பெண் நெஞ்சம்…
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 759
(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம் – 1

அந்த பேரளம் ஜங்சனில் நாகூர் தொடர்வண்டி வந்து நின்றதும் அப்போதுதான் மலர்ந்து, விரிந்து, பூத்தப் பூவைப் போல… வயிற்றிற்குள்ளிருந்து துள்ளி விழும் குழந்தையாய் இறங்கினான் ரகுநாதன்.
காஷ்மீரிலிருந்து அந்நிய தேசத்து அகதி போல் முகம் சுருங்கி வந்தவனுக்குச் சென்னையை நெருங்க நெருங்க.. தமிழ் மண்ணின் வாசம் வந்து நாசியில் ஏறி, நினைவுகளில் தொற்றி, ஒரு மொட்டாக இருந்த மனதை மெல்ல மெல்ல மலராக ஆக்கியது.
தமிழ் மண்ணில் எல்லோரும் தமிழர்களாய் இருந்து தமிழ் பேசுவார்கள் என்று ஆசையாய் நினைத்து வந்தவனுக்குச் சென்னை மண்ணைத் தொட்டதும்…
“ஹாய்..!. ஹெள ஆர் யூ…?”
“மேரா சோட்டா பாய்..”
“எப்புடு..? “
“குச்சண்டி..”
“ஆங்.. காயிதே ! இன்னான்றே…?”
“ஹோத்தா..! மஞ்சா சோத்தை எடுத்துவேன்..!” இப்படி பல மொழி கலப்பில் முகம் சுருங்கிப் போனான்.
தாம்பரத்தைத் தாண்டியதும்தான் செம்பு கலக்காத பொன்!
செந்தமிழ், சுத்தத் தமிழ். அதிலும் மயிலாடுதுறை பக்கம் சுத்தம். தஞ்சை மண்ணின் தமிழ் வாசனையேத் தனி. தரணி போற்றும் தமிழ்.
அதைவிட இந்த பேரளம் மண் தாய்ப் பாலையும், தமிழ்ப் பாலையும் கலப்பிடமில்லாமல் கொடுக்க… முக்கால் மொட்டாய் இருந்த மனம் இன்னும் மலர்ந்து, விரிந்து மத்தாப்பாகப் பூத்தது.
இந்தத் தாய் மண்ணுக்கு, பிறந்த பூமிக்கு அப்படி என்ன பாசமும், நேசமும் !
எத்தனையோ வளப்பமான மண்ணைப் பார்த்தாலும், வாழ்ந்தாலும் இதற்கு மட்டுமென்ன ஆளை மயக்கும் அதீத சக்தி.
‘அப்ப்பா..! எத்தனை ஆண்டுகள் பிரிந்த மண்! அந்த பிரிவுதான் இதன் மீது இத்தனை அதீத அன்பைப் பொழிய வைக்கிறதா..?!’ மலைப்பும், வியப்புமாய் இறங்கிய இடத்தைவிட்டு நகராமல் கண்களைச் சுழற்றிப் பார்த்தான் ரகுநாதன்.
கிழக்கும், மேற்கும் பச்சைப் பசேலென வயல்வெளிகள். வடக்கே ஜங்சனை ஒட்டி ஒதுங்கி இருக்கும் பேரளம் குட்டி நகரம். தெற்கே…திருவாரூர் செல்லும் சாலை.
ரயில் பாதையைத் தாண்டி…கிழக்கே சென்றால்…இவனது கிராமம் அன்னவள்ளி.
ஸ்டேஷன் மாஸ்டர் உடுப்பும், மிடுக்குமாய் ஒற்றை ஆளாய் நிற்கும் இவனை நெருங்கினார்.
ரகுநாதன் ஆளைக் கண்டதுமே… தன் அடையாள அட்டை, பயணம் செய்வதற்கான ‘வாரண்ட் ‘ தாளையும் நீட்டினான்.
அவர் வாங்கி.. சரி பார்த்து, சலியூட் அடித்து கொடுத்து விட்டு திரும்பி சென்றார்.
பிளாட்பாரத்தின் வடக்கே ‘பேரளம் ஜங்சன்’ என்ற கான்கிரீட் பெயர் பலகையும், அப்பால் பிரமாண்டமான அரசமரமும் அப்படியே இருந்தன.
‘கடந்த பத்தாண்டுகளுக்குள் மரமும் வளரவில்லை, ஸ்டேசனும் மாறவில்லை. ஸ்டேசன் மாறாது, வளராது. ஆனால்… மரம்!’
ஏன் தன் கண்ணுக்குத் தெரிந்த நாளிலிருந்து அப்படியே நிற்கிறது..? எத்தனைக் கால மரமோ? மரங்களின் வளர்ச்சி எல்லாம் ஒரு காலகட்டம்தானா…? இல்லை மனித கண்களுக்கு அதன் கண்களுக்கு வளர்ச்சி தெரியவில்லையா..? நினைத்தபடி காலடியைக் குனிந்து பார்த்தான் ரகுநாதன்.
தரையில் அப்படியே நெடுஞ்சாணாய் படுத்து மண்ணை முத்தமிட வேண்டும் போல் பரவசமும், பரபரப்பும் மனதில் தோன்றி சிலிர்த்தது.
சுற்றும் முற்றும் பார்த்தான். கட்டிட ஓரத்தில் கடலை உருண்டை விற்கும் ஆயா. கொஞ்சம் தள்ளி சிமெண்ட் பெஞ்சில் இரண்டு பிச்சைக்காரர்கள்.
அப்படி செய்தால்… தன்னை வியப்பும், வினோதமாகவும் பார்த்து…
‘பைத்தியக்காரன்!’ நினைப்பார்கள்.
சிரமப்பட்டு தன் ஆவல், ஆசையை அடக்கி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
முழு மூட்டையாய் முதுகில் ஒரு பை. இரண்டு கைகளிலும் இரண்டு சூட்கேஸ்களைத் தூக்கிக் கொண்டு ஸ்டேசனை விட்டு இறங்கினான்.
“ஐயா ! வண்டி வேணுங்களா…?” – குரல்.
திரும்பிப் பார்த்தான். கை கக்கத்தில் சாட்டைக் கம்புடன் பவ்வியமாய் வயதான ஆள்.
அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது. ஒட்டிய வயிறு. ஒடுங்கிய உடல். இடுங்கிய கண்கள். கத்தி காணாத முகம். நரைத்தத் தலை.
வயது எழுபதுக்கு மேல்!.. இந்த தள்ளாத காலத்திலும் இவர் உழைக்க வேண்டுமா..?
பத்தடித் தள்ளி நிற்கும் வண்டியைப் பார்த்தான்.
அது இவரைவிட ரொம்ப மோசம். வண்ணம் காணாத வண்டி. பொத்தல் பொத்தலான கூரை.
குதிரை… சேணம் தாங்கக்கூட சக்தி இல்லாமல் கிழவிக்கு நகை போட்டது போல்… கழுத்தில் வண்டி மூக்கணையைச் சுமந்து அசை போட்டுக் கொண்டு நின்றது. அதன் எதிரேகட்டாந்தரையில் ஆட்டாங்கோரைப் புற்கள் நான்கைந்து கிடந்தது. வண்டிக்கடியில் கோணி நல்ல புஷ்டியான துளியாகத் தொங்கியது.
“தாத்தா..! நீங்கதான் இப்படி இருக்கீங்கன்னா… உங்க குதிரையும் அப்படியே இருக்கு…” ரகுநாதன் சிரித்தான்.
“வயித்துப் பொழைப்புக்கே வருமானம் இல்லே. குதிரையை எப்படி கவனிக்கிறது தம்பி..”
“புல் கிடக்கு…”
“வருமானமில்லேன்னு வாயில்லா ஜீவனைப் பட்டினிப் போட முடியுங்களா..? அதான் காலையிலேயே வயல் வரப்புக்குப் போய் இதுக்குப் புல் அறுத்துக்கிட்டு வந்துடுவேன். தம்பி! கை சுமைகளை ஏத்தலாமா…?”
வண்டியில் செல்ல ரகுநாதனுக்கு விருப்பமில்லை. ஊருக்குக் கிளம்பும்போதே இந்த மண்ணில் காலாற நடந்து செல்ல முடிவு செய்துதான் தொடர்வண்டிப் பெட்டியிலேயே ஏறினான்.
“வேணாம் தாத்தா!”
“இவ்வளவு தூரம் பேசிட்டு பொழைப்புக் கொடுக்காமல் போனா எப்படித் தம்பி?”
‘பத்தாண்டுகளாய் பிரிந்த மண். பிறந்த மண். செம்மண் முழங்கால் முட்டி வரை படிய… ஆசையாய் நடந்து, பார்த்து, ரசித்து செல்ல ஆசை…’ சொன்னால் இவருக்குப் புரியாது.
பைத்தியக்கார புள்ளே..! நினைப்பார். வாய் விட்டு சிரிக்கவில்லை என்றாலும் உதடு பிரித்து சிரிப்பார்.
எப்படி சொல்லி இவரிடமிருந்து தப்பிக்க… நினைத்த ரகுநாதன்…
“ஐயா! உங்களுக்குப் பொழைப்புக் கொடுக்க வேணாம் என்கிறது என் எண்ணமில்லே. நான் ரயிலை விட்டு இறங்கி நடந்து வரணும்ன்னு எங்க ஊர் மாரியாத்தாளை வேண்டிக்கிட்டேன்.” சொன்னான்.
“தம்பி ! இவ்வளவு சுமைகளையும் தூக்கிகிட்டு…”
“நடப்பேன். இதோ மூணு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அன்னவள்ளிதான் என் சொந்த கிராமம்.”
“வயித்துல அடிக்கிறீங்களே தம்பி…” பாவமாய்ச் சொன்னார்.
அவரென்ன செய்வார் பாவம். இந்த வழித்தடத்தில் ஐந்தாறு ரயில்கள்தான் போக்குவரத்து. வண்டி நின்றால் இறங்குபவர்களும் ஒருவர் இருவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களும் வண்டி வேண்டாமென்று சொல்லிப் போனால்…. இவர் பிழைப்புதான் என்னாவது…?
‘ ஏன்…? இந்த வயதில் வண்டி உருண்டால்தான் இவர் வயிறு நிரம்புமா..?’
“ஏன்யா..! உங்களுக்குத் பையன் இல்லியா..?” கேட்டான்.
“இருக்கானே..!”
“விவசாயம் பார்க்கிறாரா…?”
“காரைக்கால்ல வேலையில இருக்கான்..!”
“அரசாங்க வேலையா..?”
“ஆமாம்..”
“தமிழ்நாட்டு ஆளுங்க அங்கே அரசாங்க வேலை பார்க்கமுடியாதே..?! அது பிரெஞ்சுக்கார பூமி. யூனியன் பிரதேசமாச்சே..!”
“அங்கேயே அத்தை வீட்டுல படிச்சான். அங்கேயே வேலைக்கும் பதிஞ்சான். வேலைக் கிடைக்க அத்தை மகளையே கலியாணம் கட்டிக்கிட்டு அங்கேயே தங்கிட்டான்.”
“இங்கே நீங்களும் உங்க சம்சாரமும் மட்டும்தானா?”
“அவ போயி அஞ்சு வருஷமாவுது. நான் ஒண்டிக்கட்டை!”
‘உழைத்தல், உண்ணுதல், உறங்குதல், படுத்தல், எழுந்திருத்தல்… எல்லாமே இவர்தானா…? தனி ஆளா..?’ ரகுநாதன் துணுக்குற்று அவரைப் பார்த்தான்.
‘ஏறிய ஏணியை எட்டி உதைப்பது போல் சிலர் இப்படித்தான் செய்கிறார்கள். வாய்ப்பு, வசதி, துணை வந்தபிறகு பெற்றவர்களை உதறுகின்றனர். உயிராக்கி, உடலாக்கி, ஆளாக்கி விட்டவர்களை வயதான காலத்தில் துணையாக இருந்து, அன்பும், அரவணைப்புமாய் அணைத்துப் போகாமல் பிரிந்து போகின்றார்கள். என்ன ஜென்மம் அவர்கள். பெற்ற கடனுக்காகக்கூட பேணாமல் என்ன வாழ்ந்து கிழிக்கப் போகிறார்கள்?’ – வெறுப்பாக இருந்தது ரகுநாதனுக்கு. அவர் மேல் ஈரம் கசிந்தது.
பாக்கெட்டிற்குள் கையை விட்டு…
“இந்தாங்க பெரியவரே…!” ஐம்பது ரூபாய்த் தாளை நீட்டினான்.
“தம்பி! சவாரிக்கு வாரீங்களா..?” அவர் முகம் மலர்ந்தார்.
“இல்லே..”
“நான் சவாரி செய்யாம கூலி வாங்குறதில்லையே…”
இந்த தள்ளாத வயதிலும் அவரது நேர்மை இவனுக்குப் பிடித்திருந்தது.
“சவாரி வந்ததா நெனைச்சி வாங்கிக்கோங்க…”
“வேணாம் தம்பி. இதுக்கு இந்த சுமைகளையாவது வண்டியில வச்சு ஓட்டிக்கிட்டு வர்றேன். நீங்க… உங்க வேண்டுதல்படி நடந்து வாங்க…” சொன்னார்.
அட..! என்ன புத்திசாலித்தனம். கொண்ட கொள்கை, வைராக்கியத்தில் பிடிப்பு! ரகுநாதனுக்குப் பிரமிப்பாக இருந்தது.
“மன்னிக்கனும்ய்யா. நான் நடந்தே போறேன்!” சொல்லி அவர் கையில் வலுக்கட்டாயமாக ரூபாயைத் திணித்து விட்டு நடந்தான்.
பெரியவர் ஒன்றும் செய்ய இயலாமல் அவனை வெறித்தார்.
அத்தியாயம் – 2
பேரளம் ஜங்சனே சின்ன ஜங்சன். காரைக்கால். திருவாரூர் மார்க்க தொடர்வண்டிகள் மட்டும்… இங்கு தங்கி, மாறிச் செல்வதால் ஏற்பட்ட நிறுத்தம். இது கிராமமென்பதால் அதைச் அதைச் சுற்றிலும், தொலைவிலும் கிராமங்கள்.
ஜங்சனிலிருந்து பார்த்தால் அந்தக் கிராமங்கள் குட்டிக் குட்டித் தோப்புகளாய்த் தெரியும் தென்னை, புளிய மரங்கள்தான் எல்லா ஊர்களிலும் தலைகளை நீட்டிக்கொண்டிருக்கும். மற்ற மரங்கள், வீடுகள் எல்லாம் அவைகளுக்குள் அடங்கிக் கிடக்கும்.
ஜங்சனிலிருந்து எந்த ஊருக்குச் செல்ல வேண்டுமென்றாலும் செம்மண் சாலைகள்தான். அவைகள் பச்சைப் பசேல் வயல்களின் நடுவே பாம்புகள் போல வளைந்து, நெளிந்து படுத்துக் கிடக்கும்.
சாலைகளின் இருமருங்கிலும் புளிய மரங்கள், ஆலமரங்கள் வரிசையாய் மக்களுக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருக்கும்.
முதுகு சுமை, இரு கைகளிலும் பெட்டிகளுடன் தன் அன்னவள்ளி கிராம சாலையில் கால் வைத்தான் ரகுநாதன்.
பதினோரு மணி கோடை வெய்யிலின் தாக்கம் மரங்கள் குடை பிடிக்க…பச்சைப் பசேல் வயல்களில் தேங்கிக்கிடக்கும் நீர்களில் காற்று பட்டு வெய்யிலின் தாக்கத்தை மேலும் மட்டுப்படுத்த நடந்தான்.
சாலை வளைந்து, நெளிந்து போனது.
தொலைவில் பார்த்தான் ரகுநாதன். சுற்றிலும்..அங்கொன்றும் இங்கொன்றுமாய் கரும்பு வயல்கள் தென்பட்டன. மீதி எல்லாம் நெற்பயிர்கள். நாற்று, நடவுகள் எல்லாம் போர்செட் உபயம். எப்போதும் அங்கு முப்போக சாகுபடி.
நட்டு இரண்டு மாதப் பயிர்கள். எங்கும் பச்சைப் பட்டு விரித்தது போல்… பார்க்க அழகாய், ரம்மியமாய்….
நிழலில் நடந்தாலும் நடையின் தாக்கம் ரகுநாதனுக்கு வியர்வைகள் துளிர்த்தது.
ஆலமரத்தில் காக்கைகளும், நாரத்தம்பிள்ளை குருவிகளும், இன்னும் சில குருவிகளும், மைனாக்களும்… ‘ கீச், கீச், காச், மூச்சென்று ‘! என்று கத்தி பழங்களைத் தின்று, கொத்தி, கூச்சல் போட்டுக்கொண்டு குதூகலமாக இருந்தன.
‘பறவைகளுக்கு மரங்கள் உண்ண உணவுகள் கொடுத்து, கூடு கட்டிக்கொள்ள இடங்கள் கொடுத்து, உட்கார்ந்து மகிழ கிளைகள் கொடுத்து… எப்படியெப்படியெல்லாம் உதவுகின்றன..’ நினைத்தான்.
சாலையை ஒட்டிச் செல்லும் வாய்க்காலில் தண்ணீர் நிரம்ப ஓடியது. அவற்றில் ஆம்பலும், பாசிகளும் நிறைந்திருந்தன. சின்ன சின்ன மீன்கள் நீந்தின.
வழியில் யாரோ ஒரு ஆள் வயசாளி இவனைப் பார்த்ததும் கொஞ்சம் மரியாதையாய் ஒதுங்கி நடந்து, நின்று… இவனை உற்றுப் பார்த்துவிட்டுச் சென்றார் .
ஒருவேளை…
‘இது யார் ஊருக்குப் புதுசு..? யார் பையனாக இருக்கும்..?’ என்று நினைத்துக் கொண்டு போகலாம். – நினைத்தான்.
அடுத்து பத்தடி தாண்டி வருகையில்…ஒருவன் அழுக்கு வேட்டியும், அழுக்கு சட்டையாக வேக வேகமாய் எதிரே வந்தான்.
அவன் தொலைவில் வரும்போதே இவனை உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தான். அருகே வந்ததும் ஒரு வினாடி திகைத்து….
“யார் ரகுவா..?!…” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.
‘தெரிந்த முகம். பழக்கப்பட்டக் குரல். ஆனால் பெயர்…?’
இவனுக்குச் சட்டென்று நினைவு வரவில்லை.
“அட! நாந்தானய்யா செம்பட்டை..!”
இவனுக்குப் பளிச்சென்று வெளிச்சம்.
“அடடே… நீயா…?”
“மறந்துட்டியா…?”
“மன்னிக்கனும்டா. உன் முகம் மாறிப் போச்சு. பேரும் சட்டுன்னு ஞாபகத்துக்கு வரல. எப்படிடா இருக்கே..?”
“நல்லா இருக்கேன். அடேயப்பா! ஆளே மாறிப்போயிட்டே..” அவன் ஆச்சரியப்பட்டான்.
ரகுநாதன் புன்னகைத்தான்.
“நடு ரோட்டுல நிக்காதே. இப்படி ஓரம் ஒதுங்கு. சொல்லாம கொள்ளாம போயிட்டியேடா.. பத்து வருஷம் ஓடிப்போச்சேடா..!”
“…..”
“ரகு! ஆள் மாறி இருக்கிறீயே. மனசு மாறி இருக்குமான்னு நெனைச்சேன்.மாறலடா..!” செம்பட்டையன் தன்னை மறந்து அவனைக் கட்டிப் பிடித்தான்.
ரகுநாதனுக்குப் பரவசமாக இருந்தது.
‘கிராமத்தில் முதல் ஆள். அதிலும்…. பழக்கப்பட்ட நண்பன். கட்டிப்பிடித்து, பாசப்பிணைப்பு!’ – அவனுக்குள் சட்டென்று உணர்வுகள் கொப்பளித்து குபுக்கென்று கண்களில் கண்ணீர்.
“ஏன்டா ! அழறே..?” சட்டென்று பிரிந்த செம்பட்டையன் இவனைத் துணுக்குற்றுப் பார்த்தான்.
“சேச்சே..! சும்மா. உன்னைப் பார்த்ததும் எனக்குள்ளே ஒரு நெகிழ்ச்சி..”
“இதுதான் உன் ராணுவ உடையா..?”
“ஆமா..”
“சினிமாவுல வர்ற மாதிரி இருக்கு. ஊருக்கு வரும்போது இதைப் போட்டுக்கிட்டுதான் வரணுமா..?…”
“அதுல சில சௌகரியங்கள் இருக்கு..”
“என்ன..?”
“பேருந்து, ரயில் போக்குவரத்துல கொஞ்சம் வசதிகள் இருக்கு. கண்டக்டருங்க, செக்கருங்க…ஆளைப் பார்த்ததும் சட்டுன்னு அடையாளம் கண்டுப்பாங்க. போடாம் சாதாரண உடையில் வந்தா… நான் மிலிட்டரிக்காரன், ராணுவவீரன்னு… அடையாள அட்டையை எடுத்துக் காண்பிக்கணும்.”
”ரகு! ஆளே மாறிப்போய் நல்ல கலராகிட்டே..!”
“காஷ்மீர்ல இருக்கேன். இமயமலைப் பிரதேசம். கொட்டும் பனியும், குளிருமாய் வெயில் படாத இடம். அதனால் நிறம் கொஞ்சம் கூடிப்போச்சு.”
“உன் சிவந்த நிறத்துக்கும்…இந்த ராணுவ உடைக்கும் ரொம்ப எடுப்பா இருக்குடா..”
“அதை விடு. நீ ஏன் இளைச்சிப் போயிருக்கே..?”
“அப்படியேத்தானிருக்கேன். அது சரி. ஊர்லேர்ந்து வர்றீயே. உன் வீட்டிலிருந்து வண்டி வரலையா..?”
“இல்லே..”
“ஏன்..?..”
“நான் வர்றதா தகவல் தெரிவிக்கல..”
“ஏன்…?”
“திடுதிப்புன்னு போய் நின்னு குடும்பத்தையே ஆச்சரியப்படுத்தணும்ன்னு ஆசை.”
“அதுக்கு நடந்து வருவானேன்..?!”
“பத்து வருசமா… பிரிஞ்சி கிடந்த பூமியை நடந்து நல்லா பார்த்து ரசிச்சி, ருசிச்சு வரனும்ன்னு ஆசை..”
“சரி. பெட்டிகளைக் குடு. நான் தூக்கி வர்றேன்.” கை நீட்டினான்.
“ஏன்.. நீ என்னைப் பார்த்ததுக்குச் சுமையா..?”
“சேச்சே..! கஷ்டப்பட்டு வர்றே..”
“இதைவிட எல்லாம் அதிக சுமை தூக்கி ராணுவத்துல பழக்கப் பட்டாச்சு. நீ எங்கே போறே..?”
“பேரளத்துக்கு..”
“போய் உன் வேலையை முடிச்சி வீட்டுக்கு வா…”
தயங்கினான்.
“ஏன்..?
“சாயங்காலம் வர்றேன்.” அவன் நடந்தான்.
ரகுநாதன் அவனை நெஞ்சில் சுமந்து நடந்தான்!
அத்தியாயம் – 3
செம்பட்டையன் ஆளே மாறிவிட்டான். வாடி, வதங்கி உருமாறிவிட்டான். படிக்கும்போதே ஏழை வீட்டுப் பிள்ளை.
இன்னும் அந்த நிலையிலேயே இருக்கின்றானா..?! ஆமாம்.அப்படித்தானிருக்கவேண்டும்.!
பள்ளிக்கூடம் படிக்கும்போது வயிற்றுக்கு வழி இல்லை என்றாலும் ஆள் நல்ல வாட்ட சாட்டமாக இருப்பான். அப்போ…ஊர் மர மட்டைகளும், ஆறும், வாய்க்கால்களும் இவர்களிடம் என்ன பாடு பட்டிருக்கின்றன. வாயிருந்தால் சொல்லி அழுத்திருக்கும்.
தொபீர்! என்று மதகிலிருந்தும், மரக்கிளைகளிலிருந்தும் குதிப்பார்கள். அலைகள் ஒரு அடி உயரத்திற்கு மேலெழும்பும்.. கரைகளைத் தாக்கும். இவர்கள் குளித்து விட்டுக் கரை ஏறினால் குளத்தில் தண்ணீர் ஒரு அடி எகிறி இருப்பதற்கான அடையாளத்தைக் காட்டும். இவர்கள் கண்கள் சிகப்பேறி இருக்கும்.
ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்புகள் வரை மட்டும் உள்ளூர் கிராமத்துப் பள்ளிக்கூடம். அதற்கு மேல் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பேரளத்திற்குத்தான் வரவேண்டும். கல்லூரி என்றால் காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணம் வரவேண்டும்.
அன்னவள்ளி கிராமத்திலிருந்து பத்துப் பதினைந்து பேர்கள் வருவார்கள். காலையில் வரும்போது ஒரு கையில் புத்தகமூட்டை. இன்னொரு கையில் தூக்கு வாளி, சோத்து மூட்டைகள் கணக்கும். திரும்பும்போது கதை வேறு மாதிரி. இரண்டு சிறுவர்களிடம் நீண்ட கழியைக் கொடுத்து ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு நடுவில் புத்தகப் பை, தூக்கு வாளிகளை மாட்டி விடுவார்கள் . அவர்கள் நுகத்தடி பூட்டிய மாடுகள் போல் போவார்கள். இவர்கள்….? வழியில் ஆளுக்கொரு காட்டாமணக்கு கழிகளை ஒடித்துக் கொள்வார்கள். வழியில், மரமட்டைகளில் ஒரு ஓணான் ஓடிஒளியக்கூடாது. அத்தனைகளும் அடித்து துவசம் செய்வார்கள். மரத்தில் எட்டும் உயரத்தில் அது தென்பட்டால் பூனைப் போல் பதுங்கி மறைந்து போய் வாலைப் பிடித்துத் தரையிலடிப்பார்கள். இல்லை…கார்த்திகைப் பைகளைப் போல் தலைக்கு மேல் கரகரவென்று சுற்றி கீழே விடுவார்கள். அவைகள் மயக்கத்தில் தள்ளாடும். அதை ரசிப்பார்கள். சில ஓணான்கள் சாமார்த்தியமாக இவர்களைக் கண்டாலே நகர்ந்து மறையும்.
இந்த ஓணான்களைப் பிடிப்பத்தில் சின்னான் கெட்டிக்காரன். அவைகளை மறைந்து லபக்கென்று பிடிப்பான்.
எட்டாத உயரத்தில் இருக்கும் ஓணான்களைக் கல்லெடுத்து அடிப்பார்கள். செல்வராசு குறி பார்த்து அடிப்பதில் கில்லாடி. நடு உடல் அல்லது மண்டை சிதறி சொத்தென்று விழும்.
செம்பட்டையனும், ரகுநாதனும் கம்பால் அடிப்பதில் சூரர்கள்.
ஏன்…? ஓணான்களை இப்படி அநியாயத்திற்கு அடித்துக் கொல்ல வேண்டும்..? சூரியனுக்குப் பழிப்புக் காட்டுமாம். செம்பட்டையன் பாட்டி சொன்ன பாடம். அதுவும் அப்படித்தான் செய்யும். தலையைத் தூக்கித் தூக்கி ஆட்டும். உலகத்திற்கே ஒளி கொடுக்கும் சூரியக் கடவுளுக்கு பழிப்புக் காட்டலாமா..? அதுதான் இவர்கள் ஆத்திரம்.
அடுத்து…சாலையோர புளியனும், நாவல் மரங்களும் படாத பாடு படும். புளியனை விட நாவல் மரத்திற்குத்தான் தொந்தரவு அதிகம். ஒவ்வொரு கிளைகளிலும் ஒருவன் தொங்குவான். கீழே இருந்து பார்ப்பவர்களுக்குப் பகீரெங்கும்.
“எலோய்..! இறங்குங்கடா.. இறங்குங்கடா..” என்று யாராவது கோலெடுத்து குதித்தால் கூட மசிய மாட்டார்கள். பயந்து கீழே இறங்கமாட்டார்கள்.
குரங்கு மாதிரி மரத்திலேயே தொங்கி இருப்பார்கள். குச்சி, கோலெடுத்து கீழே நிற்கும் ஆள் அந்தண்டை நகர்ந்ததும்… மேல் சட்டை, கீழ் சட்டை பாக்கெட்டுகளை நாவற்பழங்களால் நிரப்பிக் கொண்டு இறங்குவார்கள். ஆனால் இதுவரைக்கும் ஒரு பயல் கீழே விழுந்து கால், கை முறித்துக் கொண்டது கிடையாது. மரத்தில் தொற்றிய கல் விழுந்து மண்டை உடைந்த சமாச்சாரங்கள் உண்டு.
பாவம்..செம்பட்டையன்.எட்டாம் வகுப்பு படிக்கும்போதே… வயல் வேலைகளுக்குச் சென்று தன்னால் முடிந்த அளவு வேலை செய்து, அரை ஆள் கூலி பெற்று, நோட்டு புத்தகங்கள் வாங்கி தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வான். பத்தாம் வகுப்பிற்குப் பிறகு அதையே முழு நேரத்தொழிலாக்கி குடும்பத்திற்கு உதவி, ஒத்தாசையாகி விட்டான்.
‘சேறு… ஆளைத் தின்று இப்படி ஒடிந்து ஒல்லியாகிப் போய்விட்டானே..! திருமணம் ஆகி இருக்குமோ..? அதனால் கவலைகள் உண்டாகி ஆள் இப்படி ஆகி விட்டானோ..?’
நாம்தான் பண்ணிக்கொள்ளவில்லை என்றால்…இவர்களும் பண்ணிக்கொள்ளாமலிருப்பார்களா..?
நகரத்து மக்கள், இளைஞர்கள்… திருமணத்தைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள். படிப்பு, முன்னேற்றம், வேலை, அடுத்துதான் திருமணம்.
கிராமத்து மக்கள்..?
ஆண்பிள்ளையானால் சாண் பிள்ளை. பூனை மயிர் அரும்பு மீசை கருமை தட்ட ஆரம்பித்து விட்டாலே போதும் . பெற்றவர்கள் அவன் கலியாணத்தைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள். பையன் இடக்கு மடக்காய் எங்காவது விழுந்து..தங்களுக்குக் கெட்ட பெயர் வாங்கி வைத்துவிடுவான் பயம்.
பெண் பிள்ளைகளென்றால் வயதுக்கு வந்து விட வேண்டும். மற்றப்படி உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி எல்லாம் கிடையாது.
ரகுநாதன்…சுமைகளைத் தரையில் வைத்து விட்டு… மரத்தடியில் அமர்ந்து உயரே அண்ணாந்து பார்த்தான்.
கிளை, இலை, தழைகளில் வானம் பொத்தல் பொத்தலாகத் தெரிந்தது. தரையில் அவைகள் திட்டுத் திட்டுகளாகக் கிடந்தன.
காற்று நெற்பயிர்கள் தலைகளைக் கோதி நெளி வைத்து அழகு பார்த்தது. தூரத்தில் ஆற்றின் கரைகளில் வரிசையாய் தேக்கு மரங்கள். அணிவகுத்துக் கிடந்தன.
ஆற்றோரமென்றாலே மரங்களுக்கு கொண்டாட்டம்தான். தண்ணீருக்குப் பஞ்சமில்லை. மேலும் ஆடு மாடுகள் மேய புல், பூண்டுகள்.. என்று செழிப்பு. காடாய் நாணல்கள்.
‘இன்னும் மூன்று மாதங்களுக்கு இந்த கிராமத்தின் அழகை, இயற்கையின் வனப்பை கண்டு மகிழலாம். ஆசை தீர பருகலாம்! ‘ – என்று நினைக்கும்போதே ரகுநாதனுக்குள் இனம் புரியாத உவகை வந்து எட்டிப் பார்த்துச் சிரித்தது.
ரகுநாதன் கால்களைப் பார்த்தான். கருப்பு பூட்டில் செம்மண் ஏறி நிறம் மாறி இருந்தது.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ரகுநாதா…?!’ அவனுக்குள்ளேயே கேட்டான்.
எழுந்து சுமைகளை பழையபடி தூக்கிக் கொண்டு நடந்தான்.
சாலை ஓர வயல்களில் களை எடுக்கும் பெண்கள்….இவனை வியப்பும், விகசிப்புமாய்ப் பார்த்தார்கள்.
“யார் புள்ள அது..?” எவளோ ஒருத்தி எவளையோ கேட்டாள்.
“எந்த ஊட்டு விருந்தாளி..?”
“அவரு பையனா இருக்குமோ…?!”
இவனைக் காட்டி அவர்கள் இதைத்தான் பேசி இருக்க வேண்டும்.
ரகுநாதன் வேகமாக நடந்தான்.
வயல் வரப்புகளில் தென்னை, பனை, ஊடுபயிர்களாக துவரை, உளுந்துகள் இருந்தன. கிராமத்து மக்களுக்கு இருக்கும் நிலத்தில் எல்லாவற்றையும் பயிர் செய்து விளைவித்துவிட ஆசை. வீடுகளிலும்.. தென்னை, வாழை, புளியன்களை வைத்திருப்பார்கள். பயனுக்குப் பயனுமாச்சு. நிழலுக்கு நிழலுமாச்சு.
நகரத்து மக்களுக்கு மரங்கள் என்றாலே உவ்வே. வைக்க இடங்களும் கிடையாது. வைத்தாலும் வீட்டுச் சுவற்றையோ, அல்லது சுற்றுச் சுவற்றையோ இடித்து விடும்.
‘தம்பி இந்நேரம் எங்கிருப்பான்..?’ ரகுநாதனுக்கு நினைவு அவனையும் மீறி… வீட்டில் நுழைந்தது. அவன் மேல் தாவியது.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
