ஒரு விடியலை நோக்கி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 62 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பூரணை நிலா கடலின் தொடுவானப் பகுதியிலிருந்து சற்று மேலேழுந்து எட்டிப்பார்த்தது. அகதி முகாம் குடிசைகள் யாவும் சோபையிழந்து போய்க் கிடந்தன. ஓரிரு குடிசைகளில் மட்டும் மின்மினிப் பூச்சிபோல் விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. 

முகாமின் பக்கவாட்டில் செழித்து வளர்ந்திருந்த வேப்பமரத்தின் கீழுள்ள மணற்தரையில் சிவலிங்கம், கார்த்திகேசு, விநாயகமூர்த்தி ஆகியோர் அமர்ந்திருந்தனர். சில்லென்று வீசிய காற்று அவர்களின் உடலைத் தழுவிச் சென்றது. தொலைவில் மீன்பிடிக் கூட்டுத்தாபன கட்டடத்திலிருந்து ஒளிக்கீறல் முகாமின் ஒரு பக்கத்தில் கோடுகள் போல் விழுந்து கொண்டிருந்தது. 

போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு வருடங்கள் கடந்த பின்னரும் இல்லிடமாகிப்போன தங்கள் வாழிடங்களுக்கு செல்ல முடியாத தவிப்பு அவர்கள் உரையாடலில் இடம் பெற்றது. கொடிய யுத்தம் முனைப்புப் பெற்று இருபகுதியிலும் பெரும் மோதல்களும் இழப்புக்களும் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலம் மனதில் நிழலாடியது. 

யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரு பகுதியினரும் தாக்குதல்கள் செய்வதற்காக தம்மைப் பாதுகாக்க வேண்டியவர்களாகவும், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தாக்குதல் செய்யவேண்டியவர்களாகவும் இருந்த சூழ்நிலை. 

அப்போது இவர்களது குடியிருப்புக்களை அண்மித்த பகுதிகளிலே ஒரு கடற்ப்படை முகாம் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தக் கிழக்குக் கடலோர மீனவர்களின் வாழ்வில் இருள் சூழத் தொடங்கியது. ஏற்கனவே பிறமாவட்டங்களிலிருந்து வந்து வாடியமைத்து, அரச மீன்பிடிக் கூட்டுத்தாபன உதவியுடன் தொழில் புரிந்து கொண்டிருந் தவர்களின் அடாவடித்தனங்களால் மனம் சோர்வுற்றிருந்த உள்ளூர் மீனவர்களுக்கு, கடற்படை முகாமமைப்பு இரட்டிப்பு சுமையை ஏற்படுத்தியது. 

முகாம் அமைத்த கடற்படையினர் அடிக்கடி வந்து சுற்றி வளைப்பு, விசாரணையென்று தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்கள். ஒருநாள் கார்த்திகேசுவின் தம்பியையும், விநாயகமூர்த்தியின் மகனையும் விசாரணைக்கு என்று அழைத்துச் சென்றார்கள். வருடங்கள் பல கழிந்தும் இன்று வரை அவர்கள் பற்றிய தகவலே கிடைக்கவில்லை. 

திடீரென்று ஒருநாள் உள்ளூர் மீனவர்களின் குடியிருப்புப் பிரதேசத்தை பாதுகாப்பு வலயம் என்று பிரகடனப்படுத்திய கடற்படையினர், இருபத்திநாலு மணி நேரத்தில் குடியிருப்பு வாசிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். இதனால் அவ்வூர் மீனவர்கள் கலங்கிப் போனார்கள். 

“நாங்க இப்ப வெளியேறி எங்கே போறது? வேற வீடு வாசல், காணி பூமி கூட இல்லை. இந்தக் கடலை விட்டால் தொழிலுமில்லை” சிவலிங்கம் ஆதங்கத்தோடு கூறினான். 

“இந்தக் குஞ்சு குமருகளோட எங்கே போய் ஒதுங்கிறது…” பவளம் சிவலிங்கத்தை கவலையோடு நோக்கினாள். எல்லா வீடுகளிலும் இதே கவலை. எல்லோரும் கூடிக் கூடி கதைத்தார்கள். “இப்ப என்ன செய்யலாம்?” 

“நாங்க பொலிசிலை முறையிடுவோம்….” என்றான் செபமாலை. பிரயோசனமில்லாத வேலை என விக்ரர் நினைத்தான். 

“பொலிசிலை முறையிட்டு பயனில்லை. சிவில் அதிகாரி யைச் சந்திப்போம்’ கார்த்திகேசு தனது அபிப்பிராயத்தைக் கூறினான். 

”மாவட்ட செயலரும் அவங்கட ஆள்தானே? ஒரு காலத்தில் எங்கட தனித்தமிழ் பிரதேசமாக இருந்த இந்த மாவட்டம் இன்று அரச குடியேற்றத்திட்டங்களால பறிபோய்க் கொண்டிருக்கு. வடக்குக்கும், கிழக்குக்கும் மகாவலிகங்கை வரப்போகுது என்று மகிழ்ந்தோம். அது வெறும் நப்பாசையாகப் போச்சு, தண்ணி வர முன்னரே பெரும்பான்மையின் குடியேற்றம் ஆற்றங்கரை எல்லாம் வந்திட்டுது. இப்ப எங்கட கடல் வளமும் பறிபோகுது…” விநாயகமூர்த்தி உண்மை நிலையை எடுத்துக்கூறினான். 

“எதுக்கும் மாவட்ட செயலரைச் சந்தித்து மனுக் கொடுக்கி றதுதான் நல்லது …” 

“உதிலை மினக்கடுறதை விட்டுட்டு, நாங்க எழும்பாமல் இருப்பம்…”என்றான் விக்ரர். 

“எழும்பாமலிருந்தால் செல் அடிச்சே கலைத்து விடுவார்கள் … எதுக்கும் அரசாங்க அதிபரைச் சந்திக்கிறது தான் நல்லது…” இதை எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். 

திட்டமிட்டபடியே அன்று அரச அதிபரிடம் மனுக் கொடுத்தார்கள். அவரும் அனுதாபத்தோடு இவர்களது பிரச்சினையைக் கேட்டறிந்தார். பின்னர் பாதுகாப்புப்படை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கதைத்தார். இறுதியில் சாதகமான முடிவு வந்தது. 

“நீங்கள் எழும்ப வேண்டியதில்லை… ஆனா பயங்கரவாதிகளை உங்கட பகுதியில வரவிடக்கூடாது. அப்படி வந்தால் பிரச்சினைதான்…” “நாங்களும் எங்கட தொழிலுமாக இருந்து சீவிக்கிறம்… எந்தத் தீவிரவாதியும் எங்கட பகுதிக்கு வர விடமாட்டம்…” 

“வந்தால் தகவல் சொல்லவேணும்…” 

அரச அதிகாரியின் வாக்குறுதி நீண்ட நாள் நீடிக்கவில்லை. அடிக்கடி வந்த படையினரின் தொடர் தொல்லையைத் தாங்க முடியாதிருந்தது. செபமாலையின் சகோதரி ஜோசெபீன், பெரியாஸ்ப் பத்திரியில் தாதியாக இருப்பவள், ஒருநாள் கடமை முடிந்து திரும்பாததால் எல்லோரும் குழம்பித் தவித்தனர். இரவு ஊரடங்கு உத்தரவு ஆதலினால் தேடவும் முடியவில்லை. 

மூன்று நாட்களின் பின்னர் முகாமுக்குக் கிட்டவாக உள்ள கிணற்றிலிருந்து அவளது சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. ஊரே கதறி அழுதது. 

ஜோசெபீன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்தார். உடனடியாக குற்றவாளிகளைப் கண்டுபிடிக்கும்படி நீதிபதி பொலிசாருக்குப் பணித்தார். பத்திரிகைச் செய்திகள் பரபரப்பாக வெளியாகின. அவ்வளவு தான் இன்றுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவேயில்லை. 

சில நாட்களின் பின் கடலின் மீன்பிடிப்பதும் தடை செய்யப்பட்டது. இதனால் அந்தக் கிராம மக்கள் தொழில் இழந்து வருவாயின்றி பசியாலும் பட்டினியாலும் வாடினர். அரச அதிபரிடம் கொடுக்கப்பட்ட மனுவை அடுத்து பகலில் மட்டும் அதுவும் குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று மீன் பிடிக்க அனுமதி கிடைத்தது. அவர்களது வாழ்க்கைப் பயணம் சிரமத்துடன் தொடர்ந்தது. 

ஒருநாள் இரவு அந்தக் மீனவக் கிராமமே உறங்கிக் கொண்டிருந்த சாமவேளையில் ஆயுததாரிகள் பலர் உட்புகுந்து கிராமமக்கள் பலரை பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பார்க்காமல் வெட்டிச் சரித்தனர். தப்பிப் பிழைத்தவர்கள் சிதறி ஓடினர். பத்திரிகை, ஊடக தணிக்கை இருந்தபடியினாலும், வெளிநாட்டு நிருபர்களுக்குக் கூட அனுமதி இல்லாதமையினாலும் நடந்த அனர்த்தங்கள் அனைத்துமே மூடி மறைக்கப்பட்டன. லங்கா புவத்தும் இருட்டடிப்புச் செய்தது. 

அன்று அகதியானவர்கள் தான் பாடசாலைகளில் தஞ்சம் புகுந்து சிலகாலம் அதுவே அகதி முகாமாக இருந்தது. பின்னர் சில அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியினால் அமைக்கப்பட்ட கீற்றுக் கொட்டகை முகாம் களிலிருந்து இப்போது சில நாட்களாக சிறு சிறு குடிசைகளமைத்து அகதிகளாக வாடிக்கொண்டிருக்கும் இவர்களது சோகம் அதிகமாக வெளியுலக்குத் தெரியாது. பசியிலும், பட்டினியிலும் வாடி, மழையிலும் பனியிலும் தோய்ந்து நோயிலும் நொடியிலுமாக இவர்கள் படுகின்ற அவலம் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. 

போர்த்தவிர்ப்பு ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இவர்களது மனதில் நம்பிக்கை ஒளிக்கீற்று தோன்றியது என்னவோ உண்மைதான். ஆனால் இன்று அதுவும் தேய்பிறையாக ஒளியிழந்து கொண்டிருக்கின்றது. நிழலிலே பேசிக்கொண்டிருந்த மூவரின் பேச்சிலும் மீள்குடியேற்றம் பற்றிய ஆதங்கமே தொனித்தது. 

“அண்ணை பீடி இருந்தா தாங்க.. சரியான கூதலாக இருக்கு.. ஒரு தரம் அடிச்சாத்தான் நல்லாயிருக்கும்” என சிவலிங்கம் கேட்டதும், விநாயகமூர்த்தி மடியைத் துளாவிப் பார்த்தபடி, ” என்னிடமும் இல்லை…” என்றான். அருகிலிருந்து கார்த்திகேசு தனது காதில் சொருகியிருந்த பீடியை எடுத்து நீட்டினான். 

“விக்ரரை இன்னமும் காணோம்… முக்கியமான விசயம் கதைக்க வேணும் ரவுணுக்குப் போயிட்டு வாறன் என்று சொல்லிவிட்டுப் போனானே?” சிவலிங்கம் வீதியைப் பார்த்தான். தொலைவில் யாரோ வருவது நிலவொளியில் மங்கலாகத் தெரிந்தது. விநாயகமூர்த்தி உற்றுப் பார்த்தான். 

விக்ரர் முகாம் வளாக கேற்றைத் திறந்து கொண்டு வந்து கொண்டிருந்தான். 

“போன விசயம் எப்படி? எம். பியைக் காணக்கிடைச்சுதா?”

“இன்னும் சரியானமுடிவு தெரியல்லெண்ணு எம்.பீ கூறினார். விரைவில கடற்படை முகாமை வேறிடத்திற்கு மாற்றப் போறாங்க. அப்புறம் எங்களுடைய நிலமும் பாதுகாப்பு வலயமாக இருக்காது. நாங்க போய் மறுபடியும் குடியேறலாம்.” விக்ரர் சற்று உற்சாகத்தோடு கூறினான். 

விக்ரர் வயதில் இளைஞன். அத்துடன் இவர்களை விட நாலெழுத்துக் கூடப்படித்தவன். இதனால் இந்த அகதி முகாமிலிருந்த பெரியவர்கள் கூட அவனில் தனி மதிப்பை வைத்திருந்தனர். முகாமிலுள்ள இளைஞர்கள் எல்லோருமே அவனுக்கு நண்பர்கள். அவன் எள் என்றால் எண்ணையையே கொண்டு வந்து விடுவார்கள். 

குடிசையிலிருந்த பவளம் இவர்களுக்குத் தேனீர் கொண்டு வந்து கொடுத்தாள். விக்ரரின் பார்வை குடிசைப்பக்கம் மேய்ந்தது. சுகந்தி கண்ணில் படுவாள் என்ற தவிப்பு ! மெல்லிய நிலவொளியில் எதுவும் தெரியவில்லை. தேனீர் இனிமையாக இருந்தது. சுகந்திதான் போட்டிருப்பாள் என்று விக்ரர் நினைத்தான். 

“அப்ப கெதியிலை சரிவரும் என்று விக்ரர் தம்பி சொல்லுறியள்”

“சரிவரத்தானே வேணும்? எங்கட பொடியள் இவ்வளவு உயிரைத் தியாகம் செய்யுதுகள்… இது ஒரு தர்மயுத்தம் கண்டியளோ… மகாபாரதத்தில்…” விநாயகமூர்த்தி தனது புலமை யைப் பறைசாற்றினான். 

அண்ணை இன்னொரு சந்தோசமான விசயம் எம்.பீ சொன்னவர். நாங்கள் எங்கட காணியிலை மீளக்குடியேறுவதற்கு புலம்பெயர்ந்த எங்கட வெளிநாட்டில் உள்ளவர்கள் உதவி செய்யப் போகினமாம். 

“அந்தக் குளிரிலையும், பனியிலையும் கஸ்ரப்பட்டு உழைச்சு, தாயகத்தை மறக்காமல் உதவி செய்கின்ற அவர்களுடைய உதவி மகத்தானது. அரசாங்கம் உதவியும் செய்யாமல், பொருளாதாரத்தடையும் போட்டு உள்ளூரிலேயே எங்களை ஏதிலிகளாக்கி அகதியாக விரட்டினபோது வெளிநாட்டில இருந்து எங்கட பிள்ளையள் அனுப்புகின்ற பணத்தால் தான் தாக்குப் பிடிக்கிறம்…” சிவலிங்கம் பூரிப்போடு கூறினான். 

“உண்மைதான்… அவர்கள் அனுப்பும் பணத்தால் தான் இந்த நாசயுத்தத்திலையும் பட்டினிச்சாவுகள் தவிர்க்கப்பட்டிருக்கு…” கார்த்திக்கேசுவும் இதை ஆமோதித்தான். 

“ஒரு காலத்தில, யுத்தத்திற்குப் பயந்து புலம் பெயர்ந்தவர் களை சிலர் இழிவாகக் கதைக்கினம். ஆனா இப்போது அவர்களுடைய பொருளாதார உதவியில தான் இங்கே எல்லாமே நடக்குது…” என்றான் விநாயகமூர்த்தி. 

இன்றைய நிலவுப்பேச்சு இப்போது நிறைவுக்கு வரவே எல்லோரும் எழுந்து தமது குடிசைகளுக்குச் சென்றார்கள். விக்ரர் தனது இளவட்ட நண்பர்களைச் சந்திக்க பிரசாந்தனின் குடிசைக்குச் சென்றான். 

முகாமின் பக்கவாட்டிலிருந்த வேப்பமரம் இவர்களுக்குத் தூயகாற்றைத் தருவதுடன், பகலில் நிழலையும் தருவதால், அதன் கீழ் மணல் பரவி நிழலில் கூடிக்கதைப்பார்கள். நிலாப்பொழியும் நாட்களில் இரவிலும் கூட்ட மண்டப கூடம் இந்த வேப்பமர நிழல் தான். 

அடுத்த சில நாட்கள் மீள்குடியேற்றம் பற்றிய நினைவுகளின் மகிழ்வோடு முகாம் வாசிகள் சந்திக்கும் போதெல்லாம் உரையாடுவார்கள். 

பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் காணியுள்ளவர்கள் மீள் குடியேற்றத்திற்குப் பதிவு செய்யும்படி வேண்டப்பட்ட போது எல்லோரும் மகிழ்ச்சியுடன் கிராமசேவை அலுவலரிடம் பதிவு செய்தனர். 

விரைவிலேயே கடற்படை முகாமும் அகற்றப்பட்ட சேதி அவர்கள் மனதில் பாலை வார்த்தது. இது காலவரை இருண்டு போயிருந்த முகங்களின் சோகங்களெல்லாம் விடைபெற, சொந்தக் காணிகளில் குடியேறப்போகும் மலர்ச்சி அனைவரின் முகங்களிலும் தெரிந்தது. கண்ணிவெடிகள் அகற்றிய பின் குடியேறலாம். 

ஒருநாள் மகிழ்ச்சியான சேதியோடு குடியிருப்புத் தலைவர் சிவலிங்கத்தைத் தேடி விக்ரர் வந்தான். குடிசை வாசலில் நின்று “ஐயா” என்று அழைத்தான். சுகந்தி தான் வெளியே வந்து எட்டிப்பார்த்து இவனைக்கண்டு பூரிப்பும் பதட்டமுமாக வரவேற்றாள். 

“வாங்கோ” 

“அப்பா….?” 

“அப்பாவும், அம்மாவும் குச்சவெளிக்கு ஒரு கல்யாண வீட்டுக்குப் போட்டினம்…” 

“அப்ப நான் பிறகு வாறன்…” 

“நில்லுங்கோ…. தேத்தண்ணி குடிச்சிட்டு போகலாம்” சுகந்தி கொக்கி போட்டிழுத்தாள். 

“இந்த வெயில் வெக்கைக்கு தேத்தண்ணியே?” 

“தேசிக்காய் கரைக்கிறன்..” 

சுகந்தி எலுமிச்சை ரசத்துடன் வந்து அவனிடம் நீட்டினான் 

“நல்ல இனிப்பு… உம்மைப் போல…” 

“கொஞ்சச் சீனிதான் போட்டனான்…” 

:உம்மட கை பட்டதெல்லே…” அவனது பதிலில் அவள் “கிளுக்” என்று சிரித்தாள். 

“மற்றவவையின்ர கலியாண வீட்டுக்குப் போயிருக்கினம். எப்பவாம் மகளின்ர கலியாணமாம்?” 

“அதை நீங்கள் தான் சொல்லவேணும்…” 

“வேதத்தில செய்ய உம்மட அப்பா அம்மாவை ஓமாமோ?” அவளை நிமிர்ந்து பார்த்தான் விக்ரர். 

“பேதங்களற்ற தாயக விடுதலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்ற போது சாதியும், சமயமும்… தமிழர் எல்லாம் ஒன்றுதான்…” 

“ஏன் மனிதர்களே ஒரே சாதிதான்… ஆனா ஆறறிவு படைச்ச மனிசன் இன மதம் என்று அடிபட்டுச் செத்துக் கொண்டிருக்கிறது தான் வேடிக்கை…” 

“இப்ப அரசியலும், தத்துவமும் பேசவே வந்தனீங்கள்?… அம்மா அப்பாவை போனதைக்கண்டுட்டுத் தானே வந்தனீங்கள்…?” 

“உம்மைப்பார்க்கவும் தான்… அதோட அப்பாவுக்கு ஒரு தகவல் சொல்ல வேணும்… எங்கட காணிகளிலை மிதிவெடி அகற்றி முடிஞ்சுதாம்… கெதியில நாங்கள் மீளக் குடியேறலாம்… எல்லைகள் தான் அழிஞ்சு போச்சு…” 

“அப்ப இனி காணிக்காரரிடையே எல்லைச் சண்டைதானென்று சொல்லுங்கோ…” நீண்ட நேரம் சுகந்தியுடன் கதைத்து விட்டு வெளியேறினான் விக்ரர். 

அடுத்த சில நாட்கள் அகதி முகாம் வாசிகள் தமது மீள்குடியேற்றம் பற்றிய இனிய எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த போது, விக்ரர் எல்லோ ருக்கும் ஏமாற்றமளிக்கும் தகவலோடு வந்து சேர்ந்தான். 

“எங்கட காணிகளிலை வெளிமாவட்டத்துச் சிங்களவர் அடாத்தாகக் குடியேறியிருக்கிறாங்கள்” 

“இதென்ன அநியாயம்? நாங்க உடனே அரசாங்க அதிபரைச் சந்திக்க வேணும்…” சிவலிங்கம் பபடபடத்தான். “எந்தவித பலனும் இல்லை… அரசியல்வாதி, அதிகாரிகள், பொலிசார் எல்லோருடைய அனுசரணையுடன்தான் குடியேற்றம் நடந்திருக்கு…” 

“இப்ப என்ன செய்யலாம்” 

அரச அதிபரிடம் ஊர்வலமாய்ச்சென்று மகஜர் கொடுப்போம்… சத்தியாக்கிரகம் செய்வோம்” என்று ஆவேசமாக விநாயகமூர்த்தி கூறினான். 

”1960ம் ஆண்டிலிருந்து சத்தியாக்கிரகம் செய்து என்னத்தைக் கண்டோம்…?” பிரசாந்தனும் நண்பர்களும் சலிப்போடு கூறினார்கள். 

“எதற்கும் அவர்கள் அரசாங்க அதிபரைச் சந்திக்கட்டும்… பிறகு யோசிப்போம்…” என்றான் விக்ரர். 

“சந்திக்கட்டும்…பிறகு யோசிப்போம்..” 

அவர்களது பிரதிநிதிகளாக சிவலிங்கம், கார்த்திகேசு, விக்ரர் ஆகிய மூவரும் அரச அதிபரைச் சந்தித்தார்கள். 

“நீங்க சொல்லுறது சரி… அது உங்கட காணிகள் என்பதற்கு என்ன ஆதாரம்?’ 

“எங்கட உறுதிகள் எல்லாம் எரிஞ்சு போச்சு ஐயா…” 

“அதுக்கு நான் ஓன்றும் செய்யேலாது. பிரதி எடுத்து வாங்க…” பிரதிகளுக்கு விண்ணப்பித்தார்கள். பதிவேடுகள் சிதைந்து போனதாகப் பதில் வந்தது. எம்.பி யும் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழும்பினார். எனினும் அத்துமீறிக் குடியேறியவர்களை எழுப்ப முடியவில்லை. 

அகதி முகாம் வாசிகள் நொடிந்து போயினர். ”ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ. முள்ளை முள்ளால தான் எடுக்க வேணும்…” விக்ரர் ஆவேமாகக் கூறினான். 

இரவு நடுநிசியைத் தாண்டிவிட்டது. எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. விக்ரர், பிரசாந் மற்றும் முகாமச் சேர்ந்த இளைஞர்கள் கையில் கத்தி, பொல்லு முதலிய ஆயுதங்களுடன் தமது குடியிருப்பு காணிகளில் நுழைந்தனர். 

மறுநாள்…. 

பயங்கரவாதிகள் சிங்கள அப்பாவிகளின் குடியிருப்புக்களில் புகுந்து தாக்கி, கொலை செய்து தீயிட்டனர். லங்கா புவத்தை ஆதாரம் காட்டி வானொலிகளும் தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டன. 

குடியிருப்புக் காணிகளில் இப்போது எவரும் இல்லை! விடியும் இனி விடியும். 

(மூன்றாம் பரிசுச் சிறுகதை) 

1978 ஆம் ஆண்டு தொடக்கம் எழுத்துலகில் தடம்பதித்த டாக்டர் ச. முருகானந்தன் பல்துறை சார்ந்த எழுத்தாக்கங்களை எழுதிவந்த போதிலும் சிறந்த சிறுகதை எழுத்தாளராக இனம் காணப்பட்டார். சுமார் 200 சிறுகதைகள் வரை எழுதியுள்ள இவர் நான்கு சிறுகதைத் தொகுதி களையும் ஒருகவிதைத் தொகுதியையும், ஒரு கட்டுரைத் தொகுதியையும் நூலுருவில் வெளிக்கொணர்ந்துள்ளார். 

1979 இல் சென்னை இலக்கிய சிந்தனைப்பரிசைப் பெற்ற முதலாவது இலங்கையராவார். “தரை மீன்கள்” சிறுகதைத் தொகுதி 2003ல் சாஹித்ய மண்டல விருது பெற்றது. முத்தமிழ்விழா சிறுகதைப் போட்டி உட்பட இருபது தடவைகள் சிறுகதைக்காகவும், மூன்று தடவைகள் கவிதைக் காவும் பரிசில்கள் பெற்றுள்ளார். இவரது சிறுகதைகள் தெலுங்கு, ஹிந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 

– கொக்கிளாய் மாமி (சிறுகதைகள்), தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன், முதற்பதிப்பு: செப்டெம்பர் 2005, ஞானம் பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *