பெற்ற வயிறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2025
பார்வையிட்டோர்: 63 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊரைச் சுற்றிச் செல்லாமல் குறுக்கே புகுந்து ஒரு பனங்கூடலைத் தாண்டினால் வீரபத்திரர் கோவில் வந்து விடும். அதற்குப் பின்னால் இருபது, முப்பது அடி இடைவெளிவிட்டு அவ்வூர் மயானத்துக்குச் செல்லும் ஒற்றையடிப்பாதை ஆரம்பமாகின்றது. 

அன்னம்மாள் அங்கேயிங்கே பார்க்காமல் கையில் தூக்கிய பாத்திரத்துடன் விறு விறென நடந்தாள். இந்த நடுராத்திரியில் அவள் வீட்டை விட்டுப் புறப்பட் டது அவள் கணவன் வடிவேலுவுக்கும் தெரியாது. மகள் சுமதிக்கு மட்டுமே தெரியும். 

பொழுதோடு பொழுதாக இடியப்பம் அவித்து. உருளைக்கிழங்கில் ‘கட்லெட்’ பண்ணி, சொதி வைத்து எல்லாவற்றையும் கவனமாகப் பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொடுத்ததே சுமதிதான். 

அன்னம்மாளுக்குப் பிறந்த நான்கு குழந்தைகளில் சுமதியும், கண்ணனும் சின்னக் குழந்தையிலிருந்தே சற்று துணிச்சல் அதிகமானவர்கள். அதேபோன்று படிப்பிலும் நல்ல திறமைசாலிகள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மாதிரி இருவருக்கும் பல்கலைக்கழக அனுமதி மட்டும் கிடைக்கவில்லை. 

ஜனத்தொகை விகிதாசார அடிப்படையில்தான் பல் கலைக் கழகத்துக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதென ஒரு புதிய சட்டத்தை அரசு கொண்டு வராதிருந்தால் கண்ணனுக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத் திருக்கும். ‘அட்வான்ஸ்மதஸில்’ அவ்வளவு சூடிகை. 

அவனது திறமையெல்லாம் வீணாகிவிட்டதேயென வடிவேலுவுக்கு உள்ளூரக் கவலை இருப்பினும், வெளி நாட்டுக்குக் கண்ணனை அனுப்பவோ ஏன் பக்கத்தில் இருக்கும் இந்தியாவுக்கு அனுப்பிப் படிக்க வைக்கக்கூட அவருக்குப் பொருளாதார வசதி இடங்கொடுக்கவில்லை. நல்லநிலையில் இருந்த சில உறவினர்களையும் கவுரவத்தைப் பார்க்காமல் கேட்டுப் பார்த்தார். பலன் பூஜ்யம்தான். 

கண்ணன் பரீட்சை முடிவு தெரிந்த ஒரு சில நாட் களுக்கு அதைப்பற்றியே நினைத்து வாழ்க்கையில் விரக் தியடைந்தவன்போல் அறையினுள்ளேயே அடைந்து கிடந்தான். பின்னர் சமாதானமாகிவிட்டான். காலக்கி ரமத்தில் அவன் போக்கே மாறிவிட்டது. வீட்டில் தங் குவது கிடையாது. காலையில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு புறப்பட்டால் சில சமயம் இரவுபன்னிரெண்டு மணியளவில்தான் வீடு திரும்புவான். வீட்டில் எல் லோருடனும் அரட்டையடிப்பதும் குறைந்து போயிற்று. சுமதியிடம் மட்டும்தான் கொஞ்சம் அதிகமாகப் பேசுவான். 

சில சமயங்களில் வீட்டில் இருக்க நேர்ந்த வேளைகளில் மட்டும் தன் தாயாரின் கையால் சாப்பாடு போட வேண்டுமெனக்கூறி, அவள் கையில் உருட்டி வைக்கும் சாதத்தை ஆனந்தமாக ரசித்துச் சாப்பிடுவான் 

ஒரு நாள் என்னவோ… “அம்மா, இன்னும் எத்தனை நாள் இப்படி உன் கையால் சாப்பிடப் போகிறேனோ தெரியாது” என வேடிக்கையாகக் கூறுவது போல் கூறிக் கொண்டு முகத்தைச் சற்று தாழ்த்திக் கொண்டான். 

அன்னம்மாவுக்கு அவன் கூறியது நெஞ்சில் போய் நறுக்கெனப் பாய்ந்தது. 

“சுமதி இங்கே வாவேன்டி. உன் அண்ணன் என்ன சொல்கிறான் கேள்.” 

இவர்களது உரையாடலைக் கவனித்தபடியே தாயின் புடவைகளுக்கு ‘சோப்’பைத் தேய்த்துக் கொண்டிருந்த, சுமதி ‘பட்’டென்று கையை உதறிவிட்டு வந்து; 

“அண்ணா, வீணாக அம்மாவைக் கலவரப்படுத்தாதே. காலம் வரும்போது எல்லாவற்றையும் நானே அவளுக்குப் புரிய வைப்பேன்” என அண்ணனை அன்புடன் கடிந்து கொண்டவள் – “அவன் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாதேயம்மா! எப்போதும் இப்படியே புதிர்போட்டுப் பேசி பழக்கமாயிடிச்சி” என்று தாயைச் சமாதானப்படுத்தினாள். 

ஆனால் அவள் நினைத்தது மாதிரிக் காலம் அதிக நாட்கள் காத்திருக்கவில்லை. 

மறுநாள் அதிகாலையில் வீட்டை விட்டுக் கிளம்பிய கண்ணன், ஓரிரு மணித்தியாலங்கள் கழித்து அவசரமாகத் திரும்பி வந்தான். சுமதியைத் தனியாகக் கூப்பிட்டு சில மணித்தியாலங்கள் பேசினான். காரசாரமாக விவாதித்தான். அவளது முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான். 

உள்ளே சமையலில் மூழ்கியிருந்த தாயாரிடம் சென்று, சிறுபிள்ளைபோல் தாயாரின் தோள்களை இறுகக் கட்டிக் கொண்டே, “அம்மா, நான் வெளியே நாலைந்து நாட்கள் தங்கப் போகிறேன். சிலசமயம் அதுவே வருடக்கணக்காக ஆனாலும் ஆகும். உன் மற்றக் குழந்தைகள் அனைத்திலும் என்னையும் சேர்த்துப் பார்க்கப் பழகிக் கொள்ளம்மா. நான் செய்ய வேண்டிய கடமைகளை அவர்கள் செய்வார்கள். நான் எங்கேயோ வெளி நாட்டுக்குப் போயிருப்பதாக நினைத்துக் கொண்டு எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அப்பாவை தோட்டத்திலேயே பார்த்துப் பேசிவிட்டேன்” – சின்னக் குழந்தைபோல் தன் தாயின் கன்னத்தோடு தன் கன்னத்தைப் பதித்து, குரலில் பிசிறில்லாமல் கூறினான் கண்ணன். 

அன்னம்மா அவனது பேச்சுக்குப் பின்னால் ஏதோ பெரியதொரு அனர்த்தம் இருக்கின்றதென்பதை உணர்ந்து கொண்டாள். அப்பொழுதுதான் பெற்ற குழந்தையை முதன் முதலாகப் பார்ப்பது மாதிரி அவனது சுருண்ட கேசத்தைப் பாசத்துடன் தடவிக் கொடுத்து அவனைக் காலிலிருந்து தலைவரை அன்பு பொங்கப் பார்த்தாள். அவன் முகவாயைத் தழுவிய அவளின் கரங்கள் வலுவிழந்ததுபோல் தொய்ந்து விழுந்தன. 

கண்ணன் எல்லோரிடமும் விடைபெற்றுச் சென்ற பின்னர்தான் சுமதி உண்மையை மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தாள். 

“அம்மா, அண்ணன் நம் மண்ணுக்காகப் போராடும் இளைஞர்களின் இயக்கத்தில் கடந்த மூன்றாண்டுகளாக பங்கு கொண்டிருக்கிறான். இலங்கை அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு மிக முக்கியமான குற்றவாளிகள் பட்டியலில் அவன் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இனிமேல் அவன் வீட்டில் தங்குவது அவனுக்கு மட்டுமல்ல, அவனைச் சார்ந்துள்ள இயக்கத்துக்கே கேடு விளைவிக்கலாம் என்றுதான் வீட்டை விட்டு வெளியேறி விட்டான்” என்ற விவரத்தைக் கூறினாள். 

தம்பி, தங்கை அதைப் பற்றி அவ்வளவாக விசனப் படவில்லை. 

“நம் அண்ணாவும் சுடுவானா? அவனிடம் துப்பாக்கி இருக்கிறதா?” எனப் பெருமையுடன் கேட்டார்கள். விளையாட்டு துப்பாக்கிகளை எடுத்து எதிரே ஒரு பொருளை வைத்து ராணுவ வீரனாகப் பாவனை செய்து கொண்டு அதனைக் குறி தவறாது சுட்டு வீழ்த்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். 

ஆனால் தாயார் மட்டும்தான் இரண்டு மூன்று நாட்களாக அழுதுகொண்டும், வாய்விட்டு அரற்றிக் கொண்டுமிருந்தாள். அவளாகவே சமாதானமாகட்டும் என்பது போல் சுமதியும் அவளது வேதனையைக் கண்டும், காணாதது போல் இருக்கப் பழகிக்கொண்டுவிட்டாள். 

எங்காவது ராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கையின் போது தமிழ்ப் போராளிகள் கொல்லப்பட்டனர் அல்லது ராணுவத்துக்கும், போராளிகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழ் இளைஞர்கள் இறந்தனர் எனக் கேள்விப்பட்டால் நெஞ்சு படபடக்க அம்மாவுக்குத் தெரியாமல் பக்கத்து வீட்டுப் பையன்களை அழைத்து, இறந்தவர்கள் பெயர் தெரியுமா? அங்க அடையாளமாவது தெரியுமா? இயக்கத்திலுள்ள அண்ணாமார் யாரையாவது பார்த்தால் கேட்டுச் சொல்லுங்கள் என ரகசியமாகக் கேட்பாள். 

அவர்களிடமிருந்து நம்பிக்கையான தகவல் கிடைக்கும் வரையும் தாயாருக்கு ஏதாவது பொய்க் காரணங்களைக் கூறிவிட்டு சாப்பிடாமல் இருந்த நாட்களும் உண்டு. 

அப்படி விசாரிக்கும் வேளையொன்றில்தான் இத்தகவல் அவளுக்குக் கிடைத்தது. இரண்டு வருடங்களாக எங்கெங்கோ பல்வேறுவகைப் போராட்டங்களில் பட்டிருந்த கண்ணன் ஏதோ காரியமாய் தன் சொந்த ஊருக்குள் ஒரு மாதமாக இருப்பது சுமதிக்குத் தெரிய வந்தது. 

அத்தகவலைக் கூறியவர்கள், வேறொரு செய்தியையும் ரகசியமாகக் கூறினார்கள் இவ்விளைஞர்கள் ஊருக்கு வடக்கே, மயானப் பக்கமிருக்கும் வீரபத்திரர் கோவிலில் அமாவாசைக்கு மறுதினம், நடுநிசிக்கு மேல் கூடுவார்கள் என்றும் அதில் கண்ணனும் ஒருவனாகக் கலந்து கொள்வதுண்டு என்பதையும் தெரிவித்தார்கள். 

சுமதி தனை வெகு நாள்வரை தனக்குள்ளேயே ரகசியமாகப் புதைத்து வைத்திருந்தாள். 

ஆனால் அன்று என்னவோ அவள் தாயார் விடிந்து எழுந்ததிலிருந்து கண்ணனைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசினாள். அவன் தொட்டுப் பழகிய சைக்கிள், புத்தகம், அவனுக்கெனவே ஒதுக்கியிருந்த அலமாரி அனைத்தையும் தொட்டுத் தொட்டுப் பார்த்து அதனுடன் சித்தப்பிரமை பிடித்தவள்போல் பேசுவதைப் பார்த்ததும்; அதற்கு மேல் தாயாரிடம் தனக்குத் தெரிந்த உண்மையைக் கூறாமல் இருக்கச் சுமதியால் முடியவில்லை. 

கண்ணன் அவ்வூருக்குள் வந்திருக்கும் செய்தியைக் கூறி அவனுக்குப் பிடித்தமான சாப்பாட்டையும் செய்து தாயாரிடம் கொடுத்து; “அம்மா,உன் மகனை ஆசை தீர ஒரு தடவை பார்த்துவிட்டு வந்துவிடு அவன் நண்பர்களுக்கும் சேர்த்தே சாப்பாடு வைத்திருக்கிறேன். அதிகம் பேசி அவனைச் சங்கடத்துக்குள்ளாக்காமல் போன கையுடன் திரும்பி வந்துவிடவேண்டும்” என நிமிடத்துக்கு ஒரு தடவை தாயாரை எச்சரித்து அனுப்பி வைத்தாள்.

“நான் என்ன அவ்வளவு மடச்சியா? என் பிள்ளையைப் பார்த்து ஒரு வார்த்தைப் பேசிவிட்டு ஓடிவந்து விடுவேன்” என மனதில் சந்தோஷம் கரைபுரளக் கூறிவிட்டு, நடு இரவென்றும் பாராமல் விறு விறென நடந்தாள் அன்னம்மா. 

இருட்டு கண்களுக்குப் பழக்கப்பட்டுப் போன தினால் கோவிலுக்கு இருபது, முப்பது அடி தள்ளி வரும்போதே கோவிலில் எந்த நடமாட்டமும் இல்லாதது துல்லியமாகத் தெரிந்தது. 

ஏமாற்றத்தில் அவள் திரும்பிவிட நினைத்தபோது கோவிலுக்குப் பின்னால் ஏதோ சரசரப்புகள் கேட்க ஆரம்பித்தது. 

மறுகணம் படபடவென பூட்ஸ் கால்கள் சப்திக்க நான்கைந்து பேர்கள் கூட்டமாக வருவது தெரியவே அன்னம்மா அசையாது நின்றாள். அவர்களில் ஒருவன், “யாரது?” என அதட்டலாகக் கேட்டபடி அவள் முகத்துக்கு நேரே ‘டார்ச்’சொன்றை அடித்தான். 

‘இந்த நேரத்தில் இங்கென்ன வேலை?’- தன் கண்டிப்பைச் சற்றும் குறைக்காமல் கேட்டான். 

அவனுக்குப் பின்னால் வந்து சேர்ந்த இன்னொருவன், “ஸ், அது வேறு யாருமல்ல, நம்ம கண்ணனின் அம்மா” என்றான். 

இவைகள் ஒன்றையும் சட்டை செய்யாத அன்னம்மா, அவர்கள் வைத்திருந்த சின்ன வெளிச்சத்தில் அவர்களுக்கிடையே தன் மகனும் இருக்கிறானா? என உன்னிப்பாகக் கவனித்தாள். 

ம்ஹும், கண்ணில் படவில்லை. எல்லோரும் ஒரே மாதிரியான உடை, ஒரே வயது. மங்கலாகிக் கொண்டு வரும் அன்னம்மாவின் கண்களுக்கு எல்லா முகங்களும் கண்ணனைப் போலவே தெரிந்தன. சரி, போகட்டும். எனக்குத்தான் தெரியவில்லை. இதுவரையில் அவனுக்குமா என்னைத் தெரியவில்லை. அன்னம்மாளின் நெஞ்சில் பீதி பரவியது. ஏதோ இனம் புரியாத தளர்வு அவளை ஆட் கொள்ளவே அருகில் இருந்த காரை பெயர்ந்த சுவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். 

அவள் நிற்பதைக்கூட அவ்வாலிபர்கள் பொருட் படுத்தாமல் தங்களுக்குள் எதையெதையோ பேசிக் கொண்டு வேறு எதையோ எதிர்பார்ப்பது போல் நின்றிருந்தார்கள். 

அன்னம்மாவுக்குக் கால் வலியெடுத்தது. உட்காரப் போனாள். அச்சமயம் நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு ஒரு ‘ஜீப்’ பாய்ந்து வந்து நின்றது. குண்டடி பட்டு இரத்தம் சொட்டச் சொட்ட இரண்டு உடல்களை இழுத்துத் தங்கள் தோள்களில் போட்டபடி அதிலிருந்து சில வாலிபர்கள் குதித்தார்கள். 

அவர்கள் மயானத்தை நோக்கித் திரும்பினார்கள் இரத்தத்தை உறையவைக்கும் அக்காட்சியைப் பார்த்ததும் பதறி எழுந்த அன்னம்மாவின் தோள்களை இரண்டு ஆதரவான கரங்கள் இறுக்கமாகப் பற்றின. 

“அம்மா, உங்கள் மகன் வீரமரணம் அடைந்து விட் டான். எல்லாத் தாய்மார்களுக்கும் இப்படிப் பாக்யம் கிடைப்பதில்லை. அவனுக்காக அழ வேண்டாம். எங்கள் நண்பர்களின் உடலுக்கு இம்மயானத்தில் வீரவணக்கம் செலுத்திவிட்டு மீண்டும் தொடரப் போகும் நம் போராட் டம் வெற்றியடைய ஆசீர்வதியுங்கள்” என்றான். அவள் தோல்களைப் பற்றிய அவ்வாலிபன். 

அன்னம்மாவின் அடிவயிற்றிலிருந்து புறப்பட்ட ஜ்வாலை அவன் பேச்சைக் கேட்டதும் எப்படி அடங்கியதோ தெரியவில்லை. பாத்திரத்திலிருந்த ‘கட்லட்’ ஒன்றை எடுத்து அவனுக்கு ஊட்டிவிட்டு ஏதோ ஒருவகை ஆவேச சிலிர்ப்புடன் அவன் நெற்றியில் கைவைத்து திருஷ்டி கழித்து விரல்களை நெரித்துவிட்டுத் திரும்பி நடத்தாள். 

– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *