நிலமங்கை
கதையாசிரியர்: சாண்டில்யன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 164
(1977ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10
அத்தியாயம் 7 – நிலமங்கை

இருண்ட தோப்பில் கீற்றாக நுதலின் குறுக்கே விபூதிப்பட்டை போல் விழுந்திருந்த லேசான நில வொளியில்கூட அந்தப் பெண்ணின் சுந்தரவதனம் எத்தனை தெய்விகக் களையைப் பெற்றிருந்ததென்பதை எண்ணிப் பார்த்துக் கொண்டு அவளருகில் உட்கார்ந்திருந்த வீரபாண்டியன், அவள் முகத்தில் முறுவல் படர்ந்ததையும் இதழ்கள் லேசாக விரிந்ததையும் கண்டதும், அவள் ஏதோ இன்பக் கனவு காண்கிறாள் என்று தீர்மானித்துக் கொண்டான். அவள் இன்பக் கனவு காண்பது தனது நனவுக் கண்களுக்கு எத்தனை பெரிய விருந்தாக இருந்ததென்பதை உணர்ந்ததால் அவளைக் கூர்ந்து பார்க்கவே செய்தான். உறக்கத்திலும் அவளுடைய அழகு சிறிதும் குன்றாமல் உயர்ந்து கிடப்பதையும், அவள் மார்பு சீரான மூச்சின் காரணமாக எழுந்து தாழ்ந்ததால் அதிலும் ஏதோ ஓர் அடக்கமும் சீரும் இருந்ததையும், புரவியில் தாவி ஏறியதால் சற்றே கால்கள் உட்புறம் மடிந்துவிட்ட அவள் சேலை, அதே ரீதியில் அப்பொழுதும் இருந்ததால் தனது ஊகத்துக்கும் உன்மதத்துக்கும் அனாவசியமாக இடங்கொடுப்பதையும் கண்ட வீரபாண்டியன், ஊர் பேர் தெரியாத ஒரு பெண்ணை தன் உயிரை மீட்ட தங்கத்தை, தான் அப்படிப் பார்ப்பது சரியல்ல என்று நினைத்தான், இருந்தாலும் இயற்கை அவன் கண்களைத் திரும்பத் திரும்ப அவள் மீதே இழுத்து நிறுத்தியதன் காரணமாக, அவன் அவளை மேலும் உற்றுப் பார்க்கவே செய்தான். அந்தச் சமயத்தில் திடீரென செவ்விய அவள் இதழ்கள் திறந்து அந்தச் சொற்களை மிக லேசாக உதிர்த்தன. “வல்லாள மகராசன் ஹொய்சாளன், ஹும்…ஹும்” என்று ஏதோ இரண்டொரு வார்த்தைகள் அவள் இதழ்களிலிருந்து வெளிவந்தன.
“அப்படியா விஷயம்! பாண்டிய நாட்டை விழுங்க மாலிக்காபூருடன் இணைந்திருக்கும் ஹொய்சாள வல்லாளன் கையாளா இவள்?” என்று தன்னைத்தானே சற்று இரைந்து கேட்டுக் கொள்ளவும் செய்தான். அப்படியானால் இவளால் தனக்குப் பேராபத்துத்தானே யொழிய பேருதவி ஏதுமில்லை என்றும் முணுமுணுத்துக் கொண்டான்.
“இப்பொழுதே இவள் கை கால்களைக் கட்டிக் குதிரை மீது கிடத்தி அழைத்துச் சென்று விட்டாலென்ன?” என்றும் கேட்டுக் கொண்டான். உள்ளூர மனம் அலையும் – போது கைகள் சும்மா இருப்பதில்லை யாகையால் பக்கத்திலிருந்த சுள்ளியை எடுத்துக் கையால் உடைக்கவும் செய்தான்.
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அவள், அந்தச் சிறு சத்தத்திலும் துள்ளி எழுந்தாள்.
அப்படி எழுந்ததன் விளைவாகப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வீரபாண்டியன் மீது மோதவும் செய்தாள். வேறு சமயமாயிருந்தால் மிக இன்பத்தை அளிக்கவல்ல அந்த மோதல், வீரபாண்டியனிருந்த நிலையில் அவனுக்கு ஆத்திரத்தையே விளைவித்ததல்லாமல், சிறு சுள்ளி உடைந்த சத்தத்திலும் விழித்துக் கொள்ளக்கூடிய அவள் உறக்கத்தின் தன்மையை நினைத்ததால் அவன் மனத்தில் ஆத்திரத்துடன் ஆச்சரியமும் கலந்து கொண்டது. அதையெல்லாம் நொடிப்பொழுதில் கண்டு கொண்ட அந்தப் பெண் அவனை ஒரு கணம் உற்று நோக்கினாள். பிறகு மெள்ளப் புன்முறுவல் கொண்டாள்.
அவள் புன்முறுவலின் காரணம் புரியாததால் வீரபாண்டியன் வினவினான் சற்றுக் குரூரமாக, “எதற்குப் புன்முறுவல்?” என்று. அடுத்த விநாடி அவள் முகத்தில் கடுங்கோபம்
தாண்டவமாடியது. “இப்பொழுது திருப்தியா?” என்று வினவினாள் அவள்.
“இதில் திருப்தியடைய என்னவிருக்கிறது?” என்று கேட்டான் வீரபாண்டியன், சீற்றம் சிறிதும் தணியாத குரலில்.
அந்தப் பெண் அடுத்தபடி முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு, “இப்பொழுது?” என்று கேள்வியைத் தொடுத்தாள். அவள் தன்னைக் கேலி செய்கிறாள் என்பதை உணர்ந்து கொண்ட வீரபாண்டியன், “கேலிக்கு இது சமயமல்ல,” என்றான்,
“சரி; வேறு சமயத்தில் வைத்துக் கொள்வோம்” என்றாள் அவள் விஷமமாகச் சிரித்து.
“எந்தச் சமயத்திலும் வைத்துக் கொள்ள முடியாது,” என்ற வீரபாண்டியன், “பெண்ணே! என்னை ஏமாற்ற முயலாதே. உன் வேஷம் கலைந்து விட்டது.” என்றான்.
அவள் தன் உடலை ஒரு முறை நோக்கிக் கொண்டாள். அத்துடன், “ஆம் ஆம்.” என்றும் சொன்னாள்.
“என்ன, ஆம் ஆம்?”
“வேஷம் கலைந்து விட்டது. நானே கலைத்துக் கொண்டேன்.”
“புரிந்து கொண்டாயா?”
“நன்றாகப் புரிந்து கொண்டேன்.”
“என்ன புரிந்து கொண்டாய்?”
“முதலில் அராபிய வேஷம் போட்டிருந்தேன். பிறகு அரண்மனையில் அதை நானே கலைத்துக் கொண்டு இந்த நாட்டுப் பெண்ணானேன்.”
வீரபாண்டியன் அவள் கையொன்றை முரட்டுத்தனமாகப் பிடித்தான்.
“அதைச் சொல்லவில்லை நான்,” என்றும் சீறினான். அவள் அழகிய விழிகள் அவனை ஏறெடுத்துப் பார்த்தன, சிரித்தன.
“வேறெதைச் சொல்கிறீர்கள்?” என்று உதடுகளும் விரிந்து கேட்டன ஏளன ஒலியில்.
வீரபாண்டியன் முரட்டுத்தனமான பிடியைத், தளர்த்தாமலேயே, “இனி என்னிடம் மறைத்துப் பயனில்லை; உன் சாயம் வெளுத்து விட்டது. சற்று முன் நீ உறங்கிக் கொண்டிருந்தபோது…” என்று ஏதோ சொல்ல முயன்று முடியாமல் தத்தளித்தான்.
“நான் உறங்கிக் கொண்டிருந்தபோது?” என்று. அவள் கேள்வியைத் தொடர்ந்தாள், உரையாடலின் அந்தரங்கத்தை அறிய.
“நான் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்…” என்று வீரபாண்டியன் சட்டென்று பேச்சை நிறுத்தினான்.
அவள் மீண்டும் லேசாக நகைத்தாள்.
“சொல்லுங்கள். ஒரு பெண் படுத்திருந்தபோது பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தீர்கள். பாண்டியப் பண்பாடு இதிலிருந்து தெரிகிறது. சரி; மேலே சொல்லுங்கள்…” என்றாள் நகைப்பின் ஊடே.
அப்பொழுதுதான் தன் பேச்சின் தன்மையை உணர்ந்து கொண்ட வீரபாண்டியன் சிறிது திணறினான்.
“தவறான எண்ணத்துடன் பார்க்கவில்லை… பாண்டிய வம்சத்தில் பிறந்த யாரும் பண்பாட்டுக்குக் குறைவாக நடக்க மாட்டார்கள்” என்று சமாளிக்க முயன்றான்.
“ஆம்… ஆம்… தங்கள் தமையனார் தந்தையைக் கொலை செய்ததே பாண்டியர் பண்பாட்டின் சிகரம். அதைவிடப் பெரிய விஷயம் உறங்கும் பெண்ணைப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பார்ப்பது…” என்று இகழ்ச்சியுடன் கூறினாள் அவள். பேச்சு வேறு ஏதோ திசையில் போவதைக் கண்ட வீரபாண்டியன், “பெண்ணே! நீ எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி, ஆனால் பண்டாட்டுக்குக் குறைவாக இந்த வீரபாண்டியன் ஏதும் செய்யமாட்டான். ஆனால் நீ யார் என்பதை அறிந்த பிறகு உன்னைச் சிறைப் பிடிக்காமல் நான் இருந்தால், பாண்டிய வம்சத்துக்குப் பெரும் துரோகம் செய்தவனாவேன்,” என்று உணர்ச்சி ததும்பிய குரலில் சொன்னான்.
சிறிது நேரம் சிந்தித்தாள் அந்தப் பெண்; பிறகு கேட்டாள், “நான் யார்?” என்று.
“வல்லாளன் வேவுகாரி,” என்றான் வீரபாண்டியன் திடமான குரலில்.
“ஹொய்சாள மன்னன் வல்லாளனா?” அந்தப் பெண்ணின் குரலில் வியப்புத் தெரிந்தது.
“ஆம்.”
“மாலிக்காபூருடன் சேர்ந்து கொண்டிருக்கிறானே அந்த வல்லாளன்?”
“ஆம் ஆம்.”
இதைக் கேட்ட அவள் பெரிதாகவே நகைத்தாள்.
“பாண்டிய அரச குலத்தாருக்குப் பரஸ்பரம் பகை கொள்ளத் தெரியுமே தவிர மூளை கிடையாது,” என்று கூறினாள், அவள் நகைப்பின் ஊடே.
இதைக் கேட்டும் சினத்தைக் காட்டவில்லை வீரபாண்டியன்.
“அது எப்படித் தெரிகிறது?’ என்று மட்டும் வினவினான். இதைக் கேட்டதும் அந்தப் பெண் சிறிது.. சிந்தனையில் ஆழ்ந்தாள்.
“ஹொய்சாள மன்னன் எதற்காக மாலிக்காபூருடன் சேர்ந்து கொண்டிருக்கிறான்?” என்று கேட்டாள்.
“பாண்டியரை அழிக்க” என்றான் வீரபாண்டியன், அவள் எதற்காக அதைக் கேட்கிறாள் என்பதை உணராமல்.
“அப்படியானால் உங்களை நான் எதற்காகக் காப்பாற்ற வேண்டும் காயல் பட்டணத்தில்?” என்று வினவினாள் அவள்.
இதற்கு என்ன பதில் சொல்வதென்று புரியாதால் விழித்தான் வீரபாண்டியன். தனது அண்ணன் ஆட்களிடமிருந்து அவள் தன்னை மீட்க வேண்டிய அவசியமேயில்லை யென்பதையும், அவர்கள் வழியாக விட்டிருந்தால், ஒன்று தான் காயல்பட்டணத்தில் இறந்திருக்க வேண்டும் அல்லது மதுரைக்குச் சென்று மாண்டிருக்க வேண்டும் என்பதையும் சந்தேகமற உணர்ந்து கொண்ட வீரபாண்டியன், அவள் ஏதோ தூக்கத்தில் சொன்ன ஓரிரு வார்த்தைகளால் அவளைப் பற்றித் தவறாக ஊகித்து விட்டதைப் புரிந்து கொண்டான். இருப்பினும் அவள் வல்லாளன் பெயரை முறுவலுக்கிடையே உறக்கத்திலும் உச்சரிக்க வேண்டிய அவசியமென்னவென்பது அவனுக்குப் புரியவில்லை ஆகவே இந்த விஷயத்தில் ஊகத்தைவிட நேர் முறை விசாரணையே சிறந்ததென்று அவள் கையை விடுதலை செய்துவிட்டு, “பெண்ணே! நீ யார்?” என்று விசாரித்தான்.
அவள் நேர்முகமாகப் பதில் சொல்லவில்லை “பாண்டிய நாட்டவள்” என்று மட்டும் சொன்னாள், தலையைக் குனிந்த வண்ணம்.
“பெயர்?”
“அவசியம் சொல்ல வேண்டுமா?”
“ஆம்.”
“பெயரை மாற்றிச் சொன்னால்?”
“சொல்லமாட்டாய்.”
“மீண்டும் திடீரென நம்பிக்கை திரும்பிவிட்டதா என் மேல்?”
வீரபாண்டியன் இந்தக் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. “தவறாக நினைத்ததற்கு மன்னித்துவிடு. உனக்கு இஷ்டமிருந்தால் சொல்,” என்றான் வருத்தம் நிறைந்த குரலில்.
அவள் நீண்ட நேரம் மௌனம் சாதித்தாள்.
அவள் இதழ்கள் மீண்டும் ஒரு முறை அசைந்தன, இப்படியும் அப்படியும்.
“சரி. சொல்லி விடுகிறேன்,” என்றாள் கடைசியாக.
இளையபாண்டியன் காத்திருந்தான் அவள் பதிலுக்கு. அவள் அவனை ஏறெடுத்தும் பார்க்காமலே ஒரு பெயரை மெதுவாக உச்சரித்தாள். “நிலமங்கை” என்ற சொல் மிக நிதானமாக, சற்று வெட்கத்துடனும் குழப்பத்துடனும் உதிர்ந்தது அவள் வாயிலிருந்து.
வீரபாண்டியனின் இதயம் நின்று விடும் போலிருந்தது. உணர்ச்சிகள் உள்ளூரப் புரண்டெழுந்ததால் சற்றே திணறினான். அவளிடமிருந்து இரண்டடி தள்ளியும் உட்கார்ந்தான். “நிலமங்கையா! நீதானா அது?” என்றும் குழறினான்.
பதிலுக்கு அவள் தலையை மட்டும் அசைத்தாள். அவனை ஏறெடுத்து நோக்கவில்லை. ஆனால் வீரபாண்டியன் கண்கள் அவளை விழுங்கி விடுவன போல் பார்த்தன. அவன் உடலும் ஒரு முறை துடித்தது.
அத்தியாயம் 8 – பழைய கதை புதிய பொறுப்பு
சுள்ளி உடைந்த வேகத்தில் திடீரெனத் துள்ளியெழுந்த காரணத்தால், சேலை சற்றே கலைந்த நிலையில் குத்திட்டுத் தலை குனிந்து உட்கார்ந்திருந்த சமயத்திலும் மிக அழகாக அவள் தோன்றினாலும், அந்த அழகை ரசிக்கும் சித்தமில்லாததால் வீரபாண்டியன் அவளை சற்று நோக்கிக் கொண்டே இருந்தான், பல விநாடிகள் அவளும் நோக்கினாளில்லை. பெயரைச் சொல்வதற்கு முன்பிருந்த துணிவு எங்கோ பறந்து விட்டது. அந்தத் துணிவை வெற்றிகொள்ள விடக் கூடாதென்ற நினைப்பாலோ என்னவோ, இளவரசன் சிந்தனையும் அதைவிடத் துரிதமாகப் பறந்து கொண்டிருந்தது. அவள் பெயர் ஒரு கேள்விக்கு விடை கொடுத்தது. பல கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை. நிலமங்கையைத் தனக்கு மனையாளாகத் தனது தந்தை நிச்சயித்துப் பல ஆண்டுகள் ஓடிவிட்டாலும், ஒருமுறை கூட அவளை அவன் சந்தித்ததில்லை. என்ன காரணத்தாலோ இருவரையும் சந்திக்க விடாமலே வைத்திருந்தார் குலசேகரபாண்டியர். அவன் சிறுபிள்ளையாயிருந்த போது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி அது. அவன் அன்னை அவனுடைய பத்தாவது பிராயத்தில் சொன்னாள் ஒருமுறை, “வீரபாண்டியா! உனக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது,” என்று,
“எனக்கா!”
“ஆமாடா கண்ணே.”
“யாரம்மா அது!”
“நிலமங்கை!”
“நிலமங்கையா!”
“ஆம்.”
“அந்த நிலமங்கையும் உனக்குத்தான். உன் தந்தை ஆள்கின்றாரே இந்த நிலம், இந்த நிலமங்கையும் உனக்குத்தான். உன்னைத்தான் இளவரசராக்கப் போகிறார்.”
இது அவனது பத்தாவது வயதில், அவனுக்கும் அவன் தாய்க்கும் ஏற்பட்ட உரையாடல். அதன்படி பதினெட்டாவது வயதில் பட்டத்து இளவரசனாக, பாண்டிய நிலமங்கையை ஆள வேண்டியவனாக, குலசேகர பாண்டியனால் நியமிக்கப்பட்டான். ஆனால் இன்னொரு நிலமங்கையை, அவன் மனையாளப்போகிறவளை, அவன் பார்த்ததே கிடையாது. ஒருமுறை அந்தப் பெண் யார் என்று முதல் அமைச்சரையும் மற்றவர்களையும் மெள்ள விசாரித்தும் பதிலேதும் கிடைக்கவில்லை. முதலமைச்சர் ஒரு விஷயம் மட்டும் சொன்னார்: “வீரபாண்டியா! அதைப் பற்றி அதிகமாக விசாரிக்காதே. உன் தாயார் உன் தந்தைக்கு முறையான மனைவியல்லள்; ஆசை நாயகி, ஆகவே நீ இளவரசனாவதற்கே பெரும் எதிர்ப்பு இருக்கிறது. நிலமங்கை உனக்கு மனையாளாகப் போவதாகத் தெரிந்தால் அரசில் பெரும் குழப்பம் ஏற்படும்.”
இதற்கு அவனும், “என் தாயார் சரியான மனையாளில்லையென்றால் மன்னர் என்னை ஏன் இளவரசனாக்க வேண்டும்? பட்டத்துத் தேவியின் மகன் அண்ணனிருக்கின்றானே அவனைப் பிற்கால மன்னனாக நிர்ணயித்திருக்கலாமே?”
முதலமைச்சர் அதற்கும் பதில் சொன்னார்: “உனக்கிருக்கும் வீரம் உன் தமையனுக்கில்லை. நீ தான் இந்த நாட்டைக் காப்பாற்ற வல்லவன் என்று உன் தந்தை நினைக்கிறார். ஆகையால்தான் இந்த முடிவைச் செய்தார். ஆசை நாயகியின் மகன் மன்னனாக வருவதா என்று அரண்மனையில் பலர் குமுறுகிறார்கள். தவிர நிலமங்கை உன் மனைவியாகும் செய்தி தெரிந்தால் இன்னும் எதிர்ப்பு அதிகமாகும். ஆகவே தற்சமயம் எதையும் அதிகமாகக் கண்டு கொள்ளாதே.”
“அப்படியானால் நிலமங்கை மிக உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவளா?”
“ஆம்.”
“அவள் என்னை மணக்கச் சம்மதித்தாளா?”
“அவள் சம்மதத்தை யாரும் கேட்கவில்லை.”
இத்துடன் உரையாடலுக்கு முற்றுகை வைத்தார் முதலமைச்சர். இது பழைய கதை. கால ஓட்டத்தில் அதை மறந்துவிட்டாலும் அத்தனையும் அந்த நேரத்தில் அந்த அடர்ந்த தோப்பில் அவன் நினைவுக்கு வந்தது. ஆகவே சிறிது வாய்விட்டு நகைத்தான் வீரபாண்டியன்.
அந்த நகைப்பைக் கேட்டுத் தலையை நிமிர்த்திய நிலமங்கை, “ஏன் நகைக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
“விதியை நினைத்து நகைத்தேன்,” என்றான் வீரபாண்டியன்.
“விதியை நினைத்து நகைக்க என்ன இருக்கிறது?” என்று நிலமங்கை வினவினாள் மெல்லிய குரலில்.
“உனக்கும் எனக்கும்…” என்று ஆரம்பித்த வீரபாண்டியன் வாசகத்தை முடிக்க முடியாமல் திணறினான்.
“திருமணம் நிச்சயமாகிப் பல வருஷங்கள் ஆகி விட்டன.” என்று நிலமங்கை வாசகத்தை முடித்தாள்.
“அது உனக்குச் சம்மதமா?” என்று வினவினான் வீரபாண்டியன்.
“காலங் கடந்த கேள்வி.”
“இல்லை, நிச்சயம் செய்த திருமணங்களெல்லாம் நடைபெறுவதில்லை. உனக்கு இஷ்டமில்லாவிட்டால் இப்பொழுது கூட மாற்றிக் கொள்ளலாம்.”
“தந்தை செய்த ஏற்பாட்டையா?”
“ஆம்.”
“ஏன்?”
வீரபாண்டியன் சற்றே தயங்கினான். பிறகு. சொன்னான், “நீ உயர் குலத்தவள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்,” என்று. நிலமங்கை நன்றாகத் தலை நிமிர்ந்து அவன் முகத்தை ஏறிட்டு நோக்கினான்.
“அதனால்?” என்றும் ஒரு கேள்வியை வீசினாள் சர்வ சாதாரணமாக.
“மன்னன் ஆசை நாயகியின் மகனை மணக்க மறுக்கலாம். அந்த உரிமை உனக்கு உண்டு.” என்று சுட்டிக் காட்டினான் வீரபாண்டியன்.
நிலமங்கை மெல்ல நகைத்தாள்.
“இளவரசே! இந்தத் திருமணத்தைப் பற்றி எனக்குத் தெரியவே தெரியாது பத்து நாட்களுக்கு முன்புவரை. திடீரென அறிந்ததும் திகைத்தேன். ஆனால் அதை நான் தவிர்க்க முடியாது. அந்த உரிமை எனக்குக் கிடையாது. அதை நீங்கள் கூட எனக்கு அளிக்க முடியாது.” என்று நகைப்பைத் தொடர்ந்து விளக்கவும் செய்தாள்.
“ஏன் அளிக்க முடியாது? தந்தை இறந்து விட்டதால் நான் தான் அரசன்,” என்று சுட்டிக் காட்டினான் இளவரசன்.
“நீங்கள் அரசுக் கட்டில் ஏற இன்னும் நாளாகலாம். அப்படி ஏறினாலும் உங்கள் இஷ்டம் என்று எதுவும் இந்தத் திருமணம் சம்பந்தப்பட்ட வரையில் இருக்காது. நம்மிருவர் கதியையும் நிர்ணயிப்பவர் வேறு ஒருவர் இருக்கிறார். அவருக்கு இந்தத் திருமணம் இஷ்டம். ஆகவே நீங்கள் என்னைமணப்பதிலிருந்து தப்பமுடியாது.” என்று – பதில் கூறினாள் நிலமங்கை.
வீரபாண்டியன் முகத்தில் மீண்டும் சிந்தனை படர்ந்தது.
“அந்த மனிதர் யாரென்பதை நான் அறியலாமா?” என்று வினவினான் சில விநாடிகளுக்குப் பிறகு.
“நாளைக்கு அறியப் போகிறீர்கள்,” என்றாள் நிலமங்கை. “நாளைக்கா?”
“ஆம்.”
“நாளைவரை ஏன் காத்திருக்க வேண்டும்?”
“இப்பொழுது நான் சொல்லாத காரணத்தால்!”
“சொல்ல மாட்டாயா?”
“ஊஹூம்.”
“ஏன்?”
“சொல்ல அதிகாரமில்லை.”
இதற்குமேல் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வராதென்பதை அறிந்த வீரபாண்டியன் சினத்தின் வசப்பட்டான். அதன் விளைவாக அவள் கையைப் பலமாகப் பற்றினான்.
“நீ என் மனையாள் தானே?” என்றும் சீறினான்.
“இன்னும் மனையாளாகவில்லை. ஆகவே என் கையைப் பிடித்து அச்சுறுத்திப் பயனில்லை,” என்றாள் நிலமங்கை. “இப்பொழுது என்னிடம் தனித்து அகப்பட்டுக் கொண்டிருக்கிறாய்…”
“நானா!”
“ஆம்! தவிர இந்தத் தோப்பு அடர்ந்தது”
“அதனால்?”
“இங்கு எது நிகழ்ந்தாலும் யாரும் பார்க்க முடியாது.”
இளவரசன் சொற்கள் செல்லும் திசையை நிலமங்கை கவனிக்கவே செய்தாள். ஆகையால் அவனை நன்றாக ஏறெடுத்துப் பார்த்துச் சொன்னாள்,
“இந்தப் பைத்தியத்தை விடுங்கள்” என்று. அவள் குரலில் எச்சரிக்கை பலமாக ஒலித்தது.
இளவரசன் அவள் குரலிலிருந்த எச்சரிக்கையைக் கவனிக்கவே செய்தான்.
“எந்தப் பைத்தியத்தை?” என்றும் வினவினான்.
“என் தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு விடலாமென்ற பைத்தியத்தை!”
“பைத்தியமா அது?” “சந்தேகமென்ன?”
இதைக் கேட்டதும் இளவரசன் கை, அவள் கைமீது இறுகியது. அவள் பலவந்தமாக அவனை நோக்கி இழுக்கப்பட்டாள். அவள் சிரித்தாள் சற்றுப் பெரிதாக. அந்தச் சிரிப்பு முடிய அரை விநாடிகூட ஆகவில்லை. வீரபாண்டியன் திடீரென நிலத்தில் விழுந்தான் நாலடிகள் தள்ளி!
– தொடரும்…
– நிலமங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1977, வானதி பதிப்பகம், சென்னை.