பேய் விடுதி..!





(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4

எல்லாரும் படுக்கையில் படுத்து விளக்கை அணைத்த பிறகுதான், “ஏன் பேகம்? ஆவின்னு ஒன்னு இருக்கா?” நிரஜா பேச்சை ஆரம்பித்தாள்.
மற்ற மூவரும் காதுகளைத் தீட்டிக்கொண்டார்கள்.
“எந்த நேரத்துல என்ன பேச்சுடி பேசுறே? பேசாம மூடிக்கிட்டு படு. காலையில பேசலாம்.” மாலா கடுப்படித்தாள். அவளுக்குப் பேய் பிசாசு என்றால் பயம்.
“உனக்குப் பயமா இருந்தா கண்ணையும் காதையும் மூடிக்கோ.”
“காதை மூடிக்கிறேன். ஆனா கண்ணை மூடினால் வெறும் பேய், பிசாசா தெரியுது.” நடுங்கினாள்.
“அப்படின்னா நீ போய் ஆர்த்தியோட படு. நான் பேகத்துக்கிட்டே பேசறேன்.”
“வாடி!” ஆர்த்திக்கும் பேகம் என்ன சொல்கிறானென்று கேட்க ஆசை. மாலாவை அழைத்தாள்.
அவள் அழைத்ததே போதுமென்று உடனே எழுந்து ஓடி வந்து படுத்து ஒட்டிக் கொண்டாள்.
“பேகம் உனக்குப் பயமில்லியே?” மீனா கேட்டாள்.
“இல்லே.”
“அப்படின்னா சொல்லு. பேய் பிசாசு ஆவின்னு ஒன்னு இருக்கா?”
“இருக்கிறதா கேள்வி. நம்பிக்கை.”
“எப்படி?“
“விபத்து, தற்கொலைன்னு விதி முடியாம செத்துப் போற உயிர்களுக்கு மேலே இடமில்லையாம். அதுவரை அந்த உயிர் இங்கே ஆவியாய் உலவுதாம். அந்த ஆவி காற்றைவிட கொஞ்சம் கனமாய் இருக்கிறதாய் ஆராய்ச்சியாளர்கள், பேய் பிசாசு நம்பிக்கையாளர்கள் சொல்றாங்க. ஆனா அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது. கடவுள் போல இதுவும் சர்ச்சைக்குரிய விசயமாய் இருக்கு.”
“அவிட்டம்?”
”பொணத்தைச் சுடுகாட்டுல பொதைச்சப் பிறகு அது அவிட்டமாய் வீட்டுக்கு வந்து போறதா கிராமத்துல இன்னும் நம்பிக்கை இருக்கு. சுடுகாடு துாரம் இருக்கிறது, பொணம் துாக்கிப் போகும் போது பொரி துாவறது, மூலைக்கு மூலை பச்சை மட்டை கீத்து வைச்சு அது மேல இளநி சீவி வைக்கிறதுதெல்லாம் பொரியைப் பொறுக்கித் தின்னுட்டு தாகத்துக்கு இளநியைக் குடிச்சுட்டு வர்றதுக்குள்ள பொழுது விடிஞ்சுடும் அவிட்டம் வீட்டுக்கு வராம திரும்பி சுடுகாட்டுக்குப் போயிடும்ன்னு நம்புறாங்க.”
“இதெல்லாம் இந்துக்கள் பழக்க வழக்கம் நம்பிக்கையாச்சே! உனக்கு எப்படி தெரியும்?“ நிரஜா தடாலடியாகக் கேட்டாள். பேகத்திற்கு அப்போதுதான் தன் தவறு தெரிந்தது.
அதிகம் ஜாக்கிரதை தேவை! என்பதும் புரிந்தது.
“எங்க குடும்பம் கிராமத்துல இருக்கு. அங்கே நாங்க மட்டும்தான் முஸ்லீம். மத்தவங்க எல்லாரும் இந்து, உங்க பழக்க வழக்கமெல்லாம் எங்களுக்குத் தெரியும். எல்லாரும் எங்களை முஸ்லீம்ன்னு ஒதுக்காம முறை வைச்சி அழைச்சுப் பழகுவாங்க. எங்க வாப்பா அங்கே எல்லாருக்கும் வாப்பா. என் அம்மா. எல்லாருக்கும் மதனி. நான் தங்கச்சி. அண்ணன் பேர் மரைக்கான்.” சொன்னான்.
யாரும் பதில் பேசவில்லை. மௌனமாக இருந்தார்கள்.
“இந்த இந்துக்கள் நம்பிக்கையைத் தகர்க்கத்தான் கிருஸ்டின், முஸ்லீம்கள் ஊருக்கு நடுவுல… இல்லே, கொஞ்சம் ஒதுக்குப்புறமா கல்லறை, பொதைக்கிற மைதானங்களை வைச்சுக்கிறதா எனக்குத் தோணுது.” இடையே தன் கருத்தையும் விட்டான்.
“பேகம்! நீ பேயைப் பார்த்திருக்கீங்களா?” மீனா கேட்டாள்.
“பார்க்கலை.”
“பேய் கறுப்பு உருவமாய் வரும் வெள்ளை உருவமாய் காலில்லாம நடந்து போகும்ன்னு சொல்றதையெல்லாம் நம்புறீயா?”
“பேச்சு போறும்டி. துாங்குங்க!” மாலாவிற்கு அதற்கு மேல் பயம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சொன்னாள்.
நிரஜாவிற்கு அவளை இன்னும் சீண்டிப்பார்க்க ஆசை.
“பேகம் ! பதில் சொல்லு?” என்றாள்.
“வேணாம். அப்புறம் மாலாவுக்கு நாம பேய் ஓட்டனும்..” இவனுக்கும் நிறுத்த ஆசை. சொன்னான்.
“கடைசியாய் ஒரு கேள்வி. விபத்து, தற்கொலை, கொலைகள்ன்னு உயிர்விட்ட இடத்திலெல்லாம் இந்த கத்தல் அலறல்… சாத்தியமா…?” கேட்டாள்.
“உண்மை!” என்று ஒரே போடாய்ப் போட்டு பேகம் குப்புறப்படுத்தான்.
அதற்கு மேல் நிரஜாவும் கேட்கவில்லை. துாக்கம் வந்தது கண்ணை மூடினாள்.
பேகம் துாங்க வில்லை. கண்களை மூடி காதுகளைத் தீட்டிக் கொண்டான்.
மறு நாள் மாலைதான் பேகம்…. ஆர்த்தியின் உதவியுடன் விடுதியின் எல்லா அறைகளுக்கும் போய் எல்லோரையும் பார்த்தாள்.
ஏறத்தாழ எல்லா அறைகளும் ஒரே அளவில் நாலு கட்டில், ஒரு மேசை, நிலைக்கண்ணாடிகளுடன் இருந்தது. புத்தகங்கள் ஒழுங்கற்று தாறுமாறாகவும் கொடிகளில் அவரவர் ஐயிட்டங்களும் தொங்கின. சுவர்களில் இந்தி, தமிழ் சினிமா ஆண் நட்சத்திரங்களின் போஸ்டர்கள் சில அறைகளில் ஜட்டியுடன் முறுக்கேறிய ஆண் அழகர் போஸ்டர்கள் என்று அவரவர் ரசனைக்கேற்ப இருந்தன.
சில மாணவிகள் கைகளில் செல் போன்கள் வைத்திருந்தார்கள். ஒரு சிலர் தங்கள் அறைகளில் சொந்தமாக தொலைக்காட்சி பெட்டிகள் வாங்கி வைத்திருந்தார்கள். இன்னும் சில இடங்களில் டேப் ரிக்கார்டர், வி.சி.டி, எப்.எம் ரேடியோ என்று வசதிக்கேற்ப இருந்தது.
விடுதி… வேலைக்குச் சென்று திரும்பும் பணிப் பெண்கள் தங்குமிடம் போலிருந்தது.
“இப்படி மாணவிகள் வசதியாய் இருந்தால் எப்படி படிப்பார்கள்…? படிப்பில் எவ்வாறு கவனம் செல்லும்..?” ஒரு பேட்டியின் போது ஒரு முக்கிய புள்ளி ஒருவர் சொன்னது இவனுக்குள் ஞாபகம் வந்தது.
“கல்வி மொதல்ல தொண்டாவும், அறிவை வளர்க்கிற இடமாவும் இருந்துது, இப்போ நல்ல வியாபாரமாகிப் போச்சு. மருத்துவக் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, கலைக்கல்லுாரின்னு எல்லாவகைக் கல்லுாரிகளையும் தனியார்கள் சகட்டு மேனிக்குத் திறக்குறாங்க. அவர்களுக்கு வியாபாரம் நடக்கனும், கல்லா நிரம்பனும் என்பதற்காக மாணவ மாணவிகளுக்குச் சகல வசதிகளும் செய்ஞ்சு தர்றாங்க. மாணவ மாணவிகளும் இப்போ படிப்பைப் பத்தி கவலைப்படுறதில்லே. காசு கொடுத்து வாங்கிடலாம்ங்குற தைரியத்துல இஷ்டப்படி இருக்காங்க. நிர்வாகத்தாலேயும் இதை கட்டுப்படுத்த முடியலை. அவர்களே வசதி செய்து கொடுத்துட்டு கட்டுப் படுத்துறதுங்குறது பைத்தியக்காரத்தனம். மேலும் படிக்கிறவங்ககிட்டேயே அவுங்க லட்சக்கணக்குல கை வீட்டி காசு வாங்கிடறதுனால வாங்கினவங்க கொடுத்தவனுக்கடிமையாய் வாய் மூடிப் போறாங்க. கை நீட்டி காசு வாங்காத எவரோ… அவர்தான் நிர்வாகத்தைச் சரியாய் நடத்த முடியும்”.
“முன்னேயெல்லாம் நாட்டுக்கொரு யுனிவர்சிட்டி இருந்துது. அதுவே பின்னால மாநிலத்துக்கொன்னாய் LOTH…. இப்போ மாநிலத்துக்கள்ளேயே பல யுனிவர்சிட்டிகள். அததுக்குன்னு சில சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், வேண்டியப்பட்டவர்கள் துணை வேந்தர்கள். நாளைக்கு இந்த நிலைமை இன்னும் மாறும். ஊருக்கொன்னு வீட்டுக்கொரு யுனிவர்சிட்டின்னு யுனிவர்சிட்டின்னு ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லே. இப்பவே இதையெல்லாம் சரியான சட்டதிட்டங்கள் கொண்டு வந்து சரிப்படுத்தினாால்தான் எதிர்காலக் கல்வி தரமானதாய் இருக்கும்.” நெத்தியடியாய்ச் சொன்னார். அவர் சொன்னது நூற்றுக்குநுாறு உண்மையாகிவிடலாம் ! பேகத்திற்கு நினைக்கவே பயமாக இருந்தது.
விடுதியில் பெரும்பாலோர் ஆர்த்திக்கு நன்கு தெரிந்தவர்களாகவும், பழக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். ஒரு சிலர் மற்றவர்களை மதிக்காதவர்கள் போல் விதி விலக்காய் நடந்து கொண்டார்கள்.
எல்லா அறைகளிலுமே மாணவிகள் படிப்பைத் தவிர விளையாட்டு, சினிமா என்று மற்றவைகளில் ஊக்கமாக இருந்தார்கள். வீண் அரட்டை, கலாட்டாக்ளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் உச்சிக்குப் போய் சீட்டாடி, சிகரெட் பிடித்து…. கண்ணாடி டம்ளர்கள் மோதாமல் இருந்தார்கள். அதுவும் அறைக்கதவை மூடிக்கொண்டு பத்து மணிக்கு மேல் அரங்கேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு அறையில் கோலாகலமாக கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம். அதில் பாட்டில்கள் உடைப்பதற்குப் பதில் கொகோ கோலா உடைத்தார்கள். அதையே பீர் பிராந்தியாக நினைத்து சியர்ஸ் மோதி அருந்தினார்கள்.
பெண்களுக்கு இந்த கொண்டாட்டம் கோலாகலம், துணிச்சல் எப்படி வந்தது, உறுப்புகளைத் தவிர எல்லாருக்கும் இதயம் மூளை எல்லாமே ஒன்றென்பதால் ஆண்கள் போல பெண்கள் நடக்கிறார்களா?!
இதில் யோக்கியமாகவும் சிலர் இருந்தார்கள். இவர்களையெல்லாம் விட்டு விலகி மைதானத்திற்குப் போய் மரத்தடியில் அமர்ந்து படித்தார்கள். அங்கும் சில மாணவிகள் செல் போனில் தங்கள் பாய் பிரண்டுகளோடு கடலைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலதுகள் பால்கனியில் நின்று…. சாலையில் போகிற வருகிற இளைஞர்களைப் பார்த்து….
“அந்த சிகப்புச் சட்டை ஆள் ஜம்முன்னு ஜோராப் போறான்ல்லே?“
“ஐயே…! அவன் நடையும் உடையும் சகிக்கலை!”
“அவனுக்குத் தொங்கு மீசை”
“இவனுக்கு முறுக்கு மீசை.”
“அவன் சொங்கி”
“அவன் சொட்டை.”
“அவனுக்கு அம்பது மார்க் போடலாமா?“
“ம்ஹீம். முப்பது தேற மாட்டான்!“
“அவன் அணைச்சா நீ தாங்கமாட்டேடி.”
“நான் அணைச்சா நொறுங்கிப் போவான்.”
இன்னும் கொச்சை கொச்சையான கொச்சை கொச்சையான கெட்ட பேச்சுகள், கேலி, சிரிப்புகள், அரட்டைகள்.
‘பெண்கள் இப்படியெல்லாம் கூட ஆண்கள் போல் நடப்பார்களா?’ விக்னுவிற்கு ஜீரணிக்கவே கஷ்டமாக இருந்தது.
இந்த இரவும் புரண்டு பரண்டு படுத்தான்.
கண்களை மூடி காதுகளை கூர்மையாக்கிக் கொண்டான்.
சிறிது நேரத்தில் அருகில் மல்லிகைப் பூ வாடை அடித்தது.
‘யார் அது? மோகினி பிசாசா ?!’ இவனுக்குள் ஐயம் தலை துாக்கியது.
“மோகினி பிசாசுகிட்டே இருந்துதான் தம்பி மல்லிகைப் பூ வாடை வரும். அதுக்கு மல்லிப்பூன்னா இஷ்டம். அசல் பொண்ணாவே வந்து ஆளை மயக்கிப் போகும். தனியே கொண்டு போய் அவனை அடிச்சு சாகடிக்கும்.!” சிறுவயதில் பாட்டி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
‘இங்கே மோகினி பிசாசா ?!…’ கண் விழித்தான். ஆனால் அருகில் ஒரு கறுப்பு உருவம் முரட்டுத்தனமாக கவிழ…
அடுத்த வினாடி…
“பேய்..! பே..பேய்!“ விக்னு அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் பெண் குரலிலேயே அலற…
ஆர்த்தி உட்பட அனைவரும் பேகம் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தார்கள்
ஆர்த்திதான் படபடத்து எழுந்து சுவரிலுள்ள சுவிட்சைப் போட்டாள். அறையில் விளக்கொளி பளீரென்று அடிக்க..
பேய் இல்லை!
பேகம் மட்டும் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்திருந்தாள். உடல் வேர்த்து முகம் வெளிறி இருந்தது.
கனவு..! கனவு….! முணுமுணுத்தாள்.
அத்தியாயம் – 5
அப்போதைக்கு யாரும் யாரும் ஒன்றும் பேசாமல் படுத்தாலும் ஆர்த்திக்கு அதிர்ச்சி ஆச்சரியமாக இருந்தது. இரவின் பாதிப்பு காலையில் எழுந்து பேகம் யாருடனும் சரியாய் பேசாமல் இருந்தது வேறு இவளுக்குக் கஷ்டமாக இருந்தது.
கல்லுாரிக்குச் சென்றும் மனசு சரி இல்லை. தலைவலி என்று காரணம் எழுதி விடுப்பு எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். செல் போன் எடுத்து விக்னுவுடன் தொடர்பு கொண்டாள்.
“எங்கே இருக்கீங்க?”
“அறையிலதான்.”
“நான் உங்கிட்ட வரனும். எந்த ஓட்டல் விபரம் சொல்லுங்க?”
“ஏன்?“
“உங்க கூட பேசனும்….”
“என்ன பேசனும்?”
“உங்களுக்குப் பேய் தொட்டு ஜீரமா என்னன்னு எனக்கு கலக்கமா இருக்கு.”
“அதெல்லாம் ஒன்னுமில்லே.”
“வந்து பார்த்தாதான் எனக்கு திருப்தி.”
“சரி.” விலாசம் சொன்னான்.
ஆட்டோ பிடித்து அந்த நட்சத்திர ஓட்டலில் போய் இறங்கினாள். அறையைக் கண்டுபிடித்து அழைப்பு மணி அழுத்தி கதவு திறந்து உள்ளே நுழைந்து விக்னு நெற்றியில் கைவைத்துப் பார்த்தபிறகே அவளுக்குத் திருப்தி.
“ரொம்ப பயந்துட்டேன்.” அமர்ந்தாள்.
“நான் பயப்படலை.” இவனும் அமர்ந்தான்.
“ராத்திரி உண்மையிலேயே உங்களைப் பேய் அழுத்திச்சா ?”
“முதல்ல நீதான் என்னைக் கட்டிப் பிடிக்கிறீயோன்னு நெனைச்சேன். அந்த முரட்டுத்தனமான அழுத்தல்ல மூச்சு முட்டினதும்தான் பேய் பேய்ன்னு கத்தினேன்.”
“பேய் அப்படித்தான் அழுத்துமா?!”
“இதுக்கு அமுக்குப் பிசாசுன்னு பேர். எங்க அப்பா அம்மா கிராமத்துல நிறைய பேரை இப்படி அமுக்கி இருக்கு. சொல்லி இருக்காங்க. ஆராய்ச்சியாளர்கள் இதுக்கு வேறொரு காரணம் சொல்றாங்க. மனசோட பாரம் சில சமயம் தாங்க முடியாமல் நல்ல துாக்கத்துல திடீர்ன்னு உடம்பைக் கனமாய் அழுத்தும். அந்த அழுத்தம் மூச்சு முட்டும். உதறி அடிச்சு எழுந்தா சரியாய் ஆகிடும்ன்னு சொல்றாங்க. எது எப்படியோ இது என்னைத் தொட்டது இதுதான் முதல் தடவை.” என்றவன் கொஞ்சம் நிறுத்தி, “எனக்கு அந்த மாணவி எப்படி செத்தாள்ன்னு விபரம் தெரியனும் ஆர்த்தி.” விசயத்திற்கு வந்தான்.
“யாரு சுபாஷிணியா?”
“ஆமாம்.”
“தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க?”
இவனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.
“அவளுக்கு எதிரிகள் காதல் தோல்வி இல்லே.”
“செத்துக்கிடக்க வேண்டிய காரணம்?” என்று முணுமுணுத்து யோசித்த விக்னு “உனக்குத் தெரிஞ்சு அவள் யார்கிட்டேயாவது முறைச்சுக்கிட்டாளா?..” கேட்டான்.
“அவ கொலைக்கு முன்னாடி நாங்க கல்லுாரி போகும் போது இந்த ரோட்டுல நிறைய இளைஞர்கள் வெட்டியாய் உட்கார்ந்து வழிவாங்க. அதுல ஒருத்தன் குறிப்பா இவளையே சைட்டடிச்சுக்கிட்டு இருந்தான். நாங்களெல்லாம் அவளை, ஏய்! உன் ஆளைப் பாருடி. உன்னையே கவனிக்கிறான். எங்களைக் கவனிக்க மாட்டேன்கிறான்! னு தினம் கிண்டலடிப்போம். இந்த கேலி கிண்டல் பொறுக்க மாட்டாத சுபாஷிணி ஒரு நாள்… அவன் முகத்துக்கு நேரா செருப்பைத் துாக்கிக் காட்டி, ‘இனி என்னைப் பார்த்தே அடிப்பேன்!’ சொன்னாள். அடுத்த நாள்லேர்ந்து அவனைக் காணோம். மூனாம் நாள் அவள் பொணம்.” சொன்னாள்.
“ஒரு வேளை அவமானப்பட்ட அவன் கொலை செய்திருக்கலாமா?” விக்னுவிற்குச் சடக்கென்று பிடி கிடைத்துவிட்ட தெம்பில் சொன்னான்.
“நாங்க சொல்லி அவனை போலீஸ் விசாரணை செய்தாச்சு. அவன் குற்றவாளி இல்லே.”
“சுபாஷினி வேற யாரிடமாவது ரொம்ப நெருங்கிப் பழகிருக்காளா ?”
“வார்டன்கிட்டே ரொம்ப நெருக்கம். காரணம் ஒரு வகையில அவுங்க ரெண்டு பேரும் துாரத்து உறவு.”
“வார்டன் எப்படி…?”
“தங்கம்.”
“அதுல வெண்கலம் கலந்திருந்தால் ?!…” அவள் பதில் சொல்லவில்லை.
“உங்க விடுதியில ராத்திரி நேரம் மாணவிகள் யாராவது காணாமல் போறதுண்டா?”
“ஏன் கேட்குறீங்க?”
“சில அயோக்கிய அதிகாரி, அரசியல் புள்ளிகளுக்கு பள்ளி, கல்லுாரி …பெண்கள் விடுதிகள் மேல் கண். வார்டனை உருட்டி மிரட்டி தங்கள் வழிக்குக் கொண்டு வந்து மாணவிகளை வேட்டையாடுவாங்க. ஏன்…. ஒரு பள்ளிக்கூடத்துக்கு நட்சத்திற அந்தஸ்த்து வேணும என்பதற்காக நிர்வாகமே நாலு மாணவிகளை மிரட்டி அவுங்க கூட கொடைக்கானலுக்கு அனுப்பியது போன வருசம் தினசரிகள்ல அடிபட்டது. அப்படி இங்கேயும் நடந்திருக்குமோங்குற சந்தேகத்துல கேட்டேன்.”
“அதெல்லாம் இங்கே நடக்கலை..”
“உனக்குத் தெரியுமா…?”
ஆர்த்தி பதில் சொல்லவில்லை.
“வார்டனுக்குக் குடும்பம் உண்டா?” அடுத்துக் கேட்டான்.
“இல்லே. விவாகரத்து முடிச்சவங்க.”
“வீட்டில் தனியா இருக்காங்களா?”
“ஆமாம்.”
“வேற ஆண்கள் பழக்கம் இருக்கா?”
“அதெல்லாம் தெரியாது.“
“பிள்ளைக்குட்டிகள்?”
“இல்லே.”
“கடைசியாய் ஒரு கேள்வி ஆர்த்தி. அந்த அம்மாவுக்கு ஓரினச் சேர்க்கையில நாட்டம் உண்டா…?”
“என்ன சொல்றீங்க?” குழப்பமாய்ப் பார்த்தாள்.
“வார்டனுக்கு ஓரினச்சேர்க்கை உண்டா…”
“தெரியலை…!”
“அந்த வகையில அவர்களுக்குள்ளே மனஸ்தாபம் வந்து கொன்னு போட்டிருக்கலாம். இல்லே இவளே அவமானம் பிடிக்காம தற்கொலை செய்திருக்கலாம்.”
ஆர்த்தி இப்படியெல்லாம் யோசிக்கவில்லை.
சிறிது நேரம் அப்படியே மௌனமாய் இருந்தாள்.
“உங்க கற்பனை கொஞ்சம் அதிகப்படி. எது எப்படி இருந்தாலும் நீங்க அங்கே வரவேணாம். நீங்க சிக்கல்ல மாட்டினாலும் உயிருக்கு ஆபத்துன்னாலும் என் உயிர் தாங்காது.” முகம் தொங்கினாள்.
“பயப்படாதே ஆர்த்தி. இப்போ என் உயிரை விட எனக்கு உன் உயிர் முக்கியம். உங்க விடுதியில என்னவோ நடக்குது, அதைக் கண்டுபிடிச்சு களையலைன்னா உங்க எல்லாருக்குமே ஆபத்து.” சொன்னான்.
ஆர்த்தி அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.
“நிசம்…நீ…உங்களைக் கிண்டல் பண்ணி சைட்டடிச்சவன்கள்ல ஒருத்தனை அடையாளம் காட்டு நான் அங்கேயிருந்து ஆரம்பிக்கிறேன்.” சொன்னான்.
“சுபாஷிணி கொலையைக் கண்டுபிடிக்கத்தான் பொம்பளையாய் நடிச்சி பொய் சொல்லி உள்ளே நுழைஞ்சீங்களா?” – இவள் தனக்குள் எழுந்த திடீர் சந்தேகத்தைக் கேட்டாள்.
“இல்லே ஆர்த்தி. பெண்கள் விடுதியில் பெண்கள் எப்படி இருப்பாங்க. அவர்கள் நடவடிக்கைகள் எப்படி என்பதைப் பத்தி கட்டுரைதான் எழுத வந்தேன். வந்த இடத்துல சிக்கல். என் வேலை முடியறதுக்குள்ளே இதையும் முடிக்கலாம் என்கிற யோசனை.” சொன்னான்.
“நீங்க எதையும் முடிக்க வேணாம். கொலையோ, தற்கொலையோ … அதைப் போலீஸ் கண்டுபிடிக்கும். நீங்க போய் அந்த வேலையைத் தொட…. அது உண்மையான குற்றவாளிக்கு இடைஞ்சாலாய் இருக்க… உங்க உசுருக்கு உலை. கிளம்புங்க. இதிலேயே உங்க வேசம் கலைஞ்சாலும் ஆபத்து புறப்படுங்க.” சொன்னாள்.
“பயப்படாதே ஆர்த்தி ! ஆபத்து வந்தா விலகிடுறேன்.”
இதற்கு மேல் எப்படி தடுக்க…?!
அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் இருவருக்கும் கொஞ்ச நேரம் மௌனம்.
“எனக்கொரு ஆச்சரியம். நேத்து ராத்திரி நீங்க எப்படி விக்னுவாய்க் கத்தாமல் பேகமாய்க் கத்துனீங்க?” கேட்டாள்.
“நான் முழிச்சி இருந்தேன். தப்பிச்சேன். வா. கீழே போய் காபி சாப்பிட்டு வருவோம்.” எழுந்தான்.
“அதை இங்கேயே வரவழைச்சு சாப்பிடலாமே!”
“நான் ரொம்ப நேரமாய் அறைக்குள்ளே அடைஞ்சு கிடந்தாச்சு. ஒரு மாற்றத்துக்காக வெளியில போகலாம் வா. அடுத்து, நீ முதன்முதலா என் அறைக்கு விருந்தாளியாய் வந்திருக்கே. கவுரவிக்கனும். அடுத்து நாம ரெண்டு பேரும் தனியே சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.” அடுக்கடுக்காய்க் காரணங்கள் சொல்லி விக்னு சட்டையை மாட்டினான்.
ஆர்த்தி எழுந்திரிக்கவில்லை.
“நான் கல்லுாரியில தலைவலின்னு சொல்லி விடுப்பு எடுத்து வந்திருக்கேன். விடுதியில இருப்பேன்னு எல்லாரும் நெனைச்சி இருப்பாங்க. இப்போ நான் உங்களோட வந்து ரெஸ்ட்டாரண்ட்ல இருந்தேன்னா… நான் தப்பா நடக்கிறதா போய் பிரின்ஸ்பால், வார்டன்கிட்ட யாராவது வத்தி வைச்சிடுவாங்க.”
“வைச்சா வைச்சுட்டு போறாள். போறாள். நான்தானே உன்னைக் கட்டிக்கப்போறேன். வாடி”. உரிமையாய்க் கையைப் பிடித்து இழுத்து அவளை வெளியே அழைத்துச் சென்றான்.
ஆர்த்திக்கு அந்த இழுப்பும் உரிமையும் ரொம்ப பிடித்திருந்தது.
இருவரும் கீழே போய் அந்த ரெஸ்ட்டாரெண்டில் தனியிடம் பார்த்து எதிரெதிர் அமர்ந்தார்கள். பேரர் வர… சில அயிட்டங்களை ஆர்டர் கொடுத்தான் விக்னு.
பேரர் அகன்றதும் தனக்கு எதிரில் துாரத்தில் அமர்ந்திருந்த ஆளைப் பார்த்ததும் ஆர்த்திக்கு முகம் மாறியது. அவள் மெல்ல விக்னு அருகில் குனிந்தாள்.
“சுபாஷிணி செருப்புக் காட்டினவன் நமக்கு முன்னால மூணாவது மேசையில இருக்கான்.” கிசுகிசுத்தாள். இவன் திரும்பிப் பார்த்தான்.
அவன் பேரர் கொண்டு வந்த பில் கொடுத்துவிட்டு எழுந்தான். விக்னு அவனைப் பிடிக்கும் ஆவலில்…..
“நீ சாப்பிட்டு பில்லைக் கொடுத்துட்டு விடுதிக்குப் போ. நான் அங்கே வர்றேன்.” தன் சட்டைப் பையிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து இவளிடம் நீட்டிவிட்டு வேகமாக அவனைப் பின் தொடர்ந்தான்.
ஆர்த்தி எதிர்பார்க்கவில்லை. மூச்சு முட்டியது.
அத்தியாயம் – 6
சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்…. வயசு 40. நல்ல துடிப்பான உடற்கட்டு, இளமை முறுக்காய்… சாதாரண பேண்ட், சட்டையில் பட்டுக்கோட்டை அருகிலுள்ள பாலுார் கிராமத்தில் உள்ள ஒரு பெரிய வீட்டின் கதவைத் தட்டினார்.
வயசு 60. வேள்ளை வேட்டி, பனியன், தலை, மீசை நரை தும்பைப் பூ வாய் பெரியவர் பெரியநாயகம் கதவைத் திறந்தார். அவருக்கருகில் அவர் மனைவி ஆரியமாலா.
அறிமுகமில்லா புதுமுகத்தைப் பார்த்ததும் அவர்களுக்குக் குழப்பம்.
“நீங்க…?” பெரியநாயகம்தான் வாயைத் திறந்தார். சதீஷ் பதில் சொல்லவில்லை.
“இது சுபாஷிணி வீடுதானே ?” கேட்டார்.
“ஆமா..”
“நீங்க அவ அப்பா அம்மாவா?”
“ஆமா.”
“நான் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்!” தன்னுடைய அடையாள அட்டையை எடுத்து நீட்டினார். அதில் அவருடைய புகைப்படம் சப் இன்ஸ்பெக்டர் உடையில் கம்பீரமாக இருந்தது.
“நான் சுபாஷிணி விசயமா உங்ககிட்ட பேசனும்.”
“உள்ளே வாங்க.” அவர்கள் இவருக்கு வழி விட்டு முன்னே நடந்தார்கள். நடுவீட்டிற்குச் சென்றார்கள்.
“உட்காருங்க.” பெரியநாயகம் அடுத்து அவர் மனைவி அமர… இவர் எதிர் நாற்காலியில் அமர்ந்தார்.
“உங்க பெண்ணை ஏன் இங்கே உள்ள கல்லுாரியில சேர்க்காம சென்னையில கொண்டு சேர்த்தீங்க ? இங்கே கல்லுாரி சரி இல்லே. இடம் கிடைக்கலைங்குற பொய் சால்சாப்பெல்லாம் வேணாம். உண்மையைச் சொன்னா சுபாஷிணி சாவைப் பத்தி துப்புத் துலக்க உதவியாய் இருக்கும்.” சுற்றி வலைக்காமல் நேரடியாகவே விசயத்திற்கு வந்தார்.
“அது…அது….“ என்று ஆரம்பித்து பெரியநாயகம் மனைவியைப் பார்த்தார்.
அவள் வாயைத் திறக்காமல் இருந்ததைப் பார்த்து அடுத்து இவரும் வாயைத் திறக்க தயக்கம் காட்டினார்.
“நான் சொல்றேன். அவ இங்கே ஒருத்தனைக் காதலிச்சா. அது உங்களுக்குப் பிடிக்கலை. காதலுக்குத் தினம் சந்திப்புத்தானே வலு. பிரிச்சா சரியாய்ப் போயிடும்ன்னு நினைச்சு நீங்க அவளை சென்னையில கொண்டு சேர்த்தீங்க. சரியா?”
‘ஆள் விசயம் தெரிந்து வந்திருக்கிறார்!’ அவர்களுக்குப் புரிந்தது. இனி மறைக்க முடியாது என்பதும் தெரிந்தது.
“ஆமா சார்!” பெரியநாயகம் தலையை ஆட்டினார்.
“அவன் பேரு?” இருவரையும் ஏறிட்டார்.
“சந்தோஷ்..” பெரியநாயகம் சொன்னார்.
“ஆள் இப்போ எங்கே இருக்கான்?”
“அப்போ வேலை இல்லாம இருந்தான். இப்போ பட்டுக்கோட்டையிலேயே தங்கி எங்கேயோ வேலைக்குப் போறான். எப்போதாவது இங்கே அம்மா அப்பாவைப் பார்க்க வருவான்.”
“அவன் பட்டுக்கோட்டை விலாசம். சொல்ல முடியுமா?”
“தெரியும்” சொன்னார்.
“காதலுக்கு எதிர்ப்பு எப்படி ? உங்க பொண்ணையும் பையனையும் கண்டிச்சீங்களா?”
“அவனைக் கண்டிக்கலை. இவளைத்தான்… படிக்கிற வயசுல இதெல்லாம் தப்பு. இது காதலில்லே. ஆண் பெண் இனக்கவர்ச்சி. சவகாசம் வேணாம்ன்னு கண்டிச்சேன். இதை என் மகள் அவன் காதுல போட்டிருப்பாள்ன்னு நெனைக்கிறேன். அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சந்திச்சதாய்த் தெரியலை. அப்புறம் நாங்களே இவ இங்கே இருந்தா சரிபடாதுன்னு சென்னைக்கு அனுப்பிச்சோம்.”
சதீஷ் விசாரித்து வந்த உண்மையெல்லாம் சரியாக இருந்தது.
“அப்புறம் இன்னொரு உதவி?”
“என்ன?”
“உங்க மகள் இறப்பிற்குப் பிறகு நீங்க விடுதியிலேர்ந்து எடுத்து வந்த சுபாஷிணி உடைமைகளையெல்லாம் நான் பார்க்கனும்..”
“ஏற்கனவே போலீஸ்காரங்க அங்கேயே எல்லாத்தையும் அலசிட்டாங்க சார்.” இதை பெரியநாயகம் சொன்னார்.
“இப்போ நான் பார்க்கனும்.”
“தாராளமா பாருங்க.” பெரியநாயகம் எழுந்து எதிரிலுள்ள அறைக்குச் சென்றார். சதீஷீம் தொடர்ந்தார்.
“அதுதான் நான் அங்கே இருந்து எடுத்து வந்த அவ பொருட்கள்.” மூலையைக் காட்டினார்.
அங்கு… ஒரு பெரிய சூட்கேசும், ஒரு டிரங்கு பெட்டியும் இருந்தது.
“நாங்க எதையும் தொடலை. பாருங்க.” சொல்லிவிட்டு அவர் மூலையில் அமர்ந்தார்.
சதீஷ் சூட்கேசைத் திறந்து பார்த்தார்.
சுடிதார், பெட்டிகோட், புடவை…. எல்லாம் துணிமணிகளாக இருந்தது, தடயங்கள் இல்லை.
அடுத்து டிரங்கு பெட்டியை ஆராய்ந்தார்.
புத்தகங்கள், நோட்டுகள்…. இத்யாதி. ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டினார். ஒரு புத்தகத்தின் மூலையில் ‘கணேஷ்‘ எழுதி இருந்தது. மூடி வைத்தார்.
‘யார் இந்த கணேஷ்?’ சதீஷுக்குள் கொஞ்சமாய் வண்டு குடைந்தது.
“ஓ.கே சார். நான் வர்றேன்!” விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.
பட்டுக்கோட்டையில் அந்த இடம் ஒதுக்குப்புறமாக இருந்தது. அவன் அறை மாடியில் இருந்தது. ஏறிப் பார்த்தார். பூ ட்டி இருந்தது. கீழே வந்தார். வீட்டின் கதவைத் தட்டினார். கிழவி திறந்தாள்.
“மேல் வீட்டுப் பையன்?….”
“அவர் இல்லீங்களே….!”
“எங்கே?”
“கோயம்புத்தூருக்குப் போயிருக்கு.”
“ஏன்?”
“அங்கே ஒரு மெடிக்கல் கம்பெனியில வேலை.”
“அங்கே வேலை செய்ஞ்சி இங்கே தங்கி இருக்காரா?”
“ஊரு ஊரா பொட்டித் துாக்கிப் பொழைக்கிற பொழைப்பில்லையா? எங்கே தங்கினா என்னன்னு வாரத்துக்கு ஒரு முறை வரும்.”
சதீஷுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.
“அவர் எந்த கம்பெனியில வேலை செய்யிறார் தெரியுமா?”
“ம்ம்…. நிர்மல் பார்மாச்சுட்டிக்கல் கோயம்புத்துார்.”
“அவருக்குச் செல் இருக்கா?”
“தெரியலைங்க. ஆமா நீங்க யாரு?”
“அவருக்குத் தெரிஞ்சவர்.“ சொல்லி கிளம்பினார்.
‘அவன் கம்பெனிக்குப் போன் செய்து, அங்கேதான் வேலை செய்கிறானா என்று தெரிந்து கொண்டு, அடுத்து அவனுக்கு செல் இருக்கிறதா இல்லையா கண்டுபிடித்து, இருந்தாலும் இல்லையென்றாலும் ஆளைத் தேடிக் கண்டுபிடித்து விசாரிக்க வேண்டும்.!’ வேலையை நினைக்க பயமுறுத்தியது.
மாலை ஆறு மணி.
பேகம் விடுதிக்குள் நுழைந்த போது மீனா, நிரஜா இல்லை. மாலா சிவனே என்று கட்டிலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஆர்த்தி இவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.
பேகத்திற்கு இவளைத் தனியே அழைத்து சேதி சொல்ல ஆசை. களைப்பாக இருப்பவள் போல் நடித்து அப்பாடி ஆர்த்திக்கு அருகில் தன் தோல்பையை வைத்துவிட்டு அலுத்து அமர்ந்தாள்.
“என்ன ரொம்ப களைப்பு?”
“ரொம்ப வேலை.”
“டீ சாப்பிடலாமா?”
“ம்ம்.”
“மாலா வர்றீயா?”
“வரலை.”
“ஒழி. வா“ ஆர்த்தி பேகத்தை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
இருவரும் மாடிப்படியை விட்டு கீழே இறங்கி கேண்டீனுக்குப் போய் ஆளுக்கொரு காபி சொல்லி காத்திருந்து குடித்து விட்டு வெளியே வந்து மைதானத்து மரத்தடியில் ஓரம் ஒதுங்கினார்கள்.
இருள் தன் போர்வையை மெல்ல போர்த்த…. மைதானத்தில் துாங்கிக் கொண்டிருந்த விளக்குகள் கண் விழித்தது.
“துரத்திப் போன அவனைப் புடிச்சீங்களா?“ ஆர்த்தி ஆவலை அடக்க முடியாமல் கேட்டாள்.
“புடிச்சேன்!”
“என்ன சொன்னான்? விபரம் சொல்லுங்க?”
“விக்ரம்! ன்னு சும்மா ஒரு பேரைச் சொல்லி அழைச்சேன். அதுதான் அவன் பேர் போல. அப்படியே அரண்டு போய் நின்னான்.”
“அதெப்படி சும்மா ஏதோ ஒரு பேர் சொல்லி அழைச்சீங்க. அது அவன் பெயராய் இருந்துது?”
“இதெல்லாம் சும்மா ஒரு சின்ன யுக்தி. கிளிக்கானா அதிர்ஷ்டம். வெளியில போறவங்களை எங்கே போறீங்கன்னு கேட்டா அபசகுனம்ன்னு நெனைச்சு முகம் சுளிப்பாங்க கோபம் வரும். அதே சமயம் அங்கேயா போறீங்கன்னு எதையாது சொல்லி கேட்டா இல்லியே நான் இங்கே போறேன்னு உண்மையைச் சொல்லிப் போவாங்க. அதேமாதிரி தெரியாதவனை விசாரிக்கிறதுக்கு சார்! நீங்க இவர்தானேன்னு ஏதாவது ஒரு பேர் சொல்லி அழைச்சா சரின்னா என்ன சார் என்பான். இல்லேன்னா நான் இவன்னு உண்மை பேர் சொல்வான். அடுத்து நாம பேச்சைத் தொடங்குறதுக்கும் அதுவே வழி.”
ஆர்த்திக்கு அவன் புத்திசாலித்தனம் புரிந்தது, மௌனமாய் இருந்தாள்.
பேகம் தொடர்ந்து….
“அடுத்து அவன் மிரளுவான்னு நெனைச்சு அதிரடியாய், ‘சுபாஷிணியைத் தெரியுமான்னேன்'”. சொன்னான்.
“என்ன ஆள்… அதிர்ந்தானா?” இவள் கேட்டாள்.
“அவன் ரொம்ப சுதாரிப்பு.”
“அப்படின்னா யாரு? அவன் என்னையே திருப்பி கேட்டான்.”
“மவனே! நான் சி.பி.சி.ஐ.டி…அப்படியே ஒரு அப்பு அப்பினேன்னா கரைஞ்சு காணாம போயிடுவேன்னு மிரட்டினேன்.”
“அடுத்த நிமிசம்… அவன் சடார்ன்னு சார்ன்னு என் கையைப் புடிச்சான். சார்! நான் அந்த பொண்ணைச் சைட்டடிச்சது உண்மை., காதலிச்சது நிசம். ஆனா அவ செருப்பைத் துாக்கி காட்டி செருப்பாலடிப்பேன்னு சொன்னதும் விரும்பாதவளை விரும்பறது காதலிக்காதவளைக் காதலிக்கிறது தப்புன்னு அந்த நிமிசத்திலேர்ந்து நான் அவளை விட்டு விலகிட்டேன். இந்த ஒரு குத்ததுக்காக… அவ செத்துப் போய் போலீஸ் விசாரணை, இப்போ நீங்கன்னு தண்டனையை அனுபவிக்கிறேன் சார். இதைத் தவிர சத்தியமா எனக்கும் அந்த பொண்ணுக்கும் வேற சம்பந்தமில்லே. என்னை விட்டுடுங்க சார்ன்னு பச்சைக் குழந்தை போல அழுதான். எனக்கே அவனைப் பார்க்க பாவமாய் இருந்துது. தொலைஞ்சு போன்னு விட்டுட்டு வந்துட்டேன்.” நடந்ததைச் சொன்னான்.
“அப்போ யாரு இந்த கொலையைச் செய்திருப்பா?” ஆர்த்தி அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“தெரியலை.” சொன்ன பேகம் எதார்த்தமாக மொட்டை மாடியைப் பார்க்க…
அங்கிருந்து இவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு உருவம் சடக்கென்று மறைந்தது.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |