அடிச்சுவடு




(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கரிய பெரிய மனிதனுடைய வெள்ளைப் பற்களைப் போல, இருண்டு கிடந்த வானத்தில் ஒளிக்கீற்றுகள் மின்னிக் கொண்டிருந்தன.
இங்கொன்றும் அங்கொன்றுமாக விழத் தொடங்கிய மழைத் துளிகள் அந்தப் பேரொளியில் வைர நெடுங்கம்பிகள் போலக் காட்சி தந்து கொண்டிருந்தன.
அந்த ஒளிக்கற்றைகளுக்கு முன்னே, பொன்னியூர்த் தெருக் களில் மின்னிக் கொண்டிருந்த தெரு விளக்குகள் வலுவிழந்து காணப்பட்டன.
மற்றொரு முறை வானம் மின்னிச் சிரித்தபோது அந்தப் பெருஞ் சிரிப்பைக் கண்டு அஞ்சியது போல் மின்சாரம் தன் ஆற்றலை இழக்கவே தெருவிளக்குகள் அணைந்தன.
பொன்னியூர் இருள் அரக்கனின் கோரப்பிடியில் சிக்குண்டு விட்டதோ, என்று எண்ணும்படியாக அந்த ஊரை இருள் சூழ்ந்து கொண்டது.
மழை “சோ”வெனப் பெய்யத் தொடங்கியது.
இந்த நிலையில் விலை உயர்ந்த பெரிய கார் ஒன்று பொன்னி யூர்த் தெருக்களின் ஊடே மண்டிக்கிடந்த, இருளைக் கிழித்துக் கொண்டு ஊரின் தென்புறத்தே உள்ள மூன்று மாடிக் கட்டி டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது:
“பல நாட்களாக நான் கோடை வெய்யிலில் காய்ந்தேன் ஒரு நாளாவது கொட்டும் மழையில் நான் நனைந்து மகிழ வேண்டாமா?” என்று கேட்பது போல அந்த விலை உயர்ந்த கார் மூன்று மாடிக் கட்டிடத்தின் அருகில் வந்ததும் நின்று விட்டது.
அதை ஓட்டிக்கொண்டு வந்த இளைஞன் என்ன முயன்றும் காரை இயக்கும் முயற்சியில் வெற்றி பெறவில்லை. எனவே காரைவிட்டு இறங்கிப் பங்களாவை நோக்கி அவன் நடக்கத் தொடங்கினான்.
உள்ளபடியே தள்ளாடும் நிலையில் இருந்த அவனை கொட்டிக் கொண்டிருந்த மழை வேறு தள்ளாடச் செய்தது.
எப்படியோ பங்களாவின் வெளிக் கதவுகளை அவன் அடைந்து விட்டான். இரவு மணி ஒன்பதாகியும் அவன் வரவிற்காக அந்தக் கதவுகள் பூட்டப்படாமலிருந்தன. கார் எப்போது வரும் என்று எதிர்பார்த்தபடியே காவற்காரன் அவனுக்காக உருவாக்கப்பட்டிருந்த மரப் பெட்டியின் உள்ளே உட்கார்ந் திருந்தான். அதனால் அவனுடைய முதலாளியான அந்த இளைஞன் வந்ததை அவன் கவனிக்கவில்லை.
தள்ளாடியபடியே பங்களாவை நோக்கி நடந்து கொண் டிருந்த அந்த இளம் முதலாளி பங்களா முற்றத்தை அடைவதற்கு முன்னால் இருந்த சிறியங்கள அருகில் சென்றதும் நின்றான்.
அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த கண்ணனும் அவன் மனைவி கமலாவும் பேசிய வார்த்தைகள் அவனை நிற்கும்படி செய்தன.
“மணி என்னங்க ஆகுது ?”
“ஒன்பது ஆகுது”
“இன்னம் அந்தப் பாவி மனுஷனைக் காணுமே”
“நீயே பாவி மனுஷன்னு உண்மையைச் சொல்லிட்டியே அப்படிப்பட்ட ஆளுக்கு நேரமும் காலமும் ஏது கமலம்!…”
“இந்த இருட்டிலே மைதிலி கைக்குழந்தையோடே எப்படிக் கவலைப் பட்டுகிட்டிருக்காங்களோ”
“தெய்வமா இருக்க வேண்டிய கணவனோ தெருவிற்கு வந்த பின்னாலே நாமெல்லாம் என்னதான் உதவி செஞ்சுட முடியும். அந்த அம்மாவுக்குத் தெய்வம்தான் இனித் துணை.”
இலேசாகத் திறந்திருந்த ஜன்னல் வழியே அந்த இளைஞன் உள்ளே பார்த்தான். தன்னைக் குறைத்துக் கொள்வதன் மூலம் அந்தத் தம்பதிகளுக்கு மத்தியில் இருந்த மெழுகுவர்த்தி ஒன்று சிறிய அளவில் ஒளி தந்து கொண்டிருந்தது. அந்த ஒளியில்கூட கண்ணன், கமலம் இருவர் கண்களிலும் கலங்கி நின்ற நீர்த் திவலைகள் பளிச்சென்று தெரிந்தன. சுடரின் சூட்டால் உருகிக் கொண்டிருந்த மெழுகுவர்த்திகூட அவர்கள் கூறிய மைதிலிக் காகக் கண்ணீர் சிந்துவது போல அவனுக்குத் தோன்றியது.
உணர்வுகள் மங்கிக்கிடந்த அந்த இளைஞனின் உள்ளத்தில் இந்தக் காட்சிகள் சுரீர் என்று தைத்தன. சவுக்கடிக்கு ஆளான நிலையை அவன் அடைந்தான்.
அவன் யார்?
பொன்னியூர் ஒரு சிறு கிராமம் ! இது பழைய கதை. இன்று, அது ஓர் அழகிய சிறு நகரம்.
தாலூகா அலுவலகங்கள், கால் நடைப் பராமரிப்பு நிலையம், கோழி வளர்ப்புப் பண்ணை, குடும்பக் கட்டுப்பாட்டு நிலையம். ஆண், பெண்களுக்குத் தனித் தனியே விளங்கும் உயர் நிலைப் பள்ளிகள், காந்தி மகான் பெயரால் விளங்கும் மாபெரும் சேவை அரங்கம், அதன் உள்ளே விளங்கும் பல தொழிற் பிரிவு கள், மாபெரும் நூல் நிலையம்-முதலியன அது ஒரு நகரம் தான் என்பதை நிலைநாட்டிக் கொண்டிருந்தன.
தமக்காகவே வாழ்ந்து சுயநலச் சேற்றிலேயே அழுந்தி, அதுவே சுவர்க்கம் என்று எண்ணித் திரியும் மாந்தர் நிறைந்த இந்த உலகில் பிறருக்குச் சேவை செய்வதற்காகவே சிலர் பிறக்கிறார்கள்.
அப்படிப் பட்டவர்களில் ஒருவர் தான் இராமநாதன்.
இராமநாதன் பருவக்காலப் பணக்காரர் அல்ல. பரம்பரைப் பணக்காரர்.
பொன்னியூர்க் கிராமத்திலேயே மாபெரும் மிராசுதாராக விளங்கிய மாணிக்கவேலரின் ஒரே மகன்!
இராமநாதன் இளமையிலேயே தந்தையை இழந்து விட்டார் என்றாலும் சிறந்த முறையில் படித்து உயர்ந்த வகையில் வாழ்க் கையை அமைத்துக் கொண்டார்.
அந்த இராமநாதனின் கடும் உழைப்பால் தன்னலம் கருதாத தொண்டால்-தான் பொன்னியூர் புகழ் மணக்கும் ஊராக மாறியது.
இராமநாதன் உள்ளப் பெருவெளியில் காந்தீயத் தத்துவங் கள் முளைவிடத் தொடங்கிய போது தான் அவர் சேவையின் சிறப்பை உள்ளவாறு தெரிந்து கொண்டார்.
அவர் காந்தியடிகளை ஞானகுருவாக ஏற்றுக் கொண்ட பரம சீடராக விளங்கி வந்தார்.
“தன்நிகரற்ற பெருமகன் ஒருவருடைய தத்துவங்கள் தான் உயிர் பெற்றுச் சமுதாயத்தை வாழவைக்கின்றன: அந்தத் தத்துவங்களின் செயலகத்திற்கே கட்சி பிறக்கிறது. தலைவன் எவ்வழி, அவ்வழி தொண்டர்கள். கட்சித் தலைவனுடைய தூய்மையே கட்சி வாய்மை வழியிலே செல்ல வழி வகுக்கிறது.” என்ற எண்ணங்களை உடையவர் இராமநாதன்.
நல்ல வசதியும் ஏராளமான வாய்ப்புகளும் கொண்ட இளைஞ இராமநாதன் முரட்டுக் கதர்த் துணியை அணிந்து கொண்டு தாழ்ந்த குடிமக்கள் என்று மற்றவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஏழை எளியவர்களோடு கலந்து பழகத் தொடங் கிய போது ஊரே வியப்படைந்தது. ஊர் மக்கள் அவரைத் தெய்வமாக நினைத்தார்கள்.
தெய்வ சந்நிதானத்தில் விளங்கும் திருவிளக்குப் போலச் சீதை என்ற குணவதி அவருக்கு மனைவி யாக வாய்த்தாள்.
தம்மைப் பார்க்கப் பல ஊர்களிலிருந்தும் வருபவர்கள் தங்கு வதற்கு வசதியாக இருக்கட்டும், வளத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாகத் திகழட்டும், ஊருக்கு பெருமையாக இருக்கட்டும் என்று எண்ணிய இராமநாதன் அழகிய முறையில் மூன்றடுக்குக் கட்டிடம் ஒன்றைக் கட்டினார்.
அந்த மாளிகையில் கணவனும் மனைவியும் இராமபிரானும் சீதாப்பிராட்டியும் போலவே வாழத் தொடங்கினார்.
அந்த அன்புத் தம்பதிகளுக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந் தது; ஊரே மகிழ்ந்தது. அக் குழந்தைக்கு தயாளன் என்று இராமநா தன் பெயர் சூட்டினார்.
எங்கும் எதிலும் அமைதி நிலைக்க வேண்டும் என்று தான் பெரியவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவ்வாறு எங்கே அமைகிறது ?…
ஒரு நாள், ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்ட இராமநாதன் போலீசாரின் தடியடிக்கு இலக்கனார்-மயங்கி வீழ்ந்தார். பிறகு அவர் பேசவில்லை- உடற் கூண்டிலிருந்து உயிர்பறவை பறந்து விட்டபிறகு அவர் எப்படிப் பேசுவார் ?
தங்களுடைய மகிழ்ச்சிக்கெல்லாம் காரணமாக இருந்தவர் பிரிந்ததை அறிந்து ஊர் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள், அழுதார்கள், புலம்பினார்கள். என்றாலும் தங்களைத் தேற்றிக் கொண்டு துணை இழந்து கொடிபோல் துவண்ட கோதையை, இராமநாதன் மனைவி சீதையை அனைவரும் சென்று தேற்றினார்கள்.
தன் ஒரே செல்வனின் அறிவுக்கூர்மை நிறைந்த விழிகளைப் பார்த்து – தன் கணவனைப் போலவே இருந்த அவன் தோற்றத்தை நோக்கி அந்தக் கோதையும் மனம் தேறினாள்.
படகை இழந்தவனுக்குக் கிடைத்த பற்றுக் கோடுபோல கணவனை இழந்த சீதைக்குத் தயாளன் உற்ற துணையாக வளர்ந்து வந்தான்.
பருவங்கள் மாறின. ஆண்டுகள் கரைந்தன. தயாளன் உருவத்தில்தான் எத்தனை மாற்றம்! இராமநாதன் இந்த உலக வாழ்வை நீத்தபோது பாலகனாக இருந்த அவன் பதினெட்டு வருடங்களைக் கடந்த போது மற்றொரு இராமநாதனாகவே காட்சி தந்தான்.
ஊரார் அவனைச் சின்ன இராமநாதன் என்றே குறிப்பிட்டு வந்தார்கள்.
கோடி கோடி செம்பொன் கொடுத்தாலும் பெறமுடியாத குணக்குன்றான மைதிலியை தயாளனுக்கு சீதை மணம் முடித்து வைத்தாள்.
கங்கையிலும், காவிரியிலும் கழிவு நீர்கள் கலப்பதற்கு என்ன காரணம் சொல்வது?
புனிதரான, புகழின் உருவமான இராமநாதனின் மகன் மற்றொரு இராமநாதனா வருவான் என்ன தான் பெற்றவளும், மற்றவர்களும் நினைத்தார்கள். அவன் புகழ் சேர்க்கும் இராம நாதனாக வராவிட்டாலும் சாதாரணத் தயாளனாகவாவது இருந்திருக்கலாம். ஆனால் தரம் கெட்டவனாக தந்தையின் புனித மான சேவைகளுக்கே உலைவைப்பவனாக, சுருங்கச்சொன்னால் குடிகாரனாக மாறினான்.
நினைவோடு வீட்டை விட்டுச் சென்று நினைவு தடுமாறிய நிலையிலே வீட்டை அடையும் கணவனைக் கண்டு மைதிலி நைந்தாள்.
சாணம் நாறலாம் – சந்தனம் நாறலாமா? மாபெரும் தேச பக்தரான இராமநாதன் மகன் குடிகாரன் ஆகாலாமா? இந்தத் கொடுமையை அந்த உத்தமரின் மனைவி அறிந்தால் என்ன நடக்குமோ என்று மைதிலி கலங்கினாள்.
உலைவாயை மூடலாம்-ஊர்வாயைக் கூட மூடலாம்-ஆனால் உண்மையை எப்படி மூடமுடியும் !
அதை மூட முடிந்திருந்தால் சத்தியம் என்ற சொல்லுக்கு பொருள் வேறாக அல்லவா ஆகியிருக்கும்.
தன் மகன் இரவில் நெடுநேரம் கழித்து வருகிறான் என்பதை அறியத் தொடங்கிய, தாய் உள்ளம் பதறியது:
குலவிளக்கான மனைவியை விட்டு விட்டு குடி கெடுக்கும் எவளிடமாவது தன் மகன் தொடர்பு கொண்டு விட்டானோ என்று தான் அந்தப் பேதைத் தாய் எண்ணினாள்.
ஆனால் மனிதனை மிருகமாக்கும் மது அரக்கனுக்கு ஒப்பற்ற தேசபக்தரான இராமநாதரின் மகன் பலியாவான் என்று அவள் கற்பனை கூடச் செய்யவில்லை
ஒருநாள் இரவு மகனைச் சந்தித்த பிறகுதான், தன் அறைக் குச் செல்வது என்ற தெளிவான முடிவோடு சீதை ஹாலில் அமர்ந்திருந்தாள் மைதிலி, “நேரமாகிறது நீங்கள் போய்ப் படுத்துக்கொள்ளுங்கள்” என்று என்ன சொல்லியும் அவள் கேட்கவில்லை.
குடித்து விட்டு வரும் தன் கணவனை அத்தை பார்த்ததும் என்னென்ன விபரீதங்கள் நேரப் போகின்றனவோ என்று குமுறியபடியே மைதிலி சீதை அருகில் நின்று கொண்டிருந்தாள்.
தயாளன் தள்ளாடியபடியே வந்து சேர்ந்தான். தனயனைக் கண்ட தாய் உள்ளம் பதறியது. கடுமையான நோய்க்கு எதிர் பாராமல் இலக்காகி விட்டானோ என்று தான் அந்தத் தாய் உள்ளம் முதலில் எண்ணியது.
“மகனே! என்னடா உடம்பு” என்று கேட்டபடியே புதல்வன் அருகில் சீதை வந்தாள்.
அவன் வாயிலிருந்து வந்த நெடி அவள் வயிற்றைக் குமட்டியது: நம்பமுடியாத அளவு பெரும் அதிர்ச்சிக்கு அவள் ஆளானாள்.
“குடிக்கிறாயா! அட பாவி, குடிக்கிறாயா?” தாய் அலறினாள்:
“ஏன் அலறுகிறாய்-இதிலெல்லாம் தலையிட நீ யார் ? வயதான காலத்தில் கிருஷ்ணா, ராமா என்று ஜபம் செய்து கொண்டு பேசாமல் இருக்க வேண்டியது தானே?” அவன் உளறினான். மது அரக்கன் அவனை உளறச் செய்தான்.
“நம் உடம்பில் தானே நோய் ஏற்பட்டிருக்கிறது? என்று நோயை வரவேற்க முடியுமா?
நம் பிள்ளை குடித்து விட்டுத் தானே உளறுகிறான் என்று தாய் நினைக்க முடியுமா? அதுவும் இராமநாதன் மனைவியால் அது எப்படி முடியும்?
சீதையின் வயிறு எரிந்தது. தன் கணவன் இறந்த போதே தானும் இறக்காமல் போனோமே என்று துடித்தாள்.
ஹாலிலே நெடிதுயர்ந்து நின்ற காந்திமகானின் படத்தை அவள் தன் மகனுக்குச் சுட்டிக் காட்டினாள்.பை
“இந்த மகானின் பரம பக்தர்களில் ஒருவரான உன் தந்தைக்கு நீயா பிள்ளை?” என்று சீறினாள்;
தயாளன் பேய் போலச் சிரித்தான். “இந்தக் காந்தி படம் இருப்பதால் நான் குடிக்கக் கூடாது என்றால் இப்போதே அதை நான் எடுத்து எறிந்து விடுகிறேன்” என்று உளறிய அந்த வெறியன் மகானின் படத்தை நோக்கி நடந்தான்.
மைதிலி பயத்தால் ஊறிட்டாள்.
அந்தத் தெய்வத் தாய்க்கு, எங்கிருந்து தான் அந்த பலம் வந்ததோ படத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த மகனை நோக்கி ஓடியவள், அவனை அப்படியே தன்புறம் திருப்பினாள்• அடித்தாள், கை ஓயும் வரை அடித்தாள்.
பிரமைபிடித்த நிலையில் தயாளன் நின்றான். கை ஓயும் வரை அடித்த அந்தத்தாய் மெய்சோரக் கீழே விழுந்தாள். மறுநாள் உதயத்தில் சீதை இந்த உலகை விட்டுப் போய் விட்ட செய்தியைத்தான் ஊர் மக்கள் கேள்விப் பட்டார்கள்.
சீதை இறந்த ஒரு மாதத்திற்கெல்லாம் மைதிலி ஆண் குழந்தைக்குத் தாய் ஆனாள். தாய் இறந்ததாலோ தனயன் பிறந்ததாலோ தயாளன் எந்த மாற்றத்திற்கும் இலக்காக வில்லை.
அவனை மைதிலி திருத்த முயலவில்லை. தாயால் முடியாமல் போனதைத் தன்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையே அவளுக்கு இல்லை…!
எண்ணச் சூழல்களுக்கு இலக்காகி நின்ற தயாளன் தன் தலையிலிருந்து வழிந்து கொண்டிருந்த மழை நீரைத் தன் கைகளால் வழித்து விட்டுக் கொண்டான்.
மீண்டும் கண்ணனும் கமலமும் பேசத் தொடங்கினார்கள்.
“கமலம், மணி ஒன்பதைரை ஆகுது. வா நாம் சாப்பிடலாம்.”
‘”எனக்கென்னவோ மனசே சரியில்லீங்க. பாவம் மைதிலி கைக் குழந்தையோடே கண்ணீர் விட்டுக் கலங்குறதை நினைச்சா என் நெஞ்சே வெடிச்சுடும் போலே இருக்கு.”
“நமக்கு அப்படியிருக்கு, ஆனால் தாய் இறந்த பின்னாலே கூட அந்தத் தயாளன் புத்திமாறலையே!”
“மழை கொட்டுது. அந்த ஆளாக குடிவெறியிலே காரைக் கொண்டு போய் எங்கேயாவது மோதிட்டா, அதனாலே ஆகக் கூடாதது ஏதும் ஆயிட்டா, மைதிலி நிலை என்னங்க ஆகும்?”
கமலம் விம்மினாள்.
“நீ இதைச் சொல்ற போது தான் எனக்குப் பழைய நினைவு வருது. என் பாட்டன் காலத்தில் இந்தத் தயாளன் குடும்பத்திற்கு இணையாகத் தான் எங்கள் குடும்பமும் இருந்தது. என் தந்தை குடிக்கத் தொடங்கிக் குடியையே கெடுத்து விட்டார்: தயாளன் தந்தை நல்லவராக இருந்ததால் என்னைப் படிக்க வைத்து ஆளாக வழி செய்தார். இப்போது அவர் இல்லா விட்டாலும் அவர் குடும்பத்தில் வேலை பார்க்கும் நிலைக் குக்கூட வழி செய்தார். ”
கமலத்தின் விம்மல் ஒலி அதிகமாயிற்று.
மேலும் அங்கு நிற்க முடியாத தயாளன் உள்ளம் தடுமாற உணர்ச்சிகள் வட்டமிட, அங்கிருந்து மெல்ல நடந்தான். தன் வீட்டு ஹாலை அடைந்தான்.
ஹாலில் ஓர் ஓரத்தில் அரிக்கேன் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. மைதிலி தன் செல்வனைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடியே விம்மிக் கொண்டிருந்தாள்.
வேலைக்காரி ஓர் ஓரமாக உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண் டிருந்தாள்.
“மைதிலி!” தயாளன் மனைவியை அழைத்தான். அவன் குரல் கரகரத்தது.
சிறிய விளக்கொளியில் வந்தது கணவன் தான் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத மைதிலி ஒரு முறை கீரிச் சிட்டு விட்டாள்.
“நான் தான், மைதிலி!”….தயாளன் இப்போது தெளிவாகக் கூறினான்.
அவன் குரலிலிருந்த மாற்றத்தைக் கண்டு மைதிலி வியப் புணர்ச்சிக்கு ஆளானாள்.
முற்றத்துப் படியில் நின்ற அவன் அங்கிருந்து உள்ளே வந்தான். அவன் தன்னை நோக்கித்தான் வருகிறான் என்று மைதிலி நினைத்தாள்:
அவன் ஹாலின் மற்றொரு புறத்தை நோக்கி நடந்தான்…….
அவன் எங்கே போகிறான்? குடி மயக்கத்தில் நினைவற்றுப் போகிறானா ? பேதை நெஞ்சம் தவித்தது.
தயாளன் இப்பொழுது நினைவோடு தான் சென்று கொண்டிருந்தான்.
நெடிதுயர்ந்து நின்ற மகாத்மாவின் படத்திற்கு அருகிலே சென்று அவன் நின்றான். அந்த எளிய வெளிச்சத்திலும் அந்த ஏந்தலின் கால்களைத் தொட்டு வணங்கியபடி அவன் விம்மினான்.
என்ன வியப்பு ! மின்னல் ஒளியால் செயலற்றுப் போன மின்சாரம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. வீடு எங்கும் மின் விளக்குகள் பளிச்சிடத் தொடங்கின.
முற்றத்திலே கண்ணனும் கமலமும் நின்று கொண்டிருப்பதை தயாளனும் மைதிலியும் கண்டார்கள்.
யாரோ போவது போன்ற ஓசை எழவே கண்ணன் வெளியே வந்து பார்த்ததால், போவது தயாளன் தான் என அறிந்து என்ன நடக்கிறது என்று காணத் துடிப்போடு அவனை பின் தொடர்ந்து வந்தவர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.
நீர் ஒழுகும் கண்களால் தயாளன் மனைவியையும், கண்ணனை யும், கமலத்தையும் பார்த்தான்.
“கண்ணா! மைதிலியின் துயரத்தைப் பற்றி நீயும் உன் மனைவியும் கொண்ட கவலையில் நூற்றில் ஒரு பங்குகூட நான் கொள்ளவில்லை. நீங்கள் அப்படிக் கவலைப் பட்டதற்குக் காரணம் என்ன ? உங்கள் உள்ளம் நல்ல உள்ளம். உள்ளம் நல்லதாக அமைந்து விடுகிற போது அன்பும் பாசமும் அங்கே குடியிருக்கத் தொடங்கி விடுகின்றன. அதனால் தான் காந்தியடிகள் மனத் தூய்மையோடு வாழ வேண்டும் என்று கூறினார். அதை நான் உணர்ந்து விட்டேன். மனிதனுக்குச் சிறப்பாக உள்ளது பகுத் தறிவு. அதையே பாழ் செய்யக் கூடியது குடி. எனவே குடிப்ப வன் எப்படி முழு மனிதனாவான்?.. மைதிலி! இன்று முதல் நான் முழு மனிதனாகி விட்டேன். கண்ணீரைத் துடைத்துக் கொள் !… மகான்களுடைய அடிச் சுவடுகள்தான் மக்களை பூவுலகிலேயே சுவர்க்க போகத்தில் வாழச் செய்யும் வழிகாட்டிகள் ஆகும் நமது புண்ணிய பூமிக்கு காந்தியடிகளுடைய அடிச் சுவடுகளை விடச் சிறந்த வழிகாட்டிகள் எங்கே அமைய முடியும். இவற் றைக் கூறிய தயாளன் உணர்ச்சிப் பிழம்பாக நின்றான்.
மைதிலியும், கண்ணனும், கமலமும் மானசீகமாக காந்தி மகானின் அடிச் சுவடுகளுக்கு மாபெரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.