நிறம் மாறும் உலகில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 481 
 
 

நீண்ட நாட்களுக்கு   பிறகு மனைவி, மகள்களுடன் தனது சொந்த ஊருக்கு முக்கியகாரணியின் நிமித்தம் கண்டியில் இருந்து கொழும்பிற்கு வர வேண்டியதாயிற்று உலக நாதனுக்கு. 

காரை அவனே ஓட்டிக் கொண்டு வந்தான். சொந்த வாகனம் என்றாலும் டிரைவர் வைத்திருந்தார். எங்கு சென்றாலும் டிரைவர் தான் ஓட்டுவான். அவனுக்கு சிலநாட்களாக உடம்புக்கு முடியாமல் வேலைக்கு லீவுபோட்டிருந்தான்.அதனாலயே உலக நாதனே வண்டி ஓட்டினார்.கொழும்பை வந்தடைந்தது வாகனம். டிரைவர் சீட்டிற்கு பக்கத்து சீட்டில் மனைவி  இனியா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த மகள்கள் இருவரும் உறங்கியிருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு காரை வெகு தூரம் ஓட்டிவந்தது உலக நாதனுக்கு சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும் கவனமாகத்தான் ஓட்டிவந்தார்.இளம் வயதினராக இருந்திருந்தால்  அவ்வளவு சிரமமிருந்திருக்காது. ஐம்பத்தைந்தை அடைந்த ஒருவருக்கு பலமணிநேரம் வாகனம் ஓட்டுவது என்பது கஷ்டமாகத்தான் இருக்கும். டிரைவர் வைத்தே பயணங்கள் போய் வந்துகொண்டிருந்தார்கள். திடீர் என்று அவரே  ஓட்ட வேண்டியாகிவிட்டது. அதுவும் தூரப் பயணம். இந்த பயணத்தை தவிர்க்க முடியாத சூழ்நிலை வேறு!  

தனது பால்ய நண்பரின் மகளுடைய திருமண வைபவத்திற்கு நண்பனும்,அவர் மனைவியும் வீடு வந்து அழைப்பு விடுத்திருந்தனர். திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே வந்து விடும்படியும் கூறிவிட்டு  போனார்கள். அதனால் இந்த பயணத்தை தவிர்க்கவா முடியும் ?

அதனால்தான் இந்தப் பயணம். வழிநெடுக வாகனநெரிசல் வேறு… 

இடையிடையே நிறுத்தி நிறுத்தி எல்லோரும் களைப்படைந்து விட்டார்கள்.சும்மா உட்கார்ந்து வீதியை வேடிக்கை பார்த்து வந்த  வீட்டினர்களே களைப்படைந்துஉறங்கிவிட்டனர். நீண்ட மணிநேரம் காரை ஓட்டிவந்த அந்த குடும்பஸ்தனுக்கு களைப்பு இருக்காதா? அவருக்கும் தூக்கம் கண்களை லேசாக எட்டிப் பார்த்தது. கண்களை கசக்கியபடியே காரை நவீன ஹோட்டலின் முன் நிறுத்தினார்.இதற்கு மேலும் வாகனத்தை செலுத்த முடியவில்லை.வயிற்றுக்குள் குடல் அதீத பசியினால் குர் குர்றெண்டு நாதஸ்வரம் எழுப்பியது. தாகம் வேறு,.. 

ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு நண்பன் வீட்டிற்குப் போகலாம் என நினைத்தான். 

மனைவி, பிள்ளைகளும் விழித்துக் கொண்டார்கள். 

இளைய மகள்” வாவ் பெரிய நட்சத்திர ஹோட்டல். பிரமாதமாக  இருக்கு. நாம இங்க சாப்பிடப் போறமா? “என்று ஆச்சரியத்தோடு வினவினாள்.வினவியதுமல்லாமல் பதில் கிடைக்கும் முன்னரே கார் கதவை சடாரென திறந்து முதல் ஆளாக வெளியே இறங்கினாள். 

“இனியா நீ பிள்ளைங்கள கூட்டிட்டு ஹோட்டலுக்குள்ள போமா.. நான் காரபாக்கிங்ல விட்டுட்டு வாரன்.” என்று கூறி அவர்களை உள்ளே அனுப்பி விட்டு காரை பாக்கிங்ல விட்டான். காரை விட்டிறங்கி ஹோட்டலை நோக்கி சிறிது அடிஎடுத்து வைத்தபோது “ஐயா ஏதாவது பார்த்து தாங்கய்யா. ரொம்ப பசிக்குதய்யா.. “என்றது   நடுத்தர வயது பெண்ணின் குரல். நன்கு பரிச்சயமான குரல். அந்த குரல்கேட்ட திசையின் பக்கம் திரும்பி,அவள்மீது பார்வையைச் செலுத்தினார். ஒரு கணம் ஆடிப்போய்விட்டார். அவரையறியாமலே கண்கள் குளமாகின.”வசந்தா”என்று உதடுகள் தனக்குள்ளே அந்தப் பெயரை உச்சரித்தது. பத்து வருடங்களாகின்றது அவளைப்பிரிந்து… ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தாள். கொளுகொளு என்றிருந்த அவள் கன்னங்களில் சுருக்கங்கள்  தெரிந்தன. வறுமைநிலமை அவளை உருக்குலைய வைத்திருந்தன.பார்வைக் குறைபாடு அவளிடம் நன்றாகத் தெரிந்தது.அதனால்தான் போலும் தன்னை யார் என்பதை அவள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. எடுப்பான அவள் பார்வை, திமிரான பேச்சு எங்கேதான் போனதோ ! 

“ஐயா”என்று அவள் அழைத்தவிதம் சுரத்தையில்லாமல் தான் எதிரொலித்தது.மனிதனின் வசதிநிலமைகள் மாறும் போது தோற்றமும், குணப்பாடுகளும் மாறத்தான் செய்யும்.வசந்தாவும் முழுமையாக மாறியிருந்தாள். 

அவளை இந்நிலையில் பார்த்ததும் உள்ளம்   தன்னைமீறித் துடிதுடித்தது. கடந்து சென்ற பத்து வருடங்களில் ஒருமுறை கூட அவள் நினைவுகள் 

அவனுக்கு வந்ததில்லை. சிதைந்து போன இறந்த காலத்தை மறந்து ஒரு அழகிய புதுவாழ்க்கையில் ஐக்கியமானான்.

வசந்தா அவனது கடந்த காலம்……!

உயிருக்குயிராய் நேசித்து கரம்பிடித்த முதல் மனைவி. அவளது முழுப்பெயர் வசந்தராணி. 

சுருக்கமாக “வசந்தா “என்றே அழைப்பான் .

வசந்தாவின் தந்தை வரதன், உலகநாதனின் 

தாய்மாமன். உலகநாதன் சிறுவயதிலையே கார்விபத்தில் தாய், தந்தையை இழந்தான். 

தனது மாமன் வரதனின் பொறுப்பிலையே வளர்ந்தான். 

சிறிய வயதிலேயே உலகநாதனை நன்றாக படிக்க வைத்ததோடு சொந்தக் காலில் தொழில் புரியும் பருவம் வரும் வரை ஊன்றுகோலாய் இருந்தவர் தாய்மாமன் வரதன்தான். மாமாவின் வழிகாட்டலாலும், அன்பான ஆதரவாலும் நல்ல நிலைக்கு உயர்ந்தான். பெரிய நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பதவி வகித்தார். உலகநாதனின் திறமை ,அமைதியான போக்கு, நல்ல குணம் வரதனுக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. தனது மகள் வசந்த ராணியை உலகநாதனுக்கு மணமுடித்து வைத்தார்.ஏற்கனவே உலகநாதனுக்கு வசந்தாவையும், வசந்தாவுக்கு உலகநாதனையும் பிடித்துப்போயிருந்தது. இதை வரதனும் அறிந்ததாலையே மணம்செய்து வைத்தார்.                                               

வசந்தாவும் சிறுவயதிலேயே தாயை இழந்தவள். தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்தவள். மிகவும் செல்லமாக வளர்ந்தாள்.அவள் ஆசைப்பட்டதெல்லாம் உடனே அடைந்து விடுவாள். அவள் மணவாழ்வும் நினைத்த படியே அமைந்தது. 

இவர்களது இல்லறவாழ்வு   மிகவும் இனிமையாகவே ஆரம்பித்தது. இவர்களது அன்பிற்கு அடையாளமாக அடுத்தடுத்து மூன்று பிள்ளைகளைப்     பெற்றெடுத்தார்கள். இரண்டு பையன்களும், ஒரு பொண்ணுமாக  மூன்று வாரிசுகளுக்கு பெற்றோரும் ஆனார்கள்.    

அவர்களுக்கு மூன்றாவது குழந்தை பிறந்து சில மாதங்களில் வசந்தராணியின் தந்தையும் இவ்வுலகை விட்டுப் போய்விட்டார். வசந்தாவிற்கு பேரிழப்பாக இருந்தது. உலகநாதனாலும் இவ்விழப்பை தாங்க முடியாதிருந்தது. உறவு முறையில் தாய்மாமனாக இருந்தாலும், ஒரு தகப்பன் போல் கரிசணையோடு தன்னை அவர் வளர்த்த விதம் உலகநாதனின் மனதில் என்றும் பதிந்திருந்தது. வரதன் மாமா மேல் மிகவும் அன்பும், மரியாதையும் வைத்திருந்தான். 

அதனால்தான் அவர் உலகைவிட்டுச் சென்ற பின்னரும் நன்றிக் கடனாக அவர் மகளை, அதாவது தனது மனைவியை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டார். அவள் விருப்பங்கள் எல்லாம் பூர்த்தி செய்தார். வெளியில் சென்று வேலை பார்க்கும் நேரம் தவிர்த்து மற்றைய நேரங்களில் எல்லாம் வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவியாக நின்றான். நாளுக்கு நாள் அவள் தேவைகளும் செலவுகளும் அதிகமாகின. கூடவே பிள்ளைகளும் வளர வளர அவர்களுக்கான செலவுகளும் ஏறிக்கிட்டே வந்தது. இருந்தாலும் உலகநாதன் எல்லாவற்றையும் சமாளித்தான்.

அவனது கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல் வசந்தா இஷ்டப்படி செலவுகளை புதிது புதிதாக உருவாக்கி வீண்விரயம் செய்யத் தொடங்கினாள்.வரவுக்கு மீறிய செலவுகளை சமாளிக்க முடியாமல் சில சமயம் திண்டாடிப் போய் நின்றார். 

அமைதியான முறையில் பொறுமையாக எடுத்துச் சொன்னான் செலவுகளை முடிந்தளவு குறைத்து வாழப் பழகிக் கொள்ளும்படி..,அவனது புத்திமதிகளை அவள் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அவள் வைத்த செலவுகளைப் போலவே பிள்ளைகளும் சளைக்காமல் செலவு வைத்தனர். சும்மாவா!சொல்வார்கள் பழமொழி! ‘தாயைப் போல பிள்ளை  நூலைப்போல சீலை’என்று.

அம்மாவையும், பிள்ளைகளையும் சமாளிப்பது கஷ்டமாகவே இருந்தது உலகநாதனுக்கு. முடிந்தளவு  அவர்களது தேவைகளை நிறைவேற்றினார் . முடியாத பட்சத்தில் பிரச்சினைகள் எரிமலையாய் வெடிக்கும் அவ்வப்போது. அவன் மேல் அவளுக்குள்ள பாசமும், மரியாதையும் வரவர குறைந்து போயின. பிள்ளைகளும் தகப்பனுக்குறிய மரியாதையை தரத் தவறினார்கள்.

என்னதான் கணக்காளராக உத்தியோகம் பார்த்தாலும் இவர்களது தேவைகளுக்கு இவனின் உழைப்பு போதாதிருந்தது. ஒருநாள்! பிரச்சினை பெரிய பூகம்பமாய் உருவெடுத்தது. அன்றுதான் அவர்களது வாழ்க்கை தலைகீழாக புறட்டப்பட்ட அந்நாள். அவர்களது பிரிவுக்கான நாள், அவளை கடைசியாகப் பார்த்த நாள்.

அவனை அவ்வீட்டை விட்டு துரத்தி விட்ட நாள். இன்னும் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது கம்பீரமாக திமிரோடு அவள் அவனோடு பேசிய கடைசி வார்த்தைகள். “இங்க பாருங்க ..உங்களப் போல கஞ்சனோட எல்லாம் குப்ப கொட்ட என்னால ஏலா!!  என் அப்பா என்ன கண்கலங்காம வளர்த்தாரு தெரியுமா? உங்களால நான் தினமும் கலங்கிப் போய் நிக்கிறன்.நான் பெத்த பாவத்துக்கு பிள்ளைகளும் கஷ்டப்படுதுகள். தேவையா இதல்லாம்? நம்ம பசங்க பிரண்ஸ் எல்லாம் எவ்வளவு சொகுசாய்  இருக்குதுகள். அவர்களது பெற்றோர் எப்படியெல்லாம் பிள்ளைகளுக்கு பணத்தை வாரிக் கொட்டுதுகள். நீங்களும் ஒரு தகப்பனா? இல்லை நல்ல புருஷனா? உங்க சம்பளம் எந்த மூலைக்கு போதும்? தயவு செய்து எங்காவது போயிடுங்க. இது என் அப்பா எனக்கு கொடுத்த வீடு. நானும் பிள்ளைங்களும் சந்தோசமாக இருப்பன். நான் எப்படியாவது அதுகள வளர்ப்பன். உங்களோட போராடி வாழ என்னால ஏலா. இந்த நிமிஷமே போயிடுங்க. ” மூச்சுவிடாமல் கூறி முடித்தாள். அவனுக்கு பேச சந்தர்ப்பம் தராமல் பேசினாள். பிள்ளைகளும் தாயின் பக்கமே இருந்து பேசினார்கள். அவன் அவர்களை சமாதானப் படுத்த எவ்வளவு முயன்றும்   கடைசியில் தோற்றுப் போனான்.அவளது மனம் இளகவில்லை. உலகநாதனும் கடைசியாக அவளுக்கு பதில் வார்த்தைகள் கொடுத்து விட்டு, மனமில்லாமல் கவலையோடு வெளியேறினான். 

“வசந்தா உன் முடிவு ரொம்ப தப்புமா!  அளவுக்கதிகமான ஆடம்பர வாழ்க்கை மனிதன

தவறு செய்ய வைக்கும். நல்ல சிந்தனைகள மாற்றி விடும். பணத்தால எதையும் வாங்கலாம் என்று நினைக்காத! குடும்பத்தில் கிடைக்கும் அன்பு, மரியாதை  இவைகள் தான் நமக்கு மிக முக்கியம். 

நீ அப்படித்தான் இருந்த!!!.. உங்கப்பாவுடைய மறைவுக்கு பிறகு நீ கொஞ்சம் கொஞ்சமாய் மாறிட்ட..அதற்கு நானும் காரணமாயிட்ட உங்க அப்பா உங்கள பார்த்த மாதிரியே நானும் பார்த்துக் கொள்ள நினைத்து நீ கேட்டதெல்லாம் மறுக்காமல் செய்து கொடுத்து பழக்கினதுதான் இந்த நிலமைக்கு காரணம். நானும் என்மேல பாசத்தைக் கொட்டி வளர்த்த மாமாவுக்காக அவர் மகளான உனக்கு எல்லாம் செய்தன்.நான் எல்லாவற்றையும் சகித்து உன்கூட இருபது வருஷம் வாழ்ந்திருக்கன். இப்ப இந்த பிரிவு நமக்கு தேவையா? “அவளை ஒரு முறை உற்று நோக்கி விட்டுதொடர்ந்தான்.                  

“புள்ளைங்களுக்கு ஒன்னும் புரியாது. நினைத்ததை அடையத் துடிக்கும் வாலிபப் பருவம். நீதான் புரிஞ்சு நடக்கனும். அதவிட்டுட்டு பிள்ளைகளையும் உன் பக்கம் சேர்த்துக் கொண்டிருக்கியே தப்பு பெரிய தப்பு, இப்ப நீயும் பிள்ளைகளும் என்னை வீட்டைவிட்டு விரட்ற மாதிரி நாளைக்கு பிள்ளைங்க உன்ன விரட்ட மாட்டாங்களா?எதுவும் எப்பவும் நடக்கலாம் நாமதான் சூதானமாக இருக்க வேண்டும். நான் எப்பவும் உனக்காக வாழ ஆசைப் படுறன்.உன்கூடவே இருப்பன். நீ தனிச்சு ..தவிச்சுப் போகக் கூடாது. என்னை நம்பு. நான் சொல்றத கேளு.. உன் முடிவ மாத்திக்க  பிளீஸ்… “கெஞ்சினார். அவள் மறுத்தேவிட்டாள். உடைந்து போன மனதுடன் வெளியேறினான். 

அவன் வெளியேறும் போது அவனுக்காக எதையும் கொண்டு செல்லவில்லை. அவன் அவனுக்காக எதையும் சேர்த்து வைக்கவும் இல்லை. மனசு முழுக்க பாசத்தை மட்டுமே சுமந்திருந்தான். 

நண்பர் ஒருவரின் உதவியுடன் ஊரைவிட்டு வெளியேறி கண்டி போய்சேர்ந்தான். வேலையும் தேடிக் கொண்டான். நாளடைவில் நல்ல வாழ்க்கையும் அமைத்துக் கொண்டார். இனியா அவனது இரண்டாம் மனைவி. அழகு, அறிவு, அன்பு, அடக்கம் எல்லாம் நிறைந்தவள்.கணவனை மிகவும் மதித்தாள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பாக  வாழ்க்கை நடத்தினார்கள். இரு பெண் குழந்தைகள் பிறந்தன அவர்களுக்கு. அவனின் புதிய வாழ்க்கை கடந்து போன கசப்பானவைகளை எல்லாம் மறக்கடிக்கச் செய்தது. பத்து வருடங்களுக்கு பிறகு இன்றுதான் அவளைப் பார்க்கிறான். அவன் வாழ்க்கையில் உயரந்தநிலையிலும், அவள் பிச்சைக்கார கோலத்திலும், அதுவும் அவளுக்கு அவனை அடையாளம் தெரியாமல் அவனிடமே பிச்சை கேட்கிறாள். என்ன கொடுமை!                                         

உலகநாதனுக்கு வசந்தாவை அந்நிலையில் பார்க்க கஷ்டமாக இருந்தது. என்னதான் இருந்தாலும் அவளோடு பல வருடங்கள் வாழ்ந்திருக்கின்றான். அவனது பிள்ளைகளுக்கு தாய்! , தனக்கு எல்லாமாக இருந்து வாழ்ந்த தாய்மாமன் மகள், அவருக்கு செலுத்த வேண்டிய நன்றிக்கடனாக ஏதாவது செய்ய வேண்டும். 

ஹோட்டலை விட்டு கிளம்பும்போது பணத்தட்டில் ஆயிரம் ரூபாய் தாள்கள் இரண்டை போட்டான். மட்டுமல்லாமல் ஹோட்டலில் இருந்து வாங்கிய எல்லா வகையான பெரிய உணவு பொதி ஒன்றை அவள் பக்கத்தில் வைத்து விட்டு கிளம்பினான். உலகநாதனின் மனைவி இனியாவிற்கும் விஷயம் புரிந்தது. எதையும் காட்டிக் கொள்ளாமல் கணவன் கூறட்டும் என்று அமைதியாக இருந்தாள்.  காரில் கிளம்பும்போது மனைவியிடம் எல்லாம் கூறினான் உலகநாதன்.                  நண்பன் வீட்டு திருமண  வைபவம் முடிந்த பிறகு ஊர் கிளம்பும் முன் வசந்தாவின் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி விட்டுப் போக நினைத்தான். அவன் நினைத்தபடியே செய்து முடித்தான். முதலில் நண்பனிடம் வசந்தாவை பற்றி அறிந்துகொண்டார். வசந்தாவினதும் உலகநாதனிதனும் மூன்று பிள்ளைகள் தாயிடம் வீட்டை வாங்கி விற்று விட்டார்கள். பின்னர் வசந்தாவை உறவினர் ஒருவரின் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வெளிநாடு சென்று விட்டார்கள். இப்பொழுது அவர்களும் திருமணம் முடித்து மனைவி பிள்ளைகளோடு வெளிநாட்டில் வசிக்கின்றார்கள்.

உறவினர்களும் அவளை சரியாக பார்த்துக் கொள்ளாததால் அவளும் வீட்டை விட்டு வீதிக்கு வந்து விட்டாள். மனதும் பாதிக்கப்பட்டு கண்களும் பார்வை இழந்து பிச்சைப்பாத்திரத்தோடு ஒரு வருட காலமாக சுற்றித் திரிகிறாள் என்பதை நண்பன் மூலம் அறிந்து கொண்டான். அவனது நண்பனுக்கும் இவ்விடயங்கள் அண்மையில் தான் தெரிந்ததாக கூறினான். மூன்று அறைகளைக் கொண்ட வசதியானவீடடொன்றை விலைக்கு வாங்கினான். எல்லாவிதமான பொருட்களையும் வீட்டிற்கு வாங்கிப் போட்டான். அவளைப் போன்ற ஆதரவற்ற இன்னும் இரு பெண்களை தேடிப் பிடித்து அவளுக்கு உதவியாக இருக்கவும் ஏற்பாடு செய்தான். வீட்டிற்கு கடைகளுக்கு போய்வரவும் ஆள் வைத்தார். எல்லா ஏற்பாடுகளையும் நண்பரின் உதவியோடு செய்து முடித்து விட்ட மனநிறைவோடு ஊர்த்திரும்பினார் உலகநாதன். அவன் நண்பனிடம் சொன்ன வார்த்தைகள் “நான்தான் இதையெல்லாம் செய்ததாக சொல்ல வேண்டாம்.அவள் கலங்கிப் போவாள்”என்று!

அவனது நண்பனுக்கும் அவனை நினைக்கையில் பெருமையாக இருந்தது. உலகநாதனின் மனைவி இனியாவும் தனது கணவனின் பண்பை நினைத்து பெருமிதமடைந்தாள். ‘வெறுத்து ஒதுக்கி விரட்டிய மனைவியும் நல்ல படி வாழ வேண்டும் என நினைக்கும் நல்ல உள்ளம் கொண்டவர் என் கணவர். பணமே எல்லாமாக வாழும் இவ்வுலகில் இவரைப் போன்ற நல்லவர்களும் இருக்கத்தான் செய்கின்றன. நிறம் மாறும் உலகில் குணம் மாறாத நல்ல மனிதர் என் அன்புக் கணவர். ‘ என்று தனக்குள்ளே கூறி பூரிப்படைந்தாள் உலகநாதனின் மனைவி இனியா. 

(யாவும் கற்பனை)               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *