அமைதியின் மறுபக்கம்
கதையாசிரியர்: சு.அப்துல் கரீம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 166

நான் கார்த்திகேயன். முப்பது வயதைத் தொட்டவன்.
இந்த நகரில் கிடக்கும் ஒரு சாதாரணப் புள்ளி.
என்னைப்பற்றி அலுவலகத்தில் பேசுவார்கள்:
“அவன் ஒரு கல். எமோஷன் இல்லாத எந்திரம். முகத்தில் ஒரேயொரு ரேகைதான் தெரியும் – அது வேலை.”
உண்மைதான்.
சும்மா கிடக்கும் பாறைக்கும் எனக்கும் என்ன பெரிய வேறுபாடு? வேணும்னே அமைதியைக் விலை கொடுத்து வாங்கியவன் நான்.
இந்த உலகத்துக் குப்பை மேட்டிலிருந்து ஒதுங்கி வாழ ஆசைப்படும் ஒரு கோழை.
அந்த சூது பிடித்த அலுவலகத்தில் யாழினி மட்டும் விதிவிலக்கு.
அவளுடைய சிரிப்பு — ஜன்னலின் வழி ஊடுருவும் காலை ஒளிபோல், அறையின் மந்தத்தைச் சிதறடிக்கும். அவள் பேசும்போது குரலில் ஒரு சிறிய இசை இருக்கும் — அது, நீண்ட நேரம் மவுனமாய் கிடந்த என் மனதில் ஓர் அலை எழுப்பும்.
ஒருமுறை அவள் சொன்னாள்:
“கார்த்திகேயன் சார்,
நீங்க ரொம்ப சீரியஸ் ஆபீசர்… எப்போவும் பேசாம இருக்கறீங்க.
எனக்கென்னமோ, அந்த மௌனத்துல ஏதோ ஒரு ரகசியம் ஒளிஞ்சிருக்கு போல தோணுது.
ஆனா, நீங்க சிரிச்சீங்கன்னா – உங்க முகம் எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?”
அந்தச் சொல்லும், அவளது பார்வையும் – சொல்லாமல் சொல்லும் காதல் மாதிரி, என் அமைதிக்குள் தீ மூட்டியது.
அது காதல் என்று உரக்கச் சொல்ல எனக்குத் தைரியம் இல்லை.
அது ஒளியளிக்கவில்லை, ஆனால் இருளை நினைவூட்டியது. அதுவே என் அமைதியின் முதல் பிளவு.
நாள் முழுக்க – வேலை, வேலை, வேலை!
கழுதை மாதிரிச் சுமக்கிற வெளியூர்ப் பயணங்கள், மண்டை காய்ந்துபோகிற கூட்டங்கள், பேச்சுக் கூச்சல்கள்…
எல்லாம் சேர்ந்து ‘வர்தா’ புயலில் அடிபட்டவன் போல ஓடினவன் நான்.
வீட்டுக்குள் வந்து காலடி வைத்தவுடனே, எனக்கு என்ன வேண்டும்?!
அமைதி! அமைதி! அமைதி!
வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்தால், டிவி போடமாட்டேன். ரேடியோவுக்குச் செவி கொடுக்கமாட்டேன்.
சும்மாப் படுத்துக்கொண்டு, பாறை மாதிரிச் சாய்ந்து கிடப்பேன்.
அந்த மென்மையான சூன்யமே – ஒரு தனிச் சுகம்.
ஆனால்… அது நிறைய நேரம் நீடிக்கவா செய்யும்?
நிஜ வாழ்க்கை இதற்கு ஒருநாளும் இடமளிக்காது. அது வேறு வேதனை.
சென்னை – எங்கு பார்த்தாலும் சத்தம்! சத்தம்!
இந்த இரைச்சல் மட்டும்தான் இந்தக் கூச்சல் நகரத்தின் சொத்து போல!
சத்தமில்லாத வாழ்க்கை – இங்கே கனவு மாதிரி.
வீட்டுக்குள் வந்ததும் முதல் இரைச்சல்.
ஐந்தாம் ‘பிளாக்’கில் குடியிருக்கும் உமர் ஃபாரூக்கின் பிள்ளைகள் – அதீக், இனான்… அவர்கள் பள்ளிவிட்டுத் திரும்பினால் போதும், வீடே உடையும்!
‘தட! தட!’ என் நெஞ்சில் விழும் சுத்தியல் அடி.
“ஜிம்மை வீட்டுக்குள்ளே வெச்சு உடற்பயிற்சி செய்யுறாங்களா?”
என்று கோபம் புகையென எழுந்தது.
ஆனால் அந்தச் சின்னப் பசங்களின் கள்ளமில்லாத சிரிப்பொலி — என் கோபத்தைக் கழுவி, கரைத்துவிடும் ஒரு சந்தோஷ ஆறு போல இருந்தது.
வாழ்க்கையின் அசைவு அது. அந்த அசைவுதான், என் அமைதியை உடைக்கிறது.
எதுவாக இருந்தாலும், நான் கேட்டுக்கொண்டே இருக்க விரும்பவில்லை.
வெறுத்துப் போய் சமையலறைக்குள் போய் ஒரு டீ வைக்கிறேன்.
பக்கத்து வீட்டில் கமலா பாட்டி. எப்பவும் சிரித்த முகம்.
“என்னப்பா… வேலைக்குப் போயிட்டு வந்தாச்சா?”
என்று தினமும் தவறாது கேட்பார்.
அது ஒரு சடங்கு. ஏனெனில் அவருக்குக் காது கேட்காது.
அதனால் அவர் போடும் டி.வி. சத்தம் — ஒரு ஸ்பீக்கர் வெடித்தது போல இருக்கும்!
உள்ளூர் சீரியல்தான்… இப்போ ஓடுற ‘எதிர்நீச்சல்’ இல்லன்னா ‘சிங்கப் பெண்ணே’.
வீட்டுச் சண்டை, ஏமாத்துறது, காதல் — அந்த வெற்று வசனங்கள் என் டீ கோப்பையிலே ஆவியாகிக் கரையும்படி.
“சரி… பாத்ரூம்ல போய் சுகமா ஒரு வெந்நீர் குளியல் எடுத்தால் எப்படி?”
என்று நினைத்தேன்.
ஆனால் அங்கேயும் — ‘டக்! டக்! டக்!’
சுத்திச் சத்தம்!
பக்கத்து வீட்டு சண்முகம் புதுசா கட்டத் தொடங்கிய மூணு மாசமாகியும், அந்தப் பெரிய வேலை முடியவே இல்லை.
“சத்தம் இல்லாத தனிமை வேண்டும்…”
என்று எஸ்.பி.பி. மாதிரி சத்தமாகக் கத்த வேண்டியது போல இருக்கிறது.
இது ஒரு முரண்.
இனிச் சமாதானம் இல்லை. இந்தப் பாழாய்ப்போன இரைச்சலுடன் சமரசம் செய்ய நான் முட்டாள் இல்லை.
நான் நேராக என் சட்டையைப் போட்டுக்கொண்டு, வெளியே கிளம்பினேன்.
முதலில் கமலா பாட்டியின் வீட்டை நோக்கித்தான் என் கால்கள் நடந்தன. டி.வி.யின் கூச்சல் செவிப்பறைக்குள் ஆணியடித்தது போலத் தாக்கியது.
நான் வாசலில் போய், ஒரு சிங்கம் போல நின்றேன். தன் காது என்ற உறுப்பு சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதால், பாட்டிக்கு வெளியாட்கள் வந்ததே தெரியாது.
நான் நின்றதைப் பார்த்து, சட்டென்று டி.வி.யின் சத்தத்தைக் குறைத்துவிட்டு, சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.
சர்வ சாதாரணமாகச் சிரிக்கிறார்! என் முகத்திலிருந்த நெருப்பு அவருக்குச் சோர்வாகத் தெரிந்திருக்க வேண்டும்.
அந்தச் சிரிப்பின் மீது பரிவு என்ற மெழுகு பூசப்பட்டு, அவர் கேட்டார் –
“என்னப்பா… ரொம்பத் தளர்ந்து போயிருக்க? உடம்பு ஏதும் சரியில்லையா?”
“அப்படி ஒண்ணுமில்லை பாட்டி…” என்று சொல்லிவிட்டு, அந்த இரைச்சல் ஊற்றும் டி.வி என்னும் அரவை மாவு யந்திரத்தை வெறுப்புடன் பார்த்தேன்.
“இது ஒண்ணுதான்பா இப்போ எனக்குத் துணை… வேற யாரு இந்த கிழவிக் கிட்ட வந்து பேசப்போறா”
அது தள்ளாத வயதின் இறுதிக் கெஞ்சல் போல ஒலித்தது.
அவர் முகத்தில் தெரிந்த புன்னகை – உள்ளே சிதைந்துபோன மனதை மூடிவைத்த பழைய முகமூடி என்பதாக நான் அறிந்தேன்.
“சரி வா… உள்ளே வந்து ஒக்காரு. சூடா ஒரு காப்பி போட்டுத் தரேன்…”
அந்தக் கனிவான கேள்வி, என் கோபத்தின் முதுகெலும்பைக் கழற்றிவிட்டது.
‘ஏன் என் அமைதியைக் கெடுக்கிறாய்?’ என்று பாய்ந்து கத்தத் தயாராக வந்தேன். ஆனால் இந்த முதுமை, என் களைப்பைப் பற்றிப் பேசுகிறது!
டி.வி. இரைச்சலை விடவும், அந்த முதுமைக் குரலில் இருந்த பரிவு பல மடங்கு வீரியத்துடன் என் நிம்மதியைத் தகர்த்தது.
இல்லை, நிம்மதியை அல்ல… என் சுயநலத்தின் மதில்சுவரை அது தகர்த்தது.
நான் தலை அசைத்தேன்.
“வேண்டாம் பாட்டி. நான் சும்மாதான் வந்தேன்.”
சட்டியில் உலை வைத்ததுபோல வந்திருந்த என் அற்பக் கோபம், ஒரு கனிந்த வார்த்தையில் நீர்த்துப் போனது.
அங்கிருந்து நகர்ந்து, சுத்தியடிச் சத்தம் கேட்ட சண்முகத்தின் வீட்டை நோக்கிப் போனேன்.
அங்கே சண்முகம், தன் வீட்டு வேலைகளைப் பார்த்த கொத்தனார் சித்தாளுக்கு கடன் வாங்கிச் சேர்த்த பணத்தைக் கணக்கு செட்டில் செய்துவிட்டு, வியர்வை படிந்த பாரமான முகத்துடன் வெளியே வந்தான்.
அவன் முகத்தில் உழைப்பின் சுமை மட்டுமல்ல, நாளை என்ற கேள்விக்குறியும், யதார்த்தத்தின் கசப்பும் கறை போலப் படிந்திருந்தன.
“கார்த்திகேயன்… வீட்லதான் இருக்கீங்களா? மன்னிச்சுக்குங்க… வீடு ரிப்பேர் பாக்கற சத்தம் உங்களுக்கு ரொம்பத் தொந்தரவா இருந்துருக்கும்னு நெனைக்கிறேன். என்ன பண்றது…”
அவன் குரலில், சத்தத்தைப் பற்றிய குற்றவுணர்வை விடவும், கடன் என்னும் பலி பீடத்தில் மாட்டிக்கொண்ட ஒரு ஜீவனின் முணுமுணுப்பு வெளிப்படையாகத் தெரிந்தது.
நான் மெளனமாகச் சிரித்தேன்.
சண்முகம் தொடர்ந்தான் —
“மூணு மாசமா வேல நடக்குதுங்க… ஆனா இன்னும் முடியலை… பேங்க் பேலன்ஸ்தான் தண்ணியா கரைஞ்சிக்கிட்டு இருக்கு… அதோட கடன் சுமையும் தாங்க முடியல…”
சண்முகம் என்னிடம் பேசியது, அவன் தன் சுமையை இறக்கிவைக்க வந்த ஒரு மன்றாட்டுக் குரல் அல்ல.
அது — தான் எதிர்பார்த்த வசதியான வாழ்வு என்ற கனவு, சித்தாளின் சுத்திச் சத்தத்தில் சுக்குநூறாக உடைவதை உணர்த்திய ஏமாற்றத்தின் குரல்.
அப்போது அங்கே ஓடி விளையாடிக் கொண்டிருந்த அதீக், தன் பெரியவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக –
“அங்கிள்…”
என்று கூவி என் காலைக் கட்டிக்கொண்டான்.
அந்த இரைச்சலுக்கு மத்தியில் கேட்ட அவர்களுடைய குழந்தைச் சிரிப்பு, என் கோபத்தைக் குப்பைக் கிடங்கில் போட்டது.
நான் அந்தக் குட்டி ஜீவனைத் தூக்கி, அதன் பிஞ்சு கன்னத்தில் முத்தமிட்டேன்.
இந்தக் குழந்தையும், இந்த முதுமையும், இந்தக் கசப்பான யதார்த்தமும்தான் — நான் விலகி ஓட நினைத்த நிஜ வாழ்க்கை!
வேறு வழியில்லை. தப்பிக்க முடியாத சதுப்பு நிலம் இது.
நான் இப்போது கமலா பாட்டியின் வீட்டு வாசலிலும் இல்லை, சண்முகத்தின் வியர்வை படிந்த சுவரண்டை நிற்கவும் இல்லை.
நான் என் மனதின் மூலையில் – பல ஆண்டுகளாகச் சாய்ந்திருக்கும் அந்த அடைமூட்டிய, இருண்ட, சுயநலத்தின் மூலையில் – கேள்விகளுக்கும் பதில்களுக்கும் பயந்து பதுங்கிக் கிடக்கிறேன்.
அந்நேரம், அந்தத் துறுதுறுக்கும் ஜீவன்களின் பூச்செடி மாதிரியான உற்சாகச் சிரிப்பொலியும்; டி.வி. இரைச்சலைத் தாண்டியும் கேட்ட பாட்டியின் தனிமை உறைந்த மூச்சுக்காற்றும் — என் மௌனத்தால் செத்துப்போன செவிகளுக்குள், ஓர் அக எழுச்சியாக வந்து விழுந்தது.
நீண்ட நாட்களாக மௌனத்தில் அடைத்திருந்த என் செவிகளில் ஒரு உயிர் ஊர்ந்தது போல உணர்ந்தேன். அப்போது தான் புரிந்தது –
ஒவ்வொரு ஆக்ரோஷமான சத்தத்துக்கும் பின்னால் வெறும் ஓசை இல்லை:
அது ஒரு உயிரின் துடிப்பு; அது ஒரு உழைப்பின் இரத்தம்; அது ஒரு வாழ்வின் பிடிவாதமான நம்பிக்கை!
நான் விலகி ஓடத் துடித்த அந்தச் சின்னச் சிரிப்பை விலக்கினால் — நான் எதைத்தான் விலக்குகிறேன்?
நான் விலக்குவது ஒலி அல்ல; அது இந்த உலகின் நாளைய காலை!
பாட்டியின் டிவி முழக்கம் — அது வெறும் இரைச்சல் அல்ல; அவர் செவிடான வாழ்வுக்குச் சொந்தம் கொடுக்கிற நம்பிக்கையின் குரல். அவரது துணையின்மைக்கு அவர் கொடுக்கும் இலஞ்சம்!
சண்முகத்தின் அந்தக் கடின சுத்தியடிச் சத்தம் – இரும்பின் மோதல் அல்ல; தனக்கென ஒரு கூட்டை உருவாக்கப் போராடும் மனிதனின் மூச்சுக்காற்று. கடன் என்னும் கயிற்றில் சிக்கிய ஒரு மனிதனின் போராட்டம்.
அப்படியென்றால் — நான் ஓடி ஒளியத் தேடும் அமைதி, அது அமைதி அல்ல; அது உறங்கிக் கிடக்கும் மரணம்!
சத்தத்தை விலக்கி வைக்க நினைப்பது — இந்த துடிப்பான வாழ்வையே நிராகரிப்பதல்லவா?
அந்த கசப்பான, கூர்மையான உண்மை – சுடச்சுடக் காய்ச்சிய இரும்பு போல என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது.
இப்போது எனக்குத் தெரியும் – சத்தம் என் எதிரி இல்லை; அது நான் இத்தனை நாள் ஒதுக்கிவைத்த உயிர்களின் உண்மையான ஒலி!
அந்தத் தருணம் – இருள் சூழ்ந்த என் மனதின் அடியாழத்தில், யாழினியின் மின்னல் போன்ற சிரிப்பும், அவளது சொல்லாத காதல் பார்வையும், ஒரு துளி வெளிச்சம் போல விழுந்தது.
அவளிடம் பேசவேண்டுமென்ற ஆசை, நாள்தோறும் நினைவின் அடியில் வளர்ந்திருந்தது. இன்று மட்டும் அது குரல் கண்டது.
அவளுடைய அந்தச் சிரிப்பின் மஞ்சள் ஒளியில்தான், நான் என் சுயநல மௌனத்திலிருந்து வெளிவரத் துணிந்தேன்.
நாளை… அவளைத் திருமணம் செய்தால் – வீட்டுக்குள் பிள்ளைகளின் ஆரவாரம் தூள் பறக்கும்.
பிறகு நாமும் வயசான பிறகு, கமலா பாட்டி மாதிரி, டி.வி.யின் சத்தத்தை முழக்கமிட்டு சீரியல் பார்ப்போம்.
அப்போது நம் வீட்டுப் பக்கத்துப் பயல் ஒருவன் — “அய்யோ, என்ன சத்தம்!” என்று எரிச்சலடைவான்.
இந்த வாழ்க்கைச் சங்கிலி – அறுத்தெறிய முடியாதது.
நான் என் போனை எடுத்து, யாழினியின் எண்ணுக்குத் தைரியமாக டயல் செய்தேன்.
“ஹலோ… யாழினி…”
ஜன்னலின் வெளியில் – பேருந்தின் ஹாரன், பிள்ளைகளின் சிரிப்பு, பாட்டியின் தொலைக்காட்சி ஓசை.
அனைத்தும் சேர்ந்து அந்த நொடி, என் தனிமையின் சுவரை இடித்துத் தள்ளின.
அது, நான் வாழத் துடிக்கும் இந்த உலகத்தின் நிஜக் குரலாக, ஒரு இன்னிசையாய் என் செவிக்குள் விழுந்தது.
சத்தம் இனி என் எதிரி இல்லை. அது என் வாழ்வின் அடையாளம்.
இந்த நகரம் சத்தமாய் இருப்பது — நிம்மதி இல்லாததுக்கான சான்று அல்ல; அது உயிரோடு இருக்கிறதற்கான சான்று.
நான் இப்போது அந்த உயிரோட்டத்தின் ஒரு பகுதியாகிறேன்.
![]() |
சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க... |
