ஸத்யமேவ ஜயதே
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“தடால்” என்ற சத்தம் கேட்டது. சரோஜா பதறியடித்துஓடிப்போய்ப் பார்த்தாள். அலமாரியில் வைத்திருந்த பெரிய நெய் ஜாடி விழுந்து உடைந்து கிடந்தது. சரோஜாவின் அம்மா நெய்யை எடுக்கும்போது கை நழுவிக் கீழே விழுந்துவிட்டது.
இந்த ஜாடி சரோஜாவின் அப்பா தில்லியிலிருந்து வெகு சிரமப்பட்டு வாங்கி வந்தது.
சரோஜா அலமாரிக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு பார்த்தாள். அம்மா கைப்பிடித் துணியை வைத்துத் தரையைத் துடைத்துக்கொண்டிருந்தாள். அரைப்படி நெய் இருக்கும்.
அவ்வளவும் கீழே சிந்தியிருந்தது!
“என்னம்மா இது. எவ்வளவு நெய்” என்று சரோஜா குழப்பமாகக் கேட்டாள்.
“சரி, சரி, நீ ஒருத்தி அனுதாபப் படுறத்துக்கு இல்லையேன்னுதான் குறைப்பட்டேன்” என்றாள் அம்மா வெடுக்கென!
அம்மா முகத்தில் இருப்புச் சட்டியிலே காய்கிற வெண்ணெய் போல ‘சட சட’ என்று கோபம் பொரிந்து கொண்டிருந்தது!
“என்னம்மா, இப்படிக் கோபப்படறே? நீதானே அன் னிக்கு ஒரு கரண்டி நெய் அதிகமாக் கேட்டத்துக்கு கோபிச்சே என்னை – நெய் விற்கிற விலையிலே கூடயும் ஆச்சு, முறமும் ஆச்சுன்னு”
“சரி சரி, எனக்குத் தெரியும். நீ போ பெரிய மனுஷி.”
“இல்லைம்மா…நான்-வந்து…”
“இந்தா சரோஜா, நீ பேசாமப் போறியா இல்லையா?”
“அம்மா, நான் அப்பாகிட்டச் சொல்லிடுவேன்னுதானே பயப்படுறே, அம்மா?”
“சொல்லுவே. சொன்னே, அவ்வளவு தான். அப்புறப் பாரு உன்னை என்ன செய்யறேன்னு.”
“இல்லேம்மா, நான் சொல்லவே மாட்டேனம்மா. கோபிச் காதேம்மா, சத்தியமா நான் அப்பாகிட்டேச் சொல்லமாட்டேன் அம்மா…”
சரோஜாவின் அம்மாவுக்குக் கோபம் தணிந்தது. சத்தியத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்று சரோஜாவுக்கு அப்பொழுதுதான் மிக நன்றாய்ப் புரிந்தது. அந்த ஒரு வார்த்தை எவ்வளவு எளிதாக அம்மாவினுடைய கோபத்தை விரட்டி விட்டது என்று சந்தோஷப்பட்டாள் சரோஜா!
அன்று சாயந்திரம் சரோஜாவின் அப்பா ஆபீஸிலிருந்து வந்ததும், என்னவோ வாசனை பார்க்கிறது மாதிரி மூக்கை இழுத்து இழுத்து சுவாசித்துக்கொண்டே வந்தார்.
“இதென்ன… ஓ ! நெய்யா, சரி சரி – நெய் விற்கிற விலையிலே…” என்று ஆரம்பித்தார் அப்பா.
“நான் ஒண்ணும் கொட்டலை, நம்ம வீட்டிலே வளர்கிறதே ஒரு செல்லப் பூனை, அதுதான்…” என்று அம்மா வார்த்தையை இழுத்தாள்.
“‘ஓகோ’ ஜாடியுமே போயுட்டுதா, ரொம்ப சரி” என்று சொல்லிக்கொண்டே உடைந்து போன துண்டுகளைப் பார்த்தார்.
“ஒரு தாவிலே தாவி நெய்யையும் கொட்டி, ஜாடியையும் உடைச்சுட்டு காத்தாப் பறந்துட்டுதே” என்று அம்மா சொன்னாள். ஒரே ஆச்சரியத்தில் மூழ்கிப் போனவள் போல.
சரோஜாவின் அப்பாவுக்கு ஆத்திரம் வந்தது. அந்த நிமிஷத்தில் பூனைமட்டும் அகப்பட்டிருந்தால் அவ்வளவு தான். பொதுவாகவே அஹிம்சையில் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது!
அம்மா சொன்னதையெல்லாம் சரோஜா கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். ஆனாலும் நடந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லவில்லை; அம்மாவுக்கு சத்தியம் அல்லவா செய்து கொடுத்திருக்கிறாள்!
இந்தக் குழப்பம் எல்லாம் நடந்து அரை மணி நேரம் கழித்து அவர்கள் வீட்டிலே வளருகிற அந்தக் கறுப்புப் பூனை வந்தது. வந்தால் என்ன? கோபத்தில் அந்தமாதிரி ஒரு காரியம் அப்பா செய்வார் என்று சரோஜா எதிர் பார்த்தாளா? இல்லை என்ன செய்தார் அவர்? அந்தப் பூனையைப் பிடித்து ஒரு சாக்குக்குள்ளே போட்டுக் கட்டி எங்கேயோ ஊருக்கு வெளியே கொண்டுபோய் விரட்டி வந்துவிட்டார்!
சரோஜாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதைத் தூக்கிப் போடும்போது அந்தச் சாக்குக்குளே இருந்து கேட்ட பூனையின் பரிதாபக் கூச்சல் சரோஜாவின் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது.
அன்று இரவு அவள் சரியாகச் சாப்பிடவில்லை. கறுப்புப் பூனையிடம் சரோஜாவுக்கு அபாரமான பிரியம் உண்டு. பாவம் அது என்ன செய்தது? ஜாடியைக் கீழே தள்ளினது அம்மா அல்லவா ! அப்பாவோ என்றால் இந்தப் பூனையைக் கொண்டு போய் எங்கோ கண் தெரியாத இடத்தில் விட்டு விட்டாரே ! சரோஜாவுக்கு அப்பாவின் பேரில் கோபம் கோபமாக வந்தது. ஆனாலும் அப்பாவையுந்தான் சொல்ல என்ன குற்றம் ? நெய் ஜாடியைக் கீழே தள்ளியது பூனைதான் என்று அவர் உண்மை யிலேயே நம்பினார். அம்மாதானே பொய் சொன்னாள் ? ஆனால் பாவம், அம்மா ஏன் பொய் சொன்னாள் ? அப்பா கோபத்துக்குப் பயந்துதானே. அவள் மேலேயும் குற்றமில்லை. என் மேல்தான் குற்றம். நான் ஏன் அப்பாவிடம் நிஜத்தைச் சொல்லவில்லை? ‘’ என்று சரோஜாவின் குழந்தை உள்ளம் துடித்தது.
சரோஜா படுக்கையில் புரண்டுகொண்டே தன்னுடைய பசலை அறிவுக்கு எட்டியபடி யெல்லாம் யோசனை செய்தாள்: “இப்படியே போய் அப்பாகிட்டே நிஜத்தைச் சொல்லிட்டா என்ன ஆனா சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கோமே அம்மா கிட்டே, சத்தியம்…சத்தியமுமாச்சு சக்கரைப் பொங்கலுமாச்சு பேசாமே தைரியமா அப்பாகிட்டே போயி சொல்லிடத்தான் போறேன். ஆனா அப்பா பூனையைக் கொண்டு போய் வெளியே விட்டு விட்ட மாதிரி அம்மாவையும் கொண்டுபோய் வெளியே விட்டுட்டு வந்திட்டா…?”
சரோஜாவுக்கு அந்த எண்ணத்தையே தாங்க முடியவில்லை. அந்த இரவு முழுதும் அவளால் உறங்கவே முடியவில்லை: எப்போது விடியும், எப்போது இந்தக் கோபக்கார அப்பாவையும், பொய் சொன்ன அம்மாவையும் மறந்து கொஞ்ச நேரம் பள்ளிக்கூடத்தில் போய் இருக்கலாம் என்று எண்ணினாள்.
மறு நாள் விடிந்ததோ இல்லையோ அவசரம் அவசரமாகக் குளித்தாள் சரோஜா.
“அம்மா, தலையைச் சீவிவிடம்மா, இன்னிக்குப் பள்ளிக் கூடத்துக்கு சீக்கிரம் போகணும்” என்றாள்:
“இதென்ன அம்மா ஒரு நாளும் இல்லாத திரு நாளா இருக்கு? பள்ளிக்கூடத்திலே என்ன உனக்கு திடீர்னு இத்தனை அக்கறை?” என்று அம்மா கேட்டாள்.
“இல்லேம்மா, இன்னிக்கு எங்க பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்பெக்டர் வரார். கொஞ்சம் சீக்கிரமே போகணும்மா”.
இவ்வாறு சரோஜா ஒரு குட்டிப் பொய் சொல்லி விட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பினாள். போகிற வழியிலேயே ஒரு யோசனை வந்துவிட்டது: ‘இன்ஸ்பெக்டர் வரார்னு சொன்னேனே அம்மாகிட்டே, இது மட்டும் பொய் இல்லையா. செ, செ! அம்மா ஒரு பொய் சொன்னதுனாலே அதுக்காக நான் எத்தனை பொய் சொல்லவேண்டியிருக்கு? கடவுளுக்குப் பொய்னா பிடிக்காதுன்னு வாத்யார் சொல்லி யிருக்காரே, ஒரு பொய்யை மறைக்கிறதுக்காக நான் எத்தனை பொய் சொல்லிட்டேன்…அப்படின்னா கடவுளுக்கு என்னைப் பிடிக்காதா? ‘ – சரோஜா என்னென்னவோ யோசனை பண்ணி மூளையைக் குழப்பிக் கொண்டாள். இவளுடைய அதிருஷ்டம் அன்று பள்ளிக்கூடத்தில் முதலாவது வகுப்பு தமிழ் வகுப்பு. திருக்குறள் பாடம். அதிலும் எந்த அதிகாரம்? ‘வாய்மை.’ சரேர்ஜா வகுப்பைக் கவனிக் காமல் ஏதேதோ யோசனை பண்ணிக் கொண்டிருந்தாள். தமிழ் ஐயா இதைப் பார்த்துவிட்டர்.
”சரோஜா, எங்கே கவனிக்கிறாய்,…ஹூம்? அந்த மூன்றாவது குறளைப் படி” என்று அதட்டினார்.
சரோஜா எழுந்து படிக்க ஆரம்பித்தாள்:
“தன் நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்”
திக்கிக்கொண்டே சரோஜா வாசித்தாள். தமிழ் ஐயா அவளை அதோடு விடவில்லை…”அதற்கு என்ன பதவுரை எழுதியிருக்கிறது, வாசி” என்றார்.
சரோஜா தொடர்ந்து படித்தாள்:-
‘தன் நெஞ்சு அறிவது-தன்னுடைய மனத்துக்கே பொய் என்று தெரிவதை
பொய்யற்க-அந்தப் பொய்யைச் சொல்லாதே;
பொய்த்தபின்-அப்படிப் பொய் சொன்னால், பிறகு-
தன் நெஞ்சே தன்னைச் சுடும் – தன்னுடைய மனமே தன்னைச் சுட்டுப் பொசுக்கும்”
‘இந்தத் திருவள்ளுவர் தன்னைப்பற்றியே எழுதியிக்கிறாரே’ சரோஜாவுக்கு ஒரே வியப்பாக இருந்தது. தமிழ் ஐயாவோ, அன்று வகுப்பில் இதற்கு மேல் இன்னும் வியாக்யானம் செய்தார். “என்ன கஷ்டம் வந்தாலும் நாம் பொய் சொல்லாமல் இருக்க வேண்டும். நன்மை வரும்போது உண்மை பேசுவது பெரிதில்லையே. கெடுதியே வரும் என்று தெரிந்தாலும் கூட உண்மையே சொல்வதுதான் சிறப்பு” என்றார். சரோஜாவுக்கு ‘ஏன் பள்ளிக்கூடத்துக்கு வந்தோம்’ என்று ஆகிவிட்டது. எப்பொழுது வீட்டுக்கு விடுகிற மணி அடிக்கும் என்றே காத்துக் கொண்டிருந்தாள். நேற்று ஒரு நாள் அவளுடைய அம்மாவுக்குச் செய்து கொடுத்த சத்தியம் சத்தியமா, பொய்யல்லவா அது என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள் – அந்தப் பொய்ச் சத்தியத்தினால் அவள் அடைந்த வேதனை போதும் போதும் என்றாகிவிட்டது!
அப்பா தன்னைக் கோபித்துக் கொண்டாலும். அம்மா வையே கோபித்தாலும் அதனால் என்ன கெடுதி வந்தாலும், இனிமேல் ஒரு நிமிஷம்கூட ஜாடியை உடைத்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லாமல் இருக்கக்கூடாது என்று தீர்மானித்து விட்டாள் சரோஜா. அப்பா அம்மாவை ஏதாவது கோபித்து இம்சித்தால், தானே குறுக்கே நின்று தன்னைத் தண்டிக்கும்படி சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாள் !
சரோஜா வீட்டிற்கு வந்தபோது அம்மா அப்பாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தது கேட்டது :
“உங்களுக்குக் கோபம் வந்தாலும் இப்படியா வரும்…? பாவம், அந்தப் பூனையைக் கொண்டு எங்கேயோ விட்டுட்டு வந்துட்டீங்களே” என்றாள் அம்மா.
“சரிதான். நேற்று நெய் ஜாடியை உடைச்சுது. நாளைக்குப் பால்- செம்பை கவிழ்க்கும், நாளைக்கு மறுநாள்…”
“இப்படி அபாண்டமாகச் சொல்லக்கூடாது. அது என்ன செய்தது பாவம்?” என்று கேட்டாள் அம்மா.
“ஏன், நெய் ஜாடியை உடைச்சது போதாதா… இன்னும் வேறே?” என்று கடுகடுப்புடன் அப்பா கேட்டார்.
“நெய் ஜாடியை உடைச்சது…பூனை இல்லை” என்று மெதுவாக வார்த்தைகளை அசைபோட்டாள் சரோஜாவின் அம்மா சரோஜா கூர்ந்து கேட்டாள்.
“அப்ப யாரு உடைச்சது ஜாடியை?”
“நீங்கதான் மகா கோபக்காரர் ஆச்சேன்னு ஒரு சின்னப் பொய்யைச் சொன்னேன். அதுக்காக நீங்க இந்தப் பூனையைக் கொண்டு இப்படி விட்டுடுவீங்கன்னு கண்டேனா… பாவம், எங்கெல்லாம் நின்று தவியாய்த் தவிக்குதோ…” என்று அம்மா ஒரு சோகக் குரலுடன் கேட்டாள்.
சரோஜாவுக்கு அதைக் கேட்டதும் அழுகை அழுகையாய் வந்தது. உண்மையில் அவளுடைய அம்மா சொன்ன விதத்தில் அப்பாவுக்குங்கூட இரக்கம் வந்து விட்டது போலத் தோன்றியது. அதைவிட அவளுக்கு வருத்தம், தான் அப்பாவிடம் முதலில் உண்மையைச் சொல்லவில்லையே என்றுதான்.
‘‘அப்பா, அப்பா, நீ கோவிச்சுக்காதே, ஒண்ணு சொல்லட்டுமா?” என்று அப்பாவுக்கு அருகிலே வந்தாள் சரோஜா.
“என்னடா கண்ணு சொல்லு” என்றார் அப்பா.
“அப்பா, நீ கோவிச்சுக்குவே…”
“இல்லையம்மா, கோவிச்சுக்கலை நான்…”
“சத்தியமா கோவிச்சுக்கமாட்டேன்னு சொல்லு.”
“சத்தியமா கோவிச்சுக்கலை”
“ஜாடியை அம்மாதான் கீழே போட்டு உடைச்சா. ஆனா உன்கிட்டே சொல்லக்கூடாதுன்னு என்னை சத்தியம் வாங்கிட்டா அப்பா…அதனாலே தான் நான் சொல்லலையப்பா “…வார்த்தைகளை முழுதும் முடிக்குமுன் சரோஜாவுக்கு அழுகை அழுகையாய் வந்துவிட்டது. சரோஜாவின் அப்பா சிரித்துவிட்டார். அப்பொழுது தான் சரோஜாவுக்கும் தைரியம் வந்தது.
“அப்பா, என் பூனைக்குட்டி? அது இல்லாமே எனக்கு எப்படியோ இருக்கப்பா. அதைக் கூட்டிகிட்டு வாரியாப்பா” என்று சரோஜா கெஞ்சினாள்.
அப்பொழுது தடால் என்று சத்தம் கேட்டது. என்ன ஆச்சரியம்! சாக்குக்குள்ளே போட்டு ஊருக்கு வெளியே கொண்டு போய்த் துரத்திவிட்ட பூனைக்குட்டி, இப்பொழுது மறுபடியும் வீட்டை அடையாளம் பிடித்து வந்துவிட்டது; வந்ததோடு மட்டுமில்லை, ‘ஷெல்பி’லே சொருகி வைத்திருந்த எதையோ கீழே வேறு தள்ளி விட்டது – உண்மையிலேயே, சத்தியமாகவே, தள்ளி விட்டது! அப்பா அம்மா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பூனையைப் பிடித்தார்கள். ஆனால் அது இருவரிடமும் தப்பித்துக்கொண்டு சரோஜா மடியிலே தாவியது.
அம்மா கீழே விழுந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். சரோஜாவின் தாத்தா கடைசிவரை விட்டுப் பிரியாமல் வைத்துப் படித்துக் கொண்டிருந்த புத்தகம் அது. அவருடைய சொத்துக்கு யார் யாரோ தாயாதிகள் வந்து வியாஜ்யம் போட்டு தாவர ஜங்கமங்களை எடுத்துக் கொண்டு போனார்கள், ஆனால் இந்தப் பழம் புத்தகத்தை மட்டும் யாருமே சீண்டுவாரில்லை.
“அது என்ன புஸ்தகம்பா?” என்று சரோஜா கேட்டாள்.
உண்மையில் அவளுடைய அப்பாவுக்கே அது என்ன புத்தகம் என்று இதுவரை தெரியாது. ரிஜிஸ்டர் பத்திரமானால் இதற் குள் கரைத்துக் குடித்திருப்பார்-பழம் புத்தகந்தானே அது!
”அப்பா, நான் கேட்டேன், சொல்ல மாட்டேங்கிறியே, அது என்ன புஸ்தகம்பா?” என்று மறுபடியும் சரோஜா கேட்டாள்.
“உங்க தாத்தா வச்சுட்டுப் போன சாஸனப் பட்டயம்” என்று எகத்தாளமாகச் சொல்லிக் கொண்டே அந்தச் சுவடியைத் தூசு தட்டி முதல் முறையாகப் பிரித்தார் அப்பா.
தாத்தா விட்டுப்போயிருந்த சாஸனத்தைப் பிரித்ததும் அந்த உபநிஷதச் சுவடியில் எழுதியிருந்த வாசகம் இது தான்:- “ஸத்யமேவ ஜயதே!”
அப்பா அதற்கு வியாக்யானம் சொன்னார், “பொய் சொன்னே, கறுப்புப் பூனை காணாமப் போச்சு, உண்மையை ஒத்துக்கொண்டே, உடனே போன பூனை திரும்ப வந்துட்டுது!”
சரோஜா அந்தக் குடியரசு மந்திரத்தைத் தனக்குள்ளே உச்சரித்துக் கொண்டாள்: “ஸத்யமேவ ஜயதே!”
– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.
![]() |
மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க... |