விடுதலை பெற்ற சிட்டுக்குருவிகள்
கதையாசிரியர்: நாரா.நாச்சியப்பன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 144
(1981ல் வெளியான சிறுவர் இலக்கியம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இராயபுரம் மாதா கோயில் பக்கத்தில் சாலை யோரத்தில் ஒரு பெரிய வேப்ப மரம் இருக்கிறது.
அந்த வேப்பமரத்தின் அடியில் ஒரு கிழவன் உட்கார்ந்திருக்கிறான். அவனுக்கு எதிரில் ஒரு சிறிய பாய் விரித்திருக்கிறது. அந்தப் பாயின் மீது சில அட்டைகள் வரிசை வரிசையாகச் சரிந்து கிடக்கின்றன. அந்த அட்டைகளுக்கு எதிரில் ஒரு மரக் கூண்டு இருக்கிறது. மரக் கூண்டுக்குள் ஒரு சிட்டுக் குருவி யிருக்கிறது.
மரக் கூண்டுக்கு ஒரு கதவு. அந்தக் கதவைத் தூக்கினால் சிட்டுக்குருவி வெளியே வரும்.
“கண்ணா, கண்ணா, ஒரு சீட்டை எடு. ஐயாவுக்கு நல்ல காலம் சொல்லுகிற ஒரு சீட்டை எடு” என்று அந்தக் கிழவன் சொல்லு கிறான். சிட்டுக்குருவி வரிசையாக சரிந்து கிடக்கும் அட்டையில் ஒன்றைத் தன் மூக்கி னால் கொத்தி இழுக்கிறது.
கிழவன் அந்தச் சீட்டை எடுத்து விரிக் கிறான். அதில் பலன் அச்சடித்திருக்கிறது. வாசிக்கிறான். விளக்கம் சொல்லுகிறான். தன் எதிர்காலம் நன்றாக இருக்கிறது என்ற மகிழ்ச்சியோடு எதிரில் இருக்கிறவர் இருபத் தைந்து காசு ஒன்றைக் கொடுக்கிறார்.
இப்படி இருபத்தைந்து இருபத்தைந்து காசுகளாக ஒரு நாளைக்குப் பத்து அல்லது பதினைந்து ரூபாய் வரை வரும்படி வருகிறது. கிழவன் குடும்பச் செலவுக்கு இது ஓரளவு போதுமான வரும்படியாய் இருக்கிறது. வாழ்க்கை அவனுக்கு நிம்மதியாகக் கழிகிறது.
ஆனால் அந்தச் சிட்டு வானவெளியில் உரிமையோடு பறந்து திரியும் வாழ்க்கையை இழந்து விட்டது. கூட்டுக்குள்ளிருந்து வெளி யில் பார்க்கும்போது தன்னைப் போன்ற சிட்டுக்கள் களிப்போடு பறந்துதிரியும் காட்சி யைக் காணுகிறது. தான் மட்டும் எவ்வித உரிமையும் இல்லாமல் அடிமையாய் அந்தக் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பது அதற்குப் பெரிய வேதனையாய் இருந்தது. கிழவன் போடும் நெல்மணிகளைத் தின்று விட்டு, அவன் கூப்பிடும் போது ஏதாவது அட்டை யைக் கொத்தி எடுத்துக் கொடுப்பது அதன் வேலையாய் இருந்தது.
ஒவ்வொரு முறை இருபத்தைந்து காசு வாங்கும் போதும், அந்தக் கிழவன் கட வுளுக்கு நன்றி சொல்லுவான். சிட்டுக்குருவியின் துன்பத்தைப் பற்றி அந்தக் கிழவனும் நினைப்பதில்லை; அவன் நன்றிக்குப் பாத்திர மான அந்தக் கடவுளும் நினைப்பதில்லை. தங்கள் எதிர் காலத்தைத் தெரிந்து கொண்டு போகும் எந்த மனிதர்களும் நினைத்துப் பார்ப்பதில்லை.
அந்தச் சிட்டுக்குருவி ஒருநாள் கடற்கரை யோரத்தில் யாரோ சிதறிவிட்டுச் சென்ற சுண்டல் கடலையைக் கொத்திக் கொண் டிருந்தது. அப்போது அத்துடன் பத்துப் பதி னைந்து சிட்டுக் குருவிகள் இருந்தன அத்தனை குருவிகளும் ஆளுக்கொரு கடலையைக் கொத்தித் தின்று கொண்டிருந் தன. அப்போது இந்தக் கிழவன், சற்றுத் தொலைவிலிருந்து கவண் வீசியிருக்கிறான். கவண் உருண்டை அந்தச் சிட்டுக் குருவியின் மீது பொட்டென்று வந்து அடித்தது. அந்தச் சிட்டுக் குருவி அந்த வலுவான அடியைத் தாங்க மாட்டாமல் தரையில் மயங்கி விழுந் தது. மற்ற சிட்டுக் குருவிகள் பறந்தோடி விட்டன. அந்தக் கிழவன் ஓடி வந்து, மயங்கிக் கிடந்த சிட்டுக் குருவியைத் தூக்கிக் கொண் டான். வீட்டுக்குக் கொண்டு சென்றதும் அதன் இறக்கைகளைக் கத்தரித்து விட்டான். காலில் ஒரு நூலைக் கட்டி சன்னலில் கட்டி விட்டான்.
கூட்டிலிருந்து வெளியே வந்து அட்டை யைக் கொத்தப் பழக்கிக் கொடுத்தான். ஆறு மாதமாகச் சிட்டுக் குருவி வேதனையோடு இந்த வேலையைச் செய்து வருகிறது. அதன் எதிர் காலமே இருண்டு தோன்றியது.
இந்தக் கிழவனிடமிருந்து எப்படித் தப்பு வது என்று அதற்குப் புரியவே இல்லை. சில முறை வெளியே வந்த போது, அது பறக்க முயன்றது. இறக்கை கத்திரித்திருந்ததால் அதனால் பறக்க முடியவில்லை.
சில சமயம் தத்தித் தத்தி ஓட முயன்றது.
கிழவன், “என் பிழைப்பில் மண்ணைப் போட்டு விட்டு ஓடப் பார்க்கிறாயா?” என்று கூறிப் பிடித்துக் கூட்டுக்குள் போட்டுவிட்டான்.
தப்ப வழி தெரியாமல் அந்தச் சின்னச் சிட்டு தத்தளித்துக் கொண்டிருந்தது.
கிழவன் அதன் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளவில்லை. தன் நண்பர்களிடம் “கடவுள் இந்தச் சிட்டுக் குருவி மூலம் எனக்குச் சோறு போடுகிறார்” என்று பெருமையாகச் சொல்லுவான்.
இதைக் கேட்கும் போது சிட்டுக் குருவி அவனை வாயாரத் திட்டும். ஆனால் அது கிழவனுக்குப் புரியாது.
ஒரு நாள் பகல் நேரம் வெயில் கொளுத் திக் கொண்டிருந்தது.சோதிடம் பார்க்க யாரும் வரவில்லை. கிழவன் வீட்டிலிருந்து கொண்டு வந்த கட்டுச் சோற்றைச் சாப்பிட்டு, வேப்ப மரத்தடியில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
கிழவன் நன்றாகக் குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். சிட்டுக் குருவி தன் வாழ்க்கையை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது.
ஒரு சிறுபையன் அந்த வழியாக வந்தான். அவனுக்கு நெடுநாளாகச் சோதிடம் பார்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால் காசு கிடையாது.
அவன் கிழவனைப் பார்த்தான். கிழவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். சிறுவன் மரத்தடியை நோக்கிப் பூனைபோல் மெதுவாக நடந்து வந்தான். ஓசைப் படாமல் கூட்டுக் கதவைத் திறந்தான். சிட்டுக்குருவி வெளியில் வந்தது. அட்டை ஒன்றைக் கொத்தி எடுத்தது. சிறுவன் அந்த அட்டையை எடுத்தான். பிரித்துப் பார்த்தான்.
படித்துப் பார்ப்பதற்குள் கிழவன் விழித்துக் கொண்டால் என்ன செய்வது என்று நினைத்தான். அட்டையைத் தூக்கிக்கொண்டு ஓசைப்படாமல் நடந்து சென்றான். சிறிது தொலைவு சென்றபின் ஓடி விட்டான்.
சிட்டுக் குருவி மீண்டும் கூண்டுக்குள் சென்றது.
திரும்பிப் பார்த்தது. திறந்த கதவு திறந்த படி இருந்தது.
கிழவன் தூங்கிக் கொண்டிருந்தான்.
தப்பி ஓட இந்த நேரம்தான் நல்ல நேரம் என்று தோன்றியது. இது போல் வேறொரு நேரம் கிடைக்காது என்று தோன்றியது.
சட்டென்று வெளியில் வந்தது.
பறக்க முயன்றது. இறக்கை கத்திரித்திருந்ததால் பறக்க முடியவில்லை.
மெல்லத் தத்தித் தத்தி நடத்தது.
சிறிது தொலை சென்று திரும்பிப் பார்த்தது.
கிழவன் குறட்டை விட்டுக் கொண்டிருந்தான்.
மேலும் நடந்தது. தத்தித்தத்திச் சென்றது: கிழவன் கண்ணுக்குத் தென்படாத தொலைவு சென்றுவிட்டது.
ஒரு தோட்டத்துக்குள் நுழைந்தது.
‘அப்பா! விடுதலையாகி விட்டோம்’ என்று தலை நிமிர்ந்தது.
ஒரு பூனை அதையே உற்றுப் பார்த்தது. பயமாய் இருந்தது,
சிட்டுக் குருவி சுற்றும் முற்றும் பார்த்தது. சிறிது தொலைவில் ஒரு கிணறு இருந்தது. அதற்குப் பக்கத்தில் ஒரு குடம் கவிழ்ந்து கிடந்தது.
சட்டென்று தத்தித் தத்திச் சென்று அந்தக் குடத்திற்குள் நுழைந்து கொண்டது.
பூனைபாய்ந்து வந்தது. அது பிடிப்பதற்கு முன் குருவி குடத்திற்குள் நுழைந்துவிட்டது.
பூனை குடத்தை உருட்டிவிட்டது. குருவி வெளியில் வரவில்லை.
நெடுநேரம் உருட்டி உருட்டிப் பார்த்து விட்டு அலுத்துப் போய்ப் பூனை சென்று விட் டது.
குடத்தின் வாய்ப்பகுதிக்கு வந்து வெளி யே எட்டிப் பார்த்தது. நான்கு புறமும் தலையைத் திருப்பிப் பார்த்தது. தொலை தூரம் வரை கூர்ந்து பார்த்தது. பூனை அந்தத் தோட்டத்தை விட்டே போய்விட்டது என்று உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு வெளியே வந்தது.
படுபாவிக் கிழவன் பறக்க முடியாமல் செய்து விட்டானே என்று திட்டிக் கொண்டே தத்தித் தத்தி நடந்து சென்றது. யாரும் தன்னைத் தொடரவில்லை என்று ஒவ்வொரு தடவையும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டு இராயபுரம் கடற்கரைக்கு வந்தது.
கடற்கரையோரமாக ஒரு மாந்தோப்பு இருக்கிறது. அதற்குள் நுழைந்துவிட்டால், தன் இனத்தோடு சேர்ந்து விடலாம் என்ற நினைப்போடு அது சென்றது.
எப்படியோ மாந்தோப்புக்குள் நுழைந்து விட்டது. அங்கே அதன் நண்பர்களான பல சிட்டுக்குருவிகள் பறந்துவந்து அதை வரவேற்றன.
“கண்ணா, இவ்வளவு நாள் எங்கே போயிருந்தாய்?” என்று அவை கேட்டன.
தன் வரலாற்றை அது கூறியது:
எல்லாக் குருவிகளும் அதற்காக இரக்கப்பட்டன.
அது பறக்க முடியாததால், அதற்குத் தரையை ஒட்டினாற் போல் இருந்த ஒரு செடி யின் கிளையில் கூடுகட்டிக் கொடுத்தன.
செடியின் வாதுகளைப் பற்றிக் கொண்டே அது மெல்ல மேலேறிக் கூட்டுக் குட் சென்று விடும். இரவெல்லாம் கூட்டில் அமைதியாகத் தூங்கும். பகலெல்லாம் தோப் பிற்குள் அங்கும் இங்கும் நடந்து சுற்றும். கீழே கிடக்கும் ஏதாவது உணவுப் பொருள்களைக் கொத்தித் தின்னும் மற்ற குருவிகளோடுஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கும். அதன் பொழுது இன்பமாகக் கழிந்தது.
அது விடுதலையாகி ஒரு மாதம் இருக்கும். ஒரு நாள் மாந்தோப்பின் நடுவில் பல சிட்டுக் குருவிகள் கூடி இரை கொத்திக் கொண்டிருந்தன.
அப்போது அங்கே ஒரு நல்ல பாம்பு தரையில் ஊர்ந்து வந்தது.
அதைக் கண்டவுடன் எல்லாச் சிட்டுகளும் பறந்து சென்று மரக்கிளைகளில் உட்கார்ந்து கொண்டன. இந்தச் சிட்டு மட்டும் தரையில் நின்றது.
பாம்பு அதை நோக்கி நகர்ந்தது. அது தத்தித் தத்தி ஓடியது.
மரக்கிளையில் இருந்த சிட்டுகள் “பற, பற” என்று கத்தின.
இந்தச் சிட்டு பறக்க முயன்றது. அதற்குப் பறக்க வந்து விட்டது.
வியப்புடன் அது இறக்கை விரித்துப் பறந்தது. மரக்கிளை யொன்றில் போய் அமர்ந்து கொண்டது.
அந்த ஒரு மாத காலத்தில் வெட்டி விட்ட அதன் இறக்கை வளர்ந்துவிட்டிருந்தது. இதையறியாத அந்தச் சிட்டு தன்னால் பறக்க முடியாதென்று நினைத்துக் கொண்டிருந்தது.
பாம்புக்குப் பயந்து பறக்க முயன்றபோது அது உண்மையிலேயே பறந்து விட்டது.
“எனக்குப் பறக்க வந்து விட்டது!” என்று அது கூக்குரல் இட்டது.
இனிமேல் அது யாருக்கும் பயப்படத் தேவையில்லை; ஏதாவது ஆபத்து என்றால் அதனால் உடனே பறக்க முடியும்; மரத்தின் மேல் ஏறிக் கொள்ள முடியும்.
நன்றாகப் பறக்க முடிந்த பிறகு ஒரு நாள் அந்தச் சிட்டுக் குருவி இராயபுரம் மாதா கோயில் பக்கம் பறந்து சென்றது. அந்த வேப்ப மரத்தின் அருகில் சென்றது.
அங்கே கிழவன் சோதிடம் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் கூட்டில் வேறொரு சிட்டுக் குருவி யிருந்தது.
அது சோதிட அட்டையைக் கொத்தி எடுத்துக் கொடுத்தது. கிழவன் படித்துக் காட்டி இருபத்தைத்து காசு வாங்கிக் கொண்டிருந்தான்.
இந்தக் காட்சியைக் கண்டதும் அந்தச் சிட்டுக் குருவிக்கு அழுகை அழுகையாக வந்தது.
இவ்வளவு நாளும் அது தனக்காக மட்டுமே அழுதது.
இப்போது அது தன் இனத்துக்காக அழுதது.
மாந்தோப்புக்குப் திரும்பி வந்து மற்ற சிட்டுக் குருவிகளிடம் இதைப்பற்றிச் சொல்லி வருந்தியது.
மற்ற குருவிகளும் வருத்தப்பட்டன.
ஆனால், நம்மால் என்ன செய்ய முடியும்? என்று சொல்லி விட்டு அவை தத்தம் வேலையைப் பார்க்கச் சென்று விட்டன.
ஆனால் அந்தச் சிட்டுக் குருவிக்கு இதே கவலையாக இருந்தது.
உரிமையோடு வாழப் பிறந்த குருவிகள் இப்படி அடிமைப்படுவது என்பது அதனால் பொறுக்க முடியாத துயரமாய் இருந்தது. இதே வருத்தத்தில் அது நாளுக்குநாள் உடல் மெலிந்து வந்தது. அதன் நண்பர்களான மற்ற சிட்டுக்கள் எவ்வளவோ சொல்லியும் அதன் மனக் கவலை மாறவில்லை.
ஒருநாள் கடற்கரையில் ஒரு சிறு பெண், தேங்காய்மாங்காய் சுண்டல் பொட்டலத்தைக் கைதவறிப் போட்டு விட்டாள். மண்ணில் விழுந்ததை எடுக்க வேண்டாம் என்று அதன் பெற்றோர் அதற்கு வேறு பொட்டலம் வாங்கிக் கொடுத்தார்கள். அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றபின் சிட்டுக் குருவிகள் அந்தச் சுண்டல்களைக் கொத்தித் தின்றன.
கவலையோடு இருந்த அந்தச் சிட்டுக் குருவி ஒன்றும் தின்னப் பிடிக்காமல் தொலைவில் நின்றுகொண்டிருந்தது. அந்தப்பொட்டலம் கட்டியிருந்ததாள் காற்றில் பறந்து வந்தது. அந்தத் தாள் கவலையோடு நின்ற சிட்டுக் குருவியின் முன் பறந்து சென்று விழுந்தது.
சிட்டுக்குருவி அந்தத் தாளை உற்று நோக்கியது. அந்தத் தாளில் கொட்டை எழுத்தில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
சிட்டுக் குருவி அதைப் படித்தது.
“நேற்றுக் கூடிய சட்டமன்றக் கூட்டத்தில் பல புதிய சட்டங்கள் நிறைவேறின. அவற்றில் சிறப்பான ஒன்று, சோதிடம் சொல்வது குற்றம் என்ற சட்டமாகும். இந்தச் சட்டத்தின் படி சோதிடம் பார்க்கும் மூடப்பழக்கம் ஒழிந்து விடும் என்பதில் ஐயமில்லை.”
இந்தச் செய்தியைப் படித்த சிட்டுக் குருவிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. அதன் முகத்தில் புதுப் பொலிவு ஏற் பட்டது. இறக்கைகளில் புதுத்தென்பு ஏற்பட் டது. எண்ணத்தில் புதிய களி வெள்ளம் பொங்கியது.
அன்று முதல் அது நன்றாகச் சாப்பிட்டது. “அரசு வாழ்க! சட்டமன்றம் வாழ்க!” என்று அது வாழ்த்தியது.
– பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1988, தமிழாலயம் வெளியீடு, சென்னை.
![]() |
நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க... |
