வீண் பழியும் வேறு வழியும்!

லேசான மழையின் தூரல் பட்டதால் வீட்டின் முன் இருந்த மரத்தில் பூத்திருந்த செண்பகமலரின் வாசனை நாசியில் நுழைந்து, மனம் ஏகாந்தத்தில் திளைத்து மகிழ்ந்தது. ஈரக்காற்று உடலை வருடிச்சென்றது. தென்றலின் சுகம் மன்றலை ஞாபகப்படுத்த இணையின் ஞாபகம் வந்து மனதை வாட்டியது.
திருமணமாகி ஆறு மாதங்கள் ஆனந்தமாக குடும்பம் நடத்திய நிலையில், வியாபார நிமித்தமாக கணவன் மகிழன் தன்னை விட்டுப்பிரிந்து சென்றதால் உருவான ஏக்கம், தூக்கம் கெடுத்தது மயங்கினிக்கு.
‘உடலும், மனமும் ஒன்றைப்பற்றித்தெரியாத வரைக்கும் பிரச்சினை செய்வதில்லை. தெரிந்த பின் பிரச்சினை செய்வதைத்தவிர வேறு எதையும் செய்வதில்லை. ஏதுமறியாமல் வெகுளித்தனமாக இருந்த வரைக்கும் மனம் மகிழ்ச்சியைத்தவிர வேறு எதையும் அறிந்ததில்லை. அனைத்தும் தெரிந்த பின் மகிழ்ச்சி என்பதே வருவதில்லை’ என நினைத்ததில் வருந்தினாள்.
மகிழ்ச்சி தொலைந்து பல திங்கள் கடந்தும் பதியைக்காணாமல் உடல் பாதி இளைத்ததோடு, கை வளையல்கள் கழண்டு தானாக விழுந்ததோடு மனதில் கவலை எனும் செடி முளைத்து வேதனை எனும் நீரைப்பருகிப்பருகி பெரிய விருட்சமாகவே வளர்ந்து விட்டது.
மணம் முடிக்கும் முன் மகிழ்ச்சி மனதில் தோன்றுவதாக இருந்தது. மணம் முடித்த பின் மற்றவர்களிடத்திலிருந்து கிடைப்பதாக ஆகி விட்டது. அன்பான அணைப்பு, ஆசையான வார்த்தை, அருகிலிருக்கும் சுகம். இயற்கையின் படைப்பின் இந்த மெய் மறக்கச்செய்யும் அற்புதம் யாருக்கும் முழுமையாகத்தெரியவில்லை. ஆனால் மனிதனின் படைப்புகள்,பேராசைத்தேவைகள் இயற்கையால் கிடைக்கும் இன்பத்தை மனிதர்களை உரிய தருணத்தில் நுகர விடுவதில்லை.
மனதுக்கு பிடித்தவர்கள் அருகிலிருந்தால் கோரைப்பாயிலும் குரட்டை விடுமளவுக்கு ஆழ்ந்த உறக்கம் வரும். அஃது ஒரு வகையான பாதுகாப்பு. நம்பிக்கை. தனிமை இனிமை தருவதில்லை. பஞ்சு மெத்தையும் நெருப்பாகச்சுடுகிறது.
ஆடுகள், குட்டிகள், மாடுகள், கன்றுகள், கோழிகள், குருவிகள் என தன் மொழி புரியாதவற்றுடன் பைத்தியகாரி போல் தனது தேவைகளையும், துன்பங்களையும் சொல்லி வேதனைக்கு மருந்திட்டுக்கொள்வாள் இளமையின் முழு பரிமாணத்தை தன் வசம் கொண்டிருக்கும் இருபது வயதுடைய மயங்கினி.
மாமனாரும், மாமியாரும் வயதானவர்கள். யாருடனும் வாய் விட்டுப்பேசவே விடாமல் அவளைக்காப்பவர்கள். அதே சமயம் மருமகளுடனும் அன்பாகப்பேசத்தெரியாதவர்கள்.
‘சில சமயம் நாம் பேசுவது என்னவென்றே புரியாத மற்ற உயிரினங்களுடன் கூட பேசி ஆறுதல் படலாம். ஆனால் மொழி தெரிந்த, அதே சமயம் ஒத்துப்போகாத சக மனிதர்களிடம் பேசுவதென்பது துன்பத்தீயை ஊதி வளர்ப்பது போன்றது. பேச்சின் முடிவு வேதனை தருவதாகவே ஆகி விடுவதால் ஒதுங்கிச்செல்லவே மனம் விரும்புகிறது’ என நினைத்து வருந்துவாள்.
“அந்த கருப்பாத்தாளோட பையன் ரங்கன் என்னத்துக்கு பொழுதன்னிக்கும் நம்மூட்டுக்கு உன்னைய பாக்கிறதுக்கு வாரான்? அவம்பேசறது எங்களுக்கு புடிக்கல…”
“எனக்கு புடிச்சிருக்கு….”
“அவம்பேசறதையா…? அவனையா….?”
“ரெண்டையுந்தான்….”
“ஒனக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்தியாத்தாம் போச்சு….”
“அவனெனக்கு தம்பி மாதர…. அதத்தெரிஞ்சுட்டு பேசு மொதல்ல….” மாமியாரைப்பார்த்து வெடுக்கென சிம்பினாள்.
“உன்ற ஆத்தா வகுத்துல பொறந்தவனா…?”
“அக்கான்னு பாசமாத்தான் கூப்புடுறான்….”
“எம்பட வயசுக்கு அக்கா, தம்பீன்னு சுத்துனவங்கள எத்தன பேரப்பாத்திருக்கறேன்….” மாமியார் கூறிய இந்த வார்த்தையில் வேறு பொருள் புரிந்த போது வேதனை மனதில் கூடியது.
“பேச்சுத்தொணைக்கு ஆருமில்லேன்னா கெணத்துல உழுந்து செத்துப்போலாம்னு இருக்குது. செத்துப்போயிருட்டா….?” மனம் நொந்து உறுதியாகக்கேட்டாள்.
“அடிப்பாவி சண்டாளி…. சொந்தத்துல கட்டி வெச்சா சொன்னபடி கேப்பீன்னு, ஒறவுல கட்டி வெச்சா ஒத்துப்போவீன்னு என்ற மவனுக்கு ஒன்னையக்கட்டி வெச்சனே…. இப்புடி மோசம் போயிட்டனே…. ” ஒப்பாரி வைத்தபடி அழுதாள்.
“நானுன்ற நல்லதுக்குத்தானே சொன்னேன். ஊட்டு வாய மூடுனாலும் ஊரு வாய மூட முடியாது. அப்பறம் குடும்பமே நானுட்டுதாஞ்சாகோணும்… வேவாரத்துக்கு தேசாந்தரம் போயிருக்கற என்ற பையன் சம்பாரிச்சுட்டு வந்து உனக்குத்தானே கொட்டப்போறான்..? எங்களுக்கா குடுக்கப்போறான்…? ” கண்களில் நீர் வடிய பேசிய மாமியாரை முறைத்துப்பார்த்தாள்.
“ஏய்…. வாய மூடு கெழவி… இப்ப என்ன? அவனக்கூட்டீட்டு ஓடீடப்போறேன்னா இப்புடி ஒப்பாரி வெச்சு அழுகறே….? செரியான பாசாங்கி நீயி…. என்ற அப்பமூட்ல இருந்த போதே கண்ணகி மாதர அப்பழுக்கில்லாம இருந்தவதா நானு. கண்ணாலத்துக்கப்புறம் கண்டபடி சுத்திப்போடுவேன்னு சந்தேகப்படறியா…?
மனசுல ஆயரத்தெட்டு வேதனை இருந்தாலும் வேறெங்கியும் போயற மாட்டேன்… பச்சத்தண்ணிய மோந்து தலைல ஊத்தீட்டு சுத்தமானவளா வாழ்ந்து போடுவேன்…” சொன்னவள் வீட்டின் கதவை உள்ளே சென்று படீரென சாத்தி கோபத்தை வெளிப்படுத்தினாள் மயங்கினி.
‘தவறு செய்யாதவர்களை நம்பிக்கைக்குரியவர்களே நம்பாமல் திரும்பத்திரும்ப பேசும் போது, தவறு செய்யாமல் பழி சொல் ஏற்பதற்கு செய்து விட்டே ஏற்கலாம் என்கிற துணிவு வந்து விடுகிறது. பல மனிதர்களிடம் தவறுகள் நடக்க இதுவும் காரணமாகிவிடுகிறது’ எனும் சிந்தனை ஓடியது.
இரவு உறக்கம் பிடிக்கவில்லை. கணவரைப்பற்றிய எந்த செய்தியும் வந்தபாடில்லை. ‘அவர் வருவாரா? வரமாட்டாரா? வருவார் என்றால் எப்போது வருவார்? வரமாட்டார் என்றால் உயிரோடு இருந்து கொண்டே வர மாட்டாரா? உயிருக்கு ஆபத்து வந்ததால் வரமாட்டாரா? நம்மை விட அழகான பெண்ணைப்பார்த்து வேறு கல்யாணம் பண்ணி வாழ்கிறாரா…?’ நினைக்க, நினைக்க மன பயம் அதிகரித்ததால் உடலில் வெப்பம் கூட, உதடுகள் ஈரப்பசையற்றுப்போய் தாகம் எடுத்துக்கொண்டே இருந்ததால் மண் பானையிலிருந்த ஒரு பானை தண்ணீரும் விடிவதற்குள் காலியாகி விட்டது.
“ஏக்கா…. உன்ற புருசனை நெனைச்சே மருகி, மருகி ஐஸ் மாதர உருகிப்போயறாதே….” ரங்கன் சிலேடையாகப்பேசினான்.
“ஏண்டா... தம்பி, அதப்பத்தி உனக்கென்ன இவ்வளவு அக்கரை....?”
“உன்ன மாதர ஒரு அக்கா…. அதுவும் இத்தன அழகான அக்கா…. எனக்கு ஒன்னொரு ஜென்மத்துல கெடைப்பாங்களா….?”
“அழகான…. ” எனும் வார்த்தையை அழுத்திச்சொன்னது அதிர்ச்சியைக்கொடுத்தது.
“ஆரு சொன்னது உன்ற கிட்ட நான் அழகுன்னு….?” பொய் கோபத்துடன் கேட்டவள், தன்னை அழகென்று சொன்னதை நினைத்து மனதால் மகிழ்ந்தாள்.
“உன்ற அத்தை மகன் மாசு மாமாதாஞ்சொன்னாரு. மகிழன் மாமா ஒன்னிமே வரமாட்டாரு… அதனால….”
“அதனால…”
“உன்ன மாசு மாமா கண்ணாலம் பண்ணிக்கப்போறதா சொன்னாரு….”
சொன்னவன் ‘அடித்து விடுவாளோ….?’என நினைத்தவாறு பயந்து அங்கிருந்து ஓடி விட்டான். மயங்கினி அதிர்ச்சியின் உச்சத்தில் கண்கலங்கினாள்.
“ஏண்டா மாசு. உனக்கு அறிவுகிறிவு இருக்குதோ இல்லியோ….?”
“ஏண்டா….?” தனது நண்பன் ராசுவைப்பார்த்துக்கேட்டான் மாசு.
“மகிழன் வேவாரத்துக்கு போயி முழுசா ரெண்டு வருசமாச்சு. ஒன்னம் உசுரோட இருப்பான்னு நம்பறியா? சிறுத்தையோ, சிங்கமோ அடிச்சிருக்கும். இல்லேன்னா வேவாரத்துக்கு கொண்டு போன பணத்த திருடனுக புடுங்கீட்டு அவனக்கொன்னு பொதைச்சிருப்பாங்க….”
“அப்படித்தான் நானும் நெனைச்சேன்.”
“இப்படி நெனைச்சுட்டுத்தா அவம்பொண்டாட்டிய நீ கண்ணாலம் பண்ணறதா சொன்னையா? அப்படீன்னா வெள்ளைச்சீல கட்டிக்கப்போறவள ஆராச்சும் கட்டிக்குவாங்களா?”
“பொண்டாட்டி செத்துப்போனா ஆம்பளைங்க வேற கண்ணாலம் பண்ணிக்கிறதில்லையா? அத மாதிரி தான்…”
“இதென்னடா புதுசா இருக்கு. ஊர்ல ஆரு ஏத்துக்குவா…? அப்புடிக்கிப்புடி பண்ணீட்டீன்னு வெச்சுக்கோ…. பண்ணையாரு பஞ்சாயத்தக்கூட்டி ஊர விட்டே உங்கள ஒதுக்கி வெச்சுடுவாரு….”
“ஊரே என்னடா…. உலகமே ஒதுக்குனாலும் அவ மட்டும் ஒத்துகிட்டா போதும். எந்த ஊருக்கு வேணும்னாலும் கூட்டிகிட்டு போயி வாழ்ந்திடுவேன். எனக்கு மயக்கமெல்லாம் ஊர் மேல இல்லடா. என்ற மாமம்பொண்ணு மயங்கினி மேல தான். அவளுக்கும் என்ற மேல சின்ன வயசுல ஒரு இது இருந்துச்சு. நாஞ்சாரயங்குடிக்கிறதுனால என்னை வேண்டானுட்டா. இப்ப நாங்குடிக்கிறத நிறுத்திப்போட்டனில்ல. இப்ப ஒத்துக்குவா…” என சொல்லி மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று சத்தமிட்டு சிரித்தான் மாசு.
‘ஒரு பக்கம் மாமியாரின் சந்தேகப்பேச்சு. இன்னொரு பக்கம் அத்தை மகன் மாசுவின் திருமணத்திட்டம். கணவனின் நிலை என்னவானதோ? எனும் கவலை. உடல் இச்சையைப்போக்க மாசுவைத்திருமணம் செய்தால் புருசன் இருக்கறபோதே இப்படி செய்து விட்டாள் என ஊரே ஒதுங்கி நிற்கும். ஒதுக்கியும் வைக்கும். இதையெல்லாம் சகித்துக்கொள்ளும் மன உறுதியும் நமக்கு இல்லை. ஒன்று செத்துப்போய்விட வேண்டும். இல்லையேல் கண்காணாத இடத்துக்குப்போய் விட வேண்டும்’எனும் விபரீத யோசனை மயங்கினி மனதில் ஓடியது.
“அழாதே அக்கா. நாம ரெண்டு பேரும் போய் மச்சானைத்தேடலாம். கண்டிப்பா கெடைப்பாரு” என ரங்கன் யோசனை சொன்னது சரியெனப்பட்டது.
ரங்கனைக்கூட்டிக்கொண்டு போய் கணவனைத்தேடலாம் என யோசித்தாள். யோசனைப்படி யாரிடமும் சொல்லாமல் சேமித்த பணத்தையும், தாய் வீட்டில் போட்ட நகையையும் எடுத்துக்கெண்டு, ரங்கனை அழைத்துக்கொண்டு நடு இரவில் தைரியமாக வீட்டை விட்டு கிளம்பி போய் விட்டாள்.
பொழுது விடிந்ததும் மருமகள் மயங்கினியைத்தேடிய மாமியார், ரங்கனும் காணாமல் போயிருப்பதைக்கண்டு சத்தமிட்டு ஊரைக்கூட்டி, “ரங்கனக்கூட்டீட்டு என்ற மருமக ஓடிப்போயிட்டாள்” எனக்கூறியதை ஊரே நம்பியதோடு, ‘தம்பி மொறைன்னு பார்க்காம கூட்டீட்டு போயிட்டாளே….’ என ஊரே மயங்கினியை காரித்துப்பியது.
ஊரில் நடப்பது எதையும் கற்பனை கூட செய்து பார்க்காமல் காடு, மலை என நடந்து, கடந்து, களைத்துத்போயினர். ஒரு கிராமத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் ஓய்வெடுக்க ஒதுங்கிய போது வீட்டிற்குள்ளிருந்த பெண் உள்ளேயே அழைத்து உணவு கொடுத்து, இரவு படுக்க இடமும் கொடுத்தாள்.
மறுநாள் நன்றி சொல்லி விட்டு நடந்து செல்ல முயன்ற போது தனது கணவனின் குதிரை வண்டியில் சென்றால் குதிரைக்கு தீணி கொடுத்து, அவருக்கு உணவு கொடுத்தால் போதும். வரும் போது ஒரு மூட்டை கம்பு வாடகையாக கொடுத்தால் போதுமென சொன்ன போது கடவுளின் செயல் என நினைத்து, மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு குதிரை வண்டியில் இருவரும் ஏறிக்கொண்டனர்.
குதிரை வட்டிக்காரனுக்கு தேசம் முழுவதும் சுற்றிய அனுபவம் இருந்ததால் வணிகர்கள் எங்கெங்கு செல்வார்களோ அங்கெல்லாம் சென்று அடையாளம் சொல்லி விசாரித்தான். ஒரு சந்தையில் இரண்டு திங்களுக்கு முன் மகிழனைப்பார்த்ததாக ஒரு வியாபாரி சொல்ல நிம்மதி வந்தது போக விரைவில் கணவனைக்காணப்போவதாக எண்ணி மகிழ்ந்தாள் மயங்கினி.
அன்று இரவு ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தி மயங்கினியை படுக்கச்சொல்லி விட்டு வண்டிக்காரனும், ரங்கனும் கீழே படுத்துக்கொண்டனர். குதிரைக்காரன் மனைவி கொடுத்தனுப்பிய கட்டுச்சோறு பசியைப்போக்கியது. புளிய மரத்துப்புளி கரைத்து சமைத்ததால் ஒரு வாரம் சோறு கெடாமலிருக்கும் என்பது மயங்கினிக்கும் தெரியும்.
பக்கத்தில் சாராய வாடை அடிக்க குதிரை நிலை கொள்ளாமல் ஆடியது. மயங்கினியிடம் நாலு அணா வாங்கி சாராயம் வாங்கி குதிரைக்கு கொடுத்த பின்பே அமைதியானது குதிரை. மீதமிருந்த சாராயத்தை ரங்கனும், குதிரைக்காரனும் குடித்து விட்டு படுத்துக்கொண்டனர்.
நடு இரவில் அந்த வழியே வந்த கொள்ளைக்காரர்கள் இரண்டு பேர் மது மயக்கத்தில் இருவரும் கிடப்பதைக்கண்டு குதிரையைப்பூட்டி வண்டியை ஓட்டிக்கொண்டு போய் விட்டனர். உள்ளே குளிருக்கு சாக்கைப்போர்த்தி மயங்கினி படுத்திருந்ததால் மூட்டை என நினைத்துக்கொண்டனர். அதனருகில் தங்களது மூட்டையை வைத்து விட்டு ஒருவர் முன்னால் அமர்ந்து வண்டி ஓட்ட, ஒருவர் பாதுகாப்பாக பின்னால் நடந்தே வந்தார்.
குதிரைக்காரனில்லாமல் எப்பொழுதும் ராணி குதிரை வண்டியைப்பூட்டினால் ஓர் அடி கூட எடுத்து வைக்காது. தற்போது போதையில் இருந்ததால் கொள்ளையர்களென தெரியாமல் வண்டியை இழுத்துச்சென்றது.
பொழுது விடிந்த போது போதை தெளிந்த குதிரை, வண்டியை இழுக்காமல் நின்ற போது அடித்தனர். அந்த சத்தம் கேட்டு விழித்த மயங்கினி தன்னுடனிருப்பவர்கள் அந்நியர்கள் என்பதையறிந்து சத்தமிட்டு பயத்தில் கத்தியபோது பாதையில் சென்றவர்கள் ஓடிவந்ததைக்கண்டு கொள்ளையர்கள் வண்டிக்குள் இருந்த தங்களது மூட்டையைக்கூட எடுக்காமல் உயிர் பயத்தில் ஓடி விட்டனர்.
அந்தக்கூட்டத்தில் ஒரு முகம் பரிச்சயமாக இருந்ததைக்கண்டு பக்கத்தில் சென்று பார்த்த போது கணவன் மகிழன் என்பதையறிந்து கட்டிப்பிடித்து கதறியழுதாள் மயங்கினி. அப்போது ரங்கனும், குதிரைக்காரனும் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஓடி வந்தனர்.
“வேவாரத்துக்கு கொண்டு வந்த பணத்தை ரெண்டு கொள்ளைக்காரங்க புடிங்கீட்டு போயிட்டாங்க. அதனால இந்த ஊர்ல கூலி வேலை செஞ்சு வாழ்ந்திட்டிருந்தேன். வெறுங்கையோட ஊருக்கு வந்தா கேவலம்னு இங்கேயே இருந்துட்டேன்” என மனைவியிடம் கூறி அழுதான் மகிழன்.
அப்போது குதிரை வண்டிக்குள்ளிருந்து குதிரைக்காரன் ஒரு மூட்டையை எடுத்தான். அந்த மூட்டைதான் மகிழனுடையது என்பதைக்கண்டபோது மகிழன் மகிழ்ந்தான்.
“நேத்தைக்குத்தான் குடுகுடுப்பைக்காரன் என்னைப்பார்த்துச்சொன்னான். இழந்தது கிடைக்கும் என்று. இப்போது கிடைத்து விட்டது. இந்தப்பணத்தை வைத்து பொருட்களை சந்தையில் வாங்கி இந்த வண்டியில் ஏற்றிக்கொண்டு ஊருக்குப்போகலாம் என்று கணவன் சொன்ன போது மயங்கினி தயங்கினாள்.
“ஏன் சோகமாயிட்டே….? சந்தோசமான விசயம் தானே சொன்னேன்?”
“இப்ப ஊரே என்னையும், ரங்கனையும் எணைச்சு தப்பா பேசியிருக்கும். இனி மேல் அங்க வந்து என்னால வாழ முடியாது. உங்களை செத்துப்போனவராகவும், எங்களை ஓடிப்போனவங்களாகவுமே ஊர் நம்பட்டும். நாம குதிரைக்காரர் வீட்லயே தங்கிக்கலாம். குதிரைக்காரரின் ஒரே பெண் சிங்கியை ரங்கனுக்கு கல்யாணம் செய்து வைத்து விடலாம். ஓரிரவில் இரண்டு பேரும் காதலர்களாகி விட்டனர். உங்க அப்பனையும், ஆத்தாளையும் இந்த குதிரைக்காரரை போயிருந்து உங்களோட சிநேகிதன்னு சொல்லி பாத்துக்க சொல்லிடலாம். இதத்தவிர எனக்கு வேற வழி தெரியவில்லை…” என மனைவி மயங்கினி கண்ணீர் விட்டு சொன்னதை கணவன் மகிழனால் மறுக்க முடியவில்லை.
கதையாசிரியர்:
அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
வீண் பழியும் வேறு வழியும்!
-சிறுகதை

![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |