சிநேகாவும் போலீஸ் தொப்பியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 94 
 
 

“அம்மா! அம்மா!”, என கத்தியபடியே ஓடிவந்தாள் சிநேகா.

“என்ன சிநேகா? என்னாச்சு? ஏன் இப்படி கத்தீட்டே ஓடிவர?”

“அம்மா இங்க பாருங்க”

கையில் ஒரு பெரிய தொப்பி வைத்திருந்தாள். கண்டிப்பாக சிநேகாவுடையது அல்ல.

“என்னம்மா இது போலீஸ் தொப்பி, எப்படி இது உன் கைக்கு வந்துச்சு”

“அப்படியே பறந்து வந்துச்சும்மா”, என்று சிரித்தபடி சொன்னாள் சிநேகா.

“என்னடி சொல்ற?”

“ஆமாமா. தூரத்துல இருந்து பறந்து வந்து என்கிட்ட விழுந்துச்சு. டக்குனு எடுத்துக்கிட்டேன்”

“ஓ. அங்கேயே நீ எடுத்துட்டு நின்னுருந்தினா, தொலச்ச போலீஸ் வந்து வாங்கிட்டு போயிருப்பாங்கல்ல, எதுக்கு இப்படி எடுத்துட்டு ஓடியாந்த?”

“போம்மா, எனக்காக பறந்து வந்து என்கிட்ட விழுந்துச்சு. நான் எடுத்துக்க கூடாதா?”

“ஓ. உங்கிட்ட விழுந்துச்சுனா, அது உன்னோடது ஆகிடுமா? தப்புமா சிநேகா. தொப்பிய எடுத்துட்டு வா. அதே இடத்துக்குப் போவோம். யாராவது போலீஸ்காரர் தேடிட்டு இருக்கப் போறார்”, என்று சொல்லிவிட்டு சிநேகாவின் கையைப் பிடித்து இழுக்க,

சிநேகாவோ, “என்னம்மா இது? இப்படிச் சொல்ற. நான் தொப்பியத் தரமாட்டேன். எனக்கு இது பிடிச்சிருக்கு. எனக்கு வேணும். எனக்கு எவ்வளவு நாள் ஆசை தெரியுமா இந்த மாதிரி தொப்பிய போட்டுப் பாக்கறதுக்கு. நான் கடவுள்கிட்ட போலீஸ் தொப்பி வேணும்னு வேண்டிக்கிட்டேன். அவர் கொடுத்திருக்கார். நீ என்னடானா திருப்பிக் கொடுத்திடுனு சொல்ற! திருப்பிக் கொடுத்தா கடவுள் கோவிச்சிக்க மாட்டாரா?”

“என்ன சிநேகா! இப்படிச் சொன்னா எப்படீமா கடவுள் எப்படி இதுக்குள்ள வந்தார்? அவரே கொடுக்கனும்னா, அடுத்தவங்கங்களோடத எடுத்தா கொடுப்பார். கொஞ்சம் யோசி. மத்தவங்க பொருளு நமக்கு எதுக்கு? இதே உன்னோட பொருள் ஒன்னு தொலைஞ்சு, வேற யாராவது கண்டுபிடிச்சு கொடுத்தாங்கன்னா, உனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கும். அதே சந்தோசத்த நீ மத்தவங்களுக்கு கொடுக்க வேண்டாமா?”

“அதுதான் யாரும் என்னுதுனு சொல்லிட்டு இதுவரைக்கும் வரலையே! அப்ப இது என் பொருளு தானே! நானா பிடுங்கிட்டு வந்தேன். தானா வந்தது தானே!”

“தானா வந்தாலும். அத நீ தான் எடுத்துட்டு இங்க வந்திட்டுயே! அவங்களுக்கு எப்படி நீ இங்க இருக்கறது தெரியும் நீ தான் எடுத்ததுனு தெரியாம, உன்னைத்தேடி எப்படி இங்க வருவாங்க? நீ இப்படியெல்லாம் செய்ய மாட்ட. ரொம்ப நல்ல பொண்ணுனு தெரியும். ஆனா தொப்பி விஷயத்துல ஏன் இப்படி பேசறேனு தெரியலையே!”, என பொலம்பித் தீர்த்தாள் சிநேகாவின் அம்மா.

எப்படி பொலம்பினாலும் கொடுக்கவே போறதில்லேனே நினைச்சு, பேச்சுக்கு பேச்சு பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள் சிநேகா.

அதே நேரம் வீட்டுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டது.

என்னவென்று பார்க்க இருவரும் வெளியே வர, அங்கே ஒரு போலீஸ்காரரும், காய்கறிக்கடை பாட்டியும் நின்று கொண்டிருந்தனர்.

“சார். இந்தப்பொண்ணு தான் சார்”, என்று பாட்டி சிநேகாவைக் காட்ட,

கையில் தொப்பியுடன் நின்று கொண்டிருந்த சிநேகா, பெரிய மீசை வச்ச போலீஸ்காரரைக் கண்டதும் நடுங்க ஆரம்பித்தாள். ‘ஆசையா கிடைச்ச தொப்பிய, சொந்தம்னு நினைச்சிட்டு இருக்கும் போதே, இப்படி வந்து இந்த பாட்டி என்னைய மாட்டி விட்டுட்டாங்களே’ என நினைத்தபடி பாட்டியையும் முறைத்துப் பார்த்தாள்.

“சார். உங்க தொப்பியா?”, என சிநேகாவின் அம்மா கேட்க

“ஆமாம்மா. ஒரு நண்பர் பின்னாடி உக்காந்து பைக்குல போயிட்டு இருக்கும் போது, பயங்கரமா காத்து அடிச்சு தொப்பிய பறக்க வச்சிருச்சு.

என்னை இறக்கி விட்டுட்டு அவர் போயிட்டார். அப்ப இருந்து ரொம்ப நேரமா தேடிட்டு கடைசியாத்தான் இவங்க கடைக்கிட்ட வந்தேன். இவங்க தான் உங்க தொப்பிய பக்கத்துல இருக்கற ஒரு பாப்பா எடுத்துட்டுப் போச்சுனு சொல்லி என்னை இங்க கூட்டிட்டு வந்தாங்க. நானும் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கேனு நினைக்கறேன். பாப்பா தொப்பிய கொடும்மா”

“இந்தாங்க”, என சோகமாக சிநேகா தொப்பியைக் கொடுத்தாள்.

“ஏம்மா இவ்ளோ சோகம்?”

“இல்ல. எங்கேயோ இருந்து பறந்துவந்து எங்கிட்ட விழுந்துச்சு. அதான் எனக்காக வந்துச்சுனு எடுத்து வச்சுக்கிட்டேன். ஆனா இப்ப நீங்க வந்து இத வாங்கிட்டீங்களே!”

“ஓ, உனக்கு போலீஸ் தொப்பி பிடிக்குமா?”

“ஆமாம். ரொம்ப பிடிக்கும்”

“அது உன்கிட்டேயே இருக்க, ஒரு வழி இருக்கு. சொல்லவா?”

“ஐ ஐ சொல்லுங்க சொல்லுங்க”

“ரொம்ப ஈஸி”

“ஈஸியா?”

“ஆமா. தைரியமானப் பொண்ணா வளரனும். நல்லா படிக்கனும். அப்பறம் நீயே போலீஸ் வேலைக்கு சேரனும். அவ்ளோதான். எப்பவுமே இந்த தொப்பி உங்கிட்டேயே இருக்கும். என்ன சரியா?”

“ஓகோ. சரி அங்கிள். அதுக்கு முயற்சி பண்றேன்”

“சூப்பர்”

“இப்ப ஒரு சின்ன ஆசை”

“என்ன ஆசை சொல்லு?”

“ஒரே ஒரு வாட்டி, இந்த தொப்பிய போட்டு பாத்துக்கட்டுமா?”

“அதுக்கென்ன. இந்தா போட்டுக்கோ”, என அவர் கொடுக்க

சிரித்தபடி சந்தோசமாக தொப்பியை வாங்கி அணிந்துகொண்டாள் சிநேகா.

அங்கே ஒரு வருங்கால போலீஸ் அதிகாரி நிற்பதாக நினைத்துப் பார்த்த சிநேகாவின் அம்மா, பெருமிதத்துடன் குட்டி போலீஸ் சிநேகாவிற்கு ஒரு சல்யூட் வைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *