போதைப் பாதை





எனக்கு திருமணம் முடிந்து இரண்டு மாதம் கழித்து நான் வேலைப் பார்க்கும் பள்ளிக்கூடத்திற்கு சென்றேன்.எனது வகுப்பறைக்குள் நுழைந்ததும் மாணவர்கள் பலர் சிரித்த முகத்தோடு என்னை நலம் விசாரித்தனர். அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பாடம் நடத்த ஆரம்பித்தேன். அப்போது தான் நான் பாலா பள்ளிக்கு அன்று வராததை கவனித்தேன்.பாலா நன்றாக படிக்கக்கூடிய மாணவன் நன்றாக என்னிடம் பழகவும் செய்வான்.”ஏன் அவன் வரவில்லை” என்று கேட்டபோதுதான் எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது என்னவெனில் “அவன் இனிமேல் பள்ளிக்கு வரமாட்டான்” என்று கூறினார்கள் “ஏன்” என்று கேட்டபோதுதான் அவனது நண்பன் பெருமாள் கூற ஆரம்பித்தான்.
“சார்! அவன் இப்போ தண்ணி,கஞ்சா அப்படின்னு போதைக்கு அடிமையாகி ரொம்ப கெட்டுப் போய்ட்டான் சார்!”
“என்னடா சொல்ற?”
“ஆமா சார்! அவனுக்கு ரொம்ப மாசமாகவே இந்த பாழாப்போன போதைப்பழக்கம் இருக்கு சார் .அப்படி ஒரு நாள் அவன் கஞ்சா அடிக்கும்போது அவங்க அம்மா அதை பார்த்து அவனை அடிச்சிறுக்காங்க. அதுக்கு அவன் அவங்க அம்மாவையே எதிர்த்து அடிச்சிறுக்கான், கெட்ட வார்த்தைலாம் போட்டு திட்டியிறுக்கான், போதை மாத்திரைகளை வாங்குறதுக்காக சொந்த வீட்லயே திருட ஆரம்பிச்சான். அப்படியே ஆரம்பிச்சு கடைசில வழிப்பறி பண்ற அளவுக்கு போய், போலீஸில் மாட்டி,அவங்க அம்மா அந்த அசிங்கத்தை தாங்காம தற்கொலைப்பண்ணி, அப்படியே அவன் வாழ்க்கையே மாறிப்போச்சு. அவனால் நகையை பறிக்கொடுத்தவங்க கேஸை வாபஸ் வாங்கியதால் அவனை ஜெயிலில் போடவில்லை. இப்போ அவன் அவனுடைய ஆச்சி வீட்டில் தான் இருக்கான். போலீஸ்ட்ட மாட்டியதிலிருந்து அவன் இப்போ ரொம்ப நல்லாவே திருந்திட்டான். ஆனாலும் எங்க நாம ஸ்குலுக்குப் போனா நம்ம ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்கன்னு நினைச்சு ஸ்கூலுக்கு வரமாட்டேங்குறான். அவனை எப்படியோ ஸ்கூலுக்கு வர வைங்க சார், அவன் இப்போ திருந்திட்டான்” என்று பாவம் போல் கூறினான்
நான் விடுப்பு எடுத்த இந்த இரண்டு மாதக் காலத்தில் நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்த்த போது வியப்பாக இருந்தது.
அதனைக் கேட்ட நான் ஒரு முடிவுக்கு வந்தவனாக வெளியே வந்து வண்டியைக் கிளப்பினேன், அவனை கூப்பிட்டு வருவதற்காக.
பாலாவின் பாட்டி வீட்டிற்குச் சென்றேன் அந்த வீட்டின் வாசலில் அவனது பாட்டி வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் பாலா அமைதியாக உட்கார்ந்திருந்தான். என்னை பார்த்தவுடன் அவன் வெட்கத்தில் தலைக்குனிந்து அழுதுக்கொண்டே உள்ளே ஓடினான். என்னை பார்த்த அவனது பாட்டி “வாங்க சார்! உங்க பேரு தானே விமல் உங்களைப்பத்தி நிறைய சொல்லியிறுக்கான். உங்களைன்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அந்த சம்பவத்திலிருந்து அவன் ரொம்பவே மனசு உடைஞ்சுப் போயிறுக்கான். நீங்க உள்ள போய் ஆறுதலாக ரெண்டு வார்த்தை பேசிட்டு வாங்க சார்” என்றார் நானும் உள்ளே சென்றேன்.
அங்கு கட்டிலில் முகம் புதைத்து அழுதுக்கொண்டிருந்தான் அவன் அருகில் உட்கார்ந்த நான் “என்னடா ஆச்சு நல்லாதான இருந்த பிறகு எப்படி உனக்கு இந்த பழக்கம்”?
ஆனால் அவன் பதில் சொல்லவில்லை
“சரி இது வரைக்கும் நடந்ததை எல்லாம் மறந்து விடு.ஸ்கூலுக்கு வந்து படி யார் என்ன கிண்டல் செய்தாலும் அவங்களை ஒரு ஆளாகவே மதிக்காத.நான் உன்னிடம் ரொம்ப எல்லாம் அட்வைஸ் பண்ண விரும்பலை. படிச்சா உன் வாழ்க்கை மாறும் அப்படின்னு உனக்கே தெரியும், பிறகு எதுக்கு நீ ஸ்கூலுக்கு வர தயங்குற இதுவரைக்கும் அப்படி, இப்படின்னு இருந்துட்ட இனி உன் வாழ்க்கையை புதுசா தொடங்கு. அவங்க கிண்டல் பண்றாங்க இவங்க கிண்டல் பண்றாங்கன்னு உன் வாழ்க்கையை நீயே கெடுத்துட்டு பிறகு ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்காத, ஏனா இங்க நிறைய பேர் அவங்க அப்படி நினைப்பாங்க இவங்க இப்படி நினைப்பாங்கன்னு நினைச்சு நினைச்சுத்தான் தான் வாழ்க்கையை அவங்கே கெடுத்துக்கிறாங்க. ஆனா அந்த தப்பை மட்டும் நீ செஞ்சுறாத. உங்க அம்மாவோட கனவும் நீ படிச்சு பெரிய ஆளாகனும்ங்கிறதுதான யோசிச்சுப் பார். நான் ஃபாதர் கிட்டயும் பேசிட்டேன் அதுக்கப்புறம் உன் இஷ்டம்.” என்று கூறிவிட்டு கிளம்பி விட்டேன்.
கட்டிலில் விழுந்து அழுதுக்கொண்டிருந்தவன் எழுந்து உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தான். பிறகு ஒரு முடிவுடன் எழுந்தான், புதிய பாதையில் பயணிப்போம் என்று.