ஓர் அரிசி
கதையாசிரியர்: கிருபானந்த வாரியார்
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 5,142
(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும் அடியாரை வழிபடுவது சிறந்தது. ஆண்டவனை வழிபடுவோர்க்கு ஒரு பலன். அடியாரை வழிபடுவோர்க்கு இரட்டைப் பலன். ஏன்? அடியார்கள் உள்ளக் கோயிலில் ஆண்டவன் உறைகின்றான். ஆதலின் அடியார் வழிபாடு உயர்ந்தது என்றுணர்க.
ஆண்டவனுக்குத் தந்த ஒன்று அடியார்க்குச் சேராது அடி யார்க்குத் தந்தது ஆண்டவனைச் சேரும். அஞ்சல் தலைமையகத்தில் இட்ட அஞ்சல் அஞ்சல் பெட்டிக்கு வராது; அஞ்சல் பெட்டியில் இட்ட அஞ்சல் தலைமை நிலையத்துக்குச் சேர்ந்துவிடும். அஞ்சல் தலைமை நிலையம் இறைவன்; அஞ்சல் பெட்டி அடியார்கள் என்றுணர்க.
“படமாடக் கோயில் பரமர்க்கொன் றியின்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயின்
படமாடக் கோயில் பரமர்க்கங் காமே”
என்பார் திருமூலர்.
ஆண்டவனுக்குச் செய்கிற வழிபாடு ஆராதனை எனப்படும். அடியார்க்குச் செய்கிற வழிபாடு சமாராதனை எனப்படும். சம் ஆராதனை – சமாராதனை, சம் – நன்றாக; ஆராதனை – வழிபாடு. நன்றாக வழிபட்டது சமாராதனை.
ஆதலால் காதலால் அடியார்க்குச் செய்யும் வழிபாடு மிகமிகச் சிறந்த பயனை நல்கும்.
ஒரு சமயம் நான் பெருந் தனவந்தர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் மிகவும் இனிமையாகப் பேசி மிகவும் உபசரித்தார். “ஐயா, உமக்கு இத்துணைப் பெருஞ் செல்வம் எவ்வாறு வந்தது?” என்று கேட்டேன். அத்தனவந்தர் செல்வ நலத்தால் சிறந்தவர் மட்டுமன்று; கல்வி நலத்தாலும் சிறந்தவர். உடனே இரு வெண்பாக்களினால் எனக்கு விடையிறுத்தார்.
கட்டத் துணியற்றுக் காந்துபசிக் கன்னமற்
றெட்டி மரமொத் திருந்தயான் – ஒட்ட
எறும்பிற்கு நொய்யரிசி யிட்டேன்; அதனால்
சிறிதுபொருள் ஈந்தான் சிவன்.
அப்பொருள்கொண் டீசன் அடியார்க் கன்னமிட்டேன்
ஒப்புவமை யில்லான் உளமுவந்தே – இப்பார்
அளகேசன் என்றே அதிசயிக்கச் செல்வம்
அளவிலா தீந்தான் அவன்.
“உடுக்கத் துணியும் உண்ணச் சோறும் இன்றி எட்டிமரம் போல் வாழ்ந்து கசந்து இருந்த நான், வேறு ஒரு நற்பணியும் செய்ய இயலாது திகைத்து, எறும்பு வளைக்கு நொய்யரிசி யிட்டு வந்தேன். அதனால் சிவபெருமான் சிறிது செல்வத்தை வழங்கியருளினார். சிவன் தந்த செல்வத்தைப் பாங்கியில் போடாமல் அப் பரமனுடைய அடியார்க்கு அன்னம் இட்டு வந்தேன். அதனால் அகம் மகிழ்ந்து அரனார் பேரன் என்று என்னை எல்லோரும் மதிக்குமாறு அளவிறந்த செல்வத்தை வழங்கியருளினார்”. இது அவர் கூறிய விடை.
ஒரு ரு கிராமத்தில் ஒரு கிழவி இருந்தாள். சூது வாது வஞ்சனை பொய் களவு முதலிய தீக்குணங்கள் அத்தனைக்கும் அவள் உறைவிடமாக இருந்தாள். தரும குணம் ஒரு சிறிதும் இல்லாத பொல்லாத கிழவி. அவள் வீட்டில் வாழ்கின்ற எறும்புகளுக்கு நித்திய ஏகாதசி. ஒன்றையும் சிந்தமாட்டாள். எறும்பின் வாயில் ஒரு நொய்யைப் பார்த்தால் உடனே ஓடி அதைப் பிடுங்கிப் பானையில் போட்டுக் கொள்வாள். அவள் வீட்டில் சாப்பிட்ட இலை வெளியில் விழுந்தால் சாப்பிடாத இலை மாதிரி சுத்தமாக விழும். அதில் ஒரு துளிப் பசைகூட இராது. நாய்கள் வந்து பார்த்து ஏமாந்து போகும். நாம் செய்கின்ற வேலைகள் யாவும் இந்தக் கிழவியே செய்துவிட்டாள் போலும் என்று பேசிக்கொள்ளும்.
பழைய சோற்றைப் பிசைந்து வடகம் போட்டுத் தின்பாள். கந்தல்களையெல்லாம் மடித்து மடித்துத் தலையணையாக்கிப் போட்டுக் கொள்வாள்: கோயிலுக்குப் போவாள். சுவாமி கும்பிடுவதற்கு அன்று; அங்கு யாராவது விட்டிருந்த பாதரட்சைகளைக் கவர்ந்து வரும் பொருட்டே. யாராவது பிச்சைக்காரர் அவளுடைய வீட்டுக்குச் சென்றால் சீறி விழுந்து கடிக்க வருவாள். அவர்கள் அப்படியே நடுங்கி. ஒடுங்கி ஓடிவிடுவார்கள்.
அவள் வாயில் மறந்தும் தெய்வத் திருநாமம் வராது. அவள் சிந்தையில் கருணைக்கு இடமே இல்லை. கருணைக் கிழங்காகத்தான் மாறிப் போயிற்று.
அவளை அந்த ஊரில் அனைவரும் வெறுத்து ஒறுத்தார்கள். ஒரு நாள் காலை. கிழவி நடையில் அரிசி தீட்டிக்கொண் டிருந்தாள். ஒரு சிறந்த சிவனடியார் வந்து,
“அரஹர சிவசிவ அம்பலவாணா பரம தயாபர வரத குணாளா” என்று பாடிக்கொண்டு நின்றார். “பாட்டி! ஒரு பிடி அரிசி போடு” என்றார்.
கிழவி, “ஏய்! உனக்கென்ன மமதை? எனக்கு என்ன வயது? எண்பதுதானே ஆயிற்று? பாட்டி என்கின்றாய். பச்சை வெட்டு மருந்து சாப்பிட்டுப் பல் போய்விட்டது. தேன் பட்டு மயிர் நரைத்துவிட்டது. இது என்ன தரும சத்திரமா? உனக்கென்ன கேடு? செக்குலக்கை மாதிரி இருக்கின்றாய். போ போ!” என்று விரட்டினாள்.
“பெரியம்மா, காதில் தங்கத்தால் செய்த பாம்புவடம் போட்டிருக்கின்றாயே! கழுத்து நிறையத் தங்கச் சங்கிலி. இவையெல் லாம் ஏது? சிவன் தந்ததுதானே? நான் பொன்னையும் பொருளையும் கேட்கவில்லையே! ஒரு பிடி அரிசிதானே யாசிக்கின்றேன்? அண்டாத் தொண்டையால், தகர டின் தட்டியது போல் கர்ஜித்துப் பேசுகின்றனையே!
பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லை; பிறந்துமண்மேல்
இறக்கும் பொழுதும் கொடுபோவ தில்லை இடைநடுவில்
குறிக்கும் இச் செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமருக் கென்சொல்லு வேன்கச்சி ஏகம்பனே.”
அவ்வளவுதான் கிழவிக்குப் பொங்கி எழுந்தது சீற்றம். ஆலகால விஷம்போல் கொதித்தாள். “பிச்சைக்காரப் பயலே! என் வீட்டிலே வந்து இந்தத் தரித்திரம் பிடித்த மரணத்தைக் குறிக்கின்ற பாட்டைப் பாடுகின்றாயே?” என்று வைது, அரிசி தீட்டுகின்ற உலக்கையால் பத்திரகாளி போல் அந்தச் சிவனடியாரை அடிக்க ஓங்கினாள்.
உலக்கையில் ஒட்டியிருந்த ஓர் அரிசி அவருடைய அட்சய பாத்திரத்தில் வீழ்ந்தது. அதனைக் கிழவி பார்க்கவில்லை. பார்த்திருந்தால் எல்லா அரிசியும் என்னுடையது என்று எடுத்துக் கொண்டிருப்பாள். அடியார் பிடித்தார் ஓட்டம்.
மற்ற வீடுகளுக்குச் சென்றார். சிறிது அரிசி கிடைத்தது.ஒரு மண்டபத்தில் அதைப் பொங்கி, தாம் வழிபடும் சிவலிங்கத்துக்கு நிவேதித்தார். பசியாறினார். சிவயோகத்தில் அமர்ந்தார். சிவஞானிகள் இன்றிருந்த ஊரில் நாளை இரார். அவர் தலயாத்திரைக்குச் சென்றுவிட்டார்.
நாளடைவில் கிழவி கண்ணை மூடிவிட்டாள். காலதூதர்கள் அவளைக் கட்டிப் பிடித்து யாதனா சரீரத்துடன் கொண்டுபோய் அறக் கடவுளுக்கு முன்னே நிறுத்தினார்கள்.
அறக்கடவுள் கடுகடுத்த முகத்துடன், “சித்திரகுப்தா, இவள் கணக்கை எடுத்துப் படி” என்று கட்டளையிட்டார்.
சித்திரகுப்தன் கிழவியின் கணக்கை எடுத்துப் படித்தான். “எல்லாம் பாவந்தான். புண்ணியமே இல்லை. எறும்பு வளையில் நெருப்பை இட்டாள். பெரியோரை நிந்தித்தாள். கோயில் உடைமைகளைக் கவர்ந்தாள். கண்ணில்லாதவர்களுக்குக் காலணா போட்டு நாலணா எடுத்துக்கொண்டாள். சிவராத்திரி சஷ்டி ஏகாதசி முதலிய விரத நாள்களில் கூடத் தலையணைக்குப் பஞ்சடைக்கின்ற மாதிரி வயிறு புடைக்கத் தின்றாள். பேசிய யாவும் பொய். ஒரு நாள் ஒரு மகானை உலக்கையால் இடிக்கச் சென்றாள். உலக்கையில் ஒட்டிய ஓர் அரிசி அவருடைய கரத்தில் இருந்த அட்சய பாத்திரத்தில் வீழ்ந்தது. அந்த ஓர் அரிசி சிவநிவேதனமாகி அச் சிவனடியார் திருவயிற்றில் சேர்ந்தது. இந்த ஒன்றுதான் இவள் வாழ்நாளில் செய்த புண்ணியம். இதுவும் அபுத்தி பூர்வமாகச் செய்தது” என்றான்.
அறக்கடவுள், “நல்வினை,அபுத்தி பூர்வமாகச் செய்தாலும் நன்மை பயக்கும். ‘தான் சிறிதே யாயிடினும் தக்கார்கைப் பட்டக்கால், வான் சிறிதாப் போர்த்து விடும்’. நெருப்பைத் தெரியாமல் மிதித்தாலும் சுடுந்தானே? ஆதலால் இந்த ஓர் அரிசிக்கு என்ன நலத்தை நுகர வேண்டும்? பார்த்துச் சொல்” என்றார்.
சித்திரகுப்தன், “அண்ணலே, அந்த ஓர் அரிசி அடியாரின் திருவுதரத்தில் வீழ்ந்தபடியால் திருக்கயிலாய மலையிற் சென்று சிவ பெருமானைத் தரிசிக்க வேண்டும்” என்றான்.
அறக்கடவுள், “புண்ணியம் கடுகளவு: பாவம் மலையளவு. சூசீகடாக நியாயப்படி புண்ணியத்தை நுகரட்டும். பிறகு பாவங்களை நுகரச் செய்யுங்கள். கிழவியின் பாவங்களுக்காக நரகில் இட்டு வாட்டி வருத்துங்கள். கிழவியின் வாயிலே தீயை வைத்துச் சுடுங்கள். கொதிக்கும் எண்ணெயில் இட்டுப் பொரியுங்கள்!” என்றார்.
நமனுடைய தமர்கள் கிழவியைப் பாசக் கயிற்றால் நன்றாகப் பிணித்துக்கொண்டு போய்த் திருக்கயிலாயத்தில் சிவ சந்நிதியில் நெடுந் தொலைவில் நிறுத்தினார்கள்.
“கிழவி. அதோ பார், சிவபெருமான்!”
பவளக் குன்று போன்று கோடி சந்திரப் பிரகாசமாய் வேத மந்திர பீடத்தில் வீற்றிருக்கும் சிவ மூர்த்தியையும், இடப் பாகத்தில் மரகதக் கொடிபோல் வீற்றிருக்கின்ற இமயவல்லி அம்மையையும். டையில் கனகச் சிறு குன்றுபோல் களிநடம் புரியும் சுந்தவேளையும் கண்டாள் கிழவி. அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சிந்தியது.
“அப்பா எமதூதர்களே, உங்களுக்கு ஒரு கோடி வணக்கங்கள். ஓர் அரிசிக்கு இத்துணைப் புண்ணியம் வரும் என்று பாவியாகிய எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அந்தோ! என் வீட்டில் குதிர் நிறைய நெல்லும் பல மூட்டைகள் அரிசியும் நெய்யும் பாலும் முந்திரிப் பருப்பும் பாதாம் பருப்பும் டப்பா டப்பாவாக இருந்தன. அத்தனையும் இப்போது எனக்கு உதவவில்லை. பெட்டி நிறையப் பணமும் வைத்திருந்தேன். வட்டிமேல் வட்டி வாங்கினேன். பெட்டி மேல் பெட்டி அடுக்கினேன். எல்லாம் அங்கேயே நின்றுவிட்டன. அடியாரிடம் சேர்ந்த ஓர் அரிசிதான் இங்கு உதவுகின்றது. இத்துணைப் புண்ணியம் வரும் என்று யாரும் எனக்கு விவரமாகச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் என் வீடு தேடி வந்த அடியார்க்கு இரட்டையிலையிட்டுப் பாலும் நெய்யும் அன்னமும் சொர்ணமும் அள்ளி வழங்கியிருப்பேன். சண்டாளியாகிய நான் கிள்ளிக்கூடத் தந்ததில்லை. வாழ்நாள் முழு வதும் வீழ்நாளாகக் கழித்தேனே! போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே! அப்பா; நீங்கள் நல்ல உத்தமர்கள். தேவருக்கும் மூவருக்கும் காணக் கிடைக்காத கண்ணுதற் கடவுளைக் கண்ணாரக் கண்டேன். ஆனந்தம் கொண்டேன். கடவுளைக் கண்டு கைகூப்பித் தொழவில்லை யானால் மேலும் பாவந்தானே? உங்களைத் தலையினால் வணங்குகின்றேன். சிறிது கட்டை அவிழ்த்து விடுங்கள். கைகூப்பிக் கும்பிடுகின்றேன். பிறகு என்னைக் கட்டிக்கொண்டு போய் எரிவாய் நரகில் இட்டு வருத்துங்கள்” என்று மிக மிக நடுங்கிய குரலுடன் இனிமையாகக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.
இரக்கமே அறியாத எமதூதர்களின் ‘உள்ளம் சிறிது உருகிற்று. குடலறுந்த குறுநரி எங்கே போகும்?’ என்று கருதிச் சிறிது கட்டை அவிழ்த்து விட்டார்கள்.
கிழவி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து திருக்கோயிலுக்குள் சென்று, கருணைக் கடலாகிய சிவபெருமான் திருவடியைச் சிக்கெனப் பிடித்துக் ‘கொண்டாள்.
“தேவதேவா! மஹாதேவா! தீன ரட்சகா! கருணைக் கடலே! ஏழை பங்காளா! அருட் பெருஞ்சோதீ! அப்பனே! சிறியேன் அறி யாமையால் வல்வினைகளைச் செய்து விட்டேன். அத்தனையும் பொறுத்து ஏழையைக் காத்தருள். காலதூதர்கள் இரும்புச் சம்மட்டியால் அடிப் பார்களாமே! கும்பீபாக நரகில் தள்ளிச் சித்திரவதை செய்வார் களாமே! தாண்டவம் புரியும் ஆண்டவனே! வேண்டியவர்களுக்கு அருளும் தயாநிதியே! என்னை விரட்டியடிக்காமல் காத்தருள். குழந்தைகள் செய்த குற்றங்களுக்கு அம்மையும் அப்பனும் தண்டிக் கலாம். தெருவில் போகும் பயில்வானை விட்டுத் தண்டிக்கமாட்டார் களே! எமனிடம் கொடுத்து என்னைத் தண்டிக்காதே!” என்று கூறி அழுதாள்; தொழுதாள்.
கருணாநிதியாகிய கண்ணுதற் பெருமான் அவள்மீது கருணை மழை பொழிந்தார். “அஞ்சேல்” என்று அபயம் அளித்தார்.
கிழவி சிவபெருமான் திருவடியின் அருகில் நிமிர்ந்து அமர்ந்தாள்.
இத்தனையும் கண்ட காலது தர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். “கிழவி, வெளியே வா!” என்று அழைத்தார்கள். கிழவி, “வர வர முடியாது, போங்கள்!” என்றாள்.
காலதூதர்கள், “எம்பெருமானே! கிழவியைத் துரத்தி அனுப்புங்கள். இவள் கொடிய பாவி. நரகில் தள்ளி இவளைத் தண்டிக்க வேண்டும்” என்றார்கள்.
சிவபெருமான். “காலது தர்களே, விண்ணளவு அடுக்கிய பஞ்சுப் பொதி நெருப்பினால் எரிந்து கரிந்து சாம்பரானாற்போல இவளுடைய பாவங்கள் யாவும் என்னைத் தீண்டியவுடனே நீறாகிவிட்டன. இவளை நாம் மன்னித்து அருள் புரிந்தோம். நீங்கள் உங்கள் உலகுக்குச் செல்லுங்கள்” என்று அருளிச் செய்தார்.
காலதூதர்கள், “ஐயனே, எங்கள் தலைவனுக்கு என்ன சொல்வது?’ என்றார்கள்.
சிவபெருமான். “மார்க்கண்டேயர் வரலாற்றை நினைவுபடுத்துங்கள்” என்றார்.
காலதூதர்கள் மறைந்து நமனுலகம் போய் நடுங்கி அறக் கடவுளுக்கு முன் நின்றார்கள்.
அறக்கடவுள், “எங்கே கிழவி?” என்று கேட்டார். அவர்கள் நிகழ்ந்ததைக் கூறினார்கள்.
அறக்கடவுள் இறைவனுடைய கருணைத் திறத்தையும், அடியார் குட்சியில் வீழ்ந்த ஓர் அரிசி செய்த விந்தையையும் நினைந்து அதிசயம். அடைந்தார்.
– அக்டோபர், 1966
– கலைமகள் பொன்விழாக் கதம்பம் (1932-1981), பொன்விழா வெளியீடு, முதல் பதிப்பு: ஏப்ரல் 1982, கலைமகள் காரியாலயம், சென்னை.