மேடைகளைச் சுற்றி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: September 7, 2025
பார்வையிட்டோர்: 494 
 
 

(2022ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 1-2 | காட்சி 3-4 | காட்சி 5-6

மூன்றாம் காட்சி

(பின்னணியில் பொதுக் கூட்ட மேடை போன்ற அமைப்பு. பேச்சு மேடையில் நாற்காலிகளில் மூன்று பேர் அமர்ந்திருக்க இந்திய மக்கள் கட்சியின் பேச்சாளர் இராசமாணிக்கம் உரைமேசை அருகே நின்று பேசுகிறார்)

இராசமாணிக்கம் : அண்ணன் ஜோசப் செல்வம் அவர்களே. கபீர் அவர்களே. இளவல் எழில் அவர்களே கட்சியில் என்னுடன் பணியாற்றும் தொண்டர்களே பொதுமக்களே…. இந்த பொதுக்கூட்ட மேடையில் மாலை நேரத்தில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் வணக்கம். கட்சியால் கிடுகிடுவென வளர்ந்தவர்கள், சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் வாழந்து வரும் என்னைச் சீண்டிப் பார்க்கிறார்கள். உன் வீட்டுத் திருமணத்தை சமயச் சடங்குப்படி நடத்த விரும்பினால் நடத்திக்கொள். அதற்காக நான் வதந்தி கிளப்புகிறேன் என்று கல்யாண மேடையில் ஏன் பேசுகிறாய்…? சொந்தக் கட்சிக் காரனைப் பற்றி தனிப்பட்ட விழாவில் பேசினால் நம் கட்சிக்காரன் என்ன நினைப்பான்? உன்னுடைய சம்பந்தி என்ன நினைப்பான்? நான் இருபது வயதில் பேச்சாளன் ஆனேன். இன்று வரை பேசி வருகிறேன். வதந்தி கிளப்புவதும் புரளி பேசுவதும் என் பணி அல்ல. நான் நல்ல தமிழ் பேசி பிழைப்பு நடத்துபவன். புரளி பேசி பிழைப்பு நடத்துபவன் அல்ல.

(ஜோசப் செல்வம் எழுந்து நின்று மைக்கைக் கையில் பிடித்துக் கொண்டு பேசுகிறார்)

ஜோசப் : நண்பர் இராசமாணிக்கத்திற்கு ஒரு வேண்டுகோள். ஆங்கிலத்தில் Donit wash your dirty linen in the public என்று சொல்வார்கள். இது பொதுமக்கள் திரண்டிருக்கும் பொதுக் கூட்ட மேடை. உட்கட்சி விவகாரங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இராசமாணிக்கம் : கட்சியின் மூத்த நிர்வாகி தன்னுடைய மகளின் திருமண வரவேற்பில் சபையில் என்னைப் புரளி பேசுபவன் என்று கூறியபோது அங்கிருந்தீர்களே அவரிடம் நீங்கள் சொன்னீர்களா இந்த ஆங்கிலப் பொன்மொழியை?

ஜோசப் : வாக்குவாதம் செய்ய… இது என்ன டிவி பேச்சு அரங்கமா… மக்கள் பிரச்சினை பற்றி பேசத்தான் இந்தக் கூட்டம். அந்தப் பொருளைத் தவிர்த்து வேறு ஏதேனும் பேசுவ தாக இருந்தால் நீங்கள் இறங்குங்கள். நாங்கள் பேசிக் கொள்கிறோம்.

இராசமாணிக்கம் : இது ஒரு சீனியர் பேச்சாளனுக்கு இழைக்கப்படும் உச்சபட்ச அநீதி நண்பர்களே… பொதுமக்களே… நான் இந்தக் கணமே இந்தக் கட்சியை விட்டு விலகுகிறேன். உங்கள் அனைவருடைய ஒத்துழைப்புக்கு நன்றி. இத்தனை ஆண்டுகளாக என்னுடைய சொற்பொழிவை விரும்பிக் கேட்ட பொது மக்களுக்கு நன்றி. வணக்கம்.

(இராசமாணிக்கம் மேடையை விட்டு இறங்கி வேகமாக நாடக மேடையின் வலப்பக்கமாகச் செல்கிறார்.)

(ஜோசப் செல்வம் உரை மேசை அருகே நின்று பேசுகிறார்) ஜோசப் : வேண்டத் தகாத சிறிய சலசலப்பும் குழப்பமும் ஏற்பட்டு விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன். இப்பொழுது இளவல் கபீர்தாஸ் பேசுவார். (சொல்கிறார்)

கபீர் : (உரை மேசை அருகே நின்று பேசுகிறான்)

மக்களிடையே சிந்தனை எழுச்சியை உண்டாக்கினான் ரூசோ. இளைஞர்களின் சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கினான் சாக்ரடீஸ். பொது மக்களைச் சிந்திக்க வைத்து எழுச்சியை உண்டாக்கவே இந்தப் பொதுக் கூட்டம். மக்கள் பிரச்சினைகளை நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது உடனடியாகத் தீர்த்து வைப்போம். எதிர்க்கட்சியில் இருக்கும் போது மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்போம். இந்திய மக்கள் கட்சி என்பது மக்கள் இயக்கம் என்பதில் எள்ளவும் எள் முனையளவும் யாருக்கும் சந்தேகம் வர வேண்டாம். இந்தப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள்?

கூட்டத்திலிருந்து ஒரு குரல் : உங்க அண்ணன் முத்துராஜன் இந்த ஏரியாவுலதான் இருக்காரு. மக்களுக்காக வந்து அவரு சொந்தக் காசுல ஒரு லாரி தண்ணியாவது குடுத்திருக்கலாமே….

கபீர் : அரசு அமைப்பு மெத்தனமாக இருக்கிறதே அதைக் கண்டித்துத்தான் இந்தப் பொதுக் கூட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். குடிநீர் வாழ்வாதாரம் அல்லவா?

குரல் : நாங்கள் கேட்டதற்குப் பதில் சொல்.

கபீர் : அண்ணன் முத்துராஜனுக்கு எதிரான சதிகாரர்களின் சலசலப்புக்கு நான் அஞ்ச மாட்டேன். நான் பனங்காட்டு நரி துணிச்சல் இருந்தால் நேரில் வந்து பேசுங்கள். கூட்டத்திலிருந்து குரல் கொடுத்தால் நான் பதில் சொல்ல வேண்டுமா?

குரல் : சொல்லித்தான் ஆகணும். மக்களைத் தேடி வர்றீங்க இல்ல ஓட்டுக் கேட்க. மக்கள் கேள்வி கேட்டா கோபம் வருதா? கபீர் : பெட்டைகளைப் போல் ஒளிந்து நின்று குரல் கொடுக்கிறீர்களே. துணிச்சல் இருந்தால் நேரில் நின்று பேசுங்கள். எனக்கு நல்ல தமிழும் பேச தெரியும். வேறு விதமாகவும் பேசத் தெரியும். பேடிகளே… கோழைகளே நேரில் தோன்றுங்கள்.

(பேச்சு மேடை மீது அழுகிய தக்காளி முட்டை ஆகியவை வீசப்படுகின்றன)

கபீர் : எத்தனை நாளைக்குத்தான் இப்படி அழுகிய தக்காளியும் அழுகிய முட்டையும் வீசுவீர்கள். சமோசா முறுக்கு வீசினால் மேடையில் இருப்பவர்கள் முன் பசி ஆற்றிக் கொள்ள உதவும். நண்பர்களே இந்த சதிகாரர்கள் கதிகலங்கிப் போவார்கள் என்பது நிச்சயம்.

(ஜோசப் மாணிக்கம் உரை மேசை அருகே வருகிறார்கள். கபீர் நகர்கிறார்)

ஜோசப் : பொது மக்களே! எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் நலனைப் பற்றியே சிந்திப்பவர் எங்கள் தலைவர். அவருடைய ஆணைப்படி நடைபெற்று வந்த இந்தக் கூட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள். கலவரத்தைத் தடுத்துக் கொள்ளுங்கள் என்று காவல்துறை அதிகாரி திரு. கார்வண்ணன் கேட்டுக் கொண்டதன்பேரில் இந்தக் கண்டனப் பொதுக் கூட்டத்தை இத்துடன் நிறைவு செய்கிறோம். பொதுமக்களே உங்கள் பிரச்சினைகளுக்காக என்றும் பாடுபடுவோம் என்று உறுதி அளிக்கிறோம். நன்றி.

(கூட்டம் நிறுத்தப்படுகிறது)

(சில நிமிடங்களுக்குப் பின் கபீரும் ஜோசப்பும் நிற்கிறார்கள்)

கபீர் : ஏன் அண்ணே திடீர்னு கூட்டத்தை முடிக்கறேன்னு சொல்லிட்டீங்க.

ஜோசப் : ஆமாம்யா. கல்லு பறக்கும். சோடா பாட்டில் பறக்கும். அதுவரைக்கும் கூட்டத்தை நடத்த சொல்றியா…

கபீர் : என்ன அண்ணே ஓங்க லைஃப்ல நீங்க பார்க்காதா கல்வீச்சா? பாட்டில் வீச்சா அதிசயமா இருக்கு…

ஜோசப் : ஆமாம்பா முன்பெல்லாம் மாற்றுக்கட்சிக்காரனை வெறியேத்துவதுபோல் பேசுவோம். அவன் கல்லெறிஞ்சா இந்தக் கற்களை வைத்து வீடு கட்டுவோம்னு பேசிட்டு வருவோம். இப்ப வந்தது நம்ம கட்சி ஆளுங்க இல்ல…

கபீர் : நம்ம கட்சி ஆளுங்களா…

ஜோசப் : ஆமாம்யா… முத்துராஜா கல்யாணத்தை காதும் காதும் வெச்சாமாதிரி நடத்தினது போலவே ரிசப்ஷனையும் குடும்ப உறுப்பினர்களை மட்டும் வெச்சு நடத்தியிருக்கலாம். ரிசப்ஷன்ல நம்ம ஆளங்கள பேச வைச்சது அப்புறம் மணியடிச்சு நிறுத்துவதுன்னு சொதப்பு சொதப்புன்னு சொதப்பிட்டாரு. அங்க ராசமாணிக்கத்தைப் பத்திப் பேசி…

கபீர் : அதுக்குப் போய் இப்படி நம்ம மேல தக்காளியும் முட்டையும் வீசுவானுங்களா….?

ஜோசப் : அவர் தொண்டர்களை அலட்சியம் செய்யறாரு. அவனுங்க ஏதாவது உதவின்னு போய் நின்னா தட்டிக் கழிக்கறாரு. கோபம் வரத்தானே செய்யும்.

கபீர் : அப்ப தலைமை கிட்ட சொல்லி அவங்க எல்லாரையும் கட்சியவிட்டு நீக்குங்க. ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட நடத்தமுடியலையா இவங்களாலேன்னு ஜனங்க சிரிக்க மாட்டாங்களா…

ஜோசப் : ஜனங்க நம்மள பத்தித்தான் நெனச்சுகிட்டு இருங்காங்களா… அவங்கவங்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினை. ஒரு விஷயத்தை வேறொரு விஷயம் அழுத்திடும்.

(முத்துராஜன் வருகிறார்)

முத்துராஜன் : என்ன ஜோ… என்ன பிரச்சினை…?

ஜோசப் : ஒண்ணும் இல்ல நீங்க இப்ப ஏன் வந்தீங்க… வீட்டுக்குப் போங்க. நான் வந்து பார்க்கிறேன்.

கபீர் : இது உட்கட்சிப் பூசல் அண்ணே.

முத்துராஜன் : யாரு ஆதவன் கோஷ்டியா…

கபீர் : அண்ணே ஆதவன் எங்கே இதுல வரப்போறான்…? அவன் தங்கச்சியும் லவ்வரும் கடத்தப்பட்டிருக்காங்க இல்ல. இரண்டு நாளா ஒண்ணும் க்ளூ கிடைக்கல. அவனோட கோஷ்டியோட கவனமெல்லாம் அவனுக்கு ஒத்தாசை பண்றதுலதான் இருக்கும்.

முத்துராஜன் : அப்ப இங்க வந்து கலாட்டா பண்ணு யாரு ஆளுங்க? நாம எதிர்க் கட்சில இருக்கும்போது நம்ம கூட்டத்தை நடத்த விடாம கலகம் செய்யறவனை எல்லாம் கட்சிலேர்ந்து நீக்கணும்.

கபீர் : அதைத்தான் நான் சொன்னேன் அண்ணே. (முத்துராஜனின் மொபைல் ஒலிக்கிறது)

முத்துராஜன் : வணக்கம் தலைவரே! ஒண்ணும் இல்ல சலசலப்புதான் எங்க ஏரியால பொதுக் கூட்டத்தை சிறப்பா நடத்தி முடிச்சுட்டோம். நான் வர்றேன் காலைல கட்சி ஆபீஸுக்கு வர்றேன் அய்யா.

ஜோசப் : என்னங்க நல்லா நடத்திட்டோம்னு சொல்றீங்க முத்துராஜ்…

முத்துராஜன் : பின்ன. சந்தி சிரிச்சுது. கபீர் மேல தக்காளி முட்டை வீசினாங்க நம்ம கட்சிக்காரங்கன்னு சொல்ல சொல்றீங்களா…

ஜோசப் : சொல்லித்தானே ஆகணும்.

முத்துராஜன் : கட்சித் தலைமைகிட்ட என்ன சொல்லணும்னு எனக்குத் தெரியும். நீங்க ஒங்க வேலையை மட்டும் பாருங்க. வரேன். (முத்துராஜன் செல்கிறார்)

கபீர் : அண்ணே… நில்லுங்க.

ஜோசப் : போகட்டும் விடுப்பா. அனுசரித்துப் போகாம ஆணவப் போக்குலலே இருக்காரு. இவரு, நீ என்ன சொன்னே… ஆதவனுக்குப் பிரச்சினையா?

கபீர் : ஆமாம் அண்ணே. தங்கச்சி காதலி ரெண்டு பேரையும் கடத்திட்டாங்க. கண்டுபிடிக்க முடியலை.

ஜோசப் : என்னய்யா… அவனுக்குத்தான் இந்த மாதிரி வேலைகள்ல்ல ஈடுபடற ஆளுங்க எல்லாம் நல்லா தெரியுமே. சிட்டில எந்த மூலைல வெச்சிருந்தாலும் கண்டுபிடிச்சுடலாமே.

கபீர் : தெரியல இப்ப அவனைப் பார்க்கத்தான் போய்கிட்டு இருக்கேன்… அதுசரி நீங்க அவசரப்பட்டு மாணிக்கத்தோட ஈகோவைத் தொட்டுட்டீங்களே…

ஜோசப் : ஆமாம்யா. நான் முத்துராஜாவை கவர் பண்ணனும்னு அவனை அடக்கப் பார்த்தேன் மேலும் உட்கட்சி சமாசாரத்தை ஜனங்க மத்தியில் பேசினான். அது தப்பு இல்லையா? நான் அவசரப்படலை அவன் தான் அவசரப்பட்டு கட்சியைவிட்டே போறேன்னு சொன்னான். அதை எந்த இடத்துல சொல்றதுன்னு முறை இல்ல. இவ்வளவு வருஷமா அவனை வளர்த்த கட்சியை விட்டு விலகும் போது பொதுக்கூட்ட மேடையிலயா சொல்லிட்டுப் போவான்… நீயே என்னாலதான் அவன் கட்சிய விட்டுப் போய்ட்டான்னு பரப்ப ஆரம்பிச்சிடுவ போலிருக்கே.

கபீர் : ஏன் அண்ணே. அப்படி எல்லாம் பேசறீங்க. என்னவோ இன்னிக்கு நடந்தது எதுவும் நல்ல விஷயமா இல்லை.

ஜோசப் : அரசியல்ல எல்லாம்தான் இருக்கும் சரி நான் வீட்டுக்குப் போறேன்.

(ஆதவன் மேடையின் வலப்பக்கத்திலிருந்து வருகிறான்)

கபீர் : வா. ஆதவா. என்ன ஆச்சு? உன்னைப் பார்க்கப் போகணுன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்.

ஆதவன் : வணக்கம் ஜோ அண்ணே.

ஜோசப் : வாப்பா. வணக்கம். கிடைச்சுட்டுங்களா தங்கச்சியும் மீனாவும்…?

ஆதவன் : இல்ல அண்ணே. கபீர், ஜோ அண்ணே நீங்கதான் முத்துராஜ்கிட்ட பேசி அவங்கள அனுப்பச் சொல்லணும்.

கபீர் : என்னய்யா சொல்றே… முத்துராஜாவுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?

ஆதவன் : அவர் ஆளுங்கதான் கடத்தியிருங்காங்க கபீரு.

கபீர் : நம்ம அண்ணன் அதெல்லாம் செஞ்சுருக்க மாட்டாருய்யா.

ஜோசப் : ஆதவா. நீ, கபீரு, நான் எல்லாருமே முத்துராஜாவுக்கு சப்போர்ட்டா இருக்கோம். பக்கபலமாக இருக்கோம். நமக்கு அப்படி எல்லாம் செய்யமாட்டாரு. இது வேற யாரோதான் செஞ்சு இருக்கணும்.

ஆதவன் : எனக்கு வேற யாரும் எதிரிகள் கிடையாது அண்ணே. மலர்க்கொடிய….

ஜோசப் : அது பத்தி சொல்லி முத்துராஜ் ரொம்ப வருத்தப் பட்டாரு. உன்னைத் திட்டினாரு. மலர்க்கொடிய வெச்சு நீ கேம் ஆடி இருக்கக்கூடாது. நேர பாத்து சண்டை போட்டுப் போயிருக்கலாமே.

கபீர் : அண்ணே. விடுங்க நடந்ததைப் பத்திப் பேசி என்ன ஆகப் போவுது… எனக்கு என்னவோ இரண்டு பொண்ணுங் களுமே வேற ஏதோ கேம் ஆடறாங்கன்னு நெனக்கறேன்.

ஆதவன் : அப்ப.. கடத்தல்ங்கறது நாடகம்னு சொல்றியா கபீரு.

கபீர் : ஆமாம். நல்லா யோசிச்சுப்பாரு. ஒங்க வீட்டுல அப்பா இல்ல. அவரை விரட்டி வுட்டுட்டே. அம்மாவும் தங்கச்சியும் உன்னை அண்டி இருக்காங்க. உன்னோட சோஷியல் ஸ்டேட்டஸ் ஒசந்து போச்சு. அதனால நீ பார்த்த மாப்பிள்ளைய தங்கச்சி மேல திணிக்கறே. அது பிடிக்காமதான்…

ஆதவன் : சரி. வீணாவுக்கு ஒரு கதை சொல்றே. என் காதலி மீனாவுக்கு என்ன கதை சொல்லப் போறே…?

கபீர் : இதுபோலவே ஏதாவது காரணம் இருக்கலாம். உன் காதலிக்குப் பிடிக்காத விஷயத்தை நீ செய்ய சொல்லி யிருக்கலாம். அது ஒங்க பிரைவேட் அஃபேர். நீதான் யோசிச்சுப் பார்க்கணும்.

ஜோசப் செல்வம் : கபீர் நீ ஏன் அவரைக் குழப்பிக்கிட்டு இருக்கே. கமிஷனர் ராஜவேலனைப் போய்ப் பார்ப்போம். கம்ப்ளெயின்ட் குடுத்துடுவோம். ராஜவேலன் கண்டிப்பா நமக்கு உதவி செய்வாரு.

கபீர் : போலீசுக்குப் போகாம முடிக்கணும்தானே அண்ணே ஆதவன் ரெண்டு நாளா போராடிக்கிட்டு இருக்காரு.

ஜோசப் செல்வம் : அப்படின்னா. சரி. நான் வீட்டுக்குப் போறேன். பார்ப்போம். கவலைப் படாதே ஆதவா. வந்திடுவாங்க ரெண்டு பேரும்.

ஆதவன் : சரிங்க. அண்ணே.

(ஜோசப் செல்வம் போகிறார்)

ஆதவன் : யோவ். சரியான ஆளுய்யா. என் குடும்ப கதையை எல்லாம் அவர் எதிரே போட்டு உடைக்கிறே.

கபீர் : அவருக்கு எல்லாருடைய கதையும் தெரியும். தங்கச்சி பத்தி கவலைப்படாதே. அது ஒங்க அப்பாகிட்ட போயிருக்கும் இல்ல காதலனோட போயிருக்கும். கல்யாணம் முடிச்சுகிட்டு உன்னைப் பார்க்க வரும்.

ஆதவன் : என்னய்யா. நீதான் எல்லா ஏற்பாடும் செஞ்சா மாதிரி பேசுறே…

கபீர் : யோவ். கஸ் ஒர்க் அவ்வளவுதான். உடனே என்மேல சந்தேகமா? மீனா பத்தி இப்ப யோசிக்கறேன்.

ஆதவன் :உன்னோட கற்பனை சக்தியில அதுக்கும் ஒரு கதைய பின்னிச் சொல்லு.

கபீர் : மீனாவ நீ கட்டிக்கக் கூடாதுன்னு நெனக்கற யாரோதான்

ஆதவன் : அப்படின்னா….

கபீர் : இப்ப வீணா ஆசைப்பட்ட ஆளைக் கட்டி வைக்காம நீ வேற ஒரு பெரிய இடத்து மாப்பிள்ளை பார்த்தே இல்ல…

ஆதவன் : பேச்சு வார்த்தை ஓடிக்கிட்டு இருக்கு. என் நிழல்ல இருக்கற தங்கச்சி நான் சொல்ற ஆளைக் கட்டிக்க மாட்டாளா?

கபீர் : அந்தக் கேள்விய உன் தங்கச்சிக்கிட்டயும் அம்மா கிட்டயும் கேளு. தங்கச்சி அவளுக்குப்பிடிச்ச மாப்பிள்ளையை கட்டிக்கறதுக்காக அப்பாகிட்ட போயிருக்குன்னு சொன்னேன் இல்லையா. அதுபோலவே மீனா ஒன்னை கல்யாணம் பண்ணிக்கக்கூடாதுன்னு நெனக்கறவங்க… அதாவது மீனாவோட வெல்விஷர் இதைப்பண்ணி இருக்காங்க.

ஆதவன் : மீனாவுக்கு வாழ்க்கை கொடுக்கனும்னு நெனச்சதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்னு. எனிவே. தாங்க்ஸ் நண்பா.

கபீர் : எதுக்குப்பா தாங்க்ஸ்.

ஆதவன் : வழக்கமான சென்டிமென்ட்ஸ் எல்லாம் மனசுல ஓடிக்கிட்டு இருந்ததால இவுங்க ரெண்டு பேரப் பத்திதான் கவலை. மத்த வேலை எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குது. நம்ம ஆளுங்களும் என்னவோ துக்க வீட்ல இருக்கா மாதிரி இருக்காங்க. என் மனசுல தெளிவு ஏற்படுத்திட்டே அவங்க வர்றப்ப வரட்டும்.

கபீர் : நான் உன் மனசைக் கெடுத்துட்டேன்னு ஆயிடப் போவுதுய்யா. ஆதவா.

ஆதவன் : இல்ல கபீர் என் கண்ணைத் திறந்துட்டே நீ தங்கச்சி மேல நான் அவ்வளவு பாசமா இருந்தேன். நீ நினக்கற மாதிரி அவ மனசுல யாராவது இருந்தா என்கிட்ட மனசு விட்டுப் பேசி இருக்கலாம் இல்ல. இதெல்லாம் என்ன ட்ராமா? ஒரு பக்கம் அவ அப்படின்னா. விதவைப் பேராசிரியர் பொண்ணு. கஷ்டத்தையே பார்த்த ஃபேமலி நாம கைத்தூக்கி விடலாம்னு பார்த்தா… மீனாவும் என்னைப் புரிஞ்சுக்கல பாரு.

கபீர் : யோவ் ஒரு நான் ஊகத்தின் அடிப்படையில சொன்னேன் உண்மைதானான்னு தயவுசெய்து தெரிஞ்சிக்க. அவுங்களுக்கு ஏதாவது டேஞ்சர்னா கண்டிப்பா காப்பாத்து.

ஆதவன் : அந்த அளவுக்கு நான் கல்நெஞ்சன் இல்ல. நீ சொன்னப்புறம்தான் இப்படியும் இருக்கலாம்னு எனக்குத் தோணுது. தகவல் கிடைச்சதும் உனக்கு போன் பண்றேன். வரேன். தாங்க்யூ.

கபீர் : சரிப்பா.

(ஆதவன் செல்கிறான்)

(திரை)

நான்காம் காட்சி

(மிகச்சிறிய பேச்சு மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் நோட்டுப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. கபீர் நின்று கொண்டிருக்கிறான். மேடையின் வலப்பக்கத்திலிருந்து எழில் வருகிறான்.)

கபீர் : வாய்யா, பிறந்த நாளன்னிக்கு நீ ஃபங்க்ஷன் நடத்தற லட்சனம் இதுதானா… கூட்டத்தையே காணோமே…

எழில் : கண்டிப்பா வருவாங்க அண்ணே. இதோ நான் வரவழைக்கிறேன் பாருங்க.

(மைக் பிடித்துப் பேசுகிறான்)

எழில் : அன்பார்ந்த 14ஆம் வட்டத்து மக்களே. நமது வட்டச்செயலாளர் கபீர்தாஸ் அவர்கள் தமது 32ஆம் பிறந்த நாளை ஒட்டி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களையும் எழுதுகோல் அளவுகோல் உள்ளிட்ட கருவிகளையும் வழங்க உள்ளார்கள். விரைந்து வருக. மாணவர்களே வாருங்கள். ஏழைகளின் படிப்புக்கு உறுதுணைபுரியும் வட்டச்செயலாளர் கபீர் அவர்களுக்கு இந்த மலர் மாலையை பொன் மாலையாக எண்ணி அணிவித்து மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் அண்ணே…

கபீர் : யோவ். நீ தொண்டை தண்ணீ போக கத்தினதுதான் மிச்சம். பசங்களுக்கு எக்ஸாம் டைம் ஆக இருக்குமோ…

எழில் : நான் ஒங்கக்கிட்ட சொல்ல மறந்துட்டேன். எக்ஸாம் டைம் இல்லே அண்ணே. கிரிக்கெட் மேட்ச் டைம். கிரிக்கெட்ல இன்ட்ரெஸ்ட் இல்லாததால உங்களுக்கு தெரியல.

கபீர் : நக்கல் வேறயா… ஒன்னை எல்லாம் நம்பி நான் கிளம்பி வந்தேன் பாரு. சரி நோட்டுப்புத்தகம் எல்லாத்தையும் தூக்கு. வீடுவீடாகப் போய் கொடுத்துவிட்டு வருவோம்.

எழில் : இருங்க அண்ணே. அவசரப்படாதீங்க. ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க வரேன்.

(மேடையின் வலப்பக்கமாக செல்கிறான். கபீர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்)

(எழில் மீண்டும் வருகிறான். உடன் இரண்டு பேர் வருகின்றனர். கிரிக்கெட் பார்ப்பதற்காக ஒரு திரையை மேடையில் அமைக்கிறார்கள். சற்று நேரத்தில் திரையில் கிரிக்கெட் ஆட்டக் காட்சி ஓடுவதுபோல் பின்னணி குரல்கள்.)

எழில் : (மைக் பிடித்து பேசுகிறான்)

அன்பார்ந்த 14ஆம் வட்டத்து மக்களே. இந்திய மக்கள் கட்சியின் வட்டச் செயலாளர் அருமை அண்ணன் கபீர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அன்னையின் வயிற்றிலிருந்து அவர் வந்து தோன்றிய இந்நாளில் மக்கள், கிரிக்கெட் ஆட்டத்தை கண்டு களிக்க இங்கு அகன்ற திரை அமைத்திருக்கிறார். அனைவரும் இங்கு வருக வருக என்று கேட்டுக்கொள்கிறேன். பெரிய வெண்திரையில் ஆட்டம் காண வாருங்கள்.

(திபுதிபுவென்று கூட்டம் வருவது போன்ற ஒலிகள்,)

(வட்டச் செயலாளர் கபீர் வாழ்க என்று எழில் கூறுகிறான். பிறகு எழில் கிரிக்கெட்டில் ஆழ்ந்து போனதுபோல் தோற்றம். கபீர் அவனுடைய தோளைத் தட்டுகிறான் எழில் இருங்க அண்ணே. ஆட்டம் விறுவிறுப்பா போய்கிட்டு இருக்கு… என்கிறான்.)

(விளக்குகள் சில நிமிடங்கள் அணைந்து மீண்டும் ஒளிரும்போது கபீர் நாடகமேடையின் இடப்பக்கம் ஓரமாக நின்று கொண்டு இருக்கிறான். அங்கு மட்டும் வெளிச்சம்.) (மலர்க்கொடி மேடையின் இடப்பக்கத்திலிருந்து வருகிறாள்)

மலர்க்கொடி : என்ன ஏரியாவுல பிறந்தநாள் ஃபங்க்ஷன்னு சொன்னாங்க. இங்க ஓரமா நின்னுகிட்டு இருக்கீங்க.

கபீர் : ஃபங்க்ஷன் அங்கே நடக்குது பாருங்க. ஜனங்க கிரிக்கெட் பார்த்துக்கிட்டு இருக்காங்க பாருங்க. அதுதான் என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி.

மலர்க்கொடி : பரவாயில்லையே. ஜனங்களுக்கு எது பிடிக்குமோ அதைக் கொடுத்து இருக்கீங்க போலிருக்கு. வெரிகுட்.

கபீர் : எனக்கு கிரிக்கெட் பத்தி ஒண்ணும் தெரியாது. எழிலோட ஐடியா. சரி நீங்க எங்க இந்தப் பக்கம்? மாலை நேரத்துல டிவி சானல் ஆபிஸ்ல தானே இருப்பீங்க.

மலர்க்கொடி : உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வந்தேன். இந்தாங்க என்னுடைய பிறந்தநாள் பரிசு. வாழ்த்துக்கள்.

கபீர் : நன்றி. இது என்னங்க கட்டுக்கட்டா காதல் கடிதங்களா… சாரி என் மனசுல இன்னொரு பொண்ணு இருக்கா…

மலர்க்கொடி : நெனப்பு போவுது பாருங்க. கட்டுக்கட்டா புத்தகங்கள். அரசியல் பற்றிய புத்தகங்கள். படிச்சுப்பாருங்க. டைம் கிடைக்கும் போதெல்லாம் படிங்க.

கபீர் : என்னை வாசகனாக ஆக்கனும்னு முயற்சிசெய்யறீங்க நன்றி. ஆதவன்கிட்ட நீங்க சொன்னா மாதிரி சொன்னேன். மலர்க்கொடி : என்ன சொன்னாரு?

கபீர் : அவன் ரியாக்ஷன் என்ன… என் தங்கச்சி மேல பாசம் வெச்சிருந்தேன். மீனாவுக்கு வாழ்வு குடுக்க நெனச்சேன். இப்படி பண்ணிட்டாங்களேனு வருத்தப்பட்டான். ஆமாம். நீங்க சொன்னதுதான் நிஜமா?…

மலர்க்கொடி : யாருக்குத் தெரியும்?

கபீர் : என்ன மலர் இப்படிச்சொல்றீங்க? (அதிர்ச்சியுடன்)

மலர்க்கொடி : அவனோட கோஷ்டித் தலைவரை மன்னிப்பு கேட்க வைக்கறதுக்கு என்னைப் பகடைக் காயாய் பயன்படுத்தினான் இல்ல. அதுக்குப் பழி வாங்கத்தான் அந்த மாதிரி சொல்லச்சொன்னேன் ஒங்கக்கிட்ட.

கபீர் : பலே ஆளுதான் நீங்க. அதுக்காக நீங்க என்னை பகடைக் காயா உருட்டிட்டிங்களே. ஒங்களுக்கு பெருமை சேர்க்குமா இந்த மாதிரி செயல் எல்லாம்…?

மலர்க்கொடி : ஒங்க ஃப்ரெண்டு என்னை வெச்சு கேம் ஆடினப்ப நீங்க அதை கண்டீச்சிங்களா…

கபீர் : நாங்க ஆயிரம் சூதும் வாதும் செய்வோம். வேண்டாம். நீங்க டிவி சீரியல் பெண்மணி மாதிரி வில்லி ஆகிடாதீங்க. மலர்க்கொடி : பெண்களுடன் பிறந்தது சூது என்பதை உங்க ஃப்ரெண்டு உணர்வாரு. உணரவைக்கிறேன்.

கபீர் : எனக்குத் தெரிஞ்சு பெண்களுடன் பிறந்தது கருணையும் இரக்கமும் தான். சூது வஞ்சம் பழி இதை எல்லாம் மனசுலேந்து நீக்கிடுங்க. படிச்சவங்க நீங்க இப்படி பழி வாங்க அலையலாமா?

மலர்க்கொடி : படிப்பு மனுஷன் மனசை நெறிப்படுத்தறது இல்ல. அடிப்பட்ட புலி, சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கிட்டுத்தான் இருக்கும். உறுமிக்கிட்டுத்தான் இருக்கும்.

கபீர் : உங்கள் மனப்போக்கு தவறுன்னு நீங்களே உணரும் நிலை வரும். சரி அந்த ரெண்டு பொண்ணுங்களும் யார்கிட்ட இருக்காங்க? எங்க இருக்காங்க? உண்மையை சொல்லுங்க. ப்ளீஸ்.

மலர்க்கொடி : எனக்கென்ன தெரியும்? என்னைக் குடையறீங்க. நானா கடத்தி வெச்சுருக்கேன். நான் வர்றேன். ஜனங்க காத்துக்கிட்டு இருக்காங்க. நீங்க அங்க போங்க. (மலர்க்கொடி போகிறாள்)

(கபீர், மலர்மலர் என்று அழைத்தபடியே அவள் பின்னால் செல்கிறான்)

(திரை)

– தொடரும்…

– மேடைகளைச் சுற்றி (நாடகம்), பதிப்பாண்டு: 2022, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *