சத்திய தரிசனம்




(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘மகாத்மா காந்தி மளிகை’ என்னும் விளம்பரப் பலகையின் எழிலும் ஏற்றமும் அந்தக் கடையின் தொழிலிலும் தோற்றத்திலும் பிரபதிபலித்துக் கொண்டிருந்தன.
மளிகைக் கடை முதலாளியின் பெயர் வேணுகோபால் முதலியார்.
முதலியார் என்றால், கடைச் சிப்பந்திகளுக்கு ஒரு நடுக்கம். அந்த நடுக்கத்துக்கு ஆதார சுருதியாக முதலியாரின் அன்பும் கண்டிப்பும் தான். எங்க ஐயாவுக்குச் சத்தியம் தான் கடவுள். அந்தச் சத்தியத்தை நம்பி, மதிச்சு, வழிபட வேணும்னு எங்களுக்கெல்லாம் சதா சொல்லிக் கொடுத்து வராங்க. எங்க கையிலே அவங்க காட்டுற அன்புக்கும் அளவில்லை; கண்டிப்புக்கும் எல்லை கிடையாது. ஆனபடியினாலே தான், எங்க முதலாளியைக் கண்டால் எங்களுக் கெல்லாம் ஒரே நடுக்கம்! ‘ என்று கடையின் தொழிலாளர்கள் ஒரு முகமாகக் கருதி வந்தனர்.
மளிகைக் கடையின் சுவர்க்கடிகாரம் எட்டுமுறை அடித்து ஓய்ந்தது.
அதோ, வந்துவிட்டார் முதலியார் ; ஆமாம், வேணுகோபால் முதலியார்தான்.
நெற்றியில் நீறு மணத்தது; உடலில் கதருடைகள் மணத்தன.
காரினின்றும் இறங்கிய முதலியார் கடைக்குள் பிரவே சித்தார். “முருகா!” என்று நெஞ்சுருகி அழைத்த வண்ணம் மயில்வாகனனைக் கைதொழுதபடி, திரும்பினார் அன்பையும் சத்தியத்தையும் உலகமாகக் கண்டு, உணர்ந்து, வாழ்ந்து அமரத்துவம் எய்திய காந்தியடிகளின் உருவத்தை இமைக்காமல் பார்த்தார்; அவர் கண்கள் கசிந்தன. தெய்வம் மனிதனாக வந்து, காந்தியாக வாழ்ந்து, ‘மானுடம் வென்றது என்ற உயர் தத்துவத்தின் சத்திய தரிசனமாக-அன்பின் வடிவ மாகத் தோற்றம் தந்து கொண்டிருந்த அண்ணலுக்கு அஞ்சலி செலுத்தினார். ‘முருகா!’ – அவர் கல்லாவில் அமர்ந்தார். சாம்பிராணிப் புகையும் ஊதவத்தி மணமும் சுற்றிச் சூழப் பரவின.
கொத்தவால்சாவடி சுறு சுறுப்படையத் தொடங்கிய வேளை அல்லவா அது!
“தம்பி, மூணு காசுக்கு உப்பு குடு!” குடு குடு கிழவி ஒருத்தி துட்டை நீட்டினாள்.
“இன்னா கேய்வி மூணு காசு யாபாரம்?” என்றான் கடைச் சிப்பந்தி ஞானப்பிரகாசம்.
முதலாளி புன்னகை. புரிந்தார். ‘காலணா அரையணாவுக்கு உப்பு புளி மிளகாய் வியாபாரம் செய்ய ஆரம்பிச்ச அந்த நாளை நினைச்சால் எல்லாமே கனவாட்டம் தான் இப்போ தோணுது. கனவென்ன கனவு! எல்லாம் என் ஐயன் முருகன் கருனை! ‘ என்பதாக அவரது எண்ணக் கயிறு முறுக்கேறியது. இன்றைக்கு வியாபாரம் ரூபாய்க் கணக்கில், கிலோ கணக்கில், மூட்டைக் கணக்கில்!
“தம்பி, மூணுகாசும் காசுதான். ம்…கிழவி கேட்கிறதைக் கொடு”, என்று உத்தரவிட்டார் முதலியார்.
கிழவி சென்று விட்டாள்.
ஆதணக்கோட்டை முந்திரிப் பருப்பு டின் ஒன்றுக்கு ஆர்டர் வந்தது. வந்த வியாபாரி டின்னை எடுத்துவைத்துக் கொண்டு, நூறு ரூபாய்த் தாளை முதலியாரின் கைகளில் சமர்ப்பித்தவர், அவசரத்தில் முந்திரிப் பருப்பு டின்னுக்குரிய கிரயம் போக. மிச்சத்தை வாங்க மறந்து விட்டு, போய் விட்டார்.
பழைய நினைவுகளில் லயித்திருந்த முதலியார் சுயப் பிரக்ஞை கொண்டு கண்களைத் திறந்த நேரத்திலே, அவர் தமது கைகளில் விஷமப் புன்னகை சொரிந்து கொண்டே காட்சியளித்த அந்த நூறு ரூபாய்த் தாளை நோக்கினார். தேள் கொட்டிய மாதிரி அவர் துடி துடித்தார்.’ ஐயையோ! அந்தச் செங்கல்பட்டு வியாபாரி மீதிப்பணத்தை வாங்கிக்கிடாமல் போயிட்டாரே!’ என்று பதை பதைத்து, ‘ஞானப் பிரகாசம்!’ என்று பதட்டத்துடன் விளித்தார். அவர் குரல் ஓய்ந்தடங்கவில்லை.
அங்கே ஞானப்பிரகாசம் வேர்க்க விறுவிறுக்க வந்து நின்றான்.
“எங்கேப்பா போயிட்டே அதுக்குள்ளாற?”
“செங்கல்பட்டு வியாபாரியை ஓடிப் போய் இட்டாற துக்குங்க, ஐயா. பாக்கித் துட்டை வாங்காமல் மறந்திட்டுப் போயிட்டாருங்களே!” என்றான் ஞானப்பிரகாசம்.
“பேஷ்!” என்று அமைதிப் புன்னகை சொரிந்தார் முதலியார். அவர் காந்தியடிகளைத் தரிசித்த போது, அவர் கண்கள் பனித்திரையிட்டிருந்தன. ‘என் கடையின் மானம் பிழைச்சிட்டுது!’
செங்கற்பட்டு வியாபாரி அசல் பட்டின் கம்பீரமான நாணயத்தை மனத்துள் போற்றித் துதித்தவராக விடை பெற்றார். ‘பழைய சிந்தினையிலே லயிச்சிருந்த எனக்கு, பாக்கிப் பணத்தை கொடுக்கிறதுக்கு ஞாபகம் இல்லாமல் போயிட்டுது !’ நினைவுகள் அவருள் மீளவும் சட்டை உரித்துக் கொண்டன. சுதந்தரம் எய்திய பின் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்த மகாத்மா காந்திஜியைத் திருச்சியில் தரிசித்துத் திரும்பிய வேணுகோபால் முதலியார் முருகனையும் காந்திஜியையும் நம்பி, காந்திஜியின் பேரால் சென்னை கொத்தவால் சாவடியில் ஆரம் பித்த மளிகைக் கடையின் அந்த நாள் கதையை அவர் எங்ஙனம் மறப்பார்?
வாய் பேசாமல், இதயத்தை மட்டிலும் பேசவிடும் டெலிபோன் அழைத்தது
வேணுகோபால் முதலியார் தொலை பேசிக் கருவியைக் காதுடன் பொருத்தினார்: “யாரு மாமாவா ?… மயிலாப்பூரிலே ருந்தா பேசுறீங்க?…ஓ… அப்படீங்களா? ஆயிரம்தானே ? இப்பவே அனுப்பிடுறேனுங்க. ஓ!… சரிங்க !”
முதலியார் தொலைபேசிக் கருவியினை அதற்குரிய ஓய்விடத் தில் வைத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தார். தீபாவளிக்கு ஜவுளி எடுத்த வகையிலே உடனே கட்டவேண்டிய தொகையிலே ஒரு ஆயிரம் குறையுதாம். ஆயிரம் ரூபாயை இப்ப யார் மூலம் அனுப்புறது? என்று சிந்தை செய்தார். அவர் நெஞ்சில் ஞானப்பிரகாசத்தின் நினைவுதான் எடுத்த எடுப்பில் வந்தது. சற்றுமுன் அவன் நடந்துகொண்ட முறை அவர் நெஞ்சில் பாலை வார்த்தது. நாணயத் தொடர்புள்ள வேலைகளைச் செம்மை யுடன் செய்து முடித்துக் காட்டி வந்தவன் ஞானப்பிரகாசம்: நாலு வருஷங்களாக அவன் அங்கு பணிபுரிந்து வருகிறான். கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களையெல்லாம் அவன் நாணயமாகவே. நிறைவேற்றியிருக்கிறான். ஐந்து, பத்து என்றாலும் நாணயம் நாணயம் தானே?
முதலாளியின் விழிகள் வெளிக் கடையைத் தாண்டி உள்ளே நுழைந்தன. ர
“ஞானப்பிரகாசம்! ”
ஞானப்பிரகாசம் வந்தான். வந்தவனிடம் நூறு ரூபாய் நோட்டுக்கள் பத்து எண்ணிக் கொடுக்கப்பட்டன. போக வேண்டிய இடமும் குறிக்கப்பட்டது. “ஓ, தெரியுமுங்க எசமான்!” என்றான் ஞானப்பிரகாசம்.
அவன் சைக்கிளை எடுத்துத் தள்ளிக் கொண்டு புறப்படப் போனான்.
“ஞானப்பிரகாசம்! உங்க அம்மாவைத் தவிர வேறே யாரும் உனக்கு இல்லையா?” என்று வினவினார் முதலியார்.
“இல்லீங்க, ஐயா! எங்க அம்மா தான் எனக்குச் சகலமும்! அவங்கதான் எனக்குத் தெய்வமுங்க!”
ஞானப்பிரகாசத்தின் கண்ணீர் முதலியாரின் நெஞ்சிலிருந்து நல்லமூச்சை நெட்டித் தள்ளியது.
“ஏய்! பணம் பத்திரம்! போனதும் வந்ததுமாய் ஓடியார வேணும்!’
ஞானப்பிரகாசத்தை வேலைக்கு வைத்துக் கொள்ளும்படி கண்ணீரும் கம்பலையுமாய் வேண்டிய அவனது அன்னைவடிவம் அவருள் நிழலாடியது. ‘முருகா!’ என்று தம்முள் முணு முணுத்தார். காந்திஜியின் உருவம் அவருள் இரண்டறக் கலந்தது. ஞானப்பிரகாசத்தைக் கூர்ந்து நோக்கிய முதலியார் அவன் இளமையின் கம்பீரத்துடன் அங்கிருந்து புறப்பட எத்தனம் செய்ததைக் கண்டார். என்ன நினைத்துக் கொண்டாரோ, அவர் மீண்டும் காந்திஜியின் படத்தைப் பார்வையிட்டார். ஞானப்பிரகாசம், காந்தி மகாத்மாவின் படத்திலே இருக்கிற பூச்சரம் கீழே நழுவப் பார்க்குது. அதைச் சரி செய்து போட்டிட்டுப் புறப்படப்பா,” என்றார்.
ஞானப்பிரகாசம் தன் உரிமையாளரையும் சத்தியத்தின் காவலரையும் அர்த்த புஷ்டியுடன் பார்த்துவிட்டு, இடப்பட்ட கடமையைச் செய்து முடித்தவனாக அங்கிருந்து நகரலானான்!
முதலியார் பெருமூச்சுப் பறித்தார். ம்… ஒரு சத்திய சோதனை ஞானப்பிரகாசத்தோடே புறப்பட்டுப் போகுது, ஆயிரம் ரூபாய்ப் பணத்துடன்!…’ என்று அவர் உள் மனம் நினைத்தது. அதைத் தொடர்ந்து, ”சத்தியம் என்பது வாய்மை மட்டுமல்ல; உள்ளத்தின் உண்மை ஒளியையும் அது குறிக்கும். சத்தியப் பொருளும் நித்திய தத்துவமுமான இறைவனையும் அது குறிப்பிடும்!” என்ற காந்தீய தத்துவமும் நிழலாடியது.
ஆயிரம்!…ரூபாய் ஆயிரம்!…புத்தம் புதிய நூறுரூபாய்ச் சலவைத்தாள்கள் பத்து !…
தூங்குமூஞ்சி மரத்தின் நிழலில் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்ற இளைஞன் ஞானப்பிரகாசத்தின் கண்கள் இடுப்பில் செருகப் பட்டிருந்த ஆயிரம் ரூபாய்ப் பணத்தைக் கற்பனை செய்தன. மறுகணம், அத்தனை நோட்டுக்களும் அவனது கைக்கு இடம் பெயர்ந்தன. மண்ணடி மாறியது; பிராட்வே பிரிந்தது. பிடாரியார் கோவில் தெரு முனையில் இருந்த பழைய வீட்டின் வாசலில் சைக்கிளும் கையுமாக நின்றான் அவன். நாலு வீடு தள்ளிச் சென்றால், அவனுடைய வாசஸ்தலம்!
ஒரு கணம் அவனுடைய உள்ளம் முதலாளியின் மண்டியைச் சுற்றியது.
முன்தினம் காலையில் கடைக்குப் போய் ஒருமணி நேரம் கழித்து,வீட்டுச் செலவுக்குக் கொஞ்சம் பணம் வேண்டு மென்று முதலாளியிடம் வேண்டினான் ஞானப்பிரகாசம்.
“இடை நடுவிலே ஒரு பைசா கூடத் துட்டு தரமுடியாது. சம்பளம் ஏழாந்தேதி கொடுப்பதுடன் சரி!” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறிவிட்டார் முதலியார். இந்நிகழ்ச் சியை எண்ணியபோது, அவனையும் அறியாது பற்கள் நறநற’ வென்று ஒலியை எழுப்பின். கையிலிருந்த நூறுரூபாய் நோட்டுக் களையே தொடுத்தகண் எடுக்காமல் பார்த்துக் கொண்டேயிருந் தான் அவன். ஆயிரம் ரூபாய்ப் பின்னணியிலே அழகான தொரு சொர்க்கலோகம் உருவாயிற்று. உடம்பை மூடிக்கொண்டிருந்த கந்தலும் கிழிசலும் பறிபோயின. வறுமையினால் திரையிட்டு மூடப்பெற்ற பொலி விழந்த வதனத்திலே வனப்பும் வளமும் அணையலாயின: நடந்தான்; வீட்டுவாசல் வந்தது. சைக்கிளை ‘ஸ்டாண்ட் ‘ போட்டு நிறுத்தினான். வெளித்திண்ணையில் உட்கார்ந்தான் அவன்.
‘தங்கம் !… ‘
உந்திக்கமலத்திலிருந்து உதயமான இந்தப் பெயர் எதிரொலி பரப்பி அடங்குவதற்குள், அவன் தஞ்சை மண்ணுக்குச் சொந்த மான வல்லத்துக்கு ஓடித் திரும்பினான். ‘அத்தான்! நீங்களும் நாலுபேரைப் போல கையிலே ஆயிரம், ஐநூறு பணம் சேர்த்துக் கிட்டுத் திரும்புறபோதுதான் என்னை உங்க கையிலே ஓப்படைப் பாங்க என் அப்பா!’ என்று திட்டவட்டமாகச் சொன்னாளே தங்கம்!
ஞானப்பிரகாசத்தின் ஊனக் கண்களிலே தங்கத்தின் உடற் கட்டும், அழகுக்கண்களின் மின்வெட்டும் நமட்டுச் சிரிப்பும் தோன்றி அவனது சிந்தையைக் கலக்கின. ‘ஆமாம், இப்பவே தங்கத்தைப் பார்த்தால்தான் என்னோட மனசு ஆறும்!’
பணத்தைச் சட்டைப் பையில் திணித்துக்கொண்டு, சைக்கிளை வீட்டுவாசலில் சாய்த்து வைத்துவிட்டு, புறப்பட்டான் ஞானப்பிரகாசம். துரிதவண்டி அவனைத் துரிதமாகவே சுமந்து சென்றது.
“தங்கம்!”
“அத்தான்!”
“தங்கம், நான் பட்டணத்துக்குப் புறப்படுறப்ப நீ கொடுத்த எச்சரிக்கை எனக்குள்ளே ஒரு தீவிர வைராக்யமாக வளர்ந்துச்சு. பணமும் கைய்யுமா வந்திருக்கேனாக்கும்!”
“அத்தை வரலீங்களா?”
“அவங்க பட்டணத்திலே வெத்திலை பாக்குக்கடை நடத்துறாங்க. என்னைச் சேதி சொல்ல இங்கே முதலிலே அனுப்பினாங்க. உனக்கு நகை நட்டு செஞ்சாகணும். அது முடிஞ்சதும், தந்தி கொடுத்து அம்மாவை வரவழைச்சுக்கலாம்!” என்றான் இளவட்டம் ஞானப்பிரகாசம்.
பணம் பத்தரைமாற்றுப் பசும் பொன்னாக உருகிப் பத்தரிடம் அடைக்கலம் புகுந்தது. தங்கத்தாலி உருவானது: பரிசம் போடவும் முகூர்த்தம் வைக்கவும் ‘நாள்’ குறிக்கப்பட்டது.
அச்சமயந்தான், அவன் தலையிலே பேரிடி ஒன்று விழுந்தது. பட்டணத்துக்குச் சென்று திரும்பிய ஊர்க்காரர் ஒருவர் அவனிடம் வந்தார். “தம்பி! என்ன அநியாயம் செஞ்சிட்டே !… நீ வேலை செஞ்ச முதலாளி அவங்க மாமாகிட்டே கொண்டு போய்க் கொடுக்கச் சொன்ன ஆயிரரூபாயை நீ எடுத்துக்கிட்டு ஓடி வந்திட்டீயாமே? இப்படிச் சத்தியம் தவறலாமா? பாவம், நீ செஞ்ச தப்புக்காக உன்னைப் பெற்ற அம்மாவை ஜெயிலிலே போட்டு அடைச்சிட்டாராம் உங்க முதலாளி!” என்றார்.
ஞானப்பிரகாசத்தின் முன்னர் உலகம் ஆலவட்டம் சுற்றியது.
“எசமான், எனக்கு எங்க அம்மாதான் சகலமும்!” என்று முதலாளியிடம் தான் கண்ணீருடன் சொன்ன வாசகம் நினைவுக்கு வந்தது. தான் கடையை விட்டுப்புறப்படும் போது, காந்தி மகாத்மாவின் படத்திலிருந்த பூவைச்சரி செய்து போட்டு விட்டுச் செல்லும்படி பணித்த செயலின் உட்பொருள் அவனை வாள் கொண்டு அறுத்தது. சத்தியமே என் கடவுள்!’ என்று புனிதர் மகாத்மா சொன்ன பொன் மொழியை அடிக்கடி ஞாப கப்படுத்தி வந்த தன் எஜமானரின் பேச்சும் அவனுக்கு நெஞ்சில் நிழலாடியது. “சத்தியம் தவறாது நடந்தால் நமக்குப் படி அளக்கத் தவறவே மாட்டானப்பா நம்மைப் படைச்ச ஆண்டவன்!” என்று அடிக்கொரு முறை எச்சரித்து வந்த அன்னையின் உயிர் வடிவம் அவன் கண்ணீரில் கலந்தது. ‘அம்மா! உன்னை நான் இனிமேல் காணவே முடியாதா? எப்படி நான் பட்டணத்துக்குள்ளே அடியெடுத்து வைப்பேன்?…நான் திருடினதுக்காக என் தெய்வம் தண்டனை அனுபவிக்கிறதா? கூடாது! கூடவே கூடாது!…பாக்கியிருக்கிற எழுநூறு ரூபாயையும் கொண்டு போய் எசமான் கையிலே கொடுத்து, அவரோட காலிலே விழுந்து மன்னிப்புக் கேட்டு, என்னைப் பெற்ற அம்மாவை விடுவிக்க வேணும்!…சத்தியம் தவறின எனக்கு நல்ல தண்டனை கொடுத்திட்டுது தெய்வம்!…ஐயையோ!…’ என்று மனம் குமைந்து கண்ணீர் பெருக்கினான் ஞானப்பிரகாசம்!…
“ஏ, ஞானப்பிரகாசம்!”
வழிந்த வேர்வையை வழித்துவிடக் கூட உணர்வின்றி ஏறிட்டுப் பார்த்தான் ஞானப்பிரகாசம்.
பேச நா எழவில்லை அவனுக்கு. ‘அப்படியானால், நான் கண்டது அத்தனையும் நிஜமாவே கனவு தானா?…’ என்று மனம் மறுகி, குனிந்து சட்டைப் பையைப் பார்த்தான். பணத்தைக் காணவில்லை! அப்படின்னா, நான் இத்தனை நேரம் கண்டது கனவு இல்லியா? மெய்தானா? தெய்வமே!’
ஓர் அரைக் கணத்தில் அவனுக்கு விஷயம் புரிந்தது. தான் இதுவரை கண்டது கனவுதான் என்று உணர்ந்து கொண்டான் அவன். ஆனால், முதலாளி கொடுத்த பணம் ரூபாய் ஆயிரத்தைக் கண் அயர்ந்த தருணம் யாரோ ‘ஜேப்படி’ செய்து விட்டான் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். அம்மா, நான் தப்பு செய்ய நினைச்ச குற்றத்துக்குப் பகவான் எனக்குத் தண்டனை கொடுத்திட்டார் அம்மா !… முதலாளி அவங்க மாமனார் கையிலே கொடுக்கச் சொல்லிக் கொடுத்த பணம் ரூபாய் ஆயிரத்தைப் பையிலே வச்சிருந்தேன். அதை எடுத்துக் கிணு உன் கையிலே கூடச் சொல்லாமல் தங்கத்தைக் காண ஓடிப் போயிடணும்னு நெனைச்சேன். அந்தப் பாவத்துக்குக் கூலி கிடைச்சிட்டுது. சத்தியம் என்கிற தெய்வம் எனக்குத் தண்டனை வழங்கிடுச்சு. யாரோ பணத்தைக் களவாடிட்டாங்களே! ஐயோ! அம்மா!…அம்மா !… தெய்வமே!…’
விழித்துப் பார்த்தான்.
மகா துர்க்கையென அவன் அன்னை அவன் முன்னே தரிசனம் கொடுத்தாள். ‘ஐயோ !…பாவி நீ ! சத்தியத்தை வாழவச்சா, உன்னைச் சத்தியம் வாழவைக்கும்ணு சதா பாடம் படிச்சுக்கொடுத்தேனேடா!…நீ, உன்னை நம்பினவங்களுக்குத் துரோகம் செஞ்சிட்டியேடா!… அடபாவி!” என்று அலறி, வீறுகொண்டு அவன் கன்னங்களிலே மாறி மாறி மாற்றி மாற்றி அறைந்தாள் கோசலை அம்மாள்.
ஞானப்பிரகாசம் தூண்டில் புழுவானான்!
வெய்யில் எரித்தது.
அப்பொழுது, காரொன்று அவ்வீட்டின் வாசலில் வந்து நின்றது.
”கோசலை அம்மா!”
கோசலை அம்மாள் கண்களைச் சேலைத் தலைப்பினால் துடைத்த படி தலைநிமிர்ந்தாள்.
‘மகாத்மா காந்தி மளிகை’யின் முதலாளியான வேணு கோபால் முதலியார் நீறும் நகையுமாக நின்றார். அவர் கண்கள் ஞானப்பிரகாசத்தின் முகத்தை நோக்கின.
“எசமான், என்னைக் காப்பாற்றுங்க எசமான்!” என்று ஞானப்பிரகாசம் ஓலமிட்டு தன் முதலாளியின் பாதங்களிலே நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான்.
ஞானப்பிரகாசத்தின் கண்ணீரைத் துடைத்தார் முதலியார். அவனது கன்னத் தழும்புகள் அவர் கண்களில் கண்ணீரை நிரப்பின. “நீங்கதான் உங்க மகனை இப்படி அறைஞ்சீங்களா அம்மா?” என்றார்.
“ஆமாங்க, நான் பெற்ற மகனை நானேதான் அறைஞ்சேனுங்க. நீங்க என் வார்த்தைக்கு நம்பிக்கை வச்சுத்தானுங்களே என் மகனை வேலைக்கு அமர்த்திக்கினீங்க? அந்த நாணயத்தை – சத்தியத்தைக் காப்பாத்த வேண்டியது தானுங்களே இவன் கடமை!”
ஞானப்பிரகாசம் செருமினான். “எசமான் என்னைக் காப்பாற்றுங்க!” என்று கதறினான்.
முதலியார் அன்பாகப் புன்னகை செய்தார். “ஞானப் பிரகாசம்! எழுந்திரு. உன்னை, எனக்கு முந்திக்கிணு உன் அம்மாவே காப்பாற்றிட்டாங்க. நான் கொடுத்த ஆயிர ரூபாயைச் சட்டைப் பையிலே வச்சுக்கிணு நீ தூங்கும் போது, தங்கம்… தங்கம்’ணு நீ புலம்பினதைக் கேட்ட உன் தாயாரே உன் மனசிலே ஓடின கெட்ட எண்ணத்தை யூகிச்சு, பயந்து போய், அந்தப் பணத்தை எடுத்தாந்து என் கையிலே ஒப்படைச் சிட்டாங்க. அவங்க சத்தியத்தை மதிக்கப் பழகின ஏழை. ரொம்பவும் ஜாக்கிரதையாய் நடந்துக்கிட்டாங்க. அவங்களை நம்பித்தான் உன்கிட்டே அவ்வளவு பெரிய தொகையை நான் கொடுத்தனுப்பவும் துணிஞ்சேன். பணத்தை உன் கையிலே தந்தவுடன், நான் உன்கிட்டே கேட்ட கேள்விக்கு, ” எங்கம்மா தான் எனக்குத் தெய்வம்”னு நீ கண்ணீருடன் சொன்ன அந்தப் பதில்தான் என் மனசிலே உன்னைப் பற்றி நன்னம்பிக்கையை உண்டாக்கிச்சு. காந்திஜியோட படத்துப் பூவைச் சரியாய் போட்டுட்டுப் போகும்படி சொன்ன செய்கையும், உன் மனசிலே சத்தியத்தை வாழச் செய்யும்னும் நான் நம்பினேன். என் நம்பிக்கை எப்படியோ காப்பாற்றப்பட்டிடுச்சு. எப்படியோ என் பணமும் பிழைச்சிட்டுது. நேற்றைக்கு நீ வீட்டுச் செல வுக்குப் பணம் கேட்டப்போ இப்போ கிடையாதுன்னு சொன்ன விஷயம் உனக்குக் கோபத்தை உண்டாக்கியிருக்கலாம். என் கண்டிப்பு இல்லாட்டா, நீ நினைச்சப்பவெல்லாம் பணம் கேட்டு, நினைச்சபடியெல்லாம் செலவழிச்சிட்டால் என்ன ஆகிறது?… சத்தியமே என் தெய்வம் அப்படின்னு அடிக்கடி காந்திஜி சொல்லி வந்தாங்க. அந்தச் சத்தியத்தை நான் மதிச்சுக்கிட்டு வாரவன். அதனாலேதான் பகவான் என்னை இந்த அளவுக்கு வச்சிருக்கான். அதே சத்தியத்தை உன் அம்மாவைப் போல நீயும் மதிக்கப் பழகிக்கிட வேணுமப்பா!…இந்தா பத்து ரூபாய்!… செலவுக்கு வேணும்ணு கேட்டியே! அன்பு எதையும் கொடுக்கவே செய்யும் என்கிறதும் காந்தி தத்துவம். என் அன்பு உனக்கு எப்பவுமே உண்டு. இந்தா, வச்சுக்க. இது உன் கணக்கிலே சேராது. இதைக் கொடுத்திட்டுப் போகவும், உன்னை மறுபடியும் வேலைக்கு அழைச்சிட்டுப் போகவும்தான் வந்தேன். தப்பு செய்யுறது இயல்பாக இருக்கலாம். ஆனால் மறுபடியும் தப்பு செய்யாமல் இருக்கப் பழகிக்க. அதுதான் உன் எதிர்காலத்துக்கு நல்ல வழிகாட்டும்!…” என்றார் முதலியார். “பாக்கிப் பணத்தை வாங்காமல் மறந்திட்டுப் போன செங்கல் பட்டு வியாபாரியை அழைச்சிட்டுவந்த அந்த ஞானப்பிரகாச மாக நீ எப்பவும் இருக்கணுமப்பா!” என்று முடித்தார்.
‘‘எசமான்! எசமான்! காந்தி மகாத்மா என்னைக் காப்பாற்றிடுவாருங்க இனிமேல்! நீங்களும் காப்பாற்றிட்டீங்க இப்போ!… சம்பளத் தேதிக்குப் பணத்தை வாங்கிக்கிறேனுங்க, ஐயா! இந்தப் பணத்தை நீங்க வச்சுக்கங்க. உங்க அன்புக்கு நானும் என் அம்மாவும் உயிருள்ள மட்டும் கடமைப் பட்டவங்களாயிருப்போமுங்க, எஜமான்! இது சத்தியமுங்க, ஐயா!…” என்று விம்மினான் ஞானப்பிரகாசம். அவன் கண்களிலே புதிய ஒளி படர்ந்தது.
கோசலை அம்மாள் ஆனந்தக் கண்ணீர் சொறிந்து கொண்டிருந்தாள்!
– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.
![]() |
அமரர்.பூவை எஸ்.ஆறுமுகம் தமிழ்ப் படைப்பு இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் 200- க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். . கிராமியச் சூழலில் மண்வாசனை கமழ்ந்திட எழுதுவதில் தனிமுத்திரை பதித்தவர். பொன்னி, காதல், மனிதன், உமா ஆகிய இதழ்களில் பொறுப்பாசிரியராக பணியாற்றியுள்ளார். பக்தவச்சலம், கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய 4 முதல்வர்களிடமும் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நூல்களுக்கு பரிசுகளைப் பெற்றுள்ளார். காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடத்தின் சிறந்த எழுத்தாளருக்கான கௌரவப்பரிசு ,…மேலும் படிக்க... |