குழாய்
கதையாசிரியர்: முனைவர் ப.சரவணன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 14, 2025
பார்வையிட்டோர்: 101

‘கடல்நீரை நன்னீராக்கும் கனவு’த் திட்டத்தை நிறைவேற்றும் பணிக்காகப் புறவெளிச்சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்ட மாபெரும் குழாய்கள் இப்போதுவரை பொதுப்பணித் துறையினரால் மண்ணுக்கடியில் பதிக்கப்படாததால், வறுமைக்கோட்டிற்கு மிக மிக அடியில் வாழக் கூடிய எண்ணற்ற பொதுமக்களுள் சிலர் அவற்றைத் தங்களின் வீடுகளாகப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர்.
குறுக்கும் நெடுக்குமாகச் சாலையோரத்தில் இடப்பட்டிருந்த ஒவ்வொரு குழாய்க்குள்ளும் இரண்டு குடும்பங்கள் தங்கியிருந்தன. கரியநிறத்தில் யானை படுத்திருப்பதுபோல அந்தக் குழாய் ஒவ்வொன்றும் இருந்தது. அதை அவர்கள் ‘யானைக் குழாய்கள்’ என்றனர்.
இந்த யானைக்குழாய்கள் சாலையோரத்தில் குறுக்கும் நெடுக்குமாக வைக்கப் பட்டிருந்ததால், அதனுள் வாழ்ந்தவர்கள் தங்கள் வீட்டின் தலைவாசல் எந்தத் திசையில் இருக்கிறது என்பதையோ, தங்களின் இந்தக் குழாய் இல்லம் எத்தகைய ‘வாஸ்துபடி’ அமைந்திருக்கிறது என்பதையோ பற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை.
வெய்யிலில் வாடக்கூடாது, மழையில் நனையக் கூடாது என்பதைத் தவிர வேறு எந்தத் தீவிரச் சிந்தனையுமே அவர்களுக்கு இல்லை. அந்த மாபெரும் குழாய் இல்லங்கள் அவர்களை வெய்யிலிருந்தும் மழையிலிருந்தும் ஓரளவுக்குக் காப்பாற்றின.
சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும்போது அவர்கள் தங்களின் குழாய் இல்லங்களில் நின்றுகொள்வார்கள். அது இரவுநேரமாக இருந்தால் நின்றுகொண்டே தூங்குவார்கள். ஏறுவெய்யிலிலும் இறங்குவெய்யிலிலும் குழாய் இல்லங்கள் கொதிகலன்போல மாறிவிடும். அப்போது அவர்கள் தங்களின் இல்லத்தைவிட்டு வெளியேறி, மரத்தடிகளிலும் புதர்களின் குறுநிழல்களிலும் அமர்ந்துகொள்வர். அவர்களுக்குக் குளிக்கவும் கழிக்கவும் வெட்டவெளிதான். வேறுவழியில்லை, அவர்கள் வாடகையே கொடுக்காமல் தங்கும் இந்தக் குழாய் இல்லங்களில் இவைபோன்ற வசதிக் குறைச்சல்கள் இருக்கத்தானே செய்யும்?
கொத்தையன் நெட்டைமரம்போல வளர்ந்திருந்ததால் அவனால் இந்தக் குழாய் இல்லத்திற்குள் எப்போதும் நிமிரவே முடியாது. அவன் இந்த இல்லத்திற்குள் குனிந்தபடியே நுழைந்து, வெளியேறி வாழ வேண்டியிருந்தது. ஆனால், சக்திச்செல்வியோ தலைநிமிர்ந்தபடியே உள்ளே செல்வாள், வருவாள். அவள் கொத்தையனின் உயரத்தில் பாதிகூட இல்லை என்பதால், இந்தச் சலுகையை அவளுக்கு இயற்கை அளித்திருந்தது.
கொத்தையன் குனிந்தபடியே இல்லத்தைவிட்டு வெளியேறி, தலையை நிமிர்த்தி நடக்கத் தொடங்கினான். வெளியே மங்கலான வெளிச்சம். அவன் வெளியேறி அரைமணிநேரம் கழித்துத்தான் கண்மலர்ந்தாள் சக்திச்செல்வி. கை, கால்களை நன்றாக நீட்டி சோம்பல் முறித்தாள். அவளுக்கு வயிற்றைக்கலக்கியது. வெட்டவெளியை நோக்கி ஓடி, புதர்மறையில் குந்தியமர்ந்தாள்.
அவள் திரும்ப வந்தபோது, கொத்தையன் அவளுக்காக டீ வாங்கி வைத்திருந்தான். இருவரும் ஆளுக்குப் பாதியென டீயை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தனர். டீயைப் பருகியதும் தங்களுக்குப் புதுத்தெம்பு வந்துவிட்டதாகவே இருவரும் உணர்ந்தனர்.
இருவரும் புறப்பட்டனர். சக்திச்செல்வி நீண்ட, ஒல்லியான மூங்கிற்கழையையும் மிக நீண்ட கொச்சைக் கயிற்றையும் எடுத்துக்கொண்டு முன்னால் நடந்தாள். அவர்கள் நெடுந்தொலைவு நடந்து சென்று, தென்னந்தோப்புக்குள் நுழைந்தனர். கொத்தையன் அவளுக்கு இந்தத் தென்னந் தோப்பில்தான் கடந்த இரண்டு மாதங்களாகப் பயிற்சியளித்து வருகிறான்.
சக்திச்செல்வியிடமிருந்து கொச்சைக்கயிற்றை வாங்கி, அதனை இரண்டு தென்னைமரங்களுக்கு இடையில் மூன்றடி உயரத்தில் கட்டினான். அவன் கயிற்றைக் கட்டிமுடிக்கும் வரையில் சக்திச்செல்வி தனக்குக் கொத்தையன் சொல்லிக் கொடுத்திருந்த அடிப்படை உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்தாள்.
ஐந்து வயதில் உடலை வளைத்துப் பழகியிருந்தால் இந்தக் கலை எளிதாகக் கைவந்திருக்கும். என்ன செய்ய, கொத்தையனை ரயில்நிலையத்தில் சந்திக்கும்போது சக்திச்செல்விக்கு வயது ஒன்பதாகிவிட்டிருந்தது.
கொத்தையன் தன் கூட்டத்தினரிடமிருந்தும் சக்திச்செல்வி அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்குச் செல்லும் வழியில் தப்பித்துவந்தும் ரயில்நிலைய நடைபாதையில் தள்ளி தள்ளி ஆளுக்கொரு திசையைப் பார்த்து அமர்ந்திருந்தபோது, ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் வருவதைத் தூரத்திலிருந்தே பார்த்துவிட்ட சக்திச் செல்விக்கு உடல் நடுங்கியது. தனியாக இருந்தால் அவர்கள் தன்னிடம் பல கேள்விகளைக் கேட்டு, ‘தான் யார்’ என்பதை அறிந்துவிடக்கூடும் என்று நினைத்த அவள் உடனே, தனக்குத் தொலைவில் அமர்ந்திருந்த கொத்தையனின் அருகில்சென்று நெருங்கி, அவனை ஒட்டியும் ஒட்டாதவாறும் அமர்ந்துகொண்டாள்.
இதுநாள் வரை பெருங்கூட்டத்துடனேயே வாழ்ந்து, இரண்டு நாட்களாகத் தனித்து அலையும் கொத்தையனுக்குச் சக்திச்செல்வியின் இந்த அருகாமை பிடித்துப்போனது. அவள் தன்னருகில் இருப்பதை மெல்லிய சிரிப்புடன் ஏற்றுக் கொண்டு அவளிடம் பேசத் தொடங்கினான்.
“உம்போரு?”
“செல்வி. சக்திச்செல்வி”
“தனியாவா இருக்க?”
‘ஆமாம்’ என்பதுபோலத் தலையை அசைத்தாள்.
“நானுந்தனியாத்தான் இருக்கே”.
அதற்குள் ரயில்வே காவல்துறையினர் இவர்களை நெருங்கி வந்தனர். அவர்களுள் ஒருவர் தன்னிடமிருந்த லத்தியைக் கொத்தையனை நோக்கி நீட்டியபடியே அதட்டும் குரலில், “யார்டா நீ?” என்று கேட்டார்.
உடனே எழுந்த கொத்தையன், தன் இரு கைகளையும் மார்போடு இணைத்துக் கட்டிக்கொண்டு, பணிவான குரலில், “சார்! நான் கொத்தையன். கழைக்கூத்தாடி” என்றான்.
மற்றொருவர் சக்திச்செல்வியைப் பார்த்து, “யாரு நீ, பாப்பா?” என்று கேட்டார்.
“நாஞ்சக்திச்செல்வி”.
“இவன் உனக்கு என்ன உறவு வேணு?”
சக்திச்செல்வி சில விநாடிகள் தயங்கி, “இவரு… என்னோட என்னோட அண்ணா” என்றாள்.
மற்றவர் கொத்தையனைப் பார்த்து, “எந்த வண்டிக்குப் போறீங்க? டிக்கெட் வச்சிருக்கீங்களா?” என்று கேட்டுவிட்டு, பதிலை எதிர்பார்க்காமல் மெல்ல நடக்கத் தொடங்கினார்.
கொத்தையன் தன் முன்னால் நின்றுகொண்டிருந்தவரிடம், “பத்து மணி வண்டிக்குத்தான்… டிக்கெட் இருக்குங்க” என்றான்.
அவன் கூறியதைப் பாதிக் கேட்டவாறு அவரும் நடக்கத் தொடங்கினார்.
அவர்கள் வெகுதூரம் சென்றதும் கொத்தையன், “நீ எங்கூடவே வந்துடுறீயா?” என்று கேட்டான்.
சக்திச்செல்வி, “சரி” என்றாள்.
அவர்களிடம் டிக்கெட் இல்லை. எந்த வண்டியிலும் ஏறும் திட்டமும் இல்லை. விடியும் வரை அங்கேயே ஒருவரை ஒருவர் நெருங்கியபடி அமர்ந்திருந்தனர். தூக்கச்சடைவில் ஒருவர்மீது ஒருவர் மெல்லச் சாய்துகொண்டனர். விடிந்ததும் எழுந்து, ஏதோ ஒரு ரயிலில் ஏறி, எங்கோ ஓர் இடத்தில் இறங்கி, கால்போன போக்கில் நடந்து இந்த யானைகுழாய்ப் பகுதிக்கு வந்துசேர்ந்தனர். அதுவரை யாரும் குடியேறியிராத குழாய்க்குள் இவர்கள் குடியேறினர்.
கொத்தையன் கலைக்கூத்தில் ‘டோலக்’ இசைப்பான். இப்போது அவன் தனித்து வந்துவிட்டதால், தனக்குக் கிடைக்கும் வேலைகளைச் செய்து ஓரளவுக்குச் சம்பாதித்தான். வேலை ஏதும் கிடைக்காதபோது சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபட்டான். கிடைத்த வருமானத்தில் இருவரும் இரண்டுவேளை சாப்பிட்டனர்.
சக்திச்செல்விக்குத் தன் சித்தப்பாவைப் பிடிக்காது. தன் அம்மாவை விட்டு அப்பா பிரிந்ததற்குக் காரணமே சித்தப்பாதான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். ‘அவரை என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்?’ என்று நினைத்துக்கொண்டே இருந்தாள் நெடுநாள்களாக.
அவளுக்கு அவளுடைய பெயரைவிடவும் ‘சித்தப்பா’ என்ற அந்த உறவுப் பெயர்தான் அவளுடைய நினைவில் ஆழப் பதிந்திருந்தது. ‘சித்தப்பா’ என்ற உறவுச்சொல் அவளுக்குப் பெருங்கசப்பு மருந்தாகவே மாறியிருந்தது. ‘அவரைக் கொலைசெய்துவிடலாம்’ என்றுகூடத் தீர்மானித்தாள். அதற்கு வாய்ப்பும் கிடைத்தது.
அவள் சித்தப்பாவைக் கொலைசெய்ய முயற்சிசெய்து தோற்ற வழக்கில் கைதாகி, அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்குச் செல்லும் வழியில் தப்பி வந்து, ரயில் நிலையத்தில் கொத்தையனைச் சந்தித்து. வேறுவழியில்லாமல் அவனுக்கு ஓர் உறவுப் பெயரைக் கொடுக்க நேர்ந்தபோது, ‘தனக்கொரு அண்ணன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் தன் குடும்பத்துக்கு ஆயிருக்குமா?’ என்றுதான் அவளுக்குத் தோன்றியது. உடனடியாக அவள் கொத்தையனை ‘அண்ணன்’ என்ற உறவுப் பெயரால் ஏற்றுக் கொண்டாள். அவ்வாறே அவனை அவள் ரயில்வே காவல்துறையினரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
கொத்தையன் கட்டிய கயிற்றில் கழையைத் தூங்கிப்பிடித்தபடி மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினாள் சக்திச்செல்வி. அவள் உடல் நடுங்கியது. முதல் வாரத்தில் வரிசையாகப் படுக்க வசமாக வைக்கப்பட்ட செங்கல்களின் மீதும், பின்னர் செங்குத்து வசமாக வைக்கப்பட்ட செங்கல்களின் மீதும் சக்திச்செல்வியை நடக்கவைத்தான் கொத்தையன். அதன்பின் கவிழ்ந்த நிலையில் வரிசையாக வைக்கப்பட்ட டப்பாக்களின் மீது நடக்க வைத்தான். அடுத்ததாக நீண்ட மூங்கில் குச்சியைப் படுக்க வசமாக வைத்து, அதன் இரண்டு முனைகளுக்கும் அடியில் ஓர் உடைகல்லை வைத்து, மூங்கிலின் மீது நடக்க வைத்தான்.
பின்னர் இரண்டு தென்னைகளுக்கு இடையில் அவற்றின் வேர்ப்பகுதியின் உயரத்தில் கயிற்றைக் கட்டி, கழையினை ஏந்திக்கொண்டு நடக்க வைத்தான். அதன்பின்னர் ஒவ்வொரு வாரம் சிறிது சிறிதாகக் கயிற்றை உயர்த்திக் கட்டியபடியே இருந்தான்.
ஐந்தடி வரை கட்டி அதில் அவள் கழையினைப் பயன்படுத்தித் தடுமாறாமல் நடக்கப் பழகிவிட்டால்போதும். அடுத்து கழைக்கூத்தாடத் துணிந்து சென்றுவிடலாம்.
கொத்தையன் மாலைப்பொழுதுகளில் தனக்குக் கற்றுத்தந்த சிறு நடன அசைவுகளைப் பகற்பொழுதுகளில் ஆடிப் பார்த்தாள் சக்திச்செல்வி. அவள் இரவுப் பொழுதுகளில் கொத்தையன் முன்னும் ஆடிக்காட்டுவாள்.
மூன்றாவது மாதத்தின் முடிவில் அவள் ஏழடி உயரத்தில் கயிற்றில் நடக்கக் கற்றுக்கொண்டாள். கொத்தையன் கலைக்கூத்துக்குரிய
பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினான். ஒரு ‘டோலக்கை’ வாடகைக்கு எடுத்தான்.
புறநகரில் நடத்தப்பட்ட வாராந்திரச் சந்தையில் சக்திச் செல்விக்கு அரங்கேற்றம் செய்ய நினைத்தான் கொத்தையன். ‘இதுநாள் வரை தன்முன்னே கயிற்றில் நடந்தவள், கூட்டத்தினர் முன்னர் கயிற்றில் நடக்கும்போது தடுமாறிவிட்டால், கையைக் காலை முறித்துக் கொள்வாளே?’ என நினைத்து, நிறைய கோரைப் புற்களைச் சேகரிக்கத் தொடங்கினான்.
அரங்கேற்றும் நாளும் வந்தது. சந்தைக்கு வெளிப்புறத்தில், கட்டாந்தரையில் பத்தடி உயரத்திற்குப் பெருக்கல் குறியில் நிறுத்தப்பட்ட இருஜோடி கழைகளுக்கு இடையில் ஏறத்தாழ இருபதடி தூரம் இருந்தது. அந்தத் தொலைவுக்குக் கயிற்றைக் கட்டினான் கொத்தையன். தரையில் கோரைப்புற்களைப் பல்வேறு கட்டுக்களாகக் கட்டி நீண்ட மெத்தைபோல் உருவாக்கினான். அவையே மூன்றடி உயரத்திற்கு இருந்தன. முதலில் அவன் கயிற்றில் ஏறி நடந்து பார்த்தான். பின்னர் அந்தக் கயிற்றிலிருந்து கோரைப்புல் மெத்தையில் குதித்துப் பார்த்தான். எல்லாம் சரியாகத்தான் இருந்தன.
சக்திச்செல்வி தன்னைத்தானே அலங்கரித்து, நேற்று கொத்தையன் வாடகைக்கு வாங்கிவந்த சலங்கைகளைக் கால்களில் கட்டிக்கொண்டு கோரைப் புற்கட்டுகளுக்கு அருகில் வந்தாள்.
அவன் டோலக்கை வேக வேகமாகத் தட்டி தட்டி இசைக்கத் தொடங்கினான். இசையின் ஒலியளவு கூட கூடக் கூட்டம் அவர்களை நோக்கி வரத் தொடங்கியது.
கூட்டம் தங்களை நெருங்குவதைக் கண்ட சக்திச்செல்வி, டோலக்கின் இசைக்கு ஏற்ப சலங்கைக் கால்களால் தாளமிட்டபடி இடுப்பை வளைத்து வளைத்து நடந்து கூட்டத்தாரை நெருங்கி, அனைவரையும் வணங்கிக் கொண்டே ஒருசுற்று சுற்றி வந்தாள். டோலக்கை உற்சாகமாகத் தட்டி இசைத்தான் கொத்தையன்.
ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பின்னர் அவன் இப்போதுதான் டோலக்கை இசைத்துக் கூத்தினை நடத்துகிறான். அதுவும் தனியாக. இதற்கு முன்பு அவன் கூட்டத்தினர் நிகழ்த்தும் கழைக்கூத்தில் அவன் மட்டுந்தான் ‘டோலக்’ இசைப்பான். அவன் அம்மா கயிற்றில் ஏறி, நடந்து பல வித்தைகளைக் காட்டுவார். தரையில் அவனுடைய சித்தி நடனமாடுவார். அவன் தந்தை பொதுமக்களிடமிருந்து பணம்வசூல் செய்வார்.
அவர் பாதிப் பணத்தைக் குடிக்கும் மீதிப் பணத்தில் தன் மனைவிக்கும் கொழுந்தியாளுக்கும் நிறையவே செலவு செய்வார். ஆனால், இவனுக்கென அவர் ஏதும் தந்ததில்லை, இரண்டுவேளை உணவைத் தவிர. தனக்கென ஏதும் இல்லாத இந்தக் குடும்பத்தோடு, இந்த ஒடுங்கிய குடிசையில் அவன் தொடர்ந்து வாழ விரும்பவில்லை.
கொத்தையன் நள்ளிரவில் மெல்ல எழுந்தான். அம்மாவும் சித்தியும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். தந்தை போதையில் புரண்டு கொண்டிருந்தார். தந்தையின் பணப் பையை எடுத்துக்கொண்டான். அன்றைய இரவில் அங்கிருந்து புறப்பட்ட கொத்தையன் மீண்டும் அங்குச் செல்லவே இல்லை.
கூட்டம் பெருகியவுடன் கொத்தையன் சக்திச்செல்விக்குக் கண்ஜாடை காட்டினான். உடனே, அவள் நீண்ட கழையை எடுத்து, கயிற்றை நோக்கி நிமிர்த்தி வைத்தாள். பெருக்கல் குறிவடிவில் நிறுத்தப்பட்ட ஒருபுறக் கழைகளைத் தொட்டு வணங்கிவிட்டு, அவற்றில் ஏறினாள். கயிற்று முனையில் சாய்த்து வைக்கப்பட்ட நீண்ட கழையை எடுத்துத் தோள்பட்டையில் படுக்கைவசமாக வைத்து இரண்டு கைகளையும் படுக்கை வசமாக நீண்டிக் கழையினைப் பிடித்துக் கொண்டாள். வலது காலை கயிற்றின் மீது மிக மெதுவாக வைத்தாள். பாரந்தாங்காமல் கயிறு அலுங்கியது.
அவளின் இரண்டு கண்களும் ஒருமுறை தரையில் பெரிய வட்டவடிவில் நின்றிருந்த கூட்டத்தினரைப் பார்த்தன. வட்ட வடிவத்தில் அடுக்கப்பட்ட அடர்த்தியான மனிதத் தலைகள். தான் கீழ்நோக்கிச் செல்லும் மிகப்பெரிய மனிதக் குழாயின் முகப்பில் நிற்பதுபோலவே உணர்ந்தாள்.
தலைக்குமேலே ஏறுவெய்யில். அவளின் நிழல் தலைகீழ்ப் பிம்பமாகத் தரையில் குறுகி விழுந்துகிடந்தது. தான் நிலத்தில் நிற்பதாகவே அவள் நினைத்துக் கொண்டாள். கூட்டத்தின் கரவொலி அவள் செவிகளில் நிறைந்தது. அவளுக்குத் தலைசுற்றுவதுபோல இருந்தது. அந்த மனிதக் குழாய் தன் கால்களுக்குக் கீழே மெல்ல சுழல்வதாக உணர்ந்தாள். உடனே, கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
இடதுகாலை எடுத்துக் கயிற்றின் மீது வைத்தாள். கயிறு மெல்ல அதிர்ந்து, விதிர்த்து அவளை ஏற்றிக்கொண்டது. அவளின் செவிகளில் டோலக்கின் இசை மட்டுமே கேட்டது. அவள் விழிகளைத் திறந்து, நடுங்கி நடுங்கி கயிற்றில் நடந்தாள். கூட்டத்தினரின் கரவொலிகளும் சில விசில் ஒலிகளும் அவளுக்கு மெல்லக் கேட்கத் தொடங்கின. அவை டோலக்கின் இசையைவிட மிகுந்தன. அந்த மனிதக் குழாய் மிக வேகமாக மண்ணைத் துளைத்துக்கொண்டு சுழல்வதுபோல அவளுக்குத் தெரிந்தது.
அவளுக்கு அடிவயிறு மெல்ல வலிக்கத் தொடங்கியது. உடல் ஒருமுறை விதிர்த்தது. டோலக்கின் இசை, பார்வையாளர்களின் கரவொலி எல்லாம் சேர்ந்து நீர்ச்சுழல்போல அவளைச் சூழ்ந்து கொண்டன. தன் கால்களுக்குக் கீழே இருந்த மனிதக் குழாய் மிகப்பெரிய ‘கிரைண்டர்’ போலச் சுழலத் தொடங்கிவிட்டதாகக் கற்பனை செய்துகொண்டாள். உடனே, அவள் அடிவயிற்றில் வலி மிகுந்தது.
இன்னும் சில அடிகள் நடந்துவிட்டால் போதும், பெருக்கல் குறிவடிவில் நிறுத்தப்பட்ட எதிர்ப்புறக் கழைகளை அடைந்துவிடலாம்.
ஆனால், அந்தச் சிறு தொலைவு மாலைநேரத்துத் தெடுவானம் போல அவளுக்கு அடையமுடியாத பேரிலக்கு போலத் தெரிந்தது.
மெல்லத் தலையைத் தாழ்த்திக் கீழே பார்த்தாள். அந்த மனிதக் குழாயின் அடியாழத்தில் அவளால் கழுத்தில் கத்திக்குத்துப்பட்டுத் துடித்த சித்தப்பாவின் முகம் மங்கலாகத் தெரியத் தொடங்கியது. காற்றில் ஆடும் சிலந்தி வலைபோல அந்த முகம் பொங்கியும் தாழ்ந்தும் மெல்ல அதிர்ந்தாடிக் கொண்டிருந்தது. அவ்வளவுதான். சிறு அலுங்கல்தான்.
அடுத்த வினாடியே அவளின் பாதங்கள் கயிற்றிலிருந்து நழுவின. உடனே அவள் மல்லாந்து கிணற்றுத் தண்ணீரில் மிதப்பவள் போலவும் அந்தரத்தில் படுத்திருப்பவள் போலவும் தரையை நோக்கிக் கழையுடன் விழத் தொடங்கினாள்.
மிகப் பெரிய வட்ட வடிவில் சுழன்றபடியே மண்ணைத் துளைத்துக் கொண்டிருந்த மனிதக் குழாய்க்குள் டோலக்கின் இசையைக் கேட்டுக்கொண்டே சித்தப்பாவின் முகத்தைத் துளைத்துக் கிழித்து, முடிவற்ற அந்த மனிதக் குழாயின் ஆழத்துக்குள் முடிவின்றி விழுந்து கொண்டிருந்தாள் சக்திச்செல்வி.
– 12.11.2025 மயிர் இணைய இதழ்.