கண்ணாடிச் செருப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 14, 2025
பார்வையிட்டோர்: 138 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

I

நெடுங்காலத்திற்கு முன் அல்லி என்னும் அழகிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளுடைய தாய் இறந்துவிட்டதால் சமையல் வேலையெல்லாம் அவளே பார்த்துவந்தாள். 

அவளுக்குத் தமக்கைகள் இருவர் இருந்தனர். அவர்கள் அல்லியை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தனர். வீட்டு வேலை முழுவதும் அல்லியையே செய்யச் சொன்னார்கள். அல்லிக்கு நல்ல துணி கூடக் கிடையாது. 

ஒருநாள் அல்லியின் தமக்கைகள் இருவரும் ஆட்டம் போட்டுக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். 

“எங்களை இளவரசர் விருந்துக்கு அழைத்திருக் கிறார்,” என்று அவளிடம் சொன்னார்கள். விருந் துக்கு ஏற்படுத்திய நாள் வந்தது. இருவரும் நல்ல பட்டு ஆடைகளை உடுத்திக்கொண்டு அரண்மனைக்குப் போனார்கள். அல்லியை வீட்டிலேயே நிறுத்தி விட்டுப் போய்விட்டார்கள். அல்லி தன் கிழிந்த பாவாடையைப் பார்த்துக் கண்ணீர் விட்டாள். 

“நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்! அவர் கள் பட்டாடை உடுத்தும்போது நான் கந்தலைக் கட்டிக்கொண்டு இருக்கிறேனே!” என்று அழுதாள். இப்படிச் சொல்லி வாய்மூடுவதற்குள் அவள் முன் ஓர் அழகிய தேவதை தோன்றிற்று. அதன் கையில் ஒரு மந்திரக்கோல் இருந்தது. 

“குழந்தாய்! நான் உனக்கு உதவி செய்ய வந்திருக்கிறேன்; நீயும் இளவரசருடைய விருந்துக் குப் போகலாம்; நீ முதலில் தோட்டத்திற்குப் போய் ஒரு பெரிய பூசணிக்காய் கொண்டுவா!” என்று தேவதை சொல்லிற்று. அல்லி அப்படியே கொண்டு வந்தாள். தேவதை மந்திரக்கோலினால் பூசணிக் காயைத் தட்டியது. கண்ணை மூடித் திறப்பதற்குள் அந்தப் பூசணிக்காய் ஒரு தங்கநிறமான வண்டியாக மாறிவிட்டது. 

அல்லியின் வீட்டில் ஓர் எலி வளை இருந்தது. அதில் இரண்டு பெரிய எலிகளும் இரண்டு சிறிய எலிகளும் இருந்தன. தேவதை தன் மந்திரக் கோலின் உதவியினால் இரண்டு பெரிய எலிகளையும் இரண்டு வெள்ளைக் குதிரைகளாக மாற்றிவிட்டது. இரண்டு சிறிய எலிகளும் வண்டிக்கா ரனாகவும் வேலைக்காரனாகவும் மாறிவிட்டன. 

“நான் இந்தக் கந்தல் துணியைக் கட்டிக் கொண்டு எப்படி அரண்மனைக்குப்போவது?” என்று அல்லி கேட்டாள். “அப்படியா, சரி சரி!” என்று சொல்லிக்கொண்டே தேவதை மந்திரக்கோலை அல்லியின் தலைமேல் தடவிற்று. கந்தல் துணி சிவந்த நிறமுள்ள உயர்ந்த பட்டு உடையாக ஆய் விட்டது. 

அல்லி காலில் போட்டிருந்த கிழிந்த பழைய செருப்பு அழகிய கண்ணாடிச் செருப்பாக மாறியது. 

“நான் சொல்வதை நன்றாய்க் கேள்! நீ பன் னிரண்டு மணி அடிப்பதற்குள் அரண்மனையிலிருந்து வெளியில் வந்துவிடவேண்டும். அந்த நேரம் வந்த வுடன் உன் வண்டி பூசணிக்காயாக மாறிவிடும். உன் குதிரைகளும் வேலைக்காரர்களும் எலிகளாய் மாறிப்போவார்கள். நீயும் பழைய அல்லியாக ஆய் விடுவாய்!” என்று தேவதை எச்சரிக்கை செய்தது. அல்லி பன்னிரண்டு மணிக்குள் வந்து விடுவதாக வாக்களித்துவிட்டு, அரண்மனைக்குப் போனாள். 

II 

அரண்மனையில் இளவரசர் அல்லியைப் பார்த் தார். அவளுடைய அழகைக் கண்டு அவர் மயங்கிப் போய்விட்டார். அவர் அல்லியையே திருமணம் செய்துகொள்வதென்று உறுதி செய்துகொண்டார். அன்று இரவு அல்லி இளவரசருடன் பேசிக் கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தாள். நேரம் போவதுகூட அவளுக்குத் தெரியவில்லை. 

மணி பன்னிரண்டு அடித்துக்கொண்டு இருந் தது. ஒன்று, இரண்டு, மூன்று…! அல்லி ஓட்டம் பிடித்தாள். அரண்மனை வாசற்படியில் இறங்கி ஓடும்போது அவளுடைய கண்ணாடிச் செருப்பு ஒன்று அங்கே விழுந்துவிட்டது. மணி அடிப்பதும் நின்றது. அவள் தன் வண்டியின் பக்கத்தில் வந்து சேர்ந்தாள். அதற்குள் வண்டி பூசணிக்காயாகமாறி விட்டது. பாவம்; என்ன செய்வாள்! குதிரைகளும் வேலையாட்களும் எலிகளாய் மாறிவிட்டனர்! அல்லி தன் கந்தல் துணியுடன் வீட்டிற்கு நடந்து சென்றாள். 

அரண்மனை வாசற்படியில் கிடந்த கண்ணாடிச் செருப்பை இளவரசர் கண்டார். தான் காதல் கொண்ட பெண்ணின் செருப்பு என்பது அவருக்குத் தெரியும். உடனே அவர் தன் காதலியைத் தேடிப் புறப்பட்டார். எத்தனையோ பெண்கள் அந்தக் கண் ணாடிச் செருப்பைப் போட்டுப் பார்த்தார்கள். ஒரு வருக்கும் அது சரியாக இல்லை. 

முடிவில் இளவரசர் அல்லியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அல்லியின் தமக்கைமார் இருவரும் கண்ணாடிச் செருப்பைப் போட்டுப் பார்த்தார்கள். அவர்களுடைய கால்கள் அதில் நுழையவில்லை. இளவரசர் காத்துக்கொண்டு இருந்தார். அல்லி தன் வேலைகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு அங்கே வந்தாள். 

“நான் இதைப் போட்டுப் பார்க்கலாமா ?” என்று அல்லி கேட்டாள். “இதைப் போட்டுக் கொண்டு நடக்க உனக்கு என்னடி தெரியும்?” என்று தமக்கை ஒருத்தி சொன்னாள். ‘இதை எந்தக் காலில் போடுவது என்று உனக்குத் தெரி யுமா?” என்று மற்றொருத்தி கேட்டாள். 

“எதற்கும் அவள் போட்டுப் பார்க்கட்டுமே,” என்று இளவரசர் சொன்னார். அல்லி கண்ணாடிச் செருப்பைக் காலில் போட்டாள். அவளுக்கு அள வெடுத்துச் செய்ததுபோல் அது சரியாக இருந்தது. அல்லி எழுந்து நின்றாள். அவளுடைய கந்தல் துணி நல்ல பட்டுப் புடவையாக மாறிவிட்டது. அவ ளுடைய இரண்டு கால்களிலும் அழகிய இரண்டு கண்ணாடிச் செருப்புகள் தோன்றின. 

அரண்மனையில் தான் கண்டு காதல் கொண்ட பெண் அல்லியே என்பதை இளவரசர் உணர்ந்தார். உடனே திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். அல்லி இளவரசருடன் இன்பமாய் வாழ்ந்துவந்தாள். 

– கழகக் கதைச் செல்வம், முதற் பதிப்பு: டிசம்பர் 1941, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *