தோட்டத்தின் நடுவில் இரு மரங்கள்
கதையாசிரியர்: ஷாராஜ்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி புனைவு 
கதைப்பதிவு: September 13, 2025
பார்வையிட்டோர்: 4,908

ஏவாளுக்குத் தனிமை சலித்தது. ஆதாம், ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே உலாத்தப் போயிருந்தான். அப்படி, ஏதேனை விட்டு வெளியே போகலாமா என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. தேவனாகிய கர்த்தர் அதை விலக்கியிருக்கவில்லை. அதனால் அவன் ஏதேனுக்கு வெளியே உலகம் எப்படி இருக்கிறது என்று பார்த்து வருவதற்காகச் சென்றிருந்தான்.
அவன் போகும்போது, “நானும் வருகிறேன்” என்றாள் ஏவாள்.
“கடவுள் எப்போது வேண்டுமானாலும் வருவாராயிற்றே! அவர் வரும்போது நம்மில் ஒருவராவது இருக்க வேண்டும். எனவே, நீ இங்கேயே இரு. நான் வந்த பிறகு நீ வெளியே செல்லலாம்” என்றுவிட்டுப் போயிருந்தான்.
ஏதேனில் உள்ள ப்ரம்மாண்ட மரமான மெத்யூஸ்லாவின் அடிப் பகுதியில் உள்ள குகை போன்ற பெரிய பொந்துதான் ஆதாம் தம்பதியின் வசிப்பிடம். கீழே காய்ந்த புற்களைப் பரப்பி, மெத்து மெத்தென ஆக்கி, அமரவும் படுக்கவும் சுகமானதாக ஆக்கிக்கொண்டிருந்தனர். அந்த அடிமரப் பொந்தினுள் அமர்ந்திருந்த ஏவாள், அலுப்பைப் போக்கிக்கொள்ள அங்கிருந்து வெளியேறி ஏதேனுக்குள் உலாத்தலானாள்.
தென்றல் இதமாக வீசி அவளின் உடலைத் தழுவி சுகமளித்தது. மலர்களின் நறுமணம் அவளது நாசிக்கும், பறவைகளின் கானங்கள் காதுகளுக்கும் இனிமையளித்தன. அங்கே உள்ள விதவிதமான விலங்குகள், சிறு பிராணிகள், பல வண்ணப் பறவைகள், புழு பூச்சிகள், அழகிய மலர்கள் யாவும் கண்களுக்கு விருந்தளித்தன. அப்போது பசியே இல்லாவிட்டாலும், கொடியில் கொத்துக் கொத்தாகப் பழுத்திருந்த சிறு கனிகள் ஒன்றிரண்டைப் பறித்து வாயில் போட்டுச் சுவைத்தாள். புளிப்பும் இனிப்பும் கலந்த இன்சுவை, நாக்கைச் சப்புக்கொட்டச் செய்தது. விலங்குகள், பிராணிகள், பறவைகள், புழு பூச்சிகள் யாவும் ஜோடி ஜோடியாகத் திரிந்துகொண்டிருந்தன. சில விலங்குத் தம்பதிகளுடன் அவற்றின் குட்டிகளும், சில பறவைத் தம்பதிகளுடன் அவற்றின் குஞ்சுகளும் இருந்தன. சில விலங்கு, பறவைத் தம்பதிகள் கலவியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அவை என்ன செய்கின்றன, எதற்காக அப்படிச் செய்கின்றன என்பது ஏவாளுக்குத் தெரியவில்லை. ஆனால், அதைச் செய்வதால் அவை இன்பம் அடைகின்றன என்பது அவற்றின் மகிழ்ச்சி வெளிப்பாடுகளால் தெரிந்தது.
டைமெட்ரோடன்கள் புல்வெளியில் உற்சாகமாக ஓடிக்கொண்டிருந்தன. மேமத்கள் பைனுஸ் லாங்கீவா மரக் கிளையைத் துதிக்கையால் இழுத்து ஒடித்து இலைகளை ப்ரம்மாண்ட வாயில் திணித்துக்கொண்டிருந்தன. அவற்றின் பிளிறல் சத்தம் அவளைக் காது பொத்தச் செய்தது. தன் போக்கில் நடந்துகொண்டிருந்தவள் தோட்டத்தின் மத்தியப் பகுதியை நெருங்கிவிட்டதை உணர்ந்து நின்றாள். விலக்கப்பட்ட கனி மரம் மீது அவளது பார்வை நிலைத்தது.
ப்ரபஞ்சம் முழுதையும் படைத்த கர்த்தர், பரலோக ராஜ்ஜியத்தைத் தான் ஆண்டுகொள்வதாகக் கூறி, பூமியை இவர்கள் ஆண்டுகொள்ளும் உரிமையை அளித்திருந்தார். இவர்கள் இருவரும் வசிப்பதற்காகவே இந்த ஏதேன் தோட்டத்தை உருவாக்கினார். சுற்றியிலும் பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களும், செடி கொடிகளும் உண்டாயின. தோட்டத்தின் நடுவில் ஜீவ விருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணினார். ஆனால், ஆதாமிடம், “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டிருந்தார்.
அவர் போன பிறகு ஏவாள் அலுத்துக்கொண்டாள். “கர்த்தர் என்ன மடையரா? நமக்காகத்தானே இந்தத் தோட்டத்தை உருவாக்கினார்? அந்த மரத்தின் கனியைப் புசித்தால் நாம் இறந்துவிடுவோம் எனில், பிறகு எதற்கு அதை இங்கே முளைக்கப் பண்ணினார்? அதுவும், தோட்டத்தின் நட்ட நடுவில்?”
“அவர் கர்த்தர். அவர்தான் அனைத்தையும், நம்மையும் படைத்தார். அதனால் என்ன மடத்தனமும், எந்தத் தவறுகளும் செய்ய அவருக்கு உரிமையுண்டு. அவரது கட்டளைக்கு நாம் பணிந்தாக வேண்டும்.” ஆதாம் விசுவாசத்தோடும், கீழ்ப்படிதலோடும் சொன்னான்.
அவன் அந்த மரத்தின் பக்கமே போக மாட்டான். அதைப் பற்றி நினைக்கவும் மாட்டான். ஆனால், ஏவாளுக்கு எப்போதும் அந்த மரத்தின் மீதே பார்வை. தோட்டத்தின் நடுவில் இருந்ததால் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடியது அது. தற்செயலாக பார்வையில் படுவது இயல்பு. தவிர, அதன் கனிகளை உண்ணக் கூடாது என கர்த்தர் விலக்கியதால், அதன் மீது அவளுக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. அதன் கனிகள் நீல நிறத்துடன், அழகாகவும் இருந்தன. அதைப் புசித்தால் இறந்துவிடுவோம் என்பதால் அந்த விஷக் கனியைப் பார்த்தாலே அவளுக்கு பயம் வந்துவிடும். எனினும், அது அவளது கண்களைக் கவர்ந்து இழுத்துக்கொண்டிருந்தது. அதன் ஆபத்து, திகிலையும் கவர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
மரணம் தரக் கூடிய அந்த விஷக் கனி மரத்தைக் கர்த்தர் ஏன் அங்கே நட்டார் என்கிற கேள்வி அவளுக்கு அடிக்கடி எழும். ஆதாமிடம் அது பற்றிப் பேசவும் செய்வாள். “கர்த்தரிடமே கேட்டுப் பார்க்கலாமா?” என்றபோது அவன் மறுத்துவிட்டான்.
“கர்த்தர் சொன்னதைச் செய்யவும், அவரது கேள்விகளுக்கு பதில் சொல்லவும்தான் நமக்கு உரிமை. கேள்வி கேட்கும் அதிகாரம் நமக்கு இல்லை.”
ஏவாளுக்கு அதில் உடன்பாடில்லை எனினும் மறுக்கவில்லை.
“சரி, அது நன்மை – தீமை அறியத்தக்க மரமாயிற்றே! நன்மை – தீமை என்றால் என்ன?”
“நானும் உன்னைப் போலத்தானே! இன்னமும் சொல்லப்போனால், உன்னைக் காட்டிலும் எனக்கு ஒரு விலா எலும்பு குறைவு. நன்மை – தீமை
என்றால் என்ன என்பது எனக்கெப்படித் தெரியும்? கர்த்தர் மட்டுமே அதை அறிவார்.”
ஏவாள் தூரத்திலிருந்து அறிவு விருட்சத்தைப் பார்த்து அதன் அழகை ரசித்துக்கொண்டும், அதன் மாறுபட்ட தன்மைகளை வியந்துகொண்டும் இருப்பாள். தோற்றத்தில் அந்த மரம், மற்ற மரங்களைப் போன்றதே. ஒவ்வொரு மரங்களுக்கும் ஒவ்வொரு விதமான தண்டு, நிறம், பட்டை அமைப்பு, கிளை, இலை, இலைக்கொத்து, பூ, காய், கனி வடிவங்கள் உள்ளபடி, அதற்கும் தனித்தன்மையான வடிவங்கள் இருந்தன. மற்ற மரங்கள் அதனதன் பருவத்தில் பூத்துக் காய்த்துக் கனிக்கும். இந்த மரமோ ஆண்டு முழுதும் பூத்து, மாதம்தோறும் காய்த்துக் கனித்தது. அது மட்டுமல்ல. அதிலிருந்து இலை, பூ, காய், கனி ஆகிய எதுவும் எப்போதும் உதிர்வதேயில்லை. அதன் இலைகள் பழுப்பதும் இல்லை.
“அது அதிசய விருட்சம்தான்” என்றாள் ஏவாள். “அதற்கு என்றுமே அழிவில்லை.”
“ஆனால், அதன் கனியைப் புசித்தால் நாம் அழிந்துவிடுவோம்.” ஆதாம் அச்சத்தோடு நினைவூட்டினான்.
அவனுக்கு அதைக் காணவே பயம். அதனால், கூடுமானவரை அதன் பக்கமே போகவும் மாட்டான்; அதைப் பார்க்கவும் மாட்டான்.
ஏவாளுக்கும் மரண பயம் இருந்தாலும், தூரத்திலிருந்து அதைப் பார்க்கவும், கவனிக்கவும், ரசிக்கவும் செய்வாள். நாம்தான் அதன் கனிகளைப் புசிப்பதில்லை; குரங்குகள், அணில்கள், பழம் தின்னிப் பறவைகளாவது புசிக்கின்றனவா என்பதையும், அப்படிப் புசித்தால் எப்படி சாகின்றன என்பதையும் காண விரும்பினாள். அந்த உயிரிகளும் அதன் பழங்களை உண்ணவில்லை. பூக்களில் தேனீக்கள், வண்டுகள், பட்டாம்பூச்சிகள், தேன்சிட்டுகள் ஆகியவை தேனருந்தவுமில்லை. தேவனாகிய கர்த்தர் அவற்றையும் எச்சரித்திருக்கலாம்.
அப்போது மிக நீண்ட ராஜநாக சர்ப்பம் ஒன்று கிழக்குத் திக்கிலிருந்து அறிவு விருட்சத்தை நோக்கி வந்தது. அந்த மரத்தில் ஏறி, அதன் தண்டுப் பகுதியில் உடலும், தாழ்ந்த கிளையில் தலைப் பகுதியுமாக சுற்றிக்கொண்டு, கழுத்தை வளைத்துப் படமெடுத்து ஏவாளைப் பார்த்தது. அவளும் அதையே பார்த்தாள்.
“நான் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளது.” கர்த்தர் சொல்லியிருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது.
“நிச்சயமாக கர்த்தர் மடையர்தான். விஷக் கனி மரத்தை இங்கே முளைக்கப் பண்ணியதோடு, தந்திரம் உள்ள பாம்பையும் எதற்குப் படைக்க வேண்டும்? விஷமற்றதும், தந்திரமற்றதுமான உயிரினங்களை மட்டும்
படைத்தால் போதாதா?” கர்த்தர் சென்ற பின் ஏவாள் ஆதாமிடம் சொல்லியிருந்தாள்.
அந்த சர்ப்பம், தினமும் அறிவு விருட்சத்துக்கு வருவதை அவள் கவனித்திருக்கிறாள். அது பற்றி கர்த்தர் எச்சரித்திருந்ததால் அவள் அதனிடம் பேசவோ, அருகே சென்று பார்க்கவோ மாட்டாள். அதைக் கண்டாலே முகம் திருப்பிக்கொள்வாள். இப்போது முகத்தோடு உடலையும் திருப்பி, தன் இருப்பிடத்துக்குத் திரும்புவதற்காக நடந்தாள்.
“திருமதி ஆதாம்…!”
மென்மையும் உறுதியும் வாய்ந்த குரலின் அழைப்பைக் கேட்டு நின்று, திரும்பினாள். அழைத்தது சர்ப்பம்தான். அதன் கண்ணியமான அழைப்பு அவளை ஆச்சரியப்படுத்தியது. அந்தத் தந்திரக்கார விஷப் பிராணி எதற்கு அழைக்கிறது?
“இங்கே வா! உன்னிடம் ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும்.”
அவளுக்குத் தயக்கம், பயம்.
“பயப்படாதே! நான் உனக்கு ஆபத்து விளைவிக்க மாட்டேன். தைரியமாக வா!”
தயக்கத்தோடும், லேசான பயத்தோடும், அரைகுறை தைரியத்தோடும் அறிவு விருட்சத்தை நெருங்கினாள்.
சர்ப்பம் புன்னகைத்து வரவேற்று, “நீங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனியைப் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” எனக் கேட்டது.
“நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும், அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார்.”
சர்ப்பம் தலையாட்டி மறுத்தது. “நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.”
“மெய்யாகவா?”
“இந்தப் ப்ரபஞ்சம் முழுதிலும் உள்ள உயிரிகளில், உங்கள் தேவன் மட்டுமே பொய்யர். மற்ற உயிரிகள் எதற்கும் பொய் தெரியாது.”
அது தந்திரம் செய்கிறதோ என்ற சந்தேகத்தில் அவள் யோசனையாக நின்றாள்.
“ஹ்ம்…! நீ பெண் அல்லவா! அதனால் சந்தேகத்தைத் தலை நிறையத் திணித்து உன்னைப் படைத்திருக்கிறார் உங்களின் தேவன். உயிர் கொண்டு
எழுந்ததுமே, ஆதாமுக்கு இன்னொரு விலா எலும்பு இருக்கிறதா – இல்லையா என்று, அவனது விலா எலும்பைத் தொட்டுப் பார்த்தவள் அல்லவா நீ!”
அவள் வெட்கத்தோடு சிரித்தாள். ஆயினும், கனி உண்ண முன்வரவில்லை.
சர்ப்பம் நெளிந்து ஊர்ந்து கிளையில் உள்ள சில கனிகளைக் கவ்வி விழுங்கியது. உடனே அதன் நெற்றியில் ஒரு கண் தோன்றி, ஒளி வீசி மறைந்தது.
“ஆ…! நீயும் தேவனா?!”
“ஆம்; நான் அறிவின், மெய்ஞானத்தின் கடவுள். சமய நம்பிக்கைகளுக்கு எதிரானவன். எனவே, எதிர் தேவன் எனவும் சொல்லலாம். இந்த விருட்சம் எனக்குரியது. உங்களின் தேவன் அறிவுக்கும், மெய்ஞானத்துக்கும் விரோதி. உங்களையும், உங்கள் சந்ததியையும், அவற்றால் உருவாகவிருக்கும் மதங்களின் மக்களையும், ஆன்மிக அடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகிறார். எனவேதான், அறிவு விருட்சத்தையும், மெய்ஞான விருட்சமான ஜீவ விருட்சத்தையும் உங்களிடமிருந்து விலக்கி வைத்துள்ளார்.”
ஏவாள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமானதும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்கதுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனிகளைப் பறித்துக்கொண்டு இருப்பிடம் திரும்பினாள்.
மெத்யூஸ்லாவின் அடிப் பகுதிப் பொந்துக்குள், புல் மெத்தை மீது, முட்டுக்குத்தி முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்தவாக்கில் ஏவாள், ஆதாமுக்காகக் காத்திருந்தாள்.
வெளியே உலவச் சென்ற அவன் திரும்பி வந்ததும், அவள் பறித்து வைத்திருந்த அறிவுக் கனிகளைக் கண்டு பீதியாகிப் பதறினான். “அந்த விஷக் கனியை எதற்காகப் பறித்து வந்திருக்கிறாய்? சாக வேண்டும் என்று ஆசையா?”
ஏவாள், சர்ப்பம் கூறியவற்றையும், அது அந்தக் கனிகளை உண்டபோது நிகழ்ந்ததையும் தெரிவித்தாள்.
அவன் அவற்றை நம்பவில்லை. “இல்லை; அதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. சர்ப்பம் தந்திரமானது.”
“நீ அதை நம்பாவிட்டால் போ! ஒருவேளை எனக்கு மரணம் சம்பவிப்பதாக இருந்தாலும் பரவாயில்லை. நான் இந்தக் கனிகளை உண்ணப்போகிறேன். அறிவற்று வாழ்வதைக் காட்டிலும், மரிப்பது மேல்.”
“ஐயோ,… நீ செத்துப் போய்விட்டால் நான் என்ன செய்வேன்! தன்னந்தனி மனிதனாக இந்த பூமியில் வாழ முடியாதே!”
ஏவாள் சிரித்தாள். “உனக்கு இன்னொரு விலா எலும்பு இருக்கிறதல்லவா! அதை எடுத்து இன்னொரு ஏவாளை உனக்காக கர்த்தர் உருவாக்குவார்.”
எப்படி இவளால் இந்த நிலையிலும் அச்சமின்றி சிரிக்க முடிகிறது என அவன் வியந்துகொண்டிருக்கையில், அவள் அந்தக் கனிகளில் ஒன்றை எடுத்துப் புசித்தாள். இதுவரை சுவைத்திராத இன் சுவை. அதில் இன்புற்று, மேலும் ஒவ்வொரு கனிகளாக எடுத்துப் புசித்தாள்.
“ஆ…!” ஆதாம் அதிர்ச்சியுற்றுத் துள்ளினான்.
“ஏன், என்ன ஆயிற்று?”
சுட்டு விரலால் அவளது நெற்றியைச் சுட்டிக் காட்டினான். “கர்த்தரைப் போல உனக்கும் நெற்றியில் ஒரு கண் தோன்றி, ஒளி வீசி மறைந்துவிட்டது.”
அவள் இடது கையால் நெற்றியைத் தடவிப் பார்த்தாள். வித்தியாசமான எந்த அடையாளமும் இல்லை. ஆனால், புருவ மத்தியில், நெற்றியில் பிருபிருவென ஓர் உணர்வு சில விநாடிகள் தோன்றி மறைந்திருந்தது. அந்த வேளையில் அங்கே மூன்றாவது கண் திறந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவளுக்கு அதில் ஆச்சரியமோ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை.
“இப்போது தெரிகிறதா, சர்ப்பம் சொன்னதே உண்மை; கர்த்தர் சொன்னது பொய் என்று?”
“ஆம்! கர்த்தர் தந்திரமாக இப்படி ஏமாற்றுவார் என்று நினைக்கவே இல்லை.” ஆதாம் ஏமாற்றத்தோடு சொன்னான்.
ஏவாள் கனிகளை அவனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். அவனது நெற்றியிலும் ஒரு கண் தோன்றி, ஒளி வீசி மறைந்தது.
“ஏமாற்றுக்காரக் கர்த்தர் நமக்கு துரோகம் செய்துவிட்டார். தந்திரமுள்ள ஜீவராசி அவர்தான். சர்ப்பமல்ல” என்றான் அவன்.
அப்படியாக அவர்களின் அகக் கண்கள் திறக்கப்பட்டன. அவர்களுக்கு ஆறாவது அறிவு உண்டாயிற்று. நன்மை – தீமை அறியலாயினர்.
“நாமும் தேவர்களைப் போல் ஆகிவிட்டோம்!” ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ச்சியோடும், திளைப்போடும் சிரித்துக்கொண்டனர்.
ஆதாமின் பார்வை ஏவாளின் உடலில் படிந்தது. அவளின் நிர்வாணத்தைக் கண்டு அவனது உடலிலும், மனதிலும் உணர்ச்சிகள் கிளர்ந்தன. அவன் பார்ப்பதை ஏவாள் கவனித்தாள். இதற்கு முன் இல்லாதபடி, இப்போது அவளுக்கு, தான் நிர்வாணமாக இருக்கிறோம் என்ற எண்ணமும், வெட்கமும் உண்டாயிற்று. ஒரு கை மடக்கி மேலாடையாகவும், இன்னொரு உள்ளங்கையைக் கீழாடையாகவும் ஆக்கிக்கொள்ள முற்பட்டாள். அதே சமயம், ஆதாமின் நிர்வாணத்தை நோக்கி அவளது பார்வை சென்றது. அதைக் காண வெட்கம் ஏற்பட்டாலும், ஆசையும் உண்டாயிற்று. தலை
குனிந்து, கடைக் கண்களால் ஆவலூறப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்குள்ளும் உணர்ச்சிகள் பரவி, உடல் வெம்மையாகியது.
ஆதாம் அவளை நெருங்கி அவளது கைகளை விலக்கினான். இருவரும் வேகத்தோடு தழுவிக்கொண்டனர்.
அன்று அவர்கள் தம்மைத் தாமும், ஒருவரை ஒருவரும் அறிந்துகொண்டனர்.
ஆதாமுக்கு, தான் நிர்வாணமாக இருப்பதில் வெட்கமில்லை.
“விலங்குகள், பறவைகள், பிராணிகள், பூச்சிகள் முதலான ஜந்துக்களும் நிர்வாணமாகவே உள்ளன. அவைகளுக்கு நிர்வாணம் பற்றிய உணர்வோ, அறிவோ இல்லை. பூமியில் நாம் மட்டுமே மனிதர்கள். நாம் நிர்வாணமாக இருப்பது நமக்கு மட்டுமே தெரியும். நானும் நீயும் கணவன் – மனைவியாக இருப்பதினால் நாம் வெட்கப்படவோ, ஒருவருக்கொருவர் நிர்வாணத்தை மறைக்கவோ தேவையில்லை” என்றான் அவன்.
“ஆனால், நம்மை வஞ்சித்த கர்த்தர் முன்பாகவும், அறிவின் தேவனான சர்ப்பத்தின் முன்பாகவும் நான் நிர்வாணமாக இருக்க மாட்டேன். நீயும் இருக்கக் கூடாது” என்றாள் ஏவாள்.
அதை அவன் ஏற்றுக்கொண்டான். அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக் கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
“நமக்கு பகுத்தறிவு வந்துவிடக் கூடாது என்று கர்த்தர் தடுத்தது மிகவும் விசித்திரமானது. முரண்பாடானது. அதுவும், அதை வெளிப்படையாகச் சொல்லாமல், பொய் சொல்லியும், சர்ப்பத்தின் மீது அவதூறு கூறியும் நம்மை ஏமாற்றியிருக்கிறார். உண்மையிலேயே இவர் தேவன்தானா? மெய்யான தேவன் என்பவர் மனிதர்களுக்குப் பகுத்தறிவு வர வேண்டும் என்றுதான் நினைப்பார். அவர்கள் ஐந்தறிவு கொண்ட விலங்குகளைப் போலவே இருக்க வேண்டும் என நினைக்க மாட்டார். அப்படி நினைப்பவர், அறிவுக்குத் தடை இடுபவர் கடவுளாக இருக்க முடியுமா?” ஏவாள் குமுறினாள்.
“எனக்கு இன்னொரு கேள்வியும் இருக்கிறது. அறிவு விருட்சத்தின் கனியை நாம் புசிக்க வேண்டாம் என்றிருந்தால், நமக்கு அறிவு கூடாது என்றிருந்தால் கர்த்தர் அந்த மரத்தை ஏன் படைக்க வேண்டும்? அதை ஏன் ஏதேன் தோட்டத்தில், அதுவும் நட்ட நடுவில், கவனத்துக்குரிய விதமாக முளைக்கச் செய்யவேண்டும்? இதில் ஏதோ மாபெரும் சதித் திட்டம் இருப்பதாகத் தோன்றுகிறது.” ஆதாம் சொன்னான்.
“சர்ப்பத்திடம் கேட்டால் விபரம் தெரியும்.”
“கேட்டுப் பார்ப்போம். அதோடு, சர்ப்பம் நமக்கு அறிவு கொடுத்ததற்காக அதற்கு நன்றி செலுத்தவும் வேண்டும்.”
இருவரும் அறிவு விருட்சத்தை நோக்கிச் சென்றனர். அப்போது சர்ப்பம் அங்கில்லை. கிழக்கேயிருந்துதான் வரும் என்பதால் அந்தத் திசை பார்த்துக் காத்து நின்றனர்.
“திரு. மற்றும் திருமதி ஆதாம்….!” கிழக்கே ஆகாயத்திலிருந்து அசரீரி போல சர்ப்பத்தின் குரல் கேட்டது.
அங்கே அண்ணாந்து பார்த்தனர். சற்று அப்பால் உள்ள, வானளாவ உயர்ந்ததும், பூமியிலேயே மிக உயரமானதுமான ஜீவ விருட்சத்தின் உச்சியிலிருந்துதான் குரல் வந்தது தெரிந்தது. ஆனால், சர்ப்பம் கண்ணுக்குத் தென்படவில்லை. அவ்வளவு உயரமான விருட்சம்.
“இந்த விருட்சத்தின் அடிக்கு வாருங்கள். நானும் கீழே இறங்கி வருகிறேன்.”
குரல் சொன்னதற்கு ஏற்ப, அவர்கள் இருவரும் ஜீவ விருட்சத்தின் அடியே சென்றனர். சர்ப்பம் கீழே இறங்கி வந்தது.
ஏவாள், கர்த்தர் குறித்து தனக்கு ஏற்பட்டிருந்த கேள்விகளையும், விசாரங்களையும் சர்ப்பத்திடம் வினவினாள்.
“உனக்கு எழுந்துள்ள கேள்வியே விடைகள். அதுதான் தேடலின் துவக்கம். தேடுகிறவர்கள் கண்டடைவார்கள். முன்பு உங்களுக்குப் பகுத்தறிவு இல்லை. நன்மை – தீமை தெரியாது. இப்போது பெற்றுள்ள அறிவினால்தான் இந்தக் கேள்விகள் எழுந்துள்ளன. அதே அறிவினால், நீங்கள் உங்கள் சுய முயற்சியில் இன்னும் பல உண்மைகளை, மெய்ம்மைகளை அறிய இயலும். அதற்கு முயலுங்கள். கர்த்தர் சொல்வதையோ, நான் சொல்வதையோ நம்ப வேண்டாம். சோதித்துப் பார்த்து, சுய அனுபவத்தின் மூலம் மட்டுமே உண்மை எதுவென அறிந்துகொள்ளுங்கள்.”
அடுத்ததாக ஆதாம் தனது சந்தேகத்தை முன் வைத்தான்.
“அறிவு விருட்சமும் ஜீவ விருட்சமும் உங்களின் கர்த்தர் உருவாக்கியவை அல்ல. அவருக்கு முன்பிருந்தே இருப்பவை. அவருக்குப் பிறகும் இருக்கக் கூடியவை. இந்தப் ப்ரபஞ்சமும், இதிலுள்ள யாவும், அவர் படைத்தவையும் அல்ல. அவருக்கு முன்பிருந்தே இருப்பவை. உங்களின் கர்த்தருக்கு முன்பும் பின்பும் அனேக கடவுள்கள் உள்ளனர். பூமியில் எத்தனையோ மதங்களும், மெய்ஞானங்களும் உள்ளன. ஏதேன் தோட்டம், அறிவு விருட்சம், ஜீவ விருட்சம், நான், நீங்கள் யாவும் அவற்றின் மெய்யியல் உருவகங்களே! கடவுள் அல்ல; இயற்கைதான் இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்தது. மனிதன்தான் எல்லாக் கடவுள்களையும் படைத்தான். இதில் எந்தக் கடவுள்களும் இல்லாவிட்டாலும் படைப்பு நிகழும். அதுதான் நியதி.”
அவர்களுக்கு அது வியப்பையும், புதிர்மையையும் அளித்தது.
“நீ சொல்வது எனக்குப் புரியவில்லை. கர்த்தரைத் தவிர வேறு கடவுள்களும் இருக்கிறார்களா? மதம், மெய்ஞானம் என்றெல்லாம் சொல்கிறாயே, அது என்ன?”
“இதற்கு நான் இப்போது பதில் சொன்னால் உங்களுக்குப் புரியாது. இப்போதுதான் அறிவின் துவக்கத்தில் இருக்கிறீர்கள். இன்னும் நீங்கள்
தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய. அதன் பிறகே இவற்றுக்கான பொருள் உங்களுக்குப் புரியும்.”
“எங்களுக்கும் அறிவுக் கண்கள் திறந்து, தேவர்களுக்கு சமமாக ஆகிவிட்டோமே! பிறகு ஏன் எங்களுக்குப் புரியாது?”
“இப்போது நீங்கள் தேவர்களுக்கு சமம் என்பது, ஆறாவது அறிவின் மூலம் விலங்கு நிலையிலிருந்து மனித நிலைக்கு வந்துவிட்ட அளவில் மட்டுமே. மற்றபடி இது முழுமையாக தேவர்களுக்கு சமானமான நிலையல்ல. தெய்வீக நிலை அல்லது கடவுள்தன்மை என்பது ஆறாவது அறிவிலிருந்து மேம்பட்டது. அதி ஆற்றல்களும், அமரத்துவமும் கொண்டது. எனினும், அதை அடைவதற்குப் பகுத்தறிவு இல்லாமல் முடியாது. மெய்ஞானத்தை அடைய, பகுத்தறிவே முதல் படி.”
“முழுமையான தெய்வ நிலையை அடைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்?”
“இந்த ஜீவ விருட்சத்தின் கனிகளைப் புசித்தால் நீங்கள் முழுமையான தெய்வ நிலையையும், அமரத்துவத்தையும் அடைவீர்கள்.”
“அப்படியா?!”
வியப்போடும், ஆவலோடும், ஆசையோடும் அவர்கள் அண்ணாந்து பார்த்தனர்.
அந்த மரத்தில் ஒரு பூவோ, காயோ, கனியோ கூட தென்படவே இல்லை.
“இந்த மரத்தில் உள்ள பூவோ, காயோ, கனியோ சாதாரணப் பார்வைக்குத் தென்படாது. அதற்கு உரிய வழிமுறைகளை முறைப்படி கற்று, பயிற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே தெரியும். இதில் கேதர், சோக்மா, பினா, செஸ்ட், கெபுரா, திஃபாரெத், நெட்ஷக், ஹோட், யஷோத், மல்குத் என பத்து கனிகள் உள்ளன. பத்தாவது கனி, அடிக் கிளையில் உள்ளது; முதல் கனி, உச்சாணிக் கிளையில் உள்ளது. பத்தாவது கனியிலிருந்து, படிப்படியாக ஒவ்வொரு கனியாகப் புசித்து, முன்னேறி, இறுதியில் முதல் கனியைப் புசிக்கலாம். அதற்கு கடும் பயிற்சியும், நீண்ட காலமும் தேவைப்படும்.”
இருவரும் அசந்து கேட்டுக்கொண்டிருந்தனர்.
“இந்த விருட்சம் இவ்வளவு மேன்மையானதா? இதைப் பற்றி கர்த்தர் எங்களிடம் ஒன்றும் சொல்லவே இல்லையே!”
“சொன்னால் உங்களுக்கு இதில் ஆவல், ஆசை வந்துவிடும். அதனால்தான் சொல்லாமல் மறைத்துவிட்டார். அறிவுக் கனியை உண்ண வேண்டாம், தொடவும் கூடாது என விலக்கி வைத்ததால், உங்கள் கவனம் முழுக்க அதிலேயே சென்றுவிட்டது. மேலும், இந்த ஜீவ விருட்சத்தின் மலர், காய், கனி எதுவும் உங்கள் பார்வைக்குத் தென்படாததால் அந்த வகையிலும் இதன் மீது கவனம் விழவில்லை.”
“நீதான் இதற்கும் அதிபதியா?”
“ஆம்! வாஸ்த்தவத்தில், உன்னதமானதும்,, அடையக் கடும் தவ சாதனைகள் செய்ய வேண்டியதுமான இந்த ஜீவ விருட்சமே முதன்மையானது. இதில் ஒரு அங்கம்தான் அறிவு விருட்சம்.”
“அப்படியானால், தினமும் நீ கிழக்கேயிருந்து வருவது, இந்த விருட்சத்திலிருந்துதானா?”
“சில சமயம் இங்கிருந்தும், சில சமயம் கிழக்கில் உள்ள ஞானபூமியிலிருந்தும் வருவேன்.”
“ஞானபூமிதான் உனது இருப்பிடமா?”
“ப்ரபஞ்சம் முழுதுமே என்னுடையது. நான் ப்ரபஞ்ச சக்தி. பஞ்சபூதங்களின் மூல ஆற்றல் நானே. நான் இன்றி ப்ரபஞ்சத்தில் ஒரு அணுவும் இல்லை. அண்ட சராசரங்களில் உள்ள அனைத்து ஜடப் பொருள்கள், உயிரினங்கள், கண்ணுக்குத் தெரியாத நுண் இயக்கங்கள் ஆகியவற்றிலும்; எண்ணத்திலும் கனவிலும்; விழிப்பிலும் உறக்கத்திலும்; இருப்பிலும் இன்மையிலும் நான் இருக்கிறேன்; அல்லது எனது ஆற்றல் இருக்கிறது. அனைத்து ஞானிகளை ஞானிகளாக ஆக்குபவனும், அனைத்துக் கடவுள்களையும் கடவுள்களாக ஆக்குபவனும் நானே! நான் இல்லாவிட்டால் ப்ரபஞ்சமே இல்லை…”
சொல்லியவாறே சர்ப்பம் நெளிந்து வளைந்து மீண்டும் மரத்தில் மேலேறியது. இடமும் வலமுமாக இரு புறக் கிளைகளையும், மையத் தண்டையும் ஒட்டி, தடித்த கருங்கோடாக, சீரான நெளிவுடனும், ஒத்திசைவுடனும், நடனம் போல அதன் அசைவுகள் அமைந்தன. மேற்செல்லச் செல்ல அதன் உடல் நீண்டுகொண்டும், பருத்துக்கொண்டும் போயிற்று. அதன் வால் இன்னமும் கீழேயே இருந்தது. கண் இமைக்காமல் சர்ப்பத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவர்களின் நெற்றிக் கண்கள் ஒரு கணம் திறந்தன. வானளாவ உயர்ந்திருந்த மரத்தின் உச்சாணி வரை இப்போது தரிசிக்க முடிந்தது. இட, வலக் கிளைகளில் உள்ள, ஒளிரும் பத்துக் கனிகளும் அவர்களின் பார்வைக்குத் தென்பட்டன. அடிக் கிளையில் உள்ள பத்தாவது கனியான மல்குத்தில் சர்ப்பத்தின் வால் நுனி இருக்க, உடல் பகுதி அடுத்தடுத்த கனிகளைத் தொட்டுச் சென்றிருந்தது. சர்ப்பத்தின் தலைப் பகுதி இப்போது முதல் கனியான கேதரை அடைந்து, குடை விரிப்பது போல அதற்கு மேல் விரிந்தது. சர்ப்பத்தின் தலைக்கு இருபுறமும் தலைகள் தோன்றி, மூன்று தலை, ஐந்து தலை, ஏழு தலை என ஆகின. சில வினாடிகள் கழித்து ஆயிரம் தலைகளுடன் காட்சி தந்துவிட்டு, மீண்டும் ஏழு தலைகளுக்கு மீண்டது.
“ஓ,… கடவுளே…!” ஏவாளும் ஆதாமும் பிரமித்துக் கூக்குரலிட்டனர்.
சர்ப்பம் முறுவலித்தது. “ஞானபூமியில் என் பெயர் குண்டலினி. அங்கே என்னை தெய்வமாக வழிபடவும் செய்வர். ஆனால், இங்கே என்னைப் பற்றித் தவறாக சித்தரித்து, சாத்தான் என்பார்கள். உங்கள் சந்ததி அதை நம்பும். ஆனால், உங்களின் கர்த்தருக்கு முன்பிருந்தே இங்கு இருந்துவருகிற கபாலிஸ ஞான மார்க்கத்தில் நானே கடவுள். எனக்கும், எனது மார்க்கத்துக்கும் எதிராகவே கர்த்தர் உங்களை உருவாக்கியிருக்கிறார். உங்கள் சந்ததிகளை உருவாக்கவும் இருக்கிறார்…”
அவர்கள் செய்வதறியாது திகைத்திருக்க, நெற்றிக் கண்கள் மறைந்தன. இப்போதும் சர்ப்பத்தின் வாலைப் பார்க்க முடிந்தது. சற்று தூரம் உடலும் தெரிந்தது. அதற்கு மேல், அதன் விஸ்வரூபம் முழுதாகத் தெரியவில்லை. அதன் தலைப் பகுதி எங்கே இருக்கிறது என்பது யூகத்துக்கும் அப்பாற்பட்டதாகிவிட்டது. அந்த விருட்சத்தின் கனிகளும் மறைந்துவிட்டன.
சர்ப்பத்தின் குரல், உச்சாணியிலிருந்து அசரீரியாக ஒலித்தது.
“அறிவு பெற்றதற்காக நீங்கள் கர்த்தரால் தண்டிக்கப்பட்டு, இந்தத் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள். பேருண்மைகளையும், எனது மெய்ஞானத்தையும், இங்கே நமக்குள் நடந்தவைகளையும் மறைத்து, கர்த்தரின் ஆட்கள் குளறுபடிகளோடு வேதத்தில் புரட்டுக் கதை புனைவார்கள். உங்கள் சந்ததிக்கு அந்தப் புரட்டு புரியாது. எனவே, நீங்கள் கேட்ட கேள்விகளைக் கூட அவர்கள் கேட்க மாட்டார்கள். உண்மை அறிய உங்களுக்கு இருந்த வேட்கை அவர்களுக்கு இராது. அறிவுக் கனி என்றால் என்ன, ஜீவ விருட்சம் என்றால் என்ன என்பதே அவர்களுக்குக் தெரியாததாகிவிடும்.”
அவர்களுக்கு அதைக் கேட்டு மிகுந்த கவலை உண்டாயிற்று.
“என்னால் உங்களுக்குத் துன்பம் உண்டாகிவிட்டதாக வருந்துகிறீர்களா?” சர்ப்பம் வினவியது.
“இல்லை. எங்கள் சந்ததி, கர்த்தர் பற்றிய உண்மையையும், மெய்ஞானப் பேருண்மைகளையும் அறியாமல் போய்விடுமே என்றுதான் கவலைப்படுகிறோம்.” ஏவாள் அண்ணாந்து பார்த்து வருத்தத்தோடு சொன்னாள். ஆதாமும் துயரத்தோடு ஆமோதித்தான்.
பிற்பகலின் குளிர்ச்சியான வேளையில், அத்தியிலை ஆடைகளைக் கழற்றிவிட்டு அவர்கள் இருவரும் சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தோட்டத்தில் தேவனாகிய கர்த்தரின் அழைப்பு கேட்டது. ஆதாமும் ஏவாளும் பதறி விலகி, தோட்டத்தின் புதருக்குள் ஒளிந்துகொண்டனர்.
“ஆதாம்,… நீ எங்கே இருக்கிறாய்?” கர்த்தர் குரல் கொடுத்தார்.
“நான் நிர்வாணியாக இருப்பதால் உங்களுக்கு பயந்து, ஒளிந்துகொண்டிருக்கிறேன்.” தயக்கத்தோடும், குற்ற உணர்ச்சியோடும் ஆதாம் பதில் குரல் கொடுத்தான்.
ஒரு கணம் அமைதி,
“நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்க வேண்டாம் என்று நான் உங்களுக்கு விலக்கிய விருட்சத்தின் கனியைப் புசித்தாயா?” குரலில் கடுமை தொனித்தது.
ஆதாம் மிரண்டான். நீ என்னை வம்பில் சிக்க வைத்துவிட்டாயே என்பதாக ஏவாளைப் பார்த்தான். அவளுக்கு அச்சம் சிறிதும் இல்லை.
மாறாக, அடுத்து என்ன ஆகப்போகிறதோ என்பதை அறியும் ஆவல் அவளது முகத்திலும் கண்களிலும் வெளிப்பட்டது.
ஆதாம் வேறு வழியின்றி, “எனக்குத் துணையாக தேவரீர் தந்த பெண், அவ் விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நான் புசித்தேன்” என்றான்.
“இருவரும் வெளியே வாருங்கள்!”
தமது இரு உள்ளங்கைகளாலும் தத்தமது பிறப்புறுப்புகளை மறைத்துக்கொண்டு, வெட்கத்தோடு புதர் மறைவிலிருந்து வெளிப்பட்டனர்.
கர்த்தரின் கோபப் பார்வை அவர்கள் இருவரையும் சுட்டது. ஆதாம் நடுங்கினான். ஏவாள் அசரவில்லை.
கர்த்தர் அவளை முறைத்தபடி, “ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டார்.
நிமிர்ந்து நின்று, நேர் கொண்ட பார்வையால் அவரது பார்வையை எதிர்கொண்டவள், “நீங்கள் எதற்காக அபாண்டப் பொய் சொன்னீர்கள்?” என்று கேட்டாள்.
அவள் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்கிறாளே என அவரது முகத்தில் ஆச்சரியமும் கோபமும் கலந்து வெளிப்பட்டது.
“நான் என்ன பொய் சொன்னேன்?”
“நன்மை தீமை அறியத் தக்க மரத்தின் கனியைப் புசித்தாலோ, தொட்டாலோ கூட நாங்கள் செத்துவிடுவோம் என்று சொன்னீர்கள். ஆனால், நாங்கள் அக் கனியைப் புசித்ததால் சாகவில்லை. மாறாக, அதன் விளைவாகத்தான் எங்களின் கண்கள் திறக்கப்பட்டு, அறிவு பெற்றோம். நீங்கள் சொன்னது பொய்யில்லையா?”
கர்த்தர் வாயடைத்து நின்றிருந்தார்.
“உங்களுக்கு எங்கள் மீது பொறாமை. நாங்கள் உங்களைப் போல நன்மை தீமை அறியத் தக்க அறிவு பெறக் கூடாது என்பதற்காகவே புளுகியிருக்கிறீர்கள். பாம்பைத் தந்திரமுள்ள பிராணி என நீங்கள் எங்களுக்கு சொன்னதும் பொய். உண்மையில் நீங்கள்தான் தந்திரசாலி, நயவஞ்சகர்!”
தனது குட்டு வெளிப்பட்டுவிட்டதால் கர்த்தருக்கு அவமானமாகிவிட்டது.
அதற்குக் காரணமான சர்ப்பத்தின் மீது கடுமையான கோபமும் ஏற்பட்டது.
சர்ப்பம் தோட்டத்தின் மத்தியில் இருந்த அறிவுக் கனி மரத்தின் கிளையில் சுற்றிப் படுத்தவாறு, இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களையும் உரையாடலையும் கவனித்துக்கொண்டிருந்தது. கர்த்தர் அதை நோக்கி கோபாவேசத்தோடு, “நீ எனக்கு விரோதமாக செயல்பட்டதால் உன்னைச்
சபிக்கிறேன். நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்!” என்றார்.
சர்ப்பம் உரத்துச் சிரித்தது. “அடக் கடவுளே! உன் மடத்தனத்துக்கு அளவே இல்லையா? ஏற்கனவே நான் வயிற்றினால் ஊர்ந்து செல்வதுதானே வழக்கம்! உங்களைப் போல எனக்குக் கால்கள் இருக்கிறதா என்ன?”
கர்த்தருக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் பொங்கியது. தாம் தூமென்று குதித்தபடி சர்ப்பத்துக்கும், ஏவாளுக்கும், ஆதாமுக்கும் சாபங்களை அள்ளி வீசலானார்.
சர்ப்பம் மேலும் நகைத்தது. “நீ விடுக்கிற சாபங்களெல்லாம் இயற்கையாக ஏற்கனவே இருப்பதுதானே!”
அறிவு மற்றும் மெய்ஞானத்தின் கடவுளான சர்ப்பத்தைத் தன்னால் ஏய்க்க முடியாது என்று கர்த்தருக்குத் தெரியும். ஆகவே மேற்கொண்டு அதனிடம் பேசவில்லை. தோட்டத்தின் மத்தியில் இருந்த மரங்களையும் பார்க்க விரும்பாமல் புறமுதுகு காட்டித் திரும்பி நின்றுகொண்டார்.
மனிதர்களான ஆதாமும் ஏவாளும் தன்னைப் போல நன்மை தீமை அறியத் தக்கவர்களாக ஆனது அவருக்குப் பொறுக்கவில்லை. அவர்கள் பெற்ற அறிவை இனி இல்லாமல் ஆக்க இயலாது. அது போகட்டும்! இதற்கும் மேலே அவர்களை வளரவிடக் கூடாது. இவர்கள் தமது கைகளை நீட்டி ஜீவ விருட்சத்தின் கனியையும் பறித்துப் புசித்துவிட்டால் தன்னைப் போல அமரத்துவம் பெற்றுவிடுவார்கள். அதைத் தடுத்தாக வேண்டும் என்று அவரது பொறாமை மனம் எண்ணியது. திரு மற்றும் திருமதி ஆதமை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டார்.
“எனது கட்டளையை நீங்கள் மீறிவிட்டீர்கள். ஆகவே, இந்தத் தோட்டத்தில் இருக்க உங்களுக்கு இனி அனுமதி இல்லை. இப்போதே இங்கிருந்து வெளியேறுங்கள்!”
ஆதி மனிதத் தம்பதியை நோக்கி இரைந்தார்.
ஆதாம் பதறினான்.
ஏவாள் கணீர்க் குரலில் சொன்னாள். “நீங்கள் என்ன எங்களை வெளியேறச் சொல்வது? நாங்களே இதை விட்டு வெளியேறத்தான் விரும்பியிருந்தோம். இந்தத் தோட்டத்துக்கு வெளியே உலகம் பரந்து கிடக்கிறது. உங்களைப் போல அறிவிலித்தனமான கட்டுப்பாடுகளை விதிக்க அங்கே யாரும் இல்லை. அங்கு நாங்கள் முழு சுதந்திரத்தோடு எது வேண்டுமாயினும் செய்யலாம். நீங்கள் உருவாக்கிய இந்த சிறைத் தோட்டத்தில் நீங்களே குடியிருங்கள்!”
சொல்லிவிட்டு ஆதாமின் கையை ஒரு கையால் பற்றி இழுத்தபடி தோட்டத்தை விட்டு வெளியேறினாள். தனது மரத்திலிருந்து சர்ப்பம் வெற்றிக் களிப்போடு பார்த்துக்கொண்டிருந்தது.
– சொல்வனம் இணைய இதழ், 24-08-2025.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |
