மலர்ந்த ரோஜாவும் மரணம் எய்தியது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2025
பார்வையிட்டோர்: 68 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“புஷ்பா… கொஞ்குண்டு… டொறுத்துக்கப்பா அடுப்பில் சுடுதண்ணீ போட்டிருக்கேன்” நார்க்கட்டிலில் கிடந்து வேதனையில் முனகிய புஷ்பாவின் காதிற்குள் கிசு கிசுப்பதுபோல் மெல்லக் கூறினான் டேவிட்… 

“ஏங்க… ஆண்டவன் நம்மை இட்படிச் சோதிக் கணும்? அக்கம் பக்கம் யாருமேயில்லையா… எல்லோரும் ஓடிட்டாங்கன்னா நீங்க மட்டும் ஏங்க? போயிடுங்க எங்கையாவது போய் ஒளிஞ்சுக்கிடுங்க. என்னுடைய, இந்தக் கோலத்தைப் பார்த்தால் பேய், பிசாசுகூட இரங்கி விட்டு விட்டுப் போயிடுங்க…நான் பிழைச் சுக்குவேன். நீங்க எங்கிட்டாச்சும் ஓடி ஒளிஞ்சிடுங்க”… கணவனின் கழுத்தை இறுகக்கட்டியபடி கெஞ்சினாள் புஷ்பா. 

“அந்த ‘ஆமி’ நாய்கள் பிசாசைவிட மோசமான வனுங்க. எஸ்டேட் கூலிகளென்றால் அவனுகளுக்கு விளையாட்டு பொம்மை மாதிரி. அவைகளை யார் கேட்க. முடியும்?” டேவிட் ஆத்திரத்துடன் கட்டிலில் குத்தினான். 

நம்ம இந்தியா கேக்காதுங்களா…? எங்க. எம் ஜி.ஆர் அண்ணாச்சிதானே ஆளு றாங்க… அவங்களா வது சொல்லக் கூடாதா? புஷ்பா ஈனஸ்வரத்தில் கேட்டாள். 

“நமக்கெப்படியடி இந்தப் பெரிய சமாச்சாரங்க ளெல்லாம் தெரியும்… போனவாட்டி வந்த கலவரத்தில் தானே என் அத்தைப்பொண்ணு சிங்களவன்கள் கையில் அகப்பட்டு அழிஞ்ச அவமானம் தாங்காமல் தற்கொலை பண்ணிக் கொண்டாள். அந்த வேதனையே நெஞ்சில் ஆறுவதற்குள் மீண்டும் மீண்டும் ஒரு கலவரம்… சே…எங்களை யொரு பேடிகளாக எண்ணிவிட்டான்கள். நமக்கும் ரோஷம், மானம் இருக்கென்பதை ஒரு நாளைக்கு ஆத்திரத்துடன் கறுவிய டேவிட்டின் குரல் அவனையு மறியாமல் உயர்ந்தது. 

“ஸ்…மெதுவாகப் பேசுங்கள். வெளியே கேட்கப் போகுது. தமிழன் எங்கிருக்கிறான்னு மோப்பம் பிடிச்சுக் கொண்டு திரிவான்கள். நம்ம சம்பாதித்த பணத்தை பறிச்சு வைச்சா ஒரு வருஷத்திற்கு அவன் குந்தியிருந்து சாப்பிடலாமே!” தன் உடல் வேதனையையும் மறந்து பேசினாள் புஷ்பா. 

அப்பொழுது மறுபடியும் அவள் வயிற்றில் சுரீ ரென்று ஓர் வலி. 

‘ஸ்…ம்மா மகமாயி’ அடி வயிற்றைத் தாங்கிப் பிடித் துக் கொண்டாள். சிறிது நேரம் கட்டிலில் அங்குமிங்கு மாகத் துவண்டாள். 

புஷ்பாவுக்குத் தனக்கேற்பட்டிருக்கும் வலி பிரசவ வலியென் று புரிய ஆரம்பிக்கவே அதனைத் தன் கணவனிடம் கூறினாள். 

டேவிட் பதறினான். புஷ்பாவுக்கு இதுமுதல் பிரச வம். அவளை நல்ல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சவுகரியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென எண்ணி அவன் பணம்கூடச் சேர்த்து வைத்திருந்தான். அந்தப் பணம் அவன் ஷேர்ட் பாக்கெட்டொன்றில் அப்படியே இருந்தன. 

ஆனால் தமிழர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத இக்கட்டான வேளையில் புஷ்பாவுக்கு வலி ஆரம்பித்து விட்டது. 

நான்கைந்து நாட்களுக்கு முன்னர் கொழும்பு, கண்டி, இரத்தினபுரி போன்ற பெரிய நகரங்களில் இனக் கலவரம் ஆரம்பித்து தமிழர்களைக் கொல்கிறார்கள், சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன என்று கேள்விப் பட்ட பொழுதே டேவிட் புஷ்பாவிடம் கூறினான். 

“இந்தக் கலவரம் எஸ்டேட் பக்கமும் பரவும். நீயிருக்கும் நிலையில் எங்காவது மருத்துவ வசதியுள்ள இடத்திற்குப் போய்விடலாம் அல்லது மருத்துவச்சியை யாவது வீட்டோடு கூப்பிட்டு வைத்திருக்கலாம்.” 

“அப்படியெல்லாம் எதுவும் நடவாதுங்க நம்ம தலைவர் தொண்டமான் அவங்களோடதானே இருக்கார்” என அவனது யோசனையை ஒரேயடியாக நிரா கரித்து விட்டாள். 

ஆனால் இப்பொழுது காலம் கடந்து விட்டது. 

நேற்றிரவு பக்கத்திலுள்ள ரப்பர் தோட்டத்தில் ராணுவம் புகுந்து தமிழ்க் கூலிகளின் குடிசையில் பண்ணிய அட்டகாசங்களை அறிந்ததும், விடிந்ததும் விடியாததுமான பனிக்குளிருக்குள்ளேயே லையினில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் தோட்டத்தை அடுத்துள்ள அடர்ந்த காட்டுக்குள் போய் ஒளிந்துவிட்டார்கள். 

லையினைக் காலிபண்ணிப் போகும்போது டேவிட்டையும்தான் கூப்பிட்டார்கள். 

அவன்தான் மறுத்துவிட்டான். புஷ்பா இருக்கும் நிலையில் மலைநாட்டின் ஏற்ற இறக்கங்களைத் தாண்டி நடக்க முடியாதென்பதினாலேயே அதனை மறுத்துவிட்டுத் தன் குடிசையிலேயே இருந்தான். 

ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில் தங்கிவிட்டாலும் நேரம் ஆக ஆக மனதுக்குள் ஒரு பதட்டம். ஜனசந்தடியே இல்லாமல்-தொழிலாளர் குடியிருப்புக்கள் ‘அம்போ’ எனக் கிடப்பதைப் பார்த்ததும் அவனையும் அறியாமல் நெஞ்சு ‘படக் படக்’கெனத் துடிக்கத்தான் செய்தது. 

இருப்பினும் அதனைப் புஷ்பாவுக்குத் தெரியப் படுத்தாமல் — என்றும்போல் அவளிடம் வேடிக்கையும் விளையாட்டுமாக இருக்க முயன்றான். நடு நடுவே அவன் காதுகள் வெளியே ஏதாவது சத்தம் கேட்கிறதா என் பதிலும் கருத்தாக இருந்தன. 

புஷ்பாவுக்கு வலி அதிகரித்துக்கொண்டே வந்தது. கட்டிலில் படுத்திருக்க முடியாமல் எழுந்து உட்காருவதும். கட்டிலைப் பிடித்துக்கொண்டு எழுந்து நிற்பதுமாக வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். 

அவளது நெற்றியில் இதமாக வருடியபடி பக்கத்திலேயே அமர்ந்திருந்த டேவிட்டின் காதுகளில் திடீரென நாய்கள் குரைப்பது கேட்டது. 

ஒன்றிரண்டாக ஆரம்பித்த நாய்கள் கோரஸ்ஸாக நிறுத்தாமல் ஓலமிட்டன. 

புஷ்பாவிற்குத் தெரியாமல் தன் கைகளை விலக்கிக் கொண்டு மெதுவாக எழுந்தான். 

அதற்கிடையே டுமீல் டுமீல் டுமீல் என இரண்டு மூன்று சத்தம் பக்கமாக-வெகு அருகிலேயே கேட்டது. 

பதட்டத்துடன், குடிசைக்கதவு பூட்டியிருக்கின்ற தா என்பதைப் பார்க்க அதன் பக்கம் ஓடினான். 

புஷ்பா ‘வீல்’லென அலறினாள். கூடவே ஒரு சின்னக் குழந்தையின் அழுகுரல். 

குடிசையின் கதவை அழுத்திச்சாத்தி மண்வெட்டி கடப்பாரைகளை முட்டுக்கொடுத்துவிட்டுத் திரும்பிய டேவிட்டுக்கு அந்த நேரத்திலும் தன் குழந்தையின் அழு குரல் உடம்பில் ஒரு புத்துணர்வை யூட்டியது. முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம். ‘கர்த்தரே’ என நெஞ்சில் சிலுவைக் குறியிட்ட படி ஓடிச்சென்று தன் தோளில் கிடந்த துவாலையைச் சுற்றிக் குழந்தையை அள்ளிக்கொண்டான் 

இந்தச் சமயத்தில் வீட்டுக்கு வெளியே பூட்ஸ்கால் களின் ஓசை வலுத்தன. 

களைப்பில் முனகும் மனைவியின் இதழ்களைத் தன் கைகளால் மூடினான். கர்த்தரின் கருணையை வேண்டிய படியே கையில் குழந்தையுடன் அசையாமல் நின்றான். 

“தமிழ் நாய்களைக் காணவில்லை. கெல்லோ எக்னைக் வத் அம்புன்ன நா-ஒரு பெண்கூட இல்லை’- எனச் சிங்களத்தில் கேலியாகப் பேசுவதும் பக்கத்துக் குடிசை யில் உள்ளவர்களின் உடமைகள் வெளியே வீசப்படும் ஒளியும் டேவிட்டின் காதுகளுக்குத் துல்லியமாகக் கேட்டன. 

‘கர்த்தரே” என்று டேவிட் மனதினுள்ளே பண்ணிக் கொண்டிருந்த ஜபம் முடிவதற்குள் முண்டுகொடுத்த மண்வெட்டி, கடப்பாரை கவிழ குடிசைக் கதவு பிளந்து விழுந்தது. 

பசியோடு இருக்கும் மிருகங்கள் இரையைக் கண்டதும் பாய்வதுபோல் சிங்கள ராணுவ வீரர்கள் உள்ளே பாய்ந்தார்கள். 

‘அம்மா’ எனக்கதறியபடி எழுந்த மனைவியை ஒரு கையால் அணைத்தான். மறுகையால் தன் குழந்தையை மார்போடு இறுகப் பிடித்தபடி நிமிர்ந்து நின்றான். 

கோழிக் குஞ்சைத் தூக்க வட்டமடிக்கும் பருந்து போல டேவிட்டைச் சுற்றி சில ராணுவத்தினர் நின்று கொண்டனர். 

தமிழர்கள் தப்பி ஓடிவிடாமலிருக்கப் பாதுகாப்பு நடவடிக்கை. 

அவர்களது உடமைகள் காலால் பந்தாடப்பட்டன. சோற்றுக் கலயம் உருண்டு வந்து டேவிட்டின் காலடி யில் நின்றது. அவனைச் சுற்றிச் சோற்றுப் பருக்கைகள் மல்லிகைப் பூப்போல் சிதறியிருந்தன. 

வெகு நாளாகப் புஷ்பா பிரியமுடன் காத்து புருஷன் வீட்டுக்கு எடுத்து வந்த மரப்பெட்டி துப்பாக்கி முனையின் ஓர் இடியில் இரண்டானது. 

உள்ளேயிருந்த காகிதக் கற்றைகள் வெளியே பறந் தன. அத்தனையும் சினிமாப் புத்தகங்கள்…படங்கள். 

எம்.ஜி.ஆர். தனியாக; மஞ்சுளாவுடன்-ஜெயலலிதாவுடன்… லதாவுடன்…ரிக்ஷாக்காரனாக, வண்டிக்காரனாக -பல தரப்பட்ட சினிமா காட்சிப்படங்கள்! 

அதைப் பார்த்ததும் ராணுவத்தினரின் முகத்தில் சினமேறியது. 

அவைகளை அள்ளி எடுத்து டேவிட்டின் முகத்தி· ஆத்திரத்துடன் வீசியவன், இவங்கதானே உங்க அண்ணாச்சி? இவரு இருக்கிறாங்க என்றுதானே உங்களுக் கெல்லாம் திமிரு! இவருதானே கொட்டியாக்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறாரு – சோறு போடுறாரு? உங்களை ஒண்ணாவைச்சு தீ மூட்டப்போறோம். அவரு எங்களை ஒண்ணும் பண்ணமுடியாது! எங்க ஜெயவ த்தனா மாத்தையா….ஒரு துட்டகை முனு! அவருதான் தமிழனை அழிச்சு நம்ம வாழவைக்கப் போறாரு? நீங்கெல்லாம் பூண்டோடு ஒழியணும்…” பாதி சிங்களத்திலும் பாதி கொச்சைத் தமிழிலுமாகத் திட்டியபடி படங்களைத். தூள்தூளாக்கிப் பறக்கவிட்டான். 

“இந்தா,பிடி தீப்பெட்டி. உன் மனைவிக்கு நீயே தீ மூட்டு. பிடிடா!” 

டேவிட்டை நெருங்கி வந்த ராணுவ வீரனின் கண் களில் டேவிட்டின் நெஞ்சில் புத்தம் புதிய ரோஜாவாக. ஒன்றிக்கிடந்த குழந்தைத்தென்பட்டது. 

பாய்ந்து சென்று அவன் கையிலிருந்த இளம் தளிரைப் பிடுங்க முயன்றான். டேவிட் தன் குழந்தையை மேலும் தன் மார்புடன் அணைத்தான். 

ஒரு வினாடி மூர்க்கத்தனமான போராட்டம். குழந்தை வாயில் நுரை தள்ளியது. 

“பிசாசுகளே! நீங்களும் குழந்தை பெத்தவங்கதானே?” புஷ்பா காளிபோல் குதித்தாள். அவள் தலைமயிரை ஒருவன் பிடித்து கழுத்தில் சுற்றி இறுக்கினான். 

“டே….வி…ட்”-புஷ்பா அலறினாள். 

டேவிட் பதறிப்போய் திரும்பிய ஒரு கணத்துக்குள் அப் பச்சிளம் குழந்தை ராணுவ வீரனின் பூட்ஸ் கால் களின் கீழ் சதைப் பிண்டமாக இரத்தத்தில் மிதந்தது. 

“பாவிகளே” டேவிட் வேங்கைபோல் அவ் ராணுவ வீரனை நோக்கிப் பாய்ந்தான். 

‘”அடோய்” என்னிடம் மட்டும் ஒரு துப்பாக்கியிருந் தால் ஒரு…துப்… பாக்கி…துப்!” 

வாய் (மூடுவதற்குள் பிடரியில் அடுக்கடுக்காகப் பாய்ந்த துப்பாக்கி ரவைகளைத் தாங்கியபடியே நிலத்தில் பிணமாக வீழ்ந்தான். 

சற்று நேரத்தில் அக்குடிசை பக பகவென்று எரிந்தது. ராணுவ ‘டிரக்’ ஒரு ஜாலியான சிங்களப் பாட்டுடன் சீட்டியடித்தபடி சென்றது. 

– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *