அன்னப்பறவைகளும் வாத்துக்கூட்டமும்
கதையாசிரியர்: மா.பிரபாகரன்
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 18, 2025
பார்வையிட்டோர்: 167

அது ஒரு மலைப் பிரதேசம்;. அதில் ஒரு நீர் வீழ்ச்சியை ஒட்டித் தடாகம் ஒன்று இருந்தது. தடாகம் நாற்புறமும் ஒரே சீரான கரைகளைக் கொண்டதாக இருந்தது. அதில் எப்போதும் தண்ணீர் நிரம்பி இருந்தது. தடாகத்தில் நான்கு அன்னப்பறவைகள் வசித்து வந்தன. தடாகத்தின் கிழக்குப் பக்கம் ஒரு படித்துறை. படித்துறையை ஒட்டி கரையில் ஒரு சிறு கோவில் மற்றும் ஒரு தியான மண்டபம்: அந்த வனத்தில் துறவி ஒருவர் வசித்து வந்தார். அவர் கோவிலையும் மண்டபத்தையும் பராமரித்து வந்தார்.
தடாகத்தில் ஏராளம் தாமரை அல்லி மலர்கள் பூத்துக் கிடந்தன. நண்டு நத்தை தவளை மீன்கள் சிறு புழுபூச்சிகள் இவைகள் வசித்து வந்தன. கரையைச் சுற்றிலும் ஓங்கி வளர்ந்;த விருட்சங்கள் இருந்தன. எப்போதாவது மலங்காட்டிற்குச் விறகு பொறுக்க ஒன்றிரெண்டு ஆட்கள் வருவார்கள். மற்றபடி அந்தப் பகுதி அதிக நடமாட்டம் இல்லாமல் இருந்தது. அன்னப்பறவைகள் இனிமையான சூழலில் எந்த வித அச்சமுமின்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.
தடாகத்தின் மேற்குக் கரைப் பக்கம் படித்துறையை ஒட்டி வாத்துக் கூட்டம் ஒன்று வசித்து வந்தது. வாத்துக்களை அன்னப்பறவைகளுக்குப் பிடிக்காது. அவைகள் எப்போதும் தண்ணீரில் மிதந்தபடி சோம்பலாய் தூங்கும். கரைக்குச் சென்றால் சேறும் சகதியுமான இடத்தில் புரண்டு எழும். எதாவது ஒரு வாத்து வானத்தை அண்ணாந்து பார்த்து கத்தினால் போதும்: மற்ற வாத்துகளும் மொத்தாமாய் சேர்ந்து கொண்டு ‘குவாக் குவாக்’ என்று குரல் கொடுக்க ஆரம்பித்து விடும். இதனால் அன்னப்பறவைகள் வாத்துகளை வெறுத்தன. அவைகளிடம் நட்பு பாராட்டாமல் இருந்தன. தங்கள் பக்கம் அவைகளை அண்ட விடாமல் பார்த்துக் கொண்டன. வாத்துகளுக்கு அன்னப்பறவைகள் தங்களிடம் நேசமாக இல்லை என்ற வருத்தம் இருந்தது.
துறவி தினந்தோறும் அருவியில் நீராடுவார். தடாகத்தில்; தாமரைப் புஷ்பங்களைப் பறித்துக் கொண்டு போவார். கோவிலில் பூஜைகள் செய்வார். மண்டபத்தில் அமர்;ந்து தியானத்தில் ஈடுபடுவார். சமயங்களில் படித்துறையி;ல் அமாந்;து தடாக நீரினைக் கைகளால் அளைந்தபடி அன்னங்களிடம் பேசுவார். அன்றைக்கும் அவர் அன்னங்களிடம் பேச்சுக் கொடுத்தார். அப்போது
அன்னப்பறவைகள் துறவியிடம் “இந்த வாத்துகளை வேற எங்காவது போய் வாழச் சொல்லுங்க! இதுகளை எங்களுக்குப் பிடிக்கலை!’- என்றன.
“எதுனால இப்படிச் சொல்றீங்க?” – துறவி கேட்டார்.
“இதுக ரொம்ப சோம்பலா இருக்குதுங்க! தடாகத்தை அழுக்குப் பண்ணுதுங்க! கத்தி கூப்பாடு போடுதுங்க!” – அன்னங்கள் சொல்லின. துறவி அன்னங்களின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
“இந்தத் தடாகத்துக்கு அருவில இருந்துதான் தண்ணீர் வருது! அதுனால தினமும் தண்ணீர் புதுசா மாறிக்கிட்டேதான் இருக்கு! வாத்துக் கூட்டத்தால தடாகம் அழுக்காகுங்குறத என்னால ஏத்துக்க முடியாது!”- என்றார் துறவி: “வானத்தை பார்த்து அண்ணாந்தபடி கூட்டமா கத்துவது வாத்துகளோட இயல்பு! அதை நீங்க வெறுக்கக் கூடாது! இரசிக்கக் கத்துக்கனும்! – என்றார் துறவி:. அவரே தொடர்ந்து “வாத்துகள் இங்கதான் இருக்கும்! அதுங்க வேற எங்கயும் போகாது! இந்தத் தடாகம் அதுகளுக்கும் சொந்தமானதுதான்!” – என்று உறுதி பட சொன்னார். வேறு வழியின்றி அன்னங்கள் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டன.
ஒருநாள் அன்னப்பறவைகள் படித்துறையில் விளையாடிக் கொண்டிருந்தன. வேடன் ஒருவன் அருகே புதரில் மறைந்திருந்தான். அவன் அன்னங்களைப் பிடிக்க தண்ணீருக்குள் வலை விரித்திருந்தான். அன்னங்களுக்கு இது தெரியாது. விளையாடி முடித்து விட்டு அவைகள் தடாகத்தில் இறங்கிய போது வலையில் சிக்கிக் கொண்டன. வேடன் அன்னப்பறவைகளோடு வலையைச் சுருட்டிக் கொணடு கிளம்பினான். அன்னங்கள் பிடிபட்டதைப் பார்த்த வாத்ததுக்கள் பதைபதைத்தன. அவைகள் அன்னப்பறவைகளைக் காப்பாற்ற முற்பட்டன. அவைகள் சப்தம் எழுப்பியபடி வேடனை நோக்கி வந்தன. அவற்றில் சில வேடன் மீது பாய்ந்து அவனைத் தாக்க முற்பட்டன. அவன் முரட்டுத்தனமாக அவைகளை கீழே தள்ளி விட்டான். வாத்துகளின் சப்தம் பல மடங்கு அதிகரித்தது.
குடிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தறவிக்கு வாத்துகளின் இரைச்சல் கேட்டது. வழக்கமான ஒன்றாக இல்லாமல் அதில் ஒரு அபாயம் ஒளிந்திருப்பதை அவர் உணர்;ந்தார். ஏதோ தவறாக நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். அவர் குடிலை விட்டு வெளியே வந்தார். வேடன் அவர் கண்ணில் பட்டான். துறவி அவனிடம் “அன்னங்களை விடுவி!” – என்றார்.
“ஐயா! நீங்க நினைக்குற மாதிரி நான் இதுகளைக் கொல்ல மாட்டேன்! அன்னங்களை தங்களோட வீட்டுல வளர்க்குறத சில செல்வந்தர்கள் கௌரவமா நினைப்பாங்க! நான் இதுகளை அவங்ககிட்ட நல்ல விலைக்கு வித்துருவேன்!” – என்றான் வேடன். துறவி அவனின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
“எப்பேர்பட்ட செல்வந்தர்களா இருந்தாலும் அவங்களால அன்னங்களுக்கு இது மாதிரியான இயற்கையான சூழலைக் கொடுக்க முடியாது! அன்னங்களை விடுவி!” – என்று மீண்டும் ஒருமுறை அழுத்தமாகச் சொன்னார். இந்த வேட்டைத் தொழிலை விட்டுவிடச் சொல்லி அவர் வேடனுக்கு பலமுறை உபதேசித்திருக்கிறார். துறவியின் கோபம் அவனைச் சுட்டெரித்து விடும் என்பதை வேடன் நன்கு அறிவான். வேறு வழியி;ன்றி அவன் அன்னங்களை விடுவித்தான்.
முதன்முறையாக அன்னப்பறவைகள் தங்களை அழகற்ற பறவைகளாக உணர்ந்தன. எந்த வாத்துக்களை அவைகள் வெறுத்தனவோ அந்த வாத்துக்கள் இப்போது அழகானவையாகத் தெரிந்தன. எந்த வாத்துகளின் குரல் நாரசாரமாகத் தோன்றியதோ இப்போது அந்தக் குரல் இனிமையாகத் தெரிந்தது. அவைகள் மட்டும் ஆபத்தில் உதவாமல் போயிருந்தால் வேடன் அன்னங்களைக் இந்நேரம் கொண்டு போயிருப்பான். நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது. அன்னப்பறவைகள் வாத்துக்களிடம் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொண்டன. உங்களுக்குத் தெரியுமா? இப்போது வாத்துக்களும் அன்னப்பறவைகளும் அதே தடாகத்தில் மகிழ்ச்சியாக ஒன்று கூடி ஆடியும் பாடியும் இருந்து வருகின்றன.
– 02-11-2019, சிறுவர்மணி.
![]() |
எனது பெயர் மா.பிரபாகரன். மதுரையில் வசித்து வருகிறேன் சித்த மருத்துவத்தில் பி.எஸ்.எம்.எஸ் இளங்கலைப் பட்டம் பெற்றவன்@ அரசு மருத்துவர். கடந்த ஆறு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராகப் பணியாற்றி ஜீலை - 2024 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். பெரியவர்களுக்கான எனது படைப்புகள் தினமணிகதிரில் பல வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான எனது முதல் படைப்பு சிறுவர்மணியில் 2006 ஆம் ஆண்டு வெளியானது. எனது சிறுவர் சிறுகதைகள் குழந்தை…மேலும் படிக்க... |
