உள்ளும் புறமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 6, 2025
பார்வையிட்டோர்: 56 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓட்டலின் ‘குடும்ப அறை’க்குள் நுழையு முன்பு சிறிது நின்று சுற்று முற்றும் பார்வையை வீசிய முத்து, “இன்னும் ரமணன் வரவில்லைன்னு தோணுது” என்றான். 

அருகில் நின்ற அவன் மனைவி வள்ளி “நாம் போய் உட்காரலாம் வாங்க. அவர் வரப்போ வரட்டும் ” என்று அலுப்புற்ற குரலில் கூறினாள். 

“அது நல்லாயிருக்குமா? ஸ்பெஷலாய் இங்கே வந்து எங்களோடு சாப்பிடுன்னு அழைப்புக் கொடுத்துட்டு அப்புறம் அலட்சியப்படுத்தறோம்னு அவனும் அவன் பெண்டாட்டியும் நினைச்சுகிட்டால்?” 

“நினைச்சால் நினைக்கவேண்டியதுதான். அதுக்கு நாம் என்னங்க செய்யறது? சொன்ன டயத்துக்குச் சரியா வரலேன்னா யார் தப்பு அது? அந்த பங்ச்சுவாலிடியெல்லாம் வெளியூர்க்காரங்க கிட்டேதான் கத்துக்கணும். நம்மவங்களுக்கு எங்கே!” 

முத்துகிருஷ்ணனுக்கு நாற்பத்து மூன்று வயது. பிறவிப் பணக்காரன் மட்டுமன்றிப் பிரபல தொழிலதிபர் கூட. உணவு வாசனைத் திரவியங்களை ஏற்றுமதி செய்யும் வாணிபம் மிகச் செழிப்பாய் நடந்துகொண்டிருந்தது. அவ்வப்போது வெளி நாட்டுப் பயணங்களுக்காக அவன் கிளம்பும்போது வள்ளியும் உடன் செல்வாள். அந்நாடுகளில் அவளுக்கு ஏற்பட்ட ஈடுபாட்டி னால் அவையே நாகரிகத்தின் உறைவிடமாகவும் தன் சொந்த மண் பாமர நாடாகவும் தோன்றியது. புக்ககம் வந்துவிட்ட புதுமணப்பெண் பிறந்தகத்துக்கு ஏங்குவதுபோல் “எங்கேயானும் ஃபாரின்லே போய் ஸெட்டில் பண்ணிடலாங்களே!” என்று அடிக்கடி கூறுவாள். 

 முத்து பட்டதும் படாததுமாக ஒரு பார்வை அவளைப் பார்த்தான். அதில் அவன் மனத்தில் குழம்பிக்கொண்டிருந்த சஞ்சலங் களெல்லாம் நிழலாடின. 

“நீ உள்ளே போய் உட்காரு. நான் அவங்க வந்ததும் கூட்டி கிட்டு வரேன்.’ 

“ஓட்டல் பையன் எவனண்டையாவது சொல்லி அவங்களை உள்ளே அனுப்பச் சொன்னால் போச்சு. அதுக்காக நீங்களேதான் காவல்காரன் மாதிரி நிற்கணுமா என்ன?” 

“ரமணன் என் நண்பன், வள்ளி! ஞாபகமிருக்கட்டும். நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாப் படிச்சவங்க. ஒண்ணா சத்தியாக்கிரகம் செய்தவங்க. ஒரே கொள்கையைக் கடைப்பிடிச்சவங்க.” 

அவன் முன், காலம் சரிந்தது. அந்தக் கொள்கை, அந்தச் சத்தியத் தீவிரம்… 

அகிம்சையின் வழியிலேயே போராட்டம் நடத்தி அன்னிய ஆட்சியை முறியடிக்க அன்று அறைகூவல் எழுப்பிய ஓர் எளிய மெலிந்த, முதிர்ந்த உருவம் அவன் மனத்தில் தெளிவாக எழுந் தது. அன்பே வடிவான அந்தத் தூய திருவுருவம், அந்த மகான், ஆயுதமின்றியே போர் நடத்தி அதில் வெற்றியும் கண்ட மையை உலகமே பார்த்து அதிசயிக்கவில்லையா? பகைவன வெறுக்காமல் அநீதியை மட்டுமே வெறுத்த அந்த அகிம்சைத் தளபதி காட்டிய நெறியில், அன்று அடிமைப்பட்டிருந்த நாட்டில் பலகோடி இதயங்கள் விழிப்படைந்து வீறு கொண்டன. சத்திய மும் அகிம்சையும் வீரததின் மறு பெயர்கள் என்பதைத் தம் ஒவ்வொரு செயலிலும் நிலை நிறுத்திக் காட்டினார் அவர். 

அந்த நினைப்பிலேயே முத்துவுக்கு மெய்சிலிர்த்தது. நாடு முழுவதிலும் அன்று சிம்ம கர்ஜனையாய் ஒலித்த அந்தச் சத்தியப் பெருமுழக்கம் தீமூட்டிச் சுடரெழுப்பிய எண்ணற்ற வாலிப உள்ளங்களில் அவனுடையது, கோபியினுடையது… 

கோபி என்னவானான்? அவன் இருக்குமிடமே தெரிய வில்லையே?… போகட்டும், இத்தனை ஆண்டுகளில் அவ்வவ்போது ரமணனையேனும் சந்திக்க முடிந்ததே. 

“என்ன அப்படிப் பிரமிச்சுகிட்டு நிற்கறீங்க?” 

“நீ உள்ளே போ வள்ளி, சொன்னேனில்லே?” 

அதே சமயம் வாயிற்புறம் அடர்ந்த சிறு கும்பலிலிருந்து உதிர்ந்துகொண்டு முன்னால் வந்து நின்ற வடிவம் அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தது. 

“குட் ஆப்டர்னூன், முத்து! கொஞ்சம் லேட்டாயிட்டுது மன்னிச்சுக்கப்பா! நீ பெரிய பிஸினஸ்மேன். உலகம் பூரா சுத்தற பணக்காரன். உன் நேரத்துக்குக் கூட விலை உண்டுதான்! ஆனாலும் நண்பனாச்சேன்னே பொறுத்துக்க.” 

“வா ரமணா ! ரூமுக்குள்ளே போகலாம் வா” 

“நான் ரெடி.” தான் ஒரு செல்வச் சீமானின் நண்பன் என் பதைக் காட்டிக்கொண்டுவிட்டபிறகு, தனிப்பட்ட முறையிலும் தான் ஒரு முக்கியமான புள்ளி என்று வலியுறுத்துபவனாக ரமணன் சிறிதுநேரம் அப்படியே நின்று, அறையிலிருந்தவர்களில் யாரே னும் இயன்றால் தன்னை அடையாளம் கண்டுகொள்ள நேரமளித் தான். “இதோ, இவள் என் மனைவி, சீதா. இவன்தான் என் நண்பன் முத்துக்கிருஷ்ணன். நாங்க அடிக்கடி சந்திச்சுக்க முடியாமல் போனாலும் ரொம்ப நாளைய நண்பர்கள். பழைய நாளில் ஒண்ணாப் படிச்சவங்க”. 

அதைச் சொல்லும்போது அவன் உள்ளத்திலும் ஒரு வீறு கொண்ட இளைஞர் கூட்டம் கெரிந்ததோ? “இந்தியாவினின்று வெளியேறு” என்று அன்னியனை நோக்கி வீரவாக்கு மொழிந்து எந்தத் தண்டனைக்கும் அஞ்சாது நின்ற அந்த மகாத்மாவின் குரல் கேட்டுச் சிலிர்த்தெழுந்து, கிளர்ச்சியில் குதித்த மாணவர்க் கூட்டம் தெரிந்ததோ? முத்து அதை அறிய நண்பனின் முகத்தை உன்னினான். ரமணனின் திருப்திகொண்ட தோரணையில் அந்தத் துடிப்பு மிக்க கூட்டத்தின் காட்சி மங்கலாகக் கூடப் பிரதிபலிக்கவில்லை. 

பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொள்கையில் இரு பெண்களும் ஒருவரையொருவர் கண்களால் நிறுத்து அளந்து கொள்வதை அவன் கவனித்தான். அதே சமயத்தில் அறை யில் சிற்றுண்டி புசித்துக்கொண்டிருந்த ஒருவர் ரமணனை அடையாளம் கண்டுகொண்டுவிட்டு அருகிலிருந்த தோழனின் கையைத் தொட்டு “அதோ அவர்தான் பி. டி. ரமணன். காந்திஜியைப் பத்தி நிறைய புத்தகங்கள் எழுதியிருக்காரே, அந்த ஆள்!” என்று முணு முணுத்தார். இதைக் கவனித்துக் கொண்ட ரமணனின் முகத்தில் திருப்தி அதிகரிக்கது. பிறகு குடும்ப அறையினுள் நால்வரும் நுழைந்தனர். கண்ணாடிக் கதவு பின்னே மூடி க்கொண்டது. முதலில் உணர்வாகும் ஒருவித மெல்லிய நெடியோடு குளிர்சாதனத்தின் இதம் வந்து சூழ்ந்து கொண்டது. 

“என்னடா சாப்பிடறே, ரமணா?” என்றான் முத்து.

“உனக்கு எது இஷ்டமோ கொண்டுவரச் சொல்லேன்!” 

“சரி, முதல்லே சூடாய் வெஜிடபிள் ஸமோஸா? அப்புறம் க்ரீன் பீ மஸாலா, பாதாம் அல்வா, உருளைக்கிழங்கு கட்லெட், அதன் கூட தக்காளி, பட்டாணி, லெட்யூஸ் இதெல்லாம் சேர்த்துந்தான். அப்புறமா காப்பி, ஐஸ்காப்பியாவே இருக்கட்டும், என்ன ரமணா?”

“ஓகே! வாட் எவர் யூ ஸே” 

அந்தப் பொருள்களின் பட்டியலே ரமணனுக்கும் சீதாவுக் கும் அஜீரணம் ஏற்படுத்திவிடும் என்ற நினைப்பில் சிறிது உற்சாகம் கொண்டவளாய் வள்ளி சீதாவை நோக்கிச் சிக்கனமாக ஒரு புன்னகை உதிர்த்தாள். ஆனால் தம்மிருவருக்கும் கூட இம்மாதிரி உணவு பழக்கம்தான் என்று காட்டிக்கொள்பவனாக ரமணன் முகத்தில் எவ்விதத் திகட்டலும் இன்றி இயல்பாக, ”நல்லவேளை! போன தடவை நாங்க இங்கே வந்தப்போ வெஜிடபில் புலாவும் பட்டர் மசாலா தோசையும் குலோப்ஜானும் சாப்பிட்டோம். நீ அதையே சொல்லாதது நல்லதாப் போச்சு, அப்புறம் என்ன சமாசாரம் முத்து? மெட்ராஸில் எத்தனை நாள் இருப்பே?” என்றான். 

“இன்னும் ரெண்டு நாளில் ஊட்டிக்குக் கிளம்பறேன். நீயும் வாயேன் குடும்பத்தோட!” 

“குடும்பத்தோடா! நாலு குழந்தைகளப்பா எனக்கு!”

“பரவாயில்லை. எனக்கும் தான் ரெண்டுபேர் இருக்காங்க!”

“ஆசைக்கொரு பெண், ஆஸ்திக்கொரு பிள்ளை! வேண்டியதுதான். ரெண்டும் நிறைய இருக்குதே உனக்கு முத்து!” 

“உனக்கு மட்டும் என்ன குறைச்சல்? என்னைப் போல பிஸினஸ்மேனா இல்லேன்னாலும் நீயும் தான் கைநிறையச் சம்பா திக்கிற வேலை பார்க்கறே. அதுவும் தவிரப் பெரிய எழுத்தாளன் வேறே!” 

ரமணன் மிகுந்த செருக்குடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். “ஆமாம். நாற்பத்திரண்டாம் வருஷம் மாணவர்களாய் இருந்தப்போ நாம் கிளர்ச்சி, மறியல் எல்லாம் செய்திருக்கோமே! அந்த நாளிலே காந்திஜியாலே நாம் இன்ஸ்பைர் ஆனோமில்லையா? அதனால் தான் நான் ஒரு எழுத்தாளன்! 

“ஆமாம், அவர் கொள்கைகள் ஒவ்வொண்ணைப் பத்தியும் தான் பல புத்தகங்கள் எழுதியிருக்கியே!” 

“நீ மட்டும் சளைச்சவனா? அவர் பெயரிலே எத்தனை கட்டடம் நிறுவியிருக்கே நீ! உனக்கு அதனாலெல்லாம் எத்தனை புகழ் தெரியுமா?” 

அந்தப் பாராட்டைக் கேட்டு முத்துவின் நெஞ்சம் உள்ளே குமையும் அதிருப்தியையும் மீறி உடனுக்குடன் பெருமிதமுற்றது. 

“அப்படியா! எனக்குப் புகழ் வந்திருக்குன்னா சொல்றே?” என்றான் புன்னகையை மறைத்துக்கொள்ள முயன்றவாறே. 

:ஆமாம்ப்பா, ஆமாம்! நீ நிறுவிய காந்திக் கட்டடங்களில் வடக்கே ஏதோ ஒண்ணிலே அடிக்கடி ஏதானும் முக்கிய அரசியல் கூட்டங்களெல்லாம் அமோகமா நடத்தறாங்களாமே! அங்கே நீ ஆர்டர் கொடுத்துத் தீட்டப்பட்ட காந்திஜி சித்திரம் கூடப் பிரமாதமாயிருக்குதாமே! இந்த மாதிரி எத்தனையோ புகழ் மாலை உனக்கு!” 

முத்துவின் புகழ்ச்சியில் வள்ளி முக்குளிக்கும் பெருமையைக் கண்டு அதற்கு அணைபோடும் நோக்கத்துடன் சீதா, “இவங்க காந்தியடிகளைப் பத்தி எழுதியிருக்கற நூலெல்லாம் எத்தனை நல்லா விற்குது தெரியுமா? ரொம்பத் தெளிவாகவும் எளிமையாயும் பக்தியோடும் எழுதப்பட்டிருக்குதுன்னு சொல்லி எல்லாருமே பாராட்டறாங்க. பெண்கள் முன்னேற்றம், பெண்களை மதிச்சு நடத்தணும், அப்படிங்கற காந்திஜியின் கொள்கையைப் பத்தி இவர் எழுதின புஸ்தகத்துக்கு நாலாவது எடிஷன்கூடக் கொண்டு வரணும்னு பப்ளிஷர் சொல்லிக்கிட்டிருந்தாரு” என்றவாறு தன் பங்குப் பெருமைக்கு உரிமை நாட்டினாள். 

“அப்படியா! நான் அந்த மாதிரி புஸ்தகமெல்லாம் படிக்கறதில்லே”. வள்ளி அலட்சியமாய்த் தன் அழகிய வாயைக் குவித்தாள். “படிப்பு, நாகரிகம் இதெல்லாம் எனக்கு எப்பவுமே இருந்ததாலே அது ஒரு பெரிய விஷயமாய் எனக்குத் தெரியலே. பாமரப் பெண்களாய் இருக்கிறவங்களுக்கு, பாவம், அதெல்லாம் அவசியம் படிச்சுத் தெரிஞ்சுக்க வேண்டியதுதான்” என்றவாறு சீதாவை நேருக்கு நேராக நிதானமாய்ப் பார்த்தாள். 

சீதாவின் முகம் சிவந்தது. ரமணனும் சட்டென்று வள்ளியை உற்று நோக்கி, “சீதா பாமரப் பெண்ணில்லை மிஸஸ் முத்து! அவளுக்கு எல்லா உரிமைகளும் உண்டு” என்றான்.

சீதாவின் கோபம் இன்னும் தணியவில்லை. முத்துவைப் பார்த்து அவள், “ஏதோ நீங்களும் அவரும் ரொம்பப் பழைய சிநேகிதர்கள் அப்படின்னும் உங்களையும் உங்க சம்சாரத்தையும் நேத்து பீச்சிலே சந்திச்சபோது எங்களை நீங்க இங்கே டிபனுக்கு அழைச்சீங்கன்னும் அவர் சொன்னாரு. அதனாலே தான் முன்னே பின்னே எனக்குப் பழக்கமில்லேன்னாலும் பரவாயில்லேன்னு நான் வந்தேன். உங்களைப் பார்த்தால் நல்லவராய்த்தான் தோணுது. ஆனால் அந்தம்மா என்னை இப்படி அவமானம் செய்ய வேண்டியது அவசியம் தானா?” என்று படபடத்தாள். 

ரமணன் தேள் கொட்டிவிட்டவன் போல் மனைவியின் பக்கம் திரும்பி “நீ எதுக்குப் பேசறே, சீதா? அவன் கிட்ட ஏதானும் சொல்லணும்னா நானே சொல்லிக்கறேன்” என்று ஆத்திரமாய் முணுமுணுத்தான். 

முத்து “மன்னிச்சிடுங்க மிஸஸ் ரமணன்” என்றபோது ரமணனின் முகம் பின்னும் விகாரமாயிற்று. சூழ்நிலையில் படிந்த மௌனம் இனிமையாக இல்லையே என்று முத்து தவித்த நேரத்தில் ஓட்டல் சிப்பந்தி அறைக்குள் நுழைந்து உணவுப் பொருள்களை அவர்கள் முன் இட்டுச் சென்றான். 

“சாப்பிடுங்க எல்லோரும்” என்ற அவனது உபசரிப்பின் நயத்திலும் பிறகு உணவு உட்கொள்ளும் கவனத்திலும் நிலைமை யின் சங்கடம் சிறிது விடுபட்டது. ஆனால் ரமணனின் முகத்தில் சிடுசிடுப்பு மாறவில்லை. மனைவியின் பக்கம் திரும்பி, “சத்தம் போடாமல் உனக்குச் சாப்பிடத் தெரியாதா?” என்று அவன் காரணமின்றிக் கடிந்தகொண்டபோதுதான், சீதா தன்னோடு அப்படி நேராகப் பேசிவிட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை முத்து புரிந்துகொண்டான். மனைவிக்கு எல்லா உரிமையும் உண்டு என்று சொன்னவனின் உண்மையான மனப் பான்மை இப்படியா! எத்தகைய போலி இந்த ரமணன்! முத்துவின் உதட்டோரம் சுழித்துக்கொண்டய ஏளனப் புன்னகை அடுத்த கணமே வற்றிப்போயிற்று. ‘நான் மட்டும் போலியில்லையா?’ 

மகாத்மா மகாத்மா என்று கதைக்கிறானே, அவர் கொள்கைகள் எங்கே? அவன் எங்கே? பொருள் ஈட்டுவதில் குற்றமில்லை தான். ஆனால், ‘செல்வர்களின் செல்வம் அவர்களிடம் ஏழையரின் நலனுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள பொருளாக இருப்பது என்று கூறியிருந்தாரே அந்த மகான்! அவன் தன் செல்வத்தால் எந்த ஏழையின் துயரைக் களைந்தான்? அதுகூடப் போகட்டும் அவன் பொருள் தேடிய வழிகள்! எத்தனை சந்தர்ப்பங்களில் தொழிலில் மோசடி செய்திருக்கிறான்! ஏற்றுமதி செய்த ஏலத்தில் எலிப்புழுக்கை சேர்த்த செயல் அத்தகைய எத்தனையோ சந்தர்ப்பங்களில் ஒன்றுதான். அவ்வாறெல்லாம் நேர்மை தவறியவர்கள் சத்திய வடிவினரின் பெயரில் பொதுக் கட்டடங்கள் கட்டுவதுமட்டும் போலியில்லையா? 

அண்மையில் சிறிதுகாலமாக அவ்வப்போது இதுபோன்ற சுய தலையெடுத்துமுத்துவின் நிம்மதியைக் குலைத்தவாறு இருந்தன. தன் செழிப்பில் மனைவியின் சகிக்கமுடியாத ஆணவத்தில். பதினறு வயகான மானின் கல்லூரிப் பிரவேசத் தில். பன்னிரண்டுவயதுப் பெண்ணின் “டாடி டாடி” என்ற கொஞ்சலில், எல்லாவற்றிலுமே திடீரென்று ஒரு சலிப்பு ஏற்பட்டு விட்டாப்போல் இருந்தது. வயதின் முதிர்ச்சி உட் பார்வையைத் தெளிவாக்கத் தொடங்கியதுமே வாழ்வின் வசதி களையெல்லாம் தாண்டிக்கொண்டு அடியிலிருந்து இதயத்தின் ஒருபாகம் இலேசான புரட்சியில் தலைநீட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. 


அன்று பாபூஜியின் காந்தத்தால் இழுக்கப்பட்ட மூன்று நண்பர்களில் தன் நிலை இப்படி; ரமணன் இப்படி கோபி? கோபி எங்கே இருக்கிறானென்றே தெரியவில்லையே? கல்வி முடியும் வரையில் தான் அவனுடன் தொடர்பு இருந்தது. பிறகு அவன் அவர்கள் வட்டாரத்திலிருந்தே மறைந்து விட்டான். முத்துவும் ரமணனும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளாவிட்டாலும் சில ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் முத்து வடக்கிலிருந்து சென்னைக்கு விஜயம் செய்யும் நேரமும் ரமணன் தன் அலுவலக வேலையை ஒட்டி வெளியூர் செல்லாமல் சென்னையில் தங்கியிருக் கும் நேரமும் கூடும்போது-பார்த்துக்கொள்ள வாய்ப்புக் கிட்டும். மேலும் முத்து ஒரு வெற்றிகரமான தொழில் நிபுணன். ரமணன் ஒரு புகழ்பெற்ற எழுத்துச் சிற்பி. ஒருவரைப்பற்றிய செய்திகள் மற்றவர் காதில் விழ இவையும் காரணங்களாய் அமைந்தன. ஆகவே அந்தப் பிணைப்பு அறவில்லை: ஆனால் கோபியின் தொடர்பு தொடக்கத்திலேயே நின்றுபோய்விட்டது. நாட்டின் பெருத்த பரப்பு அவனை விழுங்கிக் கொண்டு விட்டது. அவன் சுவடே தெரியவில்லை. மகாத்மாவின் கொள்கைகளைப் பரப்ப ரமணன் நூல்கள் எழுதியது போலவோ. முத்து அவரைப் பற்றிய சொற்பொழிவுகளுடன் அவர் பெயரில் மன்றங்கள் எழுப் பியது போலவோ, கோபி அந்த மகானிடம் தனக்கிருந்த பக்தி யின் நினைவாக எதுவும் செய்ததாகத் கெரியவில்லை. அப்படி அவன் அவருக்காக ஏகேனும் முறையில் பிரசாரம் செய்திருந் தால் அதுபற்றிய செய்தி எட்டாமலேயா இருந்திருக்கும்? 

அவன் மெதுவாக எண்ணங்களினின்று தன்னை விடுவித்துக் கொண்டு “என்ன, ஒண்ணும் பேசாமலே இருக்கிரே, ரமணா!” என்றான். 

“என்னத்தைப் பேசறதாம்?” 

“காந்திஜியின் தத்துவங்களில் உனக்கு ரொம்பப்பிடிச்சது எது?” 

“பெண்கள் முன்னேற்றம்தான்.” 

“அவர் நினைவுக்கு நீ செய்யற நல்ல பணி இந்த மாதிரி புஸ்தகங்கள் நீ எழுதறது. ஏதாவது சொல்லேன் அந்தப் புஸ்தகங்களைப் பத்தித்தான்!”

“அதை ஏன் கேக்கறே!” ரமணன் திடீரென்று ஆவேசமாய்ப் பேசினான். “அந்த பப்ளிஷர் இருக்கானே, ஒண்ணாம் நம்பர் ப்ராட். சரியாகவே பணம் கொடுக்கறதில்லை. புஸ்தகம் எழுதறவன் என்ன, தானமா செய்யறான்? காந்திஜி பேரைச் சொல்றதிலே எனக்குப் புகழ் கிடைக்குது, இல்லேன்னு சொல்லலே. ஆனால் அது மட்டும் போதுமா? புகழும்தான் வேணும், பணமும்தான் வேணும். இரண்டுக்காகவும்தான் நான் எழுதறேன். என்னை அந்த ஆள் மோசம் செய்யறாப்பலே நானும் அவனுக்குச் செய்யப்போறேன். அடுத்ததாக என்னை அவன் புஸ்தகம் எழுதித் தரச் சொல்றப்போ நான் எழுத மாட்டேன். இவனுக்கு எழுதித்தரதைவிட ஒரு சினிமாவுக்குக் கதை எழுதிக் கொடுத்தாலும் ஆயிரக் கணக்கில் வாரிக் குவிக்கலாமே! ஏதோ காந்திஜி பேரைச் சொன்னா நமக்கு ஒரு மதிப்பாச்சேன்னு பார்த்தால்…” 

‘நம்ப யாருக்குமே அந்தப் பெயரைச் சொல்லத் தகுதி இல்லேடா!’ என்று கத்தவேண்டும் போலிருந்தது முத்துவுக்கு. தன் நாடே ஆத்மாவை இழந்துவிட்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. இங்கு விடுதலைப் போரை முன்னின்று நடத்தியவர் ஒரு மகாத்மா. அதிலிருந்தே அந்தப் பேரின் இயல்பு புரியவில்லையா? சாத்விக வீரமும் சத்தியத்தின் வலிமையும் அகிம்சையின் ஆண்மையும் நேர்மையான லட்சியங்களின் அஞ்சாமையும் புனிதர்களின் தியாகமும் படைகளாய் இலங்கிச் சாதித்த வெற்றி நம்முடையது. இப்போதெல்லாம் நடை பெறும் மறியல், வேலை நிறுத்தம், சத்தியாகிரகம், ஒத்துழை யாமை இவற்றுக்கும் முன்பு நடந்தவைக்கும் சாரத்திலே எத்தனை வேறுபாடு ! இப்போது இவற்றுக்கெல்லாம் அடிப் படை நோக்கம் சுயநலம் தான். முன்போ? அந்த மகான் உண்ணாவிரதம் மேற்கொண்ட போதெல்லாம் அதன் நோக்கம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதும், நிகழும் குற்றங் குறைகளுக்கு ஒரு கழுவாயாக நோன்பு வடிவமாய் இறங்குவதும் தான். இப்போது எங்கும் சுயநலம் மலிந்த சூழ்நிலையில் முக்கிய நாட்களிலும் கூட்டங்களிலும் சொற்பொழிவுகளில் அடிபடும் ஒரு பெயர் மட்டுமாக நின்றுவிட்டாரே! பெரும் பான்மையோர் அவர் கொள்கைகளைக் காற்றில் விட்டுவிட்டார் “களே ! அவர்கள் யாவரும் அவருக்கு வாய்ப்பூஜை செய்வதை நிறுத்திவிட்டு ஒழுக்கத்தில் அவர் தத்துவங்களுக்கு உயிரளித்தால் இந்தப் பாரத மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு காந்தியாகி விடமாட்டார்களா! ஏனெனில் அண்ணலே கூறி யிருக்கிறார் : ‘நான் ஏதும் செயற்கரியது செய்துவிடவில்லை: நான்சாதித்தது ஒவ்வொருவரும் சாதிக்கக் கூடியதுதான்.” 

ரமணன் இப்போதும் தன் மனைவியை நோக்கிச் சினப் பார்வையை அவ்வப்போது வீசிக் கொண்டிருந்தான். அற்ப விஷயத்துக்கெல்லாம் வெளியிடும் பொறாமையினால் மனைவியை அவமதிக்கும் இவன் மகாத்மாவின் பெண் முன்னேற்றம் பற்றிய கருத்துக்களை விரும்பி எழு துகிறானாம் ! என்ன கேலி இது ! பெண்ணுக்கு அவர் எத்தகைய சுதந்திரமெல்லாம் கொடுக்க வேண்டுமென்றார்! சொந்த வாழ்வில் மட்டுமன்றி நாட்டு விடு தலைப் போராட்டத்திலும் ஆணுக்கு நிகராய் அவள் இலங்க வேண்டுமென்றார். அவளுக்குக் கல்வி அவசியமென்றார். குழந்தைகளின் மனத்தைப் பக்குப்படுத்திப் போதிப்பதிலே அவளுக்குத்தான் முக்கிய பங்கு என்றார். அவ்வாறு பெண்மை யில் தாய்மைக்கு மதிப்பளித்துப் போற்றியவர், நாட்டுப் பிரிவினையை அடுத்து நிகழ்ந்த வகுப்பு வெறியாட்டத்தின் புயலிலே கற்பிழக்கும் கொடுமைக்கு ஆளான பெண்களின் விஷயத்தில் எத்தகைய கம்பீரமான, மனிதாபிமானக் கருத்தை முழங்கினார் ! 

அந்த நினைவிலேயே அந்தப் பழைய பேய் வெறியும் அதற் குப் பலியாகி அலமந்து நின்ற பெண் வடிவங்களும் அவன் கண் முன்னே காட்சியாய் எழுந்து நின்றன. கூட்டம் கூட்டமாய் அந்தப் பெண்கள் மரத்துவிட்ட உயிருக்குச் சாட்சியாய் பேய் கண்டவை போன்ற விழிகள் எதிரே நிலைகுத்தி வெறித்து நோக்கும் தோற்றம். இனி இழக்க எதுவுமே மிச்சமில்லை என்னும் கடைநிலையின் பரிபூரணத் துன்பம் நிராசையாகக் கவிந்துகொண்டுவிட்ட சாம்பிய கோலம். அவர்களில் ஒரு பெண்-அவள் பெயரை கூடப் பிறகு யாரோ சொன்னார்களே, என்னஅது? ஆம்,  மிருணாளினி. தீடீரென்று உணர்ச்சித் துடிப்பின் வேகத்தில் அந்தப் பெயர்கூட மின்வெட்டுப்போல் நினைவுக்கு வந்துவிட்டது-அந்தப் பெண் அதிர்ச்சியில் மரத்துப் போன நிலையில், அவலத்துக்கு ஒரு கண்ணாடி போல, வெறும் மனிதச் சிதிலமாகப் பிரமித்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்த வாறு அவனும் மற்றவர்களும் பயங்கரத்தில் உறைந்துபோன இதயத்தோடு கல்லாய் நின்ற நினைவு இப்போது சாணை தீட்டிய கத்திபோன்ற கூரிய தெளிவுடன் அவனுள் எழுந்தது.

அத்தகைய அபலையரின் சார்பில் அந்தக் கருணாமூர்த்தி எழுப்பிய நியாயத்தின் குரலும் இப்போது அவன் கா துகளில் ஒலித்தது: 

“அவர்களுடைய குற்றம் இதில் ஏதும் இல்லை. அவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள். இவ்வாறு பலியான பெண்களை மணந்து கொள்ள ளைஞர்கள் முன்வர வேண்டும்.” 

இவன்! இந்த ரமணன்! மனைவி இன்னொருவனுடன் வலுவில் பேசிவிட்டாள் என்பதற்காகச் சினந்து நோக்கும் இந்தக் குறுகியவன்! இவனா எழுதுகிறான் அவருடைய மாதர் முன்னேற்றக் கொள்கையைப் பற்றி! 

போலி, போலி… ரமணன் சின்னமிட்ட போலித்தன்மை சமூகம் முழுவதிலுமே புரையோடியிருக்கிறது. தான் மட்டும் என்ன? காந்தியடிகளினால் ஈர்க்கப்பட்ட அந்த மாணவ இளைஞ னின் ஒளிமிக்க விழிகள் என்னவாயின ? அந்த உத்தமருக்கு ஆட்பட்ட உள்ளம் வெறும் கணநேரத் துடிப்பாக, இளமை ஆர்வத்தின் ஒரு தெறிப்பு மட்டுமாக, மாண்டு போய்விட வில்லையா? அந்தத்தூய லட்சியங்களையெல்லாம் மறந்து அவன் உலக வாழ்வின் புற வெற்றிகளுக்குத்தானே தன்னைத் தந்து கொண்டுவிட்டான்? அதில் உண்மைச்சத்து இல்லாததால்தானே இப்போது வாழ்வில் இந்த அலுப்பும் தோல்வி புணர்வும். 

அண்ணல் கூறியிருக்கிறாரல்லவா? “நேர்மை, சத்தியம் போன்றவைகளை ஏதோ அரிய தெய்வீக குணங்களென்று கருத வேண்டாம். அவை மனிதப் பண்புகள் தாம். உண்மையான மனிதனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய குணங்கள் தாம்”. 

அதாவது, அவை இருப்பது தனிப்பட்ட பெருமையல்ல. அவை இல்லாதவன் தான் விலங்கினம். அபப்டிப் பார்த்தால் அவன் மனிதனாகவே வாழவில்லை. 

தாங்க இயலாமல் மூச்சு முட்டுவதுபோன்ற உணர்வில் அவன் சட்டென்று எழுந்து நின்றான். “எல்லாரும் சாப்பிட்டாயிடுச் சில்லே? போகலாமா? ரமணா, நீயும் உன் மிஸஸ்ஸும் இப்படி எங்ககூட வீட்டுக்கு வந்துட்டுப் போங்களேன்” என்று. சீதாவின் பக்கம் கவனமாய் முதுகைத் திருப்பிக்கொண்டு கேட்டான். 

வள்ளியின் முகம் சிணுங்கியது. இவர்களும் என்னதான் வசதியுள்ளவர்கள் என்றாலும் தம்மைப்போல் லட்சாதிபதி அல்லவே! எவ்வளவுக்கென்று ஒட்டிக்கொள்வது?

“அவங்களுக்கு எத்தனை வேலையோ என்னமோ பாவம்! நம்ம பங்களாவுக்கு வர நேரமிருக்குமா?” என்றாள். சீதாவுக்குச் சுருக்கென்றது. 

“ஆமாம். நாங்க என்ன வேலையத்தவங்களா? அவர் இன்னிக்கு ஒரு முழு அத்தியாயம் எழுதியாகணும். நாங்க நேரே வீட்டுக்குப் போயிடறோம். மிஸ்டர் முத்து கிருஷ்ணன் உங்க அழைப்புக்கு நன்றி” என்று சீதா அவனை நோக்கிக் கரங் குவித்தாள். 

ரமணனின் முகம் தழலாய்ச் சிவந்துவிட்டது. இவள் என்ன தம்மிருவருக்காகவும் முடிவு செய்து ஓர் ஆண்பிள்ளையிடம் சொல்வது என்ற நினைப்போ? 

“நீ பேசாமலிருக்கமாட்டே, சீதா? நாங்க உன் வீட்டுக்கு வரோம் முத்து. நாம் ரெண்டுபேரும் எப்பவோ சந்திக்கறோம். நிறையத்தான் பேசுவமே!” மனைவி மீது தன் அதிகாரத்தை நாட்டிவிட்ட பெருமையில் அவன் வேண்டுமென்றே சீதாவைப் பார்த்துச் சிரித்தான். 

முத்துவின் பளபளக்கும் அம்பாஸிடர் வண்டி நால்வரையும் சுமந்துகொண்டு மௌண்ட் ரோட்டிலிருந்து தியாகராய நகருக்குப் பாய்ந்தது. 

அழகிய முகப்பு வாசல் அமைந்த நாகரிகமான கட்டடத் தின் முன் கார் நின்றதுமே உள்ளேயிருந்து குட்டைப் பாவாடை யும் கழுத்தளவு முடியுமாக ஒரு சிறுமி ஒடிவந்து “டாடி, வந்து பாரேன், அண்ணா கிட்ட இன்னிக்கு ஒரு காக்காய் மாட்டிக் கிட்டுது!” என்று கிளர்ச்சி வெடிக்கும் குரலில் கூவி முத்துவின் கையைப் பற்றி இழுத்துச் சென்றாள்.

பின்புறத் தோட்டத்தில் செடிகளுக்கிடையே ஒரு காகம் செத்து விழுந்திருந்தது. கையில் துப்பாக்கியுடன் அதைப் பெருமிதத்துடன் பார்த்தவாறு மண்டியிட்டிருந்தான் முத்துவின் மகன், மேலே கூட்டமாய்க் காகங்கள் பெருத்த இரைச்சலுடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. 

“காக்காயை ஷுட் செய்துட்டேன்! செத்தே போச்சு டாடி! என் குறி இப்போ எவ்வளவு நல்லா ஆயிட்டுது தெரியுமா? இன்னிக்குத்தான் என் முதல் பெரிய ஸக்ஸஸ்!” என்று பையன் தந்தையைக் கண்டதும் கும்மாளமிட்டான். 

முத்துவின் உடல் கூசிச் சுருங்கியது. மகன் ஆசைப்பட்டதற்காக ‘ஏர் கன்’ வாங்கித் தந்தவன் அவன்தான். இப்போது அந்தக் குறி அவனுள்ளேயே பாய்ந்து விட்டாப்போல் உயிர் துடித்தது. 

“பையன் கெட்டிக்காரனாயிருக்கானே!” என்று ரமணன் பாராட்டினான். 

“அதிருக்கட்டும் ரமணா, உன் குழந்தைகளை நான் அதிகம் பார்த்ததே இல்லையே, நாளைக்குக் கூட்டிக்கிட்டு வரியா?” என்று பேச்சை மாற்றிய முத்து மகனைப் பார்த்து, “நீ உள்ளே போ. அப்புறமா உன்னோடு பேசிக்கறேன்” என்று கடுகடுத்தான். 

“அதுக்கென்ன முத்து, கூட்டிக்கிட்டு வரேன். என் இரண்டாவது பயல் உன் மகன்கிட்டேயிருந்து இந்தச் சாமர்த்திய மெல்லாம் கற்றுக்கட்டுமே”

“வேணாம், வேணாம். சின்னக் குழந்தைக்கு இதெல்லாம் எதுக்கு? பத்து வயதுதானே ஆகுது அவனுக்கு? நல்லாப் படிக்கறானா?”

“ஏதோ, பேருக்குத்தான்!” 

“தவறாமல் பாஸ் பண்ணிகிட்டு வரானில்லே?” 

“பாஸ் பண்றதுக்குப் படிக்கணுமா என்ன?” ரமணன் அவனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான். அதன் பொருள் புரிந்தபோது முத்துவின் நெஞ்சம் பின்னும் சுருங்கிக் கொண்டது. 

எல்லோரும் ஹாலில் அமர்ந்து உரையாடிய போதெல் லாம் தமது பகட்டான உடையணிந்த வடிவங்களிடையே அரையில் உடுத்த ஒரே ஆடையுடன் ஓர் எளிய முதிய மோகன உருவம் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த படத்தி லிருந்து தங்களை மூக்குக்கண்ணாடிக்குப் பின்புறமிருந்து பார்த்த வாறு தேனூற்றாய்ப் புன்னகைத்துக் கொண்டிருந்த காட்சியை அவனால் தாங்க முடியவில்லை. அந்தப் புன்னகையில் கண்டனம் இல்லை. எதிராளியையே வெறுக்காத அன்பின் மந்தகாசம் அல்லவா? அது அவர்களுக்காகப் பரிதாபம் தான் காட்டியது. 

“இதைவிடப் பெரிசாய்க் காந்திஜியின் படம் நான் என் வீட்டில் மாட்டி வச்சிருக்கேன்” என்றான் ரமணன். 

முத்துவின் உடல் எரிந்தது. அகிம்சையாளரின் பெயரில் கட்டடங்கள் எழுப்பிவிட்டு மகனுக்குத் துப்பாக்கி வாங்கித் தருபவனும், சத்தியத்தின் பூஜாரியைப்பற்றி நூல்கள் வரைந்து விட்டு மகனின் தேர்வுக்காக லஞ்சமளிப்பவனும் கூடும் இடத்தில் அந்த மகான் ஏன் நிற்கிறார்? போலிகளிடையே அவருக்கு என்ன வேலை? அவர்களிடையே அவர் நின்றால், எளியவர் துயர்துடைக் கும் பொருட்டுப் பகை நடுவில் அஞ்சாது நடந்த மெலிந்த பொற்பாதங்கள் கறைபடாவோ? 

இவ்வாறு பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமின்றி வாழும் தம்மிருவரைவிடப் பெயரைப் போலியாக உபயோகிக்காமல் ஒரேயடியாய் அவரை மறந்துபோன கோபி எத்தனையோ மேல். 

திடீரென்று அவன் கேட்டான். “நம் ஸெட்டில் மூணு பேர் இருந்தோம். நீயும் நானும் தொடர்பு வச்சிக்கிட்டிருக்கோம். ஆனால் கோபி என்ன ஆனான்னே தெரியலை பார்த்தியா?” 

“தெரியாம என்ன?” 

அவன் அதிர்ந்து விட்டான். ரமணணுக்குத் தெரியுமா கோபியின் தற்போதைய விவரங்கள்? பின்னே இத்தனை பேச்சில் ஒருமுறை கூட அது பற்றிக் குறிப்பிடவில்லையே? 

“உனக்குத் தெரியுமா ரமணா?” 

“தெரியுமே!” 

“எனக்கு நீ சொல்லவே இல்லையே! நம்ம ரெண்டுபேருக்குமே அவன் தொடர்பு விட்டுப் போச்சுன்னில்லே நினைச்சு கிட்டிருந்தேன்!” 

“எனக்குக் கூட இவ்வளவு காலம்வரை தெரியாது. இப்போ தான் ஒரு மாசம் முந்தி தற்செயலாக அவனைப் பார்த்தேன்”. 

“இந்த ஊரிலேயா!” 

“ஆமாம்.” 

“என்ன செய்யறான்? எப்படி இருக்கான்?” 

“அந்த நாளில் இருந்த மாதிரியே சோனியாய்த்தான் இருக்கான். வாழ்க்கையிலே ரொம்ப முன்னேறலேன்னு தோணுது. ஏதோ சாதாரண வேலைதான் பார்க்கறான். அது என்னன்னு கூடச் சொன்னான், எனக்கு மறந்துபோச்சு. தலை யெல்லாம் ஒரேயடியாய் நரைச்சு அடையாளமே தெரியாம மாறிட்டான்.” 

“நீ பின்னே எப்படித் தெரிஞ்சுகிட்டே?” 

“அவன்தான் என்னை அடையாளம் கண்டுகிட்டுக் கூப்பிட்டு விசாரிச்சான்”. 

“அவன் வீடு எங்கேன்னு சொன்னானா?”

“ம்” 

“அதெங்கே!” ரமணன் உதட்டைப் பிதுக்கினான். “எனக்கு நேரமே கிடைக்கலே. ” 

தான் சந்திக்கச் சொல்லும் அளவுக்குக் கோபியின் வாழ்க்கைத் தரம் அமையவில்லை என்பது ரமணன் கருத்துப் போலும். அதைத் தெரிந்துகொண்டதாய்க் காட்டிக்கொள்ளாமல் முத்து “இப்போ அவனைப் போய்ப் பார்க்கலாம் வரயா?” என்றான். 

“இப்போவா? எனக்கு வேலை இருக்கே. இன்னொரு நாள் வேணும்னா……” 

“டோண்ட் பி.எ. வெட்பிளாங் கெட். எனக்கு எத்தனை நாளா கோபியை மறுபடியும் சந்திக்கணும்னு ஆசை தெரியுமா? ஊட்டியிலேருந்து திரும்பியதும் நான் ஊருக்குக் கிளம்பிடுவேன். தறசெயலாய் இப்போ நாம் மூணுபேரும் ஒரே ஊரில் இருக்கோம். சும்மா வா போகலாம்.” 

ரமணனால் மேலும் மறுக்க முடியவில்லை. 

இரு பெண்களும் தம் கணவரின் நண்பனைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டாததால் வள்ளியை அங்கேயே விட்டு விட்டு, சீதாவை அவள் வீட்டில் இறக்கிவிட்டு, முத்து, ரமணனுடன் அம்பாஸிடரை அயனாவரத்துக்கு ஓட்டிச் சென்றான். 

மாலைப் பொன் கருக்கத் தொடங்கும் நேரமாகி விட்டதே, கோபி சினிமாவுக்கோ கடற்கரைக்கோ போயிருப்பானோ என்று சுயவழக்கத்தின் சுவட்டில் இயல்பாய் எழுந்துவிட்ட அவன் எண்ணம் முற்றுப்பெறு முன்பே வாசலில் ஒரு வடிவம் வந்து நின்றது. 

சிறிது நேர மௌன வெறிப்புக்குப் பிறகு, எதிரேயிருந்த வனின் முகமெங்கும் புன்முறுவலின் அலை ஒன்று படர்ந்தது. 

“முத்து! முத்துதானே? வா வா! என்ன ஆச்சரியம்! எத்தனை காலமாச்சு நாம் சந்தித்து! சொப்பனம் மாதிரி இருக்குடா! நிஜமாகவா நீ வந்திருக்கே, முத்து?” கோபி முன்னால் விரைந்து வந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டான். 

“நான் அன்னிக்கு ரமணனைச் சந்திச்ச வேளை நல்லவேளை தான்! பழையநாள் சிநேகிதன்களில் ஒருவனைப் பார்த்த ஒரு மாசத்திலேயே இன்னொருவனையும் பார்க்கற சந்தர்ப்பம்னா சும்மாவா? வா, வா! வா, ரமணா!” 

மகிழ்ச்சியுடன் தம்மை வரவேற்று வீட்டினுள் அழைத்து அமரச்செய்த நண்பனை முத்து உன்னிப்பாகப் பார்த்தான். ரமணன் சொல்லியிருந்தது உண்மைதான். கோபி அடையாளம் தெரியாமல் தான் மாறியிருந்தான். தம் மூவருக்கும் ஒரே வயதுதானென்றாலும் வசதியின் காரணமாய்த் தாமிருவரும் இளமையின்மீதே இளைப்பாறியிருக்க, கோபி மட்டும் கிழவனாகிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் பேச்சிலும் பழக்கத்திலும் பழைய நட்பு அணி செய்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவனைச் சந்தித்ததில் அவனுடைய நீரோட்டமான சரளத் தன்மை தனிப்பட்ட ஒரு மகிழ்ச்சியைத் தந்தது. 

“நீ எப்படி இருக்கே கோபி ? உன்னை ஆயிரம் கேள்விகள் கேட்கணும் போல இருக்குடா, ஆனால் ஒண்ணுமே கேட்கத் தோணலே ! உன்னைப்பத்தி எல்லாம் சொல்லு”. 

கோபி விவரித்தான். சராசரியான, வியப்புறுத்தும் தன்மை எதுவுமற்ற எளிய வாழ்வு அவனுடையது. பாரதத்தின் கோடிக் கணக்கான மாந்தருள் அவனும் ஒருவன், அவ்வளவுதான். 

“முத்து ஒரு பெரிய பிஸினஸ்மேன், கொள்ளைப் பணக்காரன், தெரியுமா?” என்றான் ரமணன். 

“அப்படியா! எனக்கு யாரைப்பத்தியுமே தெரியாது. நீ ஒரு புகழ்பெற்ற எழுத்தாளன்னு கூட அன்னிக்கு நீ சொல்ற வரைக்கும் எனக்குத் தெரியாதுன்னா பாரேன்!” என்று கூறித் தன் அறியாமைக்குத் தானே சிரித்துக்கொண்டான் கோபி. 

வெகுநேரம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் மகாத்மாவைப் பற்றிய ஒரு சொல் கூட கோபியின் வாயிலிருந்து வரவில்லை. அந்த அறையில் அவருடைய ஒரு படம் கூட மாட்டப்படவில்லை என்பதையும் முத்து கவனித்தான். 

“உங்க ரெண்டுபேருக்கும் சாப்பிட ஏதாவது…?” 

“சாப்பிட்டுத்தான் வந்தோம். கொஞ்சம் தண்ணி மட்டும் கொடு, தாகமாயிருக்கு” என்றான் முத்து. 

கோபி எழுந்து உள்ளே சென்றுவிட்டு வந்தான். “கொண்டு வரச்சொல்லியிருக்கேன்… அப்புறம் என்ன சங்கதி? டே, இன்னிக்கு உங்க ரெண்டு பேரையும் இப்படி என் வீட்டில் வரவேற்பேன்னு நான் நினைக்கவேயில்லைடா!” 

நண்பனைப் பார்த்து விரிந்த முத்துவின் புன்னகை சட்டென்று நின்றது. உள்ளேயிருந்து வந்த ஒரு பெண் தன் கையிலிருந்த நீர் நிறைந்த தம்ளரை அவர்கள் முன் மேஜை மேல் வைத்தாள். 

“இவள்தான் மிருணாளினி, என் மனைவி” என்றான் கோபி. 

முத்து பேச இயலாமல் அப் பெண்ணைப் பார்த்துக்கொண்டே கல்லாய் அமர்ந்துவிட்டான். தலைமுடி சற்று வெளுத்திருந்ததே தவிர அவள் முகம் மாறவில்லை. அந்த முகத்தை மறக்கமுடியுமா? அவலத்துக்கு ஒரு கண்ணாடிபோல அவள் பிரமித்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவாறு இதயம் பயங்கரத்தில் உறைந்துபோனவனாகத் தான் நின்றிருந்ததைத்தான் மறக்க முடியுமா? 

தன்னையும் ரமணனையும் போன்றோரின் உலகத்தை மகாத் தான தரிசனம் ஒன்று உலுக்கிப் பிளந்துவிட்ட அதிர்ச்சியில் அவன் வெறும் கண்ணாய், மனமாய், உணர்ச்சியாய், உயிராய், நோக்கியவாறிருந்தான். 

முத்துவின் பார்வையில் இதயம் சுரந்து வந்து ததும்பியது. துடிக்கும் இதழ்களுடன் தன் விழிகளை அவளிடமிருந்து அகற்றிக் கோபியின் மேல் பதித்தான். 

எழுந்து அப்படியே அவன் காலில் விழவேண்டும்போலிருந்தது. இருகரங்களாலும் அவனைத் தழுவிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அவன் மார்பில் புதைத்துக்கொண்டு குழந்தை போல் விம்மியழுது ஆறுதலுற வேண்டும் போலிருந்தது. ‘என் நாட்டின் ஆத்மா அழியவில்லை!’ என்று எக்காளமிடவேண்டும் போல் இருந்தது. 

கோபி… கோபி… 

அவன் மகாத்மாவைப் பற்றி எழுதவில்லை, சொற்பொழிவுகள் நிகழ்த்தவில்லை, பேச்சில் கூட அவரைக் குறிப்பிடவில்லை. 

இன்முகத்துடன் கம்பீரமாய் அருகில் மிருணாளினியுடன் வாய்பேசாது நின்றுகொண்டுதான் இருந்தான். 

ஒளி “என்னைப் பார்” என்று சொல்வதில்லை. அது உதிக்கிறது. நாம் பார்க்கிறோம், நம் பார்வை தெளிவுறுகிறது. 

அதன் உதயமே அதன் விளக்கம். 

அந்த விளக்கத்தில், திடீரென்று மகாத்மாவின் அருட் புன்னகை அங்கு உயிர்கொண்டு பளீரிடுவதை உணர்ந்து உள்ளம் சிலிர்த்தபோது முத்துவும் பேசவில்லை. 

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *