கெடா கறி





மயிர்கள் கருகும் வாசம். தலைமயிர் தீப்பிடித்துக் கொண்டதோ.
தலையில் போட்டிருக்கும் கைக்குட்டையும் கருகி சாம்பலாகியிருக்கும். வேகாத வெயில். தலையை வேகவைத்து விட்டதோ.
கெடா கறிக்கான அலைச்சல். கெடா தலை கருகுவது போல் வாசனை மூக்கைத் துளைத்தது அவனுக்கு.
“அடுச்சாச்சா.. அடிக்கனுமா ”
”என்ன “
”கட்டிங் அடிச்சாச்சா. அடிக்கனுமா “
சுந்தரனை உலுக்கிவிட்டது அக்கேள்வி. சாதாரண விசயம்தான். ஆனால் கேள்வியாகக் கேட்கப்படும் போது புதிதாகி விட்டது. அவன் உடம்பை உலுக்கி விட்டக் கேள்விதான்.
புரட்டாசி மாதம் சுந்தரனை உலுக்கிவிட்டது. ஒரு மாதமாய் அசைவ உணவு உண்ணவில்லை. வீட்டில் வாரத்திற்கு இரண்டு மூன்று முறையாவது அசைவ உணவு இருக்கும். அதுவும் நண்டும் மீனும் வாங்கி வந்து விட்டால் நல்ல புளி போட்டு இரண்டு தினங்களுக்கு இருக்கும். பிறகு மட்டன், சிக்கன் ஒரு நாள் இருக்கும்
இப்படிச் சாப்பிட்டுப் பழகிய வழக்கமான மாதங்களில், புரட்டாசி மாதம் என்பது எதுவுமே சாப்பிட முடியாமல் செய்துவிட்டது முன்பெல்லாம் புரட்டாசி மாதங்களில் கட்டுப்பாடு காரணமாக வெளியே சாப்பிட்டுக்கோ என்று மனைவி சொல்லிக் கொள்வாள் அப்படித்தான் அவனும் வெளியே சென்று எதையாவது சாப்பிட்டு திருப்திப்படுத்திக் கொள்வான். ஆனால் ஒரு முறை காடை என்று சாப்பிட்டு போக அது வயிற்றைக் கழுவி விட்டது. இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாகிவிட்டது அதனால் அசைவ உணவை வெளியில் சாப்பிடுவதை அவன் தவிர்த்து இருந்தான். பிரியப்பட்டது ஏடாகூடமாய் ஏதாவது ஆகி விடக்கூடாது என்று அவனுக்கு பயம். அவனுடைய பயத்தில் செலவு என்பது மிக முக்கியம்.. கொஞ்சம் சிக்கனக்காரன்தான். அதனால் இது எல்லாம் வேண்டாம் என்று அவனும் தன் விருப்பத்தை மனைவியுடன் சேர்ந்து பயந்து எதிர் கொண்டிருந்தான்.
புரட்டாசி மாதம் முடிகிற போது தான் அந்த விபத்து நடந்தது இரண்டு வீதி தள்ளி இருக்கும் அவன் சித்தப்பா ஒருவர் இறந்து விட்டார். அவர் இறந்த நேரம் சரியில்லை அடைப்பு என்று சொல்லிவிட்டார்கள். அடைப்பு மூன்று மாதத்திற்கு இருக்குமாம். அதற்குப் பின்னால் சாமி கும்பிட்டு விட்டு அசைவ உணவுக்குப் போக வேண்டும் என்றார்கள். வேறு வழி இல்லை.. இன்னும் மூன்று மாதத்திற்கு காத்திருக்க வேண்டுமா என்றிருந்தது ஆனாலும் நல்ல அசைவ உணவு கிடைத்தால் நல்ல ஹோட்டலாக இருந்தால் சாப்பிட்டு விடலாம் என்று தான் அவனுடைய தீர்மானம்., மனைவியும் ஒத்துவந்தாள் அது சரியென்றாள்.
அப்படித்தான் அந்த்த் தீர்மானத்தை மனதை கொண்டு வந்து பார்த்துக் கொண்டே இருந்தான். நல்ல ஓட்டல் எதுவும் அமையவில்லை. இருப்பவை அதிக செலவு வைக்கக் கூடியவை.
அப்போதுதான் பேக்கரி மோகன் குமார் மதுரைக்கு போகலாம் என்று அழைத்தார். ஒரு பேருந்து ஏற்பாடு செய்திருந்தார் ஆயிரம் ஒரு ஆளுக்கு என்றார். எதற்கு என்றேன் கோவிலுக்கு போகும் செலவு என்றார்.
மதுரை என்றால் எனக்கு ஞாபகம் வருபவர் மீனாட்சி தான். பலமுறை போயாச்சு இப்போது தேவையில்லை என்றேன்..
அது இல்ல, பாண்டி கோயில் போகலாம்.
பாண்டி கோயிலா அது என்ன புதுசா இருக்கு.
பாண்டி முனீஸ்வரன் சக்தி வாய்ந்தவர் ஏக கூட்டம் வரும் தினசரி 100, 200 கிடா வெட்டு.. நடக்கும். வாங்க ..யார் வேணா போய் சாப்பிட்டுக்கலாம். அசைவ உணவு நல்ல விருந்து சாமி கும்பிடலாம்.
நான் அவர்கூட ஒத்துக் கொள்ளவில்லை பலமுறை மதுரைக்கு சென்று இருந்தாலும் கூட பாண்டி கோயிலைப் பற்றி அவன் கேள்விப்படவில்லை. ஆனால் அவர் அவருடைய தெருவில் உள்ளவர்களுடன் சென்று விட்டு வந்து முனீஸ்வரன் தரிசனம் அபாரம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய பிரசங்கத்தை தவிர்க்க முடியாது. அவருடைய பேக்கரியில் ரசாயன பொருள்கள் கலக்காமல் இனிப்புகள் செய்வார் அதை வாங்குவதற்காக அவ்வப்போது அவன் அங்கு செல்வான் அதனால் மோகன் குமாரின் பேச்சை, பிரசங்கத்தை எந்த வகையிலும் தவிர்க்க முடியாது.
ஒரு மாதம் கழிந்திருக்கும் அப்போதுதான் புரட்டாசி முடிந்திருந்தது. அப்புறம் சித்தப்பா மரணமும் சாம்பலாகியிருந்தது..
மதுரைக்குப் போகும் வேறு வேலை அமைந்துவிட்டது சனிக்கிழமை அந்த வேலை.. பாண்டி கோவில் போவதற்காக ஞாயிற்றுக்கிழமையும் ஒதுக்கிவிட்டான் நூறு இருநூறு கிடாவெட்டுகள் நடக்க ஒரு கை அசைவசோறு கிடைக்காமல் போகுமா என்பது தான் அவருடைய எண்ணம். ஆனால் பல சமயங்களில் அது மாதிரியும் நடந்திருக்கிறது.
சின்னதாராபுரத்தில் கண்மணி வீட்டு விசேஷத்திற்கு போயிருந்தான் அமராவதி ஆற்றின் ஓரத்தில் இருக்கும் கோவிலில் வைத்து அவளின் பையன்களுக்கு மொட்டை அடித்தார்கள் காது குத்தினார்கள்.. பக்கம் இருந்தவர்கள் கெடாவெட்டி பொங்கல் வைத்து விருந்து போட்டார்கள் கண்மணி அசைவிருந்து இல்லை என்றாள். சரி இவ்வளவு பேர் அசைவ உணவு சமைக்கிறார்கள். யாராவது கூப்பிட மாட்டார்களா அல்லது எந்த பந்தியிலாவது போய் உட்கார்ந்து கொண்டால் யார் என்ன என்று கேட்கவா போகிறார்கள்என்று நினைத்தான்.
ஆனால் அதெல்லாம் நடக்கவில்லை. யாரும் கூப்பிடவில்லை அவனும் எந்த பந்தியிலும் போய் உட்காரவில்லை. பல பந்திகள் நடந்து கொண்டுதான் இருந்தன அதுவே மனதில் வந்து தொண்டைக்குழிக்குள் நின்று கொண்டிருந்தது
பாண்டி கோவிலுக்கு போக மாட்டுத்தாவணியில் இருந்து இலவசப் பேருந்துகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது என்றார் மோகன்குமார். அல்லது ஆட்டோவுக்கு 20 ரூபாய் போதும் .ஷேர் ஆட்டோவில் போய்விடலாம் என்று சொல்லி இருந்தார்.
அவன் மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திற்க்குப் போனபோது அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் அவனை தரையில் கிடைக்கும் எச்சில் இலையைப் பார்ப்பது போல பார்த்தார்கள்.. அப்படி எல்லாம் ஆட்டோ போகாது அங்கெல்லாம் பஸ் போகாது என்றார்கள். பஸ் எங்கிருந்து போகும் என்று கேட்டபோது வெகு தூரத்தை காட்டினார்கள் அவனுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இரண்டு மூன்று பூக்கள் விற்கும் பூக்காரிகளிம் கேட்டான் அவர்கள் அருப்புக்கோட்டை பஸ் போகும் என்றார்கள்.. அது பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்தது. அந்த இடத்தை தேடி போனான். புறப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பேருந்து அவன் கவனத்திற்கு வந்தது.. அங்கிருந்த காக்கி சட்டைக்காரரிடம் போய் பாண்டி கோவில் போக வேண்டும் என்றான் இந்த வண்டி போகும் என்றார் அவர். ஆனால் வண்டியில் போகும் இடம், நிறுத்துமிடம் என்ற விபரங்களில் இடங்களில் பாண்டி கோவில் இல்லை. ஆனாலும் அவர் காக்கி சட்டை போட்டவர் அதிகாரப்பூர்வமாக தான் சொல்கிறார் என்பதாய் யூகித்துக் கொண்டு அவனும் ஏறி உட்கார்ந்தான்.
அந்த நிறுத்தத்தில் இறங்கிய போது கோவிலுக்கு போய் சேர முடியுமா என்ற வகையில் கூட்டம் அபரீமிதமாக இருந்தது அந்த இடத்திற்கு முன்பே ஒரு கிலோமீட்டர் பேருந்துகள், வாகனங்கள் அணிவகுத்து சாலையின் இரு பக்கங்களிலும் நின்றன பெரிய கோயிலாக தான் இருக்கும் பெரிய விசேஷமாகத்தான் இருக்கும் என்பதை உறுதி செய்து கொண்டான்.
அவன் நுழைந்த அந்த மண்டபத்தில் அப்போது ஒரு பெரிய விருந்து நடந்து கொண்டிருந்தது. விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறவர்கள் பக்கம் போன போது இலைகளில் நான்கு விதமாக அசை உணவுகளும் தென்பட்டன.. நல்ல விருந்துதான் என்று நினைத்தான். ஆனால் யார் போடுகிறார்கள்.,. என்ன போடுகிறார்கள் என்று தெரியவில்லை. வலது பக்கத்தில் ஒரு மேசையில் உட்கார்ந்து இருந்தவர் பெரிய நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார் பணத்தை வாங்கி போட்டுக் கொண்டிருந்தார் அது அன்பளிப்பாக இருக்கும் என்று நினைத்தான். .அப்படித்தான் மெல்ல தலை நீட்டி பார்த்தபோது அந்த நோட்டில் 501, 1000, 1051 என்று நன்கொடை எண்கள் இருந்தன நூறு இருநூறு என்று எந்த நன்கொடையும் இல்லை. தோ விசேஷம் என்று மனதில் கொண்டான்.
கோயிலுக்கு போனால் நிச்சயம் ஏதாவது வழி கிடைக்கும்.. சாப்பிடத்தான்.. ஏதாவது அசைவ வழி கிடைக்கும்.. கோயில் எங்கே இருக்கிறது என்று ஒரு கிழவியிடம் கேட்டான். அந்த கிழவி வாயில் இருந்த பற்களை எல்லாம் இழந்து வெறும் சொற்களை மட்டும் காற்றாய் தருபவளாக இருந்தாள். அவள் கையை நீட்டி அடுத்த வீதியில் இருக்கிறது என்றாள்.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து வெயிலில் இங்கே வருவதற்கு சிரமப்பட வேண்டியது அதிகம்தான் . இன்னொரு தெருவை கடந்து போக வேண்டுமா என்பதில் அயற்சி வந்து விட்டது வெளியே வந்து குறுக்காக தென்படும் ஒரு மண்பாதையைப் பார்த்தான் அங்கு விறகு கட்டைகள் எரிந்து கொண்டிருந்தன தீயில் காய்ந்து கொண்டிருந்த பாத்திரங்கள் சமைக்க தயாராக இருந்த அசைவ உணவு வகைகள் என்றெல்லாம் அவன் கண்ணில் பட்டன.. சாக்கு முதல் பிளாஸ்டிக் தட்டிகள் வரை தரையில் கிடக்க அவற்றில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டும் நிழல் தேடியும் பலர் இருந்தார்கள்.
சட்டெனக் கடந்து போன போது அந்த பாண்டி கோயில் குறுக்காக வந்துவிட்டது அவனுக்கு அதிர்ஷ்டமாகத் தான் தோன்றியது
வெயிலில் அலைந்து திரிய வேண்டியதில்லை. அவனுக்கு முன் இருந்த கூட்டம் எங்கு போகிறது என்று தெரியவில்லை எல்லோர் கைகளிலும் தட்டுகள். தட்டுகளில் பெரிய பெரிய மாலைகள். அந்த மாலைகள் விற்கும் பூக்கடைகள் ஏராளமாக கண்ணில் பட்டன. வழக்கமான தேர்த்திருவிழாவுக்காக இருக்கும் கடைகள் அங்கே இருந்தன. அந்தக் கூட்டம் எங்கே சென்று முடிகிறது என்று பார்ப்பதற்காக அவன் புழுதி பறக்கும் அந்த பாதையில் நடந்து கொண்டே இருந்தான்.
கும்பல் போய் சேரும் இடத்தில் ஒரு முறையான வரிசை வந்து விட்டது அந்த வரிசை பாம்பு போல் பல விதங்களில் வளைந்து போனது .எங்கேயாவது போய் கூட்டிச் செல்லும்.
இறுதியில் உள்ள கறபகிரகம்தான் பாண்டி முனீஸ்வரனின் ஸ்தலமாக இருக்கக்கூடும் என்று நினைத்தான்.
ஆனால் போகிறவர்கள் செருப்புகளை தாறுமாறாக விட்டுப் போயிருந்தார்கள். இந்த செருப்புகளை வந்து மறுபடியும் தேர்வு செய்ய முடியுமா. கொஞ்ச தூரத்தில் அவனை தடுத்து நிறுத்திய வயதானவர் உனக்கெல்லாம் அறிவு இருக்கா என்று கேட்டார். அவன் புரிந்து கொண்டான். .செருப்பைப்போட்டு அவன் கோயிலுக்குள் வந்து விட்டதை பார்த்தவர் சத்தம் போடுகிறார் என்று தெரிந்தது.. வேறு வழியில்லாமல் பின்னோக்கி வந்து கொஞ்சம் தூரம் நடந்து போனான் செருப்பை பாதுகாக்க வேண்டும். 699 ரூபாய் செருப்பு. அதைப் பாதுகாக்க ஏதாவது இடம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும் அந்த இடத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
10, 15 பேர் தரையில் உட்கார்ந்து கொண்டு எதையோ வெட்டுகிற பாவனையில் இருந்தார்கள் அருகில் சென்று பார்த்த போது அவர்கள் கோழிகளையும் ஆடுகளையும் வெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஆட்டுத்தலைகளை கருக்கிக் கொண்டிருந்தார்கள் சிலர்.
ஆட்டின் தலை கருகிற வாசம் எங்குமாக இருந்தது கருத்தத் துகள்கள் உட்கார்ந்திருந்தவர்களின் தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்தன. ஆட்டுக் கழிவுகளின் மத்தியில் அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள்.
அப்பா வீட்டில் தலைக்கறி செய்கிற போது ஞாபகமாய் அடுப்பின் பக்கம் போய் உட்கார்ந்து தீயில் கருக்குவார்.. .கத்தியால் சுத்தம் செய்வார். இங்கே அடுப்பு பூந்துருத்தியாக இருந்தது. ஒருவர் சக்கரத்தை சுற்ற பூந்துருத்தி உலை காற்று தீயை வெளி கொட்டிக் கொண்டுள்ளது.. அதை எடுத்து சிலர் கழுவிக்கொண்டிருந்தன. சீக்கிரம் ஆட்டுத்தலைகள் கருகி தூரம் போய் விழுந்தன. அவற்றை சுரண்டி இன்னொருவர் சுத்தம் செய்தார்.. இன்னொரு புறத்தில் ஆட்டின் பாகங்கள் சில துண்டுகளாக ஆக்கப்பட்டுக் கொண்டிருந்தன. முழுக்கோழிகள் தோல்களை இழந்து நிர்வாணமாகிக் கொண்டிருந்தன எல்லோரும் கழிவுகளுக்கு மத்தியில் தான் இருப்பதாக தோன்றியது.
இப்போதெல்லாம் இந்த கோழி கழிவுகளை வாங்கி தின்ன வடநாட்டுக்காரர்கள் வந்து விட்டார்கள் கோழி கழிவுகளை எடுத்து சுத்தம் செய்து மற்றும் குடல்களை சுத்தம் செய்து தனி சமையல் பாவமாக அவர்கள் ஆக்க பழகி இருந்தார்கள்.
கோழிகளின் கழிவுகளை சிக்கனம் கருதி வடமாநிலத் தொழிலாளர்கள் ஊரில் வாங்குவதைக் கவனித்திருக்கிறான். அப்படி இந்த ஊரில் கூட வடநாட்டு தொழிலாளர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு இது உணவாகக் காத்திருப்பதாக நினைத்தான். அவர்கள் இந்த ஊர்களிலும் நிறைய இருக்கிறார்கள்.
இங்கே கிடா வெட்ட, சமையல் செய்ய இடம் வாடகைக்கு தரப்படும் என்ற பலகை வெளிச்சம் போட்டு காட்டியபடி இருந்தது. அதில் இரண்டு மூன்று எண்கள் இருந்தன.. அவன் அந்த எண்களை கைபேசியால் படம்பிடித்தான் அப்போது உள்ளே இருந்து வந்தவர் எதுக்கு படம் பிடிக்கிறாய் என்றார் நம்பர் வேண்டி இருந்தது என்றான். எந்த ஊரு.. கோயம்புத்தூர் பக்கம். என்னன்னு பார்க்க வந்தேன்
“பாக்குறீங்க என்ன இருக்கு பாக்க “
“இல்ல கடா வெட்டணும் அதை பார்க்க வந்தேன் அதான் பாத்துட்டு போயிட்டு ஊர்ல பெரியவங்க கிட்ட சொல்லணும்”
“அப்படியா சரிங்க “
“இங்க கிடா வெட்டி சமையல் பண்றதுக்கு இடம் கிடைக்குதா”
“அதுக்குத்தா நான் இருக்கேன் சமையல் பண்ணிட்டு இருக்காங்க பாருங்க. அந்த இடத்துக்கு 2000 ரூபாய் வாடகை காலையிலிருந்து சாயங்காலம் வரை வச்சுக்கலாம். கோழி வெட்டலாம். அறுக்கலாம். ஆடு வெட்டலாம் சமையல் பண்ணலாம் சாப்பிடலாம். வசதி இருக்கு . சீட்டு ஆடக் கூடாது.. எவ்வளவு பேர் வருவாங்க“
“ரெண்டு பஸ் அளவு. சமையல் பண்ண ஆள் கிடைப்பாங்களா”
”வழக்கமா அஞ்சு பேர் வருவாங்க 12,000 ரூபா. கெடா கிளின் பண்ண எட்டு நூறு ரூபா . எப்போ வருவீங்க “
“ஊருக்கு போய் பெரியவங்க கிட்ட கேட்டு தான் சொல்லுவேன்: ”
“சரி உட்காருங்க எங்க நம்பரை எடுத்துக் கொண்டு போங்க ”அவனின் எண்ணை எழுதினான் . அவன் வருகிறபோது வாங்கிய தனியார் பேருந்தின் பயணச்சீட்டு அதற்கு பயன் உள்ளதாக இருந்தது. அதில் 10 எண்கள் வருகிறதா என்று அந்த நிலத்துக்காரர் எண்ணி எண்ணிப் பார்த்தார்.
“2000 ரூபாய் வாடகை .ஒரு 500 ரூபாய் குறைக்கலாம் சமையல் ஆட்களுக்கு 12,000 ரூபாய். அதிலெ 1000 குறைக்கலாம் அவ்வளவுதான் பண்ண முடியும் வேற ஒன்னும் பண்ண முடியாது “
“செலவு பெருசா இருக்கு இல்ல”
“ஆமா நல்ல காரியம் பண்றது எல்லாம் செலவு கணக்குலெ வராது செலவு பண்ணி தான் ஆகணும் கெடா வெட்டி பொங்க வைத்து நாலு
பேருக்கு சமைத்து போட்டா அதுல வரும் புண்ணியத்துக்கு ஈடு எங்க இருக்கு. அதுவும் அந்த முனீஸ்வரன் அருளாலே எல்லா கஷ்டமும் தீர்ந்து போயிடாதா”
“ஆனா செலவு தான் அதிகமா இருக்கு. சமையல் பாத்திரங்கள் ”
“அது அந்த 12000 ரூபாய்லே வந்துரும் உங்களுக்கு வேண்டிய சமையல் பாத்திரங்களை நீங்க வாங்கிக்கலாம்”
அவன் சுற்றிலும் பார்த்தான் பல குழுக்கள் சமையல் செய்து கொண்டிருந்தார்கள். சில பேர் பலவகையான பழைய பிளக்ஸ் போஸ்டர்களின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
“சீட்டாடலாமா “
“அதெல்லாம் பண்ண முடியாது தண்ணி அடிக்கிறது இதெல்லாம் முடியாது”
“எங்க ஆளுங்க தண்ணி கூட அடிக்காம இருப்பாங்களா”
“அது எங்காவது போய் மறைவா பண்ணிட்டு வந்துட வேண்டியது தான்.. பொதுவான இடத்துல பண்ணக் கூடாது எப்ப கெடா வெட்டு வக்கிறீங்க சொல்லுங்க “
“நான் ஊருக்கு போயி மத்தவங்க கிட்ட பேசிட்டு சொல்றன்”
“எப்ப வருவீங்க எத்தனை பேர் “
“ஒரு பஸ், ரெண்டு பஸ்ஸோ. எவ்வளவு ஆள் சேர்ராங்களோ அதைப் பொருத்து .. சரி இங்க எல்லாம் வந்து பொதுவான சமையல் இல்லையா.. பொதுவா சமைக்கிறங்க எடத்திலெ சாப்பிட வசதி இருக்கா”
“கோவிலில் அன்னதானம் போடுவாங்க ஒரு அம்பது பேருக்கு டோக்கன் கொடுப்பாங்க . அவ்வளவுதான் ஐம்பது பேருக்கு முடிஞ்சா அவ்வளவுதா “
பத்து நூறு கிடாய் வெட்டி சுற்றிலும் சமைக்கிறார்கள்
கோவிலில் அன்னதானம் என்றால் அதுவும் அசைவ உணவாகத் தான் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது அந்த அன்னதான உணவு நிச்சயம் ருசியாகத்தான் இருக்க வேண்டும் ஆகவே இன்றைக்கு அசைவ உணவை ஒரு பிடி பிடித்து புரட்டாசி மாதம் விட்ட ருசியை ஐப்பசியில் தொடரலாம் என்று நினைத்தான்.
“அந்த அன்னதானத்துக்கு எல்லாம் எப்படி போலாம்”
”கோவிலுக்குள்ள போனீங்கன்னா இடது புறத்திலெ இருக்கு கடைசியில்”
“அன்னதானத்துக்கு தான் வந்தீங்களா ”
”இல்ல தெரிஞ்சிக்கலாம்னு. இங்க போன 100, 200 கெடா வெட்டுவாங்க.நீங்க வேணும் சாப்பிடலாம் யார் வேணாலும் சாப்பிடலாம்ன்னு சொன்னாங்க . அதுதா “
“போய் பாருங்க “
அவனுக்கு செருப்பு ஒரு பெரிய தடையாக இருந்தது இதை எங்கே விட்டுவிட்டு செல்வது என்பது தெரியவில்லை. எல்லா இடங்களிலும் செருப்புகள் குவிந்திருந்தன எண்ணும்படி அவன் கண்களில்பட்டது.. இந்த செருப்புகளை எல்லாம் தாண்டி அவன் செருப்பை பாதுகாப்பது கஷ்டமான வேலை.699 ரூபாய்க்கு வாங்கியது.
இடது புறம் சென்ற போது கோயிலின் இன்னொரு வாசல் வந்து விட்டது செருப்பை பாதுகாக்க வேண்டும் என்பதால் அவன் செருப்புடனே நடந்தான் எங்கு பார்த்தாலும் செருப்புகள் அவற்றுள் தன் செருப்பை மறுபடியும் தேடுவது சிரமமாகும் என்பதை மனதில் கொண்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.அதனால் காலில் இருப்பதே பாதுகாப்பு என்று நினைத்தான்.
அறுக்கப்படுவதற்காக கட்டப்பட்ட கோழிகள் கரகரப்புச் சப்தத்துடன் விழிகள் வெறிக்க கால்களை உதறியபடி இருந்தன. கயிறுகள் கால்களை நகர முடியாமல் செய்தன. பல கம்பிக் கூட்டுக்குள்ளும் இருந்தன. எங்கு பார்த்தாலும் கழிவுகள் இருந்து கொண்டே இருந்தன.மாமிச கழிவுகளை மிதிக்காமல் செல்வது பெரிய சாசகம் என்பது போல் அவன் நடந்தான்
கிணறுகளும் அதனடியில் சமையல் பாத்திரங்களும் தனித்தனியாக தென்பட்டன. தனியாக இல்லாதபடி மனிதக்கூட்டம் வேறு திசையை நோக்கிப் போய்க் கொண்டேயிருந்தது.. எங்கு போய் முடியும் என்பது தெரியவில்லை. ஆனாலும் அவன் அந்த எல்லையை ஜாக்கிரையாகக் கடந்து கொண்டிருந்தான் அப்போதுதான் அன்னதானம் மண்டபம் என்று தென்பட்டது சரியான இடத்துக்கு தான் வந்து விட்டோம் என்று நினைத்தான் அன்னதான மண்டபத்திற்கு முன்னால் பத்து பதினைந்து பேர் நின்றிருந்தார்கள். பெரிய கூட்டம் இல்லை ஆகவே வரிசையில் நிற்பது பெரியதாய் சிரமமாக இருக்காது என்ன நினைத்தான்.. தூரமிருந்து பெண்களின் வீரிடல் இருந்து கொண்டேயிருந்தது.
அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த ஒரு மணி என்பது இன்னும் சில நிமிடங்களில் வந்து விடும் அதற்குள் ஆசுவாசமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று அவன் நினைத்தான்.
மதியம் ஒரு மணி சீக்கிரம் வந்து விட்டது. டோக்கன் பெற்றிருந்த சில பேர் முன்பாக சென்றார்கள் அவன் முறை வந்தபோது அந்த அமர்வு முடிந்து விட்டது என்றார்கள்
“அவ்வளவுதானா”
“இல்ல இன்னொரு 50 டோக்கன் கொடுப்போம். இன்னும் அரை மணி நேரம் காத்திருக வேண்டும்”
ஆனால் அதற்குள்ளாகவே இன்னொருவர் வந்து டோக்கன் கொடுத்து இங்கு எல்லாம் சாப்பிட வாங்க என்றார்.
ஒரு நல்ல அசைவ உணவுக்காக அவன் நின்று கொண்டிருந்தான்
அப்போதுதான் முனீஸ்வரன் ஸ்தலத்திற்கு செல்லும் வரிசையை முழுமையாகப் பார்த்தான். பெண்கள் கைகளில் தட்டுகளும் பூஜை சாமான்களும் இருந்தன. ஏதாவது ஒரு கூச்சல் இருந்து கொண்டே இருந்தது அவையெல்லாம் பெரும்பாலும் பெண்களின் கூச்சலாக இருந்தன. சாமி வந்துவிட்டது ஆடுகிறார்கள். இந்தக் கூச்சலை தவிர்த்து விட்டு அவன் தலை குனிந்து கொண்டாலும் அந்த கூச்சல் தொடர்ந்து கொண்டே இருந்தது .அந்த கூச்சல் ஒருவருக்கான கூச்சல் அல்ல .பலருக்கான கூச்சல். ஒருவர் சாமி வந்து ஆடும் போது கூச்சலிடுவதும் அது வீழ்ந்து விட்டால், அல்லது முடிவுக்கு வந்து விட்டால் இன்னொரு வீரிடல் தொடங்குவதுமாக சாதாரணமாகியது.
இந்த வீரிடலில் இருந்து தப்பிப்பது இந்த அன்னதானத்தை தவிர்க்க செய்து விடும் என்று காதுகளில் பொத்திக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் வேர்வை வழிய முனீஸ்வரன் ஸ்தலத்திற்குப் போகிற வரிசை ஒரு பக்கம் இருந்தது. இன்னொரு பக்கம் சின்ன வரிசை அன்னதான மண்டபத்திற்கு சென்று கொண்டிருந்தது.
அவன் தன் முன்னால் வந்த பாத்திரத்தை எட்டிப் பார்த்தான். அதில் முட்டை கோஸ் பொரியல் இருந்தது இன்னொருவர் கையில் இருந்த இளம் நெஞ்சுக் கத்திரிக்காய் அவனுக்கு பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது.
என்ன அசைவ சமையலாக இருக்கும் என்றால் இப்படி முட்டை கோஷ் கத்திரிக்காய் இங்கு எதற்கு வருகின்றன. இந்த சுற்று முடிந்து விட்டால் அசைவ உணவு என்று நினைத்தான்.
பிறகு சாதம் போடப்பட்டது சாம்பார் பருப்பு ஊற்றப்பட்டுள்ளது அப்போதும் அவன் அடுத்த ரவுண்டு அசைவ உணவாக தான் இருக்கும் என்று உறுதியாக நம்பினான்..கத்தறிக்குழம்பு. ரசம் வந்துவிட்டது பக்கத்தில் ஒருவர் மோர் வாங்கி விட்டார். இதற்கு பிறகும் நப்பாசை இருந்தது அசைவம் வரும் என்று. கடைசியில் கறி வருவலோ வேற ஏதாவது வரும் என்று இருந்தான் ஆனால் எதுவும் இல்லை. எல்லோரும் சாப்பிட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள் அவனுக்கு யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை
நூறு டோக்கன் முடிந்து விட்டதால் அங்கிருந்த கும்பல் மெல்ல வடிய ஆரம்பித்தது.
கைகழுவும் போது என்ன அசைவ விருந்து எல்லாம் இல்லையா என்றான். பக்கமிருந்த நடுத்தர வயதுக்காரர் கைகளை துடைத்தபடி ”கோயில் அன்னதானம் இங்கே. எப்படி அசைவு விருந்து எல்லாம் வரும். வெளிய போனா போடுவாங்க “ என்றார்.
ஆஹா உண்மை முன்பே தெரிந்திருந்தால் கோயில் சுற்றி இருக்கும் இடங்களுக்குப் போயிருக்கலாம். அசைவ உணவு சாப்பிட்டிருக்கலாம் இப்போது கூட அவருடைய வயிறு மூன்றில் ஒரு பங்கு காலியாக தான் இருந்தது. சைவ உணவு என்றாலும் கட்டுப்படுத்திக் கொண்டது. நல்லது என்று பட்டது.. வெளியில் போய் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்து காலியாக வைத்துக் கொண்டது கூட நல்லது. அடுத்த சுற்றாய் அசைவ உணவு எங்கே கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும்
பல கல்யாண மண்டபங்கள் இருந்தன பல உணவுக் கூடங்கள் இருந்தன அவற்றை யெல்லாம் கடந்து அவன் போனான் எல்லாவற்றிலும் குறிப்பிடப்பட்ட சில பேர் இருந்தார்கள் சில இடங்களில் அவனும் நின்று பார்த்தான். யாராவது கூப்பிடுவார்களா அல்லது உள்ளே போகலாமா என்று யோசித்தான். அப்படியெல்லாம் போனால் விட்டுவிடுவார்களா .கேவலமாகி விடும் என்று அவன் மெல்ல நடந்து கொண்டே இருந்தான். வாய்விட்டு கேட்கலாம் என்று நினைத்தான் ஆனால் வருகிறவர்கள் வணக்கத்தை பெற்றுக்கொண்டு சாப்பிடும் இடங்களுக்கு சென்று கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் நல்ல வரவேற்பு தான். ஆனால் இதெல்லாம் ஒரு அழைப்பால் தான் இருக்க வேண்டும் இல்லை என்றால் இப்படி அனுமதிக்க மாட்டார்கள். ஆனாலும் யாரும் போய் சாப்பிடலாம் அசைவ உணவு கிடைக்கும் என்று சொல்வதெல்லாம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அவனைப்போலவே சிலர் பார்வையில் ஏக்கத்துடன் சென்று கொண்டிருந்தார்கள்.
அவன் இப்படித்தான் போன மாதம் பெங்களூர் சாய்பாபா மருத்துவமனை சென்றிருந்தான். அவருடைய நண்பர் ஒருவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அங்கு எல்லாமே இலவசமான சிகிச்சை என்று அவரை அழைத்துக்கொண்டு போயிருந்தான் அவருக்கு வயது 85 அவரை அழைத்துக்கொண்டு போவது, பேருந்து ஏறுவது, தொடர்வண்டியில் ஏறுவது இதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது
பெங்களூர் மெட்ரோ ரயிலில் பயணிப்பது மட்டும் அப்போது சுவாரஸ்யமாக இருந்தது கிருஷ்ணராஜ சாகர் இணையத்தில் இறங்கி வீதிகளை கடந்து மெட்ரோ ஸ்டேஷனுக்கு சென்று இருந்தான். அப்போது கூட வந்து இருந்த நண்பர் நடப்பதற்கு சிரமப்பட்டார். மூச்சிரைப்பு ஏற்பட்டது. ஆட்டோவிற்கு 400 ரூபாய்க்கு குறைவாக யாரும் கேட்கவில்லை.
சாய்பாபா மருத்துவ மனைக்கு பத்து மணிக்கு சென்றான் ஆனால் அங்கே மருத்துவமனை உள்ளே விடவும் மறுத்தார்கள் அங்கிருந்த பலகையில் ஒரு எண் இருந்தது அந்த எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள். அந்த எண்ணில் உங்களுடைய வருகையை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கன்னடத்திலும் இந்தியிலும் திரும்பத் திரும்ப சொன்னார்கள்.
“அட்மிஷன் எல்லாம் கிடைக்காதா”
“அதெல்லாம் கிடைக்காது . நாளாகும். தகவல் வரும் “
”போனா உடனே அட்மிட் பண்ணிக்குவாங்க சொன்னாங்க”
“அந்த டோக்கன் முறை எல்லாம் போயிடுச்சு இப்போ போன்ல பதிவு பண்ணுங்க. உங்களுக்கு தகவல் வரும் போங்க “
திரும்பத் திரும்ப இதே வார்த்தைகளைக் கேட்டான் ஆகவே அந்த அந்த எண்ணைக் குறித்துக்கொண்டு அந்த எண்ணில் பதிவு செய்தான். திரும்பத் திரும்ப பதிவு செய்யப்பட்ட குரல்கள் தான் கேட்டன நண்பர் நாம் காத்திருந்து இங்கே அறை போட்டுத் தங்கி என்ன பிரயோஜனம் ஊருக்கு போய் விட வேண்டும். பின்னர். தகவல் தருவார்கள் என்று சொல்கிறார்களே என்று சொன்னார் அவர் மனதில் செலவாவது ஓடிக்கொண்டிருந்தது இந்த மருத்துவ செலவுக்காக அவர் பல நண்பர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் வாங்கித் தான் வந்திருந்தார். கொஞ்ச நேரத்தில் அங்கிருந்து கிளம்பலாம் என்ற தீர்மானத்தை அவர் சொல்லிவிட்டார்.
சாய்பாபா மருத்துவமனைக்கு போனால் எல்லாம் இலவசம், சிகிச்சை இலவசம், உடனே எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்லி இருந்தார்கள்.. பயனில்லாமல் போய் விட்ட்து. பல முறை பதிவு செய்தும் எந்த பதிலும் இல்லை. சாயிபாபா நண்பரைக் கைவிட்டார்.
அப்படித்தான் இப்போது பாண்டி கோவில் வந்தால் எங்கு போனாலும் அசைவ உணவு கிடைக்கும் சாப்பிடலாம் என்று சொல்லி இருந்தததும் ஞாபகம் வந்தது.
சாப்பாடு எங்கே கிடைக்கும் என்று அவனை கேட்ட ஓரிருவர் பசியுடன் இருந்தார்கள். அவர்களெல்லாம் எதிரில் தென்பட்ட திருமண மண்டபங்களை காட்டினார்கள். ஆகவே அவர்கள் அங்கு போய் கேட்பதும் ஏமாறுவதுமாய் பின்னர் நகர்ந்து போவதும் தெரிந்தது.
ஆனால் இது எல்லாம் தாண்டி அசைவம் சாப்பிடாமல் போய்விட முடியுமா என்பது மனதில் வந்தது ஏதாவது ஹோட்டலுக்கு புகுந்து தான் சாப்பிட்டாக வேண்டும். இந்த புரட்டாசி மாத ஆசையை தவிர்க்க முடியாது. ஆனால் பக்கத்தில் எங்கும் ஹோட்டல் என்பது தென்படவில்லை.. எல்லாம் கெடா வெட்டுச் சமாச்சாரங்கள்.
தூரத்தில் தெரிந்த பசுமையான மரங்கள் இந்த வெயில் நேரத்தில் கொஞ்சம் ஆசுவாசம் படுத்தும் என்று நினைத்தான். என்ன மரம் என்று பார்க்க முடியாதபடி வெயிலில் கண்கள் கூசின. கொஞ்சம் நகர்ந்த போது பார் என்று இடப்பட்டிருந்த பெரிய போர்டு அவனின் கண்களில் பட்டு ஆசுவாசத்தை கொண்டு வந்தது. சரிதான் செலவு செய்து அசைவ உணவை சாப்பிட்டு புரட்டாசி மாதக் கனவை தீர்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று நகர்ந்தான்
அப்போதுதான் அது அரசு மதுபான கடையல்ல தனியார் மதுபான கடை ஏதோ கிளப் என்று போட்டிருந்தது தெரிந்த்து.
அவர் கைக்கு வந்த பீர் சில்லென்று இல்லாமல் சாதாரணமாக இருந்தது. ரொம்ப கூட்டம்..இந்த ஆறிப்போன பீரங்கி குடிப்பதற்காக இவ்வளவு தூரம் வர வேண்டுமா இன்னும் ஆறிப்போன கோழிக்கறி சாப்பிட தான் வந்திருக்கிறமா என்பது அவனுக்கு வருத்தமாக இருந்தது. டெட் பீர், டெட் சிக்கன் ..
அவன் எதிரில் வந்து உட்கார்ந்தவன் ஒரு தனி டம்ளரில் ஐஸ் கியூப்கள் வைத்திருந்தார். அவன் அதிலிருந்து இரண்டை எடுத்துக்கொண்டு பீர் பாட்டிலில் போட முயற்சி செய்தான் அது பாட்டிலுக்குள் செல்லாமல் அதன் முகப்பில் நின்றது. உள்ளங்கையால் குத்தி சிறு துகள்கள் ஆக்க ஆசைப்பட்டான். ஆனால் அவை அவள் கைகளுக்குள் அகப்படாமல் தப்பித்து வெளியே போய் விழுந்தன
“ உங்களை எங்கையோ பாத்திருக்கேனே “
“சாப்புட இடம் தேடிக்கொண்டிருந்தேன் மனைவியுடன்”.
”நீங்களும் அலஞ்சீங்க“
“இல்லெ இல்லெ , நான் ஒன்னும் அலையலே. வேடிக்கை பார்த்தேன். நீங்க சாப்பிட்டிங்களா “
“இல்லையில்லை. அலஞ்சு பாத்தம். யாரும் வான்னு கூப்புடலே. அப்படி பொதுவா போட ஆள் இல்லே “
“ஆமாம் . அப்ப நீங்களும் சாப்புடலே.. மனைவி “
“ அவங்களும் சாப்புடலே “
“இப்போ அவங்க எங்க”
“வெளியிலெ வெயிட் பண்றாங்க . இளனி குடிச்சாங்க . எண்பது ரூபா வாங்கிட்டான் “
“அவங்களுக்கு இளனி. உங்களுக்கு பீர்”
“ஆமா”
“அப்புறம் சாப்பாட்டுக்கு எடம் தேடணும்”
“பக்கம் ஓட்டல் ஒண்ணும் காணம் “
“பத்து நூறு கெடா வெட்டற எட்த்திலெ ஓட்டல் இருக்குமா “
”சரி நான் தனியா போய் குடிக்கறன். டிஸ்டர்ப் ஆயிட்டன் “
“அசைவம் கெடைக்காத்துனாலயா “
“ஆமா. இங்க அசைவம் கெடைக்கும்.மனைவிக்கும் வாங்கிட்டு போகணும்”
அப்போது அங்கு வந்த சர்வரிடம் கொஞ்சம் ஐஸ் குயூப் வேண்டும் என்றான்.
“வேற என்ன வேணும் சிக்கன் மசாலா, , பிரைட் அயிட்டம் வேண்டாமா “
“வேண்டாம் இது போதும் “
சின்ன சின்னதான ஐஸ் கூப்புகளை எடுத்து அவன் பாட்டில்கள் போட்டு பாதி தீர்ந்திருந்த பீர் பாட்டிலைக் குளுமையாக்கிக் கொண்டான்,
அப்படி குளிர்ந்த பீர்குடிப்பது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது சிக்கன் அளவும் அதிகமாக தான் இருந்தது எலும்பு அதிகமாகத் தான் தென்பட்டது. எப்படியோ ரொம்ப நாளைக்கு பிறகு கறி சாப்பிடுகிற ஆசை தீர்ந்தது என்றபடி அவன் சர்வரிடம் ஒரு சிகரெட் கேட்டான்.
“என்ன சிகரெட் எவ்வளவு ரூபாய் சிகரெட்”
“அதெல்லாம் தெரியாது எப்போவோ வாயில் வைக்கிறது உண்டு. ஏதாச்சும் “
“சரி ”
சிகரட்டை வாயில் வைத்து ஊதிய போது அது கொடுத்த வலுத்த இருமல் அவன் சாப்பிட்ட அசைவத்தை வெளியே கொண்டு வந்து விடும் போல் இருந்தது.
![]() |
சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடம் பெற்றவர். சிறுகதை , நாவல் , கட்டுரைகள், கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த பதினைந்து வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி.பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். நவீன வாழ்க்கையின் பிரச்சனைகளையும், சிதைவுகளையும் பற்றிய நுட்பமான பார்வை இவருக்கு உண்டு. அது இவரது எழுத்துக்களில் விரவி இருக்கும்.156 கதைகளைக் கொண்ட என் தொகுப்பு…மேலும் படிக்க... |