பாதுகாப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 10, 2025
பார்வையிட்டோர்: 101 
 
 

புதன் கிழமை. நண்பகல் பன்னிரண்டு மணி .சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் இருந்த வர்த்தக வளாக கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்த கே.ஆர், குழும நிறுவனங்களின் அலுவலகத்தில் கணக்கியல் பிரிவில் பணிபுரிந்து வரும் அழகான, ஒடிசலான மாநிற துருதுரு இளம்பெண் மல்லிகா, தன்னுடைய சிஸ்டத்திற்கு முன்பாக மும்முரமாக பணியில் ஆழ்ந்திருந்தாள். அப்பொழுது அந்தப் பிரிவின் தலைவரான சீஃப் அக்கவுன்டன்ட் ஆன கனமான உடல்வாகு கொண்ட உயரமான சூரிதார் அணிந்த நடுத்தர வயது பெண்மணி ரம்யா மேடம் அவள் அருகில் வந்தார்.

“மல்லி.. ஜிஎம் அட்மின் சுந்தர் உன்னை வர சொல்றாரு போய் பார்த்துட்டு வாப்பா” என்றார்.

மல்லிகா “இதை முடிச்சுட்டு போறேன் மேம்” என்று சொன்னாள்.

சற்று நேரம் கழித்து நான்காவது மாடியில் இருந்த சுந்தரின் அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றாள் மல்லிகா. சபாரி உடை அணிந்த நடுத்தர வயது வாட்டசாட்டமான உடல்வாகு, மழித்த முகம், வெள்ளை கேசம் கொண்ட சுந்தரின் முகத்தில் தெரிந்த எள்ளும் கொள்ளும் எதற்காக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, மல்லிகா, “குட் மார்னிங் சார், வணக்கம் சார்” என்றாள். சுந்தர் பேசத் தொடங்கினார். அவரது குரலில் கடுமை தெரிந்தது.

சுந்தர் அவளை நாற்காலியில் அமரச் சொல்லவில்லை.

“நீங்கதான் மல்லிகாவா? நீங்கதான் வுமன்ஸ் டே பங்க்சன்ல பேசினீங்களா?“

“ஆமாம் சார்”

“நம்ம கம்பெனில உங்களுக்கு என்ன டெசிக்னேசன்?“

“அக்கவுன்ட்ஸ் அசிஸ்டன்ட் சார்”

“அக்கவுன்ட்ஸ் சம்பந்தமாதானே படிச்சிருக்கீங்க… லா படிச்சிருக்கீங்களா … இல்ல டிஸ்டன்ஸ்ல படிக்கறீங்களா?“

“அதெல்லாம் இல்ல சார் “

“அப்புறம் என்ன… பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கும் சட்ட விதிகளை பத்தி எல்லாம் பேசினீங்க”

மல்லிகாவின் முகம் மாறியது. “சார் மைண்ட் யுவர் டங் ” என்று சற்றே உரத்த குரலில் சொன்னாள்.

பெண் ஊழியரிடம் தகாத சொல்லை உதிர்த்து விட்டோம் என்பதை சில நொடிகளில் புரிந்து கொண்ட சுந்தர், தன்னுடைய தொனியை மாற்றிக் கொண்டார்.

“இல்ல இதெல்லாம் தெரிஞ்சா பீமேல் ஸ்டாப், அவங்க இம்மீடியட் மேல் பாஸ் பத்தி பொய் புகார் கொடுத்துடுவாங்க இல்ல…“ என்று இறங்கி வந்தார் சுந்தர்.

மல்லிகா ஏதும் பேசாமல் மௌனம் காத்தாள்.

அவருடைய கைபேசி ஒலித்தது. …

“ஒன் ஆப் த டைரக்டர்ஸ் ஷீதல் கபூர் மேடம் போன் பண்றாங்க அவங்களும் நான் சொல்றதை தான் சொல்லுவாங்க. ஸ்பீக்கர்ல பேசறேன் கேளுங்க…”

ஷீதல் மேடத்துடன் சுந்தர் பேசினார் –

“நமஸ்கார் குட் டே மேம்”

“நமஸ்கார் வணக்கம் குட் டே டு யு சுந்தர்ஜி நான் எதுக்கு போன் பண்ணேன்னா நம்ம ஆபீஸ் ஸடாப் நடத்தின வுமன்ஸ் டே பங்கஷன் வீடியோ ஒரு யூட்யூப் சேனல்ல பார்த்தேன். ஒரு சின்ன பொண்ணு … ஒர்க்ப்ளேஸ் செக்ஸுவல் ஹராஸ்மென்ட் லேந்து புரொட்டக்ஷன் கொடுக்கிற லா ரூல்ஸ் கிளாஸ் பத்தி எல்லாம் பேசிச்சு… அந்த ஸ்டாப் பேர் என்ன?“

“மல்லிகா மேம் … “

“மல்லிகா.. நல்ல பேரு … இந்தில சமேலி இங்கிலீஷ்ல ஜேஸ்மின்… நீங்க அவங்க பேசின செக்சுவல் ஹராஸ்மென்ட் -க்கு எதிரான டூ தவுசன்ட் தேர்ட்டின் சட்டத்தின் ரூல்ஸ் எல்லாம் கரெக்ட்டான்னு செக் பண்ணிட்டு அதை நம்ம நியுஸ்லெட்டர்ல போடுங்க.. அதை கம்போஸ் பண்ணி ஆபீஸ் நோட்டிஸ் போர்டுலயும் பேக்ட்டரி போர்டுலயும் ஒட்டுங்க. சிஎம்டி கிட்ட நான் போஸ்ட் அப்ரூவல் வாங்கித் தரேன்…”

“சரி மேம்…”

“அது மாதிரி கம்ளயன்ட் விசாரிக்க கமிட்டி இருக்கா நம்ம ஆபீஸ்ல..“

“இருக்கு மேம்”

“அந்த கமிட்டி ஸ்லீப்பிங்ல இருந்து என்ன ஆகும்? மாசத்துக்கு ரெண்டு தடவை மீட்டிங் கூடணும்”

“சரி மேம்..“

“அந்த பொண்ணு பண்ணது கமெண்டபிள் ஜாப் … அந்த பொண்ணுக்கு அது என்ன சொல்வாங்க … வாழ்த்து சொல்லுங்க.. சரி தேங்கஸ்ஜி..“

மல்லிகாவின் முகம் மல்லிகை போலவே மலர்ந்தது. சுந்தர் அவளுடைய முகத்தைப் பார்க்காமல் லேப்டாப்பைப் பார்த்துக் கொண்டே

“சரி நீங்க டிபார்ட்மென்ட்டுக்கு போங்க.. நீங்க பேசின சட்டத்தின் ஷரத் விதிகள் பத்தின கன்டென்ட்ட ஒங்க மேடம் கொடுத்து எனக்கு மெயில்ல அனுப்ப சொல்லுங்க” என்று கூறினார்.

“சரி சார் தேங்க் யூ சார்” என்று கூறி விட்டு பெருமிதத்துடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் மல்லிகா.

(இந்தப் புனைகதையின் சூழலும் கதை மாந்தரும் கற்பனையே. எவரையும் குறிப்பிடுவன அல்ல.)

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *