தபோவனத்து ஞானயோகம்
கதையாசிரியர்: சி.எம்.ராமச்சந்திர செட்டியார்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 11, 2025
பார்வையிட்டோர்: 68
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுருப்பட்டியூர் ஒரு திவ்ய தேசம். மூலஸ்தானத்தில் பெருமாள் நின்ற கோலத்திலே காட்சி அருளுவார். விமானத்தில் முதல் தளத்தில் கிடந்த கோலத்திலும், இரண்டாம் தளத்தில் இருந்த கோலத்திலும் காட்சி அருளுகிறார். இம்மூன்று திவ்ய கோலங்களையும் கண்ணாரக் காணப் பரமபக்தர்கள் அனந்த கோடிகள் வருவதுண்டு. திருவிழாக் காலங்களிலோ வைகுந்தமே தோற்றுப்போய் நாணும்படியாகப் பரம பாகவதர்கள் நித்திய சூரிகளைப்போல திகழ்வார்கள். பாகவத கோஷ்டிகளுக்குத் திருவாராதனை செய்யும் கைங்கரிய புருஷர்கள் அபரிமிதமாக வருவார்கள். ததியாராதனை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு என்றே தனித் திருமாளிகைகளில் ஏற்பட்டன. சென்னை நகர் வைசிய சிரோமணிகளின் ‘சாரிடி’ (Charity) களால் இந்தத் திவ்ய ஷேத்திரம் வெகுவாய். ஆதரிக்கப்பட்டது. ஆலயத்துப் பல பாகங்களும் புனருத்தாரணம் செய்யப்பட்டன. திருக்கோபுரம், திருவுண்ணாழிகை, விமானம், திருக்குளம், முதலியவை எல்லாம் புதுப்பிக்கப்பட்டன. புதிய கண்ணாடி அறை உலகத்திலே இல்லாத முறையில் அலங்கரிக்கப்பட்டது. புதுச்சேரிக் கண்ணாடிப் பங்களாவும் திருவரங்கம் கண்ணாடி மாளிகையும் இதற்குத் தோற்றுப்போகும். தனபாலுச் செட்டியார் திருவுள்ளம் வைத்தால் அதன் பெருமைக்கு அளவு உண்டோ? காசை நீர்போல எண்ணித் திருப்பணியில் கரைத்துவிட்டார். ‘பரமபதத்திலிருந்தே இத் திவ்ய கோலம் வந்ததோ?’ என்று எண்ணும்படி, ஆலயத் தோற்றத்தை மாற்றிவிட்டார். இத்திவ்ய திருப்பணிகளைச் செய்த செட்டியார் பட்சவாதத்தில் உளைத்து வைகுந்த யாத்தரை செய்த கதையும், அவர் திருக்குமாரன் மிரியாலு செட்டியார் இன்சால்வெண்ட் மனு தாக்கல் செய்த கதையும் இங்கு விவரிப்பது தகுதியல்ல.
இத்தனை சிறப்புற்ற திவ்ய தேசத்தின் பெருமை இப்போது ஆங்கில ஆளுகையில் ஏற்பட்டது என்றுதான் நினைக்கின்றீர்களோ? இல்லவே இல்லை. சோழ பாண்டிய கருநாடகத்தார் காலத்திலேயே இதன் பெருமை மிகப் பிரக்யாதியடைந்திருக்கிறது. இந்த ஆலயத்து மதில்சுவர்களில் காணும் கல்வெட்டு எழுத்துக்களே இதற்குச் சான்றுகளாகும்.
சோழர்கள் திருப்பல்லாண்டு ஓதக் கொடுத்த மானியக் கிராமங்களுக்கும், பாண்டியர் திருக்கோபுரம் கட்டக் கொடுத்த கிராமங்களுக்கும், கருநாடக மன்னர் (விஜய நகரத்தார்) திருவிழா, தீபாராதனை இவைகளை அரசர்களின் திருநாள்களின்போது நிரந்தரமாகச் சந்திரசூரியர் இருக்கு மட்டும் நடத்தும்படி ‘ஸ்ரீ வைணவ ரட்சையோடு எழுதி வைத்த மானிய பூமிகளுக்கும் அளவில்லை’ ஆனால் அக்கிரமாங்களின் பெயர்களை அக்கற்களில் காண்கிறோமே ஒழிய, தற்காலச் சொத்து அட்டவணையில் காண்கிறோம் இல்லை. ஒரு தடவை ஒரு எழுத்துப் பரிசோதகர் எடுத்துக் காட்டியதின்பேரில் ஒரு வீர வைஷ்ணவத் தருமகர்த்தர் அவைகளைப்பற்றி விசாரிக்கத் தொடங்கினார். ஒன்றிரண்டு குறிப்புகள் கிடைத்தன. ஒரு நிலம் அவ்வூர்ப் பெரிய தாசியின்பேராலும், மற்றொன்று அவ்வூர்ப் பிரபல வழக்கறிஞர் பேராலும், மற்றொன்று ஒரு ஜமீன்தார் பேராலும் இருக்கக் கண்டு, அம் முயற்சியைக் கைவிட்டார். இப்பழங்கதை நமக்கு என்னத்திற்கு? தற்காலச் சொத்து விவரத்தைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். ஆலயத்திற்குச் சேர்ந்த பல சொத்துக்களிலும் குடிவாரம் கைவிட்டு விலகி விட்டது. தலைமுறை தலைமுறையாகப் பலர் அதனை விற்றும் ஒற்றி வைத்தும் அனுபவித்து வருகிறார்கள். என்ன முயன்றாலும் தற்காலச் சட்டப்படி அவைகளை மீட்டவே முடியாது. மேல்வாரத்தின் வருமானத்தைக் கவனித்தால் 100-க்குப் பத்துத்தான் பெருமாளுக்குக் கிடைக்கும். ஆகவே பெருமாளிடம் பங்குபோடும் பேர்வழிகள் அதிகமாகிவிட்டனர். ‘சிவன் கோயில் சொத்துத்தான் தூசியும் தொடக்கூடாது. பெருமாள் கோயில் சொத்து பரமபக்தர்களுடையது தானே!’ என்று சமாதானம் சொல்லிச் சாப்பிடுகிற பக்தர்கள் ஆரயிரம்போர் உண்டு. முதல் தீர்த்தம், சடாரி இவைகளுக்காகச் சண்டையிட்டுப் பெருமாள் பணத்தைச் செலவிடும் பேர்கள் இத்தனை பக்தர்கள் அல்ல. பெருமாளுடைய நிலங்களையே கபளீகரம் செய்யும் பரம வைஷ்ணவர்களே பரமபக்தர்கள் எனல் வேண்டும். இவ்விதமாகப் பெருமாள் தம் பரமானந்த சிஷ்யர்களைச் சிஷ்ட பரிபாலனம் செய்து கொண்டு நின்றும் கிடந்தும் கருணை புரிந்து வருகிறார்.
திவ்வியத் திருப்பட்டியூரில், வருடந்தோறும் ஒரே விதமான திருவிழாக்கள் முதலியவை நடைபெற்றாலும், அங்கே குடியிருக்கும் நித்திய சூரிகளுக்கு வாழ்க்கையில் சலிப்பு ஏற்படுவதில்லை. ததியோதனம், புளியோதனம், அக்காரவடிசில், திருக்கண்ணமுது செவ்வையாகப் பெருமாள் அருள் கூர்ந்தளிக்கும்போது, வேறுவித மாறுதலுக்கும் புரட்சிக்கும் அவ்வூரில் ஆஸ்பதமே இல்லை. மக்கள் பரமதிருப்தியும் சந்துஷ்டியும் அடைந்து தத்துவ ஞானிகளாக விளங்கினார்கள். அமைதியான தடாகத்தில் ஒருகல் விழுந்ததுபோல் இச் சாதுவான ஊரில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. வட நாட்டிலே அயரத நிலையத்தில் திருத்தொண்டு புரிந்து கொண்டிருந்த ஒரு பரமவைணவர் தம் வேலையைத் திருப்திகரமாக நிறைவேற்றி விட்டு ஓய்வு பெற்றார். நிலையத்தார் தமக்குச் செய்தத் திருத்தொண்டிற்கு நன்றி பாராட்டு தற்காக இலவசச் சுற்றுப் பிராயணச் சீட்டு அளிப்பதுண்டு. அவ்விதச் சீட்டு ஒன்றைப் பெற்றுக் கொண்டு நமது வைணவ சிகாமணி வடநாட்டுத் திவ்ய தேசயாத்திரை புரியலானார். நைமிசாரணியம், அயோத்தி, திருப்பிரிதி, பதரிகாச்ரமம், சாளக்கிராமம். கண்டம் எனும் கடிநகர். இவைகளை எல்லாம் தரிசித்துவிட்டு உத்தர மதுரையின் பாங்கர் பிருந்தாவனத்தை அடைந்து கண்ணனுடைய ‘லீலைகளைக் கண்டு மகிழ்ந்தார்’ அங்கு இக்காலத்திலும் கண்ணன் ஆடுவதைப் போல யாதவர்கள் நடித்துக் காட்டி வருவதைக் கண்டு ஆனந்த பரவச மடைந்தார். ‘தென்னாட்டில் இவ்வித ‘லீலைகளை மக்கள் செய்வதில்லையே’ தம் பிறவியை வீணாக்குகிறார்களே !’ என்ற கருணை இவர் நெஞ்சில் புகுந்தது. உடனே தென்னாட்டிற்குச் சென்று ஒரு தகுந்த திவ்யதேசத்தில் எழுந்தருளி, ஒரு அழகிய தபோவனம் ஏற்படுத்தி அங்கு மக்களை ஈடேற்றச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார். பிராயணச் சீட்டில் மூன்றுமாத கால அளவையும் நெருங்கிற்று. தென்னாடு புகுந்தார். தம் பிறந்தகத்திற்கு அருகிலிருக்கும் திருப்பட்டியூர் சேர்ந்தார். தபோவனத்திற்கு அனுகூலமான இடத்தைத் தேடினார். தென்னை பலா, பனை, மா முதலிய தருக்கள் அடங்கிய ஒரு பொழிலைக் கண்டுபிடித்தார். அது 25 காணி நிலம் வாய்ந்தது. அது பெருமாளுக்குச் சேர்ந்தது என அறிந்தார். உடனே ஆலய தர்மகர்த்தர்களை அனுசரித்து அவர்களுக்குப் பல தத்துவ போதனை செய்து அதன் குடிவாரத்தை இலவசத்தில் பெற்றுக்கொண்டார். இச் செய்தி பொதுமக்களுக்கு எப்படித் தெரியும்? தெரிந்தாலும் என்ன? ஒரு பரமவைணவர் ஒரு தபோவனத்தை ஆரம்பித்தார் என்றால், பட்டியூருக்கு அதைவிட மேன்மை என்ன உண்டு.
உடனே தபோவனத்தை ஆசிரயிக்கப் பல தனவந்தர்கள் வந்தார்கள். சோலையின் நடுவில் அழகான ஆசிரமம் எழும்பிற்று. தபோவனத்திற்கு ஸம்புரோட்சணமும் நடந்தது. அத்தபோவனத்திற்கு ஞானயோக தபோவனம்’ எனத் திருநாமம் சாத்தப்பட்டது. ஆசாரியார் வானப்பிரஸ்தாசிரமத்தில் அமர்ந்தனர். ஞானயோகம் பெற பால சீடர்கள் சேர்ந்தார்கள். அவர்களில் மங்கையர் பலர் என்றால் வியப்பு வேண்டாம். திருப்பட்டியூர்ச் சாது ஜனங்கள் இதுவரை அறியாத ஆனந்தத்தில் அமர்ந்தார்கள். புது முறை ஒன்று புகுந்துவந்த போதிலும் தனவந்தர்களின் மங்கையரின் ஒத்துழைப்பைக் கண்ட சாதுக்கள் என்ன செய்ய முடியும்? தம்மை அறியாமலே தாமும் அதில் கலந்து கொண்டனர். சில மாதங்கள் இவ்விதம் சென்றன. தித்திப்பை எப்போதும் உண்டு கொண்டு வந்தால் அது தெவிட்டாதோ? சில மக்கள் ஒருவித அருவருப்பும் கொள்ளத் தொடங்கினர். ஆனால் தபோவனத்து ஆசிரியருக்குப் பலவிதங்களிலும் ஆதரவு வந்தது. மண். பெண். பொன் ஆகிய மூவகையிலும் பெருக்கெடுத்தது. அபிநவ பிருந்தாவனம் தென்னாட்டில் முளைத்துத் திகழ்ந்தது. ஒருநாள் அவ்வழகிய நீர்க்குமிழி வெடித்தது. அதைச் சிறிது விவரிப்போம்.
நீதிபதி திருவரங்காச்சாரியாருடைய திருக்குமாரத்தி இத்தபோவனத்தில் ஒரு தபசியாக அமர்ந்தாள். அந்த நங்கை ஆங்கிலமும் தமிழும் நன்றாகக் கற்றவள். வைணவ சமயத்தில் ஈடுபட்டவள். ஆழ்வார்களுடைய பக்தியில் பரவசப்பட்டவள். ‘இரண்டாவது ஆண்டாள்’ என்றே சொல்ல வேண்டும். தபோவனத்தில் சிஷ்யையாகி அங்கே போய்க்கொண்டிருந்தவள். நாளாவட்டத்தில் அங்கேயே நிரந்தரவாசியாகி விட்டாள். ஆசாரியரிடம் பரமானந்த சிஷ்யை ஆகி என்றும் பிரியாத நிலையினள் ஆனாள்.
ஒருநாள் அம்மங்கை தன் தாயாரிடம் வந்தாள். தாய்க்கு உண்மை தெரிந்தது. திருமணம் ஆகாததற்கு முந்தியே திருவயிறு வாய்த்து விட்டாள். என்ன செய்வது? இரகசியமாக நீதிபதியிடம் சொல்லி அன்றே அம்மங்கை சென்னைக்கு அனுப்பப்பட்டாள். இரகசியம் வெளிவராதபடி பலவித உபாயங்களும் தேடப்பட்டன. இருந்தாலும் உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியுமா? ‘மங்கை ஏன் தபோவனத்திற்கு வருவதில்லை?’ என்ற கேள்வி புறப்பட்டு அதற்குப் பலவிதமான விடைகளும் தோன்றி நாடு முழுவதும் பறந்தன. ஒன்றுக்குப் பத்தாக செய்திகள் பறக்கவே நீதிபதியின் மானம் போகத் தொடங்கியது. நீதிபதி வெகு கெட்டிக்காரர். உடனே போலீசு அதிகாரிக்குத் தெரியப்படுத்தித் தபோவனத்து ஆசாரியாரை இரகசியமாக நாடு கடத்திவிட்டார். ஆசாரியார் மறையவே சீடர்களும் சிஷ்யைகளும் அகன்றனர் தபோவனம் வெறும் தோப்பாகி விட்டது. சில நாட்களில் அவ்வனத்தின் பழைய நாடகத்தைப் பற்றிக் கூறும்போது ஞானயோக தபோவனம் என்பதற்கு மாறாக ‘கானபோக தமோ மடம்’ எனச் சொல்லவும் தொடங்கினர். பூனை இல்லாத போது எலிகள் கொண்டாட்டத்திற்கு அளவு என்ன?
தபோவனத்து ஆசாரியார் விலகி ஓடிவிடவே, தபோவனம் கிளி பறந்துவிட்ட கூண்டு போல் ஆயிற்று. பாதுகாப்பார் இன்றி அலங்கோலம் அடைந்தது. ஆசாரியார் இருந்த வரைக்கும் ஆலயத்திற்கு மேல்வாரம் கட்டி வந்தார். அவர் போனபிறகு மேல்வாரம் பாக்கி நின்றது. அதனைக் கொடுப்பார் இன்றி ஆலயக் கணக்கில் பாக்கி இருந்த செய்தி தருமகர்த்தருக்குத் தெரிந்தது. தபோவனத்திலோ ஆசாரியர் விலை பொருந்திய கட்டடங்களைக் கட்டி வைத்திருந்தார். குடி வாரத்தின் மதிப்போ மிக அதிகமாக இருந்தது. ஆகவே இரகசியமாகச் சொத்தை ஏலத்தில் விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தருமகர்த்தர் எண்ணினார். மேல்வாரப் பாக்கிக்காக ஏல நடவடிக்கை நடத்தத் தொடங்கினார். ஒருவருக்கும் தெரியாமல் இரகசியமாக இஸ்தியாரை ஒட்டி ஏலத்திற்கு நாள் குறிப்பிட்டார். ஏலத் தேதியன்று 5 ரூபாய் அதிகக் கேள்வி கேட்டுத் தம் தம்பி மகன் பேருக்கு ஏலம் எடுத்துப் பத்திரம் எழுதி வைத்துக் கொண்டார். பிறகு ஆலயத் தருமகர்த்தர் சொத்தைத் தம் கை வசப்படுத்திக்கொண்டு, அதன் பலனை அனுபவித்து வந்தார். பொது மக்களுக்கு இதன் இரகசியம் தெரியாது. மேல் அதிகாரிகளுக்கும் தெரியாது. எல்லோரும் தருமகர்த்தர் ஆலயத்தின் பொருட்டுத்தான் சொத்தை ஆட்சி செய்து வருகிறார் என்று எண்ணினார்கள். ஆனால் உண்மையில் தருமகர்த்தர் தம் சொந்த அனுபவத்தில் சொத்தை வைத்திருந்தார்.
பெருமாள் இதைக் கவனிக்கிறாரா? திருப்பாற்கடலிலேயே அறிதுயில் கொண்ட திருமாலுக்கு உலகச் சொத்துக்களில் என்ன அக்கரை? அவரது சொத்துக்கள் ஆற்று நீராய் ஓடிவிடுகின்றன. வருகிறவர்கள் போகிறவர்கள் ‘அப்பா குடி’ ‘அம்மா குடி’ என்று வயிறாரப் பருகவேண்டியது தான் உலக இயற்கையாம். நமது தருமகர்த்தரும் தம் கடமையைத் திரணமாக எண்ணித் தபோவனத்தைக் கைப்பற்றிப் பல ஆண்டுகள் அனுபவித்தார்.
அவர் பரிபாலன காலம் முடிந்து வேறு தருமகர்த்தர் ஆட்சிக்கு வந்தார். சொத்துக்களின் அட்டவணையைப் பரிசோதித்ததில், தபோவனம் இருக்கவில்லை, இதை ஆராய்ச்சி செய்யவே புதுத் தருமகர்த்தருக்கு உண்மை தெரிந்தது. ஒரு சிறிது கடமை செலுத்தும் கொள்கை கொண்டவர். ஆனதினால் புதுத் தருமகர்த்தர் பழைய தருமகர்த்தர் மீது வழக்குத் தொடங்கினார். ‘ஏல நடவடிக்கைகள் சரியாக இருந்தன; ஆகவே வழக்குச் செல்லாது’ என்று நீதிமன்றத்தில் தள்ளிவிட்டனர்.
புதுத் தருமகர்த்தர் இத்தோல்விக்குப் பயந்தவர் அல்லர். உடனே தபோவனத்து ஆசிரியர் மூலம் வழக்குத் தொடர முயன்றார். ஆனால் அவ்வாசிரியர் அதற்குள் மேல்நாட்டிற்குப் பயணமாகியிருந்தார். ஆகவே அவருடைய சீடர்களைப் பிடித்து வழக்குத் தொடர்ந்தனர். சீடர்களைப் பிடிப்பதே சிரமமாகிவிட்டது. ஒருவர் கிடைத்தார். அவரும் வெகு கிராக்கியுடன் பெயர் தந்தார். ஆனால் சீடர் சபை அரசியலாரால் பதிவு செய்யப்படாத முறையில் ஒருவித பாத்தியமும் உரிமையும் பெறாது என்ற காரணத்தினால் வழக்கு மறுபடியும் தள்ளுபடியாயிற்று. புதுத் தருமகர்த்தர் தம் சொந்தப் பொறுப்பில் எத்தனை தூரம்தான் வழக்காட முடியும்? தாம் தருமகர்த்தராக இருந்த காலம் முழுவதும் வழக்காடிச் சலித்துவிட்டார். வேறு ஒருவர் தருமகர்த்தர் ஆனார். அவருக்கு இம்முயற்சியில் சிரத்தை இருக்கவில்லை. ஆறின கஞ்சி பழங் கஞ்சியாகி விட்டது. பெருமாளுக்குச் சொத்தோ போய்விட்டது. ஆனால் யாருக்கு விசாரம்? பெருமாளுக்கு இல்லை! மக்களிலும் அதைப்பற்றிச் சிந்திப்பார் இல்லை. நன்றாய்ச் சாப்பிட்ட தருமகர்த்தரும் சுகமாகத்தான் இருக்கிறாராம்.
“தெய்வமில்லை என்பார்க்குத் தெய்வமேயில்லை” என்பது உண்மையாகி விட்டதல்லவா?
– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.