தற்சுமை






நான் அம்மாப் பிள்ளை. ஆனால், அம்மாவின் சொல்லை எப்போதாவதுதான் மீறுவேன். அப்படி மீறினால் ஏதாவது பெருஞ்சிக்கலில்தான் மாட்டிக்கொள்வேன். இப்போதும் அதுவே நேர்ந்துவிட்டது. ‘பேச்லர் லைஃப்’யை என்ஜாய் செய்யலாம்’ என என் நண்பர்கள் அந்தப் பழைய மலைக்கோட்டைக்கு என்னை அழைத்தபோது, நான் அம்மாவிடம் அனுமதிகேட்டேன். எல்லாவற்றுக்கும் ‘சரிப்பா. செய்ப்பா’ என்று அனுமதிதந்துவிடும் அம்மா, இதுக்கு மட்டும் ஏன் மறுத்தார்?. அது ஏனென்று புரிவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
நான் அம்மாவின் சொல்லை மீற நண்பர்களுடன் அங்குச் சென்றேன். கற்கோட்டையின் இடப்புறம் தனிப்பாதை ஒருநபர் மட்டுமே செல்லும் வகையில் மிகவும் குறுகலாக மேற்புறமாக உயர்ந்து சென்றது. நண்பர்கள் கீழ்த்தளத்தில் அமர்ந்திருந்தனர்.
நான் மட்டும் அந்தத் தனிப்பாதையில் ஏறி நடந்தேன். சிறிது நேரம் நடந்த பின்னர் புதர் மண்டிக்கிடந்த அந்தப் பாதையில் மல்லிகை மணந்தது. எனக்குப் மல்லிகை பிடிக்கும். நான் அந்த மணத்தை நுகர்ந்து மகிழ்ந்தபடியே சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தேன். பாதையைப் பார்க்கவில்லை. ஏதோவொன்று என் கால்களைத் தடுக்கியது. நான் தடுமாறி விழும்போது, எதையோ பிடித்தபடித் தொங்கிச் சரிந்து நின்றேன். அது நீளமான ஆலம் விழுதுபோன்ற ஒற்றைஜடை.
கருத்த தடித்த உறுதியான ஜடை. வேறு ஏதும் என் நினைவில் இல்லை. லேசான மயக்கம். நான் கண்விழித்தபோது என் தலையில் சிறு வீக்கம். அது தடுமாறி விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம். நான் அந்த ஜடையை மட்டுமே நினைத்துக்கொண்டு, வந்த வழியிலேயே திரும்பி நடக்கத் தொடங்கினேன். மல்லிகை மணக்கவில்லை.
கீழ்த்தளத்தில் நண்பர்கள் இல்லை. அவர்களைத் தேடி நடந்துகொண்டிருந்தேன். அவர்களைக் காணவில்லை. நான் வாய்விட்டு, “எங்க போனாணுங்க?” என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.
உடனே, “கரும்பு ஜூஸ் குடிக்க” என்று அழகிய பெண் குரல் என் முதுகுப் பக்கத்திலிருந்து ஒலித்தது.
நான் திரும்பிப் பார்த்தேன். யாரும் இல்லை. எனக்கு உடல் நடுங்கியது. நாங்கள் வண்டியை நிறுத்திய இடத்திற்கு எதிர்ப்புறத்தில் ‘கரும்புஜூஸ்’ கடை இருந்தது என் நினைவுக்கு வந்தது. அதை நோக்கி வேகமாக ஓடினேன். அங்கு என் நண்பர்கள் கரும்பு ஜூஸைக் குடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களுள் ஒருவன் என்னைப் பார்த்ததும், “எங்கடா போன, லூசுப் பயலே?” என்று கேட்டனர்.
நான் ஏதும் சொல்லாமல் எனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தேன். யாரும் இல்லை. என் கேள்விக்குச் சரியாகப் பதில் கூறிய அந்தப் பெண் யார் என்று தெரியாமல் திகைத்து நின்றேன். எனக்கும் ஒரு ஜூஸ் வாங்கிக்கொடுத்தார்கள்.
நான் அதைப் பருகும் போது, “எனக்கு?” என்று கேட்டு, பெண் குரல் எனக்குப் பின்னாலிருந்து ஒலித்தது. நான் உடனே என் நண்பர்களைவிட்டு விலகி,
வேப்பமரத்தடிக்கு வந்தேன். மெல்லிய குரலில், தயங்கி தயங்கி, “நீ யார்?” என்று கேட்டேன்.
“நான் மல்லிகா”.
“யே எனக்குப் பின்னால இருக்க?”
“நீ எனக்குப் பின்னாலத்தான வந்து மோதுன?”
“அதுக்கு?”
“அதான் நான் உனக்குப் பின்னால இருக்கே”.
“உனக்கு என்ன வேணும்?”
“ஒன்னும் வேணா?”
“அப்புறம் எதுக்கு எனக்குப் பின்னாலேயே வந்துக்கிட்டு இருக்க?”
“சும்மாத்தான்”
“சரி. போ.”
“போக மாட்டேன்.”
“யே?”
“நான் தனியா இருக்கேன்.”
“அதுக்கு?”
“நா உங்கூடவே இருக்கப்போறேன்.”
“யாராவது பார்த்தா என்ன நெனைப்பாங்க?”
“என்னை யாராலும் பார்க்க முடியாது.”
“ஓ! சரி. நான் உன்னைப் பார்க்கணும். முன்னாடி வா.”
“உன்னாலும் என்னைப் பார்க்க முடியாது. அதுமட்டுமில்ல என்னால உன்னோட முதுகுப் பக்கத்தைவிட்டு வரவேமுடியாது.”
“சரி. ஆனா, நான் இப்படிப் பேசுறத, இப்படித் தனியாப் பேசுறத யாராவது பார்த்தா என்னை என்ன நினைப்பாங்க?”
“லூசுன்னுதான்”
“இப்பவே என்னோட ஃபிரண்ட்ஸ் அப்படித்தான் என்னைக் கூப்புடுறாங்க.”
“ஓ!”
“ஜூஸ் கேட்டீயே! இந்தா, குடி.”
“நான் சும்மாக் கேட்டேன். என்னால எதையும் தொட முடியாது. சாப்பிட முடியாது.”
“ஓ!”
“சரி, நான் இதைக் குடிக்கட்டுமா? உனக்கு ஒன்னும் வருத்தமில்லையே!”
“இல்ல. ஆனா, இந்த ஜூஸ்ல ரொம்ப அழுக்கு இருக்கு. நிறைய கிருமிகள் இருக்கு. இதக் குடிக்காதே!”
“அதெப்படி உனக்குத் தெரியும்?”
“எனக்கு எல்லாந் தெரியும்.”
“சரி. அப்ப நா இதைக் கீழே ஊத்திடட்டுமா?”
“வேண்டாம். செரட்டையில (கொட்டாங்குச்சி) ஊத்தி, நாயிக்குக் கொடு.”
“செரட்ட எங்க இருக்கு?”
“அந்த மரத்துக்குப் பின்னால.”
“நாயி?”
“நீ ஊத்து, அது வரும்.”
“எங்கிருந்து?”
“அந்தப் புதருக்குள்ள இருந்து.”
“சரி” என்று கூறிவிட்டு அவ்வாறே செய்தேன். பின்னர் நான் என் நண்பர்களுடன் சேர்ந்து, என்னுடைய வண்டியையும் எடுத்தேன்.
என் நண்பர்கள் அனைவருடைய வண்டியும் முன்னால் சென்றன. நான் மட்டும் மெதுவாக அவர்களுக்குப் பின்னால் ஓட்டிக்கொண்டு வந்தேன். அப்போது மல்லிகாவிடம் தயங்கி தயங்கிப் பேச்சுக்கொடுத்தேன்.
“மல்லிகா! நீ எனக்குப் பின்னால வண்டியில எப்படி உட்கார்ந்துவர்றே?”
“எப்படின்னா?”
“அதாவது ஒரு பக்கம் கால்போட்டா, இல்ல இரண்டு பக்கமும் கால்போட்டா?”
“நான் எப்படிக் கால்போட்டு உட்கார்ந்தா உனக்குப் பிடிக்கும்?”
நான் பதில் ஏதும் சொல்லாமல் வீடு வந்து சேர்ந்தேன்.
வீட்டுக்குள் நுழையும்போதே அம்மா, “என்னடா உன்னோட மொகம் பேயடிச்ச மாதிரி இருக்கு?” என்று கேட்டுவிட்டார். எனக்குப் ‘பகீர்’ என்றது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே, “ஆமாம்மா, மல்லிகா பேயி” என்றேன். அம்மா அடுப்படிக்குச் சென்றார்.
உடனே, மல்லிகா என்னிடம், “நா ஒன்னும் பேயி இல்ல, மோகினியாக்கும்” என்றாள்.
நான் மெல்லிய குரலில், “சரி சரி. சும்மா இரு. இனிமே நான் தனியா இருக்கும் போதுதான் நா உங்கூடப் பேசுவேன். நீயும் அப்பத்தான் எங்கூடப் பேசனும். புரியுதா?” என்றேன்.
அவள் ஏதும் பேசவில்ல. காரணம், அப்போது அம்மா மீண்டும் அடுப்படியிலிருந்து என்னருகில் வந்து, “குளிச்சிட்டு வா, சாப்பிடலாம்” என்றார்.
நான் என்னறைக்குச் சென்றேன். உடையைக் கழற்றும்போது, மல்லிகா எனக்குப் பின்னால் இருப்பது நினைவுக்கு வந்தது. ‘அடடா!’ என்று நினைத்துக் கொண்டு அவளிடம் மெல்லிய குரலில் பேசத்தொடங்கினேன்.
“மல்லி! நா டிரெஸ் மாத்தனும். குளிக்கனும்” என்றேன்.
“மாத்து. குளி” என்றாள்.
“நீயும் எங்கூடவே இருக்கல்ல? என்னால எப்படித் தனியா மாத்த முடியும், குளிக்க முடியும்?”
“அதுக்கு நா ஒன்னும் செய்ய முடியாது”
“அப்ப நா குளிக்க மாட்டேன்”
“அது உன்னிஷ்டம்”
குளிக்காமலேயே சாப்பிட வந்தேன். உடனே அம்மா கோவித்துக்கொண்டார். “இப்பெல்லாம் நீ எம் பேச்சைக் கேட்குறதே இல்ல” என்றார்.
உடனே மல்லிகா, “இப்பல்லாம் இவரு எம் பேச்ச மட்டுந்தான் கேட்குறாரு” என்றாள்.
எனக்குப் ‘பக்’ என்றது. ‘நல்லவேளை மல்லிகா பேசுவது என்னைத் தவிர யாருக்கும் கேட்காது’ என்பதை நினைத்து நிம்மதியாக இருந்தேன்.
அம்மா தொடர்ந்து பேசினார். “மலைக்கோட்டைக்குப் போகாதேன்னா, பேற. குளின்னா, குளிக்க மாட்டுற” என்றார்.
நான் ஏதும் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன். விரைவாகச் சாப்பிட்டு விட்டு எழுந்தேன். என்னறைக்குச் சென்று மல்லாந்து படுத்துக்கொண்டேன். ஏதோ ஓர் உடல்மீது நான் படுத்திருப்பதைப் போலவே உணர்ந்தேன். உடனே குப்புறப்படுத்தேன். என் மீது யாரோ படுத்திருப்பது போல இருந்தது. ஒருசாய்ந்து படுத்தேன். என் முதுகை ஒட்டியபடி யாரோ படுத்திருப்பதை நன்றாகவே என்னால் உணரமுடிந்தது. வேறுயாராக இருக்கும் எல்லாம் இந்த மல்லிதான் என்று நினைத்துக்கொண்டு தூங்கிவிட்டேன்.
காலையில் எழுந்ததும் காப்பியைக் குடித்துவிட்டு, அம்மாவிடம், “அம்மா! நா ஒடனே அந்த மலைக்கோட்டைக்குப் போகணும். போகட்டா” என்று அனுமதி கேட்டேன்.
“வேண்டாம்”.
நான் அம்மாவிடம் ஏதும் சொல்லாமல், அம்மாவின் பேச்சை மீறி, வண்டியை எடுத்துக்கொண்டு நேராக அந்தப் பழைய மலைக்கோட்டைக்குச் சென்றேன். வண்டியை நிறுத்திவிட்டு, வேகமாக ஓடி, அந்தக் குறுகலான பாதைக்குச் சென்றேன்.
‘மல்லிகாவை அழைத்துவந்த அதே இடத்திலேயே எப்படியாவது அவளை விட்டுவிட்டு வந்துவிட வேண்டும்’ என்று தீர்மானித்துத்தான் இங்கு வந்தேன். ‘ஆமாம்! முதுகில் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு எப்படிக் காலமெல்லாம் வாழ்வது?’ புதர்மண்டிய அந்தப் பாதையில் மெல்ல மெல்ல நடந்தேன்.
முல்லைப் பூவின் மணம் கமழ்ந்தது. ‘இந்தமுறையும் விழுந்துவிடக் கூடாது’ என்று நினைத்து, மிகவும் கவனமாகப் பாதையை மட்டுமே பார்த்து பார்த்துக் கால்வைத்து நடந்தேன். நான் நிமிர்ந்தே பார்க்கவில்லை.
என் முன்தலை யாருடைய மார்பின் மீதோ மோதியது. நிமிர்ந்தேன். ஏதும் தெரியவில்லை. நான் சுயநினைவினை இழந்தேன். கண்விழித்தபோது, என் தலையில் இருந்த சிறு வீக்கம் சரியாகியிருந்தது. நான் எழுந்தேன். முல்லை மணம் இல்லை. திரும்பிப் பார்க்காமல் வேக வேகமாக நடந்து கீழே இறங்கிவந்தேன். எனக்கு முல்லையும் பிடிக்கும்தான்.
வண்டியை எடுக்கும்முன்பாக என் முதுகுக்குப் பின்னால் ‘மல்லிகா இருக்கிறாளா?’ என்பதனை அறிந்துகொள்வதற்காக, மெல்லிய குரலில், “மல்லிகா நீ இருக்கீயா?” என்று கேட்டேன்.
“இருக்கேன். என் தங்கச்சியும் இருக்கிறாள்” என்றாள் மல்லிகா.
நான் அதிர்ச்சியடைந்து, “என்னது? உன் தங்கச்சியுமா? ரெண்டுபேருமா என் முதுகுக்குப் பின்னால இருக்கீங்க?” என்று கேட்டேன்.
உடனே, “இல்ல. அக்கா மட்டுந்தான் உங்களுக்குப் பின்னால இருக்காங்க. நா உங்களுக்கு முன்னால இருக்கேன்” என்று வேறொரு பெண்குரல் என் முன்னாலிருந்து ஒலித்தது. எனக்குத் தலையே சுற்றியது. இருந்தாலும் சற்றுத் துணிவை வரவழைத்துக்கொண்டு அதனிடம் பேசினேன்.
“நீ யார்?”
“நான் கொடிமுல்லை. மல்லிகாவின் தங்கை” என்றாள்.
நான் வண்டியை எடுத்து, ஓட்டத் தொடங்கினேன். அப்போது நான் முல்லையிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்க நினைத்தேன்.
“முல்லை!”
“என்னங்க?”
“உன் அக்கா எனக்குப் பின்னாலே உட்காந்திருக்கா? நீ எங்க உட்கார்ந்திருக்க?”
“நா எங்க உட்காரனும்ணு நீங்க நினைக்குறீங்க?
“இல்ல, சும்மாதான் கேட்டேன்”.
“நா பெட்ரோல் டேங்கில்தான். ரெண்டு பக்கமும் கால்போட்டபடி.”
“ஓ! சரி, உன் அக்கா?”
“அத, அவகிட்டயே கேட்க வேண்டியதுதானே?”
“முல்ல! அவரு எங்கிட்டல்லாம் பேச மாட்டாரு, எதையும் கேட்கமாட்டாரு. உங்கிட்டத்தான் பல்லக்காட்டுவாரு”.
“சரி, சரி. பேச்சைவிடுங்க” என்று கூறிவிட்டு, வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். இல்லை. வந்துவிட்டோம். வீட்டு வாசலில் சற்று நேரம் நின்றபடி, ‘இனி, என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்தேன்.
எனக்குப் பின்னால் ஒரு பெண். முன்னாலும் ஒரு பெண். நான் எந்தப் பெண்ணிடமிருந்து விலகிச்சென்றாலும், ஒரு பெண்ணிடம் சென்று சேருவேன். இனி நான் என்றைக்கும் தனியன் அல்லன். எனக்குத் தனிப்பட்ட ஏதும் இல்லை. நான் என்றும் எங்கும் தனித்து நிற்கவோ, நடக்கவோ, படுக்கவோ முடியாது. இனி நான் என்றைக்கும் எப்போதும் முன்னும் பின்னும் பெண்வைத்துப் பொதியப்பட்ட ஒரு பொதிதான். எனக்கு நானே சுமையாகிப்போன பொதி. வேறுவழியில்லை. இரண்டு பூக்களுக்கு மத்தியில் நசுங்கும் வண்டென வாழ வேண்டியதுதான்.