வீணா
கதையாசிரியர்: லா.ச.ராமாமிர்தம்
கதைத்தொகுப்பு:
குடும்பம் முல்லை
கதைப்பதிவு: November 7, 2025
பார்வையிட்டோர்: 85
(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசற்கதவைத் திறந்து அவள் மகன் உள்ளே நுழைந்து மறுபடியும் கதவைத்தாளிடும் சப்தம் கேட்டது. ஆயினும் அவள் எழவில்லை. அவள் கைகால்களில் உயிரில்லை.
கூடத்துக்கு வந்து சட்டையைக் கழற்றி சுவர் ஆணியில் மாட்டினான். அவன் முகத்திலிருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. உள் உணர்ச்சிகள் முகத்தில் வெளிக்காட்டாவண்ணம், வெகு ஜாக்கிரதையாய் அவைகளை உள்ளுக்கே விரட்டியடித்திருந்தான்.
“அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தாய்விட்டது-”. குரலை அமைதியாய் வைத்துக்கொள்வதில் அவன் முழுமுயற்சியும் செலுத்தியிருந்தான்.
‘அவரை ஜாக்கிரதையாய் கவனித்துக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. ஏற்பாடெல்லாம் நன்றாயிருக்கிறது. அவரைத் தனியறையில்தான் வைத்திருக்கிறார்கள். வாரத்திற்கொருமுறை பார்க்கும் சீட்டு வாங்கி வந்திருக்கிறேன். நீ வரும் ஞாயிற்றுக் கிழமை போய்ப் பார்க்கலாம். அதற்குள் கொஞ்சம் வேகம் தணிந்தாலும் தணியும். ஒன்றும் கவலை வேண்டாம் என்கிறார்கள். அம்மாதிரி எத்தனை பார்த்திருப்பார்கள் அவர்கள்! அவர்களுக்குத் தெரியாததா என்ன?-
அவன் அவளுக்குத் தைரியம் கூறும்விதம் அவளுக்கே உள்ளுர வியப்பாயிருந்தது. தாயும் அவள் பெற்ற பிள்ளையே ஆயினும் ஒருவரையொருவர் இப்படி ஏமாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இருவருமே யறிவர், தைரியவார்த்தைகள் எவ்வளவு பயனற்றவை என்று, ஆயினும் இம்மாதிரிப் புளுகுகளும், வெறும் வார்த்தைகளின் அர்த்தமற்ற ஆதரவும்தான் உயிர்ச்சுமையின் ஊன்றுகோல்கள். ஒவ்வொரு சமயம் உயிர்ப்பாரத்தடியில் மனம் நசுங்குகையில், இம்மாதிரிப் பொய்கள்தாம் நம்பிக்கையையூட்டி, பாரம்தாங்கும் பலத்தைக் கொடுக்கின்றன!
அவள் பிள்ளை தாழ்வாரத்தின் கைப்பிடிச்சுவரின் மேல் ஏறி உட்கார்ந்திருந்தான். விசாரமும் வயிற்றுப்பிழைப்பின் வேதனையும், முகத்தில் வரிகளை உழுது, முன்மண்டையைச் சற்று வழுக்கையடித்திருந்தாலும், மொத்தத்தில் அவன் சற்று அழுத்தமான பேர்வழிதான். அவளுடைய தைரியமே அவன்தான். இருந்தாலும்…
மீண்டும் அவன் பேச்சின் தொனி அவள் காதில் விழுந்தது. “நாம் இரண்டொரு விஷயங்களைக் கவனிக்கவேண்டியிருக்கிறது. முதலில் இந்த வீட்டைக் காலிசெய்யவேண்டும்”-
(எத்தனை வருஷங்களாய் இங்கு குடியிருந்திருப்போம் – அவளுக்குச் சரியாய் ஞாபகமில்லை. கலியாணமாகி, புக்ககம் புகுந்ததே இந்த வீட்டில்தான். இப்பொழுது அவள் பிள்ளைக்கு 23, 24 வயதாகிறது (அதற்குள்ளேயே மண்டையில் வழுக்கை தட்டியிருந்தாலும்)- அதற்கு முன்னால் அவள் மாமனார்-அவருக்குமுன் அவர் தகப்பனார் அதற்கும் முன் அவர் தகப்பனார் – இங்கு வாழ்ந்திருக்கிறார்கள்.)
“இன்னும் நமக்குத் தேவையில்லாத சாமான்கள் எவ்வளவோ இருக்கின்றன அதையெல்லாம் விற்றுவிட வேண்டும்….”
(ஆம், எவ்வளவோ விற்றுவிட்டபோதிலும் இன்னமும் எவ்வளவோ இருக்கின்றன – பரம்பரையாய் வழங்கிவந்த சாமான்கள் – பட்டுப் பீதாம்பரங்கள் – உருமால்கள் – முழு அகலத்திற்கு சரிகைபோட்ட அங்கவஸ்திரங்கள் ரத்னக் கம்பளங்கள் பொற்பதக்கங்களை விற்றாய்விட்டது – உக்கிராண உள்ளில் இன்னமும் இரண்டு பெட்டிகள் நிறைய சாமான்கள் திணறிக்கொண்டிருக்கின்றன)
“அப்புறம் அம்மா-இப்பொழுது நான் சொல்வது கொஞ்சம் சிரமமான காரியந்தான் – எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டும்”
அட! எவ்வளவு சுலபமாய்ச் சொல்கிறான். அவள் பிள்ளை கெட்டிக்காரன்தான். அழுத்தம்தான்!
சற்றுநேரம் கழித்து அவன் சட்டெனக் கைப்பிடிச் சுவரின் மேல் குந்தி உட்கார்ந்திருந்த நிலைகளைந்து எழுந்தான்.
”நாளைக்காலை ஏலக்காரனை வரச்சொல்லியிருக்கிறேன், சாமான்களைப் பார்வையிட, அதற்குள் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து வை-” என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றான்.
அவள் பதிலே பேசவில்லை. உட்கார்ந்த இடத்தைவிட்டு எழவும் இல்லை. அவள் பிள்ளை முன்யோசனையாகவே எல்லாம் தயார் பண்ணிக்கொண்டு வந்துவிட்டான். ஆகையால் அவள் பேச இடமேயில்லை. அப்படியே இருந்தாலும் அவள் என்ன பேசப்போகிறாள்? அவள் பிள்ளை செய்வது சரிதான் என்று அவளுக்கே தெரியும். இருந்தும், இம்மாதிரி, இங்கேயே வளர்ந்து, உடலிலும் உள்ளத்திலும் ஊறிப்போன நினைவுகளையும் ஞாபகங்களையும், கரும்பலகையில் கிறுக்கியதை அழிப்பதுபோல், மறந்து, முற்றிலும் வேறான வாழ்க்கையைப் புதிதாய்த் தொடங்குவது அவ்வளவு சுலபமா? சாத்தியமா? அதுவும் அவள் வயதில்!
அதுவும் என்னென்ன நினைவுகள்! என்னென்ன அனுபவங்கள்! அவைகளைச் சிந்தனையில் பின்னோக்கும்போதுதான் அவைகளின் இன்பதுன்பங்கள், பட்ட காலத்தையும்விடப் பளிச்சென்று தெரிகின்றன. அம்மாதிரிப் பின்னோக்குகையில், காரியங்களின் சரி-தப்புகளைப் பற்றிய சந்தேகங்கள்தாம் அதிகரித்தன. ஓடும் தண்ணீரில் ஜலத்தை மொண்டு அமிழும் குடம்போல், தன்சிந்தனை யோட்டத்தில் அவள் அமிழ்ந்தாள்.
வீட்டுச் சுவர்களிலும், உள்ளும் வெளியும், கொல்லைப்புறத்திலிருக்கும் தோட்டத்து மரங்களிலும் இருள் இறங்கித் தேங்க ஆரம்பித்துவிட்டன.
மாலை இரவின் எல்லையுள் கடக்க ஆரம்பித்துவிட்டது.
2
அவள் புக்ககம் புகுந்தபொழுது வயது எட்டு, பாவாடையும் வெறும் சொக்காயும் அணிந்து வாசலில் ‘பாண்டி’ விளையாடும் வயதுதான். அந்தக்காலத்தில் வழங்கிய கெட்டி நகைகளை கழுத்துக்கனக்க, சொக்காயின் வெளிப்புறமாய் அணிந்திருந்தும் தாலிச்சரட்டை மாத்திரம் எல்லா நகைகளுடனும் சேரவிட நாணம்! அதைமாத்திரம் சொக்காயின் உள்புறம்விட்டு அணிந்திருந்தது இன்னமும் ஞாபகமிருக்கிறது-
அவள் மாமனார் இதே கூடத்தில் அம்மன் பெட்டிக்கெதிரே உட்கார்ந்திருந்தார். நெற்றியில் விபூதியும் கழுத்தில் ருத்திராக்ஷ கண்டியும் துலங்காது ஒருநாளும் அவரை அவள் பார்த்ததில்லை. அவள் கணவன் அவர் பக்கத்தில் கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
‘இங்கே வாம்மா, குழந்தை இப்படி உட்கார், பயப்படாதே. நான் உன்னை விழுங்கிவிடமாட்டேன்-எங்கே அம்மன்பேரில் இரண்டுப் பாட்டுப்பாடு கேட்போம்-உனக்குப் பாடவருமோ? எங்கே, உன் கையைக் காண்பி-”
அவள் கையைப்பற்றியபோது அவளுக்கு அந்தச் சின்ன வயதிலும் உள்ளூர பதைப்புத்தான். பெண்களுக்கு அமைவதைவிட சற்றுப் பெரிதாகவே அந்தக் கைகள் அமைந்திருந்தன. வீட்டுக் காரியம் செய்யும் கைகள் அவை. தோசைக்கல், கல்சட்டி வென்னீர் அண்டா இவைகளையெல்லாம் நன்றாய்க் கீறிச்சுரண்டி, பற்றுவிடப் பளிச்சென்று துலக்கும் கைகள், நயவேலைக்குகந்த கைகள் அல்ல அவை. சங்கராந்திக் கோலம்கூட சரியாய் இடத்தெரியாத கைகள், துணியைக் கிழிந்தவிடம் தெரியாமல் தைக்க இயலாத கைகள்
‘சரி சரி-ஏண்டா, இப்பவே உன் ஆம்படையாளுக்கு விரல் கரணைகரணையாய் முற்றின முருங்கைக்காய் மாதிரி யிருக்கிறதே! இது வீணை பிடிக்கும் கையல்ல – எல்லாம் உன்மாதிரி தான்-”
அவள் மாமனார் எப்போதுமே, சிரிக்கப்பேசும் விதமே தனிதான். சிரிப்பு உள்ளூரப் பொங்குகையிலேயே விளையாட்டாவா அல்லது வினையாய்த்தானா பேசுகிறார் என்று சந்தேகம் உறுத்திக்கொண்டே இருக்கும்.
“சரி, பாடு -தைரியமாய் வாய்விட்டுப்பாடு – நீதான் கறுப்பாயிருக்கையே, உன் நாக்குக்கூட அப்படித்தானா என்று பார்க்கிறேன்-”
அவள் என்ன பாடினாள் என்று இப்பொழுது ஞாபகமில்லை. இத்தனை கேலியாட்டத்தில் சரியாய்ப் பாடவருமோ? மேலும் அவளுக்கு அப்பவே தெரியும், அவள் மாமனார் அக்காலத்து, தலைசிறந்த வித்துவான் என்று. அந்த வயதில் ஒருவிதமான பயிற்சியுமிலாது, ஏதோ வாய்வார்த்தையாய், தன் தாயிடம் அடுப்புக் காரியத்தினிடையில் கற்ற ஒன்றிரண்டு பாட்டை நெட்டுவருவாய் எத்தனை தடவையாயினும் அதே இடத்தில் அதே தப்பைப்பண்ணிக் கொண்டு வெளியே கக்கக் தெரியுமேயன்றி வேறு ஒன்றுமறியாள். அதைக்கூட இப்பொழுது புதிதாய், அவருக்கெதிரில் பாடுகையில் திடீரென்று பாட்டின் நட்டநடுவில் வார்த்தைகள் மறந்துவிட்டன. வெட்கத்தாலும் பயத்தாலும் அழுகை வந்துவிட்டது. தணல்போல் கணகணக்கும் கண்ணீர் விழியோரத்தில் உறுத்த அனல்பறக்கும் முகத்தைக் கையில் புதைத்துக்கொண்டு விக்கிவிக்கி அழுதது இன்னமும் நினைவிருக்கிறது.
திடீரென்று இனிய இரகசியங்கள் பேசுவதுபோல், அவள் செவியில் இன்பநாதங்கள் புக ஆரம்பித்தன.
கால் தண்டையொலி கேளாதபடி உறி முறுக்கைத்திருட உள் நுழையும் செல்லக்குழந்தையின் திருட்டை, மறைந்து அனுபவிக்கும் தாய்போல், அவருக்கு இன்ப அதிர்ச்சி கண்டது.
நன்கு அஸ்தமித்த பின்னர், ஒன்றும் இரண்டுமாய் முளைக்கும் நக்ஷத்திரங்கள்போல் அவ்வொலித்தெறிப்புக்கள் அவளையுமறியாது, அவள் தலையை நிமிர்த்தின.
அவள் மாமனார் சுவரோரமாய்ச் சாத்தியிருந்த வீணையைக் கையில் தாங்கிக்கொண்டு, ஸ்வரக்கட்டுக்களை மெதுவாய் வருடிக் கொண்டிருந்தார். என்ன ஆச்சரியம்! அவள் பாடின பாட்டை அவர் அப்படியே வாசித்துக்கொண்டிருந்தார். சட்டையுரித்த பாம்புபோல், அவள் பாட்டு புத்தழகுபெற்று, வீணையினின்று புறப்படுவதை அவள், கன்னத்தில் வழிந்த கண்ணீர்காய, பிரமிப்புடன் கவனிப்பதைக் காண அவருக்கு ஆனந்தமாயிருந்தது. கண்ணைச்சிமிட்டிப் புன்னகை புரிந்தார்.
‘பலே! அழுதமூஞ்சி சிரிச்சுதா? – கழுதைப்பாலைக் குடிச்சுதா?” அவள் மாமனைக்காட்டிலும் நல்லவருண்டோ என்று அவள் அப்பொழுது கனிந்த மனத்துடன் உருகியது இன்றுபோல் இருக்கிறது.
சின்னக்குழந்தைகளைக் திருப்திசெய்யவோ, சந்தோஷப்படுத்தவோ என்ன வேண்டும்? ஒன்றுமே வேண்டாம்- ஒரு சொல், ஒரு புன்னகை, ஒரு கண் சிமிட்டு எதேஷ்டம்
3
அவள் மாமனாரின் உருவம் அவள் கண்முன் வந்துநின்றது. பறங்கிப் பழச்சிவப்பு தலையில் கட்டுக்குடுமி. மூக்கு, கிளிமூக்கு மாதிரி நுனியில் சற்று வளைந்து நுனி கூரிட்டிருக்கும். பிரதி திங்களும் வியாழனும் சனியும், இஞ்சியும் மிளகாய்ப்பழமும் காய்ச்சிய எண்ணெய் ஸ்னானம். இரவு தவறாது பால். மேனி அப்படியே மெருகிட்டிருக்கும். மாதத்திற்கு நாலைந்து கச்சேரிகளுக்குக் குறைவில்லை. வெளியூரிலிருந்தால்தான் அவளுக்குத் தெரியப் போவதில்லை. உள்ளூரிலேயே வாய்த்துவிட்டால், அவர் படுத்தும் பாடு தெரியும். அன்றுமுழுவதும் வீடு அமர்க்களந்தான். சாதாரணமாய் இனிய சுபாவமானாலும் அன்று கொஞ்சம் சிடுசிடு வென்றுதானிருப்பார். காலை மாலை வீணையை எடுத்து வைத்துக்கொண்டு கம்பிகளுக்கு மெழுகைப்போட்டு உருவித்துடைத்து, இடுக்குகளில் துணியைத் திரித்துச் சொருகிக் கொடுத்துத் தும்பு தூசியில்லாது தட்டிக்கொண்டிருப்பார். கச்சேரி மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமென்றால் இரண்டுமணிநேரம் முன்னதாகவே அலங்காரம் பண்ணிக்கொள்ளத் தன்னறைக்குப் போய்விடுவார். அங்கிருந்து கொண்டே, “அதைக் காணோம், இதைக் காணோம், வைத்தது வைத்தவிடத்தில் இந்த வீட்டிலிருக்கிறதில்லை என் அறைக்குள் யார் நுழைகிறது – ஏன் நுழைய வேண்டும்? – வீட்டுக்கு ஒரு பிள்ளை – வயதான பிள்ளை அதுவும் கலியாணமான பிள்ளையாயிருக்கிறதிலேயே இவ்வளவு அல்லோல கல்லோலமாயிருந்தார், இன்னும் நாலுகுழந்தைகள் இந்த வீட்டில் நடமாடுவதாயிருந்தால், இந்த வீட்டில் நான் இருக்கவே லாயக்கில்லை-” என்று எரிந்து விழுந்துகொண்டு வீட்டைத் தலைகுப்புறக் கவிழ்த்துக்கொண்டிருப்பார்.
நடுநடுவே- ‘எங்கே அவள்? அடுக்குள்ளை ஒழித்துப் பெருக்கிக்கொண்டிருக்கிறாளா? என்னை அனுப்பிவிட்டு அதைப் பண்ணலாமே! ஏதோ நான் போய்ச் சம்பாதித்துக்கொண்டு வந்து கொட்டினால்தானே, ஒழித்துப் பெருக்க அவளுக்குச் சாமானிருக்கும்?” என்று இரைவார்.
மாமி முன்தானையில் ஈரக்கையைத் துடைத்துக் கொண்டு மாடிக்கு ‘லொங்கு லொங்கென்று’ ஓடுவது அவளுக்கு வேடிக்கையாயிருக்கும்.
பிறகு மாடியிலிருந்து ஒரு ஊர்கோலம் கிளம்பும். முன்னால் பட்டு உறைபோட்டு மூடிய வீணையை ஒரு சிஷ்யப்பிள்ளைதாங்கிக்கொண்டு ஜாக்கிரதையாக இறங்குவான். அப்படி யிறங்குகையிலேயே, உள்ளிருந்து “அப்பா, ஜாக்கிரதையாய்க் கொண்டுபோ. கீழே போட்டு என் பிழைப்பில் மண்ணைப் போட்டு விடாதே! -” என்று அவர் குரல் அதட்டும்.
அப்புறம் இன்னொரு சிஷ்யன் மற்ற உபகரணங்களுடன் இறங்குவான்.
அவன்பின் அவர், அவர் பின் மாமி, இப்பொழுது நினைத்தால் கூட அவர் மாடியிலிருந்து இறங்குவதை உருவகப்படுத்திக்கொள்ளலாம்.
அவர் மேலிருந்து இழையும் புனுகின் வாசனை குடலைக் குமட்டும். சிகையை உள்ளேவிட்டுக் கட்டிய தலைப்பாகையின் சரிகை பளபளவென்றிருக்கும். கழுத்துவரை பொத்தானிட்டு, முழங்கால்வரைத் தொங்கும் கறுப்பு அல்பாகா மேலங்கி, அதற்குமேல், ஒரு சாணகலச்சரிகையிட்ட பட்டு அங்கவஸ்திரம். அரையில் நன்றாய் பட்டை தீட்டிப் பஞ்சக்கச்சமாய்க் கட்டிய புதுக்கோடி வேஷ்டி. ஒவ்வொரு கச்சேரிக்கும் எப்படித்தான் ஒரு புதுவேஷ்டி இடையில் இலங்குமோ?
பரந்த நெற்றியில், உதிர இட்ட விபூதிமேல் ஜவ்வாதுப்பொட்டு, ஆளையே வண்ணானுக்கு போட்டாற்போல் அவ்வளவு சுத்தமாயிருக்கையிலேயே ஏதோ ஒரு சிறு தூசியை மார்மேலே கண்டு விட்டதாய் நினைத்துக் கொண்டு, அதை நாசூக்காய் இரண்டு விரல்களால் சுண்டிக்கொண்டே கீழிறங்குவார்.
அவர் தோற்றத்தை வியந்தவண்ணம், அவள் மாடிப்படியில் நிற்பாள்.
“என்னடி குட்டி! எப்படியிருக்கிறேன் நான்? நன்றாயிருக்கிறேனா நான்?” என்று சிரித்துக் கேட்டுக்கொண்டு போவார். தன்னை வெறுமெனே சீண்டுவதற்காக அவர் அப்படிக் கேட்கிறார் என்று அவள் முதலில் நினைத்துக்கொண்டிருந்தாள். அப்புறம் ஒருதடவை அவளையுமறியாமல் ‘பேஷாயிருக்கேளே!” என்று அவள் சொன்னதும் அவர் முகம் தனியாய் மலர்ந்ததைக் கண்டதும், தன் குழந்தை அபிப்பிராயத்தையும் நிசமாகவே அவர் கோருகிறார் என்று அறிந்தாள். எவ்வளவு பெரியவரானாலும் இந்த அலங்கார விஷயத்தில் மாத்திரம் அவர் சின்னக்குழந்தைதான்.
ஒன்றிரண்டுதடவை அவருடைய கச்சேரிக்கு அவள் போயிருக்கிறாள்.
அந்த வயசில், அவருடைய வாசிப்பைப்பற்றி அவளுக்கு என்ன தெரியும்? (இப்பொழுதுதான் என்ன தெரியும்?) அவள் பாடும் பாட்டுக்களை அவர் வாசித்தால் அதைக் கேட்டு மகிழத் தெரியும். அந்தப் பாட்டுக்களையெல்லாம் வீட்டோடு மட்டும் வைத்துக் கொள்ளலாமே தவிர கச்சேரியில் கொண்டு வரலாமா?
ஆகையால், அவள் நினைவில் அப்பொழுது தங்கியது, அந்தக் கூட்டத்தில் எல்லோரும் கரகோஷம் செய்கையில் தானும் அத்தனை பேருடன் சேர்ந்து காரணம் தெரியாது கைதட்டிச் சிரிப்பதும், அவள் மாமனார் மேலங்கியில் தைத்திருக்கும் பதக்கங்களிலிருந்து காந்தவிளக்கில் தெளிக்கும் தகதகப்புந்தான்.
வாசியாத வேளையிலும் அவர் கை வெறிச்சென்றிருக்காது. தன்னைச் சுற்றியிருக்கும் சாமான்களை ஏதாவது சரிபடுத்திக் கொண்டிருப்பார். வீணையைத் துடைக்க ஒரு துணி. மூக்குத் துடைக்க ஒரு துணி. முகத்தின் வியர்வையைத் துடைக்க ஒரு துணி. பக்கத்தில் கலியாணப் பூசணிக்காயளவு பருமனுக்கு ஒரு வெள்ளிக் கூஜா. அவருக்கே ‘மாப்பிள்ளை வித்துவான்’ என்று கேலிப் பெயர் உண்டென்று அவளுக்கு அப்புறம் தெரியவந்தது.
கழுத்திலிட்ட பூமாலையைக் கடைசிவரைக் கழற்றமாட்டார். அது சம்பந்தமான ஒரு சிறு சம்பவம் அவளுக்கு இப்பொழுது ஞாபகம் வந்தது. ஒரு சமயம் கச்சேரிமுடிந்து எல்லோரும் சேர்ந்து, வீட்டுக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கையில், அவர் தன்மேலிருந்த மாலையைக் கழற்றி பிள்ளை கையில் கொடுத்து, அவளுக்கு போடச் சொன்னதும், அவர் வெட்கப்பட்டுக்கொண்டு மறுத்ததும் “போட்ாறா பயலே! உனக்கு அவளை கட்டிக்கொடுக்காதிருந்தால் குழந்தைக்கு நானே போடுவேனடா!” என்று பயமுறுத்தியதும் அவள் கணவன் வேண்டாவிருப்பாய்ச் கசந்துகொண்டு மாலையை அவள் கழுத்தில் போட்டதும் அவள் நாணமுற்றதும்… இந்நாட்களையெல்லாம் மறந்துவிடவேண்டும். கரும்பலகையில் கிறுக்கி அதை யழித்து வேறுவரைவதுபோல், அவ்வளவு சுலபமாய் மறந்துவிட வேண்டும். அவள் பிள்ளையின் ‘லேசான’ கட்டளை!
4
நாளாக ஆக, அவள் உடல் வாளிப்பு ஆக ஆக, வயது வளரவளர, அவள் ‘அரசியலின்’ எல்லைகளும் சுருங்க ஆரம்பித்தன. . எப்போதுமே எட்டு வயதுப்பெண்ணாய் இருக்கமுடியுமா?
ஆயினும் அவள் வாழ்க்கையின் இனிப்பு அதனால் மாறவில்லை. இப்பொழுது யோசித்துப் பார்க்கையில் அவளுடைய அந்நாட்கள் ஒரு இதம்போலவேயிருந்ததென்று சொல்லலாம். புக்ககம் வந்த பின் அறியாத வயதில் ஓடியாடித் திரிந்ததெல்லாம் ஒரு ராகத்தின் விஸ்தாரமான ஆலாபனைக்கொப்பிடலாம். பிறகு வயதிற்கும் காலத்திற்கும் அவள் படிந்து நடந்ததை அந்த ராகத்தின் இலக்கணங்களுக்கும் உகந்த தாளவரிசைக்கும் கட்டுப்பட பாட்டிற்கும் ஒப்பிடலாம். வயதின் பொறுப்புகள் அதிகரித்து, நடமாட்டத்தின் இடவசதி குறுகக் குறுக, தாளத்துள் வரவர நெருக்கமாய் விழும் ஸ்வரக்கொத்துப்போல், வாழ்க்கையின் பரபரப்பும், இனிப்பும் சுவைக்கச் சுவைக்க இன்பமாய்த்தானிருந்தது.
ஆயினும் அல்லது ஆகையால்
முன்மாதிரி நினைத்தவிடத்தில் நினைத்தபடியெல்லாம் போகமுடியாது. மாமியுடன் அரைமுழப்பூவிற்கு ஆகாத்தியம் பண்ணமுடியாது. வலுவில் வந்து நிற்கமுடியாது. மாமனாருடன் முன் மாதிரி பேசிக் கொட்டமடிக்க முடியாது. வீட்டுவேலை ஆளைப் பின்னிவிடும். வித்துவானின் வீடாயிருப்பதால் நாலுபேர் வந்துபோய்க் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் ஆகாரம் தயாரிக்க வேண்டும்.
மாமனார் எவ்வளவு சம்பாதித்தாரோ அதற்கு மேலே செலவழித்தார். காரணம் காரணமில்லாமல், வீட்டில் சமாராதனைகளும், விருந்துகளும், நிலாச்சாப்பாடுகளும் நடக்கும். கூடத்துக்கெதிரில் குலுக்கிக்குலுக்கிக் கொட்டி நிரப்பிய நெல் குறையக் குறைய அவளுக்கு பகீர் பகீர் என்னும்.
(அவள் பிறந்தவிடம் அவ்வளவு வளமில்லை) இங்கோ தெரிந்தவர் தெரியாதவர் எல்லாரும் தின்றுவிட்டுப் போவார்கள்.
நாள்கிழமை வந்தால் வீடு ஒரே கோலாகலம்தான். கிழவர் தனக்கு ஆண்டு நிறைவு தவறாது கொண்டாடிக்கொள்வார். பிறகு அவர் முதல் குழந்தையின் முதல் ஆண்டு நிறைவு… அப்புறம் இரண்டு வருஷங்களுக்கப்பால் இன்னொரு குழந்தை.- ஒரு பெண்.
அப்புறம் மூன்று வருஷங்களுக்கப்புறம் ஒரு பையன்.
கிழவர் குழந்தையைக் கையால் தொடக்கூட அஞ்சுவார்.
ரொட்டியின் உள்மாவுபோன்று தொட்டாலே அதுங்கிக்கொண்டு, இன்னமும் மூக்கென்றும் முழியென்றும் தனியாய்ப் பிரியாத உயிருள்ள சதைப்பிண்டத்தைத்தொட நேருகையில் அவர் முகத்தில் சிறு வெறுப்புத்தட்டும்.
‘புழுக்கள்-! தொட்டாலே ஒட்டிக்கொள்ளுகிறதுகள்’- என்று கௌரவமாய்ப் பேசிவிட்டு, யாரும் தன்னைப்பார்க்க வில்லை என்று எண்ணிக்கொள்ளும்பொழுது சிசுவின் கன்னத்தை லேசாய் நிமிண்டுவது தனித்தமாஷாயிருக்கும்.
அவள் கணவன்..
அவள் கணவன், அவள் மாமனாரின் பொன்னிறத்தையும் பழிக்கும் தனிச்சிவப்பு. வெயிலில் ஒருமுறை வெளியில்போய் வந்து விடடாரெனில், முகத்தின் சிவப்பு சகிக்க முடியாது. தன் தகப்பனாரைவிட உடல்வளம் சற்றுக் குறைவாய்த்தானிருப்பார். தகப்பனாருக்குள்ள வாக்குச்சாலமும் கிடையாது. பிறக்கும் போதே பேச்சின் பயனின்மையை உணர்ந்தவர்போலும். சுபாவமாகவே அதிகமாய் வார்த்தையாடமாட்டார். எல்லோரும் சத்தம் போட்டு அரட்டையடித்துக்கொண்டிருக்கையில், அவர் மட்டில் தனியாய் உட்கார்ந்துகொண்டு, பேச்சின் வேடிக்கையை, முகத்தில் புன்முறுவலுடன் மௌனமாய் அனுபவித்துக்கொண்டிருப்பார்.
‘காலம் முற்றமுற்ற, மற்றவன் கைக்கவளத்தைப் பிடுங்கித் தன்வாயில் போட்டுக்கொள்ளும், இந்தக்கலியில் இந்தப் பிள்ளை என்ன பண்ணப்போகிறது!’ என்று அவர் மாமனார் வாய்விட்டு வேடிக்கை கலந்த வினையுடன் கவலைப்படுவார். செல்லப்பிள்ளை. நல்ல பிள்ளை. ஒரே பிள்ளை. நாள்கழித்துத் தவங்கிடந்து பெற்ற ஒரே பிள்ளை.
ஆயினும், அசைவற்ற புனலடியில் புழுங்கும் நீர்ச்சுழல் போன்ற அவள் கணவனின் ஆர்வத்தை அவர் வீணையில் செய்யும் அசுரசாதகத்திலும், தன் தாலியுறவின் அனுபோகத்திலும் அவள் நன்கறிவாள். வெறும் வார்தைகளில் வெளிப்பட்டு வீணாய்ச் செலவாகாத உயர்ந்த சரக்கு அது. இவ்வளவு பளிச் சென்று அவர் புத்திக்குப் படாவிடினும். அவள் புருஷனின் உண்மைச் சத்தை அவள் உள்ளுணர்வு அறியும்.
(தொடர்கதை; முற்றுப்பெறவில்லை)
– முல்லை – 12, முல்லை இலக்கியக் களஞ்சியம், 1946-1947இல் வெளிவந்த முல்லை இதழ்களின் முழுத் தொகுப்பு, பதிப்பும் தொகுப்பும்: முல்லை மு.பழநியப்பன், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, முல்லை பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |
