தம்பட்ட உலகம்





லண்டன்.
‘பார்க்கின்ற காட்சிகள் எல்லாம் என்னுடைய பிறேமுக்குள் வரவேண்டும் என்று நினைப்பவன் அல்ல புகைப்படக்கலைஞன். எதெல்லாம் என்னுடைய பிறேமுக்குள் வரக்கூடாது என்று றிஜெக்ற் பண்ணுகின்றவன்தான் சிறந்த புகைப்படக் கலைஞன். நான் பார்த்த காட்சி மட்டும் தன் புகைப்படத்துக்குள் இடம்பெறவேண்டும், அதைத்தான் இந்த உலகம் புகைப்படமாகப் பார்க்குமே தவிர அடுத்தவன் பார்த்ததை புகைப்படமாக்குவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லுபவன் தான் அடுத்தவர்கள் மத்தியில் சிம்மாசனமாக உயர்ந்து நிற்கின்றான்’ என்று தீர்க்கமாக வர்ணிப்பவள்; மாலினி.
அத்தகைய ஒரு புகைப்படக்கலைஞனாகத் திகழ்ந்தவன்தான் எட்வீன். மாணவர் அமைப்பின் தலைமைப்பீடத்தையும் அலங்கரித்தவன். மாணவர்கள் எல்லோரும் ‘எட்வீன்’ என்றால் ஒரு இனந்தெரியாத அதிக விருப்பம் உள்ளவனாகத்தான் தென்பட்டான். காரணம் அவன் அனைவருடனும் அன்பாகப் பழகும் தன்மையும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் கருணைமிக்க பண்பும், பிறரின் துக்கங்களை ஆசுவாசப்படுத்தும் மனமும், பிரச்சனைகளின்போது இணைந்த தோழமை மிக்கவனாகத் திகழ்தல் போன்றன என்று அவனின் அமைதியான குணங்களை பலவகைகளில் வர்ணிக்கலாம். அத்தனை மனிதநேயக் குணங்களும் எட்வீனிடம் உண்மையாகவே அவனின் இதயவடிவத்திலிருந்து புறப்பட்டன.
‘இன்றைய நவீன காலகட்டத்தில் வட்ஸ்அப், ஷம் என்று வந்த பின்னர் சும்மாயிருந்த பெண்கள், ஆண்கள் எல்லோருமே பெரிய புகைப்படக் கலைஞர்களாகி விட்டார்கள்’ என்று மாலினி நினைத்துக்கொள்வாள். உலக சாதனை படைத்த படப்பிடிப்பாளர்கள் மாதிரிச் சிலதுகள். சமூக சேவை என்று சில விடயங்களைச் செய்ததுகளை கொரோனா வந்து மறு உலகத்துக்குக் கொண்டு போய்விட்டுது. அப்படி அமைப்புகளை ஆரம்பித்ததுகளை மடக்கிவிட்டிட்டு தன்னைத்தானே தம்பட்டம் அடித்துக்கொண்டு ஏதோ சமூகப்புரட்சி செய்ததுமாதிரி ஒன்று. என்ன தம்பட்ட உலகம் இது என்று எண்ணுவாள் ஜோகினி? சில வால்களை வைத்துக்கொண்டு தனது வாலைத் தானே ஆட்டிச் சாதனை படைத்தவர் மாதிரி தனக்குள் ஒரு இறுமாப்பு. இன்றைய நவீன உலகிற்கு இது தேவையில்லை. தன்னைத்தானே புகைப்படம் எடுக்கிற காலமிது. அப்படிப் பகடு காட்டி தன்னையே வட்ஸ்அப்பில் புகைப்படம் எடுத்துக்கொண்டு; ஏதோ பெரிய புகைப்படக் கலைஞர்மாதிரி நடிப்பு. இது தேவைதானா? இவற்றிற்கெல்லாம் வேறுபட்ட மனித இதயம் படைத்த புகைப்படக் கலைஞனேதான் இந்த இனிய எட்வீன்.
எந்தக் கலைஞனும் மனித நேயத்தோட செயற்படவேண்டும் என்று மாலினி மனதுள் வெதும்புவாள். உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞன் ‘கெவின் காட்டர்’ வந்து உடனடியாக மாலினியின் மனதைக் கிள்ளிக் கொண்டது. 1993 ஆம் ஆண்டு சூடான் நாட்டில் அவன் ஒரு பெண் குழந்தையை எடுத்த புகைப்படம் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞனாக உலகை வியக்க வைத்தது. உங்களுக்கும் அது தெரியும்தானே! ஆனால் அவன் பாராட்டுப்பெற்ற சில மாதங்களிலேயே அவன் தன்னைத்தானே ‘தற்கொலை’ செய்துகொண்டான் என்று அறிந்திருந்தாள் மாலினி. சமூகத்தை விழிக்க வைத்தவன் தானே! ஏன் அப்படிச் செய்தான்? என்று அங்கலாய்த்தாள்.
அந்த சிறுமியின் உடல் பிரிந்தால் அந்த உடலை உணவாக்க காத்திருந்தது அருகில் ஒரு கழுகு. புகைப்படம் அசத்தியதுதான். ஆனால் உலக மக்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘கெவின் காட்ரால்’ பதில் கூற முடியாது தன்னைத்தானே ‘தற்கொலை’ செய்து மாய்த்துக் கொண்டானாம். அந்கப் பெண் குழந்தைக்கு என்ன நடந்தது? என்ற கேள்விதான அந்தக் கேள்வி;. ஏன்ன கொடுமை இது? அதற்கு என்ன பதில்?… பேனா எடுப்பவன் மாத்திரமன்றி கலைஞர்கள் எல்லோருமே மனித நேயத்தைத் தக்கவைக்க வேண்டும் தானே! அப்படித்தான் மாலினி புரிந்து கொண்டாள்.
வானிலையைவிட அதி வேகமாக மாறுகிறது மனிதனின் மனநிலை என்றெண்ணி மாலினி குழம்புவாள். அவளுக்கு அடிக்கடி எண்ணங்கள் திடீர் திடீரென்று மாற்றமடையும். காலத்தை நாம்தான் கெடுத்துவிட்டோம். கெட்டதைக் கூட்டமாகச் செய்பவர்கள் கொண்டாடப் படுகின்றார்கள். நல்லதைத் தனியாகச் செய்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இன்றைய காலத்தில் பொய்யை நிஜமாக்கிக் காட்டுபவை எல்லாமே இந்தப் புகைப்படங்கள்தான். ஏன்ன முன்னைய காலத்தில் ஏதோ உண்மையே நடந்தது என்று மனதைப் போட்டுப் புரட்டுகிறாள் மாலினி. இந்தப் பிரித்தானியர்கள் ஆயுதத்தை விட புகைப்படத்தைத்தான் முதலில் கையில் எடுத்தார்களாம். ‘த பீப்பிள் ஒவ் இன்டியா’ என்ற நூலில் இந்திய மக்களை அவமானப்படுத்துவது போலல்லவோ புகைப்படங்களை போட்டுப் பொய்யான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்களாம். எங்கட பிரித்தானியர்கள் முன்பு இரக்கமில்லாமல் உலகை அதிகாரம் செய்தார்கள் என்று இன்றுவரையும்தான் அறியமுடிகிறது. லண்டனுக்கு :வந்திட்டாள்தான் மாலினி. ஆனால் லேசுப்பட்ட ஆட்களே இவர்கள். மனதுள் ஒரு சிரிப்பு மாலினிக்கு.
இன்றைய தம்பட்ட உலகில்; விருந்தோம்பலை மிகவருந்தி விலத்தி, வந்தவர்களின் உடம்பைத் தவித்து கைகளை விழுத்தி வம்புக்கு பழிவாங்கிப் புகைப்படம் எடுத்துப்; படரவிடு;கின்றார்கள். இவர்கள் எல்லாம் பாடசாலைகளுக்குத் ஆசிரியர்களாம். இதுதான் மாணவர்களுக்கு முன்மாதிரிகையோ தாயே! ஐயையோ! அதைவிட ஏதோ மேடைப் பேச்சாளர்களாம். அட பாவியே! வாசிக்கின்ற புத்தகங்கள் இவற்றைத்தானா உணர்த்தி இருக்கின்றன? கம்பனைக்கூட பாரதியார் கம்பன் என்றொரு மானுடன் பிறந்தான் என்றல்லவா பாடி வைத்திருக்கின்றான்;. மனிதனை மதிக்கும் பண்புகள்தானே நூல்களில் பரவிக்கிடக்கின்றனவே? என்று மாலினியின் மனதின் மறுபக்கம் பொறுமையாகப் பேசும். உலகத் தலைவர்கள் என்றவர்களால் தானே உலகமே சிதைந்து கொண்டிருக்கிறது. இப்படி அடுத்தவர்கள் மத்தியில் வலிந்து பகடு காட்டி கூத்துக் காட்டுபவன் அல்ல அந்த மாணவத் தலைவன் எட்வீன்.
பத்திரிகையில் செய்திகளைத் தினமும் படிக்கின்றவள் மாலினி. பத்திரிகைச் செய்தியில் ஏதோ ஒரு பக்கத்தில் தினமும் கடனைத் திருப்பிக் கொடுக்கமுடியாமல் ‘தற்கொலை’ செய்யும் செய்திகள் மாலினியின் கண்களை உறுத்திக்கொள்ளும். சீ…இவர்கள் இதற்காக ஏன் இந்த தற்கொலை முயற்சிகளில் வயது வேறுபாடின்றிச்; செயற்படுகிறார்கள் என்று மனதுள் குமுறுவாள மாலினி;.
நம் காலத்தின் முக்கிய பிரச்சினை கடனாக இருக்கிறதே! 2000 ஆம் ஆண்டுக்கு முன்னிருந்த வாழ்க்கையா இப்போ இருக்கு. இன்றைக்கு வாழ்க்கை மாறிவிட்டது என்று எண்ணுவாள் மாலினி. அதிகமானோர் கடனாளிகளாக மாறிவிட்டார்கள். கடன் அன்பை முறிக்கும். பணத்தால் பாசங்கள் பிரிந்துபோய் இருக்கின்ற குடும்பங்கள் பலவற்றை மாலினி பார்த்திருக்கிறாள். மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் மனிதன் ஆசையாலும் ஆணவத்தாலும் அசைபோடுகின்றானே என்று எண்ணுவாள் மாலினி.
கடன் வாங்கியவர்கள் கடனில் இருந்து விடுபட முடியாமல் விதம் விதமாக அல்லவா தற்கொலை செய்துகொள்கிறார்கள். பணம் தான் இந்த உலகை ஆட்டிப்படைக்கிறதா?
ஆம் பணத்தை வணிகம் செய்து அநியாயமாக வட்டி அறவிடுவதும், அப்பாவிகளுக்கு எதிராகப் பழிவாங்குவதும், அவர்களை அவமானம் செய்வதையும் தன் கிராமத்திலும் அவள் பார்த்துக் கொண்டுதான் வந்தவள் மாலினி. அப்படி வட்டி வேண்டிய பணம் எங்கே? அந்த ஆட்கள் எங்கே இப்போ? ஏல்லாம் சிறுகாலம்தான் என்பதை உணருவோம். மாலினியின் நுணுக்கமான இதய இருப்பு.
லண்டனிலும் அது இப்பவும் நடந்துகொண்டுதான் இருக்கிறதாம்.
இதனைப் பார்க்கும்போது தன் பள்ளிக்காலத்தில் பாடசாலையில் வகுப்பு மாணவிகளுடன் சேர்ந்து நடித்த ஷேக்ஸ்பியரின் ‘த மேன்சென்ற் ஒஃவ் வெனிஸ்’ என்ற நாடகமெல்லோ மாலினிக்கு நினைவிற்கு வந்தது. அந்த நாடகத்தைப் படைத்த அந்த எழுத்து மேதை எழுதி ஐந்நூறு வருஷத்துக்கு மேலாகிவிட்டாலும். அந்த நாடகத்தின் எழுத்து ஒன்றும் மாறவில்லைத் தானே! என்று மாலினி நினைத்துப் பெருமிதப்படுவாள். இப்பவும் லண்டன் அரங்கில் அந்த நாடகம் நடிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்குதாம். அந்த ‘ஷைலொக்’ என்ற வட்டி அறவிடும் யூத வணிகனை எப்படி மறக்க முடியும்? இப்ப பார்த்தால் எங்களுக்குள்ளும் எத்தனை ஷைலொக்குகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். ஓ அதுதான் புத்தகமோ? அதைத்தான் ‘புத்தகம்தான் சிறந்த ஒரு அற்புமான கண்டுபிடிப்பு என்று ஐஸ்டீன் சொன்னவரோ!’. ஓ.. இலக்கியம் என்பது அதுதான் போல தேசம் விட்டு தேசம் செல்லக்கூடியது என்று மாலினி வியப்படைகின்றாள்.
எட்வீன் வசதியான குடும்பத்தில் பிறந்தவன். அப்பா ஒரு வைத்தியராகத்தான் தொழில் புரிந்தவர். எட்வீன் வாழ்ந்ததோ இலங்கையின் தலைநகரான கொழும்பில்தான்.
எட்வீனின் அப்பா ஒருமுற்போக்குச் சிந்தனாவாதி. சிங்களப் பெண்மணியைத்தான் காதலித்துத் திருமணம் செய்திருந்தார். அழகான குடும்பம். ஆனால் அந்தப் பெண்மணி உடல்நிலை சுகவீனம் காரணமாக உயிர் பிரிந்துவிட்டார்.
வைத்தியரான தந்தையோ வேறொரு பெண்ணை துணைக்காக நாடாமல் எந்தவித குறையுமின்றி தனது இரு ஆண் பிள்ளைகளையும் பராமரித்தே வந்தார்.
எட்வீனையும் அவரது சகோதரனையும் யாழ்ப்பாணத்தில் பிரபல்யமாகப் பேசப்படும் பாடசாலைகளில் கற்பிக்கவேண்டும் என்பது அப்பாவின் விருப்பம். அதுவும் வெற்றி நடை போட்டது.
பிள்ளைகள் இருவரும் யாழில் உள்ள பிரபல்யமான பாடசாலையில் மிகுந்த அக்கறையோடு கல்வியை மேற்கொண்டனர்;.
மாலியின் அண்ணாவும் எட்வீனுடன் இணைந்து கல்வி கற்றதனால் அடிக்கடி அவன் வீட்டுக்கு வருவதுண்டு. மாலினியை உடன் பிறக்காவிட்டாலும் ‘தங்கச்சி தங்கச்சி’ என்றே எட்வீன் அழைத்துக் கொள்வதுண்டு. இதனால் மாலினியும் எட்வீனை ‘எட்வீன் அண்ணா’ என்றுதான் உடன் பிறந்த ஒரு அண்ணனின் பாசத்தோடு அழைத்துக்கொள்வாள்.
தங்கச்சி நீ நல்ல வடிவாக இருக்கிறாய். பொடியங்களுக்கு உன்னில ஒரு ‘கண்’ என்று அடிக்கடி வம்புக்கு இழுத்துக் கதைப்பார்.
மாலினி ஒரு அசட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டுச் வளைந்து சென்று விடுவாள்.
மாலினி வீட்டில் அனைவருமே எட்வீன் அண்ணாவில் அளவு கடந்த பாசம். அது எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை மாலினிக்கு. காரணம், எல்லோரையும் கவர்ந்து வசீகரிக்கும் எட்வீன் அண்ணாவின்
குழைந்து பேசும் பேச்சும்; நடத்தைகளும்தான். மாலினியின் பெற்றோரும்; எட்வீன் அண்ணாவை பெற்ற பிள்ளை போன்று அதீத பாசத்தோடுதான் பழகினர்.
எங்கோ பிறந்த எட்வின் அண்ணா மாலினி வீட்டின் ஒரு குடும்ப அங்கத்தவர் போலல்லவா இப்போ மாறிவிட்டார்.
பாடசாலை உயர் கல்வியை மேற்கொண்டுவிட்டு; கொழும்பில்தான் மீண்டும் அவரின் வாழ்க்கை தொடர்கின்றதாக மாலினி அறிந்திருந்தாள். மனிதர்கள் ஒவ்வொருவரும் காட்டும் அன்பு அற்புதமானதே!
காற்றின் தோழமையும் நட்சத்திரங்களின் அண்மையும் மாலினியின் இருப்பிடத்தின் இனிய பகுதிகளைத் திறந்து காட்டுகின்றன. ஆனால் அன்றைய வானத்தில் என்றுமே கண்டிராத ஒரு மாபெரும் பறவை மிதப்பதைப் போன்ற உணர்வை அவளுள் காண்கின்றாள். அவள் இதுவரை சந்திக்காத அந்தப் பச்சை விழிகளில் பளபளப்பும் கூர்ந்த அலகின் கொடூரமும்… முடிவின்றி விரிகின்ற பிரமாண்டமான இறக்கைகளோடு உறுத்துப் பார்க்கின்ற பார்வை மாலினியை பித்துப்பிடித்த கணங்களாக்குகின்றன.
காரணம் அவள் அன்று அறிந்த ஒரு கொடூர செய்திதான்.
ஏன்ன அது?
ஏட்வீன் அண்ணா அவரது மனைவியுடன் சேர்ந்து இருவரும் ஆரத்தழுவி அணைத்தபடி ‘தற்கொலை’ செய்து கொண்டார்கள் என்றதுதான்.
விலைமதிப்பில்லாதவர்கள் மனிதர்கள்! கொஞ்சம் நாட்களாவது அமைதியைப் பேணியிருக்கலாம்தானே! அதற்கு ஒரு பதில் கிடைத்திருக்கும். நாம் எதற்கும் அவசர முடிவு கட்டவே கூடாது. மனதுக்கு உபதேசிக்கிறாள் மாலினி.
உடல் பதறுகிறது மாலினிக்கு. நாம் பிறந்திருப்பதற்கு ஒவ்வொரு காரணம் இருக்கிறதல்லவா? இதனை எப்படி? நம்ப முடியுமா?…
ஏட்வீன் அண்ணாவின் தம்பி அறிவித்த செய்தி எப்படிப் பொய்யாக இருக்க முடியும்?
மாலினியின் உடல் கடலலைகள் மோதிச் சிலிப்பூட்டிக் கூச்சலிட வைப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. ஐயோ என்ன ஒரு கொடுமையான செய்தி இது? எனத் துவண்டாள்.
‘தற்கொலை என்பது மிகப்பெரிய கோழைத்தனம்’ என்னும் கருத்துத்தான் எவ்வளவு மேலோட்டமானது. மாலினியின் நரம்புகள் சுருண்டு நடுங்குகின்றன.
என்ன இந்த வாழ்க்கை என்ன இந்த உலகம் ஒரு புண்ணணாக்கும் இல்லை. சாவு, மரணம், இறப்பு முடிவு. இதுவரை ஒருவரும் தொட்டிராத வாசல். யாருமே அறிந்திராத ஆழம் என்று மாலினி உடைந்து போகின்றாள்.
புகைப்படக் கலைஞனான எட்வின் அண்ணாவும் மனைவியும் சேர்ந்து கடன் வேண்டிச் சினிமாப்படம் தயரித்தார்களாம். சிறந்த புகைப்படக் கலைஞன் அல்லவா? சினிமாப்படம் தோல்வியைக் கண்டிருக்கலாம். வேண்டிய கடனைத் திரும்பிக் கொடுக்கலாம் தானே? ஏன்; இப்படி நடந்தது என்று மாலினியால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. வாழ்க்கையில் தோற்றுப் போனவர்கள் எல்லோரும் இப்படிக் கதைகளாக உருவெடுக்கின்றார்கள் போலும் என்று மாலினி தன்னுள் குமுறுகின்றாள்.
கடன் கொடுத்தவர் அளவுக்கு மீறிய தொல்லைகள் எட்வீன் அண்ணாவுக்குக் கொடுத்தானாம். கொஞ்சம் மனித நேயத்தை இந்த உலகில் இசைந்து பார்த்தால் என்ன? ஏன்று மாலினி இதயம் அசைத்துக் கொண்டிருந்தது.
அதற்கு எப்படி கணவன் மனைவிக்;கு இத்தகைய முடிவு ஏற்பட்டது?
மிகவும் துயரமான நிலையில் உலகு இயங்கிக்கொண்டு இருக்கிறது என்று மாலினி மனம் அழுத்துகின்றது. வேலையழுத்தத்தின் காரணமாக ஒரு ரோபோவும் ‘தற்கொலை’ செய்து உயிரை மாய்த்துக்கொண்டதாக ஒரு செய்தி கிடைத்தது. மாலினி அதனையும்; தெரிந்துகொண்டாள். தென்கொரியாவில்தானே அதிகமான ரோபோக்கள் உள்ளதாகவும் பத்து ஊழியர்களுக்குப் பதிலாக ஒரு தொழில்த்துறை ரோபோ அப்பாத்திரத்தை வகிக்குமாம் என்றும்;. இந்த ரோபோக்கள் செய்யும் அற்புதமான செயல்களை தொழில்நுட்ப வசதி படைத்த இந்த உலகில்; பார்த்து அதிசயப்பட்டிருக்கிறாள் மாலினி. இந்த உலகம் எங்கே போகிறது இப்போ? …மாலினிக்குச் சங்கடமாகவே உள்ளது நம்புவதற்கு.
இடை மறித்து எழுகிறது அவளின் எட்வீன் அண்ணா.
‘நான் ஏன் சாமகாமல் இருக்கிறேன். அதற்கு ஒரு மகத்தான காரணம் இருக்கிறது நாம் உயிரோடு வாழ்வதற்கு’ என்று நாம் ஒவ்வொருவரும் நம்பவேண்டும். கடைசிவரை நாம் நம்பிக்கையை இழக்கக்கூடாது. எமக்கான வெற்றி நிட்சயமாகக் கிடைக்கும்.
உலகப் புகழ்பெற்ற நாவலெனப் போற்றப்படும் ‘அன்னா கரீனா’. இந்தப் பெயரை உச்சரிக்கும்போது மனதில் தோன்றும் கவலை உணர்வை எப்படி வெளிப்படுத்துவது? அந்த நாவலைப் படைத்த ரஷ்ய சிருஷ்டி கர்த்தாவான லியோ டால்ஸ்டாயை ஏன் அப்படி ‘தற்கொலை’ செய்து ‘அன்னா கரீனாவை’ அந்த நாவலில் மாய்த்தார் என்று இன்றும் கேள்விகளால் குமுறுவாள் மாலினி.
அன்னா கரீனாவின் ‘அகச் சிக்கலைத்தான்’ நாவலில் கரைத்திருக்கிறாரோ டால்ஸ்டாய்.. அது ஒரு படைப்புத்தான். ஆனால் நாவலில் வரும்போது அது நம் வாழ்க்கையாகி விடுகிறதே எமக்கு! மனம் கரைகிறது மாலினிக்கு.
அடர்ந்த இருளில் குளிர் மெல்லியதாக இழைகிறது. பூரண அமைதியில் காற்று ஒரு தேய்ந்த பாடலாகிக் கரைகிறது. இப்போது மாலினியின் மனம் எதனையும் புரட்டி அலச விரும்பாதபடி களைப்பு ஏற்படத் தொடங்கியது. மேகங்கள் பாதத்தில இடிப்பதுபோல் உணர்கின்றாள்.
அந்த மயானத்திற்கு அந்த ஜோடிப் பிணங்கள்தான் உயர் கொடுத்தனவா? ஏன்ன இந்தக் காற்று ஒரே புத்தகத்தை ஓராயிரம் முறை சலிப்பே இல்லாமல் புரட்டி புரட்டிக் கொண்டிருக்கிறதே! என்று மனம் விசும்புகிறது மாலினிக்கு.
விலைமதிப்பில்லாதது எமது மனித உயிர்கள். உதட்டினால் அல்ல மனதினால் புன்னகை செய்கின்றோமா? இடைவிடாமல் தனித்திறமைகளை வென்றெடுக்கச் செயற்படுகின்றோமா? மௌனத்தில் நிதானமாக இருக்கின்றோமா? வாழ்க்கையில் இப்படி முயற்சி செய்தால் நாம் எல்லோரும் வெற்றியை நிட்சயம் அடையலாம்தானே! மாலினி இப்படித்தான் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாள் தன்னை.
– 2.8.2024
![]() |
நவஜோதி, ஜோகரட்னம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அகஸ்தியர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், விமர்சனங்கள், வானொலி உரைகள், வானொலி நாடகங்கள், குட்டிக்கதைகள் என்பவற்றை எழுதியுள்ளதுடன் எனக்கு மட்டும் உதிக்கும் சூரியனின் கவிதை என்னும் நூலையும் எழுதியுள்ளார். இவரது நூல்கள் எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன் மகரந்தச் சிதறல் மேலும் விவரங்கள் இவர் எனக்கு மட்டும் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்."மகரந்தச் சிதறல்" என்ற இவரது படைப்பு…மேலும் படிக்க... |