண்டியைக் கொடுக்கச் சொல்லி அவளிடம் சொல்லுவோம்” என்றான்.
மற்ற மூவரும் நாலாமவன் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
நால்வரும் பாட்டியிடம் போனார்கள். “பாட்டி, நாங்கள் நால்வரும் பல நாட்களாக உழைத்துப் பாடு பட்டுக் கொஞ்சம் பொருள் சேர்த்திருக்கிறோம். அதை இந்தத் தோண்டியில் போட்டு வைத்திருக்கிறோம். இன்னும் சிறிது காலம் இந்த ஊரில் தங்க வேண்டியுள்ளது. அதற்குப் பிறகு இந்த ஊரை விட்டு நாங்கள் சென்று விடுவோம். அதுவரை இந்தக் குடத்தைப் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருந்து நாங்கள் போகும் போது கொடுக்கவும். ஆனால் ஒரு நிபந்தனை, நாங்கள் நால் வரும் வந்து கேட்டால்தான் நீ இந்தத் தோண்டியைத் தர வேண்டும். தனியாக யார் வந்து கேட்டாலும் நீ கொடுக்கக் கூடாது. ஏனென்றால் இதில் உள்ள பொருள் அனைத்தும் எங்கள் நால்வருக்கும் சொந்தம்” என்றார்கள்.
பாட்டியும் தோண்டியை வாங்கி வைத்துக்கொண்டு அவர்கள் சொன்னவாரே நால்வரும் வந்து கேட்கும்போது தோண்டியைத் தருவதாகக் கூறினாள்.
சில நாட்கள் சென்றன.
ஒருநாள் பாட்டி வீட்டில் நால்வரும் சாப்பிட்டு விட்டுச் சற்று தூரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக மோர் விற்கும் பெண்மணி ஒருத்தி மோர் பானையுடன் வந்தாள். அவளைப் பார்த்ததும் திருடர்களில் ஒருவன், “அண்ணே தாகமாகயிருக்கிறது. மோர் சாப்பிடலாமா?” என்று கேட்டான்.
மற்றவர்கள் சரி என்று கூறவே மோர்க்காரியைக் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு குவளை வாங்கிச் சாப்பிட்டனர்.
“அண்ணே, மோர் நன்றாக இருக்கிறது. இந்த அம்மாளிடம் இருக்கும் மொத்த மோரையும் வாங்கி வைத்துக் கொண்டால் தாகம் எடுக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம்” என்றான் ஒருவன்.
“அது சரி, மொத்த மோரையும் வாங்குவதற்கு நம்மிடம் பானை எதுவும் இல்லையே!” என்றான் ஒரு திருடன்.
“ஏன் நாம் வழக்கமாகச் சாப்பிடும் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கி வரச் சொல்லுவோம்” என்று சொல்லிய மற்றொரு திருடன் தன் பக்கத்தில் இருந்த திருடனிடம், “நீ போய்ப் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கி வா” என்றான்.
அந்த நொடியில் பாட்டி வீட்டிற்குச் சென்ற திருடனின் மனதில் ஒரு சூழ்ச்சி தோன்றியது. பாட்டி யிடம், “பாட்டி நாங்கள் உன்னிடம் கொடுத்து வைத்தோமே, அந்தத் தோண்டியை வாங்கி வரச் சொன்னார்கள்” என்றான்.
“உன்னிடம் எப்படித் தர முடியும்? நீங்கள் நால்வரும் வந்து கேட்டால்தானே கொடுக்கச் சொன்னீர்கள். இப்போது நீ மட்டும் தனியாக வந்து கேட்கிறாயே!” என்றாள் பாட்டி.
“என் பேச்சில் நம்பிக்கையில்லையா பாட்டி, அதோ அந்த மரத்தடியில் தான் எங்கள் நண்பர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நீ வேண்டுமானால் கொஞ்சம் வெளியே வா. அவர்களையே சொல்லச் சொல்கிறேன்” என்றான் அந்தத் திருடன்.
பாட்டி குடிசைக்கு வெளியே வந்தாள்.
திருடன் மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் மூன்று திருடர்களைப் பார்த்து, “பாட்டி தரமாட்டேனென்கிறாள்” என்று உரக்கக் கத்தினான்.
மரத்தடியில் உட்கார்ந்திருந்த மூவரும் “அவனிடம் கொடுத்தனுப்பு பாட்டி” என்றார்கள்.
பாட்டி, “தோண்டியா?” என்று கேட்டாள்.
“ஆமாம் பாட்டி தோண்டிதான். சீக்கிரம் கொடுத்தனுப்பு” என்று மூவரும் பாட்டிக்குக் கேட்கும் படியாகக் கத்தினார்கள்.
பாட்டி உள்ளே சென்று பொன்னும் பொருளும் அடங்கிய தோண்டியைக் கொண்டு வந்து ஏமாற்றுக்காரத் திருடனிடம் கொடுத்தாள்.
தோண்டியை வாங்கிக்கொண்ட ஏமாற்றுக்காரத் திருடன் வேறு வழியாக ஓடியே போய் விட்டான்.
தோண்டி வாங்கி வரச் சென்றவன் வெகுநேரமாகியும் திரும்பாதது குறித்துத் திருடர்கள் மூவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. மூவரும் பாட்டியின் வீட்டுக்கு வந்தார்கள். “எங்கே அவன்?” என்று பாட்டியிடம் கேட்டார்கள்.
“அவன் அப்போதே தோண்டியை வாங்கிக் கொண்டு போய் விட்டானே!” என்றாள் பாட்டி.
“எந்தத் தோண்டி?” என்றான் திருடர்களில் ஒருவன்.
“ஏன்? நீங்கள் என்னிடம் கொடுத்து வைத்த தோண்டியைத்தான் வாங்கிக் கொண்டு போனான்” என்றாள் பாட்டி.
இதைக் கேட்டதும் திருடர் மூவரும் கோபத்துடன், “அதெப்படி நீ அவனிடம் தோண்டியைக் கொடுக்கலாம்? நாங்கள் நால்வரும் வந்து கேட்டால் தானே கொடுக்க வேண்டும். எங்கள் நால்வருக்கும் சொந்தமான ஒரு பொருளை நீ ஒருவனிடம் மட்டும் கொடுக்கலாமா? எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நீ தான் கொடுக்க வேண்டும். வா, நீதி மன்றத்திற்கு” என்று பாட்டியை நீதி மன்றத்திற்கு அழைத்தார்கள்.
நீதிபதியிடம் திருடர்கள் தங்கள் வழக்கைக் கூறினார்கள்.
வழக்கைக் கேட்ட நீதிபதி, “பாட்டி, இவர்கள் நால்வருக்கும் சேர்ந்த ஒரு பொதுச் சொத்து அந்தத் தோண்டி. இவர்கள் நால்வரும் வந்து கேட்டால் தான் அதனைக் கொடுக்க வேண்டுமென்று ஆரம்பத்திலேயே உங்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் அதற்கு ஒப்புக்கொண்டீர்கள். ஆனால், முடிவில் நீங்கள் ஒப்புக்கொண்டதற்கு மாறாக ஒரு ஏமாற்றுக்காரனிடம் நால்வருக்கும் பொதுவான ஒரு தோண்டியைக் கொடுத்தனுப்பிவிட்டீர்கள். எனவே, நீங்கள் இந்த மூவருக்கும் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.
நீதிபதி வழங்கிய தீர்ப்பைக் கேட்ட பாட்டி கோவென்று கதறினாள். “ஐயோ, நான் என்ன செய்வேன்? எப்படி இவர்கள் மூவருக்கும் சேர வேண்டிய தொகையைக் கொடுப்பேன்?” என்று புலம்பியவாறு வீதி வழியாக வந்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது மரியாதைராமன் என்ற சிறுவன் வீதியில் கோலி விளையாடிக் கொண்டிருந்தான். அவன் அழுது கொண்டே வரும் பாட்டியைப் பார்த்து விட்டான். தன் ஆட்டத்தைப் பாதியில் நிறுத்திக் கொண்டு, “என்ன பாட்டி ஏன் அழுகிறாய்?” என்று கேட்டான்.
பாட்டி அழுதவாறே விவரம் பூராவற்றையும் மரியாதைராமனிடம் தெரிவித்தாள்.
பூராக் கதையையும் கேட்ட ராமன், “இது என்ன தீர்ப்பு? இந்த அநியாயத் தீர்ப்பு வழங்கியவன் வாயில் மண் விழுவதைப் போல் இந்தக் கோலிகள் குழியில் விழட்டும்” என்று சொல்லித் தன் கையிலிருந்த கோலியை வீசி எறிந்தான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அரசாங்க சேவகர்கள் இந்தச் செய்தியை அப்படியே அரசரிடம் தெரிவித்தனர்.
அரசன் மரியாதைராமனை அழைத்து வரச் சொன்னான்.
மரியாதைராமன் அரசவைக்கு வந்ததும், “சிறுவனே, பாட்டி வழக்கில் நீதிபதி அநியாயமாகத் தீர்ப்பு வழங்கி விட்டதாகக் கூறினாயாமே! நீயாக இருந்தால் இந்த வழக்கில் எப்படித் தீர்ப்பு வழங்குவாய்?” என்று கேட்டார்.
“அரசே, நான்கு பேரும் ஒன்றாக வந்து கேட்டால்தானே பாட்டி தோண்டியைக் கொடுக்க வேண்டும். ஆனால் இப்பொழுது மூன்று பேர் தானே வந்து தோண்டியைக் கேட்கிறார்கள். இவர்கள் மூவரும் போய் நாலாவது ஆசாமியையும் தம்முடன் கூட்டிக் கொண்டு வரட்டும். அப்பொழுது பாட்டி நிச்சயம் அவர்கள் கொடுத்த தோண்டியைத் திரும்பக் கொடுத்து விடுவாள்” என்றான்.
சிறுவன் மரியாதைராமன் அளித்த தீர்ப்பைக் கேட்டு மன்னர் மிகவும் வியந்து போனார். ராமனை அப்பொழுதே நீதிபதியாக நியமித்தார்.
மரியாதைராமனிடம் அது முதல் பல வழக்குகள் வந்தன. அவற்றில் பல எவராலும் தீர்ப்பளிக்க முடியாதவை. நீதிபதிகளே குழம்பிப் போகக் கூடிய பல வழக்குகளிலும் மரியாதைராமன் தன் அறிவுத் திறமையினால் மிகச் சிறப்பாகத் தீர்ப்பு வழங்கியுள்ளான். அவற்றில் சிலவற்றை பின் வரும் கதைகளில் பார்ப்போம்.
– மரியாதைராமன் கதைகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1981, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.
| பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்) மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும். புகழ்மிகு கதையிலக்கியங்கள் : விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க... |