கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: September 28, 2025
பார்வையிட்டோர்: 145 
 
 

(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் -1

சென்னையின் மத்தியப் பிரதேசத்தில் அந்த கல்லுாரி பெண்கள் விடுதி. பல ஏக்கர் பரப்பளவின் நடுவில் ‘ப‘ வடிவில் இரண்டு அடுக்கு மாடிக்கட்டிடம். மேலேயும் கீழேயும் சேர்த்து மொத்தம் ஐம்பது இரண்டு அறைகள். கீழே முதல் அறை வார்டன். அடுத்து அலுவலகம். அப்புறம் எல்லாம் அறைகள். நான்கு மாணவிகளுக்கு ஒரு அறை. பத்து அறைகளுக்கொரு கழிப்பிடம் குளியலறை. பின்னால் சமையற்கூடம், சாப்பாட்டு இடம். நடு மைதானத்தில் கூடைப்பந்து, கைப்பந்து, பூ ப்பந்து, மரம் மட்டை, மின் விளக்கு வகையறாக்கள். தனியே வார்டன் இருப்பிடம் வீடு.

காலை மணி 10. 00

பெண்களில் பலர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சுற்றுச் சுவரை ஒட்டிய சாலையில் சிலர் ஓட்டம் பழகினார்கள். நாலைந்து மாணவிகள் ஸ்கிப்ங் என்னும் கயிறுதாண்டும் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காலையென்பதால் நிறைய அறை மாணவிகள் சோம்பலாக எழுந்து நைட்டி, கழுத்தில் மாலையாய் துண்டு, வாயில் பிரஷீடன் காலைக் கடன்களுக்குத் தயாரானார்கள். அதற்கு முன்பே ஒரு கழிப்பறையின் முன் பிருந்தா வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டு, “டீ,.,! வயிறு வலி தாங்க முடியலை. சீக்கிரம் வெளியே வா. சாத்தி இருந்த கதவை நோக்கி முக்கல் முணகலாய்க் கத்தினாள்.

“முண்டச்சி! உள்ளாற உட்கார்ந்து பாய் பிரண்ட் கனவு காண்றா!”

“காதலனோட கை கோர்த்து ஆடறா!” அவஸ்தையில் துண்டுத் துண்டாக சொல்லி கடைசியில்

“இன்னும் அஞ்சு நிமிசத்துல வெளியில வரலை…கண்டிப்பா உன் தலையில கல்லைத் துாக்கிப் போடுவேன்!“ எச்சரித்தாள்.

சடக்கென்று கதவைத் திறந்து வெளியே வந்த விமலா, “போய்த் தொலை!” எரிச்சல் பட்டு நைட்டியில் தன் ஈரக் கையைத் துடைத்துக் கொண்டு சென்றாள்.


அறை எண் 40ல்…

தனது அலமாரியைக் குடைந்த திரிஷா, “ஏய்! என் நாப்கினை எடுத்தீயா?” கட்டிலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த கலாவை எரித்து விடுவது போல் பார்த்தாள்.

“எடுத்தேன்!“

“ஏன் சொல்லலை?”

“தேவை எடுத்துக்கிட்டேன்!”

“முண்டம்! இப்போ எனக்குத் தேவை!”

“அடுத்த அறையில போய் கடன் வாங்கு.”

“திருடி!” அவள் கத்தி வெளியேறினாள்.


19ஆம் அறையில்…

சுமிதா…ஒரு சுடிதாரை போட்டுப் பார்த்து, “என்னடி! உன் சுடிதார் எனக்குக் கச்சிதமா இருக்கு?!” அறைத் தோழி அமலாவிடம் காட்டி ஆச்சரியப்பட்டாள்.

“என் பிராவையும் எடுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியதுதானே?!” இவள் எரித்தாள்.

“அதையும்தான் போட்டிருக்கேன்!”

“பாவி! கழட்டுடி.” பாய்ந்தாள்.

“மாட்டேன்!“ அவள் வெளியே ஓடினாள்.

இவளும் துரத்திக் கொண்டு ஓடினார்கள்.

அந்த பால்கனியில் அவர்கள் ஓட்டப்பந்தயம் விட்டார்கள்.


8ஆம் எண் அறையில்…

“ஏய்! என் ஜாக்கெட்டைத் தொடாதே!” ஒருத்தியிடமிருந்து அலறல் வெளிப்பட்டது.

“ஏன்?!“

“உன் உடம்பெல்லாம் தேமல். எவன் கொடுத்தான்?“

என்ற

‘என் மூஞ்சிக்கு எவன் கொடுப்பான்? அப்பா அம்மா உபயம்.”

“குடும்ப நோயா?”

“தெரியலை. கேட்டுச் சொல்றேன்.”

எல்லா ஆட்டம் ஆர்ப்பாட்டங்களும் முடித்து ஒன்பது மணிக்கு சமையற்கட்டருகே உள்ள சாப்பாட்டுக் கூடம் நிரம்பி வழிந்தது.

“எனக்கு ரெண்டு இட்லி.”

“எனக்கு சாம்பார்”

“சட்னி?”

“வடை வேணாம்!” கேண்டீன் அமர்க்களத்தைவிட்டு ஆர்த்தி, மீனா, மாலா, நிரஜா சாப்பிட்டுவிட்டு ஒன்றாக வெளியே வந்தார்கள். இவர்கள் நால்வரும் 27ஆம் அறைத் தோழிகள்.

ஆர்த்தி செல் போன் ஒலித்தது. கையில் கர்ச்சீப்புடன் சுருட்டி இருந்ததைப் பிரித்துப் பார்த்தாள். முகம் மலர்ந்தது. காதில் வைத்துக் கொண்டு தோழிகளை விட்டு விலகி துாரச் சென்றாள்.

“ஏய்..!….என்ன விசேசம்? திடீர் நெனப்பு.?” கேள்வி கேட்டாள்.

“நான் இங்கேதான் இருக்கேன். பக்கத்துல உள்ள பூ ங்காவுக்கு வா”.

“இங்கேயா?!” இவளுக்கு முகத்தில் கோடி பிரகாசம்.

“ஆமாம். ஒரு முக்கியமான விசயம். உன்கிட்ட தனியே பேசனும். சீக்கிரம் வா.”

“ஏய்…பொறுக்கி! பொய் சொல்றே? நீ ஹைதராபாத்லேர்ந்து பேசறே!”

”சத்தியமா நான் காந்தி பார்க்குலதான்டி இருக்கேன். வந்து பாரு” அணைந்தது.

உற்சாகம் படபடப்பு.

“நீங்க அறைக்குப் போங்க. நான் வெளியே போய் வர்றேன்!” தோழிகளிடம் சொல்லி விட்டு வெளியே விரைந்தாள்.

காந்தி பூ ங்காவில் அவன் சத்தியமாக அமர்ந்திருந்தான்.

பெயர் விக்னு. இவள் காதலன் மற்றும் முறைமாமன். இவர்கள் திருமணம் பிறந்த போதே பெற்றவர்களால் நிச்சயக்கப்பட்டது. ஆள் ஜர்னலிசம் முடித்து ஹைதராபாத் பத்திரிக்கை அலுவலகம் ஒன்றில் வேலை. கைநிறைய சம்பளம். இவள் படிப்பு முடிக்க வேண்டியதுதான் பாக்கி. அடுத்து டும் டும்.

“எப்போ வந்தே?” ஆர்த்தி இன்னும் அதிர்ச்சி ஆச்சரியம்

விலகாமல் அவன் அருகில் அமர்ந்தாள்.

“மரியாதையா கேளுடி.”

“சரிடா எப்போ வந்தே?”

“இதுக்கு அதுவே தேவலாம். நேத்து ராத்திரி.”

“எனக்கு செல் அடிச்சு தகவல் சொல்லிட்டு வரவேண்டியது தானே?!”

“அந்த அளவுக்கு நேரமில்லே. உன்னைப் பார்க்கனும்ங்குற ஆவல்ல இன்னொருத்தன் கையில இருந்த வேலையை நான் வாங்கி வந்தேன். அந்த டென்ஷன், உன் முன்னால திடீர்ன்னு குதிச்சு இன்ப அதிர்ச்சி கொடுக்கனும்ங்குற எண்ணம். செல் அடிக்கலை.”

“படவா அசத்திட்டே!” ஆர்த்தி அவன் முதுகில் வலி இல்லாமல் செல்லமாக அடித்தாள்.

“இன்னொரு அசத்தல். ஐயா இங்கே பத்து நாள் கேம்ப்!” காலரைத் தூக்கிக் கொண்டான்.

“அயய்ய்யோ….!” அவளுக்கு உற்சாகம் பிடிபடவில்லை.

“என்ன வேலை?”

“உன்கிட்ட” குறும்பாய்ப் பார்த்தான்.

“இழுத்து வச்ச்சி…”

“அம்மா தாயே. அப்படியெல்லாம் செய்ஞ்சுடாதே! நீ திருடா திருடி படம் பார்த்துட்டே ஒத்துக்கிறேன். சத்தியமாச் சொல்றேன். எனக்கு உன்கிட்டதான் வேலை.”

“என்ன மறுபடியும் மறுபடியும் அதே சொல்றே?!”

“இங்கே இருக்கிற பத்து நாளும் நான் உன்னோட விடுதியில தங்கனும்.”

“என்ன விளையாடுறீயா?”

“விளையாடலை ஆர்த்தி. நிசம்.”

“உனக்குப் பைத்தியம் கியித்தியம் பிடிக்கலையே?”

“ஏன்?”

”உளர்றே?!”

“புரியலை…?!”

“நான் இருக்கிறது பெண்கள் விடுதி. அறைக்கு நாலு பேர் வீதம் மொத்தம் அங்கே இரு நுாறு பேர் பெண்கள். உன்னை எப்படி நான் அங்கே தங்க வைக்க முடியும்?”

“புடவைக் கட்டி கூட்டிப் போ.”

“மீசை?”

“எடுத்துடலாம்.“

“முடி?”

“விக்!”

“ஐடியாவோடத்தான் வந்திருக்குறீயா?”

“பத்திரிக்கைக்காரன் புத்திசாலி.”

‘மண்ணாங்கட்டி! மரமண்டை! வேசம் கலைஞ்சா உனக்கும் எனக்கும் ஆப்பு, ஆபத்து!”

“கிடையாது. எனக்கு மிமிக்கிரி தெரியும்ன்றதுனால பெண் குரல்ல பேசி அசத்திடுவேன். ஆர்த்தி நான் அடையாறு ஓட்டல்ல அறை எடுத்திருக்கேன். பகல் பொழுது அங்கே. ராத்திரி இங்கே.”

“எதுக்கு இப்படி?”

“விடுதியில நீங்களெல்லாம் எப்படி இருக்கீங்க. உங்க பொழுது போக்கு நடைமுறை பழக்கவழக்கங்கள் எப்படின்னு ஆராய்ச்சி செய்து எழுதனும்ங்குறது என் மேலிடத்து உத்தரவு.”

“அந்த உத்தரவைத் துாக்கி குப்பையில போடு.”

“ஏன் ஆர்த்தி?”

“சாத்தியமே இல்லே. லெட்ரீன் குளிக்கிறது எல்லாம் நெனைச்சுப் பார்த்தா பயங்கரமா இருக்கு.”

“அதைப் பத்தியெல்லாம் நீ கவலைப்பட வேணாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. இங்கே முடியாது போனா என் அறைக்குப் போய் அதெல்லாம் முடிச்சிக்கிறேன்.”

“விடுதியில பெண்கள் கன்னாபின்னான்னு இருப்பாங்க.”

“ஐயா ஆஞ்சநேயர் பக்தர். அதெல்லாம் பார்த்து சபலப்படமாட்டார்.”

“உன் குரங்கு சேஷ்டை எனக்குத் தெரியும். தியேட்டர்ல மூணு மணி நேரம் என்னை சும்மா படம் பார்க்க விடமாட்டே.”

“அ…அது…கட்டிக்கிறப் போறவள்கிட்ட குறும்பு.”

“ஆம்பளைங்களைப் பத்தி எங்களுக்குத் தெரியும்ப்பா. பொண்டாட்டியோட போனாலும் அடுத்தவளைப் பார்ப்பீங்க.”

“அப்போ என் மேல உனக்கு நம்பிக்கை இல்லே. அதனால மறுக்கிறே?”

“அது மட்டும் காரணமில்லே. வார்டன் ரொம்ப கண்டிப்பு. விருந்தாளியெல்லாம் தங்க வைக்க அனுமதி இல்லே”

“பெரிய இடத்துல சிபாரிசு பண்ணச் சொல்றேன்.”

“எப்படியாய் இருந்தாலும் பிரச்சனை.”

“…..”

“அதுமட்டுமில்லே. இன்னொரு முக்கியமான காரணம். ஒரு மாசத்துக்கு முன்னால மொட்டை மாடியில ஒரு மாணவி மர்மமான முறையில செத்துப் போயிட்டாள். கொலையா, தற்கொலையாய்ன்னு போலீஸ் அடிக்கடி வந்து விசாரணை செய்துட்டுப் போகுது. இந்த மாதிரி நேரத்துல இது போல காரியம் வம்பு. சாமி! என்னை ஆளை விடு.” ஆர்த்தி அடுத்து பேசாமல் ஓடிப் போனாள்.

விக்னு திகைத்தான். முகத்தில் ஏமாற்றம்.

அத்தியாயம் -2

ஆர்த்தி அப்படி ஓடி வந்தாலும் மனசு சரி இல்லை.

ஆண்கள் இல்லா தைரியம் உடை உறுப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் பெண்கள் இஷ்டத்திற்குத் திரிவார்கள். இவர்கள் அறையில் மீனா…. ஜட்டி, பிராவோடுதான் அலைவாள். இன்னும் சொல்லப் போனால்….பெரும்பாலும் பிராவிற்கு விடை கொடுத்து விடுவாள்.

“இப்படி அசிங்கம் பண்ணாதேடி!” அறையில் யார் எச்சரித்தாலும் சரி.

“நீயும் பொம்பளைதானே?! இது இதெல்லாம் உன்கிட்டேயும் இருக்கு. என்ன அசிங்கம், வெட்கம்?” திருப்பி அடிப்பாள்.

புது பிரா வாங்கி வந்துவிட்டால்… அவளுக்கும் கண்ணாடிக்கும் அரை மணி நேரம் போராட்டம் நடக்கும். இறுக்கி, லுாஸ் வைத்து போட்டுப் போட்டுக் கழற்றுவாள். இப்படி அப்படி நெளிந்து கண்ணாடியில் அழகு பார்ப்பாள். அறைத் தோழிகளுக்கே அவள் உடலழகு பார்க்க கிறக்கமாக இருக்கும்.

“சூப்பர்டி!” ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் நிரஜா அவளைத் அணைத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து இவர்கள் ஆசையெல்லாம் நிறைவேற்றுவாள். இந்த பிரா சம்பவம் மாதத்தில் ஒரு நாளாவது கண்டிப்பாக நடக்கும். மீனாவிற்கு அது மட்டும் அடிக்கடி மாற்ற வேண்டும். இவ்வளவிற்கும் பழசு கெட்டுப் போயிருக்காது. அவளுக்கு அது மட்டும் அடிக்கடி புதுசு போட்டு தன் முன்னழகை என்றும் இளமையாய் எடுப்பாய் வைத்திருக்க வேண்டும்.

இப்படி பட்ட நேரத்தில் ஒரு ஆண் இருந்தால் எப்படி இருக்கும் ? மீனாவிற்குத் தெரிந்தால் கொன்று போடுவாள்! அவளைத் தவிர்த்து.. விடுதிக்குத் தெரிந்தால் ஆள் தப்பிவிட்டாலும் இவளைப் பின்னி விடுவார்கள்.

நிரஜா கேரக்டர் வேறு. அவளுக்குப் பலான புத்தகங்கள் படிப்பதில் இஷ்டம். எந்த அறையில் இருந்தாலும் அந்த குப்பையை பொறுக்கி எடுத்து வந்து கட்டில் மெத்தையில் குப்புறப்படுத்து, முழங்காலுக்கு மேல் முட்டியை வளைத்து, வாழைத்தண்டு கெண்டைக்கால் பளபளவென்று மின்ன.. அதில் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் வெள்ளி கொலுசு முன்னும் பின்னும் அசைத்து சுவாரஸ்யமாகப் படிப்பாள். இதில் முன்னழகு வேறு நைட்டியில் வெளியில் வழிந்து பெண்களையேக் கிரங்கடிக்கடிக்கும்.

அப்படி படிக்கும் போது மீனா சும்மா இருக்கமாட்டாள். அவளுக்கும் அதைப் படிக்க விருப்பம். இவள் அவள் மேல் கவிழ்ந்து கொண்டு இருவரும் நகமும் சதையுமாய்ப் படிப்பார்கள்.

இதில் மாலாதான் ரொம்ப நல்ல பெண். அநாவசிய பேச்சு பழக்கமெல்லாம் கிடையாது. கல்லூரி விட்டு வந்ததும் நைட்டிக்கு மாறி படிப்பு! படிப்பு! படிப்பு!

இதை விட அதிகம், குறைவாய் வீட்டுக்கு வீடு வாசல்படியாய் ஒவ்வொரு அறையிலும் லுாட்டிகள் நடக்கும். சனி, ஞாயிறு விடுப்பு நாட்களில் வேடிக்கை வினோதங்கள் நிறைய உண்டு. டப்மேஷ், மியூ சிக்கலி என்று அங்கங்கு கைபேசிகள் படப்பிடிப்புகள் நடக்கும்.

பெரும்பாலான குளியல் அறைகளில் தாழ்ப்பாள்கள் இருக்காது. எவராது சொந்த செலவில் போட்டாலும் அதை யாராவது உடைத்துத் துாக்கி எறிந்து விடுவார்கள். காரணம் சடாரெண்டு கதவைத் திறந்து நிர்வாணமாக குளிக்கும் எவளையும் அலற வைக்க இந்த ஏற்பாடு. இரவு ஏழு மணிக்கு மேல் ஒருத்தி குளிக்க வருவாள். மேலே ஒன்றும் போடாமல் இடுப்பில் ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு டாப்லெஸ்ஸாக வராண்டாவில் இந்த கோடியிலிருந்து அந்த கோடிக்கு வந்து குளியலறைக்குள் நுழைவாள். சமயத்தில் எவளாவது வந்து அந்த துண்டையும் விளையாட்டுக்கு உருவி அவளை நிர்வாணமாக்கும் காட்சியும் நடக்கும். அவள் அதைப் பற்றி கவலைப்படமாட்டாள்.

“பார்த்துட்டுப் போங்களேன்டி!” நொடித்துவிட்டுப் போவாள்.

“ஒரு நாளைக்கு இப்படியே நடந்து மிஸ் மெட்ராசாகிக் காட்றேன்!” பயமுறுத்துவாள்.

“மெட்ராசென்ன மிஸ் வேர்ல்ட் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லே.” மற்றவர்கள் அவளைக் கிண்டலடிப்பார்கள்.

ஒரு நிமிசம் ஆம்பளையால் இருக்க முடியாது. அப்படியே இருந்தானென்று தெரிந்தால்…..அத்தனைப் பெண்களும் அகப்பட்டவனை எப்படித் தாக்குவார்களென்று சொல்ல முடியாது, நினைவு பயங்கரமாக இருக்க…..ஆர்த்தி தலையைக் குலுக்கிக் கொண்டாள்.

வார்டன் புவனசுந்தரி ஏற்கனவே கெடுபிடி. அந்தப் பெண்… கொலை, தற்கொலைக்குப் பின் மோசம். பெற்ற அப்பா வயதானவராய் வந்தாலும் ஆறு மணிக்கு மேல் காம்பௌண்ட் பக்கம் ஆண் வாடை அடிக்கக் கூடாது. நாயாகக் குலைப்பாள்.

“கண்டிப்பாய் இப்போ பார்க்க முடியாது!” கறாராய்ச் சொல்லித் துரத்துவாள்.

தப்பித் தவறி அம்மா, அக்கா, தங்கை, தோழி போன்ற பெண் விருந்தினர்கள் வந்தால்… இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் தங்க விடமாட்டாள். இப்படியெல்லாம் இருக்கும் போது ஒரு ஆண் வர எப்படி சாத்தியம்? பத்து நாள் தங்க முடியும் ?


மதியத்திற்கு மேல் மீனா, நிரஜா கடற்கரைக்குச் சென்றார்கள். இவளும், மாலாவும் செல்லவில்லை. மாலை ஆறு மணிக்கெல்லாம் அறைக்குள் மீனாதான் முதலில் வந்தாள்.

“டொட்டடொய்ங்” அறையில் குதித்து கையிலுள்ள செண்ட் பாட்டிலை எடுத்து இடது கையை உயரே தூக்கி அக்குளில் ஸ்ப்ரே செய்தாள். வாசனை கமகமவென்று அடித்தது.

“ஏதுடீ?” ஆர்த்தி ஆச்சரியமாக கேட்டாள்.

“உன் பிரண்ட் கொடுத்தாள்.”

“என் பிரண்டா?!”

“ஆமாம். பேகம்!“

“என்ன உளர்றே? எனக்கு பேகம்ன்னு பிரண்டே கெடையாது.!”

“ஆனா உன்னைத் தேடி வந்திருக்காளே!”

“எங்கே?”

“இங்கே. அறையில பால்ய சினேகிதி ஆர்த்தி இருக்கா. அவளோட அறைத் தோழி மாலா இருக்கா. வாம்மா பேகம். வா!” மீனா அறை வாசலைப் பார்த்து ‘மாயி’ சினிமா டயலாக் விட…

கறுப்பு முக்காடிட்ட உருவம் உள்ளே வந்தது.

அவளைத் தொடர்ந்து நிரஜா பெரிய சூட்கேசை இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

“ஏய்! யார் நீ?” ஆர்த்தி அதட்டினாள்.

“என்னைத் தெரியலை?” அவள் முக முக்காட்டைத் துாக்கி அவளைப் பார்த்து கண்ணடித்தாள்.

ஆர்த்திக்குத் தலை சுற்றியது. ஒரே ஒரு வினாடிதான் அடுத்த வினாடி சமாளித்து, “வாடி!” அவசரமாக வெளியே தள்ளிக் கொண்டு வந்தாள்.

“தனியே பேசனும். தோட்டத்துக்குப் போகலாம்.” வந்த ஆள் கையைப் பிடித்து தடதடவென்று இழுத்துக் கொண்டு மைதானத்திற்கு வந்தாள். மரத்தடியில் நிறுத்தினாள். வந்த வேகம் மூச்சு வாங்கியது.

“என்ன விக்னு இப்படி பண்ணிட்டீங்க?” ஆர்த்திக்குக் குரல் நடுக்கியது.

“நான் உன்னைக் கேட்டேன். மறுத்தே. வந்துட்டேன்!”

புரியாமல் பார்த்தாள்.

“ஆர்த்தி! சலுான் போனேன். கட்டிங் ஷேவிங் முடிச்சேன். அப்படியே நெஞ்சு கை கால்ல உள்ள முடியெல்லாம் எடுத்தேன். அங்கிருந்து ஜவுளிக்கடைக்குப் போய் நாலு சுடிதார், நாலு பர்தா வாங்கி சூட்கேசுல அடைச்சு என் அறைக்குப் போனேன். ஒரு பர்தா, தலையில விக் துணையோட வார்டன்கிட்டே வந்தேன். நான் திருநெல்வேலியிலேர்ந்து வர்றேன்னு உன் ஊர் பேரைச் சொல்லி… நான் ஆர்த்தி பால்ய தோழி. எனக்கு இங்கே ஒரு கம்பெனியில வேலை கெடைச்சிருக்கு. நாளைக்கு வேலையில சேரனும். எனக்கு இங்கே ஆர்த்தியைத் தவிற வேற யாரையும் தெரியாது, வெளியில தனியே தங்க பயமா பயமா இருக்கு. நான் வாடகைக்கு அறை பிடிக்கிறவரை பத்து நாள் ஆர்த்தியோட தங்க நீங்க உதவி செய்யனும் சொல்லி…. இந்தாங்க என் பிரதர் துபாய்லேர்ந்து அனுப்பின செண்ட், சோப்புன்னு ரெண்டு செண்ட் பாட்டில் ரெண்டு சோப் எடுத்து நீட்டி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு ஒரு போடு போட்டேன். ஆள் அசந்துட்டாள். பெண்ணுக்குப் பெண் உதவி. தாராளமா தங்கிக்கோம்மா சொல்லி தன் உதவியாளைக் கூப்பிட்டு இவுங்களைக் கொண்டு ஆர்த்தி அறையில விட்டு வான்னு சொன்னாள். அதுக்குள்ள மீனா, நிரஜா வந்தாங்க. ஆர்த்தி விருந்தாளி கூட்டிப் போ அனுப்பினாங்க. வந்தேன்.” முடித்தான்.

‘ஆள் சரியாய் திட்டமிட்டு புத்திசாலித்தனமாக வந்திருக்கான்!’ புரிய… “நீங்க வந்தது பிரச்சனை இல்லே. உடனே திரும்பிப் போயிடுங்க” கெஞ்சினாள்.

“முடியாது.”

“நான் வார்டன்கிட்டே போய் நீ என் பிரண்ட் இல்லேன்னு சொல்வேன்!”

“தாராளமா சொல்லு. நான் இப்போ உன் தயவுல வரலை. வார்டன் தயவுல வந்திருக்கேன். வெளியே அனுப்பமாட்டாங்க. வாக்கு கொடுத்ததுக்காகவாவது இங்கே வேற யார் அறையிலேயாவது தங்க வைச்சு அனுப்புவாங்க. அதே சமயம் உன்னால என்னைக் காட்டிக் கொடுக்க முடியாது.” அடிக்கண்ணால் பார்த்தான்.

“என்னை சரியான தர்மசங்கடத்துல மாட்டி விடுறீங்க.” ஆர்த்தி கையைப் பிசைந்தாள்.

“என்ன தர்மசங்கடம்… ?” இவனே அவளைக் கிளறினான்.

“நீங்க இங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் எனக்கு அவஸ்தை. உங்க வேசம் கொஞ்சம் கலைஞ்சாலும் ஆபத்து. லெட்ரீன் போறது, குளிக்கிறது, உடை மாத்துறதுன்னு ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு.”

“விடு உள்ளே வந்தாச்சு சமாளிச்சுக்கலாம்”.

ஆர்த்திக்குப் பேச்சு வரவில்லை. சிறிது நேரம் நேரம் பேசாமல் இருந்து யோசித்தாள்.

சமாளிப்பதைத் தவிர வேற வழி இல்லை.! தோன்றியது. கொஞ்சம் தெளிவு வந்தது.

“இங்கே பெண்கள் கன்னா பின்னான்னு இருப்பாங்க. நீங்க ஒழுங்கு மரியாதையாய் இருக்கனும்.” கறாராக சொன்னாள்.

“மகாராணி உத்தரவு.”

“கண்டதைப் பார்த்துட்டு என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது.” அடுத்த கண்டிசனையும் போட்டாள்.

“சரி.”

“அப்புறம்….நான் ஆர்த்தி, நீ பேகம். நாம மறந்தும் மறக்கக் கூடாது!”

“நான் மறக்க மாட்டேன். நீ மறக்காமல் இருந்தா சரி.”

“மறக்க மட்டேன். சரி வா”. அழைத்துக் கொண்டு அறைக்கு வந்தாள்.

இருவரும் நுழைந்தார்கள்.

“பிரண்டு கூடப் பேசியாச்சா..?” மாலா அறைத்தோழி கேட்டாள்.

“பேசியாச்சு.”

பேகம் சூட்கேசைத் திறந்து… மாலா, ஆர்த்திக்குத் தலைக்கொரு செண்ட் பாட்டில் கொடுத்தாள்.

அறையில் விஜய், அஜீத் படங்கள் ஒட்டியிருந்தது. கொடிகளில் பிரா, பெட்டிக்கோட் வகையறாக்கள் தொங்கின. 8.30 கெல்லாம் சாப்பிடச் சென்றார்கள். படுக்கும் போது ஆளைக் கட்டிலில் படுக்க வைப்பதா தரையில் உருள வைப்பதா என்று ஆர்த்திக்குக் குழப்பம், பிரச்சனை.

“நான் கீழே படுத்துக்கிறேன்.” அவள் குழப்பதிற்கு முற்றுப் புள்ளி வைத்தான். ஆர்த்தி தன்னுடைய பெட்ஷீட், தலையணை தன் கட்டிலுக்கு அடியிலேயே போட்டுக் கொடுத்தாள்.

படுக்கும் போது, “பேகம்! நீங்க படுக்கும் போதுகூட உங்க பர்தாவைக் கழட்ட மாட்டீங்களா?” நிரஜா கேட்டாள்.

“மாட்டேன்”.

“ஏன்?“

“என் வீட்டிலேயே அப்படித்தான் படுப்பேன். பழகிப் போச்சு!” காலையில் பொல பொலவென்று பொழுது விடியும்போது ஆர்த்தி வழக்கமாக கண்விழித்தாள்.

படுக்கையில் விக்னு இல்லை. மனசுக்குள் விலுக்கென்று ஒரு குலுக்கல். திடுக்கிட்டாள்.

அத்தியாயம் -3

அவன் அறைக்கு வெளியே பர்தாவுடன் நின்று பால்கனியில் சுவரில் கை வைத்து சாய்ந்தபடி மைதானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆர்த்தி மெல்ல வந்து பின்னால் நின்று பார்த்தாள்.

தோடைகளை இறுக்கிப் பிடிக்கும் வெள்ளை அரைக்கால் சட்டை, டீ ஷர்டுகளில் பெண்கள் பூப்பந்து, கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

நிரஜா..லெக்கின்ஸ், இறுக்கமான மேலாடையில் ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டிருந்தாள்.

அவள் குதிப்பில் முயல்குட்டிகளாய் இளமைகள் குதித்தன. ஆர்த்தி அக்கம் பக்கம் பார்த்தாள். யாருமில்லை.

“படவா! இதையெல்லாம் ரசிக்கத்தான் உள்ளே நுழைஞ்சியா?“ அவன் காதில் ஓதினாள்.

“ஆமாம்.” விக்னு அலட்டலில்லாமல் சொன்னான்.

“பார்க்க கண்ணிருக்காது. நோண்டிடுவேன்! புள்ளி மான்கள் கூட்டத்துல புலி இருக்கிறது தெரிஞ்சுது…மவளே நீ செத்தே!”

“ஆர்த்தி! யார் அது? உன் கெஸ்ட்டா?” பல் விலக்கியபடி பால்கனியில் நடந்து வந்த ஒருத்தி கேட்டாள்.

“ஆமா.”

“எங்கே படிக்கிறாங்க?”

“படிச்சு முடிச்சு தடிக்கு அம்பத்துார்ல வேலை கெடைச்சிருக்கு. இன்னைக்கு ஜாயின்ட் பண்றா.”

“ஓ…! வொர்க்கிங் வுமனா…? என்ன வேலை?”

“ஸ்டெனோ.”

“சம்பளம்?”

“முப்பதாயிரம்!”

அவள் அகன்றாள்.

“ஆர்த்தி! இப்போ சொன்ன இதே பொய்யை எல்லார்கிட்டேயும் சொல்லு. மாத்தி சொல்லி வம்புல மாட்டிவிட்டுடாதே! அடுத்து சாயந்தரம் வந்ததும் என்னை எல்லா அறைக்கும் அழைச்சிக்கிட்டுப் போய் அறிமுகப்படுத்து..” விக்னு சொன்னான்.

“எதுக்கு ? எவ எவ எங்கே இருக்கான்னு நோட்டம் போடவா….?”

“அதுக்கில்லே. அப்படி அறிமுகப்படுத்தாம விட்டீன்னா உன்னையும் என்னையும் பார்க்கிறவளுங்களெல்லாம் விசாரிப்பாங்க. இந்த பொய்யை மாத்தி சொல்ல வேண்டி வரும். ஆகையினால இந்த பொய்யை ஒரே மூச்சுல எல்லார்கிட்டேயும் அவிழ்த்து விட்டுட்டு வந்துட்டோம்ன்னா மறுபடி பார்க்கிற யாரும் நம்மை இந்த கேள்வி கேட்க மாட்டாங்க. விசாரிக்க மாட்டாங்க. ஆபத்து இருக்காது.” என்றான்.

ஆள் முன் யோசனை புத்திசாலித்தனமாக இருந்தது.

“சரி” தலையாட்டினாள்.

இருவரும் அறைக்குள் சென்றார்கள்.

மாலா எழுந்து படுக்கையைச் சரி செய்தபடி, “குட்மார்னிங் பேகம்!” சொன்னாள்.

நிரஜா மல்லாந்து படுத்திருந்தாள். மார்பு வானத்தைப் பார்த்துக் கொண்டு கண்களைக் குத்தியது.

மீனா ஒருக்களித்துப் படுத்திருந்தாள். நைட்டியின் கழுத்துப் பக்கம் விலகி உள்ளே இருப்பது தெரிந்தது.

இதெல்லாம் வழக்கமாக இருக்கும் சர்வசாதாரணமான காட்சிதான். இருந்தாலும் இப்போது ஆர்த்திக்குச் சங்கடமாய் இருந்தது. உடல் கூசியது.

“எழுந்திரிங்கடி!” ஆளுக்கொன்று சுரீரென்று வைத்து எழுப்பினாள்.

துடித்துப் பிடித்து விழித்த அவர்கள், “எதுக்கு இப்போ எழுப்பினே?“ முணுமுணுத்து எழுந்தார்கள்.

அடுத்து அவர்கள் காலைக்கடன், படிப்பு என்று இருந்தார்கள்.

பேகத்திற்குத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவனும் ஒரு புத்தகம் எடுத்து வைத்துக் கொண்டு படித்தான்.

எட்டு மணிக்கெல்லாம், “மல்லிப்பூ! மல்லிபூ!” கீழே குரல் கேட்டது.

“இங்கே பூக்காரியெல்லாம் வருவாளா?“ ஆர்த்தியைப் பார்த்து பேகம் ஆச்சரியமாகக் கேட்டாள்.

“எங்களுக்கு தினம் எட்டு மணி அடிக்கிறவளே அவதான்!” என்று சொல்லி நிரஜா காசை எடுத்துக் கொண்டு கீழே சென்றாள்.

திரும்ப வரும்போது கையில் பத்து முழங்கள் கொண்டு வந்தாள். ஆளுக்கு இரண்டு முழம் வீதம் பேகத்திற்கும் ஒரு பங்கு கொடுத்தாள்.

“எனக்குப் பழக்கமில்லே!“ மறுக்க…

“என்ன பழக்கமில்லியா?” நிரஜா ஆச்சரியப்பட்டாள்.

“மல்லிப் பூ மட்டும் தலையில வைச்சா எனக்குத் தலை வலிக்கும்!” சமாளித்தாள்.

“ஆமான்டி. அவளுக்கு ஒத்துக்காது!” ஆர்த்தி அவசரமாய் வக்காலத்து வாங்கி அதை வாங்கி தன் தலையில் வைத்துக் கொண்டாள். அடுத்து எட்டரை மணியிலிருந்து கேண்டீன். ஒன்பதரை மணிக்கெல்லாம் படை படையாய் மாணவிகள் கல்லுாரிக்குக் கிளம்பினார்கள். அதுவரை ஆளரவமற்று இருந்த அந்த சாலை இப்போது வண்ணத்துப் பூச்சு கூட்டங்களாய் இருந்தது.

சைட்டடிக்க மாணவர்கள் இளைஞர்கள் இல்லை.

“எப்படி?” இது பேகதத்திற்கு ஆச்சரியமாக இருந்தது.

“என்ன ஒருத்தனைக்கூட சைட்டடிக்க காணோம்?!”அருகில் நடந்து வந்த ஆர்த்தியைக் கேட்டேவிட்டான்.

“அதெல்லாமில்லே. பதினஞ்சு நாளைக்கு முன்னாடியெல்லாம் அவனுங்க தொல்லை தாங்க முடியாம இருந்துது. மொட்டை மாடி கொலையிலேர்ந்து போலீசுக்குப் பயந்து ஒரு பயல் இங்கே நிக்கிறதில்லே.” சொன்னாள்.

கல்லுாரி வர… அவர்கள் நுழைந்தார்கள்.

பேகம் கல்லுாரி தாண்டி பேருந்து நிறுத்தம் வந்து டாக்ஸி பிடித்து தன் ஹோட்டல் அறைக்கு வந்தான்.

இரவு சரியாக உறங்காததால் கண் எரிந்தது, அறையைப் பூ ட்டிக் கொண்டு படுத்தான். நல்ல துாக்கம்.


மாலை ஆறு மணிக்கு விடுதி நோக்கி வந்தான். தொலைவிலேயே மாடி வராண்டாவில் போலீஸ் தலைகள் தெரிந்தது. சப்-இன்ஸ்பெக்டர் நாலைந்து மாணவிகளை விசாரித்துக் கொண்டிருந்தார்.

ஒரு கான்ஸ்டபுள் அருகில் இருந்தான்.

‘இந்த நேரத்தில் அங்கு தலைகாட்டினால் வம்பு!

யார் புது ஆள் ?… என்ன… ஏது…? என்று விசாரித்து நோண்டி நொங்கெடுத்து விடுவார்கள். வேசம் கலைந்தால் ஆபத்து!’ உணர்ந்த பேகம்..

போலீஸ்காரர்கள் வெளியேறும்வரை விடுதிக்குள் நுழையாமல் வெளியே இருந்தாள்.

சிறிது நேரத்தில் அவர்கள் விசாரணையை முடித்துக் கொண்டு வெளியேறினார்கள்.

அதற்கு மேலும் பத்து நிமிடம் கழித்து தாமதமாக விடுதிக்குள் நுழைந்தாள்.

போலீஸ் பயம் இன்னும் மிச்சமிருந்ததால் மாணவிகள் அறைகளை விட்டு வெளியே வராமல் இருந்தார்கள்.

பேகம் அறைக்குச் சென்றான். அங்கு ஆர்த்தி மட்டுமிருந்தாள். முதலில் எல்லா அறைகளுக்கும் சென்று வராலாமா இல்லை போலீஸ் விசாரணையைப் பற்றி விசாரிக்கலாமா என்று அவனுக்குள் சின்ன தடுமாற்றம். தெளிந்தான்.

“ஆர்த்தி!” அருகில் சென்று அமர்ந்தான்.

ஏறிட்டாள்.

“போலீஸ் உன்னை விசாரிச்சுதா?”

“இல்லியே…!”

“பின்னே ஏன் டல்லா உட்கார்ந்திருக்கே?”

“செத்துப் போனவளைப் பத்தி யோசனை.”

“என்ன யோசனை?“

“நல்லவளுக்கு ஏன் இப்படி அநியாயச் சாவுன்னு நெனைக்க கஷ்டமா இருக்கு.”

ஏறிட்டான்.

“சித்ரா…. தினம் அதிகாலை மொட்டை மாடியில போய்தான் ஸ்கிப்ங் செய்வாள். அன்னைக்கும் அப்படி போனவள் அலறி அடிச்சிக்கிட்டு கீழே வந்தாள். இவள் அலறல்லேயே எல்லாரும் முழச்சிக்கிட்டோம். என்னடின்னு விசாரிச்சா அவளால சொல்ல முடியலை. ஒருவாறு திக்கித்திணறி மூச்சு விட்டு ‘மேலே… பொணம்…! பொணம்…!’ சொன்னாள். ஓடிப் போய் பார்த்தோம். மொட்டை மாடி மேலண்டை ஓரம் சுபாஷினி மல்லாக்க பொணமா கிடந்தாள். கண் விழிச்சிருந்திருந்தது. அப்புறம் வார்டன்கிட்ட சொல்லி போலீசை வரவழைச்சு….” ஆர்த்திக்குத் துக்கம் தொண்டையை அடைத்து கண்கள் கலங்கியது. துடைத்துக் கொண்டாள்.

‘இறந்தவள் எவ்வளவு துாரம் நல்லவளாக இருந்தால் இப்படி மற்றவள் மனசை பாதித்திருப்பாள் ?!’ நினைத்துப் பார்க்க பேகத்திற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

“கொலையா?” கேட்டான்.

“கொலையா தற்கொலையான்னு தெரியலை. போலீஸ் ரெண்டு கோணத்திலும் விசாரணை நடத்திக்கிட்டிருக்கு. ஆனா என்னைப் பொறுத்தவரை தற்கொலையாய் தெரியலை. அவள் தற்கொலை செய்து கொள்ற அளவுக்கு கோழை இல்லே. பிரச்சனை இல்லே.”

“கொலையா?”

“அப்படியும் முடிவுக்கு வர முடியலை. உள்ளே வெளியே அவளுக்குன்னு எதிரிகள் கெடையாது”.

“காதல் தோல்வி?”

“இல்லே.“

“காதல் உண்டா?“

“சிக்கலை.”

“அவ எந்த அறையில தங்கி இருந்தாள்?”

“அறை எண் 28.”

“அறைத் தோழிகள்?”

“மன்மததேவி, வள்ளி, வனஜா“

“அவளுங்க எப்படி?“

“நல்ல மாதிரி”

“பின் எப்படி கொலை?“

“அவ சாவுல மர்மம் இருக்கு.”

“என்ன மர்மம் ?”

“அதான் புரியலை. போலீஸ் விசாரணையிலேயும் தெரியலை.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே… நிரஜா, மீனா, நுழைந்தார்கள்.

“உன் தோழிகிட்ட சுபாஷிணி சாவெல்லாம் சொல்லியாச்சா. அப்படியே அவ தினம் ராத்திரி ஓலமிடும் விசயத்தையும் சொல்லி பயமுறுத்த வேண்டியதுதானே?!” மீனா குண்டைப் போட்டாள்.

“என்ன ! ராத்திரி நேரத்துல ஓலமா?!” பேகத்திறகுள் அதிர்வு வந்து.. துணுக்குற்றாள்.

“ஆமாம் தினம் ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேலே விடாம கொஞ்ச நேரம் மொட்டை மாடியில ஒரு விசித்திரமான சத்தம் கேட்கும். யாரோ கழுத்தை நெரிச்சு கொல்ற மாதிரியும் சுபாஷ்ணி மூச்சுத் திணறி சாவுறமாதிரியும் கேட்கும்.”

“நிசமாவா?!“

“ஆமாம். இந்த விடுதியில எல்லாரும் கேட்டிருக்காங்க. நாங்களும் கேட்டிருக்கிறோம். அதனால ராத்திரி பத்து மணிக்கு மேலே யாரும் அறையை விட்டு வெளியே வர்றதில்லே. ஆட்டம் பாட்டமெல்லாம் ராத்திரி பத்து மணியோட சரி.” நிரஜா சொல்லி முடித்தாள்.

பேகத்திற்கு நினைத்துப் பார்க்கவே குலை நடுக்கமாக இருந்தது.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *