உய்வு
கதையாசிரியர்: காசி ஆனந்தன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 15, 2025
பார்வையிட்டோர்: 424
(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காற்றாடி நூலின் துணையோடு உயர்ந்து உயர்ந்து வானின் உச்சியில் ஏறியது.
‘பார்த்தீர்களா..? நான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன்…’ என்று தன் பெருமையைப் பறைசாற்றியது.
பழைய வரலாற்றை அடியோடு மறந்தது காற்றாடி.
‘நூல் இனி எதற்கு?’ என்று கூறிக்கொண்டே நூலைப் பட்டென்று அது அறுத்துக்கொண்டது.
கொஞ்ச நேரத்தில்-
ஊரின் மூலையில் ஒரு முள் மரத்தில் விழுந்து கிழிந்து உருக்குலைந்து கிடந்தது காற்றாடி.
காற்றாடியின் கதை தெரிந்த முள்மரம் சொன்னது:-
‘ஏற்றி வைத்தவனை மறக்கிறவன்
இறக்கி வைக்கப்படுவான்!’
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.