ரோஷாக்னி
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 3, 2025
பார்வையிட்டோர்: 55
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புளுகாண்டிக்குள் ஒரே செம்மாளம். ஆதாளி, ஆர்வக் குதூகலத்தில் அலைபாய்ந்து வந்தான். இருப்புக் கொள்ளாமல் துள்ளித் துள்ளிக் குதித்தான். எப்படா விடியும் என்று மனசு கிடந்து துடித்தது. தவியாகத் தவித் தலைந்தான்.
‘இன்னும் பொழுது அடையலே. மஞ்ச வெயில் அடிக்கிற சாயங் காலத்துலேயே பொழுது எப்ப விடியும்னு தவிச்சா… எப்படி? சரியான கோட்டிக்காரப் பயதான்!’
தன்னைத்தானே பரிகாசித்துக் கொள்கிற புளுகாண்டி. இளக் காரமான ஒரு புன்னகை மின்னல் உதட்டில் மின்னி மறைந்தது.
அப்பவும்… அவன் நெஞ்சு ஆவல் ஆவல் பறப்பில் துடிப்பதை அவனால் நிறுத்தவே முடிய வில்லை. அவன் மனசு, நினைப்பு, உயிர் எல்லாமே எப்ப விடியும் என்ற ஏக்கத்திலேயே குவிந்து கிடந்தது.
விடிந்தால்… பங்குனிப் பொங்கல். ஊரெல்லாம் பலகார வாசம். ஓய்வில்லாமல் ‘கடபுட’ வென்று சுற்றிக்கொண்டே யிருக்கிற ஆட்டுரல்கள். ஊர் ஜனம் முகத்தில் கொண்டாட்ட கும்மாள வெளிச்சம். பிள்ளைகள் தரையில்கால் பாவாமல் சிட்டுக் குருவிகளாக… கொழுக்கட்டைகளைக் கவ்விக் கொண்டு…
புளுகாண்டிக்கு இதிலெல்லாம் நாட்டமில்லை. விடிந்தால்.., கறி திங்கலாம். அதில்தான் அவன் குறி. கறிஎன்றால் அவனுக்கு உசுர். அவனுக்கு மட்டும்தானா?
கவிச்சிவாடை கண்டு ரொம்ப நாளாயிற்று. ரெண்டு மூணு மாசமிருக்கும். மேலத்தெரு அப்பைய நாயக்கர் வீட்டு எருமை மாடு மண்டையைப் போட்டது.
கிழட்டு மாடு என்னத்தைத் தின்னதோ… எதுல போய் மேய்ஞ்சதோ… வயிறு உப்பிக்கொண்டேயிருந்தது. மூச்சுத் திணறியது. புல்லரித்துப் புல்லரித்து நடுங்கியது.
ஓடி ஓடி வைத்தியம் பார்த்தனர். எல்லா கைப் பக்குவமும் செய்து பார்த்தனர். எதுக்கும் மசியாமல் மண்டையைப் போட்டது.
புளுகாண்டியும் கூடப்போனான் தூக்க. செத்த மாட்டைக் கொண்டுவந்து, சேரியில் அறுத்துக் கூறுபோட்டார்கள். இவன் பங்குக்கு ரொம்பதான் வந்தது. ரெண்டு கிலோவுக்குக் குறையாது.
புளுகாண்டியின் அம்மா மசாலா அரைத்துக் கணிசமாக ஊற்றி கூடுதலாக எண்ணெய் விளாவி, இஞ்சித் துண்டெல்லாம் தட்டிப்போட்டு வேக வைத்தாள். கறியை ருசி பார்த்துரணும் என்று நாக்கில் எச்சில் ஊற காத்துக்கிடந்தான். ‘இப்ப வெந்துரும், பெறகு வெந்துரும்’ என்று கிடையாய்க் கிடந்தான்.
நினைக்க நினைக்க மனசுக்குள் துடிப்பு; தவிப்பு; பரபரப்பு. கறிவேகிற குழம்பு வாசம் கம்ம்மென்று நாசியைத் துளைத்தது. கபகபாவென்று வயிறு பசித்தது. உயிரைக் கவ்வுகிற பசி. மனசிலிருந்துதான் பசி இறங்குகிறதா?
“என்னம்மா… வெந்துருச்சா?”
நொடிக்கொரு தடவை எட்டிப் பார்த்தான். ஏக்கமாகக் கேட்டான்… கேட்டான்… கேட்டுக் கேட்டு நச்சரித்தான்.
“பொறுடா சனியனே, கறி வேகவே மாட்டேங்குது. கெழட்டுக்கறி, வேகமாட்டாத சவ்வு. உசுரை வாங்குது. சித்தப் பொறுடா… கண்ணு.”
எரிந்து விழுந்து, ஆசைப்படுகிற மகனின் நியாயத்தில் கனிந்து, குழைந்து… சனியன் – கண்ணுவில்கெஞ்சலோடு முடிந்தது, அம்மா வின் குரல்.
ரொம்ப நேரமான பிறகுதான்… சோறு வைத்து, கொதிக்கக் கொதிக்கக் குழம்பு ஊற்றினாள். உயிரே நாக்குக்கு வந்த மாதிரி மனப்பரபரப்பு, புளுகாண்டிக்கு. கை விரல்கள் நடுங்கிற்று.
வெள்ளைச் சோற்றில் அரைத்த சந்தன நிறத்தில் குழம்பு. ஆசை மூட்டுகிற கறித்துண்டுகள். சுடச்சுடக் கொதித்தது.
ஆவி பறக்கிற கறித்துண்டு ஒன்றை எடுத்து, உள்ளங்கையில் வைத்து ஊதி ஊதி ஆற்றிவிட்டு வாயில் போட்டான்.
கறி சக்கை மாதிரியிருந்தது. மென்று மென்று பார்க்கிறான். ரப்பரை மெல்லுகிற மாதிரி இருக்கிறது. ‘நச் நச்’ சென்று சத்தம்தான் வருகிறது. கறி பல்லில் கடிபடவில்லை! நொறுங்க வில்லை. நாக்கில் ருசியாக உரசி உள் இறங்கவில்லை.
சப்பென்று அறைகிற மாதிரியோர் ஏமாற்ற உணர்வு.
“ச்சேய் ! கெழட்டுக் கறி. சதைப்பிடிப்பு இல்லாத வெறும் சவ்வு. கறி மாதிரியே ருசி தட்டலியே… கைக்கு எட்டி வாய்க்கு எட்டி நாக்குக்கு எட்டாமப் போச்சே.”
வெறுப்பும் எரிச்சலுமாக நிறம் மாறுகிற ஏமாற்ற உணர்வு. தக்கிமுக்கி சாப்பிட்டு முடித்தான். உயிரில்லாத உணவு. கறி சாப்பிட்ட உணர்வோ… நிறைவோ எதுவுமில்லை.
மனசுக்கு ருசியாய் அனுபவித்துச் சாப்பிட்ட வேறு வேறு நாட்கள். பழைய மாமிச நாட்கள். அதன் ருசி. அதன் வாசம். எல்லாம் நினைவில் உரசி, இன்றைய நிராசை உணர்வைப் பெரிதாக்கியது.
அதுதான் கடைசியாகத் தின்ற கறி. அதற்குப் பிறகு கறி என்ற பேச்சே இல்லை. கண்ணில் தட்டும் வாய்ப்பே வரவில்லை.
என்ன செய்யறது? எளிய சாதிக்காரன். அன்னாடக் கூலி. திண்டாடிய பிழைப்பு. காட்டில் போய் உசிரைச் சிந்தினால் வீட்டில் உலை கொதிக்கும் . இல்லையென்றால்… அடுப்புச் சாம்பலைக் கோழி கிண்டி மேயும்.
இந்தப் பிழைப்பு லட்சணத்தில் கவிச்சி எங்கிருந்து கிடைக்கும்? எண்ணிக்கூடப் பார்க்க முடியுமா?
நாளைக்கு விடிந்தால்… பங்குனிப் பொங்கலுக்குக் கறி திங்கலாம். ஆசை ஆசையாகத் திங்கலாம். ஆசை தீரத் திங்கலாம். நிச்சயமாகிப் போன விஷயம்.
அதில் அப்பீலே இல்லை.
கட்டைக்கால், கனத்த உருப்படி, நெய்யாய் வடியும் கொழுப்பு. கறி, மரச்சிறாய் மாதிரி இருக்கும். அதிலும் சந்தேகமேயில்லை.
இவனது குடிசைக்குப் பின்னால்தான் ரெண்டு ரெண்டு கால்களாகச் சேர்த்துக் கட்டுப் போடப்பட்டுக் கிடக்கிறது. நல்ல கட்டைக்கால். வகையான சரக்கு. செழித்த வளர்ப்பு. கூரை நிழலில் படுத்துக்கிடப்பதைப் பார்த்தாலே… ஏதோ ஒரு கறுப்பு மலை சாய்ந்து கிடக்கிற மாதிரியிருக்கிறது. கிட்ட ஆள் போனால், ‘ருக், ர்ர்ருருக்க்’ கென்று சீறிச் சினந்து உறுமுகிறது.
அந்த உறுமல் சத்தம் கேட்டாலே… குலை பதறுகிறது.
புளுகாண்டி குடிசைக்குள் நுழைந்தான். அடுக்குப் பானையில் ஓலைக் கொழுக்கட்டை கிடந்தது. ஓலையை உருவிப் போட்டுவிட்டு… கொழுக்கட்டையைக் கடித்தான். கடைவாய்ப் பற்களில் தேன்பாகாய் உடைந்து, கரைந்து நாவில் தித்திப்பாகப் பரவிப் படர்ந்தது. இனிமைக் கரைசலாக உள்ளுக்குள் இறங்கியது.
ஆட்டுரலில் அரிசிமாவைப் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தவள் முனியம்மா. வலது கையில் முன்பகுதி முழுக்க மாவு அப்பியிருந்தது, வெள்ளை உறை மாட்டிய மாதிரி.
“என்னடா… கொழுக்கட்டை திங்கீயா?”
“ஆமாம்மா…”
“தேங்காய்ச் சில்லும் சேத்துக் கடிச்சுத் தின்னுபாரு. இன்னும் ருசியாயிருக்கும்.”
“சில்லு எங்க இருக்கும்மா?”
“தண்ணிச்சால் இருக்குல்லே? அதுலேயிருக்கும். எடுத்துக்க.”
இடதுகையில் ஒரு கை உப்பை அள்ளிக்கொண்டு, வந்த வேகத்தில் வெளியேறுகிற முனியம்மா.
“என்னம்மா… நாளைக்குத் தோசையா?”
“ஆமாடா…”
“அப்ப… கறி எப்ப?”
“போடா பறப்பெடுத்த பயலே ! விடியற்காலம் கறியை வதக்கித் தாரேம்ப்பா. மதியத்துக்குக் கொழம்பு வெச்சித் தாரேன். என்னப்பா?”
வெளிச்சமாகிற புளுகாண்டி முகம். மகிழ்ச்சி மின்னல் கண்ணில்.
“ஹைய்ய் ! அம்மான்னா… அம்மாதான்… தங்க அம்மா!”
சின்னப்பிள்ளை மாதிரி துள்ளித் துள்ளிக் குதிக்கிற புளுகாண்டி. ‘அய்ய்க் சக்கை… அய்ய்க் சக்கை’ என்று சொல்லிக் கொண்டே குதியாளம் போடுகிறான். மடக்கிய கைகளால் கட்கத்தில் அடித்துக்கொள்கிற உல்லாசம். உற்சாகப் பெருக்கு. றெக்கையடித்து மகிழ்கிற ஒரு மயிலைப் போலிருந்தது.
“போடா… கிறுக்குப் பய மவனே” என்று செல்லக் கோபமாகக் கண்டித்துவிட்டு… சிணுங்கல் சிரிப்பாக சிரித்துவிட்டு மறைகிற அம்மா. அந்தக் கிழட்டு முகத்தில் மின்னிய பெருமித ஒளி. பாச வெளிச்சம். அன்பு வாசத்தின் பிரகாசிப்பு.
“முழுத்த இளவட்டப் பய, கறின்னா… சின்னப்புள்ள மாதிரி கும்மாளம் போடுதான். கண்ணு மூக்குத் தெரியாம குதிக்கான். அப்பவும் … கவுச்சி வாடைக்கு இப்படியா பறப்பாக?”
செல்ல மகனின் சுபாவம் பற்றிய பூரிப்பான முணு முணுப்போடு தெருவில் போகிற அம்மா.
அம்மாவையே பின்தொடர்ந்து போகிற அவனின் பார்வை, களி துள்ளும் பார்வை.
ஜாக்கெட் போடுகிற வயதை ரொம்ப முந்தியே தாண்டிவிட்ட அம்மா. அம்மா வயசுக்காரிகளெல்லாம் ஜாக்கெட் இல்லாமல் நூல் சேலையைப் பின் கொசுவம் வைத்துக் கட்டியிருப்பார்கள். அதுதான் பொருத்தமாகவும் இருக்கும். லட்சணமாகவும் இருக்கும்.
ஆனால், அம்மா மட்டும்…?
ஆண்பிள்ளை சட்டை மாதிரி, லொடலொடவென்று லூஸாக ஒரு ஜாக்கெட்டோடு… வித்தியாசமாக இருக்கிறது. நல்லாவே யில்லை. என்னவோ மாதிரி யிருக்கிறது. மனசுக்கு ஒவ்வ வில்லை. என்னமோ வடக்கத்திக்காரி மாதிரி…
ஆனா, அந்தச் சட்டை ஒரு காயம். காயத்தின் திசை. சமூகச் சோகம்.
… எப்போதோ நடந்த பஞ்சாயத்துத் தேர்தல். சுடுகாட்டுக்குப் பாதை கேட்டு வோட்டுப் போட மறுத்துவிட்ட சேரி ஜனம். அதனால் தோற்ற, கேவலப்பட்ட ஊர்க்காரர்களின் மூர்க்கம், ஆத்திர வெறி, ஆங்காரம்.
எளிய சாதி நாய்களுக்கு இம்புட்டுத் திமிரா? வைராக்கியமா? என்கிற கண்மூடித்தனமான வக்கிரம்.
ஒரு ஜாமம். ஆயுதங்களோடும் மிருகக் குணத்தோடும் சேரிக்குள் அத்துமீறலாகப் பாய்ந்த ஆதிக்கவெறி.
சேரியின் இளவட்டங்கள் ஓடிப்போக… கிழடு கட்டைகளுக்கும் மரண காயங்கள். ஏழு பெண்கள் நாசக்காடாகியிருந்தனர். அதில் ஒருத்தி முனியம்மா.
அவள் வலது மார்பகத்தில் ஆதிக்கப் பற்கள் பதிந்த ரத்தக் காயம். அழுந்தப் பதிந்த ரத்தச்சுவடு.
புண்ணாகி… வீங்கி… நீர் வைத்து…
பச்சிலை வைத்தியமும் கசாய வைத்தியமுமாக… புண் ஆறவே ஆறு மாதமாயிற்று.
மனசுக்குள் ஆறாத புண்.
வெளியே ஆறாத தழும்பு. ஆறாத சோகத்தின் அடையாளம். ஆறாத மானக்கேட்டின் கேவலம். ஆறாத உள் ரணம். ஆறாத உலைக் கொதிப்பு. மனசும் உடம்பும் சீரழிக்கப்பட்ட நாசக்காடு பண்ணப்பட்டதன் சின்னமாக அந்தத் தழும்பு.
இந்தச் சீரழிவு – கேவலம் காரணமாகவே முனியம்மாவுக்குத் தாலிகட்ட யாரும் தயாரில்லை. ரெண்டு மூணு வருஷம் கழித்து, எப்படியோ கல்யாணமாகி, அதற்குப் பிறகு தான் புளுகாண்டி பிறந்தான்…
அந்தத் தழும்பின் நிரந்தர இழிவான ரணத்தில், இன்றளவும் குன்றிக் கூசுகிற அம்மா. அதன் காரணமாகவே, கிழவியான பின்பும் லொட லொட ஜாக்கெட்டோடு…
ஆயிரம் தடவை அழுது அழுது புலம்பிப் புலம்பி அம்மா சொன்ன அந்தப் பாதகக் காட்சிகள், அம்மாவின் கண்ணீர் வரிகளில் அந்தக் கந்தகக் கொடுமை. சதை வெறியும் ரத்த வெறியுமாக சேரிப் பூக்களைச் சீரழித்த மிருக ராட்சஸம்.
நினைவின் நிழல்கள் மனசின் வலியாகப் படர்ந்தது. புளுகாண்டிக்கு கொழுக்கட்டை தின்ன மனசில்லை இப்போது. நாக்கெல்லாம் கசந்து வந்தது. பெருமூச்சோடு வெளியே வந்தான். மனசில் இனம் புரியாத வலி.
காலாற நடந்தான். தோப்புப் பக்கமாகப் போனான். கீழே கிடந்த பனை ஓலைகள்… காய்ந்த பனை மட்டைகள்… உலர்ந்த தென்னை மட்டைகள்.
ஒரு பெரிய கட்டாகக் கட்டிக் கொண்டு வந்தான். விடிந்தால்… இது வேணும். அடிக்கிற கட்டைக்காலை வாட்டி எடுக்கணும். அதற்கு இந்த மாதிரியான விறகுகள்தான் தோதுப்படும்.
விடியவில்லை இன்னும். இருள் பிரியவில்லை. நாலு மணி இருக்கும். கனத்த இருட்டு. கோட்டான் மாதிரி முழித்தே கிடந்தான். எப்படா விடியும்… எப்படா கறி திங்கலாம் என்று மனசு கிடந்து துடியாகத் துடித்துக் கொண்டிருந்தது.
“எலேய் புளுகாண்டி… எந்திலே. ஜோலியை இப்ப ஆரம்பிச்சாதானே… காலா காலத்துலே காரியத்தை முடிக்க முடியும்? எந்திடா…”.
லேசாகத் தொட்டு எழுப்பினர் நாலைந்து பேர். சேரிக்காரர்கள் தாம். லேசாகக் கண்ணயர்ந்திருந்த புளுகாண்டி, ‘தடபுடா’ வென்று துள்ளத் துடிக்க எழுந்தான்.
“என்ன… என்ன விடிஞ்சுபோச்சா ?” பதறியடித்து அலறிய அலறலில் தூக்கச்சடவு பயந்துபோய் உதிர்ந்து விட்டது.”
“ஆமா… ஆமா… விடிஞ்சுபோச்சு. கறியாக்குகிற ஜோலியை ஆரம்பிப்போம்!”
சேரியின் மையத்தில் தெருவிளக்கு. ட்யூப்லைட்டின் வெள்ளை வெளிச்சம். அந்த நாலைந்து பேரோடு இளவட்டம் புளுகாண்டியும்.
குடிசைக்குப் பின்னால் கிடந்த கறுப்பு மலை. ஆள் நெருங்கவும் பதட்டமும் மிரட்டலுமாக உறுமியது.
‘கார்ரு… புர்ர்ர்ரு’ என்று காட்டுத்தனமாகக் கத்தியது.
கட்டிக் கிடந்த கால்களுக்குள் உலக்கையைச் சொருகினர். அந்தப் பக்கம் மூணு பேர்… இந்தப் பக்கம் மூணு பேர். தக்கிமுக்கி தம்ம் பிடித்துத் தூக்கினர்.
மலையின் கனம். கறுத்த பாரம். மூச்சு முட்டுகிறது. தூக்குவது சுலபமாக இல்லை. “ம் தூக்கு… தூக்குங்கடா… விடா தீங்க… தம்ப் பிடியுங்க. விடாதீங்க… ம் தூக்கு… அம்புட்டுத் தான்” என்று ஆளாளுக்குக் கத்தி… உற்சாகப்படுத்தி… தைரியப்பட்டு… எப்படியோ தூக்கிக்கொண்டு வந்து சேர்ந்தனர்.
விளக்கு வெளிச்சத்தில் கறுப்பு மலை. உறுமுகிற மலை. கனத்த பன்றி, முன்னங்கால் ஒன்றையும் பின்னங்கால் ஒன்றையுமாகச் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. ரெண்டு கட்டு. ரெண்டுகட்டுகளையும் ரெண்டு பேர் பற்றிப் பிடித்து… விரித்து, திமிறவிடாமல் அழுத்திக்கொள்ள…
மல்லாக்கக் கிடந்த பன்றியின் நடு நெஞ்சில் ஓங்கி விழுந்த உலக்கையடிகள், தலைக்கு மேல் ஓங்கி விழுந்த அடிகள்.
“டொபா…ர், டொபா…ர்” உலக்கையடியிலும் பன்றியின் மரண அலறலிலும் தெருவே அதிர்ந்தது. ஒரு நடுக்கம் நடுங்கி நின்றது.
“இன்னும் உசுரு கெடக்கா… இல்லே, இன்னும் ரெண்டு போடு போடலாமா?”
“இல்லே… செத்துப்போச்சு.’
பனை மட்டை, ஓலைகளைப் போட்டுத் தெருவிலேயே தீயை மூட்டினான் புளுகாண்டி. ஓடி ஓடிப் பரபரத்தான். அந்த வைகறையிலும் வியர்த்துக்கொட்டியது அவனுக்கு. கவிச்சி மோகம் அவனை விசைப்படுத்திக்கொண்டே இருந்தது.
செத்த பன்றியைத் தீக்குள் உருட்டிவிட்டான். தீயை அணையவிடாமல் ஓலைகளையும் மட்டைகளையும் போட்டுப் பெருக்கினர். ஜ்வாலை விட்டெரிந்த பெருந்தீயில் பன்றியை உருட்டி உருட்டிப் புரட்டினான்.
ரோமம் கருகுகிற சுருசுரு சத்தம். பன்றியின் கருயாமையான மேல் தோல் உரிந்து… உரிந்து… சுருண்டு உதிர்கிறது. பன்றி மேலும் மேலும் விறைக்கிறது. ரோமமும் தோலும் கருகுகிற வாசம். நெடி. இந்த வாசம் எப்பவுமே புளுகாண்டிக்குப் பிடிக்கும். ஆசையோடு மூச்சிழுத்து உள் வாங்கினான்.
பன்றி தோலெல்லாம் உரிய… உரிய… வெண்பன்றியாக நிறம் மாறுகிற வித்தியாசம்
நெருப்பிலிருந்து வெளியே புரட்டப்பட்ட பன்றி. உடைந்த செங்கற்களால் பன்றியின் உடம்பெல்லாம் “பர்ர்ர்… பார்ர்’ ரென்று தேய்த்தான். அழுத்தமான தேய்ப்பு. முழுத்த இள வட்டத்தின் பலம் முழுவதையும் உள்ளங்கையில் இறக்கி… தேய்த்த தேய்ப்பு. சொச்சமிருந்த கருந்தோலை அகற்றுகிற யத்தனிப்பு.
அப்புறம்… பிளேடைக் கொண்டுவந்து நெருப்புக்கும் கருகாத ரோமக் கட்டைகளை ஒன்றுவிடாமல் வழித்தான். அரைத்த மஞ்சளால் பன்றியின் வெளுத்த உடம்பு முழுவதும் பூசப்பூச… மஞ்சள் பன்றியாக மாற…
இப்போது … சாக்கடையில் புரண்ட பன்றிதானா என்பதை நம்பவே முடியவில்லை. அம்புட்டு லட்சணமாகிவிட்டது.
“வெள்ளக்காரிச்சி மஞ்சத் தேச்சிக் குளிச்ச மாதிரி” என்கிற வரி, மனசில் மின்னி மறைந்தது. வைத்த கண் எடுக்காமல்… இமை தட்டாமல் – பன்றியின் அழகையே பார்த்து ரசித்தான். அப்படியே பிய்ச்சுத் திங்கலாம் போலிருந்தது புளுகாண்டிக்கு.
“ம்… சரி, அந்தப் பலகைக் கதவை மலர்த்திப் போடு.”
“அது மேலே ஓலைப் பாய்களை விரிங்க… கந்தல் பாயாயிருந்தாலும் பரவால்லே.”
“அருவாமணைகளை எடுத்துப் போடுங்க. அறுத்துப் போடு கிற கறிச்சதையை, துண்டு துண்டா அறுத்துக் கூறு அடிக்கணும்லே?”
“மொதல்ல கத்தியைக் கொண்டா.”
“ஆமா, கழுத்திலே வெட்டி, தலையைத் துண்டா எடுக்கணும்லே?”
“கறிக்குச் சேதாரமில்லாம… ஒட்டப் பிடிச்சு அறு.”
“வவுத்தைக் கிழிச்சு… கொடலை எடுத்து ஒரு கூடையில போடணுமப்பா.”
“தலையையும் கொடலையும் தனியா ஒதுக்குன பொறகுதானே… கறியிலே கத்தி வைக்க முடியும்?”
“அறுத்த தலையை மண்ணுலே படாம… ஓரமா வையுங்க. நாய்கீய் கவ்விக்கிட்டு போயிராமப் பாத்துக்கங்க.”
”சரியப்பா.. கறிக்கு எம்புட்டுப் புள்ளிக சேர்த்துருக்கீக? கட்டைக்கால்னா… இப்புடி கொழுத்த உருப்படின்னா… கறி கேட்டு நா, நீன்னு ஓடியாருவாக. அவசரத்துலே வரவர போட்டுட்டா, நமக்கு இல்லாமப் போயிரப் போவுது. அதையும் கவனிச்சுக்கங்க.”
“அதுவும் நெசந்தானப்பா. கவனமாயிருக்கணும். ரவ்வும் பகலுமா பாடுபட்டுட்டு, அறுத்து அறுத்து ஊருக்குப் போட்டுட்டு… நாம வெறும் ஓலைப் பாயை மோந்துபாக்கவா? நல்ல கூத்துதான்.”
“சரிப்பா. எம்புட்டுப் புள்ளிக சேர்த்துருக்கீக?”
“நம்ம தெருவுலே, நம்ம ஆளுக மட்டும் நாப்பத்து ரெண்டு கிலோ. ஊர்க்காரச் சாமிமாருக பதினெட்டு கிலோ.”
“ஆக… அறுபது ஆச்சா? உருப்படி தொண்ணுத்தஞ்சு வரைக்கும் வரும். முப்பது கிலோ மிச்சமிருக்கும். இனிமே கறி கேட்டு ஊர்க்காரச் சாமிமாருக வந்தா… அந்த முப்பதுக்குள்ளே போட்டுருவமா?”
புளுகாண்டி ஆத்திர அவரசமாகக் குறுக்கிட்டான்.
“அதெல்லாம் வேண்டாம். இருவது கிலோ மட்டும் போடுவோம்.”
“மிச்சத்தை என்ன செய்யடா?”
“மிச்சம் இருக்கட்டும். நம்ம தெருவுலேயே கடைசி நேரத்துல வந்து தலையைச் சொறியற கேஸூக இருக்கும். அது போக மிச்சத்தை நாம் பவுந்துக்கிடுவோம். கூட ஒரு நாளைக்கு வைச்சிருந்து திம்பம்.’
புளுகாண்டியை எல்லாரும் ஏளனமாகப் பார்த்தனர்.
“புளுகாண்டி இஷ்டம் போல விட்டா… யாருக்குமே கறியைப் போடவிடமாட்டான். தானே வெச்சிருந்து திங்கணும்பான்.”
“குப்”பென்று எழுந்த பரிகாசச் சிரிப்பு. அதை அமுக்கிக் கொண்டு ஒரு குரல்.
“புளுகாண்டி சொல்றதும் ஞாயந்தானே? வருசத்துக் கொரு வாட்டிதான் இப்படிப்பட்ட நல்ல உருப்படி அமையும். ஆசை தீர வெச்சிருந்து, அதைத் திங்கணும்னு நம்மள மாதிரி ஏழை எளியதுக நெனைச்சா… அது என்ன தப்பு?”
சளசளவென்று பேச்சு. தகரக் கூரையில் மழை பெய்த மாதிரியான சளசளத்த மனிதக் குரல்கள். இடையிடையே சிரிப்புச் சத்தம். கேலி, கிண்டல், நையாண்டி என்று நீள்கிற கல கலப்பு.
ஆதாளி தாங்காமல் ஆனந்தக் கூத்தாடுகிற மனசுகள். அடிமனசின் சந்தோசப் பெருக்கு. உள்மன உல்லாச வெளிச்சம் எல்லாம் துள்ளலான பேச்சுகளில் துல்லியமாக முகம் காட்டுகிறது.
புளுகாண்டிக்கு அறுத்துப் போடுகிற கறிச்சதையைப் பார்க்கப் பார்க்க மனசே கிடந்து துள்ளுகிறது. மனசின் உள்வெளிச்சம், கண்ணில் மின்னலாகப் பளிச்சிடுகிறது. மஞ்சள் நிற வாரும்… கறிச்சதைத் துண்டுகளும் அதில் உறைந்து கறுப்பாகிவிட்ட ரத்தச் சொதசொதப்பும்…
அறுத்து அறுத்துக் கூறுபோட… ஒருத்தர் தராசில் அள்ளிப் போட்டு எடை போட… அலுமினியச் சட்டிகளிலும் தூக்குவாளிகளிலும் எடை போட்ட கறியைப் போட…
“ம்… சிட்டையிலே குறிச்சுக்கங்கடா… தவறவுட்டுராதீக.”
“சக்கையன் ரெண்டு கிலோ… முத்தாண்டி ஒன்றரை… சில்லாண்டி ரெண்டு… செந்தட்டி ரெண்டரை… காக்காயன் ஒன்றரை… தலை சொட்டையான் ரெண்டு… முத்தாச்சி ரெண்டு.”
ஊருக்காரர்களிடம் ஒப்புக்கொண்ட பதினெட்டு கிலோ கறிக்கு… வீடு வீடாக சட்டி வாங்க ஒருத்தன் போயிருந்தான். அந்தந்தச் சட்டியில்… அவரவர் கறி.
ஊரெல்லாம் ஒரே பேச்சு, வியப்பும் ஆச்சரியமான பேச்சு.
“கட்டைக்காலு… பெரிய உருப்படி போடுதாக.”
“கசாப்பா? எங்க?”
“ம்… சேரியிலதான். நல்ல கொழுப்பு. கறியும் மரச்சிறாய் கணக்கா… திண்ணக்கமாயிருக்கு.’
“அப்படியா? கிலோ வாங்கிக் காச்சலாம்.”
“ச்சேய்ய்க் ! பன்னிக்கறியையா? ஐயய்யே…”
“ஏன் மூஞ்சியைச் சுளிக்கே? நல்ல கறின்னா வாங்கி பக்குவமாக சாப்புட்டா நல்லாத்தானிருக்கும். மூலத்துக்கு நல்லது.”
ஊருக்குள் காற்றாகப் பரவுகிற இந்தப் பேச்சு. டீக்கடையில்… ஊர் மடத்தில் தெருத் தெருவாக எல்லா இடங்களிலும் இந்தப் பேச்சலைகள்.
தூக்குவாளிகளோடு சேரிக்கு வருகிற ஒன்றிரண்டு ஊர்ச் சம்சாரிகள். அதைத் தொடர்ந்து இன்னும்சில ஏழைச் சம்சாரிகள்.
சிரித்த முகத்துடன் வருகிற சம்சாரிகளுக்கு சேரி ஜனத்தின் உபசரிப்புகளும் மரியாதைகளும்…
கூறடிப்பும்… தராசு எடையும்… சிட்டைக்குறிப்பும் மள மளவென நடந்து கொண்டிருந்தது.
முடிகிற தருணம்.
புளுகாண்டி தன் பங்குக் கறியை ஒரு சட்டியில் அள்ளிக் கொடுத்தனுப்பிவிட்டான் தன் வீட்டுக்கு. அதே மாதிரி, பன்றியறுப்புப் பணியிலிருந்த நாலைந்து பேரும்.
இன்னும் ரெண்டு கூறுதான் மிச்சம். அதுக்கும் மூன்றாட்கள் சட்டிகளோடு நின்றனர்.
ஆக… வேலை முடியப்போகுது. வதக்குன கறியைத் திங்கப் போவோம் என்று ஆசுவாசமாக நினைத்தான் புளுகாண்டி. வதக்குன கறியின் வாசம் அவனைச் சுண்டியிழுத்தது. வா வா என்று ஆசைகாட்டியது. அவனுள் பரபரப்பு. “எப்படா வீட்டுக்குப் போவலாம்” என்ற தவிப்பு.
எல்லார் கைகளிலும் ஒட்டியிருந்த கறி இணுக்குகள். முழங்கை வரைக்கும் ரத்தப் பிசுக்கு. வெண் கொழுப்புத் துணுக்குகள்.
அப்போதுதான் –
பாலிதீன் பையோடு ஒருத்தன் வந்தான். அவனும் சேரிக்காரன்தான். வந்து குசுகுசுவென்று காதைக் கடித்தான். நாலைந்து பேரும் அதே போல, குசுகுசுவென்று காதுக்குள் வாயாகப் பேசிக்கொண்டனர்.
புளுகாண்டிக்கு ஒன்றும் புரியவில்லை. ஒவ்வொருவர் முகத்தையும் திகைப்பும் குறுகுறுப்புமாகப் பார்த்தான்.
“என்ன விஷயம்?” சொல்லித் தொலையுங்களேன்.”
“பொறுடா புளுகாண்டி.”
“இப்பச் சொல்லப் போறீகளா… இல்லியா?”
ரொம்பக் காட்டமாகக் கத்தினான் புளுகாண்டி. ஏறக்குறைய விடிந்துவிட்டது. தவிட்டு நிற வெளிச்சம், மேலும் முகம் வெளுத்து வந்தது.
“ஒண்ணுமில்லேடா” என்று இழுத்த ஒரு பெரிசு, பணிவும் பவ்யமுமாக சத்தம் குறைத்துக் குசுகுசுத்தார். பெரிய வீட்டு விஷயம் என்கிற பயம்.
”நம்ம மேலத்தெரு பெரிய வீட்டுக்காரச்சாமியவுக கறி மேலே ஆசைப்படுதாகளாம். அரை கிலோ வேணும்னு சிணுக்காண்டிகிட்ட சொல்லிவிட்டுருக்காரு. இந்த பேப்பர் பையிலே போட்டு அனுப்பணுமாம்.”
“நீங்க என்ன செய்யப்போறீக?”
இறுகலான குரலில் புளுகாண்டி.
“போட்டுக் குடுத்துருவம்.”
“என்னத்துக்கு?”
“அம்புட்டுப் பெரிய வீட்டுச் சாமியவுக… நாம கைபட்டு கால்பட்டு அறுத்துக் கூறு போட்ட கறியை வாங்கிச் சாப்புட சம்மதிச்சதே பெரிய விஷயம்டா.’
புளுகாண்டிக்குள் ஏனோ அம்மாவின் லொட லொட, ஜாக்கெட். கண்ணீர் வரிகளில் காட்சியான மிருகத்தன வெறியாட்டம். ஆறாத மனரணமாக.. ஆறாத தழும்பு… சாதி வெறிப்பற்களில் காமக்குரூரப் பதிவுகள்.
அவனுக்குள் ஏதோ ஒருவித கோபச் சிலிர்ப்பு.
“ஏன்… நாம எதுலே தாழ்ந்துட்டம்? கொழுப்பான வளர்ப்புப் பன்னின்னு ஆசைப்பட்டுத்தானே எல்லோரும் தேடி வந்து, நின்று வாங்கிட்டுப் போறாக? அப்படித்தானே இருவது கிலோ வித்துருக்கு? இவருக்கு மட்டும் என்னத்துக்குக் குடுத்தனுப்பணும்?”
“இவ ஒரு கோட்டிப் பய… யாருக்குமே கறி குடுக்கச் சம்மதிக்கமாட்டான்” என்று ஒருவர் கேலியாகச் சொல்லிச் சிரிக்க.. மற்றவர்களும் ஆமோதித்துப் பரிகாசமாகச் சிரிக்க புளுகாண்டிக்குள் பொத்துக்கொண்டு வந்தது கோபம். சீறிச்சினந்த ரோஷாக்னி.
“நா அப்படிச் சொல்லலை” என்று காட்டுக் கத்தலாகக் கத்தினான். இவன் கத்திய உஷ்ணச் சீறலில், விளையாட்டுச் சிரிப்பும் வேடிக்கைப் பேச்சுமாக இருந்த அவர்கள், கப்சிப் ஆனார்கள். இவனைக் கூர்மையாக… யோசனையோடு பார்த்தனர்.
“என்னலே சொல்லுதே?”
“எளியசாதிப் பொம்பளைகளைத் தொட்டு நாசக்காடு பண்ணுறவுக… எளிய சாதி ஆம்பளைகளை மட்டும் என்னத்துக்காக தள்ளியே நிப்பாட்டணும்?”
“அதுக்கு?”
“நாம தொட்ட கறியைச் சாப்புடச் சம்மதிச்சதே பெரிய விஷயம்னு நீங்கள்லாம் குளுந்து குளுந்து குனிஞ்சே கெடந்ததாலேதான்… அவுக அம்புட்டு அக்குருமம் பண்ணியிருக்காக…”
“ஏலேய் புளுகாண்டி, நீ என்ன விஷயம் பேசுதே? கறி விஷயத்தைப் பத்திப் பேசு?”
“நல்ல கறின்னு அறிஞ்சு வாங்கித் திங்க ஆசைப்பட்டா… நம்ம தெருவுல வந்து வாங்கிட்டுப் போகணும். மத்தவுக எல்லாம் வந்து வாங்கிட்டுப் போறாகள்லே? இவருக்கு மட்டும் என்னவாம்? நாம தொட்டு அறுத்த கறி மேலே ஆசை. நம்ம தெரு மட்டும் வீசுதாக்கும்? கால் வைக்கக் கூசுதாக்கும்? பெரிய வீடு, டக்கர் வெச்சிந்தா… அது அவருக்குத்தானே…? நாம எதுக்குப் பயப்படணும்?”
“நீ சொல்றது புதுசாயிருக்குடா புளுகாண்டி. கறி இல்லேன்னு வெறும் பையைக் குடுத்தனுப்பிச்சிரவா?’
“புதுசுதான். நாம மான ரோஷத்தோட நினைக்குறதே புதுசு தான். வெறும் பையைக் குடுத்தனுப்புங்க. பயப்பட வேண்டாம். என்னத்துக்குப் பயப்படணும்?”
மீசை முறுக்கின மதுரைவீரன் சாமி மாதிரி, உக்கிகரமாக விழிக்கிற புளுகாண்டி, உத்தரவு மாதிரி கட்டண் ரைட்டாகப் பேசுகிறான்.
அடிமனசின் ரோஷாக்னி அவன் கண்ணில் சுடராகச் ஜொலிக்க… மற்றவர்கள் அவனை ஒரு புதிரைப் போலப் பார்த்தனர்.
(இச்சிறுகதை இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது. 1998ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை என்ற பரிசையும் பெற்றது.)
– 12.04.98, ஆனந்த விகடன்.
– என் கனா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 1999, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
